24.07.2026 அன்று, தமிழ்நாட்டில் ஆயுஷ் கட்டமைப்பு மேம்பாடு குறித்து மக்களவையில், நான் எழுப்பிய கேள்வியும், அதற்கு மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அளித்த பதிலும்:-
அதன் விபரம்-
தமிழ்நாட்டில் ஆயுஷ் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியுள்ளதா? அப்படியானால், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுவாரியாகவும், மருத்துவமனை மற்றும் நிறுவன வாரியாகவும் ஒதுக்கப்பட்ட நிதியின் விவரங்கள் என்ன?
மேலும், ஆயுஷ் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளை ஊக்குவிக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? அதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? என்று கேள்வி எழுப்பினேன்.
இதற்கு ஒன்றிய ஆயுஷ் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) பிரதாப்ராவ் ஜாதவ் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
தேசிய ஆயுஷ் இயக்கத்தின் (National Ayush Mission – NAM) கீழ், தமிழ்நாடு அரசின் மாநில ஆண்டு செயல் திட்டங்களின் (SAAP) அடிப்படையில் ஆயுஷ் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2021-22ஆம் ஆண்டில் ரூ.5.97 கோடி, 2022-23ஆம் ஆண்டில் ரூ.17.94 கோடி, 2023-24ஆம் ஆண்டில் ரூ.40.87 கோடி, 2024-25ஆம் ஆண்டில் ரூ.100.21 கோடி மற்றும் 2025-26ஆம் ஆண்டில் ரூ.54.42 கோடி என மொத்தம் ரூ.219.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஆயுஷ் சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள், ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளில் ஆயுஷ் பிரிவுகள், அரசு சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளின் மேம்பாடு, புதிய மருந்தகங்கள் உள்ளிட்ட திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னையில் செயல்படும் யுனானி மருத்துவ மண்டல ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (RRIUM) கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ரூ.54.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (CCRS) சென்னை தலைமையகம், சென்னை சித்த மத்திய ஆராய்ச்சி நிறுவனம், பாளையங்கோட்டை சித்த மத்திய ஆராய்ச்சி அலகு மற்றும் மேட்டூர் சித்த மருத்துவ மூலிகைத் தோட்டம் ஆகியவற்றிற்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் தகவலின்படி, சென்னை இந்திய மருத்துவ முறைகள் இயக்ககத்தில் (Indian Systems of Medicine) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு இதுவரை 132 ஆராய்ச்சி ஆய்வுகளை நிறைவு செய்து, 5 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் தரநிலைப்படுத்தல், மதிப்பீடு உள்ளிட்ட ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் சித்த மருத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின் ஆராய்ச்சி அமைப்புகள் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஆரோக்கியக் கண்காட்சிகள், சுகாதார முகாம்கள், அறிவியல் வெளியீடுகள், சர்வதேச ஒத்துழைப்புகள், மருத்துவ ஆராய்ச்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
சித்த மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்த மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (CCRS), 115 உள்துறை ஆராய்ச்சி திட்டங்கள், சித்த மருத்துவ மருந்துகளுக்கான தரநிலைகள் உருவாக்கம், 975 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் வெளியீடு, பனை ஓலைச் சுவடிகள் டிஜிட்டல் பாதுகாப்பு, பல்வேறு தேசிய நிறுவனங்களுடன் 24 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், காசநோய் மற்றும் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகள், வர்ம சிகிச்சை ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஆயுஷ் இயக்கத்தின் கீழ் ஆயுஷ் மருத்துவ ஆராய்ச்சிக்காக தனியாக நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், யுனானி மற்றும் சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்கள் மூலம் தேவையான நிதி வழங்கப்பட்டு வருவதாகவும் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக மத்திய ஆயுஷ் அமைச்சகத்திடமிருந்து ரூ.299.43 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதுடன், ரூ.274.59 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *