தலைவர் கலைஞர் அவர்களுக்கு சங்கத் தமிழ்ப் பேரவை எடுக்கும் தமிழர் பெருவிழா – வள்ளுவர் கோட்டம் 24.01.2009

தலைவர் கலைஞர் அவர்களுக்கு சங்கத் தமிழ்ப் பேரவை எடுக்கும்
தமிழர் பெருவிழா 24.01.2009 - வள்ளுவர் கோட்டம்
“கவிமழை பொழிவதில் - அவருக்கு நிகர் அவரே”
- தமிழச்சி தங்கபாண்டியன்

எல்லா அரங்கத்திலும்
என் தலைவர் கலைஞருக்கே
முதல் வணக்கம் !

தமிழ் வேர் பரப்பி
தன்மானக் கிளை விரித்து
பகுத்தறிவுக் கனி பூத்த
இனமானப் பெரு விருட்சமே -
என் தலைவா !

‘அடிமுடி’ காண முடியா
உன் தமிழ் நிழலில்
ஆசுவாசிப்போர் ஆயிரமுண்டு -
அதில் உன் பெயரை
அனுதினமும் சுவாசிக்கும்
இத் தமிழச்சிக்கும்
ஓர் இடமுண்டு -
இச் சிறு விழுதைத்
தமிழால் தாங்கும்
ஆல் தருவே !

சுயமரியாதையும், வீரமும்
சரிசமமாய்ச் சூல்கொண்ட
தன்மான எரிமலையே !

தமிழ் முகிலும், கழகக் காற்றும்
முயங்கிப் பெற்ற
முடிவில்லாக் கவிமழையே !

நீ, தைத் ‘திங்களை’ தமிழ் புத்தாண்டாய் அறிவித்தாய் -
தலை நிமிர்ந்த தமிழன்னை
தன் ‘செவ்வாய்’ குவித்துத்
தலைமகனை உச்சி முகர்ந்தாள்.

அந்த அமுத முத்தத்தில் -
தமிழருக்குப்,
‘புதன்’ பொன்னானது ;
‘வியாழன்’ விடியலானது ;
‘வெள்ளி’ முளைத்தது ; 
‘சனி’ தொலைந்தது.
‘ஞாயிறாய்’ எழுந்த
எங்களின் உயிர் எழுத்தே -
உம்மை, என் உயிர் மூச்சாய்,
நெஞ்சில் நிறுத்துகின்றேன் !

வழமையான அரங்கத் தலைவரல்ல இவர்;
இளமையான எழுதுகோலுக்குச் சொந்தக்காரர்.
முழுக்கவிதை எழுதி வந்து
நான்,
இவர் எதிரே நின்றால் -
எழுதியதில் பாதி, அவர் பாக்கெட்டில்
மீதியாய்ச் சேர்ந்து விடும்.
நேர் நிற்கும் எதிரியின் பாதிபலம்
வாலிக்குப் போய்ச் சேரும் என்றாலும்,
எதிரிக்குத்தான் அக் கவலை
ஏந்திழை எனக்கில்லை என்பதால்
தைரியமாய்த் தொடர்கின்றேன்.

ஆழ்வார் பனிரண்டு பேருண்டு ;
ஆனாலும்,
‘ஆள்வான்’ மேல் -
‘தமிழை ஆள்வான்’ மேல் பித்தான
இவர் போல யாருண்டு?
பிறை சூடிச் சிவனை விட
தான் சூடி மாலை தந்த
ஆண்டாளின் நாயகன் மேல் -
ஆராக்காதல் உண்டெனினும்,
‘தமிழை ஆண்டாளும் நாயகன் மேல்’ -
தனிப் பித்தம் இவருக்குண்டு !

‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?’
என இவர்,
தமிழை எடுத்து உண்டதால்
எமக்குக் கிடைத்தது ‘இராமானுஜ காவியம்’.
பெருமாளைப் போற்றும்
இந்தக் காவியக் கவிஞருக்கு,
ஒரே ஒரு 
ஆரூரானைப் பிடிக்கும் -
திருக்குவளையில் பிறந்து
திசை எட்டும் தமிழ்க் கொடி ஏற்றிய
திருவாரூரானைப் பிடிக்கும் !

இராமானுஜருக்கு ஒரு கோட்டியூர் நம்பி,
அரங்கத் தலைவருக்கோ அண்ணாவின் அன்புத் தம்பி !

வயது முதிரா ‘வாலி’பப்
பேனாவில் வார்த்தைகளை
ஒளித்திருக்கும்,
‘புத்தம் புதிய புத்தகமே’ - வணக்கம் !

ஆரம்பிக்கின்றேன் - 
‘கவிமழை பொழிவதில் - அவருக்கு நிகர் அவரே’

சென்ற வருடம் வரை
‘அட்சய, விபவ’ என
வடமொழி வடம் பிடித்திருந்த
தமிழரை நேர் திருத்தி,
தை ஏர் கொண்டு
தமிழ்த்தேர் இழுத்த
தன்னிகரற்ற என் தலைவா !

வெல்லமிட்டு வைக்கும் பொங்கல் இனிப்பதுண்டு ;
நீ உப்பிட்டு,
‘தன்மான உப்பிட்டு’ வைத்த புத்தாண்டு
தமிழ்ப் பொங்கல்,
உவர்க்காமல், இனிப்பதென்ன -

ஏலக்காய் பொடித்த பொங்கல் மணப்பதுண்டு ;
நீ, மிளகிட்டு,
‘இனமான மிளகிட்டு’த் தந்த 
இப் பொங்கல், 
இன்னமும் இனிப்பதென்ன -

மண்பானை உலை கொதிக்கும் பொங்கல் சுடுவதுண்டு ;
உன் தமிழ்ப் பானை தந்த
பகுத்தறிவுப்  பொங்கல், 
பதநீராய்க்  குளிர்வதென்ன -

தரிசு நிலமெல்லாம் உன்
தமிழ்க் கமலை நீர் பாய்ந்து, 
செங்கரும்பு விளைந்ததென்ன -

மங்கலமாய்ப்  பிறந்த  புத்தாண்டே காரணமாம் -
மங்கலம் - திருமங்கலம் சொல்கிறது !

அமங்கலமாய்  ஏதும் நடந்திடாதா இந்த ஆட்சியில்
என ஏங்கியோரின் கையில்
எல்லாம் திருவோடு!
உண்கலமாம்   உழவரின்  திருநாளில்
உன் கையில் மட்டும்  
மங்கலமாய் எண்பதாயிரம் திரு வோட்டு !

அஞ்சாத மதுரை அதிர்வேட்டில்
தெருவோடு போனது - பம்பரம்
சருகாகிப் பறந்தது - இரட்டை இலை !

பெரியாரின்   மீசையில்
இன்றுவரை  நரைக்காத
இளமைத் திருமுடி   நீ !

பேரறிஞர்  தந்து சென்ற,
தமிழினத்தின்  மங்காத்  திருமுடி நீ!

நீ  நடந்து  வந்த  பகுத்தறிவுச் சாலையில்
தடியே  வழிகாட்டி ;
தாடியே  தருநிழல் ;
பொடியே மாக்கோலம் ;
வெற்றிலையே  தோரணம் ;

என்றாலும் -
பயணம் செல்ல
சுயம்புவாய்  ஒரு  சுயமரியாதை எழுதுகோலை
உனக்கான  தனித்  தேராய்க்
கவனமாய்க்  கடைந்தெடுத்தாய் ;
கவிதையை அதன்  கடையாணியாய்க்
காதலுடன் பொருத்தி  வைத்தாய் !

பேரறிஞரின்  பேச்சுத் துணையாய்
இருந்த கவிதைப் பெண்,
உனக்கு  மட்டும் உறுதுணையாய்க்
கூடவே  வருவதென்ன?

ஒரு நாள்  வியந்து கேட்டேன் -
ஓய்வறியாக்   கடலலை போல் உனதுள்ளம்,
தன்னை மட்டுமே நினைத்திருப்பதால்
தலைமகனாய்த் தான் வரித்தெடுத்த
ஒரு மகனை
தனித்திருக்க  விடுவதில்லை யென
விடையளித்தாள்  பெருமையுடன் கவிதைப்பெண் !

எரிமலைக்  குழம்பாய் அரசியல்,
குழந்தையின்  குறுஞ்சிரிப்பாய்  இலக்கியம்
என இயங்கும்
உன்  வலக்கையின் வலிமை பற்றி  
இடது  அறியாதிருக்கலாம்,
‘இடது’ - இப்போது   -  அறியாதிருக்கலாம்.
ஆனால்,
எப்போதும்  இலக்கிய  உலகறியும்.

பாற்கடலை  வாசுகிப் பாம்பு  கடையப்
பிறந்தது  அமுதமெனக்  கதையுண்டு,
கண்டதில்லை நான் !

வாசுகியின் இணை தந்த
இரண்டடித்  திருக்குறளை
இளங்கோவின்
இருகாற்  சிலம்பு கடைய, 
தமிழ்  அமுதாய்ப்  பிறந்து வந்த
கரிகாற்  சோழன்  நீ -
காண்கின்றேன்  நான் !

அரசர்கள்  பலவுண்டு அவனியிலே -
எழுதுகோலே செங்கோலாய்  மாறும்
ரசவாதம்  உன்னில்   தவிர  யாருக்குண்டு ?
உன் பேனா,
திறந்திருக்கும்  பொழுது
தீந்தமிழில்  தோய்கிறது,
சற்று
ஓய்ந்திருக்கும் போதோ
செங்கோலாய்த்  திட்டங்கள்   தீட்டுகிறது !

சாமான்யருக்காக  நீ அளித்த
மளிகை  சாமான்கள்
ஏழையின் வயிற்றில், தண்ணீர் இல்லாப்
பால்  வார்த்தது ;
எதிர்க்கட்சியின்  வயிற்றிலோ, தண்ணீர் இல்லாமலே
புளியைக் கரைத்தது !

“ஓடி வந்த  இந்திப் பெண்ணே,
கேள்”  என்று 
கவிதை  சொன்ன  நீ,
அன்று  விரட்டாது,  அவளிடத்தில்
நின்று கொஞ்சம்  பேசியிருந்தால்
விட்டுப்  போயிருக்கமாட்டாள்  தமிழ்நாட்டை !
தன் முக்காடு  நீக்கி,  முழுவதுமாய்
உன்  கவிமழையில்
ஒன்றி  நனைந்திருப்பாள்  இன்று வரை !
நல்லவேளை நறுக்கென்று நிறுத்திவிட்டாய்
ஏழுவரிக் கவிதை அதை !

நெல்லுக்குப்  பாயும் நீர்
சற்று புல்லுக்கும்  பாய்வதுண்டு ;
மடை மாற்றி,
அதுகாறும்
தர்பைப் புல்லுக்குப் பாய்ந்த நீரை,
தமிழ் நெல்லுக்குப் பாய்ச்சிய
சொல்  ஏர் உழவன் நீ !

“தளையறுத்த  வீரர் கதை பாடுவதால்
‘தளை’யகற்றிப்  பாடுகின்றேன் நானும் - அவர் 
தொடை தட்டித்  துரோகிகளை  வீழ்த்தியதால்
‘தொடை’  தட்டும்  என் பாட்டும் !  என் கவிதை,
யாப்பின்றிப் போனாலும்  போகட்டும் -
நாடு,  மொழி, மானம்,  உணர்வெல்லாம்
காப்பின்றிப் போதல்  கூடாதெனும் கொள்கை யொன்றால்
வாய்ப்பின்றிப் போனாலும் செய்யுள் கற்கக்
காய்ப்பின்றி  நிற்கின்ற  மரமாக ஆகாமல் நெஞ்சில்
ஊறுகின்ற  உணர்ச்சிகளை  வரிகளாக்கிக் கொள்கை
மாறுகின்ற  கோடரிகள்  உணர்வதற்குக் கவிதை  சொல்வேன்”
என்றுரைத்த என்  தலைவா,
உன் உவமைகளில்
நீ  மரபின்  கடையாணியைக் கழற்றிப்
புதுமையின்  காதணி   ஆக்குகிறாய் !

கவலை வந்தால்  கையில்  தலை வைப்போம் -
உன்  கவிதையிலோ,
‘ஆறுதல்  தன்னைத்  தேடி வருமென்று
அகல  விழிகளைத் திறந்தவாறு,  
கவலையே  -
தலையில்  கைவைத்து’ உட்கார்ந்திருக்கிறது.

உள்ளத்தை பள்ளத்திற்கு  ஒப்பிடுவர் ;
பாயும்  வெள்ளத்திற்கு  ஒப்பிடுவர் ;
நீயோ,
‘கண்ணுக்குள் பாவை  போல்
உருண்டிடும் உள்ளம் - கைம்
பெண்ணுக்கு’  இருக்கிறதென்கிறாய் !

எளிய  உவமையின்  இன்பச் சுவைப்பை
“முல்லை சூழ் இந்நாட்டுப் படையிலொரு வீரர்  குறைந்திட்டால்,
நல்ல உடையிலொரு  கிழிசல் வந்தது போலன்றோ ?”
என நயமாய்ச் சொல்கிறாய் !

கசக்கின்ற செய்தி  கேட்டிருப்போம் நாம் ;
முதற்சங்கம்,  இடைச்சங்கம்,
கடைச் சங்கம்  எல்லாம் இணைந்த
தமிழ்ச்சங்கம் நீயோ,
சூர்ப்பநகையின்  துயரம்  கேட்ட
இராவணனின்  நிலையை,
“சூதறியாச் சோதரியை  சூர்ப்பநகை ஆக்கிவிட்ட
காதெரியும்  செய்தி கேட்டான்”
என்கின்றாய் !

வரப்புயர  நீர் உயரும்  
நீர் உயர நெல் உயரும்
விதி மாற்றி,
தமிழ் நெல் உயர,
பகுத்தறிவுப்  புனல் உயரும் ;
அவர்தம் தன்மான  வரப்பு உயரும் எனவும்,
பிறிதொன்றில்
பிரகலாதன்  பெயர் கூறி விளக்குகிறாய் இப்படி -
“பெண்ணழகை  விஞ்சுகின்ற பிறைநெற்றி  கொண்டதாலே
பிறை நுதலான்  எனச் சொல்லி அழைத்தார் பெற்றோர்,
பிற்போக்கு  மனிதர்களோ, பிரகலாதன்  என்றார்.”

‘எதிர் மறை  அழகியலை’
உன் போல்  இயம்பியவர் யாருண்டு ?
“வானக் கிழவன் இருமுதலே இடியென்றும்,
வாடிப் பிதுங்கும் அவன்
கண்ணொளியே  மின்னலென்றும்,
அவன் 
வடிக்கின்ற  கோழை  எச்சில்தான்
மழையே  என்றும்...”
சொன்ன  கவி
இப்புவியில் நீ  மட்டுமே !

“கார் எழுத்து  மழையாகும், மழையின்
பார் எழுத்து  ஆறாகும்; ஆற்றின்
நேர் எழுத்தே  குளமென்போம்; கிணறென்போம்”;
என உவமையை  விஞ்சி நிற்கும்
இவ்வுருவகத்தைத் தாய் வீட்டுச் சீதனமாய்க்
கழற்றாமல்  அணிந்திருப்பேன்
எனக்  கவிதைப் பெண்  பூரிக்கிறாள் போகுமிடமெங்கும் !

தமிழ்   நிலத்தின்  முன்னத்தி  ஏரே !
என் தலைவா -

முள் தாண்டி வெள்ளை  மாளிகைக்குள்
கறுப்பு வித்தொன்று முளைத்தது இன்று -
மௌடீக  வேலி உடைத்து
கவிதைக்  கரமொன்று
தமிழ்  ஏரைப்  பதித்தது  இங்கு !
இருந்தாலும்  -
இரண்டும் ஒன்றல்ல ; 
என் தலைவா  -

நீ சந்தித்த சவால்களின் முன்
அவர்தம் சரித்திரம் எல்லாம்
சவலைப் பிள்ளைகளே !

ஒப்பாரும்,  மிக்காரும் இல்லா உனக்கு  
நிகர் 
நீ மட்டுமே !

ஒரு கோடிப்  பேரின் உயிர்காக்கும்
இலவசக் காப்பீட்டுத்  திட்டத்தை முன்னோடியாய் அறிவித்த
ஒப்பற்ற  தமிழ் மருந்தே !  என் தலைவா !

உன் பெயர் சொல்லி உயிர்த்திருக்கும்
என் போன்ற  இளைய  கவிக்கு
உயிர் காக்கும்  காப்பீடாய்
உன் ஒரே  ஒரு  உவமை தா -
பிழைத்திருப்பேன் !
நன்றி! வணக்கம்!!
* * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *