தி.மு.க. இளைஞர் அணி முதல் மாநில மாநாடு – நெல்லை 15.12.2007

நெல்லை தி.மு.க. இளைஞர் அணி முதல் மாநில மாநாட்டில் மாநாட்டுக் கொடியை 15.12.2007 அன்று ஏற்றிவைத்து, 16.12.2007 அன்று தமிழச்சி தங்கபாண்டியன் ஆற்றிய உரை

"ஞாயிறன்ன வெந்திறல் ஆண்மையும்
திங்களன்ன தண்பெருஞ் சாயலும்
வானத்தன்ன வண்மையும்
மூன்றும் உடைய நெடுந்தகை’’ 

சாக்ரடீஸை அடுத்து பிளேட்டோ,
வால்டேரை அடுத்து ரூசோ, 
மார்க்சை அடுத்து லெனின்
என்கின்ற வரலாற்றுத் தடத்தில்,
பெரியாரை அடுத்துப் பேரறிஞர் அண்ணா,
அவரை அடுத்து, நம் தலைவர்

"தமிழன் யாருக்கும் தாழாமல் - யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல் - எவராலும் சுரண்டப்படாமல், யாருக்கும் எசமானாக இல்லாமல் - உலகில் எவருக்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழவேண்டும்’’ என்கின்ற அண்ணாவின் ஆசைப்படி, இந்தக் கணம் வரை, இமை துஞ்சாது உழைக்கின்ற, நம் தமிழினத்தின் ஒப்பற்ற ஒரே தலைவர், ஜெர்மானிய இலக்கிய உலகிலே ஹான்ஸ் ஸாக்ஸ் செய்த சீர்திருத்தத்தினையும், பிரெஞ்ச் நாடக உலகிலே மோலியர் ஏற்படுத்திய மறுமலர்ச்சியினையும், ஸ்பெயின் தேசத்தில் மூட நம்பிக்கைகளை முறியடித்துப் பெனாவெண்டே மூட்டிய விழிப்புணர்வையும், ஒருங்கே, தென்னகத்துத் தமிழ் மக்களிடத்தே தம் உணர்வாலும், எழுத்தாலும், பேச்சாலும், தியாகத்தாலும், அரசியல் அறத்தினாலும், மனத்திண்மையினாலும், பெரு நெருப்பென ஏற்றிய பகுத்தறிவுக்கனல், பேச்சிலே சிசரோ, வாக்கு வன்மையிலே எட்மண்ட் பர்க், உரையாடலில் சார்லஸ் லாம்ப், என ஒவ்வொரு தமிழனும் தலைநிமிர்ந்து பெருமைப்படுகின்ற நம் அருந்தலைவர், ஜெர்மனியின் தலைசிறந்த கவிஞர், விஞ்ஞானி, நாடக ஆசிரியர், நாவலாசிரியர் கதேயினைச் சந்தித்த பிரமிப்பில், மாவீரன் நெப்போலியன் ‘இதோ ஒரு மனிதன்’ ‘Here is a man’ என பேச்சற்று வியந்தது போல், இனிவரும் நம் தலைமுறைகள் எல்லாம், "இவர் மட்டுமே தலைவர்’’ என வியக்கும், இன்று ஐந்தாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கின்ற, நிகரற்ற நம் முதல்வர், இன்று நெல்லையில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இளைஞர் அணியின் முதல் மாநில மாநாட்டிலே, நான் பிறந்தது முதல் தமிழையும், தலைவரையும், பகுத்தறிவையும் கவிதையையும் எனக்கு ஊட்டி வளர்த்த "உயிர் இருக்கும்வரை தலைவரையே நேசித்த,உடல் இயங்கும்வரை கழகத்தையே சுவாசித்த’’ என் தந்தை வே.தங்கபாண்டியன் பெயருடன், என் பெயரை இணைத்து, ‘தமிழச்சி தங்கபாண்டியன்’ என அறிவித்து, கழகத்தின் சிறப்புமிக்க கொடியினை ஏற்றுகின்ற அதி உன்னதமான அருமை வாய்ப்பினை எனக்கு அளித்தமைக்கு நன்றி கூறி,

"நாடிலும் நின்னடியே நாடுவன், 
நாடோறும்
பாடிலும் நின்புகழே பாடுவன்’’,  

என்று என் உரையினைத் தொடங்கு முன்,

‘குன்றா மறவக் குரிசிலார்
அன்பழகர் என் தோழர்
என்னல் எனக்கும் பெருமையதே’

எனப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாராட்டுரைத்த, அருமை மிகு கழகப் பொதுச் செயலாளர், பேராசிரியர் அவர்களுக்கு மரியாதையுடன்,"உலகின் எல்லாச் சாலைகளும் ரோமை நோக்கியே’’ "All Roads Lead to Rome" என்பது போல, இன்று தமிழகத்தின் அனைத்துச் சாலைகளை மட்டுமல்ல, இந்தியாவின் ஒட்டுமொத்த கவனத்தையுமே நெல்லையில் குவியச் செய்திருக்கின்ற,‘ஒரு குறையும் இல்லாத தங்கக் கம்பி,வைதீகக் கோட்டைகள் மீது வெடி குண்டுகள் வீசி விழச்செய்யும் பலம் பொருந்திய டார்ப்பிடோ’ என்கின்ற அண்ணாவின் இயக்கக் கண்மணி பற்றிய விவரிப்பின் மொத்த உருவான நம் தளபதி, ரஷ்யாவிலே Joseph Dzhugahvili-ஆகப் பிறந்து, ரஷ்ய மொழியிலே எஃகு எனப்படுகின்ற Stal (Steel) எனும் பதத்துடன், லெனின் என்கிற மகத்தான பெயரின் பின்பாதியினை இணைத்துப் புதிய பெயராக உருவாக்கப்பட்ட, ‘ஸ்டாலின்’ என்கிற, பெருமைமிகு பெயர் சூட்டப்பட்ட, இளமையிலிருந்தே எஃகு நிகர்த்த போராளி - இன்றோ,
	
‘ஆடக மால்வரை அன்னவில்லை
ஏடவிழ் மாலையென்ன எடுத்தான்’

எனக் கம்பன் சொல்வது போல, இமயப் பொறுப்பான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணியின் வித்திடலையும், வளர்ச்சியினையும், சோர்விலாது, ஒரு இலகுப் புன்னகையுடனும், போர்வீரனின் சிதறாத கவனத்துடனும் திறம்படக் கையாளுகின்ற நம் தளபதி -	தந்தை பெரியாரால் அன்று ‘திராவிடத் தளபதி’ என்றழைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா குறித்துப் பேராசிரியர் அவர்கள்,"எளிமையான தோற்றம்விரைவான நடை புன் முறுவல் பூத்த முகம் என்ற வர்ணனைக்குரிய ஒருவர், இன்று தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களிலெல்லாம் இடம் பெற்றுவிட்டார்,  அவர்தான் அண்ணா.  

அவரது கட்சியினருக்கோ - தளபதி, 
கூட்டுத் தோழர்களுக்கோ - அண்ணன், 
தலைவருக்கோ - அன்பன்’’ 

எனப் ‘புதுவாழ்வு’ பத்திரிக்கையிலே அன்று எழுதியது அனைத்திற்கும் இன்று அணுபிசகாது பொருந்துகின்ற நம் தளபதி,	நெப்போலியன் தன் படைகளுடன், ஜெர்மானிய நகரமான யெனாவிற்குள் நுழைந்த பொழுது, "வெண்குதிரையில் அமர்ந்துள்ள முழு முற்றான ஆன்மா’’ "Wholesome Human Soul" எனப் புகழ் பெற்ற தத்துவவாதி Hegel, அவரைப் போற்றிப் புகழ்ந்ததைப் போல,1 988இல், தமிழகத்தின் தேசிய முன்னணித் துவக்க விழாவில், இளைஞரணியில் வெள்ளுடை அணிந்து முன்னின்றும், 1989இல், கோவையில் கழக அரசின் சாதனை விளக்கப் பேரணியில் ‘வெண் புறாக்களின் வெள்ளோட்டம்’ என்கின்ற மிகப்பிரம்மாண்டமான ஊர்வலத்திற்குத் தலைமை ஏற்றும்,இன்று, விவேகானந்தர் கேட்ட, ‘நாட்டையே மாற்றவல்ல நூறு இளைஞர்கள்’ ஒருங்கிணைந்த ஆக்கசக்தியினைத் தன்னகத்தே கொண்டுள்ள,‘நிற்பதற்கு ஒரு இடம் கொடுங்கள், நான் இந்த உலகையே அசைத்துக் காட்டுவேன்’ என்று சொன்ன Archimedes போல, தமிழகமே இமைக்க மறந்து, வியந்து பார்க்கும் இத்தகையதொரு இளைஞரணியின் முதல் மாநில மாநாட்டினைத் திறம்பட நடத்திக் கொண்டிருக்கின்ற, மாநாட்டுத் தலைவர், மதிப்பிற்குரிய தளபதி அவர்களையும், ‘சொற்செல்வன்! சோர்வற்ற உழைப்பாளி! அறியாமையை அகற்ற அஞ்சாநெஞ்சுடன் அவனி சுற்றி வந்த ஆண்மையாளன்’ என அண்ணாவால் புகழப்பட்ட பட்டுக்கோட்டை அழகிரியின் அருமைப் பெயர் சூட்டப்பெற்ற ‘இயல்பான மன வலிமை, அச்சமற்ற பேச்சு, எதற்கும் கலங்காத இரும்பு நெஞ்சம்’ கொண்ட, எங்களது குடும்பத்தின் மீது மாறாத அன்பும் பற்றும் வைத்து, எங்கள் தந்தையின் மறைவிற்குப்பின், எங்கள் குடும்பத்தை வழி நடத்துகின்ற திசை மானியாகத் திகழ்கின்ற பாசத்திற்கு உரிய அண்ணன் அழகிரி அவர்களையும்,
	
இங்கிலாந்தின் தலைசிறந்த பாராளுமன்றவாதியும், பாராளுமன்றத்திலே தன் மனச்சான்று வழிப்படிதான் ‘உறுதிமொழி’ எடுப்பேன் என வாதிட்டு, கிளர்ச்சி செய்து, வெற்றிபெற்றவரான, சார்லஸ் பிராட்லா போன்று, இன்றைக்கு இந்திய பாராளுமன்றத்திலே சிறப்பான முறையிலே தடம் பதித்திருக்கின்ற,

‘உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்
ஓது பற்பல நூல்வகை கற்கவும்
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திட, 
விலகி வீட்டில் ஓர் பொந்தில் வளர்வதை
வீரப்பெண்கள் விரைவில் ஒழிப்போம்’ 

என, கழகத்தின் மகளிருக்கு மட்டுமல்ல, தமிழகத்துப் பெண்களுக்கெல்லாம் ஒரு உந்து சக்தியாகத் திகழ்கின்ற,அதிமென்மையான, ஆயின், அடர்த்தியான கானகம்போல வலிமையான, பாராளுமன்ற உறுப்பினர் கவிஞர்.கனிமொழியையும், என் நினைவில் நிறுத்துகின்றேன்.  

மேடையிலே அமர்ந்திருக்கின்ற, முன் இருக்கின்ற கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கும், திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல, பாசப் பிணைப்பு மிகுந்த ஒரு மிகப்பெரிய குடும்பம் என்பதை மெய்ப்பிக்கும்படி இங்கு பெருந்திரளாகக் கூடியுள்ளவர்களுக்கும், ‘மனிதக் கூட்டத்தின் இந்த இனக்குழு இயற்கையான எளிமையுடனும், வலிமையுடனும் எவ்வளவு வியப்பிற்கு உரியதாக இருக்கிறது’  என ஏங்கல்ஸ் கூறியது போல, இங்கு சங்கமித்திருக்கும் தமிழ் இளைஞர்களுக்கும், ‘திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற அழகான வீணையின் அற்புதமான விசைகளாய், அடி நரம்புகளாய்’ என, அண்ணா கூறிய தம்பிகளாய் இங்கிருக்கின்ற கழகத் தோழர்களுக்கும், தோழியருக்கும், வணக்கம். வானத்தை நோக்கிச் சீறிப்பாய்கின்ற ஏவுகணை போன்று இங்கு எற்றப்பட்டிருக்கின்ற நமது இருவண்ணக் கொடிக்கு; அரசியல், பொருளாதார, சமுதாய வாழ்விலுள்ள இருண்ட நிலையின் அறிகுறியான கறுப்பு வண்ணமும், அம் மூன்று துறைகளிலும் உள்ள இருண்ட நிலையினைப் போக்கி ஒளிநிலை உண்டாக்க வேண்டும் என்பதன் அறிகுறியான, சிவப்பு வண்ணமும் இணைந்த, நமது கழகத்தின் இரு வண்ணக் கொடிக்கு என் வணக்கம்.
	
வரலாற்றில் முதன் முறையாக, கொடியோடு அதன் கம்பத்திற்கும் வணக்கம் செய்கிறேன்.  ஏன் தெரியுமா? உலகத்தின் மிக உயரமான கொடிக் கம்பமான, வட கொரியா நாட்டில் Gijeong-dong-ல் இருக்கின்ற (525 அடி) உயரக் கம்பத்தை விஞ்சும் வரலாறு, இந்த 84 அடி உயரக் கம்பத்திற்கு உண்டு - அது என்றும் தளராத நம் தலைவரது அகவையினைக் குறிப்பதனால்! 
	
Alexander Heran-ஐயும், கான் சாகிப்பையும் வென்ற பூலித் தேவனின் குதிரைக் குளம்படிகளும், திருப்புடை மருதூர் இலை ஓவியங்களும், ஆதிச்ச நல்லூர் செப்பேடுகளும், கட்ட மொம்முவும், தேரிக்காடுகளும், எட்டயபுரமும், உப்பளங்களும், பனைமரங்களும், கரிசலின்வெட்கையும், பொதிகையின் குளிர்ச்சியும், இந்த மண்ணில் பிறந்து இங்கேயே கடலில் கலக்கின்ற "குளிர் நீர்ப் பொருநையும்’’, நம் தலைவரால் புகழ்பெற்ற பாளையங்கோட்டைச் சிறையும் இருக்கின்ற சிறப்புமிக்க நெல்லைச் சீமையிலே இன்று நம் கழகக் கொடிஏற்றப்பட்டுள்ளது.
	
அதனை, அகண்ட நெல்லைச் சீமையின் ஓர் அங்கமாயிருந்த, விருதுநகருக்கு அருகிலிருக்கும் மல்லாங்கிணறு எனும் ஊரில் பிறந்த, இந்த மண்ணின் மகளான, ஒரு கிராமத்துத் தமிழச்சி ஏற்றியிருப்பது, வாழ்நாட் சிறப்பாகும் எனக்கு.
	
ரஷ்யாவிலே புரட்சிக்குப் பின், சோவியத் அரசின் செங்கொடிக்கான இலச்சினையை வரைந்து கொண்டு வந்திருந்த ஓவியர், அரசு, ஆற்றலும் வலிமையும் உடையது எனக்காட்டும் பொருட்டு அதிலே ஒரு வாளை வரைந்திருந்தார்.
	
"நாட்டைத் தாக்குவதோ, அல்லது பிடிப்பதோ அல்ல நமது குறிக்கோள்; தற்காப்புப்போர்; தாக்குதல் போரல்ல நமது கொள்கை’’ எனச் சொல்லி, லெனின் அதனை மறுத்து, உழைப்பின் சின்னங்களான அரிவாள், சம்மட்டி ஆகியவற்றை இலச்சனையாகத் தேர்ந்தெடுத்ததாக வரலாறு சொல்கிறது.

"உலகிலேயே மிகப்பெரிய, தினமும் ஏற்றப்படுகின்ற கொடி’’ என்கின்ற தனிச்சிறப்பு Brazil நாட்டுக் கொடிக்கு உண்டு.  Brazil நாட்டுத் தலைநகரான Braziliaவின் Three Powers சதுக்கத்தில், அனுதினமும் ஏற்றப்படுகின்ற, அந்த (600 Kilogram எடையுள்ள) Brazil நாட்டுத் தேசியக் கொடியினைப் பார்க்கும் பொழுது, அந்நாட்டு மக்கள் அடைகின்ற பெருமிதத்திற்குச் சற்றும் குறையாத சிலிர்ப்பும், பெருமையும் நமது கழகத்தின் இந்த இரு வண்ணக் கொடியினை ஏற்றிய பொழுது எனக்கு ஏற்பட்டது.

இப்பெருமை -சிவப்பு நிறம் கொண்ட கொடியின் நடுவில், வெள்ளை நிறத்தில் தராசுச் சின்னம் சமூக நீதியினை நினைவுபடுத்துவதன் குறியீடாகத் தராசுச் சின்னம் கொண்ட நீதிக் கட்சியின் கொடியில் இருந்து தொடங்குகிறது.  நீதிக் கட்சியின் ஒரே தூதுவராக லண்டன் சென்று, அந்நாட்டில் அரசியல் பேசத்தடை விதிக்கப்பட்ட பொழுது, "இந்தியா திரும்பும் வரை என்னுடைய வெடிமருந்தை நனைக்காமல் வைத்திருப்பேன்’’ என்று சொன்னடி.எம்.நாயர், 1919இல் சென்னை திரும்புகையில், இரயில் நிலையத்திலிருந்து, நீதிக்கட்சி அலுவலகம் இருந்த அண்ணா சாலை வரை அவரை வரவேற்றது அந்தத் தராசுக் கொடிதான். "தியாகராயர் களத்தில் தூவிய விதை நன்றாக வளர்ந்திருக்கிறது; அவர் அன்று பறக்கவிட்ட சமுதாயப் புரட்சிக் கொடியின் கீழ் நின்று தான் நாம் இன்று பணியாற்றி வருகிறோம்’’ எனப் பேரறிஞரால் பெருமைப்படுத்தப்பட்ட கொடி அது.

நீதிக்கட்சி, திராவிடர் கழகமான பின், புரட்சியின் சின்னமாய்ப் புதியதொரு கொடி வேண்டுமென தந்தைப் பெரியார் சொன்ன பொழுது, அப்பொழுது, ஈரோட்டில் குடியரசுப் பத்திரிக்கையின் உதவி ஆசிரியராக இருந்த நமது ஒப்பற்ற தலைவர், கருப்பு மையை ஒரு காகிதத்தில் பூசி, அதன் மத்தியில் தம் விரல் நுனியிலிருந்து எடுத்த இரத்தத்தை வட்டமாய்த் தடவிட, அன்று உருவாயிற்று தியாகத்தின் அறிகுறியெனக், கருப்பில் சிவப்பு வட்டமிட்ட, இன்னுமொரு புதிய கொடி.

"கழகத்தின் லேபிள் அல்ல முக்கியம் - கொள்கை தான்’’ எனப் பேரறிஞர் அண்ணா அறிவித்து, சமுதாயச் சீர்திருத்தம், பொருளாதாரத்தில் சமதர்மக் குறிக்கோள் ஆகிய கோட்பாடுகளுடன், 1949, செப்டம்பர் 17இல், சென்னையில், வரலாற்றின் புதிய திருப்பத்திற்கெனக் காத்திருந்த இராயபுரம் இராபின் சன் பூங்காமை தானத்தில் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. ஐரோப்பியர்கள் சீர்திருத்தம் (Reformation) என்றும், பிரெஞ்சுக்காரர்கள் மறுமலர்ச்சி (Renaissance) என்றும், இத்தாலியர்கள் புனர்வாழ்வு (Ciquecente) எனவும் அழைத்த அந்த சகாப்தம், தென்னிந்தியாவில், தமிழகத்தில் தொடங்கியதும் அன்று தான்.

"எது முறையோ, அதன் வழி நடவுங்கள்,
அறிவிற்கு ஒத்ததைக் கொள்ளுங்கள்,
எதிர்ப்பிற்கு அஞ்சாதீர்கள்,
மதத்தின் முன் மண்டியிடாதீர்கள்,
மானமே மனிதனை மனிதனாக்குகிறது’’

என முழங்கிய அண்ணாவின் தலைமையில், படித்த, அறிவுத்தாகமிக்க, சுயமரியாதை இளைஞர்களும், யுவதிகளும் திரண்ட பொழுது, நமது கழகத்திற்கென உருவாக்கப்பட்டது தான் இங்கே, இளைஞர்களை எல்லாம் நம் பக்கம் வந்து இணையச் சொல்லி அசைந்து அசைந்து அழைக்கின்ற இக்கொடி.

நினைத்துப் பார்க்கிறேன் - கி.பி.5ம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற கணித மேதை ஆர்யபட்டா, கீழ்க்கண்ட கணக்கை உதாரணத்திற்குத் தந்துள்ளார் : "16 வயதுடைய அடிமைப் பெண்ணொருத்தி 32 நாணயங்களுக்குக் கிடைத்தால், 20 வயதுள்ள அடிமைப் பெண்ணின் விலை என்ன?’’ என்று.  அந்த அடிமை நிலையின் அவல இருளினின்று பெண்ணினத்தை மீட்டெடுக்க, அன்று திராவிட இயக்கம் என்றொரு நீதிக்கட்சித் தொடக்கமும், திராவிடர் கழகம் என்றொரு ஊக்கமும், இறுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் என்றதொரு மிகப் பெரிய எழுச்சியும் இல்லாதிருந்தால் - தமிழகத்தின் வரலாற்றில், ஒற்ற வாடை நாடகக் கொட்டகையில், முதன் முதலாக நடைபெற்ற மகளிர் மாநாட்டில் - அன்று ஞானாம்பாள் சிவராஜ் "தமிழ்க் கொடி’’யை ஏற்றியது சாத்தியப்பட்டு இருக்குமா என்று !

1951ம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சேலம் மாவட்ட மாநாட்டைத் துவக்கி வைத்த சத்யவாணி அம்மையார் துவங்கி, 1953இல் நம் கழகத்தின் திருச்சி மாவட்ட சமூகச் சீர்திருத்த மாநாட்டினைத் துவக்கிவைத்து, கழகத்தில் முதன் முதலாக அண்ணாவிடம் இருந்து கேடயம் பெற்றவருமான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், 1954இல் இதே நெல்லை மாவட்ட மாநாட்டைத் துவக்கி வைத்த தோழியர் பூங்கோதை - என எத்தனை பெருமைமிகு பெண்கள், தம்முடைய தளராத சமுதாயப் பணிக்காகக் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள் நம் கழகத்திலே!

அந்த வகையில், மிக நீண்ட அப்பெருமைப் பட்டியலின் நீட்சியாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் மாநில மாநாடு 1951 டிசம்பரில், சென்னையில் நடந்த பொழுது, "கண்ணீர்த் துளிகளே, என் கண்ணின் மணிகளே, கழகக் காவலர்களே’’ என ஆரம்பித்துச் சொற்பொழிவாற்றிய பேரறிஞர் அண்ணா ஏற்றிய நம் கழகத்தின் கொடியை,1996ம் ஆண்டு சனவரி 29இல், திருச்சியிலே தேர்தல் வெற்றிக்கான முன் எழுச்சியாய் நடந்த நம் கழகத்தின் மாநாட்டில் நம் தலைவர் ஏற்றிய நம் கொடியை,"கழகத்தார் ஒவ்வொருவரின் வீட்டிலும், அவர் தம் வாகனங்களிலும் பறக்கவிடப்பட வேண்டும்’’ என நம் தளபதி அவர்களால் உரிமையோடு வேண்டுகோள் விடப்பட்டு, 2004இல் சேலம் மாநாட்டில் ஏற்றிவைக்கப்பட்ட நம் கொடியினை,இன்று நெல்லையிலே ஏற்றிட எனக்குக் கிடைத்திட்ட வாய்ப்பு,
	
"கணந்தோறும் புதிய வியப்பையும்,
கணந்தோறும் வெவ்வேறு கனவையும்,
கணந்தோறும் நவநவமாய்க் களிப்பையும்’’ அளிக்கின்றது.

தேசிய இயக்கம், பொதுவுடமை இயக்கம், திராவிட இயக்கம் ஆகிய இயக்கங்களுக்குப் பெரும் பங்களிப்புச் செய்திருக்கின்ற இதே நெல்லையிலே தான், மதுரை, ராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களின் சார்பாக 1917இல் நீதிக் கட்சியின் மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது.

"ஆரம்பக் கல்வி இலவசமாக்கப்பட வேண்டும்; அது கட்டாயமாகவும் ஆக்கப்பட வேண்டும்’’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அந்த மாநாடு நடந்த இதே நெல்லைச் சீமையிலே தான், 1950ஆம் ஆண்டு ஆகஸ்டு 26, 27இல், கோவில்பட்டி "வேல் வெள்ளைச்சாமி பந்தலில்’’ நெல்லை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக மாநாடு நடைபெற்றது.  மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர், "தலைமை வகிப்பது என்பது கட்சியிலே ஒரு நட்சத்திரத்தை உண்டாக்கு என்பதல்ல’’ என உரத்துச் சொன்ன நம் தலைவர் ஆவார்.

இன்று 2007இல், அதே நெல்லையில், கழகத்தின் மூத்த முன்னோடியும், ‘தலைவரது மனசாட்சி’ எனும் பெருமைபெற்ற வருமான மறைந்த திரு.முரசொலி மாறன் அவர்கள் பெருமையுடன் குறிப்பிட்டதுபோல, "தன் முதல் ஆட்சிக் காலத்தில் புகுமுக வகுப்புவரை கல்வியை இலவசமாக்கிய, தன் இரண்டாவது ஆட்சிக் காலத்தில், ஆதி திராவிட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினருக்கும் இளங்கலைப் பட்டப் படிப்புவரை இலவசக் கல்வி வழங்கிய, பட்டம் பெறாத குடும்பத்தைச் சேர்ந்த ஏழை எளிய ஆதி திராவிடருக்குத் தொழிற் கல்வியை இலவசமாக வழங்கிய, இன்று, ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன், முதல்வர் பொறுப்பேற்ற அந்த மேடையிலேயே தேர்தல் வாக்குறுதியான ‘ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்’க்கான ஆணையினை, முதல் அரசாங்க ஆணையாக நிறைவேற்றிய, கருணையையே கண்களாகவும், காதுகளாகவும், நிதியாகவும் கொண்டிருக்கின்ற நம் தலைவரது தலைமையின் கீழிருக்கின்ற கழகத்தின் அமைப்பான, இளைஞரணியின் மாநாடு, இளைஞரணியின் தொடக்கத்தில் தலைவர் வழங்கிய ஆத்திச்சூடி அறிவுறுத்தியது போல, ‘ழ’ கரமாய்ச் சிறப்புற்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

"ஏதென்ஸிலும், ரோமிலும், வன்முறையை ஆதாரமாகக் கொண்ட பழைய அமைப்பைத் தகர்த்தெறிந்து, புதிய அமைப்பை ஏற்படுத்த எத்தனை போராட்டங்கள் நடைபெற்றிருக்கும்?’’ என வியக்கின்றார் ஏங்கல்ஸ்.

நம் திராவிட முன்னேற்றக் கழகம் இன்றுவரை பகுத்தறிவுச் சுதந்திரம், தனிநபர் மாற்றம், சமூக மேம்பாடு, ஆகியவற்றிற்காகக் கடந்து வந்த போராட்டங்கள் எத்தனை யெத்தனை? தோழர் ஜீவா அவர்கள்,

"புற்றில் வாழ் அரவுக்கஞ்சோம்
பொய்யர் தம் மெய்யுக்கஞ்சோம்
விற்றொழில் வேந்தர்க்கஞ்சோம்
வெஞ்சிறை வாழ்வுக்கஞ்சோம்
கொற்றொழில் பீரங்கிக்கும் அஞ்சோம்
கொடும் பணத்திமிர்க்கு மஞ்சோம்
பற்றிலா ஏழை கண்ணீர் பார்க்க நாம்
அஞ்சுவோமே’’

எனக் கூறியது போல, கடந்து வந்த அனைத்துப் பேராட்டங்களிலும், பேரணிகளிலும் முன்னின்று வந்திருப்பது, 1980ம் ஆண்டு, "அஞ்சாமை, துணிவு, மானங்காத்தல்’’ ஆகியவற்றின் மறுபெயரான ஜான்சி ராணியின் பெயர் தாங்கிய, மதுரை ஜான்சி ராணிப் பூங்காவிலே தொடங்கப்பட்ட நம் இளைஞரணியாகும்.

1983ம் ஆண்டிற்குப் பிறகு, கழகம் நடத்திய ஊர்வலங்கள் பேரணியான பின்பு, நடைபெற்ற அனைத்துப் பேரணிகளிலும் தளபதி தலைமையிலான நமது இளைஞர் அணி, "சூரியன் ஆகாயத்தின் சிங்கம்’’ என்கிற ஆக்டேவியாபாஸின் கவிதை போல கம்பீரமாய் முன்னின்றிருக்கிறது.

"அமைதியும் உறுதியுமாக நில்லுங்கள்
அடர்ந்த காடுகளைப் போல்;
அமைதியும் உறுதியும்தான்
தோல்வியுறாத போர் ஆயுதங்கள்’’

என்ற பெருங் கவிஞன் ஷெல்லியின் கவிதையினைப் போல, நமது கழகத்தின் பேரணிகளில் எல்லாம் கீழிருந்து மேலெழும்பும் பெருந் தீயென, அரண் போன்ற அணிவகுப்பினை நடத்திக் காட்டியிருக்கிறது நமது இளைஞரணி.
	
1966இல் சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற கழகத்தின் பொது மாநாட்டில் அண்ணா சொன்னார், "எனக்குக் கிடைத்திருக்கின்ற படைக் கருவிகள் தூய்மையாகக், கூர்மையாக இருக்கின்றன’’ என்று.  இன்று, இந்த 2007இல் கழகத்தின் படைக் கருவிகளை, இளைஞர் அணியினர் ஒவ்வொருவரையும் "இல்யீச் விளக்குகளாகப்’’ பார்க்கிறோம்,

"இல்யீச்’’ என்பது லெனினின் இயற்பெயர்.  புரட்சியை அடுத்த ஆண்டுகளில் ரஷ்யா மின்சாரமயம் ஆக்கப்பட்ட பொழுது, மின் விளக்குகளை மக்கள் ‘இல்யீச் விளக்குகள்’ என்றே லெனின் பெயரால் அழைத்தார்கள்.  அப்படிப்பட்ட புரட்சி விளக்குகளாகப் பரிணமித்திருக்கின்ற இல்யீச் விளக்குகளான இளைஞர்களுக்கு, 1956ம் ஆண்டு திருச்சியிலே நடைபெற்ற மாநாடு எப்படி ஒரு திருப்புமுனை ஆனதோ, அதேபோல இந்த நெல்லை மாநாடும் மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்க வேண்டும்.

மார்க்ஸ் சொல்கிறார் "தத்துவவாதிகள் இதுகாறும் உலகத்திற்கான விளக்கத்தை மட்டுமே கொண்டு வந்தனர்,  ஆனால் செய்ய வேண்டியதோ உலகத்தை மாற்றுவது தான்’’ என.  மாறுதலுக்கான முதல் புள்ளி இளைஞர்கள்.  மாற்றத்திற்கான முதல் அடியாக, நமது கழகம் குறித்து, தனி மனிதன், சமூகம், அரசு ஆகிய மூன்றையும் ஒருமித்ததொரு நேர்கோட்டில் முன்னேற்றுகின்ற முனைப்போடு இயங்குகின்ற மாபெரும் இயக்கமாக, நமது கழகம் செழித்திருப்பதை, இப்பொழுதைய இளைய தலைமுறையினருக்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

பன்னாட்டு நிறுவனங்களின் பணி வாய்ப்பிலும், உலகமயமாதலின் அத்தியாவசிய நெருக்கடிகளிலும், வெகுஜன ஊடகங்களின் ஈர்ப்பிலும் வாழ நேர்கின்ற நம் இளைஞர்களுக்கு, "நேற்றைய மரபின் அச்சிலே தான் இன்றைய புதுமையின் சக்கரம் சுழல்கிறது’’ என T.S.Eliot எனும் ஆங்கிலக் கவி சொன்னதைச் சுட்டிக்காட்டி, திராவிடருக்கான ஆதி ஆவணங்களை நாம் நினைவுபடுத்த வேண்டும்.
	
"பிறப்பினால் பேதமுண்டு என்பதை ஒப்புக் கொள்ளாத பாரம்பரியமிக்க நாகரிகம் நமது திராவிட நாகரிகம்’’ என்பதனையும், "திராவிடச் சிந்தனையின் தலைவர்களான திருவள்ளுவர், அவ்வை போன்றோரை - நமது மரபின் அச்சை’’ ஊன்றி கற்கச் செய்ய வேண்டும்.

"நாம் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பரம்பரையைச் சார்ந்தவர்கள்.  அவர்கள் ஆங்கிலேயர் இங்கு அடியெடுத்து வைப்பதற்கு முன்வரை, சக்கரவர்த்திகளாக இருந்த அசோகனுக்கு எதிராக, சந்திரகுப்தனுக்கு எதிராக, அக்பருக்கு எதிராக, அவுரங்கசீப்புக்கு எதிராகத் தங்கள் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள்’’ என்கிற Barrister டி.சி.தங்கவேல்பிள்ளையின் பேச்சினையும், 57 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நெல்லையிலே, "பாண்டியன் பரம்பரையினரே, சேரன் சந்ததியினரே, சோழனின் சொந்தக்காரர்களே வாருங்கள்’’ என அழைத்து "சமூகநீதி தேவையென்றால் பரந்த நோக்கம் பேசுகிறார்கள்; தகுதி, திறமை என்கிறார்கள்; இந்தத் தகுதியும், திறமையும், சமுதாயப் பிரச்சினை வரும்பொழுது காட்டப்படுகிறதா?’’ என வினவிய நம் தலைவரின் பேச்சினையும், இளைஞர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

மிக முக்கியமாக, மண்ணைப் பதப்படுத்திவிட்டு, பின் விதையைத் தூவுகின்ற விவேகத்துடன், நமது வேர்கள் பற்றிய புரிதலுடன், அடுத்து நம் இலக்கு எது என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்கின்ற தெளிவை நாம் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதற்கு ‘புரட்சி’ என்கின்ற நெருப்புச்சொல், இன்று எவ்வாறு வெறும் அர்த்தமற்ற அடைமொழியாய் தமிழக அரசியல் வானில் பாவிக்கப்படுகின்றது என்பதனையும், உண்மையில் ‘புரட்சி’ என்பது என்ன, ‘புரட்சியாளர்கள்’ யார்? எனத் தெளிவுபடுத்தி, "புரட்சியில், அரசியல்புரட்சி, சமூகப் புரட்சி இரண்டில் எது நடந்தாலும், எப்பொழுதும் அதில் ஒரு அழகு பிறக்கிறது.  மகிழ்ச்சியையும், பேரழகையும் புரட்சி பிரசவிக்கிறது’’ என புரட்சியின் உண்மையான ஆழ, அகலத்தையும், தியாகத்தையும் உணரச் செய்ய வேண்டும்.  ஏனெனில், உலகின் பெரும்பான்மை புரட்சியாளர்கள் அனைவரும் இளைஞர்களே. 
	
1912ஆம் ஆண்டு இந்தியாவின் Viceroy Lord Hardings மீது வெடிகுண்டு வீசிய வங்காளத்தின் போர்வாள், ராஷ் பிகாரி போஸ், புரட்சிகர இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டபொழுது, அவருக்கு வயது 15. ஸ்பெயினின் ஆக்ரமிப்பினை எதிர்த்து, க்யூபாவிற்கு ஆதரவாகக் களம் இறங்கிய, காலனி ஆதிக்கத்திற்கு எதிரான முதல் தீப்பொறி, ஹோஸே மார்த்திக்கு, அப்பொழுது வயது 17 மட்டுமே. வியட்நாமில், ‘புரட்சிகர வியட்நாம் இளைஞர் சங்கம்’ எனும் அமைப்பை உருவாக்கி, வியட்நாம் போருக்கு ஆதரவு திரட்டிய ஹோ-சி-மின் ஒடிந்து விழும் தோற்றத்திலிருந்த ஓர் இளைஞன். முதல் பிரெஞ்சுப் புரட்சியின் ஒளியை முன்னுக்குக் கொண்டு சென்ற Francis Noyel – Baboob முழுச் சமத்துவத்துக்கான பொதுவுடமைக் கருத்தாளர், புரட்சியில் ஈடுபட்ட பொழுது அவரது வயது 25; அதற்காகத் தூக்கிலிடப்பட்ட பொழுதோ வயது 33.

"அவர்கள் மீது கண்ணீர் விழவில்லை
தேவதைகளின் கரங்கள் அவர்களது
உடல்களை எடுத்துச் சென்றன’’

என்கிற ஓர் ஆங்கிலேயரின் இரங்கற் கவிதையோடு உயிர்துறந்த பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் அனைவருமே இளவயதுப் புரட்சியாளர்கள்.
	
"நாம் இருவரும் நெருங்கின உறவினர்கள் அல்லர், ஆனால் இந்த உலகத்தில் அநீதி தலையெடுக்கின்ற போதெல்லாம் கோபமும், வெறுப்பும் கொண்டு, நீ குமுறி நடுங்குவாயானால் நாம் இருவரும் தோழர்கள்’’ என்று சொன்ன புரட்சிகரச் செம்மைவாதி சேகுவாரா, புரட்சிக்காக தன்னை தயாரித்துக்கொண்ட, லத்தீன் அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட பொழுது அவரது வயது 21.

திருவாரூர் எனும் ஊரிலே, ‘தமிழ் மாணவர் கழக’த்தை ஏற்படுத்தி, மாணவர்களிடையே தமிழ்ப் பற்றும், இனப்பற்றும் ஏற்படுத்த, கையெழுத்து ஏடு ஒன்றை நடத்திய பொழுது நம் தலைவர் அவர்கள் ஒரு பள்ளி மாணவர். இப்படிப்பட்ட புரட்சியாளர்களை எடுத்துக்காட்டி, இளந் தலைமுறையினரை விழிப்பூட்டுவது மட்டுமல்ல, பெண்களின் சம உரிமைக்கும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்கும், குழந்தைகளின் கல்விக்கும், சார்பு நிலை முதியோர்களின் ஆரோக்கியத்திற்கும், கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளின் பூர்த்திக்கும் நமது திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்திருக்கின்ற மிக நீண்ட பட்டியலையும், செய்ய முனைந்திருக்கின்ற திட்ட அறிவிப்புகளையும் அவர்களுக்குக் கொண்டு சேர்க்கவும் வேண்டும்.

"பொருள் முதல்வாதத்தின்’’ முதல் கர்த்தாவான Francis Bacon-னின் தத்துவத்தில், அத்தத்துவத்தின் முழு வளர்ச்சிக்கான முளைகள் அனைத்தும் எளிய வடிவத்தில் மறைந்திருப்பதாக கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.  அதுபோலத்தான், நம் கழகத்தின் கோட்பாடுகளுக்குள் அடி வேராய் நீண்டிருக்கும் திராவிடத் தத்துவமும். நம் இனம், நம்மொழி, நம் கலை, இலக்கியம், பண்பாடு பற்றிய ஆழமான புரிதலுடன், இந்த நூற்றாண்டின் நவீனத் தொழில், விஞ்ஞான வளர்ச்சிகளைச் சுவைத்துப் பயன்பெறுகின்ற பக்குவத்தினை, நம் இளைய தலைமுறைக்கு ஏற்படுத்துவதே நம் முன் இருக்கின்ற மிகப்பெரிய சவால்.

இன்று நகர்ப்புறத்தில் படித்த, மேல் தட்டு வர்க்க இளைஞர்களிடத்தில் ‘அரசியல் தீண்டத்தகாதது’ என்கின்ற மனோபாவமும், கிராமப்புற இளைஞர்களிடத்தில் ‘அரசியல் ஆர்வத்தால் என்ன பயன்?’ என்கின்ற வெறுமை கலந்த கோபமும் உள்ளதைப் பார்க்கிறோம்.  அந்த இளைஞர்கள் மட்டுமே, நமக்கு மிக நம்பிக்கை தரக்கூடிய மூலப்பொருள்.  அவர்களுக்கு, எது நல்ல தலைமை, எந்த அரசியல் கட்சி தன் வியர்வையினையும், இரத்தத்தினையும் சிந்தி, தமிழக மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடி வந்திருக்கிறது, எது தேர்தல் காலங்களின் பெரும்பான்மை வாக்குறுதியினை நிறைவேற்றியிருக்கிறது, அது நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்பதை நாம் தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழகத்து இளைஞர்களே!, உங்களுடைய பகுத்தறிவு சார் தராசுக்கோலாலும், உங்களுடைய திராவிட உணர்வுசார் எடைத் தட்டாலும் சமமாக சீர்தூக்கிப் பார்த்து, திடீர்க் கட்சிகளையும், அதன் ‘மின்மினித்’ தலைவர்களையும் இனங்கண்டு ஒதுக்கித் தள்ளுங்கள். ‘புரட்சி’ என்கிற அடைமொழி மட்டுமே கொண்டு இயங்குகின்ற தலைவர், தலைவியை, அவர்கள் உங்களுக்கு உறுதி கூறுகின்ற ‘Utopia’ எனும் கற்பனை உலகைப் புறக்கணியுங்கள். மேம் போக்கான கேளிக்கை மனோநிலையில் உங்கள் தலைவர்களைத், தலைவிகளைத் தேர்ந்தெடுக்காதீர்கள்.  வெறும் தனிமனித உயர்வு மட்டுமல்ல - சமூக முன்னேற்றமும் உங்களுக்கு அதிமுக்கியம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.  தன்னலமற்ற பல தியாகங்களை நம் தமிழ் மொழிக்காகவும், இனத்திற்காகவும் செய்திருக்கின்ற, செய்கின்ற ஒரு அரசியல் கட்சியாக மட்டுமல்ல, சமுதாய இயக்கமாகவே இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.

நம் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர்களே, "உ-127’’ என்ற இலக்கமிட்ட ரயில்வே எஞ்சினை ரஷ்ய உள்நாட்டுப் புரட்சிப் போரின் போது செஞ்சேனை வீரர்களும், கொரில்லா வீரர்களும் அறிந்திருந்தார்கள்.  சோர்வில்லாமல் உழைத்து, வெண்படையின் குண்டுகளால் துளைக்கப்பட்டு பழுதுபட்ட அந்த எஞ்சினை, சோவியத் மக்கள் நினைவுகூர்ந்து, செப்பனிட்டுப் புதிதாக்கி, கம்யூனிஸ்டுகளுக்குப் பரிசளித்தார்கள். லெனின் அதன் கௌரவ டிரைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாமும், இதுபோலவே நமது வழித்தடத்தை செப்பனிட்டுத் தந்த, நமது முன்னோடிகளையும், மூத்த பொறுப்பாளர்களையும் மதித்துக் கௌரவிப்போம் - அவர்தம் ஆலோசனைகள் வழி நடப்போம்.  அதேசமயம், இன்றைய தேவை "அக்னிக் குஞ்சுகள்’’ போன்ற இளைஞர்கள் என்பதை உணர்ந்து, தமிழகத்து இளைஞர்கள் அனைவரையும் நமது கழகத்தின் உறுப்பினர்களாக்க முனைவோம் - இங்கிருந்து ஊர் திரும்புகின்ற அன்றே, அடுத்த நிமிடமே !

படித்தவர்களின் மனத்தின்மை பற்றி சோதிக்க, "இரவு முழுவதும் மழை பெய்தால் நீ என்ன செய்வாய்?’’ என்றொரு பொதுக்கேள்வி கேட்கப்பட்டதாம், "பிரிட்டிஷ் பேரரசிற்குப் புதிதாக ஒரு நாடு கிடைப்பதாக இருந்தால் அந்த மழையில் நனைந்து கொண்டே சண்டை போடுவேன்’’ என்றாராம் பிரிட்டிஷ்காரர்.  "இரவு முழுவதும் மழை பெய்தால் எனது கோதுமை வயல்களில் வரப்பு உடைந்து போகாமல் பார்த்துக் கொள்வேன்’’ என்றாராம் ரஷ்யர்.  நம் கழக இளைஞரோ, "இரவு முழுவதும் மழை பெய்தால், என்னுடைய கழகத்திற்குப் புதியதாக ஒரு இளைஞர் உறுப்பினராகக் கிடைப்பதாக இருந்தால், அந்த மழையில் நனைந்து கொண்டே ஊர் ஊராகச் செல்வேன்’’ எனச் சொல்ல வேண்டும்.
	
உலகின் மிகத் தொன்மையான மனித நாகரிகம் நம்முடையது; உயிர்ப்போடு வாழுகின்ற செம்மொழி நம்மொழி; ஜீவனும், மண்சார் வாழ்வியலும், அனுபவங்களும், தொலைநோக்குப் புதுமையும் கொண்டது நமது கலைகள்; தனிமனித உணர்வுகளும், சமுதாய மேன்மையும் சரிசமமானதொரு கலவையில் திளைப்பது நமது இலக்கியம்.

இவற்றின் தொன்மையை, பெருமையை, புதுமையை, இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்வோம் - அதற்கு, ஒப்பற்ற நம் தமிழ் இனத் தலைவர் அன்று கூறியது போல - இத் திருப்புமுனை மாநாட்டிலே – "தொடங்கிய இடத்திலிருந்து தொடங்குவோம்! 21ம் நூற்றாண்டில் சங்ககாலச் சமுதாயம் அமைத்திட வாரீர் ! 

திராவிட முன்னேற்றக் கழகம் வெறும் அரசியல் கட்சி அல்ல.  சமுதாய மாற்றத்தை உருவாக்கும் கருவி.  மறுமலர்ச்சியின் தூதுவர்களாக, திமுகவினர் அனைவரும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, சமுதாய மாற்றத்தைக் காண வேண்டும்! தொடங்கிய இடத்திலிருந்து மீண்டும் தொடங்குவோம்! இல்லாவிட்டால் வஞ்சகம் வெற்றி பெற்றுவிடும்!’’ தமிழகத்து இளைஞர்களே - வந்து எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்! புகழ்பெற்ற கவிஞன் இக்பால் சொல்கிறான்: ‘சமுதாயம் என்ற சங்கிலித் தொடரில் ஒளிவீசும் ஒரு மணியாக இணைந்துகொள், இன்றேல் இலட்சியமற்ற புழுதியாகச் சுழல்’ என்று.

"ஒரு கட்டுமானச் சிற்பியின் ஒளிமயமான நம்பிக்கைகளை விட்டு விட்டு நான் புறப்படுகிறேன்’’ என, கியூபாவை விட்டுப் புறப்படு முன் சொன்ன சேகுவாரா, 1964ம் ஆண்டு ஐ.நா. மகாசபையில் இறுதியாக உரையாற்றும் போது கூறினார்: "நான் ஒரு கியூபன். நான் ஒரு அர்ஜென்டைன். நான் யாருக்கும் குறையாத லத்தீன் அமெரிக்கத் தேசபக்தன் என்று என்னைக் கருதிக்கொள்கிறேன்’’. இந்த எழுச்சிமிகு, இளைஞரணியின், முதல் மாநில மாநாட்டிலே நாமும் சூளுரைப்போம்: "நான் ஒரு திராவிடன், நான் ஒரு தமிழன்,ஆனாலும் நான் யாருக்கும் குறையாதஒரு திராவிட முன்னேற்றக் கழகத்தொண்டன் என்று என்னைக் கருதிக் கொள்கிறேன்’’

                                                                                                * * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *