தமிழக அரசின் 2010-11ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை விளக்க தெரு முனை பிரச்சாரக் கூட்டம் – 15.04.2010

15.04.2010 அன்று, சென்னை தியாராயநகர் 127வது வட்ட திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற தமிழக அரசின் 2010-11ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை விளக்க தெரு முனை பிரச்சாரக் கூட்டத்தில்
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை

திருக்குவளை முத்துவேலர் அய்யா, அழுத்தப்பட்ட சமுதாயத்தின் செவ்வானம். முத்தமிழ் அறிஞர் கலைஞர் வீழ்ச்சி பெற்ற அந்த சமுதாயத்தின் வைகளை, நம்முடைய தளபதி எழுச்சியுற்ற அந்த சமூகத்தின் இன்றைய விடியல். மூவரையும் நான் இந்தக் கணம் என்னுடைய நெஞ்சில் நிறத்துகின்றேன். தியாகராய நகர் பகுதி திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி சார்பில் 127வது வட்டத்திலே இன்றைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற நம்முடைய ஒப்பற்ற தலைவருடைய ஆட்சியிலே தாக்கல் செய்யப்பட்ட 2010-11ம் ஆண்டிற்கான நிதி நிலை விளக்க தெரு முனைப் பிரச்சாரக் கூட்டத்திற்கு தலைமை வகித்துக் கொண்டிருக்கிற மதிப்பிற்குரிய கருணாநிதி அவர்களே, முன்னிலை வகித்த கே.ஏழுமலை அவர்களே... இந்தப் பகுதியிலே ஆரம்பகால கட்டத்திலே நம்முடைய கட்சியை வளர்ப்பதிலே ஒரு அரணாக நின்று கழகத்தை இங்கே வேரூன்றச் செய்வதிலே பெரும் பங்காற்றி, மறைந்த, கழகத்தினுடைய மூத்த முன்னோடி அனைவருடைய நெஞ்சங்களிலும் நிறைந்திருக்கின்ற மதிப்பிற்குரிய அய்யா பழக்கடை ஜெயராமன் அவர்களுடைய புதல்வரும், அவருடைய மறைவிற்குப் பின்பாக இந்தப் பகுதியினை நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக் கனியாக மட்டுமே பூக்கின்ற ஒரு தோட்டமாக மாற்றி, அதிலும் மிகக் குறிப்பாக, இளைஞர் அணி என்கின்ற அமைப்பினை மிக வலுவான ஒரு அமைப்பாக மாற்றி, தளபதிக்கு, அவர் எடுத்து வருகின்ற அத்தனை செயல்களிலும் பக்கபலமாக நின்று, கட்சிக்கு ஒரு தளகர்த்தாக்களில் ஒருவராக, முன்னணி செயல்பாட்டாளர்களில் ஒருவராக விளங்கிக் கொண்டிருக்கிற, பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தென் சென்னை மாவட்டத்தினுடைய செயலாளர் அண்ணன் அன்பழகன் அவர்களே..... என் முன்பாக ஆண்கள் 33 சதவிகிதம் தான், பெண்கள் நாங்கள் 50 சதவிகிதம் என்று இன்றைய தினம் பெரும் திரளாக அமர்ந்திருக்கின்ற நம் இனத்து சகோதரிகளே, தாய்மார்களே, இளைஞர் அணியைச் சார்ந்த துடிப்புமிக்க தொண்டர்களே, மற்றும் சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் அய்யா என்று நினைக்கின்றேன், யாருடைய பெயராவது இங்கே விட்டிருந்தால் என்னை மன்னிக்கவும். மேடையிலே அமர்ந்திருக்கின்ற கழகத்தினுடைய மிக மூத்த முன்னோடிகளே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய இந்த மாலை நேரத்து வணக்கம்.
இந்தப் பகுதியிலே இன்றைக்கு நம்முடைய தலைவர் அவர்களுடைய அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்டிருக்கின்ற நிதிநிலை அறிக்கை குறித்து சிறப்புரையாற்றுவதற்கு உங்கள் முன் நான் நிற்கிறேன். இந்தக் கணத்திலே பேரறிஞர் அண்ணாவினுடைய ஒரு கூற்று எனக்கு நினைவுக்கு வருகின்றது. அவர் ஒரு முறை சென்னையிலே பொதுக் கூட்டத்திலே பேசும் போது சொன்னார், திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு அழகான வீணையைப் போன்றது. அந்த வீணையினுடைய இசையினைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள், அந்த வாத்தியத்தினுடைய வலிமையையும், இசையினுடைய நுட்பத்தையும் நுகர்வதற்கு சக்தியற்றவர்கள் என்று நான் சொல்லுவேன் என்று சொல்லிவிட்டு மேலும் அவர் சொல்லுகின்றார், இந்த அழகான வீணை இசையைக் கேட்பதற்கு இங்கு என் முன்னால் கூடியிருக்கின்ற கழகத் தோழர்களே, எதிர்க் கட்சி நண்பர்களே, இந்த வீணையிலே ஒரு அழகான மோகன ராகத்தை என்னுடைய உள்ளம் சோர்வுற்று இருக்கிற பொழுதெல்லாம் என்னுடைய தம்பி, நம்முடைய ஒப்பற்ற பெருந் தலைவர் அவருடைய பெயரைச் சொல்லி, என்னுடைய தம்பி கருணாநிதி இந்த மோகன ராகத்தை எனக்கு வாசித்துக் காட்டுவான், என்னுடைய உள்ளம் உற்சாகமாகத் துள்ளி எழும். என்னிடத்திலே இருக்கின்ற கனவின் மொத்த உருவம்தான் என்னுடைய தம்பி. அவர் பாடுகின்ற அந்த மோகன ராகத்திற்கு இணையாக வேறு யாரும் இந்தக் கட்சியிலே அருமையான ஒரு இசையை இசைக்க முடியாது என்று பேரறிஞர் அண்ணாவால் அன்றைக்கு சுட்டிக் காட்டப்பட்ட, இன்றைக்கு இந்திய அரசியல் வரலாற்றிலேயே பன்னெடுங்காமாக, ஒரு தியானத்தைப் போல வேரூன்றி நிற்கின்ற, அகில இந்திய அரசியல் வாதிகளுக்கான மூத்த தலைவர், நீண்ட நெடிய திராவிட மரபிலே பற்பல வரலாற்றுச் சம்பவங்களுக்கும் ஒரு வரலாற்றுப் படிவமாக நிறைந்து நிற்கின்ற, அனைத்து யுகங்களுக்கும் ஒரே தலைவராக நீடித்து நிற்கக் கூடிய நம்முடைய ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்களை இந்தக் கணம் என்னுடைய நெஞ்சிலே நிறுத்துகின்றேன். 
திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு மிகப்பெரிய ஆலமரம். அந்த ஆலுக்கு விழுது போலவும் ஆக்கம் தரும் படையெனவும் இன்றைக்கு வளர்ந்திருக்கிற, நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களின் கண் அசைவிலே காட்டுகின்ற காரியங்களை எல்லாம் சுற்றிச் சுழன்று தமிழகம் எங்கும் பிரயாணம் செய்து ஒரு இளஞ்சூரியனைப் போல இன்றைக்குப் பணியாற்றிக் கொண்டிருக்கிற எழுச்சி நாயகன், எனக்கு, என்னுடைய அரசியல் வரலாற்றுக்கு திருநெல்வேலியிலே நடந்த இளைஞரணியின் மாநாட்டிலே, தலைவருடைய அறிவுறுத்தலின் படி கொடியேற்றுகின்ற அந்த அருமையான வாய்ப்பினை வழங்கி, என்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு ஒரு தடம் போட்டுத் தந்த நம்முடைய தளபதி அவர்களை இந்தக் கணம் நான் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.
இந்தப் பகுதியிலே நான் இன்றைக்கு உரையாற்ற வந்திருப்பது என்பது இன்னும் ஒரு பெருமிதத்தையும், மகிழ்ச்சியையும் எனக்கு தருகின்றது. பெருமைக்குரிய அண்ணன் சொன்னது போல இந்தப் பகுதிக்கு வருகை தருவது இது தான் முதல் முறை. தி.நகர் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது சர்.பிட்டி.தியாகராயர் அவர்களும், அவருடைய பெயரைத் தாங்கி இருக்கிற பகுதி தான் தியாகராய நகர். தியாகராயர் என்ற அந்தப் பெயர், அந்தக் காலத்திலே மிகவும் பிரபலம். தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்கின்ற அந்த எழுச்சி மிகு சங்கத்தைத் துவக்கியவர்களில் அவர் ஒருவர். அவருடைய வாழ்க்கையிலே நடந்த சம்பவம் ஒன்றை நம்முடைய நிதியமைச்சர் அவர்கள், மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்கள் ‘‘கும்பாபிஷேக நன்கொடை’’ என்ற தலைப்பிலே சொல்லியிருப்பார். பிட்டி தியாகராயர் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர். அவருடைய தொழிற்சாலையிலே தயாரிக்கப்படுகின்ற தோல் ஆடைகளிலே "பிட்டி’’ என்கின்ற பெயர் அடையாளம் இடப்பட்டு, இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்படும். இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர்கள் எல்லாம், பிட்டி என்கின்ற அடையாளத்தைப் பார்த்தாலே மறுவார்த்தை பேசாமலே ஏகப்பட்ட பணத்தைக் கொடுத்து அந்தப் பொருளை வாங்குவார்களாம். அப்பேற்பட்ட புகழ் பெற்ற பிட்டி தியாகராயர், மைலாப்பூரிலே நடக்கின்ற குடமுழுக்கு ஒன்றிற்காக ரூபாய் 5,000 தருகின்றார். குட முழுக்கு நடைபெறுகின்ற தினத்தன்று அவரும் அங்கே அழைத்து செல்லப்படுகின்றார். ஆனால், பிராமணர்களுக்கு எல்லாம் மேடை போட்டு அவர்கள் அனைவரும் அந்த பரண் மேலே ஏறி நிற்க, செட்டியார் மட்டும் ஒரு ஓரமாக உட்காரவைக்கப் படுகின்றார். அந்த நாள், மனம் வெதும்பி, சமூக நீதிக்காக நாம் ஒரு இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று அவர் முன்னெடுத்ததுதான் தென்னிந்திய நலச்சங்கம். அதன் மீட்சியாகவே நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற இந்த இயக்கம் வளம்பெற்று வளர்ந்தது. அத்தகைய பெருமை பெற்றவரின், இந்தப் பகுதியிலே, உங்கள் முன்னால் நிற்பது எனக்கு மிகுந்த பெருமையும், சந்தோஷத்தையும் தருகின்ற ஒன்றாகும். இன்னொரு விஷயம் என்னவென்றால், நான் சுட்டிக் காட்டியதைப் போல எனக்கு அரசியலிலே ஒரு தடத்தைப் போட்டுத் தந்த தளபதி அவர்களுடைய ஆசியோடும், கண்காணிப்போடும், அவர்களுடைய அறிவுரையின் படியும் மிகப் பெரிய ஒரு அணியாக விளங்குகின்ற இளைஞர் அணியின் சார்பிலே நடத்தப்படுகின்ற இந்தக் கூட்டத்திலே பங்கேற்பதிலே எனக்கு அதீத பெருமையும் கௌரவமும் உண்டு. அதிலே என்னுடைய தந்தையும் சம்பந்தப்பட்டிருப்பதால், அவர் குறித்த ஒரு செய்தியை நான் இங்கே பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். அது 1982ம் ஆண்டு, திருச்சியிலே கூட்டப்பட்ட நம்முடைய கழகத்தின் பொதுக்குழு. அந்தப் பொதுக்குழுவிலே, என்னுடைய தந்தை திரு.தங்கபாண்டியன் அவர்கள் ஒரு கருத்தை முன்மொழிகின்றார். அந்தக் கருத்து என்னவென்றால், 1967க்குப் பிறகு, ஏதோ நம்முடைய கழகத்திலே கழகத்திற்கும், இளைஞர்களுக்கும் இடையிலே ஒரு தொய்வு ஏற்பட்டதைப் போல ஒரு பிரமையை பத்திரிகைகள் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. அது அப்படியல்ல. இளைஞர் அணி என்கின்ற அமைப்பு மிக வலுவானதாக, பலமானதாக வேரூன்றி இருக்கிறது. அது மேலும் பலமானதாக, வலுவுடையதாக விளங்க வேண்டும் என்றார். தாய்க் கழகத்திற்கு அவருடைய வார்த்தையிலேயே நான் அதைச் சொல்லுகின்றேன். தாய்க் கழகத்திற்கு ஒரு முதுகெலும்பைப் போல இளைஞரணி பணியாற்ற வேண்டும் என்றால், இளைஞர் அணிக்கு மாநில அமைப்பு, மாநில இளைஞரணி தலைவர் என்கின்ற அந்தப் பதவியை நம்முடைய தளபதிக்கு வழங்க வேண்டும் என்கின்ற கருத்தை அன்றைக்கு முன்மொழிந்தவர் என்னுடைய தந்தை. அதுமட்டுமல்ல, நேருவிற்குப் பிறகு இந்திராகாந்தி, இந்திராகாந்திக்குப் பிறகு அவர் மகன் என்ற குற்றச்சாட்டை தளபதியின் மேல் சுமத்த முடியாது. அப்படிப்பட்ட தியாக வரலாறு அவருடைய வரலாறு. அவர் மிசாவிலே கைது செய்யப்பட்டபோது நம்முடைய கழகத்தினுடைய உறுப்பினர். கைலாசம் சட்டக் கமிஷன் எறித்து கைதாகிய போது அவர் ஒரு பொதுக்குழு உறுப்பினர். குடியாத்தத்திலே குடிநீர்ப் பிரச்சினைக்காக மறியல் செய்த போது கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டபோது அவர் சட்டமன்ற உறுப்பினர். பின்பு மேயராக, பொதுக்குழு உறுப்பினராக வளர்ந்து வருகிற நம்முடைய தளபதி, மிசாவிற்குப் பிறகு முழுக்கைச் சட்டையை ஏன் அணிகின்றார் என்ற அந்தக் காரணத்தை மட்டுமே நீங்கள் நினைத்துப் பாருங்கள். அந்த தியாக தழும்புகளுக்காக அவர் இளைஞர் அணியினுடைய தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று என்னுடைய தந்தை பேசினார். அந்த தந்தையினுடைய மகளாக, இன்றைக்கு மிகப் பெரிய பலம்மிக்க வலுவானதொரு அமைப்பாக கழகத்தினுடைய அனைத்து சோதனை கட்டங்களிலும் துணை நின்று மிகப்பெரும் வெற்றிகளை ஈட்டித் தந்திருக்கிற இளைஞர் அணியின் இந்தக் கூட்டத்திலே பேசுவது என்பது எனக்கு மிகுந்த கௌரவமும், சந்தோஷமும் என்பதை இந்த சந்தர்ப்பத்திலே நான் பதிவு செய்கின்றேன்.
தாய்மார்களே, பெரியோர்களே, என்னுடைய இனத்து சகோதரிகளே, நான் நிதி நிலை அறிக்கை குறித்துப் பேசுவதற்கு முன்பாக ஓரிரு கருத்துக்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். மிகப்பெரும் அளவிலே, இன்றைக்கு இந்தப் பகுதியிலே பெண்கள் இங்கு கூடியிருக்கின்றீர்கள். அதற்கெல்லாம் காரணமாக, இந்தப் பகுதியிலே வேரூன்றி இருக்கின்ற மகளிர் சுய உதவிக்குழுக்களே காரணம் என்று நம்முடைய மாவட்டச் செயலாளர் அவர்கள் பெருமிதத்தோடு சொன்னார். நீங்கள் அனைவரும் எவ்வாறு சமூகத்திலே அறியப்படுகிறீர்கள் இன்றைக்கு? மாமியாராக, மருமகளாக, அம்மாவாக, சகோதரியாக, மகளாக இப்படித் தான் நீங்கள் அறிமுகப்படத்தப்பட்டு இருக்கிறீர்கள். 21ம் நூற்றாண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக நம்முடைய ஒப்பற்ற தலைவரின் அறிவுரைப்படி சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்ட பிறகு, நீங்கள் உங்களை எப்படி அறிமுகம் செய்து கொள்ளலாம்? நாங்கள் மகளிர் சுய உதவிக் குழுவினர் என்று நீங்கள் அறிமுகம் செய்து கொள்ளலாம். அந்த அளவிற்கு உங்களுக்கு இன்னொரு முகத்தையும் அடையாளத்தையும் பெற்றுத்தந்திருக்கிற வலுவான இந்த குழுக்களை உங்களிடம் கொண்டு சேர்த்த இயக்கம் எது? அந்த செயலை ஒரு புலிப் பாய்ச்சலைப் போல இன்றைக்கு தமிழகம் எங்கும் பயணம் செய்து, நிதியுதவி வழங்கி, அதற்கு புத்துயிரை, ரத்தத்தைப் பாய்ச்சிய இளம் தலைவர் யார் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளாட்டோ. இந்த மூன்று பேரும் மிகச் சிறந்த அறிஞர்கள் என்று சொல்லுவார்கள். இந்த மூன்று பேரைப் போன்றுதான் நாம், தந்தை பெரியார், பேரறிஞர், தலைவர் கலைஞர் ஆகிய மூன்று பேரையும் சுட்டுவோம். இந்த மூன்று பேருடைய நீட்சியாகத்தான் நம்முடைய தளபதி எப்படி ஒரு எளிய தலைவரைப் போல செயல்படுகிறார் என்பதற்கு ஓரிரண்டு உதாரணங்கள் சுட்டிக்காட்டி நான் மேல்செல்லலாம் என்று நினைக்கின்றேன். உதாரணத்திற்கு, தந்தை பெரியார் 1929ம் ஆண்டு செங்கல்பட்டிலே ஒரு மாநாட்டை நடத்துகின்றார். அந்த மாநாடு எதற்காக கூட்டப்பட்டது தெரியுமா? இங்கே அமர்ந்திருக்கிற உங்களைப் போல பெண்களுக்காக, அவர்களுடைய முன்னேற்றத்திற்காக 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட மிகப் பெருமை மிகுந்த, பெண்களுக்காக முதன் முதலாக நடைபேற்ற சுயமரியாதை மாநாடு. நான் சொல்வது எத்தனை வருடங்களுக்கு முன்பாக என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். அந்த மாநாட்டிலே தந்தை பெரியார் சொல்கின்றார், ஆரம்பக் கல்வி பயில்கின்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாக புத்தகம், பேனா, உடை, உணவு முதலியன வழங்கப்பட வேண்டும். அது மட்டுமல்ல, 1லிருந்து 5ம் வகுப்புவரை படிக்கின்ற அனைத்து வகுப்புகளுக்கும் பெண்களே ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று சொல்கின்றார். பெரியாருடைய அந்தக் கனவையும், பேரறிஞருடைய எண்ணங்களையும் தன்னுடைய எழுதுகோலின் மூலமாக இலக்கியத்திலே கொண்டு வருபவர் நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்றால், இலக்கியப் பணி ஆற்றாமல் ஓய்ந்திருக்கின்ற சமயங்களில் அரசு உத்தரவுகளின் மூலமாகவும் அதனை நிறைவேற்றுகின்ற ஒரே தலைவர், நம்முடைய தலைவர் கலைஞர் மட்டுமே. அவருடைய கனவை இவர் எப்படி நிறைவேற்றி இருக்கின்றார் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். பெண் குழந்தைகளுக்கு மிதிவண்டி என்று சொல்லப்படுகின்ற சைக்கிள் கொடுப்பதிலிருந்து, இலவசக் கல்வி, அவர்களுக்கு திருமண உதவித் திட்டம், கர்ப்பமானால் கர்ப்பிணி உதவித் திட்டம், சமையலுக்கென்று கேஸ் அடுப்பு இப்படி நான் சொல்லிக் கொண்டே போகலாம்.
தலைவர் கலைஞருடைய நீட்சியாக இருக்கின்ற நம்முடைய தளபதி அவர்கள் பெண்களுக்கென்று இன்றைக்கு இருக்கின்ற மகளிர் சுய உதவிக் குழுக்களை தன்னுடைய நேரடி கண்காணிப்பிலே எடுத்துக் கொண்டு, எத்தனை பெரிய சாதனை செய்திருக்கிறார் தெரியுமா? உங்களுக்கெல்லாம் ஒரு இரண்டு மணி நேரம், மூன்று மணிநேரம் இங்கே அமர்ந்திருப்பது என்பது மிகக் கஷ்டமாக இருக்கலாம். அங்கே சீரியல்கள் உங்களை வாவா என்று அழைத்துக் கொண்டிருக்கும். உங்களுடைய வயிற்றுப் பசி, இரவிலே என்ன சாப்பாடு என்ற எண்ணம் நான் பேசம்பொழுதே உங்களுக்கு ஓடிக்கொண்டிருக்கும். இந்த அம்மையார் எப்பொழுது பேசி முடித்து, நாம் எப்பொழுது வீட்டிற்குச் சென்று உறங்குவது என்கின்ற ஒரு லேசான அவஸ்தையோடு இங்கு நீங்கள் அமர்ந்திருப்பீர்கள். இரண்டு மனிநேரம் அமர்ந்திருப்பதே உங்களுக்கு கஷ்டமான காரியம் என்றால், நம்முடைய தளபதி, மகளிர் சுய உதவிக் குழுக்களக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் வரை எத்தனை மணி நேரம் நின்று கொண்டே நிதியுதவி வழங்கியிருக்கிறார் தெரியுமா? சுமார் 68 மணி நேரங்கள் நின்ற கொண்டே எத்தனை மகளிருக்கு வழங்கியிருக்கிறார் தெரியுமா? 1,44,215 மகளிருக்கு சுமார் 748 கோடியே 24 லட்சம் ரூபாயை நின்று கொண்டே வழங்கியிருக்கிறார். அப்படியென்றால், தந்தை பெரியார், பேரறிஞர், தலைவர் கலைஞர் இந்த மூன்று பேருடைய நீட்சியாக இன்றைக்கு திகழ்கின்ற நம்முடைய தளபதியைத் தவிர வேறு யார் இருக்க முடியும்? மக்களுக்கு செயல் திட்டங்கள் தருபவர் மட்டுமே தலைவர் அல்ல. செயலை சிறப்பாக ஆற்றுகிறவர் மட்டுமே தலைவர் அல்ல. மக்களால் விரும்பப் படுபவராக இருப்பவர் மட்டும் தான் ஒரு இளம் தலைவர். அப்படிப் பார்க்கும் பொழுது, அங்கே மனித நேயம் என்கின்ற மிகப்பெரிய முக்கியமான குணத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மிகப் பெரிய பேச்சாளர்களாக, தலைவர்களாக இருப்பதிலே பெரிய விசேஷம் ஒன்றும் இல்லை. சர்ச்சில் என்கின்ற இங்கிலாந்து நாட்டின் பிரதமர் மிகச் சிறந்த பேச்சாளராக அறியப்படுபவர். இன்றளவும் நான் கூட, மிகச் சிறந்த மரியாதை வைத்திருப்பவர் தான்.  ஆனால், மனிதாபிமானம் கொஞ்சமும் இல்லாமல் அவர் ஆற்றிய உரை ஒன்று உள்ளது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பாக ஈராக்கின் மீது இங்கிலாந்து போர்தொடுக்கம் போது உலகப்புகழ் பெற்ற பேச்சாளர் என்று அறியப்படுகின்ற சர்ச்சில் ஒரு கருத்தைச் சொல்லுகின்றார். அந்த நாட்டிலே இருக்கக்கூடிய பழங்குடிமக்கள், பூர்வக்குடிகளாக இருக்கக் கூடிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது குண்டுகளைப் போடுவதில் எனக்கு சம்மதம். எப்படிப்பட்ட குண்டுகளை நான் போடுவேன் தெரியுமா? அவர்களை சாகடிப்பதற்காகப் போடப்படுகிற குண்டுகள் அல்ல, அவர்கள் மூச்சுத்திணறி அப்படியே சித்திரவதை செய்யக்கூடிய குண்டுகளைப் போடுவதற்கு எனக்குச் சம்மதம் என்று பேசினார். அது மனிதாபிமானமா? அவர் எத்தனை சிறந்த பேச்சாளர் என்றாலும் அவரை எப்படி நீங்கள் உயர்ந்த தலைவராக ஏற்றுக் கொள்வீர்கள்? ஆனால், மனிதநேயம், மனிதர்களுடைய உறவைப் பேணுவதிலே நம்பிக்கை கொண்டிருக்கிற நம்முடைய தளபதி இத்தனை பெண்களுக்கு இத்தனை மணிநேரம் நின்ற சுழல் நிதியை வழங்கிவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்குகின்றார், மேடையின் அருகிலே மேலும் 70 மகளிர் சுய உதவிக் குழுக்கள் அவருக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. தேசிய கீதம் பாடியாகி விட்டது. நிகழ்ச்சி முடிந்து கீழே இறங்கியாகி விட்டது. என்ன விஷயம் என்று கேட்கின்றார். அந்தப் பெண்கள் அவரிடம் சொல்லுகின்றார்கள் உங்கள் கையாலே தான் நாங்கள் நிதி வாங்குவோம், என்று. அரசு அதிகாரிகள் தயங்குகிறார்கள். விழா முடிந்துவிட்டது, மரபை எப்படி மீறுவது என்று. மரபு முக்கியமல்ல, மனித நேயம் தான் முக்கியம் என்று சொல்லி, மீண்டும் மேடையிலே ஏறி, அங்கே காத்திருக்கின்ற அத்தனை பெண்களுக்கும் நிதியை வழங்கிவிட்டுத் தான் கீழே இறங்கிச் செல்லுகின்றார். இப்பொழுது சொல்லுங்கள், தந்தை பெரியார், பேரறிஞர், தலைவர் கலைஞர். இவர்களுடைய நீட்சியாக இன்றைக்கு இருக்கின்ற, இந்தியாவிலேயே இருக்கின்ற இளம் தலைவர் இவர் மட்டுமே என்பதிலே உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்கின்றதா? அப்படிப்பட்ட தலைவரை நாம் இன்றைக்கு துணை முதலமைச்சராக பெற்றிருக்கின்றோம். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் என்னென்ன திட்டங்களை நிதி நிலை அறிக்கையிலே தருகின்றாரோ அத்தனையையும் ஒரு கண் அசைவிலே கடுகினும் மிகச் சீறிய வேகத்தோடு சென்ற, அந்த உதவியை உடனடியாக மக்களுக்கு கொண்டு சேர்க்கின்ற துடிப்போடு இயங்குகின்றவரை நாம் துணை முதலமைச்சராக பெற்றிருக்கின்ற இந்த வேளையிலே, நம்முடைய நிதிநிலை அறிக்கை குறித்த சிறப்பான அம்சங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கின்றேன். 
எனக்கு முன்பாக பேசிச் சென்ற அனைவரும், இந்த நிதிநிலை அறிக்கையிலே இருக்கின்ற சிறப்பம்சங்களை உங்களுக்கு சொல்லிச் சென்றார்கள். ஆனால், மிகச் சமீபத்திலே, பென்னாகரத்திலே டெபாசிட் இழந்து, அகில இந்திய அட்ரஸ் இல்லாத கட்சி என்று பெயர் மாற்றிக் கொள்ளத்தக்க வகையிலே தன்னுடைய கட்சியை நடத்திக்கொண்டிருக்கிற அம்மையார் மட்டும், இந்த நிதி நிலை அறிக்கை குறித்து தமிழ் நாடெங்கும் கண்டனக் கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கின்றார். அவர் எந்தெந்த விஷயங்களை சுட்டிக் காட்டி கண்டனக் கூட்டங்களை நடத்தப் போவதாக சொல்லியிருக்கின்றார் தெரியுமா? ஏற்கனவே கொசுவை ஒழிப்பதற்காக ஒரு போராட்டத்தை அவர் நடத்தி முடித்துவிட்டார். கரும்பு விவசாயிகளுக்காக விழுப்புரத்திலே சென்று முதலைக் கண்ணீர் வடித்தாகி விட்டது. இனிமேல் என்ன வேலை இருக்கின்றது? வேலை இல்லாதவர்கள் ஏதாவது ஒன்றை கையிலே எடுத்துக் கொள்ள வேண்டுமே என்பதற்காக, இத்தனை சிறப்பு வாய்ந்த நம்முடைய கலைஞர் அரசினுடைய நிதிநிலை அறிக்கையிலே அவர் சொல்லி இருக்கின்ற ஓட்டைகள் என்னென்ன தெரியுமா? வேளாண் மற்றும் தொழில் உற்பத்தியிலே பின்னடைவாம், விலைவாசி உயர்ந்து விட்டதாம், கடுமையான மின்வெட்டு நிலவுகின்றதாம், வேலையில்லாத திண்டாட்டம் இருக்கின்றதாம், குடிநீர்ப் பற்றாக்குறையும், நதி நீர்ப் பிரச்சினையும் தலைவிரித்து ஆடுகின்றதாம், சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாம். இவை ஒவ்வொன்றிற்கும் நான் ஆதார பூர்வமாக மறுபதில் சொல்லலாம் என்று நினைக்கின்றேன். அதற்கு முன்பாக, பெரியோர்களே, உங்களிடம் ஒரு சிறிய கதையைச் சொல்லுகின்றேன். எங்களுக்கு புராணங்களில் நம்பிக்கை இல்லை. நாங்கள் எப்பொழுதுமே பகுத்தறிவுவாதிகள் தான். காசியிலே இறந்தவருக்கும், திருவாரூரிலே பிறந்தவருக்கும் சிதம்பரத்திலே நடராஜரை திரிசித்தவருக்கும் முக்தி உண்டு என்று சொல்லுவார்கள். முக்தியிலும், பக்தியிலும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் திருவாரூரிலே பிறந்தவர் மீது எங்களுக்கு பக்தியும் உண்டு, முக்தியும் உண்டு. ஆனால், அம்மையார் புராணத்தை நம்புபவர். ஆகையால் அவருக்கு புராணத்தின் வாயிலாகவே ஒரு கதையைச் சொல்லுகின்றேன். பகவான் கிருஷ்ணரைப் பற்றி உங்களுக்குத் தெரியும். கிருஷ்ணர் ஒரு நாள், தருமனையும், துரியோதனனையும், இன்றைக்கு நகர் வலம் சென்ற, இந்த நகரத்திலே ஒரு நாள் முழுவதும் சுற்றி அலைந்து எத்தனை நல்லவர்கள் இருக்கிறார்கள், எத்தனை கெட்டவர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்து வாருங்கள் என்று சொன்னாராம். இரண்டு பேரும் நகருக்குள் செல்கின்றார்கள். மாலையாகிறது. முதலில் தருமன் திரும்பி வருகின்றார். கிருஷ்ணபகவான் தருமரைப் பார்த்து கேட்கின்றார், என்ன தருமா? கணக்கெடுத்தாயா? எத்தனை நல்லவர்கள், எத்தனை கெட்டவர்கள் என்று கேட்டார். தருமன் கிருஷ்ணனிடம் சொன்னாராம், நகரத்தில் அனைவரும் நல்லவர்களாக இருக்கின்றார்கள். நான் ஒரு கேட்டவனைக் கூடப் பார்க்கவில்லை என்று சொன்னாராம். அவர் பேசி முடித்த அடுத்த கனம் அங்கு நுழைந்த துரியோதனனிடம் கிருஷ்ணர்கேட்ட கேள்விக்கு துரியோதனன் சொன்னாராம், நான் நகரத்தில் ஒரு நல்லவனைக் கூடப் பார்க்கவில்லை. என்னைத் தவிர அனைவரும் கெட்டவர்களாகவே இருக்கின்றார்கள் என்று சொன்னாராம். கிருஷ்ணர் சிரித்துக் கொண்டே சொன்னாராம், அது பார்க்கின்ற கண்களைப் பொறுத்து என்று. அம்மையாருடைய மஞ்சல் காமாலை கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாகத் தான் தெரிகிறது என்பதற்காகத் தான் இந்தக் கதையை நான் உங்களிடம் சொன்னேன். நிதிநிலை அறிக்கையை தயாரித்துத் தந்திருப்பவர் யார்? தமிழனக்கு என்று ஒரு வரலாற்றை மீட்டெடுத்துத் தந்திருக்கிற நம்முடைய ஒப்பற்ற தலைவர் அவர்கள்.
கார்ல் மார்க்ஸ் என்கின்ற அறிஞனை உங்களுக்குத் தெரியும் என்று நான் நினைக்கின்றேன். கார்ல் மார்க்ஸ் என்றாலே ஏதோ தடியான புத்தகங்களை எழுதியவர் என்று நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம். உழைப்பு உன்னதமானது என்று சொல்வதற்கு கார்ல் மார்க்ஸ் தேவையில்லை. நம்முடைய பாட்டிகளும், தாத்தாக்களும், அப்பத்தாக்களும் நமக்கு அதனை ஏற்கனவே சொல்லியிருக்கின்றார்கள். அதனை வரலாற்று ரீதியாக, அறிவியல் ரீதியாக, தர்க்க பூர்வமாக நிறுவியவர் தான் கார்ல் மார்க்ஸ். அவர் ஒரு முறை சொன்னாராம், இந்தியா மீது அடிக்கடி எழுந்த படையெடுப்புகளைத் தவிர இந்தியர்களுக்கென்று ஏதும் சரித்திரம் கிடையாது என்று. இதைக்கேட்ட, இந்திய தேசிய மரபில் வந்த வரலாற்று ஆசிரியர்களுக்கு மார்க்ஸ் மீது நிறைய கோபம் வந்தது. அந்தக் காலத்தில். ஆனால் மார்க்ஸ் என்ன சொன்னார் என்று அர்த்தத்தைப் பார்த்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர் என்ன அர்த்தத்தில் சொன்னார் என்றால், ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு வரை தன்னிறைவான, கிராமிய, சாதிய கட்டமைப்பிலே இயங்குகின்ற ஒரு சமூகப் பொருளாதார அமைப்பே ஆட்டம் காணாமல் அப்படியே இருந்தது. நாம் அதற்கு அடிமையானவர்களாக இருந்தோம் என்று சொல்வதற்காகத்தான் இந்தியர்களுக்கு அதுவரை சரித்திரம் இல்லை என்று சொன்னாரே தவிர, இந்தியர்களுக்கு சரித்திரத்தை உருவாக்குகின்ற ஆற்றலை அவர் குறைத்து மதித்து சொல்லவில்லை. தந்தை பெரியாரும் இதுபோலத்தான், தமிழனக்கென்று ஏதாவது சரித்திரம் உண்டா என்று கேட்டார். பன்னெடுங்காலமாக தமிழர்களாகிய நாம், பஞ்சமர்களாகிய, சூத்திரர்களாகிய நாம் எப்படி ஆரியர்களுக்கு அடிமையாக இருந்தோம் என்பதை சுட்டிக் காட்டுவதற்காக. ஒருமுறை தந்தை பெரியாரிடம் சென்ற பழந்தமிழருடைய பெருமையைப் பற்றிப் பேசம்போது அவர் சொன்னார், யார் அந்தத் தமிழன்? அந்தத் தமிழனுக்கு வருஷம் உண்டா என்று கேட்டார். தமிழனுடைய அந்த வரலாற்று உணர்வை 60 வருடங்களுக்குள் முடங்கிப்போட்ட, அவனுடைய வரலாற்று உணர்வை முற்றிலுமாக மழுங்கடிக்கப்பட்ட அந்த நிலையைச் சொன்னார். இன்றைக்கு தமிழனுக்கு வருஷம் இருக்கிறது என்று உணர்த்தியிருக்கின்ற தை முதல் நாளை, தமிழப் புத்தாண்டின் தொடக்கமாக அறிவித்திருக்கின்ற ஒரு மாபெரும் தலைவர் நமக்குக் கிடைத்திருக்கின்றார். இப்படி மீட்டெடுத்த அந்த வரலாற்றின் தொடக்கமாக அவர், தான் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு சமயத்திலும் நிதி நிலை அறிக்கையை மிகுந்த கவனத்தோடும், எத்தகைய குறிக்கோளின் படி நிதி நிலை அறிக்கையை தயாரிக்கப்படுகிறது தெரியுமா? தாய்மார்களே, நீங்கள் கவனமாகக் கேட்க வேண்டும். நீங்கள் இந்த அறிக்கையை கவனமாகக் கேட்க வேண்டும் என்று நான் ஏன் சொல்கிறேன் என்றால், வீட்டிலே பட்ஜெட் போடுகின்ற ஒரு மிகப்பெரிய பொறுப்பை வகிப்பவர்கள் நீங்கள் தான். உங்களுக்கு போட முடியுமா பட்ஜெட்டை துண்டாகவோ, அல்லது வரி கொடுக்காத பட்ஜெட்டைப் போடுவது என்பது எளிதான காரியமா? இல்லை என்பதால் தான், இதிலே இருக்கின்ற அந்த நல்ல அம்சங்களை, பொய்யான குற்றச் சாட்டுகளை நீங்கள் உணர்ந்து கொண்டால் தான் உங்களுடைய சக தோழிகளிடம் அல்லது உங்களுடைய குழந்தைகளிடம் அதை நீங்கள் எடுத்துச் சொல்ல முடியும். இந்த நிதி நிலை அறிக்கையை தயார் செய்வதற்கு முன் பாகன்றுவிஷயங்களைஅவர்சொல்லுகின்றார்.  சமுகநீதி, தழிகமக்களின் மேம்பாடு, தமிழ்நாட்டின் வளர்ச்சி, ஆகிய மூன்று முக்கியமான அம்சங்களை முன்வைத்துத் தான் இந்த நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கின்றது. அம்மையார் என்ன குற்றச்சாட்டை முதலில் சொல்கின்றார்? வேளாண் மற்றும் தொழில் உற்பத்தியில் பின்னடைவு என்று சொல்லுகின்றார். வேளாண் தொழிலாளர்களுடைய வாழ்க்கையிலே விளக்கேற்றுவதற்காக, 2006லே நம்முடைய அரசு பொறுப்பேற்றவுடன் எடுத்த முதல் நடவடிக்கை என்ன தெரியுமா? நம்முடைய மாவட்டச் செயலாளர்கள் சுட்டிக் காட்டியதைப் போல விவசாயிகள் கட்ட வேண்டிய ரூபாய் 7000 கோடி பயிர்க் கடனை, கூட்டுறவுக் கடனை அடியோடு முற்றிலுமாக ரத்து செய்தது. அது மட்டுமல்ல, பயிர்க்கடன்களை வழங்குகின்ற அந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு உதவி செய்வதற்கு முதல் ஆண்டிலே 2000 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. அடுத்த ஆண்டிலே அது 2013 கோடியாக உயர்ந்து, இந்த நிதியாண்டிலே 2015 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.  நாம் அனைவரும் கடன் வாங்குகின்றோம். யார் இதுவரை வாங்கிய கடனுக்கு வட்டியை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தியிருக்கிறோம்? இன்றைக்கு இந்தியாவிலே இருக்கிற மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில் இருக்கின்ற மகளிர் சுய உதவிக் குழுக்கள் தான் வங்கியிலே வாங்கிய கடனை முறையாக திருப்பிச் செலுத்தியிருக்கின்ற பெருமைக்கு சொந்தக் காரர்களாக இருக்கின்றோம். பயிர்க் கடன்களை திருப்பிச் செலுத்துகின்ற விவசாயிகளுக்கு தலைவர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா? அந்த வட்டிக்கடனை முழுமையாக அடுத்த தவணையில் ரத்து செய்திருக்கின்றார். அது மட்டுமல்ல, இன்னொன்றையும் நீங்கள் கேட்க வேண்டும். திடீரென்று வெள்ளம் வருகின்றது. பயிர்கள் சீர்குலைந்து விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக வழங்குவதற்கு மானியத் தொகையிலே 50 சதவிகிதம் நானே தருகின்றேன் என்று தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்திருக்கின்றார். அம்மையார் அவர்கள் விழுப்புரத்திலே போய் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தினார். அவருடைய ஆட்சியிலே கரும்புக்கடன் ஒன்றுக்கு கொள்முதல் விலை ரூபாய் 1,104 தான். நம்முடைய தலைவர் ஆட்சிக்கு வந்த பிறகு, 2006-07ல் அது 1,025 ரூபாய், 2007-08ல் 1,034 ரூபாய், 2008-09ல் 1,100 ரூபாய் என படிப்படியாக உயர்த்தி, வரும் அரவை ஆண்டிலே ஊக்கத் தொகை, போக்குவரத்துக் கட்டணம் உட்பட, கொள்முதல் விலை எவ்வளவு தெரியுமா? ரூபாய் 2000மாக உயர்த்திக் கொடுக்கின்றார். இப்பொழுது சொல்லுங்கள், விவசாயிகளுக்காக திட்டங்களைத் தீட்டியிருக்கின்ற அரசு எது என்று? ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூபாய் 1000 கொடுக்கவேண்டும் என்பது விவசாயிகளுடைய நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. அந்த கோரிக்கையை ஒரு தாய் உள்ளத்தோடு கவனமெடுத்து, இந்த பட்ஜெட்டிலே சாதாரண ரக நெல்லுக்கு, குவிண்டாலுக்கு ரூபாய் 1,050 என்றும், சன்ன ரகத்திற்கு ரூபாய் 1,100 என்றும் நிர்ணயித்து அவர்களுடைய வாழ்க்கையிலும் ஒலியேற்றி இருக்கின்றார். செம்மை நெல் சாகுபடித் திட்டத்தை மிகச் சிறப்பாக, இன்றைக்கு செயல்படுத்திக் கொண்டிருக்கிற ஒரே மாநிலம் நம்முடைய மாநிலம் தான். உங்களுடைய சுழல் நிதி கொடுக்கின்ற அந்த குழுக்களைப் போல விவசாயிகளுக்கும் ஒரு சுய உதவிக் குழுக்களை ஒருங்கிணைத்திருக்கின்றார். இத்தனை திறம்பட செயலாற்றுகின்ற நம்முடைய தலைவர் அவர்களுடைய அந்த பட்ஜெட்டை இவர் குறைசொல்லும் போது எனக்கு இன்னும் ஒரு சம்பவம் நினைவிற்கு வருகின்றது. ஒரு குழந்தை வீரிட்டு அழுது கொண்டிருக்கிறது. அந்த அழுகையைக் கேட்ட, பிறவியிலேயே பார்வையை இழந்த, தன்னுடைய பக்கத்திலே இருப்பவரிடம் கேட்கின்றார், குழந்தை ஏன் வீரிட்டு அழுகின்றது என்று? பக்கத்திலே இருப்பவர் சொல்லுகின்றார், குழந்தை பாலுக்கு அழுகின்றது என்று. பார்வையற்றவருக்கு பால் எப்படி இருக்கும் என்று தெரியாது. ஆகவே, பக்கத்தில் இருப்பவரைப் பார்த்து கேட்கின்றார், பால் எப்படி இருக்கும் என்று. பால் கொக்கைப் போல வெண்மையாக இருக்கும் என்று பக்கத்தில் இருப்பவர் சொல்லுகின்றார். அப்படியென்றால் கொக்கு எப்படியிருக்கும் என்று பார்வையற்றவர் கேட்கின்றார். என் கையைப் போல இப்படி இருக்கும் என்று காட்டுகின்றார். அதனை தொட்டு, தடவிப்பார்த்த பார்வையிழந்தவர் அம்மாடி, இத்தனை பெரிய உருவம் அந்த குழந்தையினுடைய வயிற்றுக்குள் இருந்தால் அந்தக் குழந்தை ஏன் வீரிட்டு அழுகாது என்று சொல்லுகின்றார். அப்படித் தான், அம்மையாருடைய இந்த அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்கள் எல்லாம். மின்வெட்டு குறித்து புலம்பித் தீர்த்திருக்கிறார். மின்வெட்டை சமாளிப்பதற்காக இந்த நிதியாண்டிலே மின்சார வாரியத்திற்கு மானியமாக ரூபாய் 295 கோடியை ஒதுக்கியிருக்கின்றது. எதற்காகத் தெரியுமா? விவசாயிகளுக்காக இதுவரை நாம் இலவசமாக மின்சாரம் வழங்கிவருகின்றோமே, அந்தத் திட்டம் ரத்து செய்யப்படக் கூடாது என்பதற்காகத்தான் 295 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. குடிநீர் பற்றாக்குறையைப் பற்றி அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார் அம்மையார் அவர்கள். குடிநீர் திட்டத்திற்குப் போவதற்கு முன்னால், கழக அரசினுடைய சாதனைகளிலே மணிமகுடமாக திகழ்கின்ற நம்முடைய கலைஞர் அரசின் காப்பீட்டுத் திட்டத்தைப் பற்றி சொல்லலாம் என்று நான் நினைக்கின்றேன். உங்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியாது. கியூபா என்றொரு நாடு இருக்கின்றது. அந்த கியூபா நாட்டினுடைய விடுதலைக்காகப் போரிட்டு தன்னுடைய உயிரை வீர மரணமாகத் தந்த ஒரு புரட்சிவாதி சேகுவாரா என்று சொல்லப்படுவார். அந்த சேகுவாராவுடைய கனவு என்ன தெரியுமா? கியூபா நாட்டு மருத்துவர்கள் உலகின் அனைத்து பகுதிக்கும் சென்று இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய கனவு. சேகுவாரா, கியூபா நாட்டைச் சுற்றியிருக்கின்ற நாடுகளுக்குச் சென்று மருத்துவ உதவிகளை செய்து வந்தார். போன வருடம், கியூபாவிற்கு அருகில் இருக்கின்ற பொலிவியா நாட்டிற்குச் சென்று மருத்துவர்கள் இலவசமாக கண் அறுவை சிகிச்சை முகாமை நடத்துகின்றார்கள். அந்த முகாமிற்கு வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் வருகின்றார். இரண்டு கண்களிலும் கண்புறை வளர்ந்திருக்கிறது. அவருக்கு கியூபா நாட்டு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து கண்புறையை அகற்றி பார்வையை மீட்டுக் கொடுக்கிறார்கள். அதைத்தவிர, அவருக்கு வேறு எந்த முக்கியத்துவமும் அவர்கள் தரவில்லை. அவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பிய பிறகு, மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து, வயதான பெரியவருடைய மகன் பொலிவியா நாட்டு பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதுகின்றான். அப்பொழுது தான் உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது. இவர்கள் கண்பார்வை கொடுத்த அந்த வயதான மனிதர் யார் தெரியுமா? சேகுவாராவை சுட்டுக் கொன்ற மரியோடரான் என்கின்ற ராணுவ சிப்பாய்க்குத் தான் கியூபா நாட்டு மருத்துவர்கள் கண்பார்வையை கொடுத்திருக்கிறார்கள். இந்தச் செய்தியை குறிப்பிட்டு, கியூபா நாட்டு பொதுவுடைமை கட்சியைச் சேர்ந்த கிரான்மா என்கின்ற பத்திரிகை எழுதுகின்றது. ஒரு கனவை, ஒரு முயற்சியை அளிப்பதற்கு மரியோடரான் முயற்சி செய்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு வேறொரு சண்டையிலே வெற்றி பெறுவதற்காக சேகுவாரா மீட்டும் திரும்பி வந்தார் என்று. இப்பொழுது மூப்படைந்த அந்த வயோதிகளுடைய கண்களிலே வானத்தினுடைய வண்ணத்தையும், வனங்களின் அழகையும் கண்டு ரசிக்க முடிகிறது. சேகுவாரா, கியூபா நாட்டு மக்கள் மனதிலும், லத்தீன் நாட்டு மக்கள் மனதிலும் ஏன் உலக மக்கள் மனதிலும் இன்றுவரை உயிரோடிருக்கிறார் என்பதற்கு இதை விட என்ன சாட்சி என்று கேட்டு, அந்தப் பத்திரிகை எழுதியிருக்கின்றது. நம்முடைய கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திலும், இப்படி பயன்பெறப்போகிறவர்களும், இன்றைக்கு அட்ரஸ் இல்லாத கட்சிகளின் பெயர்களை வைத்துதக் கொள்ளக்கூடிய அந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தான் பயன்பெறப்போகிறார்கள். அந்தத் திட்டத்தில் எத்தனை குடும்பங்கள் பயன்பெறப் போகிறது தெரியுமா? 1 கோடியே 44 லட்சம் ஏழைக் குடும்பங்கள் இன்று வரை பயன்பெற்றிருக்கின்றன. இந்த நிதி நிலை அறிக்கையிலே 750 கோடி ரூபாய் அதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. பெரியோர்களே, நீங்கள் நன்றாக நினைத்துப் பாருங்கள். குடிநீர்ப் பிரச்சினை என்பது இன்றைக்கு எந்த இடத்திலும் இல்லாத அளவிற்கு எப்படி தட்டுப்பாடு இல்லாத அளவிற்கு தண்ணீர் உங்கள் இல்லங்களை நோக்கி ஓடி வருகின்றது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், எதிர்காலத்திலும் தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்கின்ற நீண்டகாலத் திட்டத்தின்படி தலைவர் கலைஞர் மூன்று விஷயங்களை உங்களுக்கு வைத்திருக்கின்றார். என்ன தெரியுமா? வெள்ளத்தில் வருகின்ற உபரி நீரை வீணாக்காமல் தடுப்பது, அப்படி தடுத்த நீரை வறண்ட பிரதேசங்களுக்குத் திருப்பி விடுவது. வறண்ட மாவட்டங்களில் முடிந்த அளவு அணைக்கட்டுகள் கட்டி மக்களுடைய குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பது. இந்த மூன்று விஷயங்களினால் அவர் எடுத்திருக்கின்ற திட்டங்கள் கொள்ளிடம் வெள்ளத்தடுப்புத் திட்டம், வெள்ளாறு வெள்ளத் தடுப்புத் திட்டம், பெண்ணையாறு வெள்ளத் தடுப்புத் திட்டம், இப்படி நான் சொல்லிக் கொண்டே போகலாம். இராமநாதபுரம் மாவட்டம் மிக வறட்சியான மாவட்டம். அந்த மாவட்டத்திலிருந்து வருகின்ற பெண் என்பதால், எனக்கு மிக நன்றாகத் தெரியும். அந்த மாவட்டத்தில், கடலாடி வட்டத்திலே இருக்கின்ற கஞ்சம்பட்டி என்ற ஒரு சிற்றூரிலே இருக்கின்ற ஓடையிலே ஒரு அணையைக் கட்டி 20 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு வாய்க் காலைக் கட்டி என்னுடைய தந்தையினுடைய சொந்த ஊரான சாயல்குடி முதலான 43 குளங்களுக்கு குடிநீர் போக்குவரத்து வசதியை உருவாக்குவதற்கு நிதி ஒதுக்கி இருக்கின்றார் தலைவர் கலைஞர் அவர்கள். கிட்டத்தட்ட 4200 ஏக்கர் நிலங்கள் இதன் மூலம் பயனடையும். இப்பொழுது சொல்லுங்கள், குடிநீர் தட்டுப்பாட்டிற்காக, நீண்ட நெடிய தொலைநோக்கோடு செயல்படுபவர் நம்முடைய தலைவரா அல்லது இந்த மாதிரியான பொய், புரட்டுப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வைக்கின்ற இந்த அம்மையாரா என்று. மாற்றுத் திறனாளிகளை எடுத்துக் கொள்ளுங்கள். மாற்றுத் திறனாளிகள் என்றால் உடல் ஊனமுற்றோர் என்ற சொற்றோடரை விடுத்து ஐக்கிய நாடுகள் சபை இந்த சொற்றொடரை தன்னுடைய கெஜட்டிலே ஏற்றியிருக்கின்றது. இந்தியாவும் அதிலே கையெழுத்திட்டு இருக்கின்றது. அந்த மாற்றுத் திறனாளிகளுக்காக, இந்தியாவிலேயே இதுவரை நம்முடைய தமிழ்நாட்டிலே தான் ஒரு தனி வாரியம் அமைக்கப்பட்டிருக்கின்றது. அவர்களைப் பற்றி ஒரு சிறு சம்பவம் ஒன்றை சொல்லுகின்றேன். ஒலிம்பிக்ஸ் போட்டியை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அது நம்மைப் போன்ற அனைத்து உடல் தகுதியினையும் பெற்றவர்களுக்காக நடத்தப்படுவது. Para Olympics என்பது உடல் ஊனமுற்றவர்களுக்காக நடத்தப்படுகின்ற ஒரு ஒலிம்பிக்ஸ் போட்டி. அப்படிப்பட்ட ஒலிம்பிக்ஸ் போட்டியிலே ஒருமுறை இந்த மாற்றுத் திறனாளிகள் அனைவரும் ஓட்டப்பந்தயத்திலே கலந்து கொண்டு ஓடி வருகிறார்கள். ஒரு பங்கேற்பாளர் திடீரென்று தவறி விழுந்து விடுகின்றார். நாமாக இருந்தால், அதிவேகமாக நம்மோடு ஓடிவருபவர் கீழே விழுந்தால் என்ன என்று விட்டு விட்டு எல்லைக் கோட்டை நோக்கி ஓடிக் கொண்டிருப்போம். ஆனால், அவரோடு ஓடிய உடல் ஊனமுற்ற அத்தனை பேரும் அந்தக் கனம் அப்படியே, அங்கேயே நின்று கீழே விழுந்தவரை தூக்கி நிறுத்துகிறார்கள். போட்டியை பார்த்துக் கொண்டிருந்த அத்தனை பேருடைய கர ஒலியும் விண் அதிர அப்படியே பிளக்கின்றது. 4 வருடங்களுக்கு முன்பு, Para Olympics என்று சொல்லப்படுகின்ற அந்த உலக அரங்கத்திலே நடைபெற்ற நிகழ்ச்சி இது. மனிதநேயத்தோடு மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு தனி அமைச்சகம் அமைத்து, அதனையும் தன்னுடைய நேரடிக் கண்காணிப்பிலே கொண்டு வந்திருக்கின்றார், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். பெண்களுக்கென்று அவர் எடுத்து வைத்திருக்கின்ற திட்டங்களை சொல்ல ஆரம்பித்தால் அதிகாலை கோழி கூவிவிடும். அந்த அளவிற்கு, இதுவரை பெண்களுக்கான இலவச பட்டப்படிப்பு என்கின்ற கல்விக் கட்டணத்தை ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல், முதுநிலை பட்டப்படிப்பிற்கும் கல்விக் கட்டணத்தை ரத்து செய்திருக்கின்றார். கான்ச்சனா என்ற ஒரு பெண் பேட்டி எடுத்திருக்கின்றார் தினத்தந்தியிலே இரண்டு நாட்களுக்கு முன்பாக. நான் அந்த இலவச பட்டப்படிப்பைப் பெற்றதனால் இன்றைக்கு தங்கப்பதக்கம் பெற்று உயர்ந்திருக்கின்ற நிலைக்கு உயர்ந்திருக்கின்றேன். இதற்குக் காரணம் தலைவர் கலைஞருடைய ஆட்சி என்பதை எழுத்துபூர்வமாக அவர் பதிவு செய்திருக்கின்றார். அந்தத் திட்டமாகட்டும், இல்லையென்றால் திருமண உதவித் திட்டம் ரூபாய் 25000மாக கூட்டிக் கொடுக்கப்பட்டிருக்கின்ற அந்தத் திட்டமாக இருக்கட்டும், படிக்கும் பாரதம் என்று மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்ற, ஒரு மாவட்டத்திலே படிக்கும் பெண்கள் 50 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தால் அந்த மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்து, பெண்களை படிக்கவைப்பதற்காக மத்திய அரசு நிதியுதவி தருகின்றது. அந்தத் திட்டத்திற்குப் பெயர் படிக்கும் பாரதம். அந்தத் திட்டத்திற்கு தன்னுடைய அரசிலிருந்து நிதியுதவி அளித்து ஈரோடு, விழுப்புரம், பெரம்பலூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களை படிக்கும் பாரதம் திட்டத்தின் கீழ் இன்றைக்கு இணைத்திருக்கின்றார். இதுமட்டுமல்ல, பெண்கள், ஆண்கள், மனிதர்கள், மாற்றுத் திறனாளிகள், மீனவர்கள், பனைமரத் தொழிலாளர்கள், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
தமிழ் அறிஞர்களை அவர் சிறப்பித்திருக்கின்ற விதத்தை நான் எப்படிச் சொல்வது? தமிழ் அறிஞர்களுக்கு சிலை வைப்பது, தமிழ் அறிஞர்களுடைய தலையாய திருமகனான திருவள்ளுவருக்கு சிலை வைத்து போற்றுவது, நம்முடைய திராவிட கட்டிடக் கலையின் சான்றாக மிகப் பெரிய அரசு தலைமைச் செயலகக் கட்டிடத்தை உருவாக்குவது. இப்படி எத்தனை சாதனைகள் இருந்தாலும், மணி மகுடமென செம்மொழி மாநாட்டை நடத்த இருக்கின்றார். ஊரெங்கும் வாஞ்சி நாதனுக்கு ஒரு மணி மண்டபம், விருப்பாச்சி கோபால நாயக்கருக்கு ஒரு நினைவுத்தூண், ஓமந்தூராருக்கு ஒரு நினைவு மண்டபம், அருந்ததியர் சமுதாயத்தைச் சார்ந்த ஒன்டிவீரன் சகடைக்கு ஒரு நினைவு மண்டபம், இப்படி ஏகப்பட்ட நினைவுச் சின்னங்களை எழுப்புவதற்கு இந்த நிதியாண்டிலே நிதி ஒதுக்கி உத்தரவு போட்டிருக்கின்றார். இதே தியாகராய நகரிலே தந்தை பெரியார் தன்னுடைய கடைசி கூட்டத்திலே ஒரு கருத்தைச் சொன்னார். உள்ளம் வருந்திச் சொன்ன கருத்து என்ன தெரியுமா? என்னுடைய இதயத்திலே உருத்துகின்ற ஒரு முள்ளாக இன்றும் இருந்து கொண்டு இருப்பது அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியவில்லையே என்கின்ற அந்த வருத்தம்தான். அந்தப் போராட்டத்தைத் தான் நான் மேலும் தீவிரமாக முன்னெடுக்க இருக்கின்றேன் என்று தந்தை பெரியார் இதே தியாகராய நகரிலே தன்னுடைய கடைசி கூட்டத்தின் போது சொன்னார்.  அந்தக் கனவை நனவாக்கி, அருந்ததியர்களை அர்ச்சகராக்கலாம் என்ற அந்த சட்டத்தை இயற்றியதோடு மட்டுமல்ல, அவர்களுக்கு மேலும் உள் ஒதுக்கீடு என்கின்ற சிறப்புச் சலுகையை செய்து, அவருடைய நெஞ்சத்திலே இருந்த அந்த முல்லை எடுத்தவர் நம்முடைய தலைவர் என்றால், அருந்ததிய இனத்தைச் சார்ந்த் ஒரு பெண், நான் பேராசிரியர் ஆவதற்குத் தகுதி பெற்றிருக்கின்றேன். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தளபதிக்கு ஒரு கடிதம் எழுதுகின்றார். எத்தனையோ கடிதங்கள் எழுதப்படுகின்றன. எல்லா கடிதங்களுமா அரசு ஆட்சியாளர்களைச் சென்று சேர்கின்றன? சேர்கின்ற எல்லா கடிதங்களுக்குமா அவர்கள் நடவடிக்கை எடுக்கின்றார்கள்? ஆனால் தளபதி, இந்தப் பெண்ணுடைய கோரிக்கையை கனவுக் கண் கொண்டு பரிசீலித்து அருந்ததிய இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் கண்டிப்பாக பேராசிரியர் என்ற அந்தப் பணியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவருக்கு அந்த வேலையையும் வாங்கிக் கொடுக்கின்றார். சமூகநீதி என்கின்ற ஒன்றை, தன்னுடைய சொல், செயல், பேச்சு, வாக்கு அனைத்திலும் உயிர் மூச்சாகக் கொண்டு இயங்குகின்ற தலைவர் கலைஞர் அவர்களுடைய இந்த சாதனை விளக்க பட்ஜெட் என்பது இந்த ஒரு வருடத்திற்குமான ஒரு பட்ஜெட் மட்டுமல்ல. மாவட்டச் செயலாளர்கள் சொன்னது போல, வீட்டு வசதித் திட்டத்திற்கு 6 ஆண்டுகளுக்குள் 24 லட்சம் வீடுகளை நாங்கள் கட்டித் தருவோம் என்ற தன்னம்பிக்கையோடு, வருகின்ற அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றிபெறுவது நாங்களே என்பதை உறுதிபட தெரிவிப்பதாக இந்த பட்ஜெட் எனக்கு படுகின்றது. ஒடுக்கப்படுகின்ற பாமர மக்கள் மீது அன்பு கொண்டு, கருணை உள்ளம் கொண்டு, முற்றிலும் வரிவிலக்கு செய்து தரப்பட்டிருக்கின்ற இந்த பட்ஜெட்டை, இன்னும் ஒரு விஷயத்திற்காக நீங்கள் கரவொலி எழுப்பப் பாராட்ட வேண்டும். துவரம் பருப்பு, பாமாயில் இவற்றினுடைய விலை கூடிக் கொண்டிருப்பதாக அம்மையார் புலம்புகிறார். அந்த விலையை கருத்தில் கொண்டு இவை அனைத்தும், நியாய விலைக் கடையிலே மக்களுக்குக் கிடைப்பதற்கு தலைவர் கலைஞர் அவர்கள் 2007 மே மாதம் முதல் உங்களுக்கு வழங்கும் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த பட்ஜெட்டிலே செய்திருக்கின்ற மிக முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? உளுத்தம் பருப்பு, பாமாயில், துவரம் பருப்பு இவற்றிற்கான மதிப்புக் கூட்டு வரியை முற்றிலுமாக ரத்து செய்திருக்கின்றார். மற்ற மாநிலங்களிலிருந்து துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு இவற்றை இறக்குமதி செய்வதன் மூலம் அதனோடு கூடவே சேர்த்து, மதிப்புக் கூட்டு வரியை ரத்து செய்வதன் மூலம் இல்லத் தரசிளகுக்கு மிக இலகுவான, எளிமையான முறையிலே, மானிய விலையிலே கிடைக்கும் என்கின்ற உத்தரவாதத்தையும் அவர் தந்திருக்கின்றார். சகோதரிகளே, நீங்கள் இந்த பட்ஜெட்டிலே இருக்கின்ற அனைத்து சிறப்பம்சங்களையும், உங்களுடன் உங்களுடைய இல்லத்திலே வசிக்கின்ற பெரியவர்களாகட்டும், குழந்தைகளாகட்டும், இவர்களுக்குப் புரிகின்ற மொழியிலே எடுத்துச் சொல்லுங்கள். சொல்கின்ற பொழுதே இன்னொன்றையும் சேர்த்துச் சொல்லுங்கள், எப்படி தமிழர்களுடைய வரலாற்றை மீட்டுத் தந்த ஒரு தலைவராக நம்முடைய தலைவர் கலைஞர் திகழ்கின்றார் என்பதையும் அந்த ஆலமரம் போன்ற தலைவர் கலைஞருக்கு பக்கபலமாக இன்றைக்கு தமிழகத்தையே தொழிற் புரட்சிப் பூங்காவாக வடிவமைத்துக் கொண்டிருக்கிற, அதாவது, ஒரு கிரேக்க வாசகம் உண்டு, "இந்த வழியாகப் போகின்ற மக்களே கொஞ்சம் நில்லுங்கள், நாங்கள் ஸ்பாடகஸ் என்கின்ற அந்தப் பகுதியைச் சேர்ந்த வீரர்கள், எங்களுடைய பணியை முடித்து இந்த இடத்திலே நிற்கிறோம்" என்று ஒரு வாசகம் உண்டு. எப்படி வந்தது தெரியுமா அது? கிரேக்கம் என்ற நாட்டின் மீது பாரசீக நாட்டினர் படையெடுத்து வந்தபோது, மிகச் சின்னஞ்சிறிய படை கொண்டு தம்மாந்தே என்கின்ற கிரேக்க நாட்டுத் தளபதி, மிகப் பெரிய பாரசீகப் படையை எதிர்கொண்டானாம். அவன் அந்த பாரசீகப்படையை எதிர்கொண்டு மிகப் பெரிய இழப்பை சந்தித்த பின்பும், வீர உணர்ச்சியோடு இந்த வாசகத்தைச் சொன்னானாம். அதுபோல, ஸ்பாடகஸ் வீரர்களுக்கு நிகராக இளைஞரணி என்கின்ற அமைப்பினை பலமுடனும், வலுவுடனும் நடத்திக் கொண்டிருக்கின்ற நம்முடைய தளபதியை சுட்டிக் காட்டி, இந்தியாவிலேயே இவரைப் போன்ற இளம் தளபதியார் இருக்கின்றார்? என்கின்ற அதி முக்கியமான புரிந்துணர்வையும் உங்களுடைய சந்ததியினருக்கு நீங்கள் ஏற்படுத்துங்கள். கடைசியாக, பட்ஜெட் குறித்து சொல்ல விரும்புவது ஒன்றுதான், உலர்ந்திருக்கின்ற நாவிற்கும், பஞ்சடைந்து போன கண்களுக்கும், நடக்க சக்தியில்லாத கால்களுக்கும், அனைத்து சக்தியையும், வீரத்தையும், உணவையும் தருகின்ற அருமருந்தாக இந்த பட்ஜெட் இருக்கின்றது. நான் முன்பே சுட்டிக்காட்டிய மாவீரன் சேகுவாரா, தான் இறப்பதற்கு முன்பாக தன்னுடைய பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதுகின்றார். அந்தக் கடிதத்திலே அவர் சொல்கின்றார், ஒரு கலைஞன் எப்படி பாசத்தோடும், அக்கறையோடும் தன்னுடைய கலைப்படைப்பை மெருகூட்டுவானோ, அதுபோல மெருகூட்டப்பட்ட என்னுடைய மனோ உறுதி, அந்த மனோ உறுதியின் பலத்தினால் நான் பலவீனமான என்னுடைய கால்களையும், களைப்புற்ற என்னுடைய கைகளையும் தாங்கிக் கொண்டு என்னுடைய பயணத்தை தொடர்வேன் என்று சொன்னாராம். ஒரு கலைஞனுக்கு உரிய பாசத்தோடும், அக்கறையோடும், தமிழக மக்கள் மீது இருக்கின்ற நேசத்தோடும் இந்த பட்ஜெட்டை தலைவர் கலைஞர் அவர்கள் தயாரித்திருக்கின்றார். இந்த பட்ஜெட்டிலே இருக்கின்ற அனைத்துத் திட்டங்களும் முறையாக மக்களுக்குப் போய் சேருகின்றதா என்பதை கண்காணிக்கும் பொருட்டு, பெரிய முள்ளை தன்னுடைய கடமைக்கும், சின்ன முள்ளை தன்னுடைய பணிக்கும் கொடுத்துவிட்டு, நிமிட முள்ளை மட்டும் தன்னுடைய ஓய்விற்காக எடுத்துக்கொண்டிருக்கின்ற தளபதி இன்றைக்கு கண்காணித்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். அவர் ஓய்வெடுக்கின்ற இடம் எது தெரியுமா? மேம்பாலங்களுக்கு அடியிலும், சாலையோர பூங்காக்களிலும் மட்டும் தான் மேற்பார்வையிடச் செல்லும் போது ஓய்வெடுக்கின்றார். நமக்குக் கிடைத்தற்குரிய இந்த அரும்பெரும் இருதலைவர்கள் கிடைத்திருக்கின்றார்கள். அவர்களுடைய அறியதொரு முயற்சியால் தமிழகம் பொற்காலமாகத் திகழ்கின்றது. இத்தனை விஷயங்களையும் உங்களுடைய அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் விதமாக இந்த சாதனை பட்ஜெட் போடப்பட்டிருக்கின்றது என்பதை உங்கள் முன்னால் பகிர்ந்து கொள்கின்ற இந்த அருமையான வாய்ப்பிற்கு நன்றி கூறி, தியாகராயர் பகுதியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணியைச் சார்ந்த அத்தனை பேருக்கும் குறிப்பாக, மிகச் சிறப்பாக இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த 127வது வட்டத்தைச் சேர்ந்த அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றியையும், மதிப்பிற்குரிய மாவட்டச் செயலாளர் அவர்களுக்கு என்னுடைய நன்றியையும் தெரிவித்து விடைபெறுகின்றேன்.

* * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *