திரு – விவாக – சதிர் : அரவிந்த் அப்பாதுரை புத்தக வெளியீட்டு விழா

திரு - விவாக - சதிர் : அரவிந்த் அப்பாதுரை புத்தக வெளியீட்டு விழா

	மனித ஆன்மாக்களுக்கான திறவுகோல்களைக் கொண்டிருப்பவை இலக்கியம் என்றால், அவற்றின் வகைமைகளில் ‘புதினம்’ எனப்படுகின்ற நாவல் மிக முக்கியமானது.
	பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்சின் மத்திய தரைக்கடல் பகுதியில், உப்பளப்பணி செய்து வந்தனர் ஏழை நாடோடி இத்தாலியத் தொழிலாளர்கள் பலர். ஆகஸ்ட் 16, 1893 அன்று அந்த உப்பளங்களில் இத்தாலியர்கள் மூன்று பிரெஞ்சுத் தொழிலாளர்களைக் கொன்றுவிட்டதாகப் புரளி கிளம்பியது. பெரும்பாலான இத்தாலியக் குடியேறிகள் தாக்கப்பட்டனர். அப்பகுதியின் பெயர் அய்குவே-மாட்டெஸ். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த டூர் தெ கான்ஸ்டன்ஸில் (Tour de constana) இத்தாலியருக்குப் புகலிடம் வழங்கப்பட்டது.
	1890இல் வெளிவந்த மோரிஸ் பாரே (Maurice Barres) எழுதிய லா ஜார்தான் தெ பெரனிஸ் (Le Jardin de Berenice) என்னும் நாவல் தற்செயலாக அய்குவெஸ் - மார்டெஸைப் பின்புலமாகக் கொண்டிருந்தது. அது டூர் தெ கான்ஸ்டன்ஸை ஒரு புதிய வகைத் தேசியத்தின் குறியீடாகப் பயன்படுத்தியது. பிரான்சின் குடிமக்களாக உள்ள தனிநபர்களின் (ஆண்களின்) பகுத்தறிவு சார்ந்த நலன்களின் வெளிப்பாடே தேசம் என்னும் தாராளவாத, ஜனநாயகக் கருத்துகளை நிராகரித்த பெர், மனிதர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஆன்மீக உணர்விலிருந்து எழுவதே தேசம் எனக் கருதினார். இத்தகைய கருத்தை வடிவமைத்தவை மனிதர்களின் கூட்டு நனவலி மனம் (Human Collective Unconscious) என்று அன்று பொதுவாகப் பேசப்பட்டு வந்த உளவியல் கருத்துகளும் இலக்கியக் குறியீட்டியல் இயக்கமும் கருதின. மேலும் மனிதர்களின் நடத்தை முறைகளுக்கு அடிப்படையாக மறைந்து நிற்கும் தொன்மங்களைக் கலையினால் நெருங்கிக் காணவியலும் எனக் கருதின. தேசம் என்பது வரலாறு, மரபு, தேசத்தின் மண்ணுடன் பிரெஞ்சு உழவர் வர்க்கம் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும் தொடர்பு ஆகியவற்றினால் உருவாக்கப்படுவதாகும் என்று பாரே கருதினார். லெ ஜார்தான் தெ பெரனிஸின் கதாநாயகனால் டூர் தெ கான்ஸ்டஸின் உச்சியிலிருந்து பரந்து விரிந்த பிரெஞ்சு நாட்டுப்புறத்தைப் பார்க்க முடிகின்றது. அவன் பிரெஞ்சு நாட்டின் கடந்துபோன மத்திய காலத்துடன் உறவாடுகிறான். ஒரு தனிநபர் என்னு வகையில் தான் ‘இந்த பரந்த நாட்டில் ஒரே ஒரு நிமிடம் மட்டுமே’ என்பதை உணர்கின்றான். பாரேயின் நாயகன் மண்ணின் மைந்தனாக பிரெஞ்சுத் தேசத்துடன் ஒன்றிவிடுகிறான். புலம் பெயர்ந்து இங்கு குடியேறியவனால் அப்படி ஒருபோதும் இந்த தேசத்துடன் ஒன்றிவிட முடியாது.
	அரவிந்த் அப்பாத்துரையின் நாயகன் மதன், நாயகி சகுந்தலா ஆகியோரும் அப்படித்தான். பிரான்ஸிற்கும், பாண்டிச்சேரிக்குமான பொது மனிதர்கள் அவர்கள். இரண்டிற்கும் ஊடோட்டமான வாழ்வு அவர்களது. "கல்வி என்றால், பள்ளிக்கூடங்களில் புகட்டப்படும் பாடத்தைப் பற்றி நான் இங்கு எதையும் சொல்ல வரவில்லை. வாழ்க்கையை அணுகும் முறை. ஆம், வாழ்வை அணுகும் முறையை கற்பிப்பதுதான் ‘கல்வி’ என்ற சொல்லுக்கு தகுந்த விளக்கம். சகுந்தலாவின் கதையை எடுத்துக் கொள்வோம்" எனத் தனது புதினத்தைத் தொடங்குகிறார் அரவிந்த் அப்பாத்துரை. 
	"இத்தனை பரம ஏழைகள். இத்தனை கோடீஸ்வரர்கள். ஒரே வீட்டில் ஒருவனுக்கு ஜயாயிரம் சம்பளம் அதே வீட்டில் மற்றவனுக்கு ஒரு லட்சம் சம்பளம். அதிகரித்துக் கொண்டே போகும் ஏற்றத்தாழ்வுகள். இந்த காலத்தில் வாழும் நம்மை நாட்டுமிராண்டிகள் என்று அழைக்கலாமா- 
	காட்டில் வாழ்பவன் காட்டுமிரண்டி இவ்வாறான சமூக அநீதிகளை அடையாளம் காணாமலேயே வாழ்பவன் நாட்டுமிராண்டியா?. காட்டுமிராண்டி, நாட்டுமிராண்டி காட்டுமிராண்டி... நாட்டுமிராண்டி" இப்படிப்பட்ட சிந்தனைகளுடன் தனது கதை மாந்தர்களை அறிமுகம் செய்கிறார் அரவிந்த். (கதைச் சுருக்கம் இங்கு)
	இரும்புப்படை அணி என்ற யூதர்களுக்கு எதிரான பாசிச படைக்குத் தலைமை தாங்கிய - ருமேனியா, ருமேனியர்களுக்கே சொந்தம் என்று அறைகூவல் விடுத்த கோர்னேலியூ காட்ரொனின் (Cornelian Codreann) தொண்டர்களில் ஒருவர் பின்வருமாறு சொன்னார் ஒருமுறை - "வெகுசனத்திற்கு எதிரான மனிதனோ (பழமைவாத சர்வாதிகாரி) அல்லது ஒரு மனிதனுக்கு எதிரான வெகுசனமோ (நம்காலத்திய சீரழந்த ஜனநாயகம்) இல்லாமல், வெகுசனங்கள் கண்டெடுத்த மனிதன் என்று படைப்பாக்கத்தன்மை வரலாற்றில் கட்டாயம் இருக்க வேண்டும்" அப்பாத்துரையின் நாயகர்கள் - மதன், சரவணன் - நாயகி சகுந்தலா மூவருமே வெகுசனங்கள் கண்டெடுத்த மனிதர்கள்தான். 
	"எல்லாம் ஒன்றுதான், காதலன், இஷ்டன், பித்தன் என்று வார்த்தைகள்தான் மாறுகின்றன, உணர்வுகள் ஒன்றுதான்" - எனும் நாயகி சகுந்தலாவும் வெகுசனங்கள் கண்டெடுத்த மனுஷிதான்.  
	"உன் பேரு சரவணன்றது போல, என் பேரு பறவை"- எனும் உணவு விடுதிக் கிளியும், வேடன் கண்டெடுத்த வெகுசனப் பிறவிதான். கதையில் ஓரிடத்தில் -"மங்களுர் எல்லையிலிருந்து, கார் ஓடிய வழியெல்லாம், சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருக்கும் மைல் கற்களிலெல்லாம் யாரோ "ஜானகி" "ஜானகி" என்று எழுதிவைத்திருப்பதை பார்க்கக் கூடியதாக இருந்தது. ஒருகல் - இரண்டுகல் - மூன்று நான்கு ஐந்து - பத்து - இருவது... போகும் வழியில் நின்ற தூரம் மைல் கற்களின் மீதெல்லாம் யாரோ இப்படி எழுதியிருக்கின்றனர். 
	யாராக இருக்கும்? 
	நிச்சயமாக ஏதோ ஒரு காதல் பைத்தியத்தின் கைங்கரியமாகத்தான் அது இருக்க வேண்டும். கர்நாடகாவின் கவர்னர் வீதி வலம் வரும்போது இதை கவனித்தார். என் வார்த்தை கட்டளையாகட்டும். ஜானகி என்று பெயர் அழிக்கப்படட்டும் என்றார். பொது-இன்ஸ்பெக்டர் என்று அழைக்கப்படும் காவல் படையின் தலைவனுக்கு ஆணையிட்டார். அவனோ வேறு வாதங்களை முன் வைத்தான் – 
	ஜயோ பாவம். அவனுடைய துயரம் எவ்வளவு கொடுமையானதாக இருக்கும். ஆண்டவனே, அவன் காப்பாற்ற பட வேண்டும். அவன் காதல் வாழ வேண்டும். அவன் ஆன்மா சாந்தமடைய வேண்டும். சந்தோஷம் அவனுள் பிரவேசித்து அவனுடைய வாழ்க்கையை அது அர்த்தமுள்ளதாகவும், அற்புதமானதாகவும் மாற்ற வேண்டும்"" என்றான். அவனும் வெகுசனம் கண்டெடுத்த மனிதன்தான்.
	எழுதுபவனைப் பிரதியாளன் (ஸ்கிரிப்டர்) என்று அழைக்கிறார் பின்நவீனத்துவ முன்னோடி பார்த். இவர் மாபெரும் இலக்கியவாதி - அவரது படைப்புகள்யாவும் விழுமியங்களின் கருவூலம் போன்ற கருத்துகள் இப்போது தகர்ந்துவிட்டன என்கிறார் பார்த். எழுத்தாளன் இப்போது மேடையில் நடுநாயகமாக இல்லை. அவனை எப்படி அழைப்பது? எழுத்தாளன்? அறிவுஜீவி? பிரதியாளன்? இலக்கிய மேதைமை என்பது இப்போது மறைந்து வருகிறது. அப்பாத்துரையையும் எப்படி அழைக்க - நாவலாசிரியர்? பிரதியாளர்? எழுத்தாளர்?
	பார்த் தனது சுயசரிதையை ஒரு நூலாக எழுதினார். அதன் தலைப்பு பார்த்தைப் பற்றி பார்த். அது ஒரு வித்தியாசமான முயற்சி. அவரை அவரே விலகி நின்று பார்த்து எழுதும் நூதனத் தன்மை அதில் இருந்தது. வாழ்க்கையை எழுதும்போது, அது ஒரு புனைவாக மாற்றம் கொள்கிறது என்பதை அதில் நிறுவி இருந்தார்.
	அப்பாத்துரையின் ‘திரு விவாக சதிரும்’ ஒரு உண்மை வாழ்க்கையை புனைவாக மாற்றுருவாக்கிப் பகிர்ந்து கொள்கிறது. இடையிடையே தன் சரிதத்தையும் அப்பாத்துரை பகிரத் தருகிறார் - விலகி நின்றும், ஒட்டியும் - சமூகத்தின் முகத்தோடு முகம் உரசியும், கிழித்துப் பார்த்து, பகுத்தறிய முயன்று தோற்றும், அவற்றை ஆண், பெண், அவர்தம் பண்பாட்டுத், தேசியக் கற்பிதங்களுடன் புகட்டப்பற்றவற்றைக் கேள்விக்குள்ளாக்குகிறார். சமயங்களில் ‘no comments’ என மௌனிக்கிறார்.
	‘எனக்குச் சுயசரிதை இல்லை; அதை நான் எழுத ஆரம்பித்த போது, என்னையே நான் பார்த்துக்கொள்ள முடியவில்லை’ என்று எழுதும் பார்த், எல்லாமே எழுத்தின் மூலம் நிகழ்கின்றன என்றும் சொல்கிறார். ‘நான் என்பது எனக்கு நிகழும் கதையே’ என்று வித்தியாசமாகச் சிந்திக்கிறார் பார்த். அகநிலை என்பது மொழியின் விளைவே ஆகும் என்பதும் அவரது கூற்றே. அவரது சுயசரிதை நூலானது துண்டாடப்பட்ட விவரணைகளால் தொகுக்கப்பட்டது. பார்த் என்பவர் விமர்சகர் மட்டுமல்ல; அவர் ஒரு சிறந்த எழுத்தாளரும்கூட என்பதை இந்தச் சுயசரிதை நூல் உலகத்துக்குக் காட்டியது. ‘ஆந்திரே ழீத்தின் நாட்குறிப்புகளில், எழுத்தாளனுக்கு எழுத்தின் மீது இருக்க வேண்டிய பிணைப்பையும், அதன் துண்டாடப்பட்ட சுயபிரதிபலிப்பையும் காண முடியும். அதை எனது எழுத்துக்களில் உயிர்ப்பித்திருக்கிறேன்’ என்கிறார் பார்த் - திரு விவாக சதிர் சுயசரிதை அல்ல. பிறரது சரிதையின் ஊடாக தனது சுயத்தையும் வெளிப்படுத்தும் ஒரு புதினம். இதில் அரவிந்தின் துண்டாடப்பட்ட சுயபிரதிபலிப்புகளை உணரலாம்.
	கீழ்க்காணும் ஒரு சம்பவம் - இப்புதினத்தில் வருகிறது. 	
"கடலில், மீனவர்களின் வலையில் இரண்டு கடல் கன்னிகள் சிக்கயிதாகவும்,அவர்களை சுமந்து கொண்டு ஒரு மீன்-பிடி படகு கரையை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் அந்த செய்தி அறிவித்தது. தொலைக்காட்சிகளும் இந்த வதந்தியை, செய்தி நேரத்தில், "இப்படியாக ஒரு வதந்தி பரவுகிறது" என்ற கருத்தோட அறிவித்தன. ஊரில் ஒரே பரபரப்பு, ஆர்வம், ஆச்சம்...
	கடல்-கன்னிகள் என்பது கட்டுகதை என்றால், ஆகாயமும், பூமியும் கூட கட்டுகதைகள் தான், என்று ஒரு நாவலாசிரியன் சொன்னான். மனித இரத்தமா, இல்லை மீன் இரத்தமா என்பதை முதலில் அறிய வேண்டும், என்றான் மிருகவியல்காரன். 
	ஆம், அது - அதி முக்கியம். தலை வந்துவிட்ட அந்த ஜீவன்களுக்குள் மனித இரத்தம் ஓடினால் அவர்களுக்கு மனிதர்களுக்காக இயற்றப்பட்ட அனைத்து சட்டங்களும் அவர்களுக்கும் செல்லுபடியாகும். அவர்களை சாடுவதோ, அடிப்பதோ, உதைப்பதோ, கொல்லுவதோ, சட்டபடி குற்றமாகிவிடும். ஆனால் அவர்கள் உடலில் மீன் இரத்தம் ஓடினால், அவர்களை ஏலத்தில் விற்று அவர்களை வாங்குபவன் பொரித்தோ இல்லை குழம்பு வைத்தோ தானும் உண்டு தன் உற்றார் - உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவருக்கும் கொடுத்து சுவைக்க செய்து மகிழலாம், என்றார் பாண்டிச்சேரியின் தலையாய - நீதிபதி". தொடர்ந்து மக்கள் கடல்கன்னிகளிடம் உரையாடுகிறார்கள். 
	கடல் கன்னிகளின் கூற்றைப் பாருங்கள் : 
	"பொதுவாக சொல்ல போனால் எங்கள் கலாச்சாரம், தனிமனித சுதந்திரத்தை பேணி - போற்றும் இயல்புடையது. அங்கு குடிக்கலாம் - புகைக்கலாம் - சுசிக்கலாம் - சாமி கும்பிடலாம். யாரும் உன்னை தொந்தரவு செய்யமாட்டார்கள். இந்த பாழாய்போன இந்திய நகரங்களைப் போல இல்லை. நோ-நோ-நோ, இல்லவே இல்லை".
	இது நாவலாசிரியரினின் அக உலகம் பற்றிய பதிவுதான். புறஉலகம் இப்படியாக இருக்க வேண்டுமென்கிற அவரது அக உலகம் - அந்த ஏக்கத்தின் ஊடே அதன் சாத்தியமின்மை, நிறுவனங்களின் சுமைகள் எனப் பிரதிபலிப்புகளில், விவரணனைகளில் வெளிப்படுவது ஆசிரியன்தான் - அரவிந்த் அப்பாத்துரையேதான். 
	பிரெஞ்சு எழுத்தாளரான ஜார்ஜ் பதாய்லை எவ்வாறு வகைப்படுத்த முடியும்? நாவலாசிரியர், கவிஞர், கட்டுரையாளர், தத்துவஞானி, மறை பொருள்வாதி, அதில் அவர் யார்? இதற்கான பதிலைச் சொல்வது கடினம். பதாய்ல் பல பிரதிகளை எழுதினார். அல்லது தொடர்ந்து ஒரே பிரதியை எழுதிக்கொண்டிருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அரவிந்தும் தொடர்ந்து ஒரே பிரதியை வெவ்வேறு கேள்விகளோடு - குறிப்பாக தனது புதினங்களில் எழுதுகிறாரோ எனத் தோன்றுகிறது. 
உதாரணத்திற்கு - விடுதலைப் புலிகள் பற்றிய அவரது பதிவு. 
"நீங்கள் என்ன சாதி அக்கா? என்று கயல் வினவினாள். 
	எனக்கு தெரியாது, என்றாள் சகுந்தலா.
	நீங்கள் தமிழ்தானே! 
	ஆமாம் 
	சாதி தெரியாமல் எப்படி வாழ்கின்றீர்கள். 
	ஒரு முறை என் அம்மாவிடம் கேட்டேன். அவளுக்கு சரியாக தெரியாது என்று சொல்லிவிட்டாள். நாங்கள் இந்தியாவை விட்டு வெளியேறி, பல வருடங்களாக வெளிநாடுகளுக்கும் - இந்தியாவுக்கும் இடையில் வாழ்ந்து கொண்டிருப்பதால் நாங்கள் அவ்வளவாக ஜாதி வித்தியாசம் பார்ப்பதில்லை. 
	எங்கள் போராட்டம் தோற்றதே இந்த சாதி பிரச்சனையால் தானக்கா. 
	அப்படியா?
	விடுதலைப் புலி இயக்கத்தில் உள்ள பெருவாரியான தளபதிகளும், கேப்டன்களும் கீழ் சாதிகளைச் சேர்ந்தவர்கள். தமிழ் போராளிகள் எந்த அளவுக்கு கண்ணியமாக போராடினாலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அவங்களுக்கு சேர வேண்டிய சன்மானம் கிடைத்ததே இல்லை. அதைப் போலவே பிராமணர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் எந்த இடமும் இல்லை. அதனால்தான், அந்த இயக்கம் அகோர முடிவுக்கு வந்தது. நானே எதிர்பார்த்ததுதான். இருப்பினும் என் தமிழ் மனம் இன்னும் விம்மி-விம்மி அழுது கொண்டே இருக்கிறது. இனி இப்படியான போராட்டம் நடந்தால் எல்லா சாதியினருக்கும் சம உரிமை கொடுக்கப்பட வேண்டும் அப்போதுதான் போராட்டம் வெற்றி பெறும். 
	நீ சொல்வது சரியே, என்றாள் சகுந்தலா". 
	திரு. பூர்விக. சதிர் - எனும் அவரது நாவலிலும் புலிகள் மீதான விமர்சனம் இருந்தது. இது தொடர்பான எனது மாறுபட்ட கருத்தினை அந்த உரையிலும் நான் பதிவு செய்தேன். இந்த விமர்சனத்தை முன்வைக்கின்ற உரிமை அவருக்கு உள்ள அதே அளவு அதனை மறுக்கின்ற Space எனக்குள்ளது என நான் நம்புகின்றேன். அறிவுஜீவிகளால் பெரும்பான்மையாக முன்வைக்கப்படுகின்ற இவ்விவாதத்திற்குரிய தளம் இதுவல்ல என்றாலும் ஒரு பிரதியையே வெவ்வேறு விதமாக அரவிந்த எழுதிப் பார்க்கிறாரோ எனும் உணர்வை இக்கருத்து எனக்குள் உருவாக்கியது என்பதற்காக இதனை இங்கு சுட்டுகிறேன். 
	ஸாலர்ஸ் எழுதிய எண்கள் என்கிற நாவல் வித்தியசாமானது. அதை நாவலற்ற நாவல் என்றோ, எதிர் நாவல் ஆன்ட்டி-நாவல் என்றோ, பிந்தைய நாவல் (போஸ்ட்-நாவல்) என்றோ எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் என்பார்கள். திரு-விவாக-சதிரையும் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். 
	"எண்கள் நாவலில் இன்னொரு அம்சம் அது எழுதப்பட்ட தன்மை. பொதுவாக, புனைவுகள் எல்லாமே இறந்த கால விவரணையில்தான் எழுதப்படும். ‘அவன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அப்போது மழை தூறிக்கொண்டிருந்தது’. என்கிற ரீதியில் இருக்கும். எண்கள் நாவல் அவ்வாறு எழுதப்படவில்லை. அந்த நாவல் முழுக்க நிகழ்காலத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இது அந்த நாவலில் ஒரு சிறப்பு அம்சம். இதனால் அந்தப் பிரதி புனைவுக்கு ஒரு நிகழ்காலத் தன்மையை அளிக்கிறது. இது ஒரு அபூர்வமான நிகழ்வாகும். ஒரு எழுத்துப் பிரதிக்குக் காலம் சார்ந்த புதிய பரிமாணத்தை இது தருகிறது. அர்த்தம் என்பது நிகழ்காலத்தன்மையுடன் இருக்கிறது" எனப் படித்திருக்கிறேன். 
	திரு-விவாக-சதிருக்கும் ஒரு நிகழ்காலத்தன்மை இருக்கிறது. அது மிகச் சமீபத்தில் இருவரது வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. நாவலாசிரியரே அதற்குச் சாட்சியாகவும் இருந்திருக்கிறார். தன் முதல் காதலனைக் கணவனது மறைவிற்குப் பின், 43 ஆவது வயதில் சகுந்தலா, தனது வயது வந்த இரு குழந்தைகளின் முன்னிலையில் திருமணம் செய்கிறாள். நிறைவான மண வாழ்க்கையின் பின்பு, தனது முதல் காதலைப் பூர்த்தித்துக் கொள்ளும் வாய்ப்பு எத்தனை பேரதிர்ஷ்டம்? இதன் நிகழ்காலத்தன்மை, உண்மையில், அண்மையில் பாரீசில் நடந்த இச்சம்பவம், அதன் அழகு, வாழ்வின் மீதான பிடிப்பு - இதுவே இந்தப் புதினத்தின் பலம். மிக நேர்மையாக, மிகைகளற்று இதனைக் கதைக்களமாக்கியிருக்கின்ற அரவிந்திற்கு எனது பாராட்டுக்களும், மனமார்ந்த வாழ்த்துக்களும்.
	பிரெஞ்சு மொழியில் Signponge என்கிற சொல்லும் sign eponge என்கிற சொல்லும் ஒரே உச்சரிப்பில் ஒலித்த போதும் இரண்டு விதமான பொருள் கொண்டவை. Signponge என்றால் பாஞ்ச் என்பவரின் கையொப்பம் என்று பொருள்படும். Sign eponge என்றால் கரும்பலகையில் எழுதியதை அழிக்கும் ஸ்பாஞ்ச் என்பது பொருள். இதில் ஒரே பெயர்ச்சொல் ஏக காலத்தில் சரியானதாகவும் (பிராப்பர்) அல்லாததாகவும் (இம்பிராப்பர்) தோற்றம் தருகிறது. இதே தன்மையுடன்தான் தத்துவமும் இலக்கியமும் இயங்குகின்றன என்பார்கள்.
	அரவிந்த் எழுதுகிறார் - "கஸ்தூரி என்ற பேராசிரியர் சகுந்தலாவுக்கு பாடம் கற்பித்தார். எல்லோரும் அவரை இடது-சாரி அரசியல் கொள்கைகளை கைப்பற்றுபவர் என்று சொல்வர். அவருடைய முதுநிலை ஆராய்ச்சியின் தலைப்பே, இல்லத்தில் பெண்களின் - சுதந்திர போராட்டம், என்பதாக இருந்தது.
	இந்தியாவை பொறுத்தவரையில், ஆண்கள் - பெண்கள். குழந்தைகள் - சிறுவர்கள் - சிறுமிகள் - முதியவர்கள் என் யாரை எடுத்தாலும், அனைவருமே ஒருவிதமான சிறைச்சாலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பது புலனாகும். அதில் ஆண்களின் சிறைச்சாலையில், புகைபிடிக்க அனுமதி உண்டு அவர்கள் அடைக்கப்பட்ட அறையின் விஸ்தீரணம் பதினைந்து அடி-ஸ்கொயர் என்றால், பெண்கள் அடைக்கப்பட்டிருக்கும் வரியின் விஸ்தீரணம் இரண்டு-அடி-ஸ்கொயராகக் கூட இருக்குமா என்பது சந்தேகம்தான். அதில் கால் நீட்டி படுக்ககூட முடியாது. நிம்மதியாக உட்கார்ந்து பெருமூச்சு விட முடியாது நின்று கொண்டேதான் இருக்க வேண்டும். இடுப்பில் பிள்ளையை சுமந்து கொண்டு நிற்க வேண்டும். கனவிலும் பயத்தை சுமந்து கொண்டே நிற்க வேண்டும். வாய்திறந்து, இதைத்தான் நான் செய்ய விரும்புகிறேன், என்று சொல்வது கூட சில சமயங்களில் மிகக் கடினம். 
	பெண்நிலை வாதம், தலித்தியம், சமத்துவ-தத்துவங்கள் என்பவையெல்லாம் தமிழ் சமுதாயத்தில் என்ன தாக்கங்கள் ஏற்படுத்தியுள்ளன? என்ற கேள்விக்கு பதில் தேட என்று கஸ்தூரி அம்மையார், சகுந்தலா என்ற மாணவ-திருவாட்டிக்கு கட்டளை இட்டார்". 
	இலக்கியம் புதினத்தின் வடிவில் ஒரு பெண், சகுந்தலா எனும் விதவை, தனது பிள்ளைகளின் புரிதலோடு, ஒப்புதலோடு முதல் காதலனைப் பூரண மகிழ்வுடன் மறுமணம் செய்வதை அழகாகப் பகிர்கின்றது. ஆனால் தத்துவமோ நடப்புநிலை பெரும்பான்மையான பெண்களுக்கு அவ்வாறில்லை என்பதை முன்னிறுத்தி விசாரணைக்கு எத்தித் தள்ளுகிறது. ஒரே சமயத்தில் சரியானதாகவும், சரியற்றதாகவும் தோன்றுகின்ற அல்லது தோன்ற வைக்கப்படுகின்ற வாதங்கள், சமூகக் கட்டமைப்புக்கள் குறித்துத் தத்துவம் ஆராய்கின்றதென்றால், இலக்கியம் அவற்றை ஆதுரத்துடன் அணுகுகின்றது - புரிந்து கொள்ளமுயல்கிறது. திரு-விவாக-சதிரில் சகுந்தலாவின் வாழ்க்கை மூலம் அரவிந்த் அதனைத் தான் செய்திருக்கிறார். 
	சாக்ரடீஸ் தனது உரையாடல் ஒன்றில் பேச்சுதான் உண்மையானது. எழுத்து பொய்யானது. எழுத்து என்பது கெட்ட ஞாபகம் (ஈவில் மெமரி) பேச்சு என்பது சட்டபூர்வமான வாரிசு. எழுத்து சட்டபூர்வமான தகப்பன் இல்லாமல் பிறந்த மகன் (பாஸ்டர்ட்) என்கிறார் சாக்ரட்டீஸ். நான் பேசும்போது உயிர்ப்புடன் பேசுபவனாக இருக்கிறேன். என் பேச்சுக்கு நான் தகப்பனாக இருக்கிறேன். ஆனால் நான் எழுதும் பிரதியோ நான இல்லாமல் கூட இருக்கிறது. அது தனது தந்தையுடன் எவ்விதத் தொடர்புமின்று ஒரு சட்ட விரோத வாரிசைப் போல் தனியே இருக்கிறது. பேச்சு உயிருள்ளது. எழுத்தோ இறந்தது. அதனால்தான் எழுத்து இறந்தவர்களின் கல்லறைகளின் கல்வெட்டுகளில் உறைந்த நிலையல் காணப்படுகிறது என்றெல்லாம் சாக்ரட்டீஸ் எழுத்தை இழித்துப் பேசுகிறார். 
	அந்த உரையாடலில் சாக்ரட்டீஸ் உண்மை (ட்ரூத்) என்பது பற்றியும் பேசுகிறார். சாக்ரட்டீஸ் ‘ட்ரூத்’ என்று சொல்வதை ‘தியூத்’ என்ற கிரேக்க வார்த்தையாகவும் எடுத்துக்கொள்ளலாம். ‘தியூத்’ என்பது எகிப்தியக் கடவுளான ‘தோத்’ என்பதன் கிரேக்க மொழிப் பிரயோகம். எகிப்தியக் கடவுளான ‘தோத்’ தான் எழுத்து, கணிதம், மருந்து போன்ற விஷயங்களுக்கு அதிபதி. அவர் எகிப்திய மன்னரான பாரோவாவைச் சந்தித்து தன்னிடம் எழுத்து, கணிதம் போன்ற கலைகள் இருப்பதாகவும், அதை எகிப்திய மக்களுக்கு வழங்க விரும்புவதாகவும் கூறுகிறார். ‘அது ஒர் அமுதம் போன்றது. அந்த அமுதம் எகிப்தியர்களின் ஞாபகசக்திக்கும் விவேகத்திற்கும் மருந்தாகப் பயன்படும்’ என்கிறார். 
	அதற்கு மன்னன், ‘கடவுளே, உங்கள் எழுத்துக்கலை மக்களிடம் வழங்கப்படுமானால், அதன் விளைவாக அவர்கள் நினைவாற்றலை இழந்துவிடும் அபாயம் இருக்கிறது. எழுத்து இல்லாததால்தான் அவர்கள் எதையும் மறந்துவிடாமல் இருப்பதற்காக ஞாபகசக்தியை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். எழுத்து வந்துவிட்டால் அவர்கள் ஞபாகசக்தியை இழந்துவிடுவார்கள். அப்போது அவர்களுக்கு உண்மை கிடைக்காது. அதன் பொய்த் தோற்றம் மட்டுமே கிடைக்கும்’ என்று சொல்கிறான். ஆனால், எழுத்தின் வலிமையை அறிந்தவர்கள் நாம். பேச்சை உணர்வோம் - எழுத்தை அறிவோம். இரண்டையும் நாம் துய்ப்போம். அரவிந்தின் எழுத்துநடை - குறிப்பாக எள்ளல் அங்கதம் எனும் style என்னை மிகவும் கவர்ந்தது. 
	"இனி காதலித்தால் ஒரு குடிகாரப் பெண்ணையே காதலிப்பேன். அப்போது இந்த பிரச்சனை வராது, என்று விம்மி-விம்மி அழுது கொண்டே கேப்ரியேல் தன் அறைக்குள்ளே நுழைந்து கதவை தாழிட்டு கொண்டான்". 
	"அன்பால் செய்யும் பணிவிடைகளை, தம் உரிமைகளாக நினைத்துக் கொண்டு நம்மை வேலைக்காரிகளாக்கிவிடும் மனப்பான்மை பரவலாகவே காணப்படுகிறது. உதாரணத்துக்கு என் தந்தையை எடுத்துக் கொள்ளுங்கள். இதுவரை வீட்டில் ஒரு வேலையும் செய்ததில்லை. எல்லாம் அம்மாதான்"- சகுந்தலாவின் கூற்று. 
	"எதுக்கும் இப்போதிலிருந்தே ஜாக்கிரதையாக இரு. அந்த தலைமுறை ஆளாக இல்லாததுபோல தெரியும். ஆனால் பரம்பரை பரம்பரையாக ஆண்களின் இரத்தத்தில் ஊறிய விஷயம் அது. பெண் ஜாதிகளை ஓட - ஆட வேலை செய்யவிட்ட சொகுசான வாழ்க்கையை அனுபவிப்பது" - சகுந்தலாவின் மாமியார் தனது மகனைப் பற்றியே இவ்வாறு எச்சரிக்கிறாள். 
	"அது கல்யாணம் செய்யும் அதிசயம் தாயே" - சகுந்தலாவின் கணவன். 
	"இந்த அதிசயத்தோடு நின்றுவிட்டால் நன்றாக இருக்கும். இப்படியான கன்றாவியான வேறு அதிசயங்கள் தேவை இருக்காது என்று நினைக்கிறேன்"-சகுந்தலா. 
	"இப்படி சில வருடங்கள் உருண்டோட, மதனும் சகுந்தலாவும், பழக்க-தோசத்தாலும், பாசத்தாலும், காதலாலும், இணைபிரியாத தம்பதிகளாகவிட்டிருந்தனர்"- இந்தப் பழக்க தோசம் சொற்பிரயோகம் அற்புதம் – by habit they became husband & wife!.
வன்முறை... துரோகத்தைவிட பெரிய வன்முறை செயல் உலகத்தில் உண்டோ.
மிலன் குண்டேராவின் ‘த அன்பியரபில் லைட்நஸ் ஆஃப் பீயிங்’ என்னும் நாவலின் தொடக்கப் பகுதி மிகப் பிரபலமானதாகும். அதில், வரும் வரிகள் இவை - 
என்றும் மாறாத் திரும்ப நிகழ்தல் என்ற சிந்தனை, நாம் பொருட்களை நோக்குவதிலிருந்து அவை வேறுவிதமாகத் தோற்றமளிக்கலாம் என்ற பார்வையை உள்ளடக்கியிருக்கிறது. அவற்றின் மாறும் இயல்புக்கு ஏற்றாற்போல் தமது துயர்தணிக்கும் சூழல்கள் நாம் ஒரு முடிவுக்கு வருவதைத் தடுக்கின்றன. ஏனென்றால் உடனே தோன்றி மறையக் கூடியதை அல்லது மாற்றத்திற்கு உள்ளாகிக்கொண்டிருப்பதை எப்படி நாம் குற்றம்கூறக்கூடும்? எல்லாமே அழிகின்ற மாலைக்காலத்தில் எல்லாமே பழங்கனவுகளால் ஒளியூட்டப்படகின்றன. கில்லட்டின் படுகொலைகள்கூட (குண்டேரா 1984:4). 
மையமான கருத்தை வெளிப்படத்துகின்ற தொடர் இங்கு முதல்வாக்கியம்தான்.
	சகுந்தலாவின் தோழி ஒருத்தி சொல்கிறாள் - """"மகப்பேறு கிடைப்பது பெண் செய்த பாக்கியம்... இப்படியான கதையாடல்கள், ஆண் தன் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக இயற்றியவை. பிரசவ வேதனையை நீ அனுபவித்தால் தவிர வேறு எப்படியும் அதை தெரிந்து கொள்ள முடியாது. உன் வயிற்றில் வளர்ந்த குழந்தை உதிரத்தில் பிறந்தவுடன் அதனை பார்க்கும் போது, என் வயிற்றிலா இந்த புழு இவ்வளவு நாள் இருந்தது. அதனை எனக்கு அடையாளம் தெரியவே இல்லையே. இது என் பிள்ளை தானா? என்ற சந்தேகம் எழும். எல்லா பெண்களுக்கும் எழுமா என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு எழுந்தது. அது என் குழந்தையே இல்லை என்ற எண்ணம் கூட தோன்றியது. பிறந்த மறுநாளில் இருந்தே தூக்கம் கலைந்து விட்டது. ஏதோ போர்க்களத்தில் இறக்கிவிட்டது போல, அழுகை, உறக்கமின்மை... இந்த அனுபவத்தை... இந்த அகோர அனுபவத்தை நான் யார் சொல்லியும் கேட்டதே இல்லையே"".
	மாற்றத்திற்கு உள்ளாகிவிட்ட ஒரு மிக முக்கியமான - தாய்மை குறித்த சிந்தனை இது. மாற்றத்திற்குக் கணந்தோறும் உள்ளாகிக் கொண்டிருக்கின்ற ஒன்றை நாம் குற்றம் கூற இயலுமா என இந்தப் பத்தியைப் படித்தவுடன் நான் என்னையே கேட்டுக் கொண்டேன். 
	"நீர்-பஞ்சம் நிறைந்த நாட்டில் மொட்டை மாடியில் நீச்சல் குளம் கட்டுவதென்பது ஒரு விசித்திரமான செயல்பாடு. இது ஆச்சர்யப் பட வைக்க வேண்டிய விஷயம். பொது-நலன் என்றால் என்ன என்ற வினாவை எழுப்ப வேண்டிய விஷயம். ஆனால் பாரத திருநாட்டில் இப்படியான கேள்விகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை" என்கிறான் சரவணன். இந்தக் கேள்வி எழுப்புகின்ற குற்றவுணர்ச்சி கூட பாரதப் பிரஜையான எனக்கு இந்த வாக்கியத்தைப் படித்து முடிக்கும் வரைதான். ஆனால், அதனை ஒரு வாசகனுக்குச் சற்று கிள்ள முடியும் - தனது கேள்விகளால் என தொடர்ந்து முயற்சிக்கிறார் அரவிந்த். 
	யேட்ஸ் தனது ‘சுயத்திற்கும் ஆன்மாவிற்கும் ஓர் உரையாடல்’ என்ற கவிதையில் எழுதுவார்- 
	யாவற்றையும் மீண்டும் வாழ்தலில் நான் திருப்தியடைகிறேன், 
	இன்னும் ஒருமுறை...
	செயலிலோ சிந்தனையிலோ 
	ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நான் 
	அதன் மூலத்திற்குச் சென்று காண்பதில் திருப்தி அடைகிறேன். 
	உள்ளதை அளவிடுங்கள்; எனது தலைவிதியை மறந்துவிடுங்கள். 
	கழிவிரக்கத்தை நான் தூக்கி வெளியே எறியும் போது
	மார்புக்குள் ஒரு மிகப் பெரிய இனிமை பாய்கிறது.
	நாம் யாவரும் சிரிக்கவேண்டும், பாடவேண்டும், 
நமக்கு எல்லாமே அளிக்கப்பட்டுள்ளன
நாம் பார்க்கும் யாவுமே ஆசீர்வதிக்கப்பட்டுள்ளன.
	அரவிந்தும் ஒரு வகையில் யேட்ஸ் போலத்தான் தென்படுகின்றார். தனது கேள்விகளை, சந்தேகங்களை, விருப்பங்களை, பயங்களை, சுயத்தை, சகமனிதர்களுக்கான பரிவினை, அவநம்பிக்கைகளைத் தொடர்ந்து இலக்கியத்தினூடாக அவர் நம்மோடு பகிர்ந்த வண்ணம் இருக்கிறார். வருடந்தோறும் இங்கு வந்து நம்மிடையே தனது இயங்கு தளத்தை, இருப்பைப் பகிர்ந்து கொள்கின்ற அவரது இந்த முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
	இந்தப் புதினத்தை நீங்கள் கண்டிப்பாகப் படியுங்கள் சகுந்தலாவும், மதனும், சரவணனும் நம்மின் வெவ்வேறு பிரதி பிம்பங்களே. தன் மனக்கண்ணாடியின் ரசவாதம் ஊற்றி அரவிந்த் அப்பாத்துரை அவர்களைக் காட்டுகின்ற அனுபவத்திற்குள் மூழ்குங்கள். 
	ஒரு புதினமெனும் ‘genre’ற்குள் இந்த நாவல் வகைபடுமா என்கின்ற கேள்விகள் விடுத்து, வாழ்வனுபவத்தின் ஒரு உண்மைக் கூறை தனக்கே உரிய முறையில் அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார் - மிக சுவாரஸ்யமாக. அதனைப் படித்து ரசிக்க முடிகின்ற ஒர வாசகியாக அவருக்கு என் வாழ்த்துக்கள். நாம் சிரிப்போம், பாடுவோம், நாம் பார்க்கும் யாவுமே ஆசிர்வதிக்கப்படவில்லை என்றாலும், நமக்கு எல்லாமே அளிக்கப்பட்டுள்ளன! 

* * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *