Pen  நிறுவனத்தின் கனவும் இலட்சியமும்

(Populous Empowerment Network)

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

என்ற தெரிந்து வினையாடல் அதிகாரத்தில் உள்ள திருக்குறளுக்கு, ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அந்தத் திருக்குறளுக்குத் தலைவர் கலைஞர் அவர்கள் மிகக் கூர்மையான ஓர் உரையை வழங்கி இருப்பார்.

அந்தத் திருக்குறளின் அர்த்தத்திற்கு முழுமையாக ஒரு வாழும் உதாரணமாக இருக்கக்கூடியவர் அன்புத் தம்பி மரியாதைக்குரிய சபரீசன் அவர்கள். எறும்பு தோற்கும் சுறுசுறுப்போடு, கூர்த்தமதியோடு, பின் வருவதை முன் உணர்ந்து செயல்படும் மதிநுட்பத்தோடு,   நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பதைப் பகுத்தாராய்ந்து உணரும் ஆற்றலோடு இருக்கக்கூடியவர்  அன்புத்தம்பி சபரீசன்.  அதனால் தான் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள் இவர் சொல்லுக்குச் செவி சாய்க்கின்றார். மாண்புமிகு தளபதியின் அசுர அரசியல் வேகத்துக்கு இவர் உரமூட்டுகின்றார். அவர் இன்னும் இன்னும் உக்கிரமாக அரசியல் களமாடுகிறார். கொள்கை வென்று வருகிறார். அதற்கான பல காரணங்களில் அன்புத் தம்பி சபரீசனும் முக்கியமான காரணம். அவரின் Populous Empowerment Network எனும் Pen நிறுவனம் உருவாக்கி இருக்கக்கூடிய இந்த நூல் வெளியீட்டு அறிமுக விழாவில் நான் உரையாற்றுவதில் பெரிதும் மகிழ்கிறேன்.

நூலைப்படி! சங்கத்தமிழ்

நூலைப்படி! முறைப்படி

நூலைப்படி

காலையில் படி கடும் பகல்படி

மாலை இரவு பொருள்படும்படி

நூலைப்படி!

என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் பாடியிருப்பார். குழந்தை மனங்களை உழுது செழிப்பாக்க வேண்டும். அந்த வெள்ளை மனதில் நல்லெண்ணங்களை விதைக்க வேண்டும் என்கிற நோக்கத்திலே தான் ’’நானும் பேனாவும்’’ என்கிற இந்த எளிய நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வாட்ஸ்அப் யுகத்தில், இந்த ட்விட்டர் யுகத்தில், இன்ஸ்டா யுகத்தில், பத்து வினாடிக்கு மேல் எதிலும் கவனம் செலுத்தாத ரீல்ஸ் யுகத்தில் தங்கிலீஷில் இந்த நூல் வருவது வரவேற்க தக்க ஒன்றாகும். இதிலுள்ள தலைப்புகளே சுவாரசியம் சேர்ப்பதாக உள்ளது.

All about,  Revering the Tamil Thai …, Anna Kilo Evlo?, Polaam Rightu,  Spot the Differences, School ku Polaama?,  Let’s Learn from Anna!, Connect the Dots,  Vaanga Pogalam Suthi Paakalama ….,  Place the Right Colours,  What Comes Next,  Recipe for Progress, Make the Colours Dance, Match jobs, Find the Way!,  Semmozhi Word Search!,  Word Scramble!,  Compare and Draw .., Find the Hidden Treasure,  From Vayal to Vaai! …,  CM Message…. ஆகிய தலைப்புகளிலெல்லாம் குழந்தை உள்ளங்களைக் கொள்ளையடிக்கும் விதத்தில் நூலாக்கம் அமைந்துள்ளது. இந்நூலின் ஆசிரியர்களான ஸ்ரீபிரியா, வர்ஷா ஜெயபாண்டி ஆகிய இருவருக்கும் வாழ்த்துகள்.

 

மாண்புமிகு முதலமைச்சரின் குட்புக்கில் இருப்பவர்:

மரியாதைக்குரிய அன்புத்தம்பி சபரீசன் தலைவர் கலைஞர் முதல்வராக இருந்த அந்தக் காலகட்டத்தில், மாண்புமிகு தளபதியை புரொமோட் செய்யும் பணிகளைக் கச்சிதமாகச் செய்யத் தொடங்கினார் . தலைவர் கலைஞரோடு திமுக-வினர் அனைவரும் தீவிர அரசியலில் களமாடிக்கொண்டிருந்த வேளையில் மாண்புமிகு முதலமைச்சர் தளபதிக்காக அந்தப் பணிகளை அவர் செம்மையாகச் செய்தார். சமூக ஊடகங்கள் கோலோச்சாத காலத்திலேயே அதற்கான பணிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்தினார் அன்புத்தம்பி சபரீசன். குறிப்பாக, 2009 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மாண்புமிகு முதலமைச்சர் தளபதிக்கென பிரத்யேகமாக ஓர் இணையதளத்தை வடிமைத்து, அதில் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி குறித்த செய்திகள், வீடியோக்களைப் பகிரத் தொடங்கியதில் முக்கியப் பங்கு வகித்தார் அன்புத்தம்பி சபரீசன். இதெல்லாம் மாண்புமிகு முதலமைச்சர் தளபதிக்குப் பிடித்துப்போகவே, அவருடைய அரசியல் குட் புக்கில் இன்றுவரை இருக்கின்றார்.

கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு தேர்தல் ஆலோசனை மற்றும் கள ஆய்வு பணிகளில், ‘ஐபேக்’ நிறுவனம் ஈடுபட்டு வந்தது. வெற்றிகரமாக முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிக, ‘சீட்’ வெல்வதற்காக, களப்பணியாற்ற, ‘பென்’ என்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அதில் அசாத்தியமான வெற்றியையும்  அன்புத்தம்பி சபரீசன்  அடைந்துள்ளார்.

இந்த நிறுவனம் கட்சியின் ஐ.டி.,விங்கில் உள்ள முக்கிய நிர்வாகிகள், தனியார் கல்லுாரியில் அடிக்கடி அரசியல், தேர்தல் சர்வே செய்யும் பேராசிரியர் தலைமையிலான குழுவினர், பத்திரிகையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், ஊடக சீனியர்கள் சிலர், உளவுத்துறை அனுபவசாலிகள் சிலர் என, பல தரப்பினரையும் ஒருங்கிணைத்து, ‘பென்’ அமைப்பு இயங்குகிறது.

இதன் வீரியமான செயல்பாடுகள் விண்மீன்களையே எண்ணிச் சொல்லிவிடுமளவுக்கு விவேகமும் வேகமும் கொண்டதாகும்.\

 

புதியன படைக்கும் முயற்சி:

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்

குடைகள் செய்வோம் உழுபடைகள் செய்வோம்
கோணிகள் செய்வோம் இரும்பாணிகள் செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்

என்று மகாகவி பாரதி பாடினான். தமிழ்நாட்டின் கனவுகளைத் தன் கனவுகளாகக் கொண்டு செயல்படும் செயல்வீரரே மாண்பிற்குரிய தம்பி சபரீசன்.

அக்காலத்தில் விஞ்ஞானக் கதைகளில் கூறப்பட்ட பல கருவிகள் இக்காலத்தில் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தப்படுகின்றன. அவர்கள் கற்பனை செய்த ‘மந்திரக் கண்ணாடி’ இன்றைய தொலைக்காட்சி, ‘புஷ்ப விமானம்’ தான் ஆகாய விமானம். எதிரொலியின் பிரதிபலிப்புத்தான் வானொலி. பாரதியின் உழுபடை இப்போதுள்ள டிராக்டர் எனக் கொள்ளலாம்.

இதுபோல் பாரதியும் தொலைதூரத்தில் ஒருவர் பேசுவதைக் கேட்கும் வகையில் கருவி கண்டுபிடிக்கப்பட வேண்டுமென்று பாடுகிறார். இவையெல்லாம் இப்போது சாத்தியமாகி சாதனை படைத்தாகிவிட்டது. வானத்தை வசப்படுத்தும் முயற்சியில் உலகமே ஆவல் கொண்டு அலைமோதுகிறது. அந்த முயற்சியில் அசைக்க முடியாத நம்பிக்கையோடு அன்புத்தம்பி சபரீசனும் ஈடுபடுவது போற்றுதலுக்குரியது. அதன் தொடக்கம்தான் ’’வானம்….’’

 

தமிழ்நாட்டின் எலன் மஸ்க்காக உருவாகிட மரியாதைக்குரிய அன்புத்தம்பி சபரீசன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு நிகராகவானம்என்கின்ற அமைப்பைத் தொடங்கியுள்ளார்.

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலன் மஸ்க் சொந்தமாக ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி ஆய்வு தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வருவது நாமறிந்ததே. இதன் மூலம் பல்வேறு நாடுகளின் அதிக எடைகொண்ட செயற்கைக்கோள்களைத் தனது மேம்படுத்தப்பட்ட ஃபால்கன் ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் ஏவி வருகிறார் எலன் மஸ்க். நாசாவுடன் இணைந்தும் அமெரிக்காவின் பல்வேறு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி பல்வேறு ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார்.

மேலும் மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பும் திட்டத்தையும் செயல்படுத்தி வரும் எலன் மஸ்க் ரீயூஸப்பிள் ராக்கெட்டுகளையும் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சர்வதேச விண்வெளி மையத்தில் வீரர்களை இணைத்த உலகின் முதல் தனியார் விண்வெளி ஆய்வு தொழில்நுட்ப நிறுவனம் என்ற பெருமைக்கும் உரியது.

இந்நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக உலகில் வேறெங்கும் புதிய நிறுவனங்கள் உருவாக்கப்படவில்லை. மாபெரும் கனவுடன் அன்புத் தம்பி சபரீசன் தனியார் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். விண்வெளி ஆர்வலரான தம்பி சபரீசன், இந்தியாவின் முதல் தனியார் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ‘வானம்’ மூலம் தனது கனவை நனவாக்கியுள்ளார்.

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி பத்ம பூஷன் நம்பி நாராயணனின் ஆதரவுடன், அவரது வழிகாட்டுதலில் வானம் உறுதியான அடித்தளத்தைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்தப் புதிய முயற்சி விரைவில் SpaceX போன்றவற்றுக்கு நிகராகவோ, அதனைத் தாண்டியோ , உலகளாவிய விண்வெளிப் பந்தயத்தில் தனக்கென தனி முத்திரையைப் பதிக்கும் என்று நம்புகிறேன்.  ‘புதுமையான’ பட்டியலில் மற்றொரு மைல் கல்லைத் தொடும் என்றும் உளப்பூர்வமாக நம்புகின்றேன். அதற்காக அன்புத் தம்பியை மனதார வாழ்த்துகின்றேன்.

வானம் நிறுவனம் இந்திய விண்வெளி தொடக்க நிலப்பரப்பை மாற்றும் புதிய முயற்சிகளுக்கு வணிக நிபுணத்துவம் மற்றும் சிறப்பு கருவிகளை வழங்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. ஆரம்ப-நிலை விண்வெளி ஸ்டார்ட்அப்கள் தயாரிப்பு-சந்தை பொருத்தம் மற்றும் அளவை அடைய உதவுவதே வானம் நிறுவனத்தின் குறிக்கோள் எனக் கூறப்படுகிறது.

வானம் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் ஸ்டார்ட்அப்களைப் பற்றியது மட்டுமின்றி தூத்துக்குடியில் அமைக்கப்பட உள்ள உந்துசக்தி மையம் உட்பட தமிழகத்தின் பரந்த விண்வெளி உத்தியில் முக்கிய பங்கு வகிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்திற்கான 950 கோடி ரூபாய் முதலீட்டின் ஒரு பகுதியான இந்தத் திட்டம் , இந்தியாவின் வளர்ந்து வரும் விண்வெளி தொழில்நுட்ப மையமாகத் தமிழகத்தை நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி யாரும் காணாத ஒரு கனவைக் கண்டு அதை நனவாக்கும் முயற்சியில் அல்லும்பகலும் அயராது உழைக்கும் அன்புத் தம்பி சபரீசன் அவர்களைப் பார்த்து உண்மையிலேயே பூரிப்படைகின்றேன்.

‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும், கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்றான் பாரதி. என்றாலும், பிற நாட்டு அறிஞர்களின் கருத்துக்கள், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளனவா; அவை தரமாக உள்ளனவா என்பதெல்லாம் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதற்கான காரணங்களாக, சிலவற்றைச் சொல்ல முடியும். முதலில், வெளிநாட்டு அறிஞர், எழுத்தாளர், பதிப்பாளரிடம் இருந்து, மொழிபெயர்க்கும் உரிமம் பெறுவதற்கே, தமிழ் பதிப்பகங்கள் பெரும் தொகை செலவிட வேண்டி உள்ளது. மொழிபெயர்க்க வேண்டிய மூல நுாலின் மொழி, கலாசாரம் பற்றி தெரிந்திருக்க வேண்டியது, மொழிபெயர்ப்பாளருக்கு அவசியமாகிறது. மேலும், எழுத்தாளர், அறிஞரின் எண்ணங்களை அறிந்தவராகவும், அவர் இருக்க வேண்டும். மொழிபெயர்க்கப்பட்ட பின், அது, ஆசிரியர் குழுவால், மூல நுாலுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட வேண்டும்.

அது, கூடுதல் செலவாக இருக்கும். அவற்றை சரிகட்டும் அளவுக்கு, புத்தகங்கள் விரைவாக விற்பனையாக வேண்டும். ஆனால், மேற்சொன்ன எவையுமே, தமிழ் வாசகர் மற்றும் பதிப்பாளர் மத்தியில் நடப்பதில்லை. அதனால், தமிழில் மொழிபெயர்க்கப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை, மிக குறைவாகவே உள்ளது; அதேசமயம், அவற்றை விரும்பும் வாசகர்களின் எண்ணிக்கையும் சொற்பமாகவே உள்ளது. இதையும் தாண்டி, கருத்து தாக்கத்தால் ஏற்பட்ட தாகத்தோடு, காலச்சுவடு, எதிர் வெளியீடு, விடியல் பதிப்பகம், கண்ணதாசன் போன்ற சில பதிப்பகங்கள், மொழிபெயர்ப்பை நேசித்து வெளிக்கொண்டு வருகின்றன. அவற்றில், பெரும்பாலும், உலக இலக்கியங்கள், உலக வரலாறு, தன்னம்பிக்கை போன்றவை முதல் இடத்தைப் பிடிக்கின்றன. நோபல் பரிசு பெற்ற நுால், இடது சாரி சிந்தனையாளர்களின் கட்டுரைகள், பிரபல எழுத்தாளர்களின் நாவல் உள்ளிட்டவை, அதிக அளவில் விற்பனையாகின்றன. அதனால் வாசகர்களே… மொழிபெயர்ப்பு புத்தகங்களை வாசியுங்கள்; புத்தகங்கள் வழியே உலகை அனுபவியுங்கள்! கோரிக்கை நாள்தோறும் வைக்கப்படுகின்றது.

அப்படியான எளிய முயற்சியே குழந்தைகளுக்கான அறிவு வளர்ச்சிக்கு உதவிடும், ’பேனாவும் நானும்’  எனும் Activity book ஆகும்.

 

 கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதை

உலகிலேயே  குழந்தைகளின் பிஞ்சு மூளைக்கு நூல்களை உருவாக்குவதுதான் மிகவும் கடினமான செயலாகும். அதை அப்துல் ரகுமான் இந்தக் கவிதை வரிகளில் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகின்றார்.

பித்தன் மழைக்காகப் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கினான்.

குழந்தைகளின் கையிலிருந்த

புத்தகங்களைப் பார்த்து புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்.

குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றான்

அவன் மேலும் சொன்னான்

குழந்தைகளே பாடப் புத்தகங்களாக இருக்கிறார்கள்

அவர்கள் கையில் ஏன் காகிதக் குப்பைகளைத் தருகிறீர்கள்?

உங்கள் புத்தகங்கள் கண்களைத் திறப்பதில்லை

ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன

காகித ஓடங்களை நம்பி இருப்பவர்களே!

நீங்கள் எப்படி அக்கரை போய்ச் சேர்வீர்கள்?

இதோ இரவு பகல் என்ற ஏடுகள்

உங்களுக்காகவே புரளுகின்றன

நீங்களோ அவற்றைப் படிப்பதில்லை

இதோ உண்மையான உயிர்மெய்

எழுத்துகள் உங்கள் முன் நடமாடுகின்றன

நீங்களோ அவற்றைக் கற்றுக் கொள்வதில்லை

ஒவ்வொரு பூவும் பாடப்புத்தகமாக இருப்பதை நீங்கள் அறிவதில்லை

நீங்கள் நட்சத்திரங்களைப் படிக்க

கற்றிருந்தால் உச்சரிக்க முடியாத எழத்துகளில்

அதிகமான அர்த்தம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்

நீங்கள் மின்னலின் வாக்கியங்களை

வாசிக்க முடிந்திருந்தால் ஒளியின் ரகசியத்தை அறிந்திருப்பீர்கள் !

உங்களுக்குக் கண்ணீர்த் துளிகளைப்

படிக்கத் தெரிந்திருந்தால்

நீங்கள் மனிதனின் சாரத்தை அறிந்திருப்பீர்கள் !

எழுத்துகளால் அல்ல; காயங்களால் கற்பதே கல்வி

என்பதை அறிந்து கொள்ளுங்கள்

உங்கள் புத்தகங்கள் விளக்குகளாக இருக்கின்றன

சூரியனைக் காண விளக்குகள் தேவைப்படுவதில்லை.

நம்முடைய கல்விச் சூழலையும் வகுப்பறைகளில் நிலவுகின்ற நிலைமைகளையும் அந்த வகுப்புகளில் சுவாரசியமற்றுக் குழந்தைகள் தடுமாறுகின்ற தடுமாற்றத்தையும் மிக நுட்பமாக ஒரு கல்விக் கோட்பாடாக அப்துல் ரகுமானின் கவிதை நமக்கு விவரித்துச் சொல்கின்றது.

இப்படி குழந்தைகளுக்குக் கசந்து போகாத கல்வியைத் தர வேண்டும் என்பதற்காகத்தான் பேனாவும் நானும் என்கிற எளிய நூலை pen நிறுவனம் உருவாக்கித் தந்திருக்கின்றது. குழந்தைகளுக்கு அது இனிப்பு தின்பண்டத்தைப் போல மிகவும் பிடிக்கும் என்பதற்கு இந்த நூலின் எளிமையே சாட்சியாக உள்ளது.

தமிழில் குழந்தைகளுக்காக இதுவரை வெளியான புத்தகங்களில் குழந்தைகள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்களைப் பார்ப்போம்.

  1. அந்தோணியின் ஆட்டுக்குட்டி – கமலவேலன்
    2. ரயிலின் கதை-பெ.நா.அப்புஸ்வாமி
    3. சிறுவர் கலைக்களஞ்சியம் – பெ.தூரன்
    4. நல்ல நண்பர்கள் – அழ.வள்ளியப்பா
    5. நெருப்புக்கோட்டை- வாண்டுமாமா
    6. ஆயிஷா – இரா.நடராசன்
    7. சிறுவர் நாடோடிக்கதைகள் – கி.ராஜநாராயணன்
    8. பனி மனிதன் – ஜெயமோகன்
    9. உலகின் மிகச்சிறிய தவளை – எஸ்.ராமகிருஷ்ணன்
    10. வாத்துராஜா – விஷ்ணுபுரம் சரவணன்
    11. ஆமைகளின் அற்புத உலகம் – யெஸ்.பாலபாரதி
    12. யானைச்சவாரி – பாவண்ணன்
    13. அற்புத உலகில் ஆலிஸ் – லூயி கரோல் – எஸ்.ராமகிருஷ்ணன்
    14. விரால் மீனின் சாகசப்பயணம் – உதயசங்கர்
    15. ஆடும் மயில் மற்றும் மலரும் உள்ளம், அழ.வள்ளியப்பா,
    16. இருட்டு எனக்குப் பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல்) ச. தமிழ்ச்செல்வன்

மொழிபெயர்ப்புப் புத்தகங்கள்
1. அப்பா சிறுவனாக இருந்தபோது, அலெக்சாந்தர் ரஸ்கின்

  1. குட்டி இளவரசன், அந்த்வான் து செந்த் எக்சுபெரி
  2. நீச்சல் பயிற்சி, ரஷ்யச் சிறார் எழுத்தாளர்கள்
  3. ஆலிஸின் அற்புத உலகம், லூயி கரோல் (எஸ். ராமகிருஷ்ணன்
  4. சாரி பெஸ்ட் ஃபிரெண்ட், ஆங்கிலச் சிறார் எழுத்தாளர்களின் கதைகள் (தமிழில் குமரேசன்)

 

ஆலீஸின் அற்புத உலகம்

பத்து வயதில் ஆலீஸின் உலகத்தை வாசித்தேன். ஆலீஸைப் போலவே அன்று நானும் ஒரே நாளில் வளர்ந்து விட்டது போலிருந்தது. அவளைப் போலவே பேசவும், யோசிக்கவும் ஆசையாகயிருந்தது. வீட்டில், கிணற்றடியில், வேப்ப மரத்தின் மீது, கோவில் படிக்கட்டில், வகுப்பறையில் என எத்தனை இடங்களில் வாசித்த போதும் ஆலீஸ் அலுக்கவேயில்லை. ‘ஆலீஸின் அற்புத உலகம்’ குழுந்தைகளுக்கான புத்தகம் மட்டுமல்ல. எந்த வயது மனிதர் வாசிக்கும்போதும், அவரைக் குழுந்தையாக்கிவிடும் மாயக் கண்ணாடி அது.

 

வாசிப்பு தந்த மரியாதை:

இரஷ்ய நாடு இந்தியாவைச் சிறிதும் மதிக்காத காலத்தில் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் சோவியத் இரஷ்யாவில் இந்தியத் தூதுவராகப் பணியாற்றி கொண்டிருந்தார்.  அப்போது ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரம் படிப்பதிலும், படித்ததைச் சிந்திப்பதிலும் செலவிட்டாராம். இந்தச் செயலே அப்போதைய இரஷ்யாவின் அதிபராக மட்டுமல்ல சர்வாதிகாரியாகவும் இருந்த ஸ்டாலின் அவர்களின் நன்மதிப்பைப் பெறக் காரணமாயிருந்தது. இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட ஸ்டாலின் இதயத்தையும் கவர்ந்தார்

 

யுவான் சுவாங்இன் புத்தக வெறி:

சீன நாட்டிலிருந்து நம் நாட்டிற்கு வந்த யுவான் சுவாங் என்னும் அறிஞர் நாளந்தாப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின் சில காலம் அங்கேயே பேராசிரியராகவும் இருந்தார். பின் தாயகம் திரும்பி, புத்தமதப் பிரச்சாரம் செய்ய விரும்பினார். அதற்காகச் சில அறநூல்களையும் தம்முடன் எடுத்துச் சென்றார். மாணவர்கள் பலர் வழியனுப்பச் சென்றனர். படகு சிந்து நதியின் நடுவில் சென்று கொண்டிருந்தது. அப்போது புயல் வீசியது. படகு கவிழ்ந்து விடுமோ என்று அனைவரும் அஞ்சினர். யுவான் சுவாங் தாம் கற்றவையனைத்தும், கொண்டு செல்ல நினைத்தவைனைத்தும் பயனற்றதாகிவிடுமோ என்று முகம் வாடினார். அதுகண்ட மாணவர்கள் பாரம் குறைந்தால் படகு தப்பக்கூடும் என நினைந்து அறிவுச்செல்வத்தை விட தம்முயிர் பெரிதல்ல என்பதனையும் நினைத்து ஆற்றில் குதித்து விட்டனர். யுவான் சுவாங்கும் அறிவு நூல்களோடு இந்திய மாணவர்களின் தியாக உணர்வையும் சுமந்து கொண்டு கரைசேர்ந்தார். அறிவு செல்வத்தை கொடுக்கும் புத்தகங்கள் வரலாற்றில் மகத்தான காரியங்களை செய்யும் அதை காக்க தங்கள் உயிரையும் தியாகம் செய்தனர்.

இன்று யாரும் உயிர் தியாகம் செய்ய அவசியம் இல்லை. தொழில் நுட்பம் பெருகிவிட்டது, அச்சகம் வளர்ச்சி எல்லோர் கைக்கும் புத்தகங்களை கொடுத்து விட்டது. முன்பு எப்போதும் இல்லாததை விட அனைத்து துறை சார்ந்த புத்தகங்கள் நவீனமாக வந்து விட்டன. புத்தகங்கள் குறைவாக கிடைத்த காலங்களில் பல அறிஞர்கள் உருவாகினர். ஆனால் இன்று  புத்தகங்கள் எல்லோருக்கும் இருந்தாலும் வாசிப்பதற்கு யாரும் தயாராக இல்லை என்ற கசப்பான நிலை.  பல பள்ளிகள் கல்லூரிகளில் பாட புத்தகங்களை தவிர நூலகத்தை பெரும்பாலும் பயன்படுத்தாமலே இருப்பது வேதனைக்குரியது. மாணவர்கள் மன அழுத்தமின்றி மன நலத்தோடு விளங்க பாட நூல்களை தாண்டி நூலக வசிப்பு அவசியம்.

 

வாசிப்பின் அவசியம்:

“அமெரிக்காவில் தலைசிறந்த வருவாய் ஈட்டுவோர் புத்தகங்களை அதிகம் படிப்பவர்களே” என்று ஆய்வு கூறுகிறது.

“நாளும் பொழுதும் என்னோடு நடமாடிக் கொண்டிருக்கிற என்னை எப்போதும் வீழ்த்திடாத நண்பர்கள் புத்தகங்களே” என்றார் கவிஞர் ராபர்ட்கதே.

வாழ்க்கையின் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளுகிற பேராற்றலைப் புத்தகங்கள் நமக்குப் புகட்டுகின்றன என்பதால் “வாசிப்பு ஒருவனை எப்போதும் தயாராக இருப்பவனாக உருவாக்குகிறது” என்கிறார் பிரான்சிஸ் பேகன் என்ற பேரறிஞர்.

“காட்டுமிராண்டித்தனமான நாடுகளைத் தவிர மற்ற எல்லா நாடுகளும் புத்தகங்களினால் ஆளப்படுகின்றன” என்றார் பேகன்.

“படிக்க தெரிந்த ஒருவன் புத்தகங்களை படிக்காமல் இருப்பது படிக்க தெரியாதவன் நிலையை விட மோசம்.  வோர்ல்ட் வைட் வெப் (www) என்று விரல் நுனியில் அனைத்து தகவல்களும் உள்ளபோது படிப்பதை தவிர்த்தல் ஒரு தேசிய அவமானமாகும் . அமெரிக்காவில் இருந்து கொண்டு அறியாமையில் இருப்பதற்கு மன்னிப்பே கிடையாது” என்கிறார் பர்க் ஹெட்ஜஸ் என்ற சிறந்த அமெரிக்க எழுத்தாளர்.

மார்க்ஸின் அறிவுப்பசி:

இலண்டன் நூலகத்தில் இருபது ஆண்டுக் காலம் படித்து ஆய்வு செய்த கார்ல் மார்க்ஸ் தான் பின்னாளில் பொதுவுடைமைத் தத்துவத்தின் தந்தையாக விளங்கினார். அதேபோல, சட்டமேதை அம்பேத்கர் இதே நூலகத்தில் நூலகம் திறக்கும்போது சென்று, நூலகம் மூடும்போதே வெளியேறுவாராம். அந்தளவுக்கு வாசிப்பை நேசித்த காரணத்தால்தான் உலகம் இன்றைக்கும் அவர்களைக் கொண்டாடுகின்றது.

தங்கள் துறை தொடர்பான அனைத்து நூல்களையும் படித்து முடித்ததன் விளைவாக, அவர்களுக்குப் பெருமை சேர்க்கும்விதமாக, நூலகத்தின் நுழைவாயிலில் மார்க்ஸ், அம்பேத்கர் இருவரின் பெயரும் எழுதப்பட்டிருக்குமாம்.

 

எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுவர் சிறுகதைகள்:

கால் முளைத்த கதைகள், விலங்கள் பொய் சொல்லுவதில்லை, அக்கடா, எலியின் பாஸ்வேடு, எழுதத் தெரிந்த புலி, சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம்,  சிரிக்கும் வகுப்பறை, முட்டாளின் மூன்று தலைகள், தலையில்லாத பையன் போன்ற சிறந்த சிறுவர் கதைகளை எழுதியுள்ளார்.

 

காந்திய செதுக்கிய கதை:

ஹலோ பாட்டியம்மா….

சின்ன வயசில காந்திஜி அரிச்சந்திரன் நாடகம் பார்த்தார். அன்னைக்கு டிவி நாடகம் இல்லை; தெருவில் போடற நாடகந்தான் ..! காந்தியோட அம்மா அவரைத் தடுக்கல ..! இந்த நாடகத்தை மகன் பாக்கணும்னு ஆசைப்பட்டாங்க ..! அதே மாதிரி … உண்மைக்காக அரிச்சந்திரன் பட்ட கஷ்டங்கள் எல்லாம் காந்தியோட மனசைப் பாதிச்சுது. வாழ்வில் எந்த நிலை வந்தாலும் நாம உண்மை மட்டுமே பேச வேண்டும் என்ற உறுதிமொழியை அவர் அரிச்சந்திரன் நாடகம் பார்த்தபிறகுதான் எடுத்துக்கொண்டார் என்பது வரலாறு கூறும் உண்மை ..! அதன் பிறகு அவர், சிறந்த புத்தகங்களைத் தேடித்தேடிப் படித்தார்.

ஜான் ரஸ்கின் எழுதிய “கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என் வாழ்க்கையை மாற்றிய நூல் என்கிறார் காந்திஜி. லியோ டால்ஸ்டாயின் நூல்கள் என் உள்ளத்தில் சத்தியத்தின் ஒளியைப் பாய்ச்சின என்றார். மாணவச் செல்வங்கள் சிறந்த புத்தகங்களைத் தேடிப் படிக்க வேண்டும் ..! பெற்றோர்களும் அவற்றை விரும்பி வாங்கிக்கொடுக்கவேண்டும் ..! ” என்று சொல்லித் தனது உரையைப் பாட்டி நிறைவு செய்தார்.

 

டால்ஸ்டாயின் சிறுவர் சிறுகதைகள்:

சிறார் கதைகள் என்றால் அதிலொரு நீதி சொல்லப்படவேண்டும் என்பது எழுதப்படாத விதி போலும்! சிறுவர்கள் தவறிழைக்கக் கூடியவர்கள், நீதிப்படுத்தப் படவேண்டியவர்கள் என்று பெரியவர்கள் கருதுகிறார்கள். பொதுவாக இத்தகைய ‘நீதிகள்’ பல நேரங்களில் எல்லாருக்குமான ‘அறமாக’ இருப்பதில்லை. இது இடத்திற்கு இடம், ஆளுக்கு ஆள் மாறுபட வாய்ப்பிருக்கிறது. ஏன் ஒரு குழந்தைக்கு நீதியாக இருப்பது பெரியவருக்கு நீதியல்லாமல் கூட இருக்கலாம்?

மகாத்மா காந்தி கொண்டாடிய, புரட்சியாளர் லெனின் பாராட்டிய லியோ டால்ஸ்டாய் அன்பு கசியும் எழுத்துகளால் அறியப்பட்டவர். போரும் அமைதியும், அன்னா கரீனா போன்ற புகழ்மிக்க நாவல்களை எழுதியவர். அவரது கைகளில் வழக்கமான புழக்கத்திலுள்ள சிறார் கதைகள் புது உருவெடுக்கின்றன.

டால்ஸ்டாய் ஈசாப் கதைகள் மீது பேரார்வம் கொண்டிருந்தார். கிரேக்க மொழியைக் கற்றும் பல்வேறு நூல்களைப் படித்தும் ரஷ்ய பாணியில் கதைகளைக் கொண்டு வந்தார்.

கிரேக்க ஈசாப் கதைகளாகட்டும் அல்லது வேறு எந்த நீதிக்கதைகளாகட்டும் கதையின் முடிவில் நீதி ஒன்று சொல்லப்படும் அல்லது பதிய வைக்கப்படும். இந்த முறையை மாற்றி கதையை மட்டும் சொல்லிச் செல்லும் உத்தியைப் பயன்படுத்தினார். இறுதியில் தாமே வலிந்து நீதிகளைத் திணிக்காமல் வாசிப்பவர்கள் மற்றும் குழந்தைகள் தங்களது எண்ணவோட்டத்திற்கேற்ப நீதிகளை அல்லது அறங்களை அமைத்துக்கொள்ளலாம்.

நரியும் நாரையும் ஒன்றுக்கொன்று விருந்து வைத்த கதை , காகம் பெரிய கூஜாவில் நீரருந்திய கதை, ஓநாய் வருவதாக பொய் சொன்ன பொய்யன் கதை, எறும்பும் புறாவும் ஒன்றுக்கொன்று உதவிய கதை, நரியும் திராட்சையும் கதை,  முயலும் ஆமையும் கதை,   இங்கு 102 கதைகளும் இயல்பான கதைகளாகவே சொல்லப்படுகின்றன. எதையும் வலிந்து திணிப்பதில்லை; நீதியையும் கூட. அழகான தாளில் வண்ண ஓவியங்களுடன் நூல் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை ஒன்றும் புதிய கதைகள் அல்ல; பழைய கதைகள்தான். ஆனால் ‘நீதி’ நீக்கம் செய்யப்பட்டக் கதைகள்.

எடுத்துக்காட்டுக்கு ஒன்று தலைப்புக் கதையான ‘எறும்பும் புறாவும்’

“ஓர் எறும்பு நீர் அருந்த ஓடைக்குச் சென்றது. அலை அதன் மீது மோதியதால் அது நீரில் விழுந்தது. அப்போது புறா ஒன்று மேலே அலகில் இலைக் கொத்துடன் பறந்து சென்றது. எறும்பு தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட புறா, அதை நோக்கி இலைக் கொத்தைப் போட்டது. எறும்பு அதன் மீது ஏறி உயிர் பிழைத்தது. பிறகு ஓர் நாள் வேட்டைக்காரர் ஒருவர், மரக்கிளையில் அமர்ந்திருக்கும் புறாவை அம்பு எய்து கொல்வதற்குக் குறி பார்த்தார். அதைக் கண்ட எறும்பு அவர் அருகே சென்று அவர் காலைக் கடித்தது. காலில் சுள்ளென்று வலித்ததும், வேட்டைக்காரர் அம்பை நழுவவிட்டார். புறா பறந்து சென்றது”.

 

எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்சிறுவர் சிறுகதை

ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் இவர்களைப் பார்த்து, “பாரேன், இவர்களை, அற்புதமான கழுதையை ஓட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாராவது அதில் ஏறிச் செல்லலாம். ஆனால் பொருளைக் கொடுத்த கடவுள் அதைப் பயன்படுத்த அறிவைக் கொடுக்கவில்லை, இவர்களுக்கு” என்று ஏளனம் செய்தனர்.

இதனால் வெட்கப்பட்டுப் போன தந்தையும் மகனும் ஒரு முடிவு செய்து, வயதில் சிறியவனான மகன் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, தந்தை நடந்தவாறே இருவருமாகப் போனார்கள். அப்போது வேறு சில வழிப்போக்கர்கள், “இங்கப் பாருடா அநியாயம்! பெரியவர் நடக்கமுடியாமல் நடக்கிறார், இந்த வாலிபப் பையன் சொகுசா கழுதை சவாரி செய்கிறான்” என்று கிண்டலடித்தனர்.

இதைக் கேட்டு இவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாக உணர்ந்த பையன், தந்தையைக் கழுதையில் உட்காரவைத்து இருவரும் புறப்பட்டனர்.இன்னும் சற்று தூரம் சென்ற பின் ஒரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து “கலி முற்றிவிட்டது.. இங்கப் பாரு! நல்லா சுக்குமாந்தடி போல இருக்கிற பெரியவர், ஒரு நோஞ்சான் பையனை நடக்கவிட்டு தான் மட்டும் சொகுசாக கழுதை மேல் ஏறிப்போகிறார்” என்றான்.

வழக்கம் போல இதைக்கேட்ட தந்தை-மகன் இருவரும் ஒரு சேர கழுதைமேல் ஏறிகொண்டனர். இனி இந்த உலகம் தங்களைப் பார்த்துக் கேலிப் பேசாது என்று தந்தைக் கூறினார்.

கொஞ்ச தூரம் சென்றபின் இன்னொரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து “இரண்டு தடியன்கள், ஒரு நோஞ்சான் கழுதையின் மேல் ஏறி சவாரி செய்கிறார்கள்; இரக்கங்கெட்ட ஜென்மங்கள்!” என்று காட்டமாக விமர்சித்தான்.

இதைக் கேட்டு வருந்திய தந்தையும், மகனும் கழுதையிலிருந்து குதித்தனர். இனி என்ன செய்வது? என்று சிந்தித்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு “மக்கள் மனம் மகிழ கழுதையை நாம் கட்டித் தோளில் சுமந்து செல்வோம்!” என்று முடிவு செய்தனர்.

அவ்வாறு கழுதையைத் தோளில் சுமந்து செல்கையில் வழியில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. அதைக் கடக்கையில் கழுதை மிரண்டு போய் வெள்ளத்தில் விழுந்தது. கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! எனவே அது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தந்தையும் மகனும் செய்வதறியாது திகைத்து நின்றனர். எப்படி இருக்கு?

 

‘PEN ஸ்காலர் விருதுகள்

ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவித்து அங்கீகாரம் அளிக்கும், PEN நிறுவனத்தின் சீரிய முன்னெடுப்பான ‘PEN ஸ்காலர் விருதுகள்’ குறித்த தனது உயர்வான கருத்துகளை முனைவர் கே.தாமரைச்செல்வன் அவர்கள் (ஐஐடி-மெட்ராஸ்) பதிவு செய்துள்ளார்.

இந்த விருது இளம் ஆய்வாளர்களுக்கு மாபெரும் வழிகாட்டியாக இருக்கும். தமிழ்நாடு ஆய்வு சார்ந்து சாதிக்க இவ்விருது பெரிய உந்துதலைத் தருமென்று பலதரப்பட்ட கல்வியாளர்கள் வாழ்த்துகின்றார்கள்.

ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவித்துத் தகுந்த அங்கீகாரம் அளிக்கும், PEN நிறுவனத்தின் சிறப்பான முன்னெடுப்பான ‘PEN ஸ்காலர் விருதுகள்’ வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர். கோவி.செழியன் சிறப்புரையாற்றினார்.   Madras Institute of Development Studies (MIDS) இயக்குநர் முனைவர். M.சுரேஷ் பாபு அவர்களும் சிறப்புரை வழங்கினார்.

இவ்வாறு பென் நிறுவனம் பல்வேறு வியத்தகு நிகழ்வுகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

 

Pen நிறுவனம் விண் தொட வாழ்த்துகிறேன்:

Pen நிறுவனத்தின் நிறுவனர் அருமைத்தம்பி சபரீசன் அவர்கள் அப்துல் கலாம் சொன்னதைப் போல பெரிய பெரிய அறிவியல் கனவுகளையும், விஞ்ஞானக் கனவுகளையும், விண்வெளிக் கனவுகளையும் தனக்குள் சுமந்து கொண்டிருக்கிறார். அதனை ஒரு பென்குயின் பறவையைப் போல அடைகாத்து வருகின்றார். அவருடைய கனவுகள் நனவாக வாழ்த்தி மகிழ்கிறேன். சிறார் நூலாக ’ நானும் பேனாவும்’ என்கிற இந்த நூலைப் போல சிறுவர் கதைகள், சிறுவர் விஞ்ஞான நூல்கள், சிறுவர் வரலாற்று நூல்கள், சிறுவர் சிந்தனைக் கதைகள் என்று பல்வேறு தரப்பட்ட வித்தியாசமான நூல்களை இந்த Pen நிறுவனத்தின் மூலமாக உருவாக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைக்கின்றேன். கலை, இலக்கியம், அரசியல், வரலாறு, அறிவியல் என்று அனைத்துத் துறைகளிலும் பென் நிறுவனம் கோலோச்சட்டும் என்று கூறி   நிறுவனத்தின் தூண்களாக இருக்கக்கூடிய அனைவரையும் வாழ்த்தி விடைபெறுகிறேன் நன்றி…. வணக்கம்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *