தந்தை பெரியார் பிறந்தநாள் விழா – சமுக நீதி நாள் – காணொலி கருத்தரங்கம் – 17.09.2021

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டை சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்
பார் அவர்தாம் பெரியார்.
யார் இந்த பெரியார்? ஏன் அவரைப் பற்றி இன்றும் பேசுகிறோம்?
பெரியார் படத்தின் மீது, சிறுநீர் கழிக்கப்படுகிறது,....
செருப்பால் அடிக்கப்படுகிறது,....
இன்று அவர் இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைவார்; அவமானப்பட மாட்டார்.
அவரே சொன்னார்...
'பொதுத் தொண்டுக்கு வந்தவன், மானம் - அவமானம் பார்க்க முடியாது; மானம் பார்த்தால் தொண்டு செய்ய முடியாது!’

கடவுள் மறுப்பைக் கைவிட்ட பெரியார் :
                     தான் நடத்திய அநாதை இல்லத்தில் பெரியார் உட்கார்ந்து இருந்தார். அவரைச் சந்திக்க வந்த கல்வி நெறியாளர் நெ.து.சுந்தரவடிவேலு பேசிக்கொண்டு இருந்தார். கடவுள் வாழ்த்து என்ற பாடலை அந்தப் பிள்ளைகள் வாசித்ததை நெ.து.சு. கவனித்து, 'உங்கள் பிள்ளைகள் மட்டும் கடவுள் வாழ்த்து படிக்கிறார்களே?’ என பெரியாரிடம் கேட்டார். 'ஆதரிக்க ஆள் இல்லாத அநாதைப் பிள்ளைகள் இவர்கள். சோறு போட்டுக் காப்பாற்றுகிறேன் என்பதற்காக நாத்திகத்தை அவர்கள் தலையில் திணிக்கவில்லை. வயதுவந்தால் அவர்கள் படித்துத் தெரிந்துகொள்வார்கள். தங்கள் சிந்தனையால் அவர்கள் நாத்திகர்களானால் சரி’ எனச் சொன்ன பண்பு, இன்று தமிழ்ச் சமூகத்திடம் இருக்கிறதா?

பெண்ணியம் :
             உலகப் பொதுமறை என ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நூல் திருக்குறள். ஆனால் பெரியாரின் பெண்ணிய பார்வை அந்த உலகப் பொதுமறையையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியது.
             1928-ஆம் ஆண்டு குடியரசு நாளிதழில் பெரியார் திருக்குறளில் உள்ள அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் மற்றும் அதிகாரம் 91, பெண் வழிச் சேரல் ஆகிய இரண்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது இதில் ஆணாதிக்க சிந்தனையும், சரிசம உரிமை இல்லை என்றும் வாதத்திற்கு உட்படுத்துகிறார்
பெரியார் கற்பு எனும் கட்டுரையில்… 
                  “தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”  இந்த திருக்குறளை சுட்டிக்காட்டி… இது பெண்ணடிமைச் சிந்தனை என்று குறிப்பிடுகிறார். அதாவது பிற தெய்வத்தை வணங்காமல் கணவனை மட்டும் வணங்கும் பெண் பெய் என்று சொன்னால் மழை பெய்யுமாம் இது அந்த குறளின் கருத்து. கடவுளை வணங்கினால் மழை பெய்யுமா? என்பது ஒருபுறம் இருக்க, கணவனை மட்டுமே வணங்கும் பெண்  சொன்னால் மழை பெய்யும் என்பது அறிவுக்கும், அறிவியலுக்கும் சற்றும் ஒவ்வாத கருத்து. பெரியார் பெண்ணிய சிந்தனைகள் இந்த இரு அதிகாரங்களையும் விமர்சிக்க தயங்கவில்லை, காரணம் பெண் விடுதலையில் அவர் வைத்திருந்த நாட்டமும், அறிவும்தான்.
                “கும்மி, கோலாட்டங்களை ஒழித்துவிட்டு, ஓடவும், குதிக்கவும், தாண்டவும், கைக்குத்து, குஸ்தி முதலியவைகளையும் சொல்லிக்கொடுத்து ஒரு ஆண் பிள்ளைக்கு உள்ள பலம், தைரியம், உணர்ச்சி, ஆகியவை பெண்களுக்கும் உண்டாகும்படி செய்ய வேண்டும்” என்று 85 வருடத்திற்கு முன் முதன்முதலில் ஒலித்தது பெரியார்தான்.
                 ஈ.வெ.ராமசாமி என்ற பெயர் அனைவரும் அறிந்தாலும் பெரியார் என்னும் பெயர் பொதுச் சமூகத்தில் பரவலாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் ஒரு பெண் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆம் டாக்டர் அம்பேத்கரால் தன் தங்கை என்று அழைக்கப்பட்டவரும், பெண் விடுதலைக்காகவும், தலித் விடுதலைக்காகவும் போராடிய வீரமங்கை அன்னை மீனாம்பாள்தான் நவம்பர் 20,1938-ம் ஆண்டு தமிழகப் பெண்கள் மாநாட்டில் ஈ வெ ராமசாமிக்கு பெரியார் என்னும் பெயரைச் சூட்டினார். 

பெரியார், ராஜாஜி நட்பு :
                  பெரியார் ஒரு நட்புக்கடல்। அவரது பிராமண நண்பர்களில் மிக முக்கியமானவர் மூதறிஞர் ராஜாஜி. தனிப்பட்ட முறையில் பிறரது மனம் புண்படும் அளவுக்கு எதுவும் பேசிவிடக்கூடாது, எதையும் செய்துவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தவர் பெரியார். அதனால்தான், கொள்கை ரீதியாக முரண்பட்டவர்கள் கூட, நட்பு ரீதியாக அவருடன் கடைசி காலம் வரை இணைந்திருந்தனர். அவர்களில் முக்கியமானவர்	ராஜாஜி.
                 பெரியார் மிக கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நேரம்; இயற்கை எய்தினார் ராஜாஜி. தனது நண்பனின் மறைவை எண்ணி, சிறு பிள்ளை போல் தேம்பி, தேம்பி அழுதார் பெரியார். எந்த ஒரு துயரத்திலும் அவர் அப்படி அழுது, எவரும் பார்த்தது இல்லை. ராஜாஜியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அன்றைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரியும் வந்திருந்தார். எக்கச்சக்கமான பிரமுகர்கள் அமர்ந்திருந்த நிலையில், தள்ளாத வயது; நிற்கக்கூட காலில் வலு இல்லாத நிலை. சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வந்திருந்தார் பெரியார்.
                 அப்போது, அங்கு வந்த குடியரசுத் தலைவர் கிரிக்கு இருக்கை இல்லை. இதை கவனித்த பெரியார், சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து, தனது சக்கர நாற்காலியில் உட்காரும்படி கிரியை வேண்டினார். எனது நண்பருக்கு மரியாதை செலுத்த வந்தவர் நிற்பதா என்று பெரியார் தனது இருக்கையை அளித்தது கண்டு கிரி ரொம்பவே அதிசயித்துப் போனார். இதன் மூலம் தான் நட்புக்கடல் மட்டுமல்ல; பண்பாட்டுக் காவலரும் கூட என்பதை பெரியார் நிரூபித்தார்.

பெரியார் பார்வையில் தாலி :
                 சமீபத்தில் ஓர் ஈழத்தமிழர் திருமணத்தில் மணப்பெண் மணமகனுக்குத் தாலி கட்டியதற்காக அந்தப் பெண்ணைச் சொல்லத்தகாத வார்த்தைகளால் சமூகவலைதளங்களில் விமர்சிக்கின்றனர். ஆனால், 1935-ல் மாநில சுயமரியாதை சங்கப் பொருளாளர் வை.சு.சண்முகத்தின் மகளின் திருமணத்தில் மணப்பெண், மணமகனுக்குத் தாலி கட்டினார் என்றால் பெரியாரின் துணிச்சலை நாம் புரிந்துகொள்ளலாம். 

புகழ்ச்சி விரும்பாத பெரியார் :
                     பொதுவாழ்க்கைக்காகத்	 தன்னை அர்ப்பணித்துக் கொண்டாலும் அதை எப்போதும் பெருமையாக அவர் கூறிக்கொண்டதில்லை. ஒரு மாநாட்டில் பெரியாரைப் பலரும் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். இறுதியாகப் பேசவந்த பெரியார், "நான் என்னென்னவோ கஷ்டங்களை அனுபவித்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், இவ்வளவு நேரம் என்னைப் புகழ்ந்தார்களே அதைக் கேட்பதுதான் நான் அனுபவித்த கஷ்டம்" என்றார்.

வள்ளலாரை மதித்த பெரியார் :
                வடலூர் சத்தியஞான சபைக்கு வந்தார். ஒருகட்டம் வரை வந்தவர் ஜோதி எரிந்துகொண்டிருக்கும் இடத்துக்குள் நுழைய மறுத்தார். அங்கே, 'கொலை, புலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே வரவும்’ என எழுதப்பட்டிருந்தது. எவ்வளவோ வலியுறுத்தினார்கள். 'நான் எல்லா அசைவ உணவையும் சாப்பிடுபவன். உள்ளே வர மாட்டேன்’ என மறுத்த மாண்பாளர்.

பெரியாரின் ஆத்திக நண்பன்:
                    பெரியாரின் அன்புக்கு பாத்திரமான நண்பர்களில் ஒருவர் 'தமிழ் தென்றல்' திரு.வி.கல்யாணசுந்தரானார். ஒருமுறை பெரியாரின் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்தார் திரு.வி.க॥ இரவு நீண்ட நேரம் இருவரும் உரையாடி மகிழ்ந்தனர். மறுநாள் காலை திரு.வி.க. எழுந்து குளித்து, உடை மாற்றி அவரது அறையிலிருந்து வெளியே வந்தபோது, அவரது முன்பு திருநீற்று சம்படத்தை நீட்டியபடி நின்றிருந்தார் பெரியார்.
                    இதைச் சற்றும் எதிர்பாராத திருவிக. ஆச்சரியத்தின் விளிம்புக்கே போய்விட்டார்.“கடவுள் நம்பிக்கை இல்லாதவர் நீங்கள். உங்கள் வீட்டில் திருநீறு சம்படமா...?” என்று திகைப்பு மாறாமல் கேட்டார் திரு.வி.க. அதற்கு பெரியார் அளித்த பவ்யமான பதில் இதுதான். “நான்தான் கடவுளை நம்பாதவன்தான். ஆனால் எனது நண்பரான தாங்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவராயிற்றே. எனது விருந்தாளியாக வந்திருக்குக்ம் உங்களது தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வது எனது கடமை. பெரியாரின் திருஉள்ளம் கண்டு மெய்சிலிர்த்துப் போன திருவிக அப்படியே	 ஆர	 தழுவிக்கொண்டாராம்.
                   பெரியாரின் நட்புள்ளத்துக்கு மற்றொரு உதாரணம் இதோ.திரு.வி.க. காலமான செய்தி கேட்டு, ஈரோட்டில் இருந்து விரைந்து வந்தார் பெரியார். இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார். ஆனாலும், தொழிலாளர்களின் தோழராகவும், பொதுத்தொண்டுக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவருமான திரு.வி.க மறைவுக்கு மிக குறைந்தளவு கூட்டமே வந்திருப்பது கண்டு வேதனை அடைந்தார். உடனடியாக தனது திராவிடர் கழகத் தொண்டர்கள் பலரும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வரும்படி தகவல் அனுப்பினார். அவ்வளவுதான் சில மணி நேரத்தில் அந்த பகுதியே கூட்ட நெரிசலில் திணற ஆரம்பித்தது. அதோடு, திரு.வி.க.விற்குப் பிடித்தமான பதிகத்தையும் உரத்துக் கோஷம் போடவைத்தார் பெரியார்.

கற்பை எதிர்த்த பெரியார் :
                 அவருடைய பகுத்தறிவு என்பது வெறுமனே நாத்திகமோ மூடநம்பிக்கை ஒழிப்போ அல்ல. சிந்தனைக்கான உரிமை, ஜனநாயகத்தின் உச்சம்தான் அவருடைய பகுத்தறிவு என்ற கருத்தாக்கம். "கற்பு என்கிற ஒன்று கிடையாது என்கிறீர்களே, உங்களுடைய மனைவி வேறொருவரிடம் போனால் ஏற்றுக்கொள்வீர்களா?" என்று அவரை கூட்டத்தில் கேட்கும் உரிமை இருந்தது. "இதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? அதை முடிவு செய்ய வேண்டிய உரிமை என் மனைவியுடையது அல்லவா?" என்று பதிலளித்தார் பெரியார். இப்படியொரு பதிலையும் உலகத்தில் எந்தத் தலைவரும் அளித்திருக்க மாட்டார்கள். அவர்தான் பெரியார்!

பெரியாரின் பெருந்தன்மை :
                    சைவப்பழமான திரு.வி.க-வுடன் பெரியாரின் நட்பு உருக்கமானது. 'நான் செத்தால் அழுவதற்கு என நீங்கள்தான் இருக்கிறீர்கள்’ என இறப்புக்குச் சில நாட்களுக்கு முன் பெரியாரிடம் சொன்னவர் திரு.வி.க. அவர் மறைந்தபோது தனது தொண்டர்களுடன் மயானக் கரைக்கு வந்தார் பெரியார். திராவிடர் கழகத்தினர், திரு.வி.க-வுக்குக் கொள்ளி வைக்கத் தயாராக இருந்தனர். 
                 அப்போது தமிழ் அறிஞர் களான அ.ச.ஞானசம்பந்தனும மு.வரதராசனாரும் வந்து, 'திரு.வி.க. எங்கள் இருவரைத்தான் கொள்ளி வைக்கச் சொல்லியிருக்கிறார்’ எனச் சொன்னார்கள். 'சரி’ என, தன் தொண்டர்களை அமைதியாக இருக்கச் சொன்னார் பெரியார். 'திருவாசகத்தில் சிவபுராணத்தைப் பாடப்போகிறோம்’ என அ.ச.ஞா சொன்னார். 'அப்படியே செய்யுங்க’ எனச் சொல்லிவிட்டு அவர்கள் பாடும்போது எழுந்து நின்றவர் பெரியார்.

பெரியாரின் சிக்கனம் :
                     தந்தை பெரியார் மிகவும் சிக்கனமானவர். ஆடம்பரங்கள் அவருக்குப் பிடிக்காது. அதனால், அவர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களில் மாலை மரியாதைகளை வேண்டாம் என்று கூறிவிடுவார். ஆனால், தன் எடைக்கு எடை தேவையான பொருட்களை பெற்றுக் கொள்வார். அவ்வாறு அவர் பல ஊர்களில் பெற்றுக் கொண்ட பொருட்களின் பட்டியல் இதோ !

காஞ்சீபுரம் - நெல் 
கோயம்பத்தூர்  - தேங்காய் 
குளித்தலை - பெட்ரோல் 
குடியாத்தம் - கைத்தறி ஆடைகள் 
சிதம்பரம் - காபிக் கொட்டை
சிவகங்கை - உப்பு
செங்கம் - கிச்சிலி சம்பா அரிசி 
மதுரை - வெல்லம்
திருச்சி - பால்
தஞ்சாவூர் - வெள்ளிக் காசுகள் 
வட ஆற்காடு - வாழைப் பழங்கள்
பண்ருட்டி - பிஸ்கட் 
பாபநாசம் - கோதுமை,  அரிசி, சோளம், கேழ்வரகு, சர்க்கரை  
பெங்களூர் - காய்கறிகள் 
பெரம்பலூர் - வெங்காயம் 

இதன் மூலம் என்ன தெரிகிறது ?
                உழைக்கும் வர்க்க மக்களின் கஷ்ட நஷ்டங்களை புரிந்துக் கொண்டு, தனக்கான தேவைகளை அதற்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்ட பண்பு நிறைந்தவர். தந்தை பெரியாரின் பரந்த மனமும் சேவை குணமும் இதிலிருந்தே விளங்குகிறதல்லவா ?

கடவுள் குறித்து அடிகளாரோடு வாதிட்ட பெரியார்:
                கடவுளை மிகக் கடுமையாக விமர்சிக்கும் பெரியாரைச் சந்திக்க நினைக்கிறார் குன்றக்குடி அடிகளார். ஈரோடு வந்த அடிகளார், பெரியாரைச் சந்திக்க வருவதாகச் சொல்கிறார். 'நீங்கள் மகா சந்நிதானம். என்னைத் தேடிவரக் கூடாது. நானே வருகிறேன்’ எனச் சொல்லிவிட்டு பெரியார் சென்றார். அவரைப் பார்த்ததும் எழுந்து நின்றார் அடிகளார். 'மகா சந்நிதானம் எழுந்து நிற்கக் கூடாது’ எனச் சொல்லிவிட்டு அருகில் இருந்த நாற்காலியில் அமரப் போகிறார். 'இந்த இருக்கையில் இரண்டு பேர் உட்காரலாம். என் அருகில் உட்காருங்கள்’ என அடிகளார் சொல்ல, 'சந்நிதானத்துக்குச் சமமாக நான் உட்காரக் கூடாது’ என மறுத்தார். இருவரும் நீண்ட நேரம் பேசினார்கள். 'சாதியை உங்கள் கடவுளும் மதமும் ஒழிக்கவில்லையே’ என பெரியார் சொல்ல, 'சாதியை கடவுள் உருவாக்கவில்லை’ என அடிகளார் சொல்ல, 'ஆனால், உங்கள் கடவுள் அதைத் தட்டிக் கேட்கவில்லையே’ என பெரியார் சொல்ல... அந்தச் சந்திப்புதான் இருவரையும் சாதி எதிர்ப்புப் போராட்டங்களில் கரம் கோக்கவைத்தது.
                அப்போது பெரியார் சொல்லி அடிகளார் குலுங்கிச் சிரித்த ஜோக்: 'எனக்கும் கடவுளுக்கும் என்ன முன்விரோதமா? நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை!’

தலைவர் கலைஞருக்குச் சிலை வைக்கப் போராடிய பெரியார்:
              1968 ஜனவரியில் சென்னையில் அறிஞர் அண்ணா தலைமையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டின் நினைவாக மெரினாவில் காந்தி, காமராஜர் உள்ளிட்ட 10 தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டன. அந்த மாநாடு முடிந்த கையோடு, அப்போதையை முதலமைச்சர் அண்ணாவுக்கும் அப்போதைய மவுன்ட் ரோடு, இப்போதைய அண்ணாசாலையில் சிலை திறக்கப்பட்டது.
                   அண்ணாவுக்குச் சிலை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அன்றைக்கு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த தலைவர் கலைஞருக்கும் சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என்று அண்ணாவிடம் கோரிக்கை வைத்து, அனுமதியும் பெற்றார் தந்தை பெரியார். ஆனால், கலைஞருக்குச் சிலை வைப்பதற்கு எதிராகக் கடும் விமர்சனங்கள் எழுந்தன. ``சிலை வைக்கும் தந்தை பெரியாரின் முயற்சி தேவையில்லாதது. சிலை வைக்கும் அளவுக்கு நான் தகுதி பெற்றவன் அல்ல” என்று கலைஞரே மறுத்து அறிக்கை வெளியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. 1968-ஆம் ஆண்டு, மே மாதம் 28, 29 ஆகிய இரண்டு தேதிகளில் வெளியான `விடுதலை’ இதழில், கருணாநிதி சிலையை விமர்சிப்பது அயோக்கியத்தனம் எனவும், முட்டாள்தனம் எனவும், சின்னத்தனமான அற்பப்புத்தி எனவும் கடுமையாக விமர்சித்து தலையங்கம் எழுதினார் தந்தை பெரியார். 
                   அண்ணா மறைவுக்குப் பிறகு, 1971-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 24-ஆம் தேதி பெரியார் திடலில் அப்போது முதல்வராக இருந்த தலைவர் கலைஞருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்துகொண்ட தந்தை பெரியார், ``யார் யாருக்கோ சிலை இருக்கிறது. செயற்கரிய செயல்களைச் செய்த முதல்வர் கலைஞருக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட வேண்டும்” என இரண்டாவது முறையாகக் கருணாநிதிக்குச் சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இந்தக் கோரிக்கையை மேடையில் அமர்ந்திருந்த குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட பலர் ஆமோதித்தனர்.
                    சிலை அமைக்கும் குழுவுக்குப் புரவலர் தந்தை பெரியார், தலைவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார், எம்.எல்.சி துணைத் தலைவர்கள்: நெ.து.சுந்தரவடிவேலு (துணைவேந்தர், சென்னைப் பல்கலைக் கழகம்), மேயர் சா.கணேசன், ஏ.என்.சட்டநாதன், செயலாளர் கி.வீரமணி அடங்கிய கருணாநிதி சிலை அமைப்புக்குழுவையும் பெரியார் அதே மேடையில் அறிவித்ததோடு, முதல் நபராக நன்கொடை கொடுத்து பணியையும் ஆரம்பித்துவைத்தார்.
                   திகைத்துப்போன தலைவர் கலைஞர், பெரியாரின் கோரிக்கையை எப்படி நிராகரிப்பது என்று தெரியாமல், ``திமுக சார்பில் பெரியாருக்கு முதலில் ஒரு சிலை அமைக்கிறோம். அதன் பின்னர் எனக்குச் சிலை வைப்பதைக் குறித்துச் சிந்திக்கலாம்” எனத் தட்டிக் கழித்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1973-ஆம் ஆண்டு பெரியார் மறைவுக்குப் பிறகு திமுக சார்பில், சென்னை அண்ணாசாலையில், கூவம் நதிக்கரையில், சிம்சன் அருகில் அதாவது, தற்போது அமைந்துள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலுக்கு எதிரில் பேராசிரியர் க.அன்பழகன், மணியம்மை முன்னிலையில், பெரியார் சிலையைக் கலைஞர் திறந்துவைத்தார். 
                     அந்தச் சிலை திறப்புவிழாவில் பேசிய அப்போதைய தி.க தலைவர் மணியம்மை, ``அன்று நீங்கள் சொன்னபடியே பெரியாருக்குச் சிலை அமைத்துவிட்டீர்கள். அதேபோல் இனியும் தட்டிக்கழிக்காமல் பெரியார் ஆசைப்பட்டபடி உங்களுக்குத் திராவிட கழகம் சார்பில் அண்ணா சாலையில் சிலை எழுப்பப்படும். இதற்கு நீங்கள் மறுப்புத் தெரிவிக்கக் கூடாது” என அன்பாகக் கட்டளையிட்டார்.
                  இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக அண்ணா சாலையில் தர்கா அருகில் இரண்டு விரல்களை மடக்கி மூன்று விரல்களை நீட்டின மாதிரி இருக்கும் தலைவர் கலைஞரின் ஆள் உயரச் சிலை அமைக்கப்பட்டு 1975-ஆம் ஆண்டு, செப்டம்பர் 21-ஆம் தேதி மணியம்மை தலைமையில் குன்றக்குடி அடிகளார் திறந்துவைத்தார். குறை மனத்துடன் திறந்ததாலோ என்னவோ... அந்தச் சிலை, நீண்ட காலம் நீடிக்காமல் போனது.
                    மற்ற தலைவர்களுக்கு வைக்கப்பட்ட சிலைகள்போல இல்லாமல் நீண்ட கல்லறை வடிவிலான மேடையின் மேல் முப்பதுகளின் இறுதியில் இருக்கிற தலைவரின் இளம் வயது உருவத்தைச் சிலையாக நிறுவியிருக்கிறார்கள். இந்தச் சிலை திறப்புக்கு அதிமுக சார்பில் தடை விதிக்க வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அந்த வழக்கில் திராவிட கழகம் வெற்றியடைந்து சிலையை நிறுவியிருக்கிறார்கள். அது ஒரு தனிக்கதை.
                    சிலை நிறுவி 12 ஆண்டுகள் கழித்து, 1987, டிசம்பர் 24-ஆம் தேதி எம்.ஜி.ஆர் மரணமடைந்தபோது, சென்னை மாநகரம் முழுக்க வெடித்த கலவரத்தில் அ.தி.மு.க-வினர் சிலர் தலைவர் கலைஞரின் சிலையைக் கடப்பாரையால் இடித்துத் தள்ளியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை `கலைஞர் சிலைமீது முதலில் செருப்பு வீசப்பட்டது. அடுத்து கல். கலைஞர் சிலை அப்படியே இருந்தது. உடனே ஒருவர் அருகிலிருந்த ஒயின் ஷாப்பிலிருந்து பலகையொன்றை எடுத்து வந்து சாய்வாகப் போட்டு அதன் மூலம் மேலே ஏறினார். சுற்றிலும் கூட்டம் கூடியது. சில போலீஸார் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். மேலே ஏறிய நபரின் கையில் ஒரு கம்பு கொடுக்கப்பட்டது. அதை வைத்துச் சிலையைத் தட்டிப் பார்த்தார். வெண்கலத்தாலான சிலை என்பதால் அந்தத் தட்டலுக்கு அசைந்து கொடுக்கவில்லை. அதற்குள் ஐந்தாறு பேர் பீடத்தில் ஏறிவிட்டார்கள்.
                   எங்கிருந்தோ ஒரு கடப்பாரை வர அதன் மூலம் முதலில் முதுகுப் பக்கம் துளை ஏற்படுத்தப்பட்டது. யாரோ ஒருவர் `இது தீயிலே உருகிடும்ப்பா...’ என்று கூற, ஐந்தாவது நிமிடம் கார் மற்றும் சைக்கிள் டயர்கள் வந்தன. அதைக் கொளுத்தி சிலையில் போடப்பட்ட துவாரத்தினுள் போட்டுப்பார்த்தார்கள். ஆனாலும் சிலை உருகவில்லை. சூடேறி இறுக்கம் மட்டும் தளர்ந்திருக்கிறது. கடப்பாரையால் மேலும் மேலும் இடித்ததில் சிலை உடைந்தது. அடுத்த கணம் அந்த இடத்தில் ஏற்பட்ட கரகோஷம் விண்ணைப் பிளந்தது நிஜம்.
                  மேலும், உடைக்கப்பட்ட கலைஞரின் சிலையருகே இரண்டு நபரின் உடல்கள் கிடந்தன. உடம்பெங்கும் ரத்தமயம். யார் அவர்கள்... எப்படி இறந்தார்கள்? யாருக்கும் தெரியவில்லை. தெரிந்துகொள்ள யாரும் ஆர்வம் காட்டவுமில்லை. கடைசியில் நாளிதழ் நிருபர் ஒருவர் போய் ஐ.ஜி-யிடம் விஷயத்தைச் சொல்ல, பின்னர் பிணங்கள் அகற்றப்பட்டன’ என அப்போது வந்த ஜூனியர் விகடனில் எழுதியிருக்கிறார்கள்.
                     இந்தச் செய்தி அறிந்து திமுக தொண்டர்கள் ஆத்திரமடைந்தார்கள். கலைஞரின் சிலை உடைக்கப்படும் புகைப்படம் ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தலைவர் கலைஞரோ,
``உடன்பிறப்பே,
செயல்பட விட்டோர்
சிரித்து மகிழ்ந்து நின்றாலும்
அந்தச் சின்னத் தம்பி
என் முதுகில் குத்தவில்லை,
நெஞ்சிலேதான் குத்துகிறான்
அதனால் நிம்மதி எனக்கு!
வாழ்க! வாழ்க!!"
என, அப்போது முரசொலியில் எழுதினார்.
                குறை மனத்துடன் திறந்ததாலோ என்னவோ... அந்தச் சிலை, நீண்ட காலம் நீடிக்காமல் போனது. ஒருவேளை அந்தச் சிலை இடிக்கப்படாமலிருந்தால் அண்ணாசாலையின் தொடக்கத்தில் பெரியார் சிலை, அங்கிருந்து கால் கி.மீட்டரில் ரிச்சி ஸ்ட்ரீட் அருகே அண்ணாவின் சிலை, அங்கிருந்து கொஞ்சதூரம் தேவி தியேட்டர் தாண்டிவந்தால் இப்போது இருக்கும் புகாரி ஹோட்டல் அருகே கலைஞர் சிலை, இன்னும் கொஞ்சம் எல்ஐசி தாண்டி வந்தால் ஸ்பென்சர் அருகே எம்ஜிஆர் சிலை எனத் தமிழக அரசியல் வரலாறு சரியான வரிசையிலிருந்திருக்கும். அதற்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பால் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
                மறைந்த முன்னாள் முதல்வர் தலைவர் கலைஞருக்குச் சென்னை அண்ணாசாலையில் சிலை அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு முதல்வர் தளபதியார் அறிவித்திருக்கிறார். ``சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, அண்ணா சாலையில் ஏதாவது ஓரிடத்தில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் சிலை அமைக்கப்படும்” என அறிவித்திருக்கிறார். திராவிடர் கழகத்தின் தலைவர் ஐயா கி.வீரமணியின் கோரிக்கையை அடுத்து பேரவையில் முதல்வர்  இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 
                ``கலைஞருக்குச் சிலை அமைக்கப்பட வேண்டும் என்பது பெரியாரின் உத்தரவு. சிலை அமைப்பதற்காக ஏற்கெனவே அனுமதி பெற்றிருப்பதால், புதிதாக அனுமதி வாங்கவும் தேவையில்லை. முன்னர் சிலை இருந்த இடத்திலேயே மீண்டும் சிலை அமைப்பதால் எந்தச் சட்டச் சிக்கலும் இல்லை” எனத் திராவிடர் கழகத் தலைவர் ஐயா கி.வீரமணி பேசியிருக்கிறார். ஆம், தலைவர் கலைஞருக்குச் சிலை அமைக்க வேண்டும் என்பது தந்தை பெரியாரின் விருப்பம். அதை நம் முதல்வர் தளபதி அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி விடைபெறுகிறேன் .

பெரியாரைப் பற்றி கண்ணதாசன் 
ஊன்றிவரும் தடி சற்று நடுங்கக்கூடும்
உள்ளத்தின் உரத்தினிலே நடுக்கமில்லை;
தோன்றவரும் வடிவினிலே நடுக்கம் தோன்றும்
துவளாத கொள்கையிலே நடுக்கமில்லை!
வான் தவழும் வெண்மேகத் தாடி ஆடும்
வளமான சிந்தனைக்கோர் ஆட்டமில்லை
ஆன்றவிந்த பெரியார்க்கும் பெரியார்
எங்கள் அய்யாவிக்கிணை எவரே மற்றோர் இல்லை!
நீதிமன்றின் நீதிக்கும் நீதி சொல்வார்
நெறிகெட்டு வளைந்ததெல்லாம் நிமிர்த்திவைப்பார்
ஜாதி என்னும் நாகத்தைத் தாக்கித் தாக்கி
சாகடித்த பெருமை கைத்தடிக்கே உண்டு!
ஆக்காத நாள் இல்லை ஆய்ந்து தேர்ந்து
அளிக்காத கருத்தில்லை அழுத்தமாக
தாக்காத பழமையில்லை தந்தை நெஞ்சில்
தழைக்காத புதுமை இல்லை தமிழ் நிலத்தில்!
நாதியிலார் நாதிபெற நாப்படைத்தார்-
நாற்பத்தி அய்ங்கோடி மக்களுக்கும்
பேதமிலா வாழ்வுதரப் பிறந்து வந்தார்
பிறக்கையிலே பெரியாராய்த் தான் பிறந்தார்!

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *