23.07.2026 அன்று, தமிழ்நாட்டில் புதிய நகரங்களை ஸ்மார்ட் சிட்டிஸ் திட்டத்தில் இனைப்பது குறித்து மக்களவையில் நான் எழுப்பிய கேள்வியும், அதற்கு மாண்பிமிகு ஒன்றிய அமைச்சர் அளித்த பதிலும்:-
அதன் விபரம்-
தமிழ்நாட்டில் புதிய நகரங்களை ஸ்மார்ட் சிட்டிஸ் திட்டத்தில் (Smart Cities Mission) சேர்ப்பது, திட்டத்தின் செயல்திறன், பயன்படுத்தப்படாத நிதி மற்றும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களின் (ICCC) எதிர்கால செயல்பாடு குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பினேன்.
அதாவது, தமிழ்நாட்டில் புதிய நகரங்களை ஸ்மார்ட் சிட்டிஸ் திட்டத்தில் சேர்க்க மத்திய அரசுக்கு ஏதேனும் திட்டம் உள்ளதா? இல்லையெனில் அதற்கான காரணம் என்ன?
ஸ்மார்ட் சிட்டிஸ் திட்டத்தின் செயல்படுத்தும் திறன் மற்றும் பயன்படுத்தப்படாத நிதி தொடர்பாக மாநிலம் மற்றும் நகர வாரியாக அரசு மதிப்பீட்டு அறிக்கை தயாரித்துள்ளதா?
மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஸ்மார்ட் நகரங்களிலும் ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தங்கள், நீண்டகால பராமரிப்பு, நிலையான செயல்பாட்டு நிதி மற்றும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை (ICCC) உள்ளாட்சி நிர்வாகத்துடன் ஒருங்கிணைப்பதற்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்று கேள்வி எழுப்பினேன்.
இதற்கு ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு.மனோகர் லால் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் :-
2025 மார்ச் 31ஆம் தேதியுடன் ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன் நிறைவடைந்துள்ளதால், அதன் கீழ் புதிய நகரங்களை சேர்க்கும் எந்த ஏற்பாடும் தற்போது இல்லை.
2026 மார்ச் 31 நிலவரப்படி, ரூ.48,000 கோடி மொத்த மத்திய நிதி ஒதுக்கீட்டில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ரூ.47,458 கோடி (99%) கோரியுள்ளன. இதில் ரூ.46,377 கோடி (98%) பயன்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் மற்றும் நகர வாரியாக நிதி கோரிக்கை மற்றும் பயன்படுத்தப்பட்ட விவரங்கள் இணைப்பில் வழங்கப்பட்டுள்ளன.
நீதி ஆயோக் 2025 செப்டம்பரில் வெளியிட்ட மதிப்பீட்டு அறிக்கையின்படி, ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன் தேசிய நகர்ப்புற வளர்ச்சி இலக்குகளுடனும், ஐக்கிய நாடுகள் சபையின் நிலைத்த வளர்ச்சி இலக்குகளுடனும் (SDGs) நன்கு ஒத்துப்போகிறது. மொத்தம் 8,063 திட்டங்களில் 93 சதவீத திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் (ICCC) 100 சதவீதம் அமைக்கப்பட்டுள்ளதால், நகரங்களின் வாழ்வாதாரத் தரம், போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டிஸ் திட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 2025 ஜூன் 10ஆம் தேதி மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஆலோசனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சிறப்பு நோக்க நிறுவனங்கள் (SPVs) 2026 மார்ச் மாதத்திற்குள் மத்திய அரசு வழங்கிய நிதிக்கான பயன்பாட்டு சான்றிதழ்களை (UC) சமர்ப்பிக்க வேண்டும். மேலும், நடைபெற்று வரும் அனைத்து திட்டங்களையும் விரைந்து முடித்து, உருவாக்கப்பட்ட சொத்துகளுக்கான செயல்பாடு மற்றும் பராமரிப்பு திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் (ICCC) நகரங்களின் செயல்பாட்டு மையங்களாகவும், மாநில அளவிலான பகுப்பாய்வு மையங்களாகவும் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும், அவற்றின் நிர்வாகக் கட்டுப்பாடு நகர்ப்புற வளர்ச்சித் துறைகளிடம் இருக்க வேண்டும் என்றும் ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நகர்ப்புற வளர்ச்சியின் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப SPV-களின் பங்கை மறுவடிவமைக்க மாநிலங்கள் நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணைப்பில் வழங்கப்பட்டுள்ள விவரங்களின்படி, தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் வேலூர் ஆகிய 11 ஸ்மார்ட் நகரங்களுக்கு தலா ரூ.490 கோடி வரை மத்திய நிதி வழங்கப்பட்டுள்ளதுடன், பெரும்பாலான நகரங்கள் அந்த நிதியை முழுமையாக அல்லது கிட்டத்தட்ட முழுமையாக பயன்படுத்தியுள்ளன.
இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *