திருச்சி, புத்தூரில் நடைபெற்ற ‘வீர வணக்க நாள்’ பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை

25.01.2009 அன்று திருச்சி, புத்தூரில் நடைபெற்ற `வீர வணக்க நாள்’ பொதுக்கூட்டத்தில் 
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை

நிகழ்ச்சி:
தலைமை		:	அன்பழகன், மாநகரச் செயலாளர் மற்றும் திருச்சி மாநகர துணை மேயர்		
வரவேற்புரை	:	கண்ணன், உறையூர் பகுதி செயலாளர்
முன்னிலை		:	கே.என்.நேரு, மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர். 
சிறப்புரை		:	அன்பில் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்
					கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும்
					காரைக்குடி கணேசன் உள்ளிட்டோர்
                                         * * * * *

முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்கமாக இருக்கின்ற எங்களுடைய தமிழினத்தின் ஒப்பற்ற ஒரே தலைவர், தமிழுக்காகத் தலை வைத்துப் படுத்த அந்த தண்டவாளத்தில்தான் இன்று வரை திராவிட ரயில் சீராக ஓடிக்கொண்டிருக்கிறது. அவருடைய தலைமையின்கீழ் சீரோடும் சிறப்போடும் இயங்கிக்கொண்டிருக்கிற நம்முடைய கழகத்தின் சார்பிலே நடைபெறும் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்திலே உரை நிகழ்த்தும் இந்த வாய்ப்பினைப் பெற்றிருக்கின்ற நான், அந்த வாய்ப்பினை தந்துவிட்டு, மறைந்தும் மறையாமல் இருக்கின்ற என்னுடைய தந்தை தங்கபாண்டியனை நெஞ்சிலே நிறுத்துகின்றேன். இந்த அரங்கிலே நான் வந்து அமர்ந்த கணத்திலே பார்த்தேன், வானமே கூறையாக, தாய் மண்ணே உங்களுக்கு மண்டபமாக இருக்கின்றது. இரவு நேரத்திலே வழமையாக நிலவு இருக்கும், நட்சத்திரங்கள் இருக்கும். ஆனால் இன்று அவை ஒன்றுமே தென்படவில்லை. எங்கெங்கு பார்த்தாலும் சூரியன் மட்டுமே ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. இது, இயற்கைகூட நமக்கு எப்பொழுதுமே ஒத்துழைப்பு தருகின்ற ஒரு நற்செய்தியைச் சொல்லுகின்றது என்ற உணர்வோடு, இந்த நிகழ்ச்சியை இங்கே மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கின்ற திருச்சி நகரக் கழக முன்னணியினருக்கு என்னுடைய வணக்கம்.

கூட்டத் தலைமையேற்று இங்கே மிகச்சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிற துணை மேயர், மாநகரச் செயலாளர், மதிப்பிற்குரிய மு.அன்பழகன் அவர்களுக்கும், வரவேற்புரை நல்கிய உறையூர் பகுதி கழக செயலாளர் சி.கண்ணன் அவர்களுக்கும், முன்னிலை வகிக்கும் ரங்கா, சீனிவாசன் அவர்களுக்கும், எனக்கு முன்னால், சிறப்பான சொற்பொழிவை ஆற்றிய காரைக்குடி திரு.கணேசன் அவர்களுக்கும், என்னுடைய தந்தையினுடைய வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் இருந்து, இன்றைக்கு திருச்சி மாநகரம் என்றாலே அவருடைய பேரைச் சொல்லாமல் நினைவுகூற முடியாது என்கின்ற அளவுக்கு கழகத்தின் இரும்புத்தூணாக, இந்தப் பகுதியிலே கழகத்தை வளர்த்த மரியாதைக்குரிய அன்பில் அய்யா அவர்களுடைய மகன், சகோதரர் அன்பில் பெரியசாமி அவர்களுக்கும், கே.கே.எம். தங்கராஜா, கந்தன், அம்பிகாபதி, டோல்கேட் சுப்பிரமணி, காமராஜ், கதிர்வேல் மற்றும் எண்ணற்ற என்னுடைய கழகத் தோழர்களுக்கும், நன்றியுரை ஆற்றயிருக்கின்ற மாநகர திமுக துணைச் செயலாளர் இரா.ராமலிங்கம் அவர்களுக்கும் என்னுடைய வணக்கம்.
	
இந்த நிகழ்ச்சியினை, இத்தனை சிறப்பாக ஏற்பாடு செய்து, எனக்கு முன்பாக உங்களுடைய இதயங்களில் எல்லாம் பதிந்து இருக்கின்ற அளவுக்கு ஒரு எழுச்சி உரையை ஆற்றிச் சென்றிருக்கின்ற, திருச்சி என்றாலே, `அவரன்றி ஒரு அணுவும் அசையாது’ என்கின்ற அளவிற்கு கட்சிப் பணியாகட்டும், அல்லது ஆட்சிப் பணியாகட்டும், நம்முடைய தலைவருக்கு என்றென்றைக்கும் உறுதுணையாக இருக்கின்ற, திருச்சியின் திமுக ஆட்சிக் காலத்தை ஒரு பொற்காலமாக மாற்றியிருக்கின்ற, என்னுடைய மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களுக்கு என்னுடைய வணக்கம். 
	
எல்லா சாலையும் ரோமை நோக்கியே போகும் என்று ஒரு சொற்றொடர் உண்டு. உலகத்தின் எல்லாச் சாலைகளும் ரோமை நோக்கித்தான் செல்லுமாம். ரோம் தான் உலக நாகரிகத்திற்கும், கலை, இலக்கிய வளர்ச்சிக்கும் ஆதாரம் என்று சொல்லலாம். இன்றைக்கு தமிழகத்தின் எல்லாச் சாலைகளையும் திருச்சியின் பக்கம் திருப்பியவர் நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அவர்கள். அவருடைய வலிமையான கரங்களுக்கு ஒரு ராசி இருக்கிறது. 1996ல் திருச்சியிலே மிகப்பெரிய மாநாட்டை அவர் நடத்தினார். அடுத்து வந்த தேர்தலிலே நம்முடைய கழகம் அமோகமாக வெற்றி பெற்றது. 2006ல் இன்னுமொரு மாநாட்டை அவர் இங்கே மிகச் சிறப்பாக நடத்தினார். 2006ல் நடந்த தேர்தலிலே வெற்றி பெற்று நாம் மீண்டும் ஆட்சியைப் பிடித்தோம். மிகச் சமீபத்திலே, தமிழ்நாடே வியக்கும் வண்ணம் இங்கே அண்ணா அறிவாலயத்தைக் கட்டி, தலைவரது திருக்கரங்களால் திறந்து வைத்திருக்கிறார். கண்டிப்பாக, நாம் அடுத்து வருகின்ற பாராளுமன்றத் தேர்தல்களிலும் 40ஐயும் வென்று முடிப்போம் என்பதன் அறிகுறிதான் அது என்பதை மகிழ்ச்சியோடு பதிவு செய்கின்றேன். தன்னுடைய அயராத உழைப்பினால், இயக்கத்தை மிகவும் கட்டுக்கோப்பாக நடத்திச் சென்று இந்தப் பகுதியிலே ஒரு மாபெரும் தூணாகவும், கழகத்தின் பெருமை மிகுந்த ஒரு உழைப்பாளியாகவும், திறமைசாலியான ஒரு அமைச்சராகவும் இருக்கின்ற அண்ணணுக்கு என்னுடைய மரியாதையான வணக்கம்.

இந்த இரவுப் பொழுதிலே, மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் பொருட்டு நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சியிலே உங்களையெல்லாம் சந்திக்கும்பொழுது, மகிழ்வும், துக்கமும் கலந்த ஒரு மனோநிலையிலேதான் உங்கள் முன்னே நான் நிற்கின்றேன். மகிழ்ச்சி என்பது நம்முடைய இயக்கம் இந்த மொழிக்காக செய்திருக்கின்ற தியாகங்களையும், அந்த தியாகத்திலே பங்கேற்று தங்களுடைய இன்னுயிரையும் ஈந்த அந்த மாமனிதர்களை போற்றுகின்றோம் என்பதால். ஆனால், துக்கம் என்கின்ற ஒன்றும் இதயத்தைக் கவ்வுகின்றது. உலகத்தின் எந்த வரலாற்றிலாவது, யாராவது, தான் பேசுகின்ற மொழிக்காக தங்களைத் தாங்களே தீயிட்டு, எரித்துக் கொளுத்திக்கொண்டிருப்பார்களா என்று கேட்டீர்களென்றால், சரித்திரத்தின் எந்தப் பக்கங்களிலும் அதற்கான ஆதாரம் இல்லை. அந்தச் சரித்திரம் நடந்திருப்பது நம்முடைய தமிழ்நாட்டிலே மட்டும் தான். அது துக்கமும், மகிழ்வும்  சேர்ந்து வருகின்ற ஒரு சரித்திர நிகழ்வு. தாய்மொழி என்று சொல்லும்போது, தாயையும் மொழியையும் நாம் பிரிக்கமுடியாது. இங்கே, நம்மிடையே இருக்கின்ற தாய்மார்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைவாக இருக்கின்றதே என்று கொஞ்சம் வருத்தம்தான். நம்முடைய தாய்மார்கள் இன்றையதினம் தொலைக்காட்சிப் பெட்டியிலே இருக்கின்ற, வருகின்ற அந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை தவிர்த்துவிட்டு, தாய்மொழிக்காக உயிரை விட்டவர்களைக் குறித்து, மொழிக்காக நம் இயக்கம் என்ன செய்திருக்கின்றது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணி இங்கு வந்து அமர்ந்திருந்தால், கூடுதலாக அமர்ந்திருந்தால், ஒரு பெண்ணாக, ஒரு தமிழச்சியாக இன்னும் எனக்கு அதிக சந்தோஷம் ஏற்பட்டிருக்கும். இருந்தாலும், இன்றைக்கு பெண்களிடத்திலே மிகப்பெரிய விழிப்புணர்வையும், பகுத்தறிவையும் கொண்டு வந்திருக்கிற ஒரே இயக்கம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக இயக்கம்தான் என்கின்ற நம்பிக்கையில், அடுத்த முறை, அல்லது இன்னும் சில நிகழ்வுகளிலே, அவர்கள் மென்மேலும் நம்முடைய பேச்சைக் கேட்க, பங்குகொள்ள வருவார்கள் என்ற நம்பிக்கையோடு என்னுடைய உரையைத் தொடங்குகின்றேன். 
	
திருச்சி மண்டலத்திலே இந்த நிகழ்ச்சி இன்றைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. நம்முடைய கழக சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தீர்களென்றால், திராவிட முன்னேற்றக் கழக இயக்கத்திற்கே ஒரு திருப்புமுனை நகரமாக இருந்தது நம்முடைய திருச்சிதான் என்பதை நான் இங்கே குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அதற்கு நிறைய சம்பவங்களைச் சொல்லாம். மிகக் குறிப்பாக, நமக்கெல்லாம் இன்றைக்கு ஒரு தளர்வறியாச் சூரியனாக, ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைத்துக்கொண்டிருக்கிற நம்முடைய ஒப்பற்ற ஒரே தலைவர், 1953 ஜுலை 15ம் தேதி, இந்த மாவட்டத்திலே இருக்கின்ற கல்லக்குடியிலேதான், கல்லக்குடி என்ற தமிழ் பெயரை மாற்றக்கூடாது என்று தண்டவாளத்திலே தலை வைத்துப் படுத்தார். அது மட்டுமா? 1956லே, மே மாதம் இதே திருச்சியிலேதான், வரலாற்றுச் சிறப்புமிக்க நம்முடைய கழகத்தின் திருப்புமுனை மாநாடு நடைபெற்றிருக்கின்றது. ஏன் அதனை நாம் திருப்புமுனை மாநாடு என்று சொல்லுகின்றோம்? எத்தனையோ மாநாடுகளை நாம் அதற்குப் பின்பு சந்தித்திருக்கின்றோம், நம்முடைய கழகம் அதை எழுச்சியோடு நடத்திக் காட்டியிருக்கின்றது. அன்றையதினம், 1956, மே மாதம் நடந்த மாநாடு ஏன் திருப்புமுனை மாநாடு என்றால், அந்த மாநாட்டிலே தான், பல்லாயிரக்கணக்கிலே கூடியிருந்த மக்களிடையே, கழகம் தேர்தலிலே போட்டியிட வேண்டுமா வேண்டாமா என்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, கண்டிப்பாக கழகம் போட்டியிடவேண்டும் என்ற தீர்ப்பும் கிடைக்கப்பெற்று, நம்முடைய கழகம் தேர்தலிலே நின்ற அந்த சரித்திரச் சம்பவம் நடந்தது. அந்த திருப்பு முனையைத் தந்தது அந்த திருச்சி மாநாடுதான். 

அது மட்டுமா தோழர்களே, 1957ல் குமரியிலிருந்து நாகப்பட்டிணம் வரையிலான தென் பகுதிக்கு நடைபெற்ற தேர்தலிலே, ஒரே ஒருவராக ஜெயித்து குளித்தலை சட்டமன்றத் தொகுதியிலிருந்து நம்முடைய தலைவர் அவர்கள் இந்த மாவட்டத்திலிருந்துதான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார். அதனைத் தொடர்ந்து 1990ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நம்முடைய கழகத்தின் ஆறாவது மாநில மாநாடு நடைபெற்றிருக்கின்றது. 1996 ஜனவரி-ல் நம்முடைய கழகத்தின் எட்டாவது மாநில மாநாடு நடந்ததும் திருச்சியிலேதான். 2006 மார்ச்-ல் நம்முடைய கழகத்தின் ஒன்பதாவது மாநில மாநாடும், இன்றைக்கு மிகுந்த எழுச்சியோடும், புத்துணர்வோடும், வலிமையோடும் இளைஞர்களை வழிநடத்திக் கொண்டிருக்கின்ற, நமக்கெல்லாம் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கின்ற நம்முடைய கழகத்தின் வீரப்பதக்கமாக மிளிர்கின்ற இளைஞரணியை திறம்பட நடத்திக்கொண்டிருக்கிற நம்முடைய தளபதி அவர்களுடைய தலைமையிலான இளைஞர் அணியின் வெள்ளிவிழா மாநாடும் இதே திருச்சியிலேதான் நடைபெற்றது. இத்தனை சரித்திரச் சம்பவங்களை உள்ளடக்கிய இந்த திருச்சி, தன்னுடைய வாழ்விலேயும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று, நம்முடைய தலைவர் அவர்கள் திருச்சியிலே நடைபெற்ற அந்த ஒன்பதாவது மாநில மாநாட்டிலே உரையாற்றும்பொழுது ‘‘திருச்சி எனக்கு ஏறக்குறைய பிறந்த ஊரைப்போல. என்னை அரசியலிலே பல விதங்களிலும் வளர்த்துவிட்டதும் திருச்சிதான். எனக்கான மும்முனைப் போராட்டங்களை அது தந்திருக்கிறது’’ என்று சொல்லுகின்றார். முதல் போராட்டம், மொழிக்காக - கல்லக்குடியிலே நடைபெற்ற அந்தப் போராட்டம். 

அரசியல் ரீதியாக குளித்தலையிலே அவர் பெற்ற வெற்றி அடுத்த தளம். அதற்கடுத்து, அந்தத் தொகுதி மக்களுக்காக, அன்றையதினம் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக இருந்த கல்யாணசுந்தரம் அவர்களோடு சேர்ந்து, நங்காவரம் விவசாயிகளுக்காக அவர் தலைமையேற்றுச் சென்ற அந்த நங்காவரம் போராட்டம் நடைபெற்றது திருச்சியிலேதான். அதற்கடுத்ததாக பேட்டைவாய்த்தலை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்காக நடைபெற்ற போராட்டத்தையும் அவர் தலைமையேற்று முன்னெடுத்துச் சென்றதும் இந்தத் திருச்சியிலேதான். மும்முனைப் போராட்டங்களைத் தந்தது திருச்சி. மொழிக்காக கல்லக்குடி, விவசாயிகளுக்காக நங்காவரம், தொழிலாளர்களுக்காக பேட்டைவாய்த்தலை. அதோடு முடிந்துவிட்டதா இந்தத் திருச்சி மண்டலத்தின் சிறப்பு? நினைத்துப் பார்க்கின்றேன், நினைவு நாளாக அனுஷ்டிக்கப்படுகின்ற இன்றையதினம் மாலை 4.30 மணியளவிலே, 1964ல் திருச்சி புகை வண்டி நிலையத்திலே, உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு, ``இந்தி ஒழிக, தமிழ் வாழ்க’’ என்று, அந்த நேரத்திலும், அய்யோ அம்மா உடல் எரிகிறதே என்று சொல்லாமல், தமிழ் வாழ்க, இந்தி ஒழிக என்று சொல்லிக்கொண்டு தன்னைத்தானே மாய்த்துக்கொண்ட சின்னச்சாமி பிறந்த கீழ்ப்பளூர் இருப்பதும் இந்த திருச்சியிலேதான். அதோடுகூட, இந்த மொழிப்போருக்காக பேரறிஞர் அண்ணா அவர்களால், ``சோர்வற்ற உழைப்பாளி, சொற்செல்வன், அஞ்சா நெஞ்சத்தோடு அவனி சுற்றி வந்த ஆண்மையாளன்’’ என்று சொல்லப்பட்ட பட்டுக்கோட்டை அழகிரி அவர்களுடைய தலைமையிலே திருச்சியிலிருந்துதான் மிகப்பெரிய படை ஒன்று சென்னையை நோக்கி அணிவகுத்துச் சென்றது. அந்தப் படையிலே மூவாலூர் இராமாமிர்தம் அம்மையாரும், மணவை திருமலைசாமி அவர்களும் முன்னிலை வகித்துச் சென்றதாக நம்முடைய கழகத்தின் வரலாறு சொல்லுகின்றது. இத்தனை சிறப்புக்களையும் உள்ளடக்கிய இந்தத் திருச்சியிலே, இந்த மாலையிலே, நாம் யார் குறித்து நினைவுகூர்கின்றோம்? எதற்காக அவர்கள் உயிர் நீத்தார்கள் என்ற அந்த கேள்விக்கு வரும்பொழுது, நம்முடைய ஒப்பற்ற தாய்மொழி குறித்த சரித்திரம் நம் கண் முன்னே விரிகின்றது.

தாய்மொழி என்றால் எப்படிப்பட்ட மொழி அது?  நம்முடைய முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் முதலாக, இப்பொழுது வரை இளமை குன்றாது, ஆரியத்தின் படையெடுப்பையும் மீறி இளமை குன்றாது, என்றென்றைக்கும் ஓங்கி நிற்கின்ற தமிழ்! வழுதி முதல் கடுங்கோன் வரையிலான 89 பாண்டிய பேரரசர்களால் உருவாக்கப்பட்டு, 449 புலவர்களால் ஆராயப்பட்டு, 4440 ஆண்டுகள் வாழ்ந்திருந்த முதல் சங்கத்தமிழ், நாம் பேசுகின்ற நம்முடைய தமிழ்! வெண்தேர்செழியன் முதல் முடத்திருமாறன் வரை 59 பாண்டிய மன்னர்களால் பேணப்பட்டு, அகத்தியர், தொல்காப்பியர் முதலியவரோடு 59 புலவர்களால் ஆராயப்பட்டு, 3,700 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு பாண்டிய நாட்டைக் கடல் கொண்டபொழுதும் சற்றும் பாதிக்கப்படாமல் மங்காது நிலைத்திருந்த ஓங்குதமிழ் நம்முடைய தமிழ்! கடற்கோளில் பிழைத்த முடத்திருமாறன் முதல் உக்கிரப்பெருவழுதி வரை 49 மன்னர்களால் மேலும் மெருகூட்டப்பட்டு, 449 புலவர்களால் நலம் பாடி வளர்க்கப்பட்ட பைந்தமிழ் நம்முடைய தமிழ்! அந்த மொழியிலே பேசுகின்றோம், அந்த மொழியிலே எழுதுகின்றோம் என்பது நமக்கு என்றென்றைக்கும் மிகச் சிறப்பு! உங்களுக்கெல்லாம் தெரியும் நயாக்ரா நீர்வீழ்ச்சி என்பது. அந்த நயாக்ரா நீர் வீழ்ச்சியின் முகப்பிலே "நல்வரவு" என்று நம்முடைய தாய்மொழியான தமிழிலே எழுதப்பட்டிருக்கின்றது.  ஜப்பானிலே இருக்கின்ற ஒரு பல்கலைக்கழகத்திலே நம்முடைய புறநானூற்றுப் பாடலான "யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ என்கின்ற அந்த வரி, அவர்களுடைய ஜப்பானிய மொழியிலே மொழிபெயர்க்கப்பட்டு அங்கே வைக்கப்பட்டிருக்கின்றது.

 அதுமட்டுமா, ஜெருசலம் நகரத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள், கிருத்துவர்களுக்கு மிகப் புனிதமான நகரம். ஜெருசலம் நகரத்திலே இருக்கின்ற ஒலிவ மலையிலே ஒரு கிருத்துவ தேவாலயம் இருக்கின்றது. உலகத்தின் மிகப் புகழ்பெற்ற தேவாலயம் அது. அந்த தேவாலயத்திலே, கிருத்துவின் வழிபாட்டுக் கருத்துக்கள் உலகின் தலைசிறந்த 68 மொழிகளிலே எழுதப்பட்டிருக்கின்றது. அந்தச் சிறப்பு இந்திய மொழி எதற்கும் கிட்டவில்லை. அதிலே இடம்பெற்றது தமிழ் மட்டுமே! அங்கே எழுதப்பட்டிருப்பது நம்முடைய தமிழ் மொழி மட்டுமே. ``நான் திருக்குறளைப் படிப்பதற்காக ஒரு தமிழனாகப் பிறக்கவேண்டும்’’, என்று சொன்னார் நம்முடைய தேசப்பிதா மகாத்மா காந்தி. ``நான் ஒரு தமிழ் மாணவன் என்பதையே மிகப்பெருமையாக என்னுடைய கல்லறையிலே எழுதி வையுங்கள்’’  என்று சொல்லிவிட்டு இறந்துபோனார் ஜி.யூ.போப். இத்தனை சிறப்புகளைப் பெற்றிருக்கிற நம்முடைய தாய்மொழி குறித்து நமக்கு இருக்கலாம் ஆழ்ந்த புலமையும், அறிமுகமும், வரலாற்றுச் சிறப்பும். இத்தனை சிறப்பையும் நாமும், நமக்கு முன்னால் இருந்த தலைமுறையும் அறிந்திருக்கலாம். ஆனால் இத்தனையையும் பட்டியலிட்டுச் சொல்லவேண்டும் நம் இளைய தலைமுறையிடம் என்பதற்கே இந்த வீரவணக்க நாள்! இந்த மொழியைப் பேசுகின்ற, இந்த மொழியை எழுதுகின்ற, இந்த மொழியை உருவாக்கிய தமிழர்களாகிய நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? உலகில் முதன்முதலாக கடல் வாழ்வையும், வணிகத்தையும் முன்னெடுத்தவர்கள் தமிழர்கள்தான். உலகின் அனைத்து பண்பாட்டு நாகரிகத்தின் தொட்டிலாக விளங்கியவர்கள் தமிழர்கள்தான். உலகில் முதன்முதலாக வீடமைப்பு, வீதியமைப்பு, நகரமைப்பு கண்டவர்கள் நாம். உலகில் முதன்முதலாக மொழி இலக்கணமும், கலை, இலக்கியம், அரசியல் பிரிவு, சட்டப் பிரிவுகளையும் வகுத்தவர்கள் நாம். வியன்னாவிலே இருக்கின்ற ஒரு அருங்காட்சியகத்திலே, 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தமிழர் ஒருவரின் கடல் வணிகப் பதிவு பற்றிய குறிப்பு அங்கு இருப்பதாகத் தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிட்டு உள்ளார்கள்.

ஹோசேனர் என்கின்ற ஒரு ஜெர்மானிய அறிஞர், `ஐரோப்பாவிலும், மேற்கு ஆசியாவிலும் இருக்கின்ற இடங்களின் பெயர்களைக் கணக்கெடுத்துப் பார்த்தால், அவை அனைத்தும் தமிழ்ப் பெயர்களே’ என்று சொல்லுகின்றார்.  கடல் கொண்ட குமரிக் கண்டத்திலே தோன்றிய திராவிட நாகரீகம்தான், சிந்து சமவெளி நாகரீகமாகக் கிளைத்து, பின்னர் சுமேரிய நாகரீகமாகப் படர்ந்தது என்று ஆதாரபூர்வமாகச் சொல்கிறார் ஹீராஸ் (Heras) என்கின்ற ஆராய்ச்சியாளர்.  அந்த ஹீராஸ் பெருமகனார் சொல்லுகின்றார், ``உலகின் அனைத்து நாகரிகத்திற்கும், பண்பாட்டிற்கும் முன்னோடியாகவும், தாய்மையானதாகவும் இருப்பது நம்முடைய தமிழ் மொழி - திராவிட மொழி என்பதால்தான், நான் ஸ்பெயின் தேசத்திலிருந்து வந்தாலும், நான் ஸ்பெயின் தேசத்திலிருந்து வந்த திராவிடன் என்று சொல்லிக் கொள்வதிலே மிகப் பெருமையடைகிறேன்’’ என்று உலகின் அனைத்து மொழி குடும்பங்களுக்கும், இந்தோ-ஆரியன் மொழி குடும்பத்திற்கும், தாய் மொழியாக இருப்பது நமது தமிழ் மொழிதான்.  இன்றைக்கு சிந்து சமவெளி நாகரிகம்தான் நம்முடைய திராவிட நாகரிகத்தைவிட முன்னோடி  என்று நிரூபிக்கின்ற முயற்சியிலே பலர் ஈடுபட்டிருக்கிறார்கள்.  


உதாரணத்திற்கு, இராஜாராமன், பி.லால் போன்ற சிலரைச் சொல்லலாம். ஆனால், அவர்கள் எல்லாம் படித்துப் பார்க்க வேண்டும் இரா.மதிவாணனையும், நா.சி.கந்தையாவையும், பூர்ண சந்திரராவையும்.  இந்தப் பேரறிஞர்கள் தங்களுடைய `சிந்துவெளியில் முந்து தமிழ்’ என்ற புத்தகத்திலும், "இண்டஸ் ஸ்கிரிப்ட் திராவிடியன் லாங்குவேஜ்" என்ற புத்தகத்திலும், மிக ஆழமாக நிறுவியிருக்கிறார்கள் -  தொல்காப்பியத்திலே இருக்கின்ற இலக்கண தரவுகளோடு நிறுவியிருக்கிறார்கள் -  அந்த நாகரிகத்திலே கண்டெடுக்கப்பட்ட கற்களிலே எழுதியிருப்பது எல்லாம் நம்முடைய தமிழ் எழுத்துக்கள் தான் என்று.  `உழூ’ என்கின்ற அந்த சொல்லிலிருந்துதான் `உழவன்’ என்ற சொல்லே வந்தது என்பதை நிறுவியிருக்கின்றார்கள்.  இது மட்டுமல்ல, வேளாண்மைக்கு நீர்ப்பாசனம் உலகத்திலேயே முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது நம்முடைய தென்னிந்தியாவிலேதான்.  நம்முடைய தென்னிந்திய நாகரிகம் என்பது தென் சீனாவிலும், மலேசியாவிலும் இருக்கின்ற நாகரிகத்திற்கு ஒப்பானது. இத்தனை பெருமையையும் உள்ளடக்கிய, நம்முடைய பெருமையை, அயல்நாட்டவர் எப்படி வியக்கின்றனர் பாருங்கள்! தரங்கம்பாடியிலே தங்கியிருந்து தமிழ் பயின்று, தமிழுக்கான அகராதியை தயாரித்துக் கொடுத்தவர் சீகன் பாகு எனும் அயல்நாட்டுத் தமிழ் அறிஞர். அவருடைய தொண்டிற்காக இங்கிலாந்து தேசத்திலே ஐந்தாம் ஜார்ஜ் மன்னனுடைய அரசவையிலே ஒரு பாராட்டுப் பட்டயம் அளிக்கப்படுகின்றது; அந்த பட்டயத்தை வந்து பெற்றுக்கொள்ளுமாறு இந்த திருமகனாருக்கு சிறப்பு அழைப்பு அனுப்பப்படுகின்றது.  இவர் சென்று அதை வாங்கும்பொழுது, அந்த சிறப்புப் பத்திரத்தை வாசித்து அளித்த, இங்கிலாந்து நாட்டு கிருத்துவ ஆலயத்தின் மடாதிபதி (Arch Bishop of Canterbury) இவரிடம் சொல்லுகின்றார், ’இந்தப் பட்டயத்தை உலகின் தலைசிறந்த மொழியான லயீத்தின் மொழியிலே எழுதி மிகப் பெருமையோடு உங்களுக்கு அளிக்கின்றேன்’ என்று. பெற்றுக்கொண்ட சீகன் பாகு சொல்லுகின்றார், ‘மிக்க நன்றி, ஆனால் நான் என்னுடைய நன்றியுரையை, உலகின் அனைத்து விழுமியங்களையும் தன்னுள்ளே அடக்கிவைத்திருக்கின்ற, உலகில் என்றென்றைக்கும் அழிவில்லாத செல்வமாக நிலைத்து நிற்கின்ற ஒரு மொழியிலே பேசலாம் என்று நினைக்கின்றேன். என் நன்றியுரையை அந்த மொழியிலே சொல்லுவேன், அது தமிழ் மொழி’ என்கின்றார். 

காந்தியடிகளுக்கும் லியோ டால்ஸ்டாய்க்கும் இருந்த உறவு பெருமைமிக்கது. இருவரும் கடிதப் போக்குவரத்தின் மூலம் நட்பை வளர்த்த திருமகனார்கள். ஒரு முறை லியோ டால்ஸ்டாய்க்கு காந்தியடிகள் ஒரு கடிதம் எழுதுகின்றார், "உங்களுடைய படைப்புக்களில்  எல்லாம் அன்பு, தியாகம், கருணை இவற்றையே வலியுறுத்தி எழுதுகிறீர்களே, இதற்கான கருவை, இதற்கான உட்பொருளை, ஊக்கத்தை எதிலிருந்து எடுத்து எழுதுகிறீர்கள்?" என்று. லியோ டால்ஸ்டாய் நம்முடைய தேசப்பிதாவிற்கு திரும்பவும் பதில் எழுதுகின்றார், ``உங்களுடைய இந்தியாவில் இருக்கின்ற, பேசப்படுகின்ற மொழிகளில் எல்லாம் தலைசிறந்த மொழியான தமிழிலே எழுதப்பட்ட திருக்குறளிலிருந்துதான் என்னுடைய அத்தனை படைப்புக்களுக்கும் கருவினை நான் தேர்ந்தெடுக்கிறேன்’’ என்று. நினைத்துப் பாருங்கள், நம்முடைய மொழியின் வன்மையையும், திண்மையையும், பெருமையையும் எத்துனை அயல்நாட்டு அறிஞர்கள் பாராட்டி, சீராட்டி உலக அரங்கத்திலே பதிய வைத்துச் சென்றிருக்கிறார்கள் என்று.  அந்த மொழியைப் பேசுபவர்கள் நாம், அந்த மொழியை எழுதுபவர்கள் நாம், அந்த மொழியிலே நமக்கு இயல், இசை, நாடகம் என்ற மூன்றும் இருக்கிறது.  அந்த மூன்றையும் பெற்ற மொழியைப் பேசுகின்றோம், எழுதுகின்றோம். அதனைப் பேசுவதால், எழுதுவதால் தமிழர்கள் என்று சொல்லுகின்றோம் என்ற பெருமையோடு வாழ்கின்ற தமிழினத்தின் பிரதிநிதியாக நம்மை நாம் நினைத்துப் பெருமிதம் கொள்கிறோம். அந்த மொழிக்காக உயிர் நீத்தோரின் பெருமை பற்றி நாம் நம்முடைய இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லவேண்டும். 


தாளமுத்து நடராஜன் மாளிகையைப் பார்த்து, ஊரிலே இருந்து வருகின்ற சிறு குழந்தை கேட்கின்றான், `பெரியம்மா, இது என்ன தாளமுத்து நடராஜன் மாளிகை’ என்று, யார் இவர்கள்? என்று. அந்தச் சிறு குழந்தைக்கு திரைப்பட நடிகர்கள், நடிகைகளை நன்றாகத் தெரியும். ஆனால் தாளமுத்துவையும் நடராஜனையும் தெரியாது. அந்த அவல நிலை இங்கே இருக்கின்றது. ஆகையால்தான் நம்முடைய கழகத்தின் தியாகத்தையும், தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் அது கடந்து வந்த பாதையையும் நாம் இன்றைய தினத்திலே அவர்களுக்கு நினைவூட்டக்கூடிய கட்டாயத்திலே இருக்கின்றோம். 

முன்னோட்டமாக வரலாற்றைப் பார்த்தோம் எனில், 1937ல் இராஜாஜி அவர்கள் முதலமைச்சராக ஆகின்றார்கள், இந்தி மொழியைக் கட்டாயமாகக் கொண்டு வருகிறார்கள், நாடெங்கும் எதிர்ப்பு; 1938ல் முதன்முதலாக இந்தி எதிர்ப்பு மாநாட்டைக் கூட்டி அதற்குத் தலைமை தாங்குகின்றார் மறைமலை அடிகள். அதற்குப் பின்பு, தீவிரமாக நம்முடைய கழகம் 1938லிருந்து தொடர்ச்சியாக `இந்தி எதிர்ப்பு’ போராட்டத்தைக் கையில் எடுக்கின்றது. 1938ல் நம்முடைய இயக்கத்திலே முதல் பலி நடராஜன் தான். சென்னை மத்தியச் சிறையிலே அவர் அடைக்கப்படுகின்றார். உடல் நலக் குறைவினால் ஐந்து நாட்கள் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டும், பயனின்றி இறக்கின்றார். முதல் களப்பலி அவர்தான். அடுத்த பலி தாளமுத்து. இருவரும் இறந்த அந்த பலிக்குப் பின்பும் இந்தப் போர் ஓய்ந்ததா? 1942லே மறுபடியும் இந்தி கட்டாயம் என்கின்ற சட்டம் வருகின்றது. மறுபடியும் போராட்டம், கிளர்ச்சி. மறுபடியும் அந்த ஆணை கைவிடப்படுகின்றது. ஏன் சரித்திரச் சம்பவங்களை உங்களுக்கு கோர்வையாக சுட்டிக்காட்டுகிறேன் என்றால், நாம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்து நினைவில் வைத்தால்தான் இன்றைக்கு திரைப்படங்களிலும், ஊடகத் துறையிலும் தங்களை மறந்து, சுய நினைவை இழந்து, ஒரு மாயையில் சுற்றிக்கொண்டிருக்கின்ற நம் பிள்ளைகளுக்கும், மாணவர்களுக்கும் நீங்கள் இதனைச் சொல்லவேண்டும் என்பதால் தான். திராவிட முன்னேற்றக் கழகம் என்ன செய்திருக்கின்றது? என்று வரலாறு தெரியாமல் கேட்பவர்களுக்காகச் சுட்டிக்காட்டுகின்றேன். 1946ல் பிரகாசம் காரு முதலமைச்சர் ஆகின்றார். அவிநாசிலிங்கம் செட்டியார் அவர்கள் கல்வியமைச்சர். மறுபடியும் பள்ளிகளிலே இந்தி கட்டாயம் என்கின்ற ஆணை வருகின்றது. மீண்டும் போராட்டம், கிளர்ச்சி அதிகமாகவே, அந்த ஆணை கைவிடப்படுகின்றது.

சுதந்திரம் பெற்றது முதல் 1963 வரை நிம்மதியாக இருந்தோம். 1963ல் மத்திய அரசு அறிவிக்கின்றது, ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே, துணை மொழியாக ஆங்கிலத்தை வைத்துக்கொள்ளலாம் என்று.  உடனடியாக எதிர்ப்புக் களத்தில் இறங்கிய ஒரே இயக்கம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக இயக்கம்தான். ஒப்பற்ற நம்முடைய தலைவரின் வழிகாட்டுதலில்` அரசியல் சாசனத்தில், இந்தி மொழியை ஆட்சி மொழியாக்குகின்ற 17வது சட்டப்பிரிவின் நகலை, பகிரங்கமாக அறிவித்துவிட்டு, அந்த நகலை கடற்கரையிலே எரிக்கவேண்டும்’ என்கின்ற அந்த தீர்மானம் நம்முடைய இயக்கத்தின் பொதுக்குழுவிலே இயற்றப்படுகின்றது. போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று கைதாகிறார் நம்முடைய தலைவர் அவர்கள். அதோடு நின்றுவிட்டதா அந்தக் காலகட்டம் என்பது? 1964ல் அடுத்த களப்பலி. இங்கே நான் முன்னர் பேசியபோது குறிப்பிட்டுச் சொன்ன கீழப்பளுவூர் சின்னச்சாமி; 1965ல் இந்திய அரசு, 1950ல் இயற்றப்பட்ட அரசியல் சாசனப்படி மீண்டும் இந்தி கட்டாயப்பாடம் என்று கொண்டு வருகின்றபோது, நம்முடைய இயக்கம் 1965 ஜனவரி 26ஐ துக்க நாளாக அறிவித்து கருப்புக் கொடி அணிவோம் என்று அறிவிக்கின்றது.

இதைக் கேட்கின்றார் சிவலிங்கம் என்கின்ற கழகத்தின் தாய்மொழிப் பற்றாளர். அவரால் துக்கத்தைத் தாள முடியவில்லை. சிவலிங்கம் தென்னாற்காடு மாவட்டத்தைச் சார்ந்தவர். ஆனால் பணியாற்றிக்கொண்டிருந்ததோ சென்னை மாநகராட்சியிலே ஊழியனாக. கோடம்பாக்கம் இரயில் நிலையம் சென்று, `என்னுடைய உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என்று சொல்லிக்கொண்டே தன்னை தீயிட்டுக் கொளுத்தி எரித்துக்கொள்கிறார். சின்னச்சாமிக்கு அடுத்து இறந்தவர் சிவலிங்கம். சிவலிங்கத்தின் அந்த கருகிய உடலை அடுத்த நாள் பார்க்கின்றார் அஞ்சல் துறையிலே பணிபுரிந்த அரங்கநாதன் என்பவர். அவரும் தன்னை தீயிட்டு கொளுத்திக்கொள்கின்றார். தொடர்கின்றது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலே மாணவர்களுடைய போராட்டம். போலீஸ் தடியடி, குண்டடி, எதற்கும் கலங்காமல் முன்னேறுகின்ற அந்த மாணவர்களிடையே அடுத்த களப் பலியாக குண்டடிபட்டு சாய்கின்றான் ராஜேந்திரன் என்னும் மாணவன். இதிலே சோகம் என்னவென்றால், போலீஸ் தடியடியிலே, போலீஸ் குண்டுவீச்சிலே பலியாகி இறந்த அந்த மாணவனுடைய தந்தையும் ஒரு போலீஸ்காரர். சிதம்பரத்திற்கு அடுத்து பொள்ளாச்சியிலே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுகின்ற நம்முடைய கழகம், பொள்ளாச்சியிலே பொது வேலைநிறுத்தம், உண்ணா நிலையை அறிவிக்கின்றது. பொள்ளாச்சி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த கழகத்தின் தண்டபாணி அங்கே விஷமருந்தி உயிரிழக்கின்றார். குமாரபாளையத்தைச் சேர்ந்த முத்து என்பவர் தீயிட்டு கொளுத்திக்கொண்டு உயிரை இழக்கின்றார். அடுத்ததாக, ஐயம்பாளையத்திலே வீரப்பன் என்கின்ற ஆசிரியர். அவர் என்ன செய்கின்றார் தெரியுமா? அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டு, எங்கே அப்படியும் சாகாமல் போய்விடுவோமோ என்று, அதற்கு மேலும் தன் மேல் மண்ணெண்ணையிட்டு கொளுத்திக்கொண்டு, `தமிழ் வாழ்க’ என்று சொல்லி இறக்கின்றார். வீரப்பனோடு முடிந்துவிட்டதா இந்த சரித்திரம்? இல்லை நண்பர்களே இல்லை. அறந்தாங்கி வட்டத்தைச் சார்ந்த கீழ்ச்சுனையூர் என்கின்ற கிராமத்திலிருந்து முத்து வருகின்றார். மூட்டைப்பூச்சி மருந்தை அருந்திவிட்டு கீரனூர் பேருந்து நிலையத்திலே தமிழுக்காக உயிர் துறக்கின்றார். இத்தனையையும் கேள்விப்பட்ட, `I belong to the Dravidian stock’ என்பதை மிகப் பெருமையாக சொல்லிச்சென்ற நம்முடைய பேரறிஞர் சொல்லுகின்றார், `போதும் உயிர்ப்பலி, நிறுத்திவிடுங்கள்’, என்று. கேட்டாரா விராலிமலை சண்முகம் - பேரறிஞர் சொன்னபோதும் கேட்காத விராலிமலை சண்முகம் விஷம் அருந்தி அடுத்த களப்பலி ஆகின்றார். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறையிலே ஏவிசி கல்லூரி மாணவரான கழகக் கண்மணி சாரங்கபாணி இறக்கின்றார்.

உலக சரித்திர வரலாற்றிலே எத்தனையோ புரட்சிகளை பார்த்திருக்கின்றோம். பிரான்சு புரட்சி, கியூபப் புரட்சி, ரஷ்யப் புரட்சி என்று! எந்த சரித்திரத்திலும், புரட்சியிலும், விடுதலைக்காக கொரில்லா இயக்கமோ அல்லது போராளிகள் இயக்கமோ போரிட்டதேயொழிய, மொழிக்காக தம்மைத் தாமே மாய்த்துக்கொண்டதாக எங்கும் வரலாறே இல்லை. இதனை அன்றையதினம் ஐ.நா சபையிலே பதிவு செய்திருக்கின்றார் பாகிஸ்தானில் இருந்து ஐ.நா சபைக்கு பிரதிநிதியாக அனுப்பப்பட்ட அம்சத் அலி என்பவர். நம்முடைய இந்தியாவில் இருக்கின்ற தமிழ்நாட்டில் நடக்கின்ற மொழிப்போர் குறித்தும், அதற்காக இத்தனை தியாக உள்ளங்கள் தீக்குளித்து இறக்கின்றன என்பது குறித்தும் உள்ளம் உருக ஐ.நா சபையிலே பேசியிருக்கிறார் அவர். தீக்குளித்து இறந்தவர்களின் பட்டியல் போக,  போராட்டத்திலே குண்டடிபட்டு இறந்தவர்கள் அத்துனை பேரையும் சொல்ல வேண்டுமென்றால் அடுத்த நாள் காலையாகிவிடும்.

சென்னையிலே ஒருவர், திருவொற்றியூரில் ஒருவர், வாலாஜாபாத்தில் ஒருவர், கோவை குமாரபாளையம் 6, பொள்ளாச்சி 13, திருப்பூர் 4, உக்கடம் 2, வெள்ளக்கோவில் 3, சென்னிமலை 1, மதுரை கூடலூர் 5, கம்பம் 22, திருவண்ணாமலை ஆரணி 6, ஆற்காடு 1, சூளையார்பேட்டை 3, பேரணாம்பட்டு 3, திருச்செங்கோடு 4, சிதம்பரம் 1, செஞ்சி 1, கரூர் 3, மணப்பாறை 1, திருச்சி 4, புதுவை 5. நண்பர்களே மனித உயிர்கள் இவர்கள் அனைவரும். நான் ஒரு வசதி கருதி எண்ணிக்கையைச் சொல்கிறேன். ஆனால் ஒவ்வொருவரும் நம்மைப்போல இரத்தமும், சதையுமாக இருந்த நம்முடைய இயக்கத் தோழர்கள், 69 பேர் குண்டடிபட்டு செத்தனர். அவர்களை நினைவுகூறும் வண்ணமாக இன்றையதினம் இந்த வீரவணக்க நாளை, தமிழ்நாடெங்கும் ஒரு விழிப்புணர்வு நாளாக மொழி குறித்து பெருமிதம் கொள்ளும் நாளாக, அடுத்த தலைமுறையினருக்கு நாம் கடந்துவந்த சரித்திரத்தைச் சொல்கின்ற நாளாக முன்னெடுக்கிறது நமது கழகம். ஏன் தெரியுமா? இந்தத் தலைமுறைக்கு, அமெரிக்காவிலே இருக்கின்ற சிலிக்கான் பள்ளத்தாக்கைப்பற்றித் தெரியும், சீன் கானரி, ஜேம்ஸ்பாண்ட் படங்களைத் தெரியும். ஆனால் நம்முடைய எம்.ஆர்.ராதாவைப்பற்றி தெரியாது. நம்முடைய `புதுமனை புகுவிழா’ என்கின்ற தமிழ்ச் சொல் தெரியாது, கரிகாலன் தெரியாது, படிகாரம் தெரியாது, பொய்க்கால் ஆட்டம், எதுவுமே தெரியாது ஆங்கில வழிக் கல்வி கற்கின்ற இந்தத் தலைமுறையினருக்கு. இந்தத் தலைமுறைக்கு, அதிலும் மிகக் குறிப்பாக  திராவிட முன்னேற்றக் கழகம் மொழிக்காக முன்னெடுத்த போரிலே எத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லும்விதமாக, ஒரு விழிப்புணர்ச்சியை அவர்களுக்கு ஊட்டும் விதமாக, மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக இந்த நாளின் அஞ்சலிக் கூட்டங்களை நம்முடைய கழகம் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றது. அந்தக் கூட்டங்களை மிகவும் எழுச்சியோடு நடத்திக் கொண்டிருக்கின்ற நம்முடைய கலைஞர் அவர்கள் எப்படிப்பட்ட ஒப்புயர்வற்ற தலைவர் என்பதற்கு ஒரு சம்பவத்தை நான் சொல்லுகின்றேன். 
	
நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய வாழ்க்கையிலே திருச்சி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருச்சியாக பதியப்பட்டிருக்கிறது. அதை அவரே திரைப்படத்துறையினர் தனக்கு எடுத்த ஒரு பாராட்டு விழாவிலே குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்றார். தலைவர் சொல்லுகின்றார், `திருச்சியிலே ஒரு  போராட்டத்திலே ஈடுபட்டு திருச்சி சிறையிலே அடைக்கப்பட்டிருந்தேன். நான் அந்தச் சிறையைவிட்டு வெளியே வரும்போது என்னை பேரறிஞர் அண்ணா அவர்கள் சிறை வாசலில் காத்திருந்து வரவேற்று அழைத்துச் செல்லுகின்றார்’. அன்றையதினம், இரவு திருச்சியிலே தலைவர் கலைஞர் அவர்களுக்கு பாராட்டுக் கூட்டம், அடுத்த நாள் சென்னையிலே பேரறிஞருடைய தலைமையிலே நம்முடைய கலைஞர் அவர்களுக்கு பாராட்டுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. பேரறிஞர் சொல்லுகின்றார், ‘நீ திருச்சி கூட்டத்தை முடித்துவிட்டு என்னோடு காஞ்சிபுரம் வந்து மதிய உணவு அருந்திவிட்டு பின்னர் இருவரும் சேர்ந்து  சென்னைக்குச் செல்லலாம்’ என்று.  நம்முடைய தலைவரும், பேரறிஞர் சொன்னதை ஒப்புக்கொண்டு, காஞ்சிபுரம் சென்று பின்னர் சென்னைக்குச் செல்கின்றார். அந்த நிகழ்ச்சியை, தானே தன்னுடைய வார்த்தைகளில் எப்படி அவர் வர்ணிக்கிறார் பாருங்கள், `அண்ணா வீட்டில் உணவு அருந்திவிட்டு, மாலையில் இருவரும் புறப்பட்டு சென்னை விழாவிற்கு வந்தோம். இப்போது அண்ணா அறிவாலயத்திற்குப் பக்கத்திலே இருந்த அன்பகத்திலிருந்து எங்களை வரவேற்று ஊர்வலம் புறப்பட்டுவிட்டது. பேரறிஞர் அண்ணாவும் நானும் ஒரு ரதத்திலே அமர்த்தி வைக்கப்பட்டு ஊர்வலம் கடற்கரைக்குச் சென்றது. கடற்கரையிலே திருவிழா நடைபெற்றது. அண்ணா பாராட்டிப் பேசினார். 

இரவு பத்து மணிக்கு அண்ணாவும் நானும் இல்லத்திற்கு திரும்பினோம். அப்பொழுது நம்முடைய தலைவர் அவர்களுடைய அன்னை அஞ்சுகம் அம்மையார் அவர்கள் அண்ணாவை வரவேற்று உட்கார வைத்து ஒரு கேள்வியைக் கேட்கிறார். அண்ணா, அஞ்சுகத்தம்மையாரிடம் கேட்கின்றார், ``என்னம்மா சௌக்கியமா’’ என்று. அண்ணாவைப் பார்த்து அம்மையார் கேட்கிறார், ``ஏற்கனவே நீங்கள் நேற்று வேலூர் சிறையிலிருந்து விடுதலையானீர்கள், விடுதலையானவுடன் காஞ்சிபுரம் வந்து அம்மாவைப் பார்த்தீர்கள் அல்லவா?" என்று. அண்ணா சொல்லுகின்றார், "ஆமாம் அம்மா" என்று. அஞ்சுகத்தம்மையார் மறுபடியும் அண்ணாவிடம் கேட்கின்றார், "அம்மாவைப் பார்த்துவிட்டு மறுபடியும் வேலூருக்குச் சென்று கூட்டத்தில் பேசினீர்கள் இல்லையா? விடுதலையான உடனே நேரடியாக கூட்டத்திற்குச் செல்லவில்லை, அம்மாவைப் பார்த்துவிட்டுத் தானே கூட்டத்திற்குச் சென்றீர்கள்" என்று. பேரறிஞரும் "ஆமாம்" என்கின்றார். அதற்கு அந்த அருமை அம்மையார் பதில் சொல்கின்றார், "உங்களை உங்கள் அம்மா ஒரு நாள் கஷ்டப்பட்டு பெற்றிருக்கிறார்கள் போலும். நான் என்னுடைய பிள்ளையை (நம்முடைய ஒப்பற்ற தலைவரை), 26 நாள் கஷ்டப்பட்டுப் பெற்றேன். அதனால்தான் என் பிள்ளை திருச்சியிலே விடுதலை பெற்று, திருச்சி கூட்டத்திலே பேசிவிட்டு,  காஞ்சிபுரம் வந்து, சென்னைக்கு வந்தும் வீட்டிற்கு வராமல் உங்களோடு கடற்கரை கூட்டத்திற்கு வந்து பேசிவிட்டு இப்பொழுது வந்திருக்கிறார்" என்று. இந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டுவிட்டு எழுதுகின்றார் நம் தலைவர், "இதை ஏன் சொல்கின்றேன் என்றால், நான் பிறப்பதற்கே 26 நாள் கஷ்டம், பிறப்பதே ஒரு போராட்டம், பிறப்பதற்கே ஒரு போராட்டம் நடத்தி வெளிவந்தவன் நான்’’ என்று. `நீங்கள் யார் என்று உங்களை நீங்கள் எப்படி வர்ணித்துக் கொள்வீர்கள்?` என்று ஒரு பத்திரிகையாளர் நம்முடைய தலைவரை கேட்கும்போது, நம்முடைய தலைவர் பதில் சொல்லுகின்றார், `நான் ஒரு மானமிகு சுயமரியாதைக்காரன்` என்று. அப்படிப்பட்ட ஒரு ஒப்பற்ற தலைவர், பிறந்ததே ஒரு போராட்டம் என்றாலும், எத்தனை போராட்டங்களுக்குப் பிறகு நம்முடைய கழகத்தை மிகச் சிறந்த இயக்கமாகப் பேணி வளர்த்திருக்கிறார் என்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டிய ஒரு நாளாக இத்தகைய நிகழ்ச்சிகளை நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். 

இந்திய சரித்திரத்தில் மட்டுமல்ல நண்பர்களே, உலக சரித்திரத்தில்கூட தலைவர் போல், ஒரு நாளைக்கு 20 மணி நேரம் தம்முடைய மக்களுக்காக எந்தத் தலைவரும் கண் துஞ்சாது உழைத்ததில்லை. அவரால் தான், நாம் நம்முடைய மொழி செம்மொழி எனவும், இனம் தமிழினம் எனவும் மிகப் பெருமிதமாக தலை நிமிர்த்தி செல்லுகின்ற வாய்ப்பு நமக்கு இன்றைக்கு வாய்த்திருக்கின்றது. இலங்கைப் பிரச்சினை குறித்து என்ன செய்தீர்கள் என்பவர்களைப் பார்த்து - என்ன செய்யவில்லை நம்முடைய இயக்கம் என நான் திருப்பிக் கேட்கின்றேன். நீங்கள் எல்லாம் இன்றைக்குத்தான் குரல் கொடுக்கிறீர்கள். 1950லிருந்து அந்தப் பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது எங்களுடைய தலைவர் கலைஞரின் இயக்கம் என்பதை நான் அறுதியிட்டுச் சொல்கிறேன். சிதம்பரம் மாநாட்டிலே, பொதுக்குழுவிலே முதன்முதலான அந்த தீர்மானத்தை இலங்கைத் தமிழர்களுக்காக இயற்றியது நமது இயக்கம். ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி ஐ.நா சபையிடம் அனுப்பி வைத்ததும் எங்களுடைய இயக்கம். ஒரே சமயத்தில் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மிகப் பெரிய பிரம்மாண்ட பேரணி 1989 கலவரத்திற்குப் பிறகு சென்னையிலே நடத்தியது எங்களுடைய இயக்கம்தான். இந்தப் பிரச்சினைக்காகப் பதவியை தூக்கி எறிந்தவர்கள் எங்களுடைய இனமான பேராசிரியரும், ஒப்பற்ற தலைவரும். அதுமட்டுமல்ல, இன்றைய தினம் நேற்றைய தினம், நேற்றைக்கு முந்தைய தினம் வரை அதற்காக உள்ளம் உருகி அஞ்சாத அந்த ஒரு திடத்தோடு இருந்தாலும், கண்ணீர் சிந்துபவர் நம் தலைவர். தமிழினத்திற்காக உலகத்தின் எந்த மூலையிலே இருந்தாலும் முதல் முதல் விழுகின்ற தமிழ்க் கண்ணீர் எங்களுடைய தலைவருடையது. முதல் முதல் வருகின்ற தமிழ்ப் பெருமூச்சு எங்களுடைய தலைவருடையது. முதன்முதலாக வானத்திலே எரியப்படுகின்ற அந்த எரி நட்சத்திரங்களை நடு கற்களாக தாங்குவது எங்களுடைய தலைவருடைய தமிழ் நிலம். வழியற்று வேறுவெளியில் புலம்பெயர்ந்து போகின்ற அந்த விண்கலங்களுக்கு எல்லாம் இடம் தருவது எங்களுடைய தலைவருடைய வான்வெளி. இவை அத்தனையும் செய்கின்ற ஒரு ஒப்பற்ற தமிழினத் தலைவருடைய தலைமையிலே இன்றைக்கு நாம் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. 

நம்முடைய கடந்தகால சரித்திரங்களைச் சொல்லிவிட்டு மட்டுமே நாம் மக்களிடையே விழிப்புணர்வை ஊட்ட முடியாது. மூன்று வருடங்களிலே நாம் என்னென்ன செய்திருக்கிறோம் என்பதையும், மிகக் குறிப்பாக எந்தெந்த திட்டங்கள் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளன என்பதையும் சொல்லவேண்டும். உதாரணத்திற்கு, புறம்போக்கு நிலங்களிலே வீடு கட்டிக்கொண்டவர்க்கு பட்டா செய்து கொடுப்பது, விவசாய தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்பட்டது, முதன்முதலாக அரவாணிகளுக்கு நலவாரியம் அமைத்தது, இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், நெம்மேலித் திட்டம், இப்படிப் பல. வரலாற்று சிறப்பு மிக்க உயிர் காக்கும் இலவச காப்பீட்டுத் திட்டத்தை உலகத்தில் இதுவரைக்கும் எந்தத் தலைவரும் முன்மொழிந்தது இல்லை. கருணை உள்ளத்தோடு நம்முடைய தலைவர் அவர்கள் அறிவித்திருக்கின்ற அந்தத் திட்டங்களை, இன்றையதினம் நினைவூட்ட வேண்டும் நாம். ஒரு மொழியை நாம் அழிக்க வேண்டுமென்றால், பேசுகின்ற மொழியைவிட அவர்களுடைய எழுத்து மொழியை கொளுத்தி அழிக்கவேண்டும் என்பதுதான் உலகத்தின் தலைசிறந்த பாசிசவாதிகளான ஹிட்லர் முதலான பலர் சென்று வந்திருக்கின்ற வரலாற்றுப் பாதை. உதாரணத்திற்கு யூதர்கள் அனைவரும் துன்புறுத்தப்பட்ட அந்தக் காலத்திலே ஹிட்லருடைய தலைமையிலே பெர்லின் நகரிலே பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் தீ வைத்துக் கொளுத்தி எரிக்கப்படுகின்றது.  அந்த மொழி அழிந்துபோக வேண்டுமென்று, அந்த இலக்கியம் அழிந்து போகவேண்டும் என்று அன்றைக்கு அந்தக் காரியத்தைச் செய்தார் ஹிட்லர். நம்முடைய யாழ்ப்பாணத்திலே, தமிழர்களின் சின்னமாக இருக்கின்ற யாழ்ப்பாண நூலகம் ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல, மூன்று முறை தீ வைத்து எரித்து கொளுத்தப்பட்டது. சுமார் 93 ஆயிரத்திற்கும் மேலான புத்தகங்கள் அழிக்கப்பட்டன. ஏன் தோழர்களே? மொழி தானாக அழிந்து போகாது - அழிக்கப்பட்டால்தான் உண்டு என்பதால்!

சமீபத்திலே ஒரு செய்தியை நான் இணையதளத்திலே பார்த்தேன்.  அந்தமான் தீவிலே வசிக்கின்ற ஒரு பெண்மணி இறந்துவிட்டார் என்று ஒரு செய்தி வந்தது.  அந்தமான் தீவிலே இருக்கும் ஒரு பெண்மணியின் இறப்பிலே என்ன இருக்கிறது?  எல்லோரும் இறப்பது போல் ஒரு நிகழ்வு தானே என்று பார்த்தால், அடி குறிப்பு சொல்லியது, இவர்தான் அந்த இனக் குழுவினர் பேசக்கூடிய  மொழியை கடைசியாக பேசிக் கொண்டிருந்த பெண்மணி.  அவர் இறந்தபோது அந்த மொழியும் அழிந்ததால், அவருடைய இழப்பு இங்கே ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தாக ஆனது. நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும் - யார் யாரெல்லாம் எப்படி உயிரிழந்து, எப்படி காப்பாற்றப்பட்ட மொழி என்று! நாம் நம் கருத்திலும், நெஞ்சிலும் நிறுத்திக் கொண்டால்தான், அதனை நாம் எதிரிகளுக்கு சவால்விட்டு சொல்வதுடன், வருங்கால இளைய தலைமுறைக்குச் சொல்ல முடியும். மொழித்திறன் என்பது எதிராளியைச் சாமர்த்தியமாக மடக்கவல்லது!.  பேரறிஞர் அண்ணாவைப் பார்த்து, எதிர்க்கட்சியிலிருந்த விநாயகம் அவர்கள் கேட்டாராம், நீங்கள் தமிழைக் கொண்டாடுவதற்காக, "யாகாவா ராயினும் நாகாக்க" என்று பேருந்திலே எல்லாம் எழுதி இருக்கிறீர்களே, யாரெல்லாம் நா காக்க வேண்டும்? என்று.  பேரறிஞர் என்ன சொல்லுவார்? பயணியை பார்த்து, நீங்கள் நா காக்க வேண்டுமென்றால், பயணி சும்மா விட்டுவிடுவாரா?  ஓட்டுநரைக் கூப்பிட்டு சொன்னால், ஓட்டுநர் சும்மா இருப்பாரா?  அப்படியென்றால், பேருந்திலே யாருக்காக, எதற்காக இதனை எழுதியிருக்கிறீர்கள் என்பதுதான் அந்த உறுப்பினருடைய கேள்வி.  பேரறிஞர் சற்றும் பதட்டப்படாமல் சொன்னார், "யாருக்கெல்லாம் நா இருக்கின்றதோ, அவர்களுக்கெல்லாம் எழுதப்பட்டிருக்கிறது" என்று.  இப்படி எதிராளி சொல்லுவதையே, தன் வசம் திசை மாற்றுகின்ற அந்த வல்லமையை நமக்கு தந்திருக்கிறது தமிழ் மொழிதான். 

இந்த சாதுர்யமான மொழி, சாமர்த்தியமான மறு மொழியாவது நம்முடைய ஒப்பற்ற தலைவர், பேரறிஞர் ஆகியோரால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட வழிமுறையாகும்.  `ஜனாப் ஜின்னா யார்?’ என்று ஒரு பத்திரிகையாளர் பேரறிஞரைப் பார்த்து கேட்கின்றார்.  பேரறிஞர் சொல்லுகின்றார், `ஜனாப் ஜின்னா முஸ்லிம், திரு.ஜின்னா திராவிடர், ஸ்ரீமான் ஜின்னா ஆரியர்’ என்று.  இப்படி மொழியிலேயே விளையாட்டுக்களை உட்புகுத்தி அனல் பறக்கும் நாடக வசனங்களையும், பகுத்தறிவு கருத்துக்களையும் புகுத்தியது நம்முடைய இயக்கமும், பேரறிஞர் அண்ணாவும், நம்முடைய ஒப்பற்ற தலைவர் கலைஞரும்தான்.  ஒரு சிறந்த ஆயுதமாக இன்றைக்கும் நமக்கு திகழ்வது, நாம் பேசுகின்ற மொழி மட்டுமே.  அதற்காக உதாரணங்களை மேற்சொன்ன வகையிலே பட்டியலிட்டு இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லுங்கள்.  இத்தனை முட்பாதைகளை, நடந்து வந்த நெருப்புச் சரித்திரத்தை உடையது நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம்.  இத்தனை போராட்டங்களை நாம் பேசுகின்ற மொழிக்காக நடத்தியது நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் - இன்னுயிரை, உலக சரித்திரத்திலே எந்த இடத்திலும் இடம்பெறாத அளவிற்கு ஈந்துவிட்ட அந்தத் தொண்டர்களைப் பெற்றது திராவிட முன்னேற்றக் கழகம்! பொதுமக்களாகிய நீங்கள், நடுநிலையாளர்கள் நினைத்துப் பாருங்கள். எப்படி அகஸ்டஸின் ஆட்சி, ரோமப் பேரரசிலே ஒரு பொற்கால ஆட்சியாக பேசப்பட்டதோ, அது போல் இன்றைக்கு பொற்கால ஆட்சியாக இந்த கழக ஆட்சி இருக்கிறது. இந்த கழக ஆட்சி இருப்பதால் மட்டுமே, ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் சுவாசிக்க முடிகிறது. கருத்துச் சுதந்திரமும், பேசுவதற்கு சுதந்திரமும் முன்னர் எந்த நிலையில் இருந்தது என்பது, இதற்கு முன்பு பொடாவும், தடாவும் பார்த்தவர்களுக்கு நன்றாக தெரியும். எந்தக் காலத்திலும் தற்போது உள்ளது போல் இருந்ததில்லை. அதற்கு ஒரு வெள்ளோட்டமாகத்தான், ஒரு கவிஞர் சொன்னது போல, `இரண்டு சிங்கங்கள் சேர்ந்து ஒரு மானை திருமங்கலத்திலே ஜெயிக்க வைத்தது’.  நாற்பது இடங்களின் வெற்றிக்கு முன்னோட்டமாகத்தான், ‘இரண்டு சிங்கங்கள் சேர்ந்து இன்று ஒரு மானை ஜெயிக்க வைத்திருக்கிறது’. இனி வருங்காலமெலாம் நமது கழகத்திற்கு வெற்றிதான். 

நாம் நம்முடைய நலத்திட்டங்களை சரியாக நம்முடைய மக்களுக்குக் கொண்டு சென்று சேர்ப்போம். நம்முடைய தலைவருடைய வழியிலே அயராது, நம்முடைய கொள்கைகளையும், தியாகங்களையும் பட்டியலிடுவோம்.  கலைஞர் இருக்கிறார் நம்மை வழிநடத்த என்று சொல்லி, அந்த விடியலுக்கு மீண்டும் என்னுடைய வணக்கத்தைச் சொல்லி, உரையை நிறைவு செய்கின்றேன்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *