தலைவர் கலைஞர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை – திருநெல்வேலி மே2010

திருநெல்வேலியில் (மே-2010) நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில்
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை:

	பன்மொழியில் பல்கலையில் ஆய்வும் பழந்தமிழாம், பொன்மொழியில் தன்னுயிராய் போற்றும் பெருமான்... அன்பழகர் இந்நாட்டின் பொன்மணியே என புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் பாராட்டப்பட்ட நம்முடைய திராவிட இயக்க பாரம்பரியத்தின் நீண்ட நெடிய பாரம்பரியத்தின் இன்றளவும் அயராமல் உழைத்துக்கொண்டிருக்கிற இனமான போராளியுமான, மரியாதைக்குரிய இனமான பேராசிரியர் அவர்களே, இந்த நூல்களை வெளியிடுகின்ற இந்த அருமையான விழாவிற்கு தலைமை தாங்கி இருக்கின்ற அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் மதிப்பிற்குரிய முனைவர் திரு.அனந்தகிருஷ்ணன் அவர்களே, வரவேற்வுரை நல்கிய பா. அன்புச்செழியன் அவர்களே, முதற்பிரதியை பெறுதல் மற்றும் சிறப்புரையாற்ற வருகைதரவிருந்த மாண்புமிகு திரு.ஜெகத்ரட்சகன் அவர்களே, எனக்கு முன்பாக இங்கே கருத்துரையாற்றி அமர்ந்திருக்கிற இயக்குநர், பொது நூலகத்துறை முனைவர் அறிவொளி அவர்களே, தொகுப்புரை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்திருக்கின்ற திருமதி பா.கலையரசி அவர்களே, வரவேற்புரை நல்கிய அறிவுச்செழியன் அவர்களே, அறிமுக உரையாற்றிய இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை கவிஞர் எழிலரசன் அவர்களே, இந்த அருமையான இரண்டு நூல்களை தன்னுடைய எழுபதாம் ஆண்டு அகவையை முன்னிட்டு ஒரு மாலை நேரத்து விழாவாக இங்கே ஏற்பாடு செய்திருக்கின்ற என்னைப் போன்ற இளைய கவிஞர்களுக்கும் எப்போதும் ஊக்கமும், உற்சாகமும் அளித்து எங்களையெல்லாம் கௌரவப்படுத்தக்கூடிய மரியாதைக்குரி அய்யா உ.பி.பா அவர்களே, முன்பாக அமர்ந்திருக்கிற தமிழ் அறிஞர்களே, கழகத்தின் முன்னோடிகளே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம். 
	இந்தியர்களுக்கென்று, அவ்வப்போது இந்தியா மீது நடந்த படையெடுப்பைத் தவிர சரித்திரம் என்று ஒன்று கிடையாது என்று ஒரு முறை காரல் மார்க்ஸ் சொன்னார். அவர் அப்படிச் சொன்னவுடன், இந்திய தேசிய வழியில் வந்த தேசியவாத மார்க்சிய வரலாற்று அறிஞர்களுக்கு மார்க்ஸ் மீது கொஞ்சம் கோபம்தான். ஆனால் மார்க்ஸ் எந்த ஒரு உண்மையோடு அந்த கூற்றைச் சொன்னார் என்பதை நாம் நினைவுபடுத்திப் பார்க்கவேண்டும். அவர் சொன்ன கூற்றின் உண்மையான கருத்து என்பது, ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்புவரை பிராமணிய சாதி அடிப்படையிலான கிராமிய பொருளாதார சமூக அமைப்பு ஆட்டம் காணாமல் நிலைத்திருந்தது என்பதைத்தான் அவர் சரித்திரம் சுட்டிக்காட்டியது என்று சொன்னார். சரித்திரத்தை உண்டாக்குகின்ற ஆற்றல் இந்தியர்களுக்கு இல்லை என்ற அர்த்தத்தில் மார்க்ஸ் அதைச் சொல்லவில்லை. தமிழர்களுக்க வரலாறு இருக்கிறதா? என்று தந்தை பெரியார் கேட்டதைப் போல மார்க்ஸ் கேட்டார். பன்னெடுங்காலமாக, ஆரியர்களின் சூழ்ச்சியிலே, பஞ்சமர்களாகிய நாம், சூத்திரர்களாகிய நாம் அடிமைப்பட்டுக் கிடந்தோம் என்கின்ற அந்தக் கருத்தை வலியுறுத்தத்தான் ஒருமுறை பழந்தமிழர் பற்றிய பேச்சு வந்தபோது தந்தை பெரியார் சொன்னார், யார் அந்தத் தமிழர்? அவனுக்கு வருஷம் என்று ஒன்று உண்டா என்று கேட்டார். தமிழர்களுக்கு வரலாற்று நினைவை 60 ஆண்டுகளுக்குள் விளக்கிப்போடவும் செய்து, காலத்தின் முப்பரிமாணத்தை மாற்றி தமிழர்களுடைய வரலாற்று நினைவை மழுங்கச் செய்திருந்த அந்த நிலையைத்தான் அவர் அப்படிச் சொன்னார். நமக்கென்று ஒரு வரலாறு இருக்கின்றது, நமக்கென்று தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கும் என்று நம்முடைய ஒப்பற்ற தலைவர் இன்றைக்கு அறிவித்திருக்கின்றார். இதன் தொடர்ச்சியாகத்தான், இன்று நேற்றல்ல, ‘தமிழர்க்கே’ என்னும் தலைப்பிலே 1944ம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 19, 20 தேதிகளில் நடைபெற்ற திராவிட மாணவர் மாநாடு குடந்தையிலே நடைபெற்றபொழுது, அப்பொழுது அண்ணாமலை பல்கலைக்கழகத்திலே மாணவராக இருந்த நம்முடைய இனமான பேராசிரியர் சொல்லுகின்றார், தமிழ் மொழி வளர, தமிழ் கழனி திருத்தப்படவேண்டும், இலக்கியப் பூங்காவானாலும், இலக்கண விளைநிலங்களானாலும் ஆரியக் கள்ளி நுழைந்ததன் தீமையை உணர்த்த ஒருமித்த திராவிடர் அதனை தீ வைத்தேனும் ஒழிக்க தயங்கார் என்று முழங்கினேன் என்று சொன்னார். இன்னும் சொல்லப்போனால் 1939ம் ஆண்டிலேயே தான் முதன்முதலாகப் பேசிய ஒரு பேச்சு என்று குறிப்பிட்டு பேராசிரியர் அவர்கள் பதிவு செய்திருக்கின்றார். முதன்முதலாகப் பேசிய சிறிய கூட்டம் என்னவென்றால், அவருடைய தந்தையார், மதிப்பிற்குரிய பெருமகனார் திரு.மு.கல்யாணசுந்தரனார் அவர்கள் மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரத்திற்குக் குடியேறிய 5, 6 மாதங்களிலேயே தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் கிளை ஒன்றைத் துவங்குவதற்காக ஒரு சிறிய கூட்டத்தை எற்பாடு செய்திருக்கின்றார். தந்தை பெரியாருடைய தலைமையிலே இயங்கிவரும் அந்தக் கட்சியிலே அனைவரும் சேர்ந்து தொண்டாற்றவேண்டும் என்று அவருடைய தந்தை உரையாற்றியபொழுது அன்றைக்கு நம்முடைய பேராசிரியர் அவர்களும் 20 நிமிடம் உரையாற்றினாராம். அவர் தன்னுடைய வார்த்தையிலேயே, 20 நிமிடங்கள் எனக்குக் கொடுக்கப்பட்ட அந்த நேரத்திலே நான் எதைப் பேசினேன் தெரியுமா? தமிழுக்கு இந்தியால் எப்படி இழுக்கு நேர்ந்தது எனவும், தமிழுக்கு எப்படி தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுகிறது எனவும், தமிழகம் எப்படி தொடர்ந்து தாழ்த்தப்பட்ட நிலையிலேயே இருக்கிறது எனவும் எனக்குத் தெரிந்த வரலாற்றுச் சான்றினை நான் முன்வைத்துப் பேசினேன் என்று சொன்னார் பேராசிரியப் பெருந்தகை. 
நமது கழகத்தின் ஐந்தாவது மாநில மாநாடு 1975ம் ஆண்டு டிசம்பர் 25ம் நாள் கோவையிலே நடைபெற்றபொழுது, நம்முடைய ஒப்புயர்வற்ற தனிப்பெரும் தலைவர் கலைஞர் அவர்களை அந்த மாநாட்டிற்கு தலைமை தாங்குமாறு வழிமொழிந்து பேசிய பேராசிரியப் பெருந்தகை அவர்கள் கலைஞர் அவர்களைப் பற்றி ஐந்தாறு உவமைகளைக் கூறி அருமையாக வழிமொழிந்தார். அவர் சொல்லுகின்றார், நான் தந்தை பெரியாருடைய சாயலை கலைஞர் அவர்களிடத்திலே பார்க்கின்றேன் அவரது மன உறுதியிலும், துணிச்சலிலும், பேரறிஞர் அண்ணாவினுடைய சாயலை கலைஞர் அவர்களிடத்திலே பார்க்கின்றேன் இதமாக இருக்கின்ற அவருடைய எழுத்தாற்றலிலும் ஈர்க்கின்ற அந்த பேச்சாற்றலிலும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய சாயலைக்கூட நான் கலைஞர் அவர்களிடத்திலே பார்க்கிறேன் தொண்டின் மூலமாக சாதாரணமான மனிதர் ஒருவர் எப்படி ஒரு நாட்டின் தலைவனாக உயரமுடியும் என்பதைக் காட்டிய அந்தக் காரணத்திற்காக, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் சாயலைக்கூட பார்க்கின்றேன் எப்படி ஒரு பெரிய சமுதாயத்தை, ஒரு குடும்பத்தைப் போல பேணமுடியும் என்ற அந்த பாங்கினால் என்று சொல்லுகின்றார். அதுமட்டுமல்ல, முதரறிஞர் ராஜாஜி அவர்களுடைய சாயலைக்கூட தலைவர் கலைஞரிடத்திலே நான் பார்க்கின்றேன் எப்படி தெரியுமா? எப்பேற்பட்ட ராஜதந்திரம் என்றாலும் அதனை எப்படி சரிசெய்வது என்கின்ற அந்த கைவந்த கலையை உடையவர் தலைவர் கலைஞர் என்கின்ற காரணத்தால். அதுமட்டுமல்ல, பசும்பொன் முத்துராமலிங்கக் தேவர் அவர்களுடைய சாயலைக்கூட நான் பார்க்கின்றேன் பாளைச் சிறையை இருவருமே பகிர்ந்திட்ட காரணத்தால் என்று அடுக்கடுக்காகச் சொல்லி, அந்த மாநாட்டிற்கு தலைமையேற்க வாருங்கள் என்று சொன்ன பேராசிரியப் பெருந்தகையாரால் பெருமைப்படுத்தப்பட்ட நம்முடைய நெஞ்சங்களில் எல்லாம் நிறைந்திருக்கின்ற தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய தமிழினத்தின், திராவிடத்தின் வரலாற்றை, ‘காலப் பேழையும் கவிதைச் சாவியும்’ என்கின்ற அந்த அருமையான வரலாற்று களஞ்சியத்தை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். 
வாட்சே என்கின்ற ஒரு வரலாற்று அறிஞர் எழுதுகின்றார், குறித்த தருணங்களில் மிகவும் சுயநலம் நிறைந்ததாக இருக்கின்றபோதிலும், எதிர்காலத்தின்மீது எந்த ஒரு பொறாமையும் காட்டாத ஒரு நிகழ்காலத்தைப் பெற்றிருப்பதுதான் மனித இயல்பின் மிகச்சிறந்த பண்புகளில் ஒன்றாகும். நமது இருத்தலின் போக்கு நம்மை எந்தக் காலத்துடன் பிணைத்திருக்கின்றதோ, அந்தக் காலத்தின் வண்ணங்களாலான ஒன்றாகவே மகிழ்ச்சி பற்றிய நமது மனப்பதிவு இருக்கிறது என்பதை ஆழ்ந்த சிந்தனையோடு காட்டுகின்றேன். மகிழ்ச்சி குறித்த நமது கற்பனை, மீட்சி குறித்த நமது மனப்பதிவோடு பிரிக்கமுடியாதபடி நம்மோடு பிண்ணிப் பிணைந்திருக்கிறது. வரலாற்றை நோக்கியதாக இருக்கும் கடந்த காலத்தைப் பற்றிய நமது பார்வைக்கும் இது பொருந்தும். கடந்த காலம், தனக்கு மீட்சியை சுட்டிக்காட்டுகின்ற கால அட்டவணை ஒன்றை தன்னோடு வைத்திருக்கின்றது. கடந்த கால தலைமுறைக்கும், தற்கால தலைமுறைக்கும் இடையில் ரகசிய பிணைப்பு ஒன்று உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டுகின்றார். கடந்த காலத்திலே மறைக்கப்பட்டிருந்த, அழுத்தி மூடப்பட்டிருந்த நம்முடைய திராவிட இனத்தின் தமிழகத்தின் வரலாற்றை, தன்னுடைய கவிதைச் சாவியால் அவ்வப்போது திறந்து, அதிலே இருந்த அத்தனை அற்புதங்களையும், நுட்பங்களையும் தலைவர் கலைஞர் அவர்கள் புத்தக வடிவிலே கொட்டுகின்றபோதும், அந்த நுட்பங்களை இன்றைக்கு இருக்கின்ற இளைய தலைமுறையினர் என்னைப்போல எனக்கு பின்பாக இருக்கின்ற தலைமுறையினர் சுவைத்துப் பருகிடும் வண்ணம் அருமையான சொற்பொழிவை அய்யா உ.பி.பா அவர்கள் ஆற்றியிருக்கின்றார். 500 ஆண்டு காலத்தை உள்ளடக்கிய காலப்பேழையை திறந்து பார்த்து முத்தமிழ் அறிஞர் அதனுடைய வாழ்க்கையினை, பண்பாட்டை, நாகரிகத்தை, கலை இலக்கியத்தை தானும் உணர்ந்து, வரும் சந்ததியினருக்கும் பெரும் முயற்சியில் எழுதப்பட்ட வரலாற்று ஆவணத்தை எத்தனை அழகுற, ஒரு ஆய்வு மனப்பான்மையோடு தன்னுடைய சந்ததியினருக்கு வழங்கியிருக்கிறார் என்பதை இங்கிருக்கின்ற ஒவ்வொருவர் மட்டுமல்ல, வீட்டிற்கு எடுத்துச் சென்ற பின்னர் தன்னுடைய இளையதளத்தில் ஒவ்வொருவருக்கும் அந்த நூலைக்கொடுத்து படித்துக்காட்ட வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். 58 தலைப்புக்களிலே முத்தமிழ் அறிஞர் இந்த புத்தகத்தை வகுத்திருக்கின்றார். செம்மையாக அவர் படைத்திருக்கின்ற அந்த கருத்துக் களஞ்சியத்தை 15 சொற் பொழிவுகளிலே சாறெடுத்து சுவையாக நமக்கு பேராசிரியர் அவர்கள் தந்திருக்கின்றார். வரலாறு நமக்குத் தேவைதான். ஆனால் அறிவியல் தோட்டத்தில் சீரழிந்து நோக்கமின்றித் திரியும் தருதலைக்கு தேவைப்படும் விதத்தில் அல்ல என்கிறார் நீட்சே. இதனை கருத்தில்கொண்டு, மக்களின் நேற்று, இன்று, நாளைய வாழ்வினை துவக்குவதற்கு அவ்வப்போது காலப் பேழையை என் கவிதைச் சாவி திறக்கும் என்று தன்னுடைய நூலிலே தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். அவர் இந்த புத்தகத்தை எழுதுவதற்கு முன்பாக பேராசிரியர் ரா. மதிவாணன் முதலிய பல வரலாற்று நூலகங்களை படித்து இதை எழுதினேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். நாம் அனைவரும் அறிவோம். இன்றைக்கு திராவிட நாகரிகத்தை ஆரிய நாகரிகமாக காட்டுகின்ற முயற்சியிலே ராஜாராமன் போன்ற பலர் ஈடுபட்டிருக்கின்ற இந்த நிலையிலே, பேராசிரியர் ரா.மதிவாணனுடைய புத்தகங்களாகட்டும் எப்படி இவையெல்லாம் தொல்காப்பியருடைய இலக்கியத் தரவுகளைக் கொண்டு திராவிட எழுத்துக்கள் என்று நிறுவியிருக்கிறார்கள் என்பதை நாம் மிக நன்றாக அறிவோம். குமரிக் கண்டமே பிறந்தோம் என தொடங்கி நிலம், மொழி, இலக்கியம், நாகரிகம், பண்பாடு என ஐங்கூறமைந்த தமிழினம் அதனோடு வைத்துப் போற்றத்தகுந்த நாணயங்கள் என விரிகின்ற தலைவர் அவர்களுடைய இந்த வரலாற்று நூல் என்பது மூன்று விதமான தலங்களை முன்வைத்து எழுதப்பட்டதாக நான் நினைக்கின்றேன். இந்தக் கால பெட்டகத்திற்கு ஏன் கவிதைச் சாவி? சிறுகதை, நாவல், உரைநடை, பாடல்கள் என பல்வேறு விதமான தலங்கள் இருக்கும்போது, ஏன் கவிதை என்கின்ற ஒன்றை இதற்கான சாவியாக தலைவர் கலைஞர் தேர்ந்தெடுக்கின்றார் என்று நினைத்துப் பார்த்தேன். பேரறிஞர் அண்ணாவை பேச்சுத் துணைக்காக வைத்துக்கொண்டிருந்த கவித்தாய், தலைவர் கலைஞர் அவர்களை தன் தலை மகனாக வைத்துக்கொண்டதால்தான் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அல்லது மொழியின் உச்சபட்ச சவால் கவிதை என்பதால் அந்தச் சாவி கண்ணுக்குத் தென்படாத பேழைகளைக்கூட திறந்துபார்க்கும் நுட்பம் கொண்டதால் அவர் இதனை தேர்ந்தெடுத்தார். இங்கே எனக்கு பாப்கோவின் கூற்று ஒன்று நினைவிற்கு வருகின்றது. சிலி நாட்டுக் கவிஞரை நீங்கள் நன்றாக அறிவீர்கள். மெருனா, புற்றுநோய்க்கு உட்பட்டு உடல் நலிவுற்றிருந்த நேரத்திலே சில மாதங்களிலே அந்த மிகப்பெரிய அதிர்ச்சியை சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது சிஐஏவின் உதவியுடன் அங்கிருந்த ராணுவம் புரட்சியில் ஈடுபட்டு அதிபராக இருந்த அர்ஜுன் தேவை கொன்றுவிடுகின்றார். அந்தத் தீவிற்கு ராணுவத்தினர் சோதனை செய்வதற்காக வருகின்றார்கள். மரணத் தருவாயில் இருக்கின்ற நிகழ்வாக சொல்லுகின்றார், நாலா பக்கமும் பாருங்கள், இங்கே உங்களுக்கு அபாயம் தருவதாக இருக்கின்ற ஒரே ஒரு போருள் கடிதம் மட்டுமே என்று சொல்லுகின்றார். ஆக, அத்தனை வலிமையான ஊடகமாக அமைந்த வலிமை வாய்ந்த கவிதை இருப்பதால், அதனை இங்கே தலைவர் கலைஞர் அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள் என்று நான் நினைக்கின்றேன். ஒரு அறிஞர் சொல்லுகிறார், நீங்கள் ஒரு நதியிலே இரண்டாவது முறையாக நீராடும்போது அது ஒரே நதியன்று, வேறு நதி என்று சொல்லுகின்றார். ஏற்கனவே. புத்தகமாக நாம் அறியப்பட்டு, சுவைக்கப்பட்ட விஷயம்தான். பேராசிரியர் உ.பி.பா அவர்கள் தன்னுடைய சொற்பொழிவின் மூலமாக அதிலே இருக்கின்ற விஷயங்களை, நுணுக்கங்களை ஏற்ற இறக்கங்களோடு இன்றைய இளைய தலைமுறைக்குப் புரியும்வண்ணம் தரும்பொழுது அது வேறு அனுபவத்தைத் தருகின்றது. அதுவே, இரண்டாவது நதியாக மாறுகிறது. ஒரு காவியத்தை நீங்கள் மறுமுறை படிக்கும்பொழுது, நீங்கள் அதிலிருந்து புதிதாக வேறெதுவும் கற்றுக்கொள்வதில்லை. நீங்கள் கற்றுக்கொள்வதெல்லாம் உங்களைப் பற்றியேதான் என்றொரு வாசகம் எனக்கு நினைவிற்கு வருகின்றது. அதுபோலவே, தலைவர் கலைஞர் அவர்களுடைய இந்தக் காலப் பெட்டகத்தை ஒவ்வொரு முறையும் புதிய நோக்கோடு, ஆய்வு நோக்கோடு அய்யா அவர்களுடைய புத்தக வெளியீடை பார்க்கும்பொழுது நான் புதியன பலவற்றை தெரிந்துகொண்டேன். ஒரு சோறு பதமாக சிலவற்றை இங்கே நான் சுட்டுகின்றேன். ஒரு இடத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் சொல்லியிருக்கின்றார், இருத்துக் கறைந்த சோறு நான் மதித்துக் காத்திடும் சோறாய் மாறியது. குழைத்து இடத்தில் கிடைக்கும் சேறு குட்டிச் சுவரென்று கூட பெறுவதில்லை பேறு. குரங்கினமும் அப்படித்தான். கொழுப்பேறிச் சுற்றுகின்ற மனித இனமாக ஒரு பக்கம் உயர்ந்தாலும், மன்ணிலே கிடப்பதைப் போல மனிதர்களை சொல்லுகின்றார். மேலும், அய்யா உ.பி.பா ஒரு தகவலைச் சொல்லுகின்றார். லெமூரியா கண்டத்திலே இருக்கின்ற அந்த குரங்கிற்குப் பெயர் லெமூ. இந்த விஷயத்தை நான் அவருடைய ஒரு புத்தகத்தைப் படித்துத்தான் தெரிந்துகொண்டேன்.  அதிலிருந்தே லெமூரியா என்கின்ற பெயர் வந்திருக்கலாம் என்கின்ற தகவலைச் சொல்லுகின்றார். இந்திய நாட்டின் வரலாற்றைக்கூட கங்கைக் கiயிலிருந்து எழுதாமல், காவிரிக் கரையிலிருந்து எழுதவேண்டும் என்கின்ற ஆங்கில அறிஞர் வில்ஸ்டன் ஸ்மித் சொன்னதை நினைவுகூர்ந்து அய்யா இந்தப் புத்தகத்தை இந்தக் கால தலைமுறைக்குக் கொண்டுசெல்வதில் மிக முக்கியமான காரணமாக ஒன்றைச் சொல்லுகின்றேன். வெறும் வரலாற்றுச் செய்திகளை மட்டும் சொல்லிச் செல்வது தன்னுடைய கடமையாக இல்லாமல், தற்கால பொதுவுடைமை, முற்போக்குச் சிந்தனையும் இந்தக் காலப் பேழையில் நினைத்து வழங்குகின்றார். வாவோ சொல்லுவார் புரட்சி என்பது இரவு விருந்தல்ல. அதிலும், ஒவியங்களை வரைவதைப் போன்றோ, மெல்லிய துணியிலே பூ வேலைப்பாடு செய்வதைப் போலவோ மெல்லிய செயல் அல்ல. அது ஒரு வர்க்கம், இன்னொரு வர்க்கத்தை பலாத்காரமாக தூக்கி எறிகின்ற செயல் என்று சொல்லுவார். உடனே, நம்முடைய தலைவர் கலைஞர் ஒரு அத்தியாயத்திலே சொல்கின்றார், புல்லை முழுவதுமாக உண்ட அந்தப் பசவின் வயிறு எப்படி இருக்கிறதென்றால், பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பை எல்லாம் கூட்டாகச் சேர்த்துத் தின்று உப்புகின்ற ஆதிக்க வர்க்கத்தின் தொப்பையைப் போல இருக்கின்றதாம் என்று சொல்லுவார். அதனை மிக அழகாக அய்யா அவர்கள் சொல்லிக் காட்டியிருக்கின்றார். அதைப் போலத்தான் புரட்சியைக் குறித்து அந்த மருந்து கொண்டு செல்லுகின்ற அது குறித்து தோழர்களுக்கு சொல்லுகின்ற அந்த விஷயம். இன்னொரு முக்கியமான விஷயமாக அய்யா அவர்கள் சுட்டிக்காட்டுவது என்னவென்றால், தலைவருடைய ஒரு தலைப்பு பிறகேன் வினா என்பதே என்னுடைய வினா என்கின்ற தலைப்பிலே கலைஞர் அவர்கள் சொல்லுகின்றார் முன்னோக்கிச் செல்லும் தைரியத்திலே நான் சற்று பின்னோக்கித் திரும்பிப் பார்க்கின்றேன். இதனைத்தான் அரிமா நோக்கு என்பார்கள், ஆனால் அது என்னுடைய அடியேன் நோக்கு என்கிறார். இந்தப் பகுதியை சிறப்பாக எடுத்துக்காட்டிவிட்டு உ.பி.பா. அவர்கள் ஒரு முக்கியமான கருத்தைச் சொல்லுகிறார், கீதாஞ்சலி என்கின்ற அந்த அருமையான காவியத்தைத் தந்ததற்காக ரவீந்திரநாத் தாகூருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. இந்த ஒரு பகுதியில் மிகத் திறமையாக தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியதற்காக அவருக்கு அந்தப் பரிசு கண்டிப்பாகக் கிடைக்கவேண்டும் என்பதை அழுத்தந்திருத்தமாக அய்யா அவர்கள் பதிவு செய்திருக்கின்றார்கள். ஒரு ஓவியம் உண்டு. காலன் என்கின்ற காலத்தை ஒரு தேவதூதனாக வடித்த ஓவியம். அதில் ஒரு தேவதூதன், தான் உற்று நோக்கிக்கொண்டிருக்கும் ஒன்றிலிருந்து விலகிச்செல்ல முயற்சிப்பதைப் போல காட்சியளிக்கின்றான். அவன் கண்கள் வெறித்து நோக்குகின்றன, வாய் திறந்திருக்கிறது, சிறகுகள் விரிந்துள்ளன. வரலாறு என்னும் தேவதூதன் இப்படித்தான் சித்தரிக்கப்படுகின்றான். அவன் முதுகு கடந்த காலத்தை நோக்கி திரும்பியிருக்கிறது, ஆனால் அவனுடைய கைகள் எதிர்காலத்திலே இருக்கின்றன. திராவிடர்களின் பெருமைமிக வாழ்வும் தமிழ் மன்னர்களது வீரமும் திறனும் புலவர்கள், குறிப்பாக பெண்களின் வீரம், காதல் இப்படிப்பட்டவைகளை நெடுங்காதல் எனத் தந்திருக்கிறார் தலைவர் முத்தமிழ் அறிஞர். அந்தத் தேனருவியில் ஊறித் திளைத்த உ.பி.பா அவர்கள் அந்த அருவியிலே விழுந்து எழுந்துவந்து சிந்தனைகளாக வருபவற்றை இளந்தலைமுறையினரும் சுவைக்கவேண்டும் என்று இந்த புத்தகத்திலே தந்திருக்கிறார். இன்னும் ஒன்றோடு என்னுடைய உரையை நிறைவு செய்யலாம் என்று நான் நினைக்கின்றேன், சி.என்.பாபுவைப்பற்றி நான் உங்களிடம் சொன்னேன். நெருனா தன்னுடைய இளமைக் காலத்திலிருந்து தொடங்கியது ஒரு மிகப்பெரிய காவியமாகும். காவிய நூலுக்குப் பெயர் காட்டோஜான் என்பது. மெக்சிகோவிலே அவர் தன்னுடைய உடல் நலம் குன்றியிருந்தபோது அதனை எழுதி முடித்தார். 20ம் நூற்றாண்டில் ஐரோப்பிய மொழிகளில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கவிதைப் படைப்பு இன்றளவும் அந்த காட்டோஜான் என்று சொல்லப்படுகிறது. அது எதைக்குறித்து பேசுகிறது தெரியுமா? இலத்தீன் அமெரிக்காவின் தொன்மைப் பண்பாடு, கலை நாகரிகம், இலக்கியம், இயற்கை வளம், மனித வளம், உழைக்கும் மக்களின் படைப்புக்கள் இவற்றைப்பற்றி பேசுகின்ற பெரிய படைப்பான அந்த காவிய நூலுக்கு இணையானது தலைவர் கலைஞருடைய அந்த காலப் பெட்டகமும் கவிதைச் சாவியும் என்று நான் கருதுகின்றேன். அந்த ஒரு பெட்டகத்தை அருமையாக தன்னுடைய சொற்பொழிவின் மூலமாக அய்யா அவர்கள் தந்திருக்கிறார். அவருக்கு பாராட்டுகின்ற ஒரு விஷயத்தை வயதைக் காரணம்காட்டி பின்வாங்கமாட்டேன். மனமார்ந்த பாராட்டுக்கள் அய்யா அவர்களுக்கு. உலகத்தில் மனிதருடைய முதல் நாகரிகம் தோன்றிய இடம் எது? மெசபடோமியா என்றொரு கருத்தும் உள்ளது. இன்றைக்கு இருக்கின்ற ஈராக் கிருஸ்து பிறப்பதற்கு 5000 வருடங்களுக்கு முன் தோன்றிய நாகரிகம். கிமு 1700லே இங்கேதான் பனுதாபி என்ற மன்னன் ஆண்டு, உலகத்தில் முதல் சட்டத்தை தொகுத்தான். பின்பு உருக் என்கின்ற அந்த நாட்டை கிங்காமேஷ் என்ற அரசன் கிமு 2750லிருந்து 2700 வரை ஆண்டான். அவரைப்பற்றிய காவியம் அதற்குப் பின்பு எழுதப்பட்டது. இதுதான் உலகத்திலேயே எழுத்திலேயே பாதுகாக்கப்படுகின்ற ஆரிய காவியம். சுமேரியர்களின் ஆக்ரு எழுத்திலே எழுதப்பட்டு இன்றுவரை 11 மண் தட்டைகளிலே அது பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்தக் காவியத்தின் கதாநாயகனான அரசனைப்பற்றி எழுதப்பட்ட அந்தக் காவியம் பலமுறை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. சமீபத்திய மொழிபெயர்ப்பின் முதல் வரிகள் இப்படி ஆரம்பிக்கின்றது, இந்த விவரனை அச்சொட்டாக முழுவதும் பொருந்துகின்ற ஒரே தலைவர் நம்முடைய தலைவர் கலைஞர் மட்டுமே. அதனைக் குறித்து சிறிது சொல்ல இந்த சந்தர்ப்பத்திற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன், நன்றி, வணக்கம். 
                                           * * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *