திராவிட இயக்க வரலாறு – பயிற்சிப் பாசறை
தமிழ் என்ற சொல்தான் திராவிடம் என்ற சொல்லின் வேர்.
தமிழ் = தமிழம் = த்ரவிடம் = திராவிடம்… என்று கவிஞர் மகுடேஸ்வரன் குறிப்பிடுகிறார்.
திராவிட ரயில்
கையெழுத்துப் பிரதியில் தொடங்கி, கல்வெட்டுப் பிரதியாக வாழ்க்கையைச் செதுக்கிக் கொண்டவர் கலைஞர். தமிழுக்காக இவர் தலை கொடுத்த தண்டவாளத்தின் மேல்தான் திராவிட ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது.
– எழுத்தாளர் பிரபஞ்சன்
திராவிட இன மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும் பேரறிஞர் பெருந்தகை அண்ணாதுரை அவர்கள், 1949 ஆம் ஆண்டு – செப்டம்பர் திங்கள் 17 ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகத்தை (தி.மு.க) தொடங்கினார். தி.மு.கழகத்தின் வரலாறு என்பது தமிழகத்தில் பகுத்தறிவு இயக்கத்தின், சமூகநீதி மறுமலர்ச்சியின் வரலாறாகும். தமிழ் மொழியையும், தமிழர் தம் பண்பாட்டையும் பாதுகாத்து மேம்படுத்த ஓர் அரசியல் இயக்கம் நடத்திய நூற்றாண்டு போராட்டங்களின் தொகுப்பாகும்.
அண்ணாவின் ராபின்சன் பூங்கா பேச்சு
“மழை பலமாகப் பெய்துகொண்டிருக்கிறது. பலர் பேச வேண்டும். சங்கடமான நிலைதான். விடாது மழை பெய்கிறது. அளவற்ற கூட்டம். தாய்மார்கள் தவிக்கின்றனர். மழையில் நின்றுகொண்டே இருக்கிறீர்கள். சங்கடம்தான்; ஆனாலும் சமாளிக்கிறீர்கள். இது போன்ற நிலையில்தான் நாட்டிலே சில காலம் கழகத்தின் வேலைகள் செயலற்றுக் கிடந்தன. சங்கடமான நிலை ஏற்பட்டது. சரி செய்தோம்.
பெரியார் திருமணம் என்ற செய்தி கேட்டதும் அழுதவன் நான். ஆயாசங் கொண்டவன் நான். அதுமட்டுமல்ல, நான் ஒதுங்கிவிடுகிறேன் என்ற எண்ணத்தை, நான் கொண்ட கருத்தைத் தெரிவித்தவன் நான். என் போன்ற பல தோழர்கள் பெரியாரை, பெரியார் போக்கை, அவர் திருமண ஏற்பாட்டை ஏற்கவில்லை என்பதை மட்டுமல்ல, கண்டித்தனர். கதறினர். வேண்டாம் என்றனர் வேதனை உள்ளத்தோடு.
அவரோடு சேர்ந்து பணிபுரிய முடியாத பெரும்பான்மையினர், கழக முக்கியஸ்தர்கள் கூடிப் பேசி ஒரு முடிவுசெய்தனர். அந்த முடிவுதான் திராவிட முன்னேற்றக் கழகத் தோற்றம். இது போட்டி கழகமல்ல.
திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிவிட்டது. திராவிடக் கழகத்திற்குப் போட்டியாக அல்ல. அதே கொள்கைப் பாதையில்தான், திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது.
அடிப்படைக் கொள்கைகளில், கருத்துகளில் மாறுதல், மோதல் எதுவும் கிடையாது. சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலே சமதர்மக் கொள்கை, அரசியலில் வடநாட்டு ஏகாதிபத்தியத்தினின்று விடுதலை ஆகிய கொள்கைகள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாடுகளாகும்.
நம்மை மதியாத, இகழ்ந்த, தூற்றலுடன் துச்சமென மதித்த தலைவரின் தலைமையைவிட்டு வெளியேறித் தனிக்குடித்தனம், தனி முகாம், தனிக் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்திருக்கிறோம். நாம் உழைத்து உருவாக்குவோம் இந்தக் கழகத்தை.
அண்ணாவின் சிந்தனை :
சட்டம் ஓர் இருட்டறை, அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு என்றார் அண்ணா (வேலைக்காரி – நாடகம் – 1945).
தமிழர்களின் அடிப்படை உரிமைகளைத் தெள்ளத்தெளிவாய்த் தமிழர்களுக்கே புரியவைத்தவர் அண்ணா. தமது தன்னடையாளம் என்பது அடிப்படை உரிமை என்பதே தெரியாமல் இருந்தவர்களுக்கு அந்த விளக்கம் தேவையாய் இருந்தது. அதைச் செய்தது அன்றைக்குத் திராவிடம் என்றும் இன்றைக்கு மாண்புமிகு முதல்வர் அவர்களால் திராவிட மாடல் என்றும் புகழடைந்த, அந்தச் சிந்தனை.
“தமிழாய்ந்த தமிழன்தான்
தமிழ்நாட்டில் முதலமைச்சாய்
வருதல் வேண்டும்
தமிழ்ப்பகைவன் முதலமைச்சாய்த்
தமிழ்நாட்டில் வாராது
தடுத்தல் வேண்டும்”
புரட்சிக் கவிஞன் பாரதிதாசனின் கனவு அது.
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!
– பாவேந்தர் பாரதிதாசன்
அப்படி இந்த நாளை கொண்டாடித்தான் ஆகவேண்டுமெனில் சித்திரை திருநாளாகக் கொண்டாடுங்கள். பகுத்தறிவு என்பது கடவுளை மறுப்பது மட்டும் அல்ல, பகுத்து அறிவது நான் பகுத்தறிவு.
ஆரியத்தைச் சட்டமன்றத்தில் சாடிய கலைஞர் :
சட்டமன்றத்தில் ஒரு முறை டாக்டர்.எச்.வி.ஹண்டே அவர்கள் தி.மு.கழக அரசைப் பற்றி விமர்சிக்கும்போது, “இது மூன்றாம் தர சர்க்கார்” என்றார். உடனே ஆளுங்கட்சியினர் வெகுண்டெழுந்தனர். முத்தமிழறிஞர் கலைஞர் அனைவரையும் அமர வைத்துவிட்டு, “டாக்டர் ஹண்டே அவர்கள் இந்த அரசை மூன்றாம் தர அரசு என்றார். திருத்திக்கொள்ள வேண்டும். இது நாலாந்தர அரசு, பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர என்று கூறப்படும் வர்ணங்களில் நான்காவதாகக் கூறப்படும் சூத்திரர்களின் அரசு!” என்று குறிப்பிட்டார். இதுதான் திராவிடப் பற்று.
பொன்னான நாள்…. என்று எதைச் சொல்வீர்கள்? என்று முத்தமிழறிஞர் கலைஞரிடம் கேட்டபோது, மண்டல் கமிஷன் பரிந்துரையையொட்டி, மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் தீர்மானத்தை நான் முன்மொழிந்து பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட நாளைப் பொன்னான நாள் என்று கூறலாம்.
கலைஞரின் திராவிடப் பற்றும் தமிழ்ப்பற்றும்…
முத்தமிழறிஞர் கலைஞர் : தமிழகச் சட்டப் பேரவையில் “தமிழ்நாடு” பெயர் வைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, பேரறிஞர் அண்ணா அவர்கள், “நான் மூன்று முறை தமிழ்நாடு என்று சொல்வேன், அனைவரும் வாழ்க! என்று சொல்ல வேண்டும்” என்று கூறிவிட்டு அவ்வாறே முழக்கமிட்ட அந்தச் சம்பவம் என்னால் மறக்க முடியாத சம்பவமாகும் என்று கூறி மகிழ்வார்.
சாதனைகளின் தொடக்கம் :
கலைஞர் இறந்ததையொட்டி நூற்றுக்கணக்கான அஞ்சலிக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இன்னும் நூற்றுக்கணக்கான அஞ்சலிக் கட்டுரைகள் எழுதப்படலாம்; எழுதப்பட வேண்டும். எண்பது ஆண்டுகால பொதுவாழ்க்கைகொண்ட கலைஞரின் அரசியற் செயற்பாடுகள், தமிழர்களின் வாழ்வில் குறுக்கும் நெறுக்குமாய் ஊடுபாவியிருக்கின்றன. ‘முரசொலி’யைக் கையெழுத்துப் பத்திரிகையாக நடத்திய காலம்தொட்டு, ஃபேஸ்புக்கில் தனக்கெனத் தனிப்பக்கம் ஆரம்பித்துப் பதிவிடுவதுவரை நான்கு தலைமுறைக் காலங்களில் நெடிய வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் அவர். வெறுமனே அரசியல் தலைவராக மட்டுமில்லாமல் கலை, இலக்கியம், இதழியல் என வெவ்வேறு களங்களில் இயங்கியவர் என்பதால், கலைஞர் குறித்து அறிந்து கொள்வது தேவையுமாகும்.
“I belong to dravidian stock” :
பேரறிஞர் அண்ணா அவர்கள் எப்போதுமே பெருமையாக கூறுவது – “I belong to dravidian stock” என்னும் வார்த்தையை தான். இது அனைவரும் அறிந்ததே. இதைப் பற்றி அண்ணா அவர்கள் 1962ஆம் வருடம் அண்ணாதுரை அவர்கள் பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசுகையில் :
I claim Sir, to come from a country, a part of India now, but which I think is of a different stock, not necessarily antagonistic. I belong to the Dravidian stock. I am proud to call myself a Dravidian. That does not mean that I am against a Bengali or a Maharashtrian or a Gujarati. As Robert Burns has stated, ‘A man is a man for all that.” “I say that I belong to the Dravidian stock and that is only because I consider that the Dravidians have got something concrete, something distinct, something different to offer to the nation at large. Therefore it is that we want self-determination,” Annadurai had said in his speech.
அறிஞர் அண்ணா, ராஜ்ய சபா, ஏப்ரல் 1962
அண்ணாவின் இந்தச் சிந்தனையைத் தான் தளபதி அவர்கள் முதல்வர் ஆனவுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
திராவிட இயக்க வரலாற்றை அறிந்துகொள்ள….
பெரியாரின் குடியரசுத் தொகுப்புகள் (42), அறிஞர் அண்ணாவின் தம்பிக்குக் கடிதங்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்- 316), கலைஞரின் கடிதங்கள் (3,517), முரசொலி மாறனின் திராவிட இயக்க வரலாறு, க.திருநாவுக்கரசு எழுதிய நீதிக் கட்சி வரலாறு, திமுக வரலாறு ஆகியவை மிகவும் அடிப்படை நூல்கள்.
பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார் எழுதிய ‘திராவிட நாடு’ புத்தகம். திராவிட நாடு என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்றுதான் என்பதை நிறைய சான்றுகளுடன் நிறுவியிருப்பார். பேராசிரியர் அ.ராமசாமி எழுதிய ‘இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு’. 1965 ஆண்டு காலம் என்பது நான்காவது இந்தி எதிர்ப்புப் போராட்டம். அந்த உச்சகட்ட போராட்டத்தைப் பற்றி அவர் சிறப்பாக விளக்கியிருப்பார். அடுத்து, நம்பி ஆரூரானின் ஆங்கில நூலை நானும் திருநாவுக்கரசும், பி.ஆர்.முத்துகிருஷ்ணனும் ‘திராவிட தேசியமும் தமிழ் மறுமலர்ச்சியும்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்கள்.. இருபதாம் நூற்றாண்டில் திராவிட தேசியம் எப்படி தமிழ் மலர்ச்சியை ஏற்படுத்தியது என்பதை விளக்கும் முக்கியமான நூல் இது.
பொருளாதாரம் தொடர்பாகப் படிக்க விரும்புபவர்கள் அறிஞர் அண்ணாவின் ‘பணத்தோட்டம்’ படிக்கலாம். 1940-களில் இருந்த நிலைமைகளை எடுத்துச் சொல்லும் நூல் அது. இன எழுச்சி தொடர்பாக அண்ணா எழுதிய கட்டுரை, ‘ஆரியமாயை’ என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. அடுத்து, கருணாநிதியின் ’நெஞ்சுக்கு நீதி’ நூலைப் படிக்க வேண்டும். ஆறு தொகுதிகளாக இது வந்துள்ளது. முரசொலி மாறனின் ‘ஏன் வேண்டும் இன்ப திராவிடம்?’என்ற நூல் முக்கியமானது. அதேபோல் மாறன் எழுதிய ‘மாநில சுயாட்சி’ என்கிற நூலில் மாநில சுயாட்சி என்றால் என்ன, அதன் தேவை என்ன, அதிகாரம் மத்தியில் குவிக்கப்படுவதன் நோக்கம் என்ன, மாநில சுயாட்சி இருந்தால் என்னென்ன அதிகாரங்களை நாம் வைத்துக்கொள்ள முடியும் என்பதையெல்லாம் விளக்குகிறது. 1950-களில் பேராசிரியர் க.அன்பழகன் எழுதிய ‘வகுப்புரிமைப் போராட்டம்’ என்ற நூல் முக்கியமானது. எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா இணைந்து எழுதிய ‘பெரியார் சுயமரியாதை சமதர்மம்’ புத்தகம் பெரியாருடைய பொதுவாழ்க்கைப் பங்களிப்பை விளக்குகிறது.
ஏன் திராவிட மாடல் கொண்டாடப்பட வேண்டும்….
பெரியார் இல்லை, அண்ணா இல்லை, கலைஞர் இல்லை என்று ஆட்டம் போடப் பார்த்தவர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘திராவிட மாடல்’ ஆட்சியைப் பார்த்ததும் எரிச்சலாக இருக்கிறது.
‘திராவிடம்’ என்ற சொல்லை எதிர்த்து சிலர் பம்மாத்துக் காண்பித்துக் கொண்டு இருக்கிறார்கள்! ‘திராவிடம்’ குறித்த சர்ச்சையே தமிழ்நாடு தமிழ்வளர்ச்சித்துறையின் அறிவிப்பை ஒழுங்காகப் படிக்காததன் விளைவுதான். அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிவிப்பை ஒழுங்காக வாசிக்கத் தெரியாத அளவுக்கு சிலருக்கு தமிழ் வாசிப்பு வளர்ச்சி அடையாமல் போனதன் விளைவு அது. தமிழ் இலக்கியங்களை சந்தி பிரித்து மலிவுப் பதிப்புகளாக வெளியிடுவது என்பது ஒன்று, திராவிடக் களஞ்சியம் என்ற நூல் வேறு ஒன்று. இரண்டையும் ஒன்றாகப் போட்டு குழப்பிக் கொண்டார்கள் தமிழ்த் தேசியம் என்பதாக ஆரியச் சேவகம் செய்து கொண்டிருக்கும் சிலர்.
இரண்டும் வேறு வேறு என்பதை அமைச்சரும் அறிவித்த பின்னால், ‘தமிழ் இலக்கியத்தை திராவிடக் களஞ்சியம்’ என்று அழைக்கக்கூடாது என்று திரும்பத் திரும்பச் சொல்லி திசை திருப்புபவர்கள் நோக்கம் என்ன? தி.மு.க மீது குறைகாணுதல் தவிர வேறு அல்ல!
இந்தக் கற்பனைக் குற்றச்சாட்டை வைத்துப் பேசும் சிலர், தங்களது இரத்த வழக்கமான பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள். ‘திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டுவதற்கு கி.ஆ.பெ.விசுவநாதமும், அண்ணல் தங்கோவும் எதிர்த்தார்கள். தமிழர் கழகம் என்றுதான் பெயர் சூட்டச் சொன்னார்கள்’ என்கிறார்கள். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதே உண்மை.
‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்ற பெயரை நீக்கிவிட்டு ‘திராவிடர் கழகம்’ எனப் பெயர் சூட்ட வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தவர் பேரறிஞர் அண்ணா. ‘தமிழர் கழகம்’ என்று பெயர் சூட்ட கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் சேலம் மாநாட்டில் சொல்லவில்லை. ‘தமிழ்நாடு நீதிக்கட்சி’ என்றுதான் பெயர் சூட்டச் சொன்னார் விசுவநாதம் அவர்கள். இதனை முத்தமிழ்க் காவலரின் பேரன் கோ.வீரமணி அவர்கள் தனது ஆய்வு நூலில் விளக்கமாக எழுதி இருக்கிறார்.
‘திராவிட நாடு குறித்த ஐயம் எனக்கு இருந்தது. அது நீங்கிவிட்டது. பெரியார் தலைமையில் திராவிட நாடு அமைத்தே தீருவோம். இதை நாம் தமிழ்நாட்டில் மட்டுமே பேசக்கூடாது. மலையாளம், தெலுங்கு, கன்னட நாட்டிலும் பேச வேண்டும்’ என்று அந்த மாநாட்டில் பேசியவர் தான் கி.ஆ.பெ. அவர்கள். அதன் பிறகு அவர் அரசியலை விட்டு ஒதுங்கினார். மூன்று ஆண்டுகள் கழித்து ‘தமிழர் கழகம்’ தொடங்கினார். எனவே, சேலம் மாநாட்டில் ‘திராவிடர் கழகம்’ என்ற பெயரை யாரும் எதிர்க்கவில்லை. பத்து ஆண்டுகள் கழித்து பெரியாரும், முத்தமிழ் காவலரும் பல மாநாடுகளில் ஒன்றாக பங்கெடுத்தார்கள். போராட்டங்களில் ஒன்றாக ஈடுபட்டார்கள். எனவே, தனது கற்பனைகளை வரலாறு ஆக்க முயலக்கூடாது.
‘ஆரியர்களைக் குறிக்கவே திராவிடம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது’ என்பது இந்த சிலரின் அடுத்த கற்பனை. நல்லவேளை மறைமலையடிகளும், பாவாணரும், பாவேந்தரும் சீக்கிரமாகவே செத்துப் போய்விட்டார்கள். இதைக்கேட்டால் தலையில் அடித்துக் கொண்டிருப்பார்கள். தமிழ் பிராமணர், கன்னட பிராமணர், மலையாள பிராமணர் என்பதைப் போல – ‘பஞ்ச திராவிடர்’ என்று சிலர் வடமாநிலங்களில் அழைக்கப்பட்டார்கள். ‘திராவிட நாட்டில்’ இருந்து மராட்டியம் போன்ற வடமாநிலங்களில் குடியேறியவர்கள் இவர்கள். திராவிட நாட்டில் இருந்து குடியேறிய பிராமணர்கள், திராவிட பிராமணர்களாக அழைக்கப்பட்டார்கள். இதை 1950 ஆம் ஆண்டே ‘குயில்’ இதழில் விளக்கமாக எழுதிவிட்டார் பாவேந்தர்.
கழகம் உதயம் ஆவதற்கு முன்பாகவே உள்ள அறிவுப்பனுவல்கள் அனைத்தையும் பாருங்கள். ‘ஐம்பத்தாறு தேசங்களில் ஒன்று’ என்கிறது யாழ்ப்பாண அகராதி. ‘தட்சிணப் பிரதேசத்திலிருந்து கன்னியாகுமரி ஈறாக உள்ள தேசம்’ என்கிறது அபிதானசிந்தாமணி. ‘திராவிடம் என்றால் தமிழ்நாடு – தமிழ்’ என்கிறது தமிழ்மொழி அகராதி. ‘திராவிடம் என்றால் தமிழும் அதன் கிளைமொழிகளும்’ என்கிறது கழகத் தமிழ் கையகராதி. தமிழ் என்றால் திராவிடம் என்கிறது நாமதீப நிகண்டு. 18 மொழிகளில் திராவிடம் ஒன்று என்கிறது சேந்தன் திவாகரம். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இடப்பெயராகவும், இனப்பெயராகவும், மொழிப் பெயராகவும் பல நூற்றாண்டு காலமாக இருந்த பெயரை அரசியல் களத்தில் பயன்படுத்தியவர்தான் அயோத்திதாசப் பண்டிதர். இரட்டைமலை சீனிவாசனும் எம்.சி.இராஜாவும் அமைப்பின் பெயராகவும் ஆக்கினார்கள். இதனையே ஆயுதம் ஆக்கி அரசியல் களத்தில் செயல்பட்டார் தந்தை பெரியார். அவரது எண்ணத்தின் அடித்தளத்தில்தான் ‘திராவிடர் கழகம்’ என்ற தீர்மானத்தை அண்ணா கொண்டு வந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை அண்ணாவும், அவரது தம்பிமார்களும் தொடங்கினார்கள். தமிழ்நாடு என்ற நிலத்தில், தமிழினத்துக்காக ‘திராவிடச் சிந்தனை கொண்ட’ அரசியலை முன்னெடுத்ததே இதன் உள்ளடக்கம் ஆகும். அரசியலில் சிறு ஞானம் உள்ளவர்களும் இதனை உணர்வார்கள்.
திராவிடம் என்றால் என்ன தெரியுமா? இதுதான்.. தமிழில் இருந்து ஆரியம் நீக்கச் சொல்கிறது திராவிடம். தமிழனில் இருந்து ஆரியர்களை விலக்கச் சொல்கிறது திராவிடம். தமிழ்ச் சிந்தனை மரபில் சமஸ்கிருதத்தைப் பிரிக்கச் சொல்கிறது திராவிடம். அனைத்து கல்வி, வேலை வாய்ப்புகளிலும் தமிழர்களை உட்கார வைக்கச் சொன்னது திராவிடம். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிறது திராவிடம். கோவில்களில் மட்டுமல்ல; அனைத்திலும் தமிழ் கோலோச்ச வேண்டும் என்பது திராவிடம். இப்படி ஆரியத்தின் அனைத்து வாசல்களையும் அடைக்கச் சொல்வது திராவிடம். அதனால்தான் இங்கு திராவிட முன்னேற்றக் கழகத்தை பார்த்தால் அவர்களுக்கு காய்ச்சலாக இருக்கிறது. விபீஷ்ணர்களை இறக்கிவிட்டு சாமரம் வீசுகிறார்கள்.
மொழி ஆராய்ச்சியாளர்கள் வசம் இருந்த ‘திராவிடத்தை’ அரசியல் மயமாக்கி – அதனை ஆட்சிக் கட்டிலிலும் அமர்த்திச் செயல்படுத்திவிட்டார்களே என்ற ஆத்திரத்தில்தான் ‘திராவிடம்’ இன்று ஆரியச் சக்திகளால் எதிர்க்கப்படுகிறது. கைக்கூலிகளும் அதில் சேர்ந்து கொண்டதுதான் பேரவலம்.
தளபதியின் பதிலடி
நடந்து முடிந்த முதல் தமிழ்நாடு சட்டமன்ற கூட்ட தொடரில், ஆளுநர் உரையின் மீது நடந்த விவாதத்தின் போது “யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே” என்பது போல இந்த அறிக்கையில் யானையும் இல்லை, மணியோசையும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆளுநர் உரையை குறிப்பிட்டு பேசியிருந்தார். அதற்கு பதிலளிக்கையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் “நான்கு கால்கள் தான் யானையின் பலம், அதேபோல சமூக நீதி, சுயமரியாதை, மொழி இன பற்று மற்றும் மாநில சுயாட்சி இந்த நான்கின் பலத்தில் தான் திமுக-வும் நிற்கிறது இந்த அரசும் நிற்கிறது.” என்று யானையின் கால்களையும், திமுகவின் கொள்கை ரீதியிலான சிந்தனைகளையும் உவமையாக எடுத்து கூறி பதிலளித்தார்.
திமுக –வின் உயிர்மூச்சு
1.சமூக நீதி:
அதனைக் காத்திடும் விதமாக, 13 நவம்பர் 1969 அன்று அன்றைய முதல்வராக இருந்த மு.கருணாநிதி அவர்கள் முதலாவது பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் , ஏ.என்.சட்டநாதன் தலைமையிலும், எஸ். சின்னப்பன் மற்றும் எம். ஏ. ஜமால் உசேன் ஆகிய இருவரையும் உறுப்பினராக கொண்ட குழுவை அமைக்க உத்தரவிட்டுருந்தார். இந்த குழுவின் முதன்மை பணியானது அதுவரை அரசால் பிற்படுத்தபட்டோரின் நலனுக்காக எடுத்த நடவடிக்கைகளை ஆய்வு செய்து, பிற்படுத்த பட்டோர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்றவைகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதும் ஆகும். மேலும் , இந்த சட்டநாதன் கமிஷன் அறிக்கை வெளிவந்தபின், அதன் அடிப்படையில், பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடவொதுக்கீட்டை 25% லிருந்து 31% மாகவும் மற்றும் பட்டியலினத்தவர்க்கான இடவொதிக்கீட்டை 16% லிருந்து 18% மாகவும் அரசு உயர்த்தியது.
- சுயமரியாதை:
1925 இல் பெரியார் அவர்களால் தொடங்க பட்ட சுயமரியாதை இயக்கமும் மற்றும் நீதி கட்சியும், அதன் பின் வந்த திராவிடர் கழகமும் ஆலய நுழைவு போராட்டம் மட்டுமல்லாது, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்கான சம உரிமை மற்றும் இன்னும் பல சுயமரியாதை சார்ந்த சமூக சீர்திருத்தங்கள் சம்பந்தமான போராட்டங்களை இந்த மண்ணில் விதைத்து வேரூன்ற செய்தார்கள். இப்போது ஆட்சி நடத்தும் திமுக அரசும் அனைத்து சமூகத்தினரும் மற்றும் பெண்களும் அர்ச்சகராகலாம் என்று அறிவித்திருப்பதும் சுயமரியாதை இயக்கத்தின் நீட்சியாக உள்ளதையே காட்டுகிறது.
- மொழி, இனப் பற்று:
தமிழர் மற்றும் தமிழ் மொழி சாராத அரசியல் தமிழ்நாட்டில் என்றும் எடுபட்டதில்லை. நீதி கட்சி தொடங்கி திமுக வரை எந்த கட்சியும் இவைகளை தவிர்த்து அரசியல் அமைத்ததில்லை. 1937 இல் நீதிக்கட்சி, பெரியார் மற்றும் அண்ணா தொடங்கிய இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டங்கள் இன்றளவிலும் இந்த மண்ணில் நிலைத்து நிற்கிறது . மேலும், 18 ஜூலை 1967 அன்று அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்து அதை நிறைவேற்றி “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றம் செய்தது. அதற்கடுத்தபடியாக, 12 அக்டோபர் 2004 இல் தமிழை செம்மொழியாக ஒன்றிய அரசு அறிவித்ததில் திராவிட இயக்கங்களின் பங்கு முக்கியமானது. குறிப்பாக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் சீரிய மற்றும் தொடர் முயற்சியும் செம்மொழி கனவு நனவாக மிக முக்கிய காரணமாகும்.
- மாநில சுயாட்சி:
“மத்தியிலே கூட்டாட்சி, மாநிலத்திலே சுயாட்சி” என்ற பேறிஞர் அண்ணாவின் முழக்கத்திற்கு முதல் விதையாக, 22 செப்டம்பர் 1969 அன்று ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் உறவுகளை பற்றி ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழு அமைப்பது பற்றி சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அரசாணை மூலம் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, முன்னாள் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி பி.வி. ராஜமன்னார் தலைமையில், மூவர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்தார். இந்த குழுவின் முக்கிய நோக்கம் இந்திய அரசியலமைப்பு சட்டங்களை ஆராந்து மாநில சுயாட்சியின் உயிர் நாடியான சட்டமன்றம், நிர்வாகம், நிதி பங்கீடு மற்றும் அதன் கீழ் இயங்கும் நீதித்துறைகளில் மாநில அரசின் உரிமைகளை பெறுவதற்கான நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைப்பது. அந்த குழுவின் ஆய்வறிக்கைக்கு பிறகு , 16 ஏப்ரல் 1974 இல் அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் ராஜமன்னார் குழுவின் அறிக்கை தொடர்பான தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டுவந்தார். அதன் பின், இந்த தீர்மானம் மீதான விவாதம் தொடர்ந்து நான்கு நாட்கள் நடத்தப்பட்டு , இறுதியாக 20 ஏப்ரல் 1974 இல் மு.கருணாநிதி அவர்களின் பதிலுரையை தொடர்ந்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ராஜமன்னார் கமிஷனின் அறிக்கையே மாநில சுயாட்சி குறித்து அகில இந்திய அளவில் முதல் விவாதத்தை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதியின் திராவிட லட்சியம்…..
ஸ்டாலின் தனது இயக்கத்தின் முன்னோடிகளிடமிருந்து அறிவின் மேன்மையை அறிந்தவர். அதிலிருந்து பெற்ற ஊக்கத்தால் பிரமுகர்களுக்கு பொன்னாடை போர்த்தும் வழக்கத்தைக் கைவிடுமாறு தனது இயக்கத்தினரைக் கேட்டுக் கொண்டார். மாறாக தமிழ்க் கலாச்சாரத்தையும் தமிழின் இலக்கியச் செழுமையையும் வெளிப்படுத்தும் நூல்களைப் பரிசாகக் கொடுக்கலாம் என்றார். இதற்கு அவரே முன்மாதிரியாகவும் நடந்து கொண்டார். பிரதமர் மோடியைச் சந்தித்தபோது ‘Sculptors of Classical Tamil’ என்கிற நூலை வழங்கினார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்தபோது ‘Multiple Facets of MyMadurai’ என்கிற நூலைப் பரிசளித்தார். சோனியா காந்திக்கு அவர் வழங்கிய நூல் ‘Journey of a Civilisation:Indus to Vagai’. அவரது பன்முக நடவடிக்கைகளால் தமிழ் சமூகம் புதிய வெளிச்சத்தில் பார்க்கப்படுகிறது.
இப்படி கொள்கை ரீதியாக, நீதி கட்சியின் தொடர்ச்சி அறிஞர் அண்ணா என்றும், அண்ணாவின் தொடர்ச்சி கலைஞர் கருணாநிதி என்றும், கலைஞர் கருணாநிதியின் தொடர்ச்சி தான் நானும், இந்த ஆட்சியும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கூறி தன் ஆட்சி இந்த ஐந்து ஆண்டுகளில் எந்த கொள்கையின் அடிப்படையில் நடை போடும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
திராவிட சிந்தனைகளை தேசிய அளவில் கொண்டு செல்லும் ஆற்றல் படைத்த முதல்வர் ஸ்டாலின் என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் Stalin’s politics fuels new national federalism என்ற தலைப்பில் தலைமை ஆசிரியர் பிரபு சாவ்லா சிறப்புக் கட்டுரை எழுதினார். திராவிடத்தின் பாதி வீரியத்தைப் பெரியார் தொடங்கிக் கலைஞர் விதைத்தனர். மீதியைத் தளபதி விதைப்பார்… ஆரியம் அதைத் தாங்கிக் கொள்ளத் தயராகட்டும்….
• • • • •
No comment