தி.மு.க. மகளிர் அணி மாநில மாநாடு கடலூர் - ஜூன் 14, 15 - 2008 கடலூர் தி.மு.க. மகளிர் அணி மாநாட்டில், 15.06.2008 அன்று, பேரறிஞர் அண்ணா அவர்களது படத்தை திறந்து வைத்து, தமிழச்சி தங்கபாண்டியன் ஆற்றிய உரை மண் திணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்பு வதை வரும் வளியும் வளித்தலை இய தீயும் தீ முரணிய நீரும் என்று ஆங்கு அய்ம் பெரும் பூதத்து இயற்கை போல எந்நாளும் வாழ்கின்ற எங்களின் ஒப்பற்ற ஒரே தமிழினத் தலைவர், "தொட்டால் சிந்தனை சுரக்கும் ஈரோட்டுப் பட்டறை தந்த கட்டிப் பிளாட்டினம்! பகுத்தறிவு என்னும் காஞ்சிப் பாசறை விட்டே பகைவரை விரட்டிட துள்ளி எழுந்தவேல்! தமிழாய்ந்த எம் தனிப்பெரும் தலைவா... நீங்கள் அன்று தமிழுக்காகத் தலைவைத்த தண்டவாளத்தில்தான் இன்று வரை திராவிட இரயில் சீராக ஓடிக் கொண்டிருக்கிறது’’ உயிர்மூச்சே! உங்களுக்கு என் முதல் வணக்கம். "காலத்தால் மூத்த மொழி பெற்ற பிள்ளை ஞாலத்தைத் தொழில் கேட்க வைத்திட்ட கோலச் சொல் அறிஞர்க்கு வாய்த்த தம்பி" கழகத்தின் பொதுச்செயலாளர், இனமானப் பேராசிரியர் அவர்களுக்கு மரியாதையுடன், "ஓர் இலட்சிய வீரனின் ரத்தம், உலகப்புகழ் பெற்ற எழுத்தாளனின் எழுத்தைவிட வன்மையானது’’ என்பது போல், இலட்சிய உத்வேகத்துடன், "நீங்கள் விரும்புகின்ற உலகத்தின் எந்தப் பகுதிக்கும் எங்களை அழைத்துச் செல்லுங்கள்’’ என்று Alexander பின்னே அணிதிரண்ட மாசிடேனிய வீரர்கள் போல, அணிவகுக்கின்ற நம் கழகத்து இளைஞர்களை விடிவெள்ளியாய் வழி நடத்துகின்ற தளபதி, `இலியாட்’ எனும் பெருங்காப்பியத் தலைவன் Achilessற்கு ஒப்பாக, தமிழகத்தை வழிநடத்துகின்ற நம் தளபதி, மரியாதைக்குரிய மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் அண்ணன் தளபதி அவர்களையும், வீரன் பட்டுக்கோட்டை அழகிரியின் பெயர் தாங்கியவர், `கல்லடியா கவலைப்படமாட்டார்! சொல்லடியா சோர்வடையமாட்டார்! பகைவரின் படையா பயப்படமாட்டார்! கழகமே மூச்சு, மனித நேய வீச்சு, பாசப்பிணைப்பு, பெரு நட்பின் இணைப்பினால் எங்களையெல்லாம் வழிநடத்தி, எங்கள் குடும்பத்தின் `துருவ நட்சத்திரமாய்’ விளங்குகின்ற ``தென்னகத்துத் தீம்புனல்’’ பாசமிகு அண்ணன் அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களையும், ``இருந்தமிழே உன்னால் இருந்தேன், இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்’’ - என்னும் தமிழ்மொழியின் கனிக் கவிஞர், தமிழ்நாட்டுப் பெண்கள் எல்லாம் தங்கள் இதய வங்கிகளில் சேமித்து வைக்கின்ற பகுத்தறிவு மூலதனம், தன் அதிகாரத்தை இரக்கத்தைத் தவிர வேறெதற்கும் செலவழிக்காத - மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழியையும் என் நினைவில் நிறுத்துகின்றேன். 50 ஆண்டுகள் கழகப் பணியாற்றி, தன் இறுதிநாள்வரை நம் தலைவரையே நேசித்து, கழகத்தையே சுவாசித்து மறைந்த என் தந்தை தங்கபாண்டியனை, என் நெஞ்சில் நிறுத்துகின்றேன். வெள்ளம் போல் தமிழர் கூட்டம், வீரங்கொள் கூட்டம், அன்னார் உள்ளத்தால் ஒருவரே மற்று, உடலினால் பலராய்க் காண்பார் - எனும் புரட்சிக் கவிஞரின் வரிகளுக்கு ஏற்ப இங்கு கூடி இருக்கின்ற கழகத் தோழர்களுக்கும், ``வன்மை, உயர்வு, மாந்தர் நலமெல்லாம் பெண்மையினால் உண்டு’’ என்று பெருமிதத்தோடு சேர்ந்திருக்கின்ற தோழிகளுக்கும், மேடையில் இருக்கின்ற மூத்த முன்னோடிகளுக்கும் என் வணக்கம். எழுதினார் நம் தலைவர் - ``ஏ, வீரப் புதல்வா! தலை நிமிர்ந்து பார் - மேனாடுகளை! ஆங்கு தழைத்தோங்கி நிற்கிறது பெண்களுரிமை! அதனால் அவை அடைகின்றன மேன்மை! `மங்கையர்தான்’ நம் நாட்டின் பொக்கிஷம் என்பதை மறவாதே’’, என்று `இளமைப்பலி’ என்கின்ற தன் முதல் கட்டுரையிலேயே, அன்றே பெண்கள் உரிமை குறித்ததொரு நற்கனவு கண்ட நம் தலைவரது வழிகாட்டுதலுடன்; ‘அரசியல் மாநாடு’ ‘சமுதாய சீர்திருத்த மாநாடு’ என இரண்டு நாட்கள் நடக்கின்ற நமது கழகத்தின் மகளிர் அணி மாநாட்டில், நம் தலைவரை ஈன்றெடுத்த அருஞ்செல்வம் `அஞ்சுகத்தாய் மேடை’, பெருமதிப்பிற்குரிய ‘ராணி அண்ணா’ அரங்கத்தில், கி.பி. 642 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த யுவான் சுவாங் என்ற சீன யாத்திரிகனால், "இங்குள்ள ஜனங்கள் வீரமிக்கவர்களாகவும், உண்மையைக் கண்டுபிடிப்பதில் தீவிரப் பற்று உடையவர்களாகவும் இருக்கிறார்கள்" என்று பெருமையோடு குறிப்பிடப்பட்ட காஞ்சிபுரத்திலே பிறந்து, நமது கழகத்தைத் தோற்றுவித்த, ‘தென்னகத் திருப்பம், திராவிடத் துந்துபி, தென்புல பேரிகை, தனியொரு தலைமுறை, சமத்துவச் சங்கொலி, உயர்த்திய போர்க்கொடி,’ பேரறிஞர் அண்ணாவினது திருவுருவப்படத்தினை, `தனிப் பெரும் முத்திரையாக தாளாத பெருமையாக’ அவருடைய நூற்றாண்டு கொண்டாடப்படுகின்ற இன்றைய தினம், திறந்து வைத்து, உரையாற்றிடக் கிடைத்த பேற்றிற்கு, ‘நெல்லும் உயிரன்று, நீரும் உயிரன்று மன்னன் உயிர்த்ததே மலர் தலை உலகம்’ என எம் மன்னனுக்கு, ஓப்பற்ற ஒரே தமிழினத் தலைவருக்கு நன்றி கூறுகின்றேன். புரட்சிக் கவிஞரால், "தமிழுக்குத் தொண்டு செய்து சிறைக்கு சென்றோன். தலைசிறந்த பேச்சு வல்லோன், தமிழன், வீரன், தமர் என்றும் தான் என்றும் நினைப்பதன்றி தமிழ்நாட்டின் நலத்தினுக்கே உயிர் உடல்கள் அமைக்க என இரவு பகல் உழைக்கும் மேலோன்’’. எனப் புகழப்பட்ட நம் பேரறிஞர், `திராவிடத்தின் தூண்டா மணி விளக்கு’. ``பெட்டிச் சாவியை, உச்சி முகர்ந்து உனக்களிக்கிறேன்’’, எனத் தந்தை பெரியாரால் புகழப்பட்ட பேரறிஞர் `பல்லவநாடு தந்த பகுத்தறிவுச் சிங்கம்’. சென்னை மாநகராட்சித் தேர்தலில் கழகம் பெரும்பான்மை பெற்றதற்கு "நான் இதுநாள் வரை என் மனைவிக்குக்கூட ஒரு மோதிரம் வாங்கித் தந்ததில்லை. ஆனால், தம்பிக்கு நானே கடைக்குச் சென்று மோதிரம் வாங்கினேன்" எனச் சொல்லி, அன்று அணிவிக்கப்பட்ட கணையாழியை மட்டுமல்ல, ‘கட்டை விரல் வேண்டுமென்று கேட்டால் ஏன் என்று கேட்காமல் உடனே வெட்டித் தரக்கூடியவர் என் தம்பி’ என்ற நம்பிக்கை இலச்சினையையும் பெற்று, இன்று கழகத்தைக் கட்டிக் காக்கின்ற நம் தலைவர் அவர்களால், "பூவிதழின் மென்மையிலும் மென்மையான புனித உள்ளம் - அன்பு உள்ளம் - விழி மலர்கள் வேலாகும் - வாளாகும் தீங்கொன்று தமிழ்த்தாய்க்கு வருகுதென்றால் கால் மலர்கள் வாடிடினும் - அவர் கடும் பயணம் நிற்காது! கைமலர்கள் பிணைத்து நிற்கும், தம்பியரை, கழகத்தை! ஆடி வரும் தென்றல் நாடி வரும் பூ முடியே! புகழ் முடியே! உமைத் தேடி வரும் வாழ்த்துக் குவியலிலே தினம் பாடிவரும் வண்டாக நான் பறப்பேன்... உனைக் காக்க எனை துறப்பேன்’’ என்று புகழப்பட்ட "Dravidian Demosthenis", "முனிவிலன், அயர்விலன், வஞ்சினமும் இலன்" என்று நம் இனமானப் பேராசிரியரால் போற்றப்பட்ட "காஞ்சிபுரம் நேரு". காரைக்குடி, கானாடுகாத்தானில், செட்டி நாட்டரசர், செல்வந்தர் பலர் அவருடன் விருந்துண்ட பின்பு அளவளாவக் காத்திருக்கையில், அந்தப் பகுதியில் சுயமரியாதை இயக்கக் காலத்தில் அறிவுப் பணியாற்றிய அம்மையார் வை.சு.மஞ்சுளா அவர்களது இல்லம் எங்கே எனக் கேட்டறிந்து, அவர்களைச் சென்று சந்தித்ததன் மூலம், "பெண்களுக்கு எங்கே மரியாதை தரப்படுகிறதோ அங்கே தேவதைகள் வசிக்கிறார்கள்’’ என்று உலகிற்கு உணர்த்திய, தமிழ்நாட்டு `ஈமென் டிவெல்ரா’. "அர்னால்டின் ஒவியங்கள் வரையப்பட்ட பின் ஐரோப்பாவின் மலைக் காட்சிகள் மேலும் அழகு பெற்றுத் திகழ்கின்றன" என கார்க்கி சொன்னது போல, பெரியாரும், பேரறிஞரும், இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிற வரலாறாய் நம் தலைவரும், வந்த பின்பே நம் திராவிடத் தென் தமிழ்நாட்டின் வரைபடம் திருத்தமுறத் தெரிந்தது உலகிற்கு. "யார் யார் சனாதனக் கோட்பாடுகளைத் தகர்த்தெறிய வேண்டுமென்று கருதுகிறார்களோ, யார், யார் மக்கள் உள்ளத்தில் படிந்துள்ள மாசுகளைத் துடைத்துச் சீர்திருத்த வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களெல்லாம் திராவிடர்கள்" என்று அறிவித்த பேரறிஞர் அண்ணா, இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடந்து, எகிப்திலே அடக்கம் செய்யப்பட்ட மாவீரன் அலெக்ஸாண்டரின் இறுதி ஊர்வலத்திற்கு இணையாக இலட்சோப இலட்சம் மக்களால் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்ட புகழுக்கு உரியவர். "ஒவ்வொரு சொல்லுக்கும் சிந்தனைக்கும் பின்னே ஒரு வர்க்கத்தின் முத்திரை இருக்கிறது. மார்க்சியத்தின் வீரியம் லெனினிடத்தில் இருக்கிறது" என்று நம்பிய பேரறிஞர், ஆங்கிலப் பேச்சில் "ஓராயிரம் மேடை வீரர்’’ என்று புகழப்பட்டவர். "ஜனநாயகம் என்பது ஒரு வாழ்க்கை முறையானால், அது அறிவும், இதயமும், இணைந்ததாக இருந்தாலே மனிதனின் முழு வாழ்விற்கும், முழு வளர்ச்சிக்கும் அது நிலைக்களனாக அமையும்’’ என்கிற உறுதியுடனிருந்த பேரறிஞர் அண்ணா, யேல் பல்கலைக்கழகத்தின் Sub Fellowshhip என்ற அரிய விருதைப் பெற்ற முதல் அமெரிக்கர் அல்லாதவர். "ஒரு தேசத்தின் உயிர்மூச்சு அரசியல் விடுதலை" என்பதற்கு இணங்க சமுதாய மறுமலர்ச்சி இயக்கமாகத் தோன்றிய ஒன்றை, காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் இயக்கமாக மாற்றி, சம உடமைப் பொருளியல் சமுதாயம் உருவாக வேண்டும், அதுவே "இன்பத் திராவிடம்" எனக் கனவு கண்டவர். இனவழிச்சிந்தனை (Racial Outlook), நிலவழிச்சிந்தனை (Geographical outlook), அரசியல், பொருளாதார வழிச்சிந்தனை (Politico – Economic outlook) ஆகியவையே அவர் தம் வரலாற்றுத் தடம். • தமிழ்நாடு பெயர் மாற்றம் • சுயமரியாதை திருமணங்களுக்குச் சட்ட வடிவம் கொடுத்தது • ஹிந்திக்கு இடமளிக்காத இருமொழிக் கொள்கை முதலியன முத்தான அவரது சாதனைச் செப்பேடுகள். பேரறிஞர் மறைந்துவிட்டாலும், நிறைந்து இருக்கிறார், நம் தலைவரது உருவில் இன்று. பெரியாரும், பேரறிஞரும் பிசைந்து செய்த பெரு நெருப்பு நம் தலைவர். பெருமையாய் நமது தலைவர் குறித்து இனமானப் பேராசிரியர் குறிப்பிடுகிறார், "தந்தை பெரியாரை போல உறுதி, அழுத்தம்! பேரறிஞர் அண்ணாவைப் போல எடுத்துச் சொல்வதிலே ஒரு மென்மை, ஒரு நயம்; தந்தை பெரியாரைப் போல கொள்கைக்காக வாதிடுகிற மனப்பான்மை; அறிஞர் அண்ணாவைப் போல எதையும் ஏற்றுக் கொள்ளும்படியாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற நோக்கம்; தந்தை பெரியாரை போல நாள் முழுவதும் உழைக்கிற ஆர்வம்; பேரறிஞரைப் போல இரவெல்லாம் படித்து எழுத வேண்டும் என்ற அந்த நாட்டம்’’. கார்டினல் நியூமன் எனும் ஆங்கிலப் பேராசிரியர், ரோம் நாட்டுப் புகழ்மிக்க பேச்சாளராக சிசரோவைப் பற்றிக் குறிப்பிடும் போது, "லிவி, டாசிடெட், செனக்கா, பிளினி, குவின்டியலியன் போன்றவர்களின் எழுத்துக்களிலே லத்தின் மொழியைத்தான் காண்கிறேன். ஆனால், சிசரோவின் எழுத்துக்களில், பேச்சில் ரோம் நாட்டு மக்களையே காண்கிறேன்" என்று கூறியுள்ளார். இவர்கள் அனைவரும் உலக அரங்கில் சாதித்ததைத் தமிழகத்தில் சாதித்தது இரண்டு பேனாக்கள்; ஒன்று பேரறிஞருடையது, மற்றொன்று ஒப்பற்ற நம் தலைவரது தொய்வற்ற தமிழ்ப் ‘பேனா’. அவர் தம் எழுத்தில் நாம் உண்டது தமிழ், கண்டது தமிழ்நாட்டு மக்களை அல்லவா! பேரறிஞர் எழுதிய முதல் கட்டுரை ‘மகளிர் கோட்டம்’ - தமிழ் மருத்துவர் மாசிலாமணி நடத்திய ‘தமிழரசு’ என்னும் தன்மான இயக்க ஏட்டில் 1931ம் ஆண்டு வந்தது. ‘இளமைப் பலி’ எனும் நம் தலைவரது முதல் அச்சு வாகனம் ஏறிய கட்டுரை திராவிட நாடு இதழில் 26.04.1942இல் வெளிவந்தது. அறிவுமணம் கமழும் பெண்களது உரையாடல்களை தனது "அந்திக் கலம்பகம்" கட்டுரைகளில் வடித்தவர் பேரறிஞர். நம் தலைவரோ, "இங்கு ஏணை! அங்கு ஏரோப்ளேன்! இங்கு அரசமரம்! அங்கு ஆராய்ச்சிக்கூடம்! என்று இரஷ்ய நாட்டுப் பெண்கள் போல் நம் பெண்கள் முன்னேற வேண்டுமென "இங்கல்ல இரஷ்யாவில்" எனக் கட்டுரை தீட்டினார் - ‘உணர்ச்சி மாலை’ என்னும் தன் தொகுப்பில். ஷேக்ஸ்பியருக்குப் பிறகு தோன்றிய நாடக ஆசிரியர் பெர்னார்ட் ஷா. ஆனால், பெர்னாட்ஷாவிற்குப் பிறகு பெர்னாட்ஷாவின் காலத்திலேயே தலையெடுத்தவர் பேரறிஞர். நம் தலைவரும் பேரறிஞரின் காலத்திலேயே புரட்சிகர நாடகங்களை எழுதியவர், இயக்கியவர், நடித்தவர். பேரறிஞரது ‘அண்ணாமலைப் பல்கலைக் கழக உரை’, ‘யேல் பல்கலைக்கழக உரை’, ‘ஆற்றோரம்’ என்ற தலைப்பிலே ஆற்றிய உரை, ‘தலைப்பில்லை’ என்ற தலைப்பிலே ஆற்றிய உரை இவையெல்லாம் லிங்கனின் ‘கெட்டில்ஸ்பர்க் நகரப்’ பேச்சிற்கு இணையானவை. அவற்றிற்கு இணையாக இன்றுவரை "மேடையிலே வீசுகின்றது மெல்லிய பூங்காற்று". "ஒழுங்குபடுத்தப்பட்ட நன்மேடையை (பேச்சுமேடை) முதலில் கண்டது கிரீஸ்; அங்கிருந்து நன்மேடை ரோம், பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய இடங்களை நண்ணியது’’ என்பார்கள். இன்றைக்கு நன்மேடை இந்தியாவில் தமிழகத்தில் நண்ணியிருப்பது நம் தலைவரது தமிழ் மூச்சால்! "திருவரங்கப் பெருமாள் போல் படுத்திருந்த தமிழுணர்வைத் திசையெட்டும் சிலிர்த்தெழுந்து முழங்கச் செய்யும்" அவர்தம் தனித் தமிழ் மேடைப் பேச்சால்! மார்க்ஸ், எங்கெல்ஸின் கடிதங்களுக்கு இணையான தரம் ஜெர்மனியில் புகழ்பெற்ற கவிஞன் ஹென்றி ஹைனேவின் கவிதைகளில் கூட இல்லை என்று வரலாறு சொல்கிறது. அது போலவே, பேரறிஞர் ‘தம்பிக்கு எழுதிய‘ மடல்களும், இன்று வரை நமை எழுப்புகின்ற நம் தலைவரது ‘உடன் பிறப்பே’ எனும் முரசொலி மடல்களும் நமது சகாப்தத்தின் சங்க நாதமாகும். "பெண் இனம் முழுவதையும், அனைத்துத் தொழில் துறைகளிலும் மீண்டும் புகுத்துவதுதான் பெண்களின் விடுதலைக்குரிய முதல் நிபந்தனை" என்றார் எங்கெல்ஸ். "ஏழை அழுத கண்ணீர் மட்டுமல்ல, ஏந்திழையர் சிந்திடும் கண்ணீரும் நமது சமுதாயத்தை நாசமாக்கும் நச்சு நீராக மாறும்" என்கிறார் பேரறிஞர். "பெண்ணின் மொழியே ஆட்சி மொழி" எனப் பிரகடனம் செய்தார் தந்தை பெரியார். பெண்ணடிமையைக் களைந்தெறிந்து, பெண்ணின் பெருமையை உணர்த்துவதற்காக எழுந்ததே பெரியாரின் தன்மான இயக்கம் - பகுத்தறிவு இயக்கம். அதனை அடியொற்றி எழுந்த நமது தலைவரது ஆட்சியிலேதான், 1989ம் ஆண்டு பெண்களுக்குச் சொத்தில் சம உரிமையும், வேலை வாய்ப்புக்களில் 30 சதவிகிதம் வழங்கும் சட்டமும் கொண்டு வரப்பட்டது. 1996இல் நமது தலைவரது ஆட்சியிலேதான் உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதவிகிதமும் ஒதுக்கப்பட்டது. சென்னை, பெத்து நாயக்கன்பேட்டை, டி.டி.வி பள்ளியில் மகளிர் மன்றத் துவக்க விழாவிலே 1956 இல் கலந்து கொண்டு சிறப்பித்த பேரறிஞர் அண்ணா பேசுகிறார்: "நாம் சார்ந்துள்ள இயக்கம், மாதர் குலத்திற்கு உண்மையான விடுதலையும், உரிய பெருமையையும் தேடித் தரும் இயக்கமாகும். இந்த மகளிர் மன்றம் செய்ய வேண்டுவதென்ன? அறிவைப் பயன்படுத்துபவர்களாக, உரிமை உணர்ச்சி கொண்டவர்களாக, நாட்டை மீட்கும் விடுதலை வேட்கை கொண்டவர்களாக நமது தாய்மார்களைஆக்குவதுதான்." 1956 இல் பேரறிஞர் வாழ்த்துடன் விழாக் கண்ட அந்த மகளிர் மன்றம் தான், இன்று நம் தலைவரின் வழிகாட்டுதலோடு மகளிர் அணியாக மலர்ந்து, பல மகளிர் கருத்தரங்குகளைக் கண்டு, இதோ இன்று, இங்கே இரண்டு நாட்கள் நடக்கும் பெருவிழாவாக பரிமாணம் பெற்றிருக்கின்றது. 1921ம் ஆண்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது விதவைகளின் தொகையை வெள்ளையர்கள் வெளியிட்டனர். 1 வயதுள்ள விதவைகள் - 597 1 முதல் 2 வயதுள்ள விதவைகள் - 497 2 முதல் 3 வயதுள்ள விதவைகள் - 1247 3 முதல் 4 வயதுள்ள விதவைகள் - 2831 4 முதல் 5 வயதுள்ள விதவைகள் - 6701 அந்த நிலை அடியோடு மாறி இன்றைக்கு, தேசீய இனநீதி, சமூகநீதி, வர்க்க நீதி, பால்நீதி, சிறுபான்மை நீதி ஆகியவற்றை அமல்படுத்தியவர் நம் தலைவர். அனைத்துத் தரப்பிலும் மாற்றங்களையும், திட்டங்களையும், செயல்முறைகளையும் கொண்டு வந்தது இன்றைய நமது கழக அரசு; மிகக் குறிப்பாகப் பெண்களது ‘புலிப்பாய்ச்சல்’ என முடுக்கி விடப்பட்டிருக்கின்ற "மகளிர் சுய உதவிக் குழுக்கள்", பெண்களை பிறர் சார்பு அற்றவர்களாக, தமக்கான பொருளாதார உரிமை பெற்றவர்களாக ஆக்குகின்ற அருமருந்தாகத் திகழ்கின்றன; கர்ப்பிணிப் பெண்களுக்கான வளைகாப்பு திட்டம், அவர்களது மனம் ஓம்ப என்றால், கல்வித் தரத்திலே அவர்களை மேம்படுத்துகின்ற, அரசு கலைக்கல்லூரிகள் பல பல்கலைக்கழகங்களாகின்ற திட்டங்கள் அவர்களது அறிவோம்ப நடைமுறைப்படுத்தப் படுகின்றன. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரிலே வழங்கப்படுகின்ற திருமண உதவித் தொகை ரூ. 20,000 இன்று. நெடுநாள் கனவான பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதாக்கான முன் வரைவும் நமது கழகம் அங்கம் வகிக்கின்ற நடுவண் அரசினால், நாடாளுமன்றங்களின் அவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 1938 இந்திப் போரின் போது தண்டவாளமெனப் பெரியாரால் அன்பாக அழைக்கப்பட்ட பெரியவர் ரங்கராசும், பெரியவர் எஸ்.வி.லிங்கமும் இணைந்து திருவாரூரிலிருந்து சென்னைக்கு தந்தி கொடுப்பார்களாம்: "பதினைந்து சேலைகள் அனுப்பப்பட்டுள்ளன" என்று; 15 பெண்கள் என்றால் உளவுத்துறை கண்டு பிடித்து விடுமே என்பதால். மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார், டாக்டர்.தர்மாம்பாள், குஞ்சிதம் குருசாமி தொடங்கி, அருள்மொழி அம்மையார், பொற்செல்வி அம்மையார், சத்யவாணிமுத்து அம்மையார் என இன்று வரை நீள்கிற அப்பட்டியலின் எழுச்சிமிகு நீட்சியாக இன்று பல லட்சம் சேலைகள், நம் தலைவரது தலைமையில் இம்மாநாட்டில் பங்கேற்கின்றன நெஞ்சில் பயமின்றி; ஆனால் நேர்மைத் திறனுடன். "வரலாற்று ரீதியான ஆணாதிக்கத்தையும், அதற்கு எதிரான போராட்டத்தையும் மிகச் சுயேட்சையாக நாம் கண்டறிய வேண்டுமாயின், கிராமியப் பண்பாடுகள், நடத்தைகள், வழக்குகள் என அனைத்திலும் தேட வேண்டும். இங்குதான் அவை எந்தவிதமான போலித்தனமும் இன்றி எதார்த்தத்தினைப் பிரதிபலித்த வண்ணம், நேர்மையாக இயங்குகின்றன’’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சமுதாயச் சுமைகள் எப்படி பூர்சுவா அல்லாத பாட்டாளிப் பெண்கள் மீது திணிக்கப்படுகின்றது என்பதை, பெண்கள் குறிப்பிடத்தகுந்த அளவு முன்னேற்றம் அடைந்திருக்கின்ற இந்த 21ம் நூற்றாண்டில், இந்தக் கணத்தில் நாம் நினைத்துப் பார்த்தல் வேண்டும். ஐரோப்பாவில் வரைமுறையற்ற சுதந்திரத்தினைக் கோரும் பெண்ணிற்கும், அடிப்படை தேவையான நீர் மற்றும் விறகைக் கோரும் மூன்றாம் உலகப் பெண்ணிற்கும் இடையில் ஒன்றுபட்ட சமுதாயப் பார்வை என்பது எப்படி சாத்தியம்? மூன்றாம் உலக உழைக்கும் வர்க்க, கிராமப்புற அடிமட்ட பெண்களின் வாழ்க்கையை உயர்த்தக் கோரும் கோரிக்கையும், பெரியாரின், `மதம், குடும்பம் ஆகிய நிறுவனங்களிலிருந்து விடுபடுதலும்தான்’ பெண்ணியத்தின் அடிப்படை என்பதை கவனத்தில் கொண்டு, பெண்களாகிய நாம், `நமது ஆதி சொத்தாகிய, இயற்கை வளம், அதன் மீதான அறிவியல், விவசாயம் சீர்குலையா தொழிற்சாலைகள் முதலியவற்றை மீண்டும் முன்னெடுக்க வேண்டும்’. வெகுஜன இதழ்கள், ஊடகங்கள், நுகர்வுக் கலாச்சாரம் ஆகிய மாயைகளிலிருந்து நாம் வெளிவரவேண்டும். சிந்திக்கின்ற, பகுத்தறிவுப் பெண்கள் என்றும் தலைவர் தலைமையிலான நம் கழகத்தின் பக்கம்தான் என்பதைத் தற்காலிகமாக மறந்து விட்டு, நேற்று வந்து, இன்று ‘நாற்காலி’ கனவு காணும் புஸ்வான நாயகர்களின் கூட்டப்பட்ட பேரணிகளைப் பார்த்தால், பேரறிஞர் சொல்வது போல, "கட்டையாலே கத்தியும், அட்டையாலே கேடயமும் செய்து பிடித்துக் கொண்டால், நமக்குச் சிரிப்பு வருமா? சிந்தனை குழம்புமா?’’ என்று தான் தோன்றுகின்றது. 1962 இல் மாநிலங்களவையில் பேரறிஞர் தன்னைப் பற்றி மிகப் பெருமையாக: "நான் திராவிட மரபு வழிப் பிரிவைச் சேர்ந்தவன்; நான் என்னை திராவிடன் என்று சொல்லிக் கொள்வதிலே பெருமை அடைகிறேன்; திராவிடர்களிடம் திண்ணியமானதும், தனித்தன்மை பெற்றதும், வித்தியாசமானதுமான ஒன்று நாட்டிற்கு வழங்குவதற்கு இருக்கிறது என்பதுதான், நான் திராவிடன் என்று சொல்லிக் கொள்வதற்கு ஒரே காரணமாகும்" என்றார். திராவிடத்து மகளிராகிய, திராவிட முன்னேற்றக் கழகத்து மகளிரணியாகிய நாமும் பெருமையோடும், திண்ணியத்தோடும், தனித்தன்மையோடும் இந்த உணர்வுமிகு மாநாட்டில் சொல்லிக் கொள்வோம் - என்றும் நம் ஒப்பற்ற ஒரே தலைவர் வழி நிற்போம் என்று! - மார்க்சும், எங்கெல்சும் சொன்னது போல - சொல்லிக்கொள்வோம். "இழப்பதற்கு விலங்குகளைத் தவிர வேறொன்றுமில்லை - வெல்வதற்குப் புதியதோர் உலகம் இருக்கிறது" * * * * *
No comment