சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை விளக்கக் கூட்டத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை அஞ்சுகத்தம்மா என்கின்ற அழகிய எதுகை சேர்ந்து காலப்புலவன் யாதர் கலிப்பா வெண்பாவை இருவர் ஊன் தழுவி தழுவவும் வானம் தழுவ வந்துவிட்ட சூரியன் உன்னுடைய பெயரை உச்சரிக்கக் கேட்டாலே தமிழ் இனிது என்று ஆர்ப்பறிக்கும். அதுமட்டுமல்ல, தன் உளம் மகிழ்ந்து தமிழும் அமிழ்தும் என்றென்றைக்கும் தமிழினத்தின் ஒரே தலைவராக தனக்கு ஒப்புவமை இல்லாத நம்முடைய நெஞ்சங்களில் எல்லாம் நிறைந்திருக்கின்ற தலைவர் கலைஞரை என்னுடைய நெஞ்சிலே நிறுத்துகின்றேன். நாம் அனைவரும் அறிவோம் பேரறிஞர் அண்ணாவை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தளபதி என்று குறிப்பிடப்படுவதை. திராவிட தளபதி குறித்து நம்முடைய இனமான பேராசிரியர் புதுவாழ்வு பத்திரிகையிலே சொல்லியிருப்பார், புன்னகை பூத்த முகம், விரைவான நடை, எளிமையான உடை, இந்த வர்ணனைகளுக்குச் சொந்தக்காரர் இன்றைக்கு தமிழக மக்களுடைய நெஞ்சங்களிலெல்லாம் குடிபுகுந்துவிட்டார். மாற்றுக் கட்சியினருக்கோ அவர் தோழர். நம்முடைய கட்சி அன்பர்களுக்கோ அவர் தளபதி என்று. அன்றைக்கு பேரறிஞர் அண்ணாவிற்குச் சொன்ன அத்தனை பொருத்தப்பாடும் அச்சொட்டாமல் இன்றைக்கு பொருந்தியிருக்கிற நம்முடைய தமிழகத்தின் எழுச்சி நாயகன், நமக்கெல்லாம் நாளைய விடியலாக விளங்கிக்கொண்டு, சுற்றிச் சுழன்று தமிழகத்தை தொழிற் பூங்காவாக முன்னேற்றவேண்டும் என்ற துடிப்போடு, இந்தியாவையே இன்றைக்கு தமிழகத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்ற, நங்கூரமாய் இருக்கின்ற தளபதியை அடுத்ததாக என்னுடைய நெஞ்சிலே நிறுத்துகின்றேன். இந்தப் பகுதியிலே நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிகப்பெரிய தூணாக விளங்கி மறைந்த என்னுடைய தந்தையின் நெருங்கிய நண்பராகவும் என்னுடைய வளர்ச்சியிலே அக்கறை கொண்டவருமான, நான் மரியாதையோடு அப்பா என்றழைக்கின்ற ஆர்க்காட்டாருக்கும் நான் என்னுடைய வணக்கத்தைப் பதிவு செய்கின்றேன். மதிப்பிற்குரிய அண்ணன் மாவட்டச் செயலாளர் அவர்களுக்கும் என்னுடைய வணக்கம். பெரியாருடைய துணிச்சலைப் பெருதல் வேண்டும், பேரறிஞர் அண்ணாவின் தெளிவுதனை உணர்தல் வேண்டும், எந்தவித எதிர்ப்புக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி வேண்டும், பெரியாரை, அண்ணாவை என்றென்றும் நம்முடைய நெஞ்சில் நிலைத்திருக்க வேண்டும் என்கின்ற தலைவர் கலைஞரின் அறிவுறுத்தலின்படி, இவர்கள் அனைவரோடும் சேர்த்து, நம்முடைய தளபதியை தங்களுடைய நெஞ்சங்களில் நிறைத்துக்கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு அசைக்க முடியாத தூணாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிற இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிற இளைஞர் அணியின் 74வது வட்டத்திலே நடைபெறுகின்ற இந்த கூட்டத்திற்கு தலைமையேற்றிருக்கிற எம்.சி.ரமேஷ் அவர்களே.... என்னுடைய பேட்டியிலே நான் என் குறித்து கருப்பு வெள்ளை அணுக்கள் ஓடுவதில்லை, கருப்பு சிவப்பு அணுக்கள்தான் ஓடுகின்றன என்று சொன்னதை நினைவுகூர்ந்து பேசிய நன்மாறன் அவர்களே..... பெரும்பான்மையான அளவிலே இந்த இரவு நேரத்திலே இங்கே நான் பேசுகின்ற பேச்சைக் கேட்பதற்காக உற்சாகத்தோடு கூடியிருக்கின்ற கழகத்தின் மகளிர் அணியைச் சார்ந்தவர்களே, எழுச்சிமிக்க இளைஞர்களே, தாய்மார்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம். ஒரு சொல்லாடலோடு என்னுடைய உரையை தொடங்கலாம் என்று நினைக்கிறேன். நம் கழகத்தினுடைய 5வது மாநில மாநாடு 1975ம் ஆண்டு நடைபெற்ற போது அந்த மாநாட்டிற்கு தலைமையேற்க நம்முடைய ஒப்புயர்வற்ற தலைவர் அவர்களை முன்மொழிந்து பேராசிரியர் அவர்கள் பேசுகின்றார், அப்பொழுது தலைவர் கலைஞர் அவர்களை எப்படி வர்ணிக்கிறார் தெரியுமா? கலைஞர் அவர்களை இந்த மாநாட்டிற்கு வழிமொழிவதற்கு முன்பு ஒரு சில வர்ணனைகளை அவர் குறித்து நான் சொல்ல விரும்புகிறேன் என்று சொல்லுகின்றார், தந்தை பெரியாருடைய சாயலை நான் கலைஞரிடத்திலே பார்க்கின்றேன், அவருடைய துணிச்சலிலே அந்த உறுதியிலே, பேரறிஞர் அண்ணாவினுடைய சாயலை நான் கலைஞர் இடத்திலே, இதமான அந்த பேச்சாற்றலை, மனதை ஈர்க்கின்ற எழுத்தாற்றலிலே, பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய சாயலைக்கூட நான் கலைஞரிடத்திலே பார்க்கின்றேன் சாதாரணத் தொண்டன் எப்படி ஒரு நாட்டை ஆள்கின்ற அளவிற்கு உயரமுடியும் என்று காட்டுகின்ற அந்த விதத்திலே, அண்ணல் அம்பேத்காருடைய சாயலை நான் கலைஞரிடத்திலே பார்க்கின்றேன், இரவு முழுவதும் விழித்து அல்லலுற்ற மக்களுக்குப் பணியாற்றும் பாங்கைப் பார்க்கும்பொழுது, கண்ணியத்திற்குரிய கலைஞருடைய சாயல் இஸ்மாயில் அவர்களிடமும் பார்க்கின்றேன், எப்படி ஒரு மிகப்பெரிய சமுதாயத்தை ஒரு குடும்பத்தைப் போல கட்டிக்காக்க முடியும்? என்று உலகுக்குக் காட்டுகின்ற அந்தப் பாங்கிலே. பசும்பொன் மத்துராமலிங்கத் தேவருடைய சாயலைக்கூட நான் கலைஞரிடத்திலே பார்க்கின்றேன், பாளைச் சிறையை பங்குபோட்டுக்கொண்ட அந்த விதத்திலே என்று அடுக்கடுக்காக அன்றைக்குச் சொல்லிச் சென்றார். இத்தனை சாயலையும் உள்ளடக்கிய இந்தியாவிலே ஒப்பற்ற ஒரே தலைவர் நம்முடைய கலைஞர் எனும்பொழுது இந்த தலைவர் பெற்ற தவப்புதல்வர் இன்றையதினம் தமிழகத்திலே இருக்கின்ற இளைஞர்கள், மாணவர்கள், மாணவியர்கள், மகளிர் அனைவருக்கும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்துகொண்டிருக்கிற நம்முடைய தளபதி அவர்கள் எப்பேற்பட்ட மிகச்சிறந்த இளைய தலைவராக இருப்பார்கள்? Indian Express என்கின்ற பத்திரிகைக்கு நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் பேட்டியளித்த போது ஒரு முறை சொன்னார், தந்தை மகர்காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொள் என்று சொல்கின்ற அந்த திருக்குறளை நினைவுகூர்ந்து அவர் சொன்னார், ஒரு தந்தையாக நான் ஸ்டாலினுக்கு எந்தவிதமாக கடமையும் ஆற்றவில்லை. ஆனால் ஒரு மகனாக அவன் ஒரு தந்தைக்கு ஆற்றவேண்டிய அத்தனை கடமைகளையும் சரிவர செய்திருக்கிறார். இந்த விதத்திலே ஒரு மகனாக அவனை அடைந்ததிலே ஒரு மிகப் பெரும் பெருமை கொள்கின்றேன் என்று சொல்கின்றார். நான் இங்கே பேசுவதற்கு முன்பாக சில காகிதங்களை எடுத்துவந்தேன். தாய்மார்கள்கூட சற்று பயந்திருக்கக்கூடும். இந்த அம்மா கல்லூரியிலே பேராசிரியையாக வேலை பார்த்தவர்கள். கிட்டத்தட்ட மணி 10 ஆகப் போகின்றது, பக்கம் பக்கமாக வாசித்து நம்முடைய தூக்கத்திற்கு மேலும் தாலாட்டு பாடிவிடுவார்களோ என்ற கவலைகூட அவர்களுடைய முகத்திலே எனக்குத் தெரிந்தது. ஆனால், தோழிகளே, தாய்மார்களே, நான் ஒன்றைச் சொல்லுவேன், சில விஷயங்களை நியாபகத்தோடு உங்களுக்குச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்காகவே சில குறிப்புகளை இங்கே எடுத்து வந்திருக்கிறேன். ஏனென்றால் தமிழ்நாட்டு மக்களுக்கு சில வருடங்களுக்கு முன்புவரை ஞாபக மறதி என்கின்ற ஒரு வியாதி பீடித்திருந்தது. உலகமே வியக்கும் வண்ணம் ஒட்டியானமும், ஒங்கியும் அணிந்து, பட்டுச் சேலையோடு தோழிகளோடு திருமணத்திற்குச் சென்ற அந்த காட்சியெல்லாம் மறந்துவிட்டு, இன்றைக்குப்போய் நெய்வேலியிலே ஒரு ஊர்வலம் நடத்திவிட்டால், விழுப்புரத்திலே ஒரு போராட்டம் நடத்திவிட்டால் நம்மை மக்கள், பழைய கால நியாபக மறதியைக்கொண்டு மன்னித்துவிடுவார்கள் என்று ஒரு அம்மையார் நினைத்து பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறார். அவர்களுக்கெல்லாம் நீங்கள் தகுந்த பாடம் புகட்டவேண்டும் என்பதற்காகத்தான் நான் சில குறிப்புகளை இங்கே எடுத்துவந்திருக்கிறேன். மேனக் என்கின்ற ஒரு வரலாற்று ஆசிரியர் இருந்தார். காலம்காலமாக நமக்கு நம்முடைய முன்னோர்கள் விட்டுச்சென்ற நிகழ்ச்சிகளின் குறிப்புகள்தான் வரலாறு. அவர் சொல்கின்றார், ஒரு அரசியல் வாழ்க்கைக்கு என்று நிர்ணயிக்கப்பட்ட ஒரு மனிதன் எப்பொழுதும் வலிமையாக இருப்பதற்கும், நல்லவனாக இருப்பதற்குமான இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையே அல்லாடிக்கொண்டிருக்கிறான் என்று. ஆனால், வலிமையாக இருப்பது எனக்கு முக்கியம் அல்ல, நான் நல்லவராக இருப்பதையே விரும்புகிறேன் என்பதிலேயே நம்பிக்கை வைத்திருக்கிற ஒரே இளைய தலைவர் நம்முடைய தளபதி மட்டுமே. பிறரால் விரும்பப்படுதல் என்பது மட்டுமே ஒரு தலைவருடைய தலைமைப் பகுதியை நிர்ணயிப்பதில்லை. நல்ல செயல்களை தகுந்த நேரத்தில் குறித்த காலத்திற்குள் செய்வதும் ஒரு நல்ல தலைவனை நிர்ணயிக்கின்றது. ஆனால், நம்முடைய தளபதியோ, மக்களால் நேசிக்கப்படுவதோடு பிறரால் விரும்பப்படுவதோடு மட்டுமல்ல, மக்களுக்கு சரியான செயல்களை, சரியான நேரத்தில் சோர்வின்றி குறித்த நேரத்திலே செய்துகொடுக்கின்ற காரணத்தினால் இன்றைக்கு அவருடைய பிறந்த நாளை நாம் நலத்திட்ட உதவிகள் வழங்குகின்ற விழாவாகவும் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். ஏன் நான் இதனை, இளைஞர்களை மிகவும் அழுத்தி இந்தச் செய்தியை பகிர்ந்துகொண்டேன் என்றால், இத்தாலியிலே இருக்கின்ற அந்த வரலாறை நீங்கள் எடுத்துப்பார்த்தீர்கள் என்றால், இத்தாலியில் ஆகட்டும், துருக்கியில் ஆகட்டும் அல்லது சீனாவினில் ஆகட்டும். அங்கேயிருந்த சன்னியாட்சன் அல்லது கரிபால்டி முதலான எல்லா தலைவர்களும், எல்லா மாற்றங்களுக்கும் இளைஞர்களையே ஒரு கருவியாக உபயோகித்து, அவர்கள் மூலமாகவே அவர்கள் ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி, சமுதாயத்திலும் சரி, மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கின்றார்கள். அதனை முழுவதுமாக அறிந்து உணர்ந்து தன்னுடைய வாழ்க்கையிலேயே அனுபவபூர்வமாக உணர்ந்தவர் தளபதி என்பதால்தான் தன்னுடைய திட்டங்கள் அனைத்திலும் இளைய சமுதாயத்திற்கு மிக முக்கியத்துவம் அளித்து ஒரு சமுதாயம் வளர்வதற்கு இளைஞர்களுடைய வளர்ச்சி மிக முக்கியம் என்பதை அறிந்து இன்றைக்கு அவர் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறார். ஒரு சிறிய கதையை நான் உங்களிடம் சொல்லலாம் என்று நினைக்கின்றேன். மிக சமீபத்தில் ஒரு அம்மையார் பொய்கள் கூறி, புரட்டுக்கள் கூறி, போராட்டங்கள் நடத்தி வருவதை உங்களிடையே சுட்டிக்காட்டினேன். நீங்கள் அனைவரும் உங்களுக்கு வழங்கப்படுகிற சேலைகளை வாங்குவதற்காக காத்திருக்கின்றீர்கள். ஒரு மன்னன் இருந்தான். அந்த மன்னனிடம் ஒரு மந்திரி இருந்தான். அந்த மந்திரி பொய்கள் சொல்வதையை வழக்கமாகக் கொண்டிருக்கிற மந்திரி. ஒரு முறை அந்த மன்னனிடம் மந்திரி சொல்கின்றார், எனக்கு நீங்கள் கனகாபிஷேகம் தொடர்ந்து ஒரு மாதம் செய்தால், கனகாபிஷேகம் என்றால் பொன்னாலான காசுகள், நான் உங்களுக்கு மிக உயர்ந்த சொர்கத்திலே தயாரிக்கப்படுகின்ற ஒரு புடவை செய்து தருவேன். அது இந்த உலகத்திலே யாருக்குமே கிடைக்காத அளவிற்கு நெய்யப்பட்டிருக்கின்ற அதி அற்புதமான சேலையாக இருக்கும் என்ற சொல்கின்றார். இதனை நம்பிய மன்னன் அந்த மந்திரிக்கு ஒரு மாத காலம் கணக்கற்ற தங்கக் காசுகள் மூலமாக கனகாபிஷேகம் செய்கின்றார். குறித்த அந்த நாளும் வருகின்றது. அவையோர் அனைவரும் காத்திருக்கின்றார்கள். அந்த நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. மன்னருக்கு ஒரு அதிஅற்புதமான புடவையை மந்திரி தரப்போகிறாராமே என்று. மந்திரி வருகிறார், கையிலே ஒன்றுமே இல்லை. ஆனால் கையிலே ஒரு புடவையைப் பிடித்திருப்பதைப் போல் அபிநயம் செய்கின்றார். மன்னரே உங்களுக்காக நான் ஒரு மாத காலம் கஷ்டப்பட்டு தயாரித்த இந்தப் புடவையைப் பாருங்கள். உண்மையாக இருந்த ஒரு கணவன் மனைவிக்குப் பிறந்த ஒருவருக்குத்தான் இந்தப் புடவை கண்ணுக்குத் தெரியும் என்று சொல்லுகின்றார். மன்னர் அதற்குமேல் ஏதாவது மறுபேச்சு பேசுவாரா? அவர் அந்தப் புடவையை இருப்பதாகவே நினைத்துக்கொண்டு, ஆமாம் மந்திரியாரே, மிகமிக அற்புதமாக இருக்கின்றது இந்தப் புடவை என்று சொல்லுகின்றார். அதோடு அந்த மந்திரி நிறுத்தினாரா? அந்தப் புடவையை மகாராணிக்குத் தாருங்கள். உலகத்திலேயே கற்புக்கரசியாக இருக்கின்ற ஒருவருடைய கண்ணுக்குத்தான் அந்தப் புடவை தென்படும் என்று சொல்லுகின்றார். அதற்குப் பின்பு மகாராணி ஏதாவது பேசுவாரா என்ன? அவரும் அந்தப் புடவையை கைகளிலே வாங்குவது போல பாசாங்கு செய்துவிட்டு மிகவும் அற்புதமாக வந்திருக்கிறது இந்தப் புடவை என்று சொன்னாராம். நம்புகிறவர்கள், ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் உங்களை ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள் என்பதற்காகத்தான் இந்தக் கதையை நான் சொன்னேன். நீங்கள் ஏமாளிகள் என்று நினைத்துக்கொண்டு, இன்றைக்கு நெய்வேலிக்குப் போய் எம்ஜிஆருடைய சிலையை திறந்துவைத்து மின்வெட்டுக்கு எதிராக ஒரு மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தி, எழுதி தயாரிக்கப்பட்ட ஒரு உரையை வாசிக்கிறேன் என்று ஒரு அம்மையார் சொன்னால், நீங்கள் ஏமாந்து விடலாமா? எம்ஜிஆர் என்கின்ற அந்த மாமனிதர் மீது எத்தகைய குற்றச்சாட்டுகளை வைத்த பெண்மணி என்பதை நீங்கள் நினைத்துப்பார்க்கவேண்டும். அவருக்கு உடல்நிலை சரியில்லாதபொழுது முதலமைச்சர் பொறுப்பை எனக்குத் தாருங்கள் என்று கடிதம் எழுதியவர் இந்த அம்மையார். இன்றைக்கு உடனே சென்று அந்தச் சிலையை திறந்து வைத்தால் மட்டுமே கடந்த கால சரித்திரத்தை நீங்கள் மறந்துவிடலாமா? நியாபக மறதி என்கின்ற ஒன்று உங்களுக்கு வந்துவிடக்கூடாது, பொய்கள் சொல்கிற மந்திரிகள் மட்டுமல்ல பொய்கள் சொல்கின்ற முன்னாள் முதலமைச்சரும் இருந்திருக்கிறார் என்பதை நீங்கள் மறந்துவிடக்வடாது என்பதற்காகத்தான் இந்தக் கதையை என்னுடைய உரைடை தொடங்குகின்றேன். தாய்மார்களே, தோழர்களே, அன்பர்களே, நண்பர்களே, நம்முடைய இந்த இனமான சரித்திரம் என்பது எத்தனை காலமாக தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், அம்பேத்கரும், புலே போன்றோரும் போராடி நமக்கு மீட்டுத் தந்திருக்கிற சரித்திரம் என்பதை நீங்கள் நினைத்துப்பார்க்க வேண்டும். பத்து மணியளவிலே மேடையிலே ஒவ்வொருவருடைய பெயரையும் வாசித்து, ஏன் ஒவ்வொருவருக்கும் சால்வையை அணிவிக்கிறார்கள். சமயங்களில் உங்களுக்கு சலிப்புக்கூட வரலாம். சற்று பின்னோக்கிப் பாருங்கள், ஐம்பது வருடங்களுக்கு முன்புவரை மேல்குடி மக்களுக்கு மட்டும்தான் மேடை என்கின்ற விஷயம் இருந்தது. சாமானியமாக இப்படி மக்களுக்கு உழைக்கின்ற யாருக்குமே மேடையிலே ஏறுகின்ற வாய்ப்பு தந்தை பெரியார் வருவதற்கு முன்பு இந்தத் தமிழ்நாட்டிலே இல்லை. அவர் வந்தபிறகு, பேரறிஞர் அண்ணா வந்தபிறகு, அதற்கு முன்பாக தோளிலே துண்டு போட்டுச் செல்கின்ற உரிமை யாருக்கும் கிடையாது,. அதற்காகத்தான் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்தவர்கள் சுய மரியாதை உணர்வைக் காட்டுவதற்காகத்தான் தோள்களிலே நீண்ட துண்டை அணிந்து செல்லுங்கள் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார். பேரறிஞர் அண்ணாவினுடைய வாதத் திறமை குறித்து எனக்கு முன்பாகப் பேசிய அண்ணன் ராமலிங்கம் அவர்கள் சுட்டிக்காட்டினார். ஒருமுறை அவருடைய எதிர்க்கட்சி நண்பர் விநாயகம் என்பவர் ஒரு கேள்வி கேட்டார். நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் திருக்குறளை எழுதிப் போட்டிருக்கிறீர்களே, யாகாவாராயினும் நாகாகக்க என்று எழுதியிருக்கிறீர்களே, இந்தக் குரல் யாருக்காக? பஸ்சிலே ஏன் எழுதிப்போடுகிறீர்கள்? இது யாரைக் குறிப்பதற்காக என்று கேட்கின்றார். பஸ்சிலே பிரயாணம் செய்பவர்களுக்காக என்று சொன்னால் நாமெல்லாம் சண்டைக்குப் போய்விடுவோம். பஸ்சை ஓட்டுபவர்களுக்காக என்று சொன்னால், ஓட்டுநர் அண்ணாவை கோபிப்பார். பஸ்சை நடத்துவோருக்காக என்று சொன்னால் அவரும் கோபிப்பார். எந்த பதிலைச் சொல்வது என்று, அனைவரும் அண்ணா என்ன பதிலைச் சொல்லப் போகிறார் என்று காத்திருந்தார்களாம். யாருக்கெல்லாம் நாக்கு இருக்கிறதோ, அவர்களுக்கெல்லாம் இந்தக் குரல் எழுதிப்போடப்பட்டிருக்கிறது என்று சொன்னாராம். இத்தனை சாதுர்யமும் நமக்கு வேண்டியதிருந்தது. நம்மை அழுத்தி வைத்திருந்த மேல்சாதியினருடைய ஆதிக்கத்திலிருந்து மீண்டு வருவதற்கு ஒரு பெரியார், பேரறிஞர், நம்முடைய தலைவர் போன்ற பலர் வந்து தான் இன்றைக்கு நீங்கள் உங்களுடைய கூட்டுக்களைவிட்டு வெளியே வந்து, உங்களுடைய கால்களிலே நீங்கள் நிற்கின்ற ஒரு அருமையான காலத்திற்கு வந்திருக்கிறீர்கள். ஒன்றை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். நாம் இன்றைக்கு இரவிலே நம்முடைய வீட்டிலே இரவு சாப்பாட்டை தயாரித்துவிட்டு, நாம் விரும்பிப் பார்க்கின்ற டிவி சீரியல்களை எல்லாம் ஒத்திப்போட்டுவிட்டு பத்து மணிக்கு மேலாக ஏன் இந்தக் கூட்டத்திலே வந்து அமர்ந்திருக்கிறோம் என்றால், ஒரு இருபது சதவிதத்தினராவது இந்த ஆட்சி உங்களுக்கு நல்லது செய்திருக்கிறது என்கின்ற நன்றியுணர்வும் அதில் இருக்கிறது என்று நான் திடமாக நம்புகின்றேன். ஒரு சமயம், லெனின் என்ற பேரறிஞர் ஒரு அன்பருக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அவரைப் பார்ப்பதற்காக மேக்சிம் கார்கி என்கின்ற மிகப்பெரிய எழுத்தாளர் வருகின்றார். அவரிடம் லெனின் சொன்னாராம், கொஞ்சம் இருங்கள் நான் முக்கியமான ஒரு நபருக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று. அவரையை காக்கவைத்துவிட்டு லெனின் யாருக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருந்தார் தெரியுமா? தன்னுடைய கட்சியிலே மனம் சோர்வடைந்திருந்த ஒரு தொண்டனுக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருந்தாராம். நினைத்துப் பாருங்கள் இன்றைக்கும் நீங்கள் முரசொலியை அதிகாலையிலே எடுத்தால், உடன்பிறப்பே என்று ஆரம்பித்து, தன்னுடைய உள்ளக்கிடக்கையிலிருந்து, சமூகப் பிரச்சினையிலிருந்து, வரலாற்று நிகழ்வுகளிலிருந்து, தமிழ் இலக்கியத்தின் அத்தனை அற்புதங்களைக் குறித்து எழுதுகின்ற அந்தக் கை யாருடைய கை? அந்த மாயாஜாலக் கை யாருக்குச் சொந்தமான கை? நேரு எப்பொழுதுமே தன்னுடைய மேசையிலே ஒரு இரும்புக்கரம் ஒன்றை ஒரு பொம்மை வடிவிலே செய்து வைத்திருப்பாராம். அந்தக் கரத்தைப் பார்க்கும்பொழுதெல்லாம் தனக்கு புத்துணர்ச்சியும், தன்னம்பிக்கையும் வருவதாக அவர் குறிப்பிட்டிருக்கின்றார். அது, அந்த மாவீரர் லெனினுடைய கைதான். அப்படி நம் அனைவருக்கும் ஒரு கை புத்துணர்ச்சியையும், தன்னம்பிக்கையையும் அளிக்கிறது என்றால், அந்தக் கை நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய கைதான். அந்தக் கை போடுகின்ற ஆணைகளை எல்லாம் இன்றைக்கு தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம், ஓய்வு என்ற ஒன்று இல்லாமல் சுற்றிச் சுழன்று நிறைவேற்றிக்கொண்டிருக்கிற இன்னொரு தலைவர் யார்? இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கின்ற நம்முடைய அருமையான தலைவர், தளபதி மட்டுமே. ஒன்றை நான் இங்கே உங்களிடம் சொல்கின்றேன் தாய்மார்களே, ஒரு நாளைக்கு நாம் எல்லோரும் எத்தனை மணி நேரம் வேலை செய்கின்றோம்?. மிஞ்சிப் போனால் 8 மணி நேரம் என்று வைத்துக்கொள்வோம். ஒரு நாளைக்கு 19 மணி நேரம் உழைக்கின்றார் தளபதி அவர்கள். 19 மணி நேரம் வேலை செய்துவிட்டு, அதற்குப் பின்பாக, தன்னுடைய இல்லத்திலே கூடியிருக்கின்ற தொண்டர்களை சந்தித்துவிட்டு, தொலைபேசி அழைப்புகளையும் எடுத்துவிட்டு, அதற்குப் பின்பாக தலைமைச் செயலகம் சென்று தன்னுடைய பணிகளை தொடங்குகின்றார். உங்களுக்கப் பிடித்த தலைவர் யார் என்று ஒரு பேட்டியிலே அவரிடம் கேள்வி கேட்கப்படுகின்றது. அதற்கு எனக்குப் பிடித்த தலைவர் பிடல் கேஸ்ட்ரோ என்று பதில் சொல்லியிருக்கின்றார். பிடல் கேஸ்ட்ரோ என்பவர் கியூபாவினுடைய அதிபராக இருந்தவர். அவர் ஆயுதப் புரட்சி என்கின்ற ஒன்றை முன்னெடுத்துச் சென்றவர். தளபதி சொல்கின்றார், எனக்குப் பிடித்த ஒரு தலைவர் பிடல் கேஸ்ட்ரோ, இன்னொரு தலைவர் அமைதியின் வழியாக உலகத்தை வென்றெடுத்த நெல்சன் மன்டேலா என்று. அந்த பிடல் கேஸ்ட்ரோ ஒரு முறை மிக அற்புதமான உரை ஒன்றை ஆற்றுகின்றார். அந்த உரையினுடைய தலைப்பு, வரலாறு என்னை விடுதலை செய்யும் என்பதுதான். அந்த உரையிலே, கிட்டத்தட்ட 670 தடவை அவர் மக்கள் என்ற ஒரே சொல்லையே உச்சரிக்கின்றார். அதுபோலத்தான் நம்முடைய தளபதியும் அனுதினமும் காலை எழுந்தது முதல் இரவு வரை நினைக்கின்ற, உச்சரிக்கின்ற ஒரே சொல் மக்கள், மக்கள் என்பதுதான். அதனை நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும். இன்னொன்றை நான் உங்களுக்கு இங்கே நினைவூட்டுகின்றேன். உங்களுடைய வாழ்க்கையிலே நீங்கள் மறக்கமுடியாத பொக்கிஷம் என்று கருதுவது எது என்று இன்னொரு கேள்வி கேட்கப்படுகின்றது. நாமெல்லாம் பொக்கிஷமாக எதனைச் சொல்லுவோம். நம்முடைய பட்டுப் புடவையைச் சொல்லலாம். இல்லையென்றால் நம்முடைய மகன், மகள் வேலை செய்து முதன்முதலாக எடுத்து வந்த பரிசுப்பொருளைச் சொல்லுவோம். தளபதி அவர்கள் சொல்லுகின்றார், மிசா காலத்திலே எனக்கு உற்சாக டானிக்காக அமைந்த கடிதங்களைத்தான் நான் என்னுடைய வாழ்க்கையிலே பொக்கிஷமாகக் கருதுகிறேன் என்று சொல்லுகின்றார். சொல்லிவிட்டு, கடிதங்களுடைய நிறம் மாறியிருக்கலாம், காகிதத்தினடைய நிறம் மாறியிருக்கலாம், ஆனால் அவை எனக்குத்தந்த வலிமையும், உற்சாகமும், போராட்ட குணமும் என்றும் மாறவில்லை என்று சொல்லுகின்றார். இன்னொரு கேள்வி, உங்களுக்குக் கோபம் வருமா? வந்தால் யார் மீது நீங்கள் கோபப்படுவீர்கள் என்று. நாமெல்லாம் சொல்வோம், கணவன் மீது, மாமியார் மீது, சொல் பேச்சு கேட்காத மருமகள் மீது கோபம் வரும் என்று சொல்லலாம். ஆனால் தளபதி சொல்கின்றார், நானும் ஒரு தனி மனிதன் தான். எனக்கும் கோபம் வரும். ஆனால் நான் நினைத்துக்கொள்வேன் தனி மனிதன் மீது கோபப்படுவதைவிட சமூக நீதி என்ற ஒன்றிற்காக, அதை சரியாக அமுல்படுத்தாத அரசியல்வாதிகள் மீது நீங்கள் கோபப்படுங்கள். அப்பொழுதுதான் வாழ்க்கையிலே முன்னேற்றமும் மிகப் பெரிய மாற்றமும் வரும் என்று சொல்கின்றார். உங்களுக்கு தூக்கத்திலே கனவு வருமா என்று அவரிடம் கேட்கப்படுகிறது. உறக்கத்திலே வருகின்ற கனவுகள் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது என்று சொல்லிவிட்டு அவர் சொல்லுகின்றார், ஆனால் ஒரு கனவு எனக்கு உண்டு. அதாவது கிராமப்புறங்களைப் போல போக்குவரத்து நெரிசல் இல்லாத சென்னையை உருவாக்க வேண்டும் என்பதும், சென்னையைப் போல அனைத்து நவீன வசதிகளோடு கிராமப்புறங்களை உருவாக்கவேண்டும் என்பதும் தான் என்னுடைய கனவு என்று சொல்லுகின்றார். பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்றைக்கு ஒரு படி அரிசி ஒரு ரூபாய்க்கு போடுவோம் என்று கனவு கண்டார், அதை இன்றைக்கு நாங்கள் நிறைவேற்றியிருக்கின்றோம். அதோடு மட்டுமல்ல, பேரறிஞர் அண்ணாவினுடைய இன்னொரு கனவு, கூவம் நதியை நாங்கள் தூய்மைப்படுத்துவோம் என்பதுதான். இன்றைக்கு அந்தத் திட்டத்தை கையிலே எடுத்திருக்கிறார் நம்முடைய தளபதி அவர்கள். சிங்கப்பூருக்கு சென்று, அங்கு இருக்கின்ற அந்த நதி எப்படி தூய்மையாக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து வந்து, சென்னை நகரை தூய்மைப்படுத்துகின்ற அந்தப் பணியையும் முடுக்கிவிட்டிருக்கிறார். எத்தனையோ சொல்லலாம். உங்களுடைய அண்ணா நகர் பகுதியிலேகூட அண்ணா நகர் டவர் பார்க் இப்பொழுது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, கூடிய விரையிலேயே பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்படுவதாக இருக்கின்றது. எழுதிக்கொண்டே போனால், பக்கங்களில் அடக்கிவிட முடியாத சாதனைகளை யாருக்காகச் செய்கின்றார்? இளைஞர்களுக்காக, மக்களுக்காக, மாணவர்களுக்காக. ஏன் இளைஞர்கள்மீது அவருக்குக் கரிசனம் இருக்கிறது என்று சொன்னால், உங்கள் அனைவருக்கும் இயேசு பெருமானை மிக நன்றாகத் தெரியும், இயேசுவினுடைய ஓவியத்தைத் தீட்டுவதற்காக அவருடைய மதத்தைச் சேர்ந்த ... யூதாசாக மாடலாக உட்காரும் அளவிற்கு அந்தச் சமுதாயம் அவனை மாற்றியிருக்கின்றது. ஒரு இளைஞன் மாறுவதற்கு அவனுக்கு சரியான சமூகச் சூழல் அமைப்பு இல்லை என்கின்ற அந்த உண்மையை உணர்ந்துதான் தன்னுடைய கவனத்தில் எப்பொழுதும் மாணவ மாணவியருக்கும், இளைஞர்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்திருக்கின்ற ஒரு இளைய தலைவராக நம்முடைய தளபதியாக இருக்கின்றார். உதாரணத்திற்கு, இந்த அம்மையார் சென்னை ராணி மேரி கல்லூரியை இடிப்பதற்காக ஒரு அறிவிப்பு செய்தபோது, மாணவியர் அனைவரும் நடத்திய போராட்டத்திற்கு முதன்முதல் ஓடோடிச் சென்று ஆதரவுக்கரம் நீட்டியவர் நம்முடைய தளபதி மட்டுமே. அதற்காக அவர் மீது காவல்துறையிலே வழக்கொன்றும் பதியப்பட்டது. அதுமட்டுமல்ல, தன்னுடைய வாழ்க்கையிலே 19 தடவை சிறைச்சாலை சென்றிருக்கின்றார் தளபதி அவர்கள். அப்படி இளைஞர்கள் மீது கரிசனம் கொண்டிருக்கிற தளபதிக்கு, கீதா என்கின்ற ஒரு மாணவி, ஈரோடு மாவட்டம் சென்னிமலையிலிருந்து ஒரு கடிதம் எழுதியிருக்கின்றார். அய்யா, நான் கல்லூரியிலே இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய கல்லூரியிலேயே நான் முதலாவது வகுப்பிலே தேறியிருக்கிறேன். ஆனால், இரண்டாம் ஆண்டு கல்லூரிக் கட்டணம் 25000 ரூபாய் கட்டுவதற்கு எனக்குப் பணம் இல்லை. என்னுடைய சின்னம்மாவினுடைய தாலியை அடகு வைத்து அந்தப் பணத்தை நான் செலுத்தியிருக்கிறேன். நீங்கள் எனக்கு உதவவேண்டும் என்று கடிதம் எழுதிகின்றார். கருணைக் கண் கொண்டு அந்தக் கடிதத்தை பரிசீலித்த தளபதி அந்தச் செலவை இளைஞர் அணியே ஏற்கும் என்று அறிவிக்கின்றார். கல்லூரிக் கட்டணத்தை இளைஞர் அணி கொடுக்கின்றது. அதுமட்டுமல்ல, அடகு வைக்கப்பட்ட சின்னம்மாவினுடைய தாலியையும் மீட்டெடுத்துக் கொடுக்கின்றார். ஒரு மூலையிலிருந்து ஒரு மாணவி எழுதிய கடிதத்தை ஒரு துணை முதலமைச்சராக இருக்கின்றவர் பொறுமையோடு பார்த்து, அதற்குரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றால், எவ்வளவு ஈரமான இதயம் அந்த மனிதருக்குள் இருக்கிறது என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். அம்மையார் இன்றைக்கு ஊர் ஊராகச் சென்று போராட்டம் நடத்துகின்றாரே, இல்லாத ஒன்றுக்குத்தான் நாம் போராடுவோம் என்று சொல்லுவார்கள். ஒரு முறை நெப்போலியனுடைய தளபதி, நே என்பவனுக்கும் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த இன்னொரு தளபதிக்கும் சண்டை நடக்கின்றது. நெப்போலியனுடைய தளபதி நே என்பவன் சுவிட்சர்லாந்து நாட்டுத் தளபதியிடம் சொல்லுகின்றான், நீங்கள் பணத்திற்காகப் போராடுகின்றீர்கள். நாங்கள் எங்களுடைய சுதந்திரம், உயர் ஒழுக்க நெறி முதலியவற்றிற்காகப் போராடுகிறோம் என்று சொல்லுகின்றான். கேட்டுக்கொண்டிருந்த அந்தத் தளபதி சொன்னானாம், ஆமாம், யார் யாருக்கு எது இல்லையோ, அதற்காகத்தானே போராடுவீர்கள் என்று சொன்னாராம். அம்மையாரும் இன்றைக்கு அப்படித்தான் என்று நினைக்கின்றேன். அவர் சொல்லுகின்றார், தமிழகத்தில் அவர் ஆட்சி செய்தால், அதாவது 2011லே அவர் ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டே இருக்காதாம். இங்கே பேரறிஞர் அண்ணா சொன்ன ஒரு சிறிய கதை எனக்கு நினைவுக்கு வருகின்றது. மயிலாப்பூர் பஸ் ஸ்டான்டிலே ஒரு பிச்சைக்காரன் இருந்தானாம். அவன் அந்த பஸ் ஸ்டான்டிலேயே மிகவும் வசதியாகத் தென்பட்ட ஒரு உல்லாசப் பேர்வழியிடம் சென்று அய்யா காலணா போடுங்கள் என்று கேட்டானாம். அந்த உல்லாசப் பேர்வழிக்கு ரொம்பக் கோபமாம். என்னுடைய அந்தஸ்து என்ன? என்னைப் பார்த்தால் எப்படி தெரிகிறது? காலணாவைக் கேட்கின்றாயே நீ என்று சத்தம் போட்டானாம். உடனே பிச்சைக்காரன் பதறிப்போய் தெரியாமல் கேட்டுவிட்டேன் அய்யா, ஒரு பத்து ரூபாய் கொடுங்கள் என்று சொன்னானாம். அந்த உல்லாசப் பேர்வழி சொன்னானாம், அதை வாங்குவதற்காகத்தான் நான் இப்பொழுது அசோக் நகருக்கு செல்வதற்காக இந்த பஸ் ஸ்டான்டிற்கு வந்திருக்கிறேன் என்று சொன்னாராம். அப்படியிருக்கிறது அம்மையாருடைய இந்தப் போராட்டம் என்பது. அவர் ஒருவேளை வந்துவிட்டால் மின்வெட்டு இருக்காது என்று சொல்கின்றாரே, அவரைப் பார்த்து மிக முக்கியமான ஒரு கேள்வியை நான் முன்வைக்க விரும்புகின்றேன். மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்காக நீங்கள் ஆட்சியிலே இருந்தபோது என்ன திட்டத்தை முன்னெடுத்தீர்கள்? எங்களுடைய தலைவர் கலைஞர் அவர்கள் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்காக அணைக்கட்டுகள் உருவாக்குகின்றாரோ, எப்படி வறண்ட பிரதேசங்களுக்கு திருப்பி அனுப்புகின்றாரோ இன்றளவும் இவ்வளவு பற்றாக்குறையில் எப்படி விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்குகின்றாரோ, இவையெல்லாம் அவர் பன்னெடுங்காலத்திற்கு முன்பாகவே தீட்டிய திட்டங்கள். நீங்கள் இப்போது ஊருக்கு ஊர் போய் ஒப்பாரி வைக்கின்றீர்களே அதை நிவர்த்தி செய்வதற்கு என்ன திட்டத்தை உங்களுடைய காலத்தில் நீங்கள் முன்னெடுத்தீர்கள் என்று நான் கேட்கின்றேன். ஒரு விஷயம் அவருக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், சிக்கன நடவடிக்கை என்று சொல்லி, மக்கள் நலப் பணியாளர்களை, சாலைப் பணியாளர்களை அவர் லட்சக்கணக்கிலே டிஸ்மிஸ் செய்தார். அதுதான் அவர் செய்த ஒரே நடவடிக்கை. புதிய வீராணம் திட்டம் என்ற ஒன்றை கொண்டுவந்தார். நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்களாலே அந்தத் திட்டம் முன்மொழியப்பட்டு, தலைவர் கலைஞர் அவர்களால் அதில் இருக்கிற நிறைய நடைமுறைச் சிக்கல்களைக் கருதி அது ஒத்திப்போடப்பட்ட திட்டம். அந்தத் திட்டத்திற்காக வீராணத்தில் ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லாத சூழ்நிலையில் அவர் என்ன செய்தார் தெரியுமா? 45 ஆழ்துளைக் கிணறுகளை அவர் அவசரமாகத் தோண்டினாராம். தாய்மார்களே, இரண்டு வித்துவான்கள் இருக்கிறார்கள். ஒரு வித்துவான் மேடையிலே போய் பாடுகின்றார். என்ன பாடுகின்றார் தெரியுமா? தூ, தூ, போ நாயே. எதிரே கேட்டுக்கொண்டு இருப்பவர்களுக்கு எப்படி இருக்கும்? இவர் மீது கல்லை எடுத்து நாம் எறியலாம் என்று நினைக்கும்போது, இன்னொரு வித்துவான் வருகின்றார். அவர் அடுத்த வரியை முதலில் பாடுகின்றார். அன்போடு ஆதி நாள் சந்தரருக்கு தூது போனாயே என்று பாடுகின்றார். முதலிலே பாடிய வித்துவான், ரொம்ப அருமையாக ராகத்தை விஸ்தாரமாகப் பாடுவதாக நினைத்துக்கொண்டு தூது போனாயே என்பதை, தூ, தூ, போ, நாயே என்று பாடுகின்றார். அடுத்து வந்த வித்துவான், இசையினுடைய நுட்பத்தை அந்த அருமையை அறிந்தவர். அவர் அழகாக, ஆதி நாளிலே சுந்தரருக்கு நீ தூது போனாயே என்று அருமையாகப் பாடுகின்றார். இசையின் நுட்பத்தை மட்டுமல்ல, ஆட்சிக் கலையின் நுட்பத்தையும் அறிந்தவர்தான் எங்களுடைய ஒப்பற்ற தலைவர் கலைஞர். அவரைப் பார்த்து இத்தனை ஓட்டைகளை வைத்துக்கொண்டு, ஒரு சொட்டு நீர் கூட இல்லாத வீராணம் திட்டத்திற்காக, 45 ஆழ்குழாய் கிணறுகளைத் தோண்டி பணத்தை வீணடித்துவிட்ட அந்த அம்மையாரைப் பார்த்து அவருடைய ஆட்சியிலே மத்திய அரசின் அக்கவுன்டன்ட் ஜெனரலாக ஒரு அதிகாரி இருந்தார். அவருடைய பெயர் தீதன். அவர் சொல்லுகின்றார். அந்த அம்மையாருடைய ஆட்சிக் காலத்திலே நிதியிழப்பு மட்டும் 11000 கோடி என்று சொல்லுகின்றார். தாய்மார்களே நீங்கள் மறக்கக்கூடாது. தூக்கக் கலக்கத்திலே உங்களுக்கு எந்தவிதமான நியாபக மறதியும் வரக்கூடாது என்று மீண்டும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் மின்சாரத்தை பாதுகாப்பதற்காக போதிய அளவு நிதியை ஒதுக்கவில்லை என்று சொல்கின்ற அம்மையார் 11000 கோடி ரூபாய் தன்னுடைய ஆட்சிக் காலத்திலே நிதிப் பற்றாக்குறையாக வைத்துச் சென்றார் என்று மத்திய அரசின் ஆடிட்டர் ஜெனரல் சொல்லியிருக்கிறார். இத்தனையும் வைத்துவிட்டு, எங்களைப் பார்த்து குறை சொல்லுகின்ற அவரை நான், நம்முடைய கழக ஆட்சி இதற்காக என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 50 ரூபாய்க்கு 10 மளிகைப் பொருட்கள் கொடுக்கப்பட்டு வந்தன. அதனுடைய விலை இப்பொழுது 25 ரூபாயாக உணவு அமைச்சர் குறைத்திருக்கிறார். அதேபோல, பருப்பு, பாமாயில் இவைகளுக்கான மதிப்புக் கூட்டு வரியை தலைவர் கலைஞர் அவர்கள் ரத்து செய்திருக்கின்றார். மின்சார உற்பத்திக்காக அவர் எடுத்திருக்கிற நடவடிக்கைகள் என்ன தெரியுமா? 2010-11ம் ஆண்டில் 1400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. 2011-12ல் 3316 மெகாவாட் மின்சாரம், 2012-13ம் ஆண்டு 1860 மெகாவாட் மின்சாரம், 2013-14ம் ஆண்டில் 1222 மெகாவாட் மின்சாரம். ஆக மொத்தம் 2013ம் ஆண்டு வரை 7796 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் நான் சொல்ல வருகின்ற செய்தி என்னவென்றால், 2014ம் ஆண்டு வரை மட்டுமல்ல, இனி என்றென்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகம்தான் தமிழகத்திலே ஆட்சியமைக்கும் என்பதன் முன்னோடியாகவே அத்தனை தொலைநோக்குப் பார்வையோடு இத்தனை திட்டங்களை தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்திருக்கின்றார். இதுதவிர, செய்யூர் என்ற இடத்தில் 4000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அதற்கான வேலையையும் தொடங்கி இருக்கின்றார். இன்னொன்றையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்திந்திய அட்ரஸ் இல்லாத கட்சியைச் சார்ந்தவர்களும் பயனடையும் விதத்திலே இருக்கின்றது என்று எனக்கு முன்பாகப் பேசியவர்கள் சொன்னார்கள். மாற்றாருடைய துன்பத்திலும் பங்குகொள்கின்ற பரந்த மனப்பான்மை உள்ளவர்தான் பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும், நம்முடைய தளபதி அவர்களும். நம்முடைய தளபதி அவர்கள் சட்டப்பேரவைக் கட்டிடத் திறப்பு விழாவிற்கு இந்த அம்மையாருக்கு முறையாக அழைப்பிதழை அனுப்பிவைத்தார். நாகரிகமும், மனித உறவுகளிலும் நம்பிக்கை இருப்பவர் நம்முடைய தளபதி அவர்கள். ஆனால், அகம்பாவத்தின் உச்சியிலே இருக்கின்ற அவர் உங்களையெல்லாம், குறிப்பாக, தமிழ்நாட்டு மக்களையெல்லாம் ஏமாளிகளாக நினைத்துக்கொண்டு உங்களிடம் தினமும் ஒரு புழுகு மூட்டையை அவிழ்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு தயவு செய்து நினைவூட்டுங்கள், நீங்கள் பெற்றிருக்கின்ற அத்தனை சலுகைகளுக்கும், உரிமைகளுக்கும் ஒரே சொந்தக்காரர் நம்முடைய தலைவர் கலைஞர் மட்டுமே. நம்முடைய தளபதி மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் மட்டுமே. உங்களுக்கு இன்றைக்கு சுய உதவிக் குழு மூலமாக உங்களுடைய கால்களிலே நிற்கின்ற அந்த அற்புதமான நிலைமைக்குச் சொந்தக்காரர் நம்முடைய தளபதி என்பதை நீங்கள் நினைவுகொள்ளுங்கள். இறுதியாக ஒன்றைச் சொல்லி நான் என்னுடைய உரையை நிறைவு செய்யலாம் என்று நினைக்கின்றேன். இந்தக் குறை, அந்தக் குறை இருக்கிறது என்று சுட்டிக்காட்டி நம்முடைய கழகத்தின் மீது பழி சொல்கின்ற இந்த அம்மையார் மட்டுமல்ல, நேற்று முளைத்த மழையிலே காளான்கள் போல இன்றைக்கு ஆட்சிக்கு வருவோம், நாளைய முதல்வர் நாங்கள்தான் என்று கனவு கண்டுகொண்டிருக்கிற கதாநாயகருக்கும் சேர்த்து சொல்லிக்கொள்கிறேன், எங்களுடைய இயக்கம் எப்படிப்பட்ட இயக்கம் தெரியுமா? கல்லடியும், சொல்லடியும் பட்ட காலத்திலே கரையாத இயக்கம், பணக்காரர்கள் செல்வாக்கு எனும் ஈட்டியை எறியப்பட்ட காலத்திலே எரியாத இயக்கம், மடாதிபதியர்களின், ஜீயர்களின் எதிர்ப்பால் மாண்டுபோகாத இயக்கம், பட்டம் பதவி இவை மட்டுமே தேவை என்போருடைய பிடியிலிருந்து தப்பி வந்த இயக்கம், சொந்த நலமும், சொந்த வாழ்வும், சய நலமுமே பெரிது என்போரின் பாசக் கயிற்றிலிருந்து மீண்டு வந்த இயக்கம், கொள்கைக்காக வாழ்ந்திருந்த ஆரூர் மணியை, திருவாரூர் நடராசனை, அழகிரிசாமியை அணைத்திருந்த இயக்கம். மொழிக்காக உயிர் துறந்த தாளமுத்து நடராசனைக் கொண்டிருந்த இயக்கம், கொள்கைக்காக மரத்திலே பிணமாக ஊஞ்சலாட்டப்பட்ட உடையார்பாளையம் வேலாயுதங்களை உள்ளடக்கிய இயக்கம், மதுரை மாநாட்டுத் தீயைக் கண்டு மனம் கலங்காத இயக்கம், குடந்தை தெருவினிலே வந்த குருதி வெள்ளத்தைக் கண்டு குலை பதறாத இயக்கம், இராம காவியம் இழுக்குடையது என்று பாரதியார்களை, சேதுப் பிள்ளைகளை சொற்போரிலே வெற்றி கண்ட அந்த சொற்போர் மறவர்களைக் கொண்டிருந்த இயக்கம் நம்முடைய இயக்கம் என்று சொல்லி, இன்னொன்றையும் சொல்லுகின்றேன், ஆறிலும் சாவு தான் நூறிலும் சாவுதான் ஆனது ஆகட்டுமே என்று பாடி வருகின்ற ஆயிரமாயிரம் பட்டாளத் தம்பிகளை, இளைஞரணி உறுப்பினர்களாகக் கொண்டிருக்கிற இயக்கம். அந்த இளைஞர்களுடைய நெஞ்சத்து உறுதியை தட்டிப்பார்த்து, இது உறுதியானதுதானா என்று உணர்ந்துகொண்டு, ஒரு அறப்போருக்கு என்றும் தயாராக இருக்கும் இயக்கம் இது என்று சொல்லி, இந்த அருமையான வாய்ப்பின் மூலம் உங்களையெல்லாம் சந்திக்க நேர்ந்த இந்த மேடைக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து விடை பெறுகின்றேன். * * * * *
No comment