திருவாரூர் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆற்றிய உரை – திருவாரூர் 13.11.2008

திருவாரூர் தமிழ்ச் சங்கம் சார்பில், 
திருவாரூரில் நடைபெற்ற “தமிழ் எங்கள் உயிர்” – 
இலக்கண இலக்கிய கருத்தரங்கில் ஆற்றிய உரை

	பேரறிஞர் அண்ணா, ஒரு முறை ஒரு கூட்டத்திற்கு இரவு நெடுநேரமாகி, சற்று தாமதமாக சென்றார். எட்டரை மணிக்குப் பேச வேண்டிய அந்த கூட்டத்திற்கு பத்தரை மணிக்குச் சென்றார். கூட்டத்தினர் பொறுமையோடு, சற்றே கோபத்தோடு அவருக்காக காத்திருந்தார்கள்.  அண்ணா மேடையில் ஏறி, “மாசமோ சித்திரை, மணியோ பத்தரை உங்களில் பாதி பேருக்கு சக்கரை, மீதி பேருக்கு நித்திரை, இருந்தாலும் நான் பதிப்பேன் முத்திரை” என்று சொன்னார். மாலை இப்பொழுது மணி நான்கரை, இருந்தாலும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிற அரை மணி நேரத்திலே என்னால் இயன்றவரை உங்களை சற்றேனும் உற்சாகப்படுத்தி, எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்து, இனிய மாலை வணக்கத்தோடு தொடங்குகின்றேன். 
	“ஆரோக்கியமான ஒரு குழந்தையை உருவாக்குவதன் மூலமோ, அழகான சிறிய தோட்டத்தை விட்டுச் செல்வதன் மூலமோ, சமுதாயத்தில் பின்தங்கிய ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி கற்பிப்பதன் மூலமோ, நீங்கள் முன்பு இருந்ததைவிட இந்த உலகத்தை மென்மேலும் அழகானதாக ஆக்கிவைப்பீர்கள்’’ என்ற கூற்றுக்கு இணங்க, காலையிலிருந்து மாலை வரை முழுக்கவே தமிழ் பேசி, தமிழ் குறித்து சிந்தித்து, தமிழ் உணர்வை தட்டி எழுப்பி, தமிழனுடைய நிலை குறித்து ஆராய்ந்து, இந்த சின்னஞ்சிறிய இடத்திலே, இன்றைக்கு இந்த மாவட்டத்திலேயே ஒரு அழகான ஒரு இடமாக மாற்றிவிட்ட திருவாரூர் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த அனைவருக்கும் என்னுடைய வணக்கம்.  மிகக் குறிப்பாக, வரவேற்புரை ஆற்றியுள்ள செயலாளர், திருவாரூர் தமிழ்ச் சங்கம், நல்லாசிரியர் சி.செல்வதுரை அவர்களுக்கும், அறிமுக உரை ஆற்றியிருக்கிற தலைவர், திருவாரூர் தமிழ்ச் சங்கம், புலவர் சண்முக வடிவேல் அவர்களுக்கும், திருமிகு கலைவாணன் அண்ணன் அவர்களுக்கும், நான் மிகவும் மரியாதை வைத்திருக்கிற திரு. பூண்டி கலைச்செல்வன் அவர்களின் சகோதரர் அவர்களுக்கும், தொடக்கவுரை ஆற்றியிருக்கிற மரியாதைக்குரிய தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வை.கண்ணபுரக்கண்ணன் அவர்களுக்கும், இங்கே மேடையிலே தமிழாய்ந்த சான்றோராக அமர்ந்திருக்கின்ற என்னுடைய இனிய நண்பர், நாங்கள் என்றென்றைக்கும் போற்றுதலோடு வணங்குகின்ற பெரியவர், புரவலர் தமிழ்ச் சங்கம் திரு.கு.தென்னன் அவர்களுக்கும், வாழ்த்துரை வழங்கிச் சென்றிருக்கிற மாவட்டக் கல்வி அலுவலர் காந்தி அவர்களுக்கும், திரு.செல்வராசு, மாவட்டச் செயலர், தமிழக தமிழாசிரியர் சங்கம் அவர்களுக்கும், நன்றியுரை ஆற்ற இருக்கின்ற அல்லது ஆற்றிச் சென்றிருக்கின்ற சா.மணி அவர்களுக்கும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய புலவர் வள்ளிநாதன் அவர்களுக்கும், மற்றும் முனைவர் அங்கயற்கன்னி, சிறப்பான உரை ஆற்றியதாக இங்கே குறிப்பிடப்பட்ட என்னுடைய நண்பர் முனைவர் வெற்றிச்செல்வன், எனக்கு முன்பாக தமிழ் உணர்வுக்கான அத்தியாவசியத்தை ஆற்றிச் சென்ற முனைவர் கபிலன், அனைவரோடு சேர்த்து சற்றே கலைப்போடு என் முன்னால் அமர்ந்திருக்கின்ற தமிழ் முதுகலை பட்டதாரி ஆசிரியர், ஆசிரியைகளுக்கு இன்னும் ஒரு முறை என்னுடைய முறையான வணக்கம்.
	எனக்கு முன்பாகப் பேசிய தயாளர்களுக்கு ஒரு சில மணித்துளிகள் இங்கே நான் பேசுவதாக உங்களிடையே குறிப்பிட்டார்.  அந்த தயாளர்கள் கண்டிப்பாக எனக்கு அவசியம்தான்.  தேனீர் பருகிக்கொண்டு, சற்றே சலசலப்பு இருந்த சபையாக நான் வந்த சமயம் இருந்தது. அவர் உரையாற்றியிருந்த அந்த பொழுதிலே தேனீர் பொழுதும் அடங்கி, இப்பொழுது சற்றே சபை கேட்பதற்கு தயாராக இருக்கிறது. அந்த ஒரு அவகாசத்தை, ஆசுவாசத்தை எனக்கு அளித்த திரு.செல்வதுரை அவர்களுக்கு என்னுடைய பிரத்யேகமான நன்றி.  தன்னுடைய பிள்ளைப் பிராயத்திலே தன்னுடைய பிஞ்சுக் கைகளுக்கு அகப்படாத அந்த அழகு நிலாவிலே, பின்னொரு நாளிலே காலடி பதித்திட்ட ஆம்ஸ்ட்ராங்கினுடைய அற்புதமான மனோநிலையிலே, உங்கள் முன்னே நிற்கின்றேன் நான். என்ன தகுதி காரணமாக தமிழ்ச் சான்றோர்களும், பேராசிரியர்களும் பெருகி இருக்கின்ற இந்த அவையிலே, மேடையிலே அமர்ந்திருக்கின்ற அரிய வாய்ப்பு எனக்கு கிட்டியது என்று நினைக்கும்போது, தன் கைகளுக்கு அகப்படாத நிலாவிலே காலடி வைத்திட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனோநிலைதான் என்னுடையது என்று நான் சொல்லவேண்டும்.  மேடையிலே இருக்கின்ற, முன்னாலே இருக்கின்ற நீங்கள் எல்லோரும் தமிழைப் பொறுத்தவரையிலே ஜாம்பவான்கள், பூரணச் சந்திரர்கள், நீச்சல் அடித்துக்கொண்டே முத்துக் குளிக்கின்ற அளவிற்கு இத்துறையிலே விற்பன்னர்கள், வல்லுநர்கள். அனுபவமின்மை காரணமாக என்னுடைய அம்பாரா தூளிகூட காலியாகவே இருக்கிறது. நான் இப்பொழுதுதான் வளர்ந்து வருகின்ற ஒரு இளம்பிறை, தமிழைப் பொறுத்த வரையிலே. என்னை இங்கே அழைத்திருப்பதன் காரணம் என்ன என்று மகிழ்ச்சியோடு நான் நினைத்துப் பார்க்கையில் ஒன்று நினைவுக்கு வந்தது. ஒருவேளை கவலைப்படாதே இளம்பிறையே உன்னுள்ளேதான் பூரணச்சந்திரன் ஒளிந்திருக்கின்றான் என்று என்னை தட்டிக்கொடுத்து, என்னை உற்சாகப்படுத்துவதற்காக இருக்கலாம் என்று நினைக்கின்றேன். இன்னொரு காரணம், பத்து மனிதர்களைவிட ஒரு பெண்ணின் இதயம் அதிகம் பார்க்கிறது என்று சொல்லுவார்கள். ஒருவேளை, தமிழாசிரியர்கள் அனைவரும் பார்க்கின்றதைவிட, ஒரு தமிழச்சியின் கண் சற்று கூர்மையாகப் பார்க்கும் என்று நினைத்திருக்கலாம், ஆகையால் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கலாம். எனினும், ஒரு முக்கியமான காரணமாக நான் இந்த வாய்ப்பைக் கருதுகின்ற ஒன்று என்னவென்றால், என்னுடைய பெற்றோர்கள் ஆசிரியர்கள் மிகமிக பெருமையோடும், பெருமிதத்தோடும், உள்ளார்ந்த பெரு மதிப்போடும் இந்த அசிரியர் பணியை மேற்கொண்டார்கள். ஒருபொழுதும், ஆசிரியர் தொழில் என்பது தொழில் அல்ல.  அது ஒரு வாழ்க்கை முறை என்பதை ஒவ்வொரு நாளும் எனக்கு உணர்த்திச் சென்றவர் பள்ளி ஆசிரியராக இருந்து, பின்அரசியலுக்கு வந்த என்னுடைய தந்தையார்.  கல்விப் பணி என்பது வெறும் சம்பளத்திற்காக மட்டுமே ஏற்றுச் செய்யப்படுகின்ற பணி அல்ல. அது வாழ்க்கை முறையிலே மாற்றங்களைக் கொண்டு வருகின்ற பணி.  அதிலும் மிக குறிப்பாக, டயபேரயபந ளை nடிவ அநசநடல ய ளரதெநஉவ அயவவநச, வை ளை எநசல உடினேவைiடிniபே டிக லடிரச டகைந என்று சொல்லி, எனக்கு இந்தப் பணி மீது ஒரு உன்னதமான மனோபாவத்தை ஏற்படுத்திய என்னுடைய தாய், இறுதி வரை ஆசிரியர் பணியை முழுமையாக முடித்த பெருமைக்கு சொந்தக்காரர்.  நானும் கிட்டத்தட்ட 13 ஆண்டுகாலம் ராணி மேரி கல்லூரியிலே ஆசிரியையாக என்னுடைய வாழ்க்கையை தொடங்கி, இன்று வரையிலும், முன்னாள் மேனாள் ஆசிரியை என சொல்வதிலேயே அதிகப் பெருமைக்குறியவள் என்ற காரணத்தினாலும், இந்த சபை  எனக்கு மனநிறைவை அளிக்கின்றது. 
என்னை அறிமுகப்படுத்திய தோழர் சொன்னார், என்னுடைய தந்தையினுடைய அரசியல் பாரம்பரியம் குறித்தும், என்னுடைய சகோதரருடைய தற்போதைய அமைச்சர் நிலையைக் குறித்தும்.  ஆனால், இன்றளவும் நான் என்னுடைய பிறந்த ஊரான மல்லாங்கிணறில் அறியப்படுவது எப்படியென்றால், ஒரு முன்னாள் அமைச்சரின் மகள் என்றோ, ஒரு இன்னாள் அமைச்சரின் சகோதரி என்றோ நான் அறியப்படமாட்டேன். நான் அறியப்படுவது எல்லாம், இதோ வந்துவிட்டார் சார் மகள், இதோ வந்துட்டாங்க டீச்சர் மகள் என்பார்கள். சார் மகள், டீச்சர் மகள் என்ற அடையாளத்தில்தான் இன்றுவரை என்னுடைய ஊர் பகுதியிலும், அந்த பகுதியிலும் நான் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றேன்.  காரணம், ஆசிரியர்கள் மீது இன்னும் அதீதமான மதிப்பு வைத்து,  அவர்களிடத்திலே சென்று அறிவுரையும், தன்னுடைய குடும்பப் பிரச்சினைகளையும் கூட விவாதித்து தீர்வு காணக்கூடிய சூழல் இருக்கின்ற ஒரு பகுதியிலே இருந்து நான் வந்திருக்கின்றேன்.  இத்தகைய காரணங்களினால், இந்த சபைக்கு, அதிலும் மிகக் குறிப்பாக, பழமையும் பெரும் புகழும் வாய்ந்த திருவாரூர் தமிழ்ச் சங்கம் என்னை அழைத்திருக்கிறது என்று நான் நினைக்கின்றேன்.  அதற்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியினை மிக முறையாக இங்கே நான் பதிவு செய்கின்றேன்.  
திருவாரூரிலே பிறந்தவர்களுக்கும், காசியிலே இறந்தவர்களுக்கும், சிதம்பரத்திலே இறைவனை தரிசித்தவர்களுக்கும் முக்தி என்பது கண்டிப்பாக உண்டு என்று சொல்லுவார்கள்.  எனக்கு பக்தியிலும், முக்தியிலும் நம்பிக்கை இல்லை.  திருவாரூரைவிட திருக்குவளையிலே பிறந்தவர்மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு.  அவரால் முக்தியடைவோம் நாங்கள் என்று என்றைக்கும் எண்ணிக் கொண்டிருக்கின்ற குடும்பப் பாரம்பரியத்திலிருந்து வந்திருக்கின்றேன். ஆக, முழுவதுமாக ஒன்னாப்பு, மூனாப்பு என்று சொல்லப்படுகிற இரண்டு வகுப்புகளைத் தவிர, ஐந்தாம் வகுப்பிலிருந்து முடிக்கப்பட்ட ஆய்வு வரை முழுவதுமாக அங்கிலத்திலேயே பயின்று, ஆய்வினையும் மேற்கொண்டிருக்கின்ற, தமிழிலே கவிதைகள் எழுதுகின்ற தமிழை தாய்மொழியாகக் கொண்டிருக்கின்ற, என்னை இங்கே பேச நீங்கள் அழைத்திருப்பது என்பது இன்னுமோர் ஆச்சரியக் குறியையும் எனக்கு உருவாக்குகின்றது.  தமிழ், பழந்தமிழ் இலக்கியங்களான அகத்தையும், புறத்தையும், திருக்குறளையும், தொல்காப்பியத்தையும், கம்பராமாயணத்தையும் கரைத்துக் குடித்தவள் அல்ல நான். இலக்கணம் என்றால் என்றென்றைக்கும் எனக்குச் சற்று மருண்டுதல் உண்டுதான்.   இலக்கியப் பாடங்களை இரு காது திறந்து, இதயம் திறந்து, விழிகள் விரிந்து கேட்டவர்கள் நாங்கள் என்றாலும், இலக்கணம் என்று வரும்போது, அங்கே கொஞ்சம் எங்களுக்கெல்லாம் இறக்க நாட்கள்தான். ஆனாலும், இந்த சபையிலே ஒரு நாள் முழுக்க, இலக்கியம் குறித்தும், இலக்கணம் குறித்தும் ஏற்கனவே தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மத்தியிலே, எந்த செய்தியை நான் புதிதாகப் பதிந்துகொள்ளப் போகிறேன் என்று சிறு பயம் எழத்தான் செய்கிறது.  
ஒரு கவிஞனுடைய இந்தக் கவிதை இச்சமயம் எனக்கு நினைவுக்கு வருகிறது.  ஜெர்மானிய கவிஞர்களில் தலைசிறந்தவராகக் கருதப்படுகின்ற பால் சலாம், உணர்ச்சிக் கவிதைகளிலே மிகப் பெரும் சாதனையாளராகக் கருதப்பட்டவர்.  அவர் ஷமன் நகரிலே ஒரு இலக்கியப் பரிசு பெரும்போது, ஏற்புரையிலே பின்வருமாறு பேசியிருக்கிறார்.  அவர் சொல்லுகின்றார், ``இழப்புக்களுக்கு மத்தியில் அடையச் சாத்தியம் உள்ளதாய் இருப்பதும், அண்மையில் இருப்பதும், இழக்கப்படாமல் இருப்பதும் மொழி ஒன்றுதான். சகல சாத்திய, பாதக அம்சங்களை மிஞ்சியும் மொழி காப்பாற்றப்பட்டுவிட்டது.  ஆனால், அது தனக்கே சொந்தமானதொரு வலிச்சுமையை கடந்துசெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது.  அதாவது, அதன் பயமுறுத்தும் மொளனத்தில், கொடிய பேச்சின் ஓராயிரம் இருள்களில் என்ன நடந்துபோய்விட்டது என்பதற்கான சொற்களில் தரவில்லை பாருங்கள். ஆனால், அது எப்பேற்பட்ட விஷயத்தைக் கடந்து வந்து அவற்றினால் உரம் ஊட்டப்பட்டு, மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது என்கின்ற நம்பிக்கையை எப்பொழுதும் தந்துகொண்டே இருக்கின்றது.  இந்த மொழி என்கின்ற அந்த பதிலின்மையை கண்டிப்பாக இலக்கணம் என்ற ஒன்றின் வழியாகத்தான் நீங்கள் கடந்து சென்றாகவேண்டியிருக்கிறது.  ஆனாலும், அந்த மொழியின் கறார் தன்மையை மீறிய ஒரு இடம் இருக்கிறதல்லவா, அங்கே இலக்கியத்திற்கான ஒரு ஸ்தாபிக்கப்பட்ட நாற்காலி காத்துக்கொண்டிருக்கின்றது. இலக்கியத்திலே மௌனத்திற்கு இடமுண்டு.  சொற்கள் சொல்லாத அர்த்தங்களுக்கு அங்கே இடமுண்டு.  இலக்கியம் என்றால் என்ன என்கின்ற சான்றோர்களின் கேள்விக்கு பின்னவையில் உள்ள ஒரு விமர்சகரான மார்க்ஸ் ஒரு புகழ்பெற்ற ஒரு பதிலைச் சொன்னார்.  ``இலக்கியம் என்றால் எதனைச் சொல்ல முடியுமோ அதைச் சொல்லாமல் இருப்பதும் இலக்கியம்தான்’’ என்று சொன்னார்.  மேலும் அவர் சொன்னார், ``இலக்கியம் என்பது பிரதிதியிற்ற இன்பம் என்று. பிரதி என்றால் என்ன? உங்களுடைய மொழியிலே நீங்கள் உங்களுடைய உணர்வுகளை அச்சடித்த காகிதமாக கொடுக்கும்போது அதை நீங்கள் பிரதி என்று சொல்லுகிறீர்கள்.  அந்தப் பிரதியிலே தரப்படுகின்ற மொழியை எதன் துணையோடு நான் அழைக்கின்றேன் என்றால், எனக்கு இலக்கணம் அவ்வளவாக தெரியாவிட்டாலும், இலக்கியம் என்கின்ற ஒன்று தருகின்ற இடைவெளியின் மூலமாகவும், மௌனத்தின் மூலமாகவும், மிகக் குறிப்பாக கவிதையின் மூலமாகவும் நான் கடந்துசெல்ல முயற்சிக்கின்றேன்.  வண்ணத்துப் பூச்சியின் சிறகு அசைவில் காற்று அலுப்பு நீக்குகிறது,  பச்சைக் கடல் பொங்குகின்றது,  மழை கூட தன் மானம் இழந்து புகை மண்டலமாகின்றது, எல்லா தொழில்களும் வாழ்க்கையில் திறமையை நிரூபிக்கின்றன, கவிதை மட்டுமே வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைக்கின்றது’’ என்று சொல்லிச் சென்றான். கவிதை என்கின்ற ஒன்றை முழுவதுமாக ஆங்கிலத்திலே படித்து, ஆங்கில இலக்கியத்திலேயே மூழ்கியிருக்கின்ற நான் எப்படி தேர்ந்தெடுத்தேன் என்று வரும்போதுதான், தமிழ் என்கின்ற ஒன்று அங்கே வருகின்றது.  தமிழை பேசுகின்ற, தமிழை தாய்மொழியாகக் கொண்ட மிகக் குறிப்பாக, தென் தமிழகத்திலே கடைக் கோடியிலே வானம் பார்த்த பூமி என்று சொல்லப்படுகின்ற விருதுநகர் மாவட்டத்திலே இருக்கின்ற மல்லாங்கிணறு என்ற கிராமத்திலே பிறந்த நான்,
	..... வியந்த அவர்கள்தான் இன்றைக்கு நயாக்ராவிலே நீர்வீழ்ச்சி முன்பாக நல்வரவு என்று தமிழிலே எழுதியிருக்கின்றார்கள் (கை தட்டல்).  ஜப்பானிய பல்கலைக்கழகம் தன்னுடைய முகப்பிலே நம்முடைய மிகப்புகழ் பெற்ற கவிதை வரியான ``யாதும் ஊரே யாவரும் கேளீர்’’ என்கின்ற அந்த வரியை மொழிபெயர்த்துப் போட்டிருக்கிறார்கள் (கை தட்டல்).  காந்தியடிகளைப் பார்த்து, நீங்கள் ஏன் தமிழனாகப் பிறக்க விரும்புகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டபோது, உங்களுடைய பேரிலக்கியமான திருக்குறளைக் கற்பதற்காக நான் தமிழனாகப் பிறக்க அசைப்படுகிறேன் என்று சொல்கின்றார்.  ஜெருசலம் நகரத்திலே இருக்கின்ற ஒரு மலைக்குகையிலே ஒரு கிருத்துவ தேவாலயம் இருக்கின்றது.  அந்த தேவாலயத்திலே கிருத்துவின் போதனைகள் சுமார் 65 மொழிகளிலே அங்கே வைக்கப்பட்டு இருக்கின்றன.  உலகத்தின் அனைத்து மொழிகளுக்குமான ஒரு இடம் அங்கே இருக்கவேண்டும் என்கின்ற ஒரு கருத்துகொண்டு, 65 மொழிகளிலே இயேசுவின் போதனைகள் அங்கே பதித்து வைக்கப்பட்டிருக்கின்றன.  இந்திய மொழிகளிலே அங்கே கிருத்துவின் போதனைகள் எந்த மொழியில் எழுதப்பட்டிருக்கிறது  தெரியுமா?  நம்முடைய தமிழ்மொழியிலே அங்கே எழுதப்பட்டிருக்கின்றது. (கைத்தட்டல்).  தமிழ் மொழியிலே மிகச்சீரிய பங்கைத் தந்த திருக்குறளைப் பற்றி ஜி.யூ.போப் என்ன சொன்னார்? ``என்னுடைய கல்லறையிலே இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் என்பதை எழுதுங்கள்’’ என்று சொன்னார். நமக்கெல்லாம் தெரியும்  ஜி.யூ.போப். அவருக்கு நிகரான அறிஞர் சி.என்.பாபு என்ற தமிழ் அறிஞர், தரங்கம்பாடியிலே தங்கியிருந்து தமிழ் பயின்றவர். தமிழ் சொற்களுக்கெல்லாம் பிரத்யேக அகராதி ஒன்றையும் தயாரித்து அளித்தவர்.  அவருக்கு இங்கிலாந்து நாட்டின் ஐந்தாம் ஜார்ஜ்  மன்னரின் அரசவையிலே அவருடைய தொண்டிற்காக ஒரு பாராட்டுப் பத்திரம் அளிக்கப்பட்டது.  அந்த பத்திரித்தை பெறுவதற்காக, இவர்  இங்கிருந்து ஐந்தாம் ஜார்ஜ் மன்னனுடைய அரண்மனைக்கு செல்கின்றார்.  பத்திரித்தை வாசிக்க அழைத்த ஆர்ச் பிஷப் ஆப் கேன்பரா சொல்கின்றார், ``பெருமை மிக்க இந்த பாராட்டுப் பத்திரம் உலகின் தலைசிறந்த மொழிகளான லத்தீன், கிரேக்க மொழிகளிலே எழுதப்பட்டு உங்களுக்கு அளிக்கப்படுகின்றது’’ என்று சொல்கின்றார்.  அந்த பட்டயத்தைப் பெற்றுக்கொண்ட சி.என்.பாபு என்ன சொல்கின்றார்? “மிக்க நன்றி, மகிழ்ச்சி. பதிலுக்கு நான் என்னுடைய நன்றியுரையை ஒரு மொழியிலே ஆற்றலாம் என்று நினைக்கின்றேன்.   உலகின் அனைத்து விழுமியங்களையும் தன்னுள்ளே அடக்கியதும், என்றென்றைக்கும் அழிவற்றதுமான தமிழ் மொழியிலே நான் என்னுடைய நன்றியுரையை சொல்லப் போகிறேன்” என்று சொல்கின்றார்.  
லியோ டால்ஸ்டாய்க்கு காந்தியடிகள் ஒரு கடிதம் எழுதுயிருக்கிறார்.  உங்களுடைய படைப்புக்களிலே எல்லாம் எதன் தாக்கத்தினால் எப்பொழுதும், அன்பு, கருணை, தியாகம், தொண்டு, ஆகியவற்றின் கருத்துக்களை முன்னிறுத்து எழுதுகிறீர்கள்? இந்த உந்துதலை எவரிடமிருந்து பெற்றீர்கள்? என்று எழுதுகிறார்.  “உங்களுடைய நாட்டில் பேசப்படுகின்ற, தமிழ்மொழியின் பேரிலக்கியமான திருக்குரளிலிருந்துதான் இத்தனையும் எடுத்தேன்” என்று சொல்கின்றார்.  இத்தனை சிறப்புமிக்க தமிழ் மொழியைப் பேசுகின்ற, எழுதுகின்ற, தமிழ்மொழியை அன்றாடம் சுவாசிக்கின்ற ஒருவராக நாம் பிறப்பதே, வாழ்நாளை நடத்துவதே, நமக்கு தனிப்பட்ட சிறப்பு என்று இருக்கையில், இப்படிப்பட்ட ஒரு நீண்ட நெடிய பாரம்பரியத்தைக் கொண்டவர்கள் தமிழர்களாகிய நாம் என்பதை நினைத்துப் பார்க்கின்ற ஒரு தினமாகவும்  இந்த காலையிலிருந்து மாலை வரை நடைபெறுகின்ற இந்த நிகழ்வு இருந்திருக்கிறது என்று நான் கருதுகின்றேன்.  உலக மக்களுக்கு நாகரீகம் கற்பித்தவர்கள் தமிழர்கள்.  உலகில் முதன் முதலாக கடல் வாழ்வையும், உழவுத் தொழிலையும் முன்னெடுத்த தமிழர்களுடைய நாகரீகம்தான் இன்றைக்கு உலகில் எங்கும் வேரோடி இருக்கின்ற நாகரீகத்தின் தொட்டிலாக இருக்கின்றது.  உலகில் முதன் முதலாக வீதி அமைப்பும், வீடு அமைப்பும், நகரமைப்பும், நாடு அமைப்பும் கண்டவர்கள் நாம்.  உலகில் முதன் முதலாக மொழி இலக்கணமும், கலையும், அரசியல் பிரிவுகளும், சட்டங்களும், பிற கூறுகளும் வகுத்தவர்கள் நாம் என்பதை உங்களுடைய மூதறிஞரான ந.சி.கந்தையா மிக அருமையாக பதிவு செய்திருக்கின்றார்.  வியட்நாமிலே இருக்கின்ற அருங்காட்சியகத்திலே சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த தமிழர் ஒருவருடைய கடல் வணிகப் பதிவு இருப்பதாக தொல்லியல் அறிஞர்கள் மிக குறிப்பாக சுட்டிக்காட்டி இருக்கின்றார்கள். கொசேலர் என்ற ஜெர்மானிய பேரறிஞர் ஒருவர், ஐரோப்பாவிலும், மேற்கு ஆசியாவிலும் இருக்கின்ற அநேகமான இடப்பெயர்கள் அனைத்தும் தமிழ் பெயர் என்பதை ஆதாரப்பூர்வமாக எழுதி இருக்கின்றார்.  கடல் கொண்ட குமரிக் கண்டத்திலே தோன்றிய தமிழர் நாகரீகம்தான் தென் நாட்டிலே திராவிட நாகரீகமாக பிறந்து, பின்னர் சிந்து சமவெளி நாகரீகமாக மலர்ந்து, அதன் பின்னர் சுமேரிய நாகரீகமாக கிழித்து விரிந்தது என்பதை பற்பல ஆதாரங்களுடன் நிலைநிறுத்திய சீராஸ் என்கின்ற ஆராய்ச்சியாளர், “உலகின் அனைத்து நாகரீகங்களுக்கும் தாய்மையானதாகவும், முன்னோடியாகவும் இருப்பது தமிழனுடைய நாகரீகம் என்பதால்தான், நான் ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்திருந்தாலும், என்னை ஸ்பெயின் தேசத்திலிருந்து வந்த திராவிடன் என்று சொல்லிக்கொள்வதிலே நான் பெருமையடைகிறேன்” என்று பதிவு செய்திருக்கின்றார். என்ன சான்றுகள் வேண்டும்? உலகில் தென்னிந்தியாவில்தான் முதன் முதலாக உலகிலேயே வேளாண்மைக்கு நீர்ப்பாசனம் பயன்படுத்தப்பட்டது.  தென்னிந்தியாவின் நெல் நாகரீகம். 
	இந்தோனேஷியாவின் நாகரீகத்திற்கும், தென் சீனாவின் நாகரீகத்திற்கும் இணையாக பேசப்பட்ட ஒன்றாகும்.  நம்முடைய அகழ்வு ஆராய்ச்சியில் கிடைத்த அந்த ``உழு’’ என்கின்ற கல்லிலிருந்துதான் உழவன் என்ற சொல்லே உருவாகியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது.  அடுக்கிக்கொண்டே போகலாம், மிக நீண்ட பண்பாட்டிற்கும், மொழிக்கும், திணை வாழ்க்கைக்கும் சொந்தக்காரரான நாம் இன்றைக்கு அயல் பண்பாடுகள், பிற மொழிப் பண்பாடுகள் அனைத்தும் புழங்குகின்ற முதலாளித்துவ, உலகமயமாக்கப்பட்ட, தனியார்மயமாக்கப்பட்ட, பன்னாட்டு பண்பாட்டு மையத்திலே இருக்கின்ற நாம், நம்முடைய இளைய தலைமுறைக்கு நம்முடைய வேர்களையும், நம்முடைய அடையாளங்களையும், நம்முடைய மொழியின் தொன்மையினையும், நம்முடைய மொழியினுடைய பாரம்பரிய சிறப்பினையும் என்றும் இரவாகாத சீரிளமையும் எடுத்துச் சொல்வதோடு, நம்மையும் நாம் சற்று திரும்பி நோக்குவதற்காகவே இந்த மாதிரியான ஊக்கமிகு பயிற்சிப் பட்டறைகள் நடைபெறுவதாக நான் நினைக்கின்றேன்.  எப்படிப்பட்ட சூழல் இன்று நிலவுகின்றது? முழுவதுமாக ஆங்கில வழியிலே கல்வி கற்கின்ற அந்த இளைய சமுதாயத்திற்கு என்ன தெரியும்? அவர்களுக்கு கடிவாளத்தைப்பற்றி தெரியாது, படிகாரத்தைப்பற்றித் தெரியாது, எம்ஆர் ராதாவைத் தெரியாது, பொய்க்கால் ஆட்டத்தைத் தெரியாது, பந்தக்காலாட்டம் தெரியாது, காரக்குறிச்சி அருணாச்சலத்தைத் தெரியாது,  தமிழ் என்கின்ற ஒன்றின் மொழி, அதனுடைய ஆளுமை, அதனுடைய திறன் எப்படி என்பது குறித்து தெரியாது.  ஆனால் கேளுங்கள், செலின் டயோ பாடல் தெரியும், சிலிகான் பள்ளத்தாக்கைப் பற்றி நன்றாகத் தெரியும், சீன் கேன்னரி படங்கள் என்ன என்றால் மிக நன்றாகத் தெரியும், அதிலே தவறில்லை. ஆனாலும், நம்முடைய வேர்கள் எங்கே இருக்கின்றன? வேர்களிலே நம்முடைய கால்களை, பாதங்களை அழுத்தமாக பதித்து விட்டு நம்முடைய இறக்கையை எந்தக் கலாச்சாரத்திற்கு வேண்டுமானாலும் நாம் இழுத்துச் செல்லலாம் என்கின்ற அந்த உணர்வை செலுத்த வேண்டிய மிகப் பெரிய பங்கு, அதிலும் குறிப்பாக மொழியை கற்றுத் தருகின்ற ஆசிரியர்களாகிய உங்களிடத்திலே இருக்கின்றது.	
வரிசையிலே நின்றால் என்ன? என்று கேட்டால், நீங்கள் ஏதோ சமூக நிலையிலே உங்களை தாழ்ந்தவர்களாக உங்களை நோக்குகின்றது.  அப்படிப்பட்ட மொழியா நம் மொழி?  எத்தனை அழகுகளை அது தந்திருக்கிறது என்பதை மிக இலகுவான முறையிலே மாணவர்களுக்கு நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள்.  கவிதை என்கின்ற ஒன்றை எப்படி நாம் நம்முடைய மாணவ மாணவிகளுக்கு அறிமுகப்படுத்துவது என்று நான் யோசித்து பார்க்கும் போதெல்லாம், திரைப்படத்தின் மூலமாகச் சொன்னால் அவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.  கண்கள் குறித்து எத்தனையோ கவிதைகள் நம்முடைய அகப் பாடல்களிலே இருக்கின்றன, மரங்கள் குறித்து பாடல்கள் இருக்கின்றன, இந்த மரத்தின் நிழலிலே காதல் செய்கிறானே இந்தப் புன்னை மரம் என்பது என்னுடைய தந்தைக்கு சமம்,  என்னுடைய தாய் நட்ட மரம் என்று சொல்லுகின்ற அருமையான கவிதைகள் இருக்கின்றன.  ஆனால், கண்கள் குறித்து நீங்கள் எப்படிப்பட்ட கவிதைகள் சொன்னால் மாணவ, மாணவிகளிடம் போய் சேருகின்றன.  நீ ஒரு முறை என்னை ஓரக் கண்ணால் பார்த்தாய், என்னுடைய இதயத்திலே முள் பாய்ந்தது, முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும், எங்கே இன்னொரு முறை பார் என்று சொன்னால் அவர்கள் ரசிக்கின்றார்கள்.  உன்னுடைய கண், ஒரு கண்ணிற்கு இன்னொரு கண், எந்தக் கண்ணிற்கு எந்தப் பொருளை நான் உவமையாகச் சொல்வேன்?  அனைத்து புலவர்களும் சொல்லிவிட்டார்கள்.  மானைச் சொல்லியாயிற்று, மீனைச் சொல்லியாயிற்று, வேலைச் சொல்லியாயிற்று, வாளைச் சொல்லியாயிற்று, எதுவுமே உன்னுடைய கண்ணுக்கு உவமையில்லை.  உன்னுடைய ஒரு கண்ணிற்கு இணை அக்கண், என்று நம்முடைய கவிஞன் சொல்லிச் சென்றதை, அவர்களுக்கு ரசிப்பதற்கு மனம் இல்லை 	இன்றைக்கு நவீன கவிதை, புது நவீன கவிதை என்கின்ற ஒன்றிற்கு நான் வந்திருக்கின்றேன்.  என்னுடைய கவிதை முயற்சியில் இரண்டு கவிதைகளை நான் உங்களிடத்திலே இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என்று நான் நினைக்கின்றேன்.  கவிதை பற்றிய கேள்விக்கு, எது கவிதை என்கின்ற பாஸ்வல்லின் கேள்விக்கு, டாக்டர் ஜான்சன் இப்படிச் சொன்னாராம், ``எது ஒலி இல்லை என்பதை இலகுவாக சொல்லிவிடலாம், ஆனால் எது ஒலி என்று கேட்டால் எப்படிச் சொல்லுவேன்?  எது கவிதை இல்லை என்று கேட்டால் இலகுவாக சொல்லிவிடலாம், எது நல்ல கவிதை? என்று கேட்டால் யாருக்கும் தெரியாது.  எப்படி ஒரு புத்தகத்தின் உண்மையான கூலியை யாரும் நிர்ணயிக்க முடியாதோ, நீங்கள் கொடுப்பது எல்லாம் புத்தகத்திற்கான காகிதத்திற்கான கூலியும், அந்த அச்சுக் கூலியும் மட்டும்தான்.  எப்படியொரு, புத்தகத்திற்கான உண்மையான கூலியை யாரும் தர முடியாதோ, அது போலவே, எது நல்ல கவிதை, எது சிறந்த கவிதை, எது மனதைத் தொடும், இது கவிதையா, இது கவிதையல்லவா என்பதை யாரும் நிர்ணயிக்க முடியாது. இருந்தாலும் என்னை ஒரு கவிதை எழுதுகின்ற, கவிதை குறித்து பேசுகின்ற ஒரு பெண்ணாக முன்நிறுத்தியதன் காரணமாக, என்னுடைய ஒரு இரண்டு கவிதைகளை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என்று நான் நினைக்கின்றேன்.  மாலைப் பொழுதுதான், இருந்தாலும் சற்றேனும் கவிதைக்கான இடம் உங்கள் இதயங்களிலே இருக்கும் என்ற நம்பிக்கையோடு தொடங்குகின்றேன்.  என்னுடைய முதல் தொகுப்பான இந்த ``எஞ்சோட்டுப் பெண்’’ என்கின்ற தொகுப்பும், என்னுடைய இளவயது தோழியான சிலம்பாயி என்கின்ற பெண்ணிற்கு நான் எழுதிய கவிதையை முகப்பாகக் கொண்டு, சிலம்பாயி என்னோடு கிராமப் பள்ளிக்கூடத்திலே ஒன்னாப்பு, மூனாப்பு படித்தவள்.  அவள் பொருளாதார ரீதியிலே வசதியற்றவள், வர்க்க ரீதியிலே இன்னொரு இனத்தைச் சார்ந்தவள்.  ஆதலால், அவளுக்கு சமுதாயத்திலே முன்னேறுகின்ற வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை.  இருவரும் ஒரே மண்ணிலே பிறந்தோம், வளர்ந்தோம் என்றாலும், அவள் வாழ்க்கை எப்படி, என் வாழ்க்கை எப்படி என்பதை .......  
ஒரு பொழுதும் எனக்குத் தராமல்
ஒளித்து எடுத்து வரும் 
எள்ளுருண்டையையோ 
உமிழ் நீர் சுரக்க வைக்கும் 
உளுந்தங் களியையோ 
தனித்து உண்டதில்லை நீ
எனக்காக வெல்லக் கட்டிகள் 
முடிந்தே இருக்கின்ற 
உன் சட்டைகள் இரண்டிலும்
நிரந்தரப் பழுப்புக் 
கறை படிந்திருக்கும்.
நம் பள்ளி நடு மதியத்து
இடைவெளிகளில் 
நாகம்மா தோட்டத்து 
நவ்வாப் பழங்களை 
மண் ஊதித் தர நீ
மரநிழலில் காலாட்டி 
சுவைத்திட்ட நான்
உன்னிடத்தில் நான் 
ஊடல் கொள்கையில் 
ஊருணிக்கரையில் வழித்தெடுத்த
கரம்பையில்
உன் கண்ணீரும் 
குழைத்தெடுத்து நீ 
கொடுத்த மண் பொம்மைகள் 
என் இளம் பருவத்துப் 
பிரமிப்புப் பிரமிடுகள்
பொறிகடலை மாவில் 
சர்க்கரை பிசைந்து 
மை கலந்த 
தினத்தாள்களில் பொசிந்து 
எனக்காய் எடுத்து வரும் உனக்கு
சர்க்கஸ் வித்தையின் 
சாகசத்துடன் நான் செய்கின்ற 
சாக்லேட் சுற்றிய சரிகைக் 
காகித உருவங்களே 
சாகாவரம் பெற்ற 
கனவு தேவதைகள்
புளியம்பட்டி வாத்தியாரின் 
வழுக்கைத் தலை வரைந்து 
நாம் பிடிப்பட்ட அன்று
எனக்காகச் சீட்டிப் பாவாடையில் 
சுருட்டி வைத்திருந்த 
சீத்தாப்பழ கருமுத்துக்கள் சிதறக் 
காட்டிக் கொடுக்காமல் 
பெஞ்சின் மேல் நீ 
ஊமத்தஞ் சாறெடுத்து 
ஒவ்வொரு திங்களும் 
ஊற வைத்துக்
கரும்பலகை வகுப்பு கழுவ 
என் முறை வரும் பொழுதோ
 	எப்பொழுதும் நீ துடைக்க 
சுத்தக் கைகளுடன் சுகமாய் நான்  
தொலைந்து விடுமென்கிற பயத்தில்
பயன்படுத்தாமலே நீ வைத்திருந்த 
உனக்கான என் பரிசான அந்த
ஊதா நிறப் பேனாவின் 
நிப்பு உடைந்த அன்று, 
ஊர்பட்ட அழுகையுடன் 
இருக்கன்குடி அம்மனிடம் 
இவ்வருடம் போகாத 
சாமி குறையேயெனப் 
புலம்பித் தீர்த்தாய்.  
வாத்தியார் வீட்டுப் பிள்ளை நான், 
வயல்காட்டுத் தும்பைப்பூ நீ எனும்
வகுப்புப் பேதங்கள் 
கல்லெறியா என் 
மனக்குளத்தின் 
கலையாப் பிம்பம் நீ
நான் மாடியிலும், 
நீ ஊர்க்கோடியிலும் 
வசித்தாலும் வர்க்கச் சாலைகள் 
பிரவேசித்திராத 
என் குழந்தைமை நிலவின் 
முதல் தோழமைச் சுவடு நீ
இளம்பராயம் எனும் வீட்டுக்காரன் 
இருவரையும் 
ஒரே கரிசல் மண்ணில் 
கவனமுடன் பதியம் போட்டாலும், 
பின் வந்த காவல் தோட்டக்காரனோ 
பட்டணத்தில் படிப்பிப்பவளாய்  
என்னையும், 
பக்கத்தூர் மேஸ்திரி 
மனைவியாய் உன்னையும் 
பாகுபடுத்திப் படர விட 
ஏணிப் படிகளில் 
விரைவாய் நானும்
சுரங்கத்து இருட்டில் 
முழுதுமாய் நீயும் 
காணாமல் போனோம் 
என்றாலும் 
மாசித் தேருக்குத் தவறாமல் 
இடித்த மாவிளக்கு மாவோடு 
எனைப் பார்க்க
நசுங்கிய குடமாய் 
வருடந்தோறும் உருமாறி வந்த 
எஞ்சோட்டுப் பெண்ணே 
சிலம்பாயி, 
இந்த முறை தேருக்கு 
இரண்டாவது இரட்டைச் சடை 
மொட்டு வர
ஒரு வேளை உனக்குச் 
‘சுகவீனமோ’ என நான் வினவ
பின்னிருந்து 
நாலாவது பிரசவித்தில் 
நீ இறந்துவிட்டதாய் 
மூன்றாவதைச் சுமந்திருந்த 
உன் முதலாவது சொன்னபொழுது, 
என் மனத்தேரின் 
கடையாணி கழன்று, 
மகளின் மாவிளக்கில் 
புதைந்து போனது.  
இங்கே அழைத்து சிறப்பித்த நான் சார்ந்திருக்கின்ற பெருமைமிகு என்னுடைய கழகத்தின் கண்மணிகளுக்கும் நன்றியை பதிவு செய்து விடைபெறுகின்றேன், 

* * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *