தி.மு.க. 10வது மாநில மாநாடு தந்தை – திருச்சி – 15,16.02.2014

திருச்சி தி.மு.க 10வது மாநில மாநாட்டில், "திராவிட இயக்கமும் பண்பாட்டு மறுமலர்ச்சியும்" என்ற தலைப்பில் தமிழச்சி தங்கபாண்டியன் ஆற்றிய உரை

	பெரியார் வல்லினம் 
	பேரறிஞர் மெல்லினம்
	நீயோ களத்தில் வல்லினம்
	கடைக்கோடி தொண்டனை
	உச்சிமுகரும் மெல்லினம் 
	என
	எப்போதும் இனிக்கின்ற இடையினம்!
	நீ நடந்து வந்த பகுத்தறிவுச் சாலையில் 
	தடியே வழிகாட்டி
	தாடியே தருநிழல்
	பொடியே மாக்கோலம்
	வெற்றிலையே தோரணம்!
	சுயமரியாதையும், பகுத்தறிவும்
	சரிசமமாய்ச் சூல்கொண்ட
	பெரியார் பேரறிஞர் எனும் 
	தண்டவாளங்களின் மடியில் 
	தலைவைத்து படுத்த தன்மானச் சுடரே! 
	எம் தலைவா! 
	உம்மை உயிர் மூச்சாய் நிறுத்துகின்றேன்!
	சிறப்பு மிக்க இம்மாநாட்டுத் திறப்பாளர், "என் மொழிவேன்! அன்பழகர் இந்நாட்டின் பொன்மணியே!" எனப் பாவேந்தர் புகழ்ந்துரைத்த பெருமதிப்பிற்குரிய பேராசிரியப் பெருந்தகை அவர்களே, 
	ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆதர்சமான மெக்ஸிகோவின் புரட்சி இயக்கம் “வீரமான சான்டினோ”. அதன் தளபதியான சான்டினிஸ்டாவோவைக் காஸ்ட்ரோ “சுதந்திர மனிதர்களுடைய தளபதி” எனக் கொண்டாடினார். அவ்வாறே நாங்கள் கொண்டாடுகின்ற எங்கள் தளபதி... “மனிதன் புரட்சிக்காரனாகப் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறான்” எனும் காஸ்ட்ரோவின் கூற்றுக்கிணங்கத் தொண்டராகப் பிறந்து, தளபதியாக வளர்ந்து, எதிர்காலத் தமிழகமாக உயரப் போகின்ற எங்கள் தளபதியே,
	ஹானர்களின் மன்னராக லியுபாங் முடிசூட்டிக்கொண்டவுடன் தன் தளபதிகளில் ஒருவருடன் தளபதிகளின் ஆற்றல் பற்றி விவாதித்தார். 'என்னைப் போன்றவர்கள் எத்தனை சிப்பாய்களுக்கு தலைமையேற்க முடியும்?' என்று மன்னர் கேட்டார். 'மேன்மை தங்கிய பிரபுவே! நீங்கள் ஒரு லட்சம் சிப்பாய்களுக்கு மட்டுமே தலைமை ஏற்க முடியும்' என்றார் அவர். மன்னர் மறுபடியும் 'நீங்கள் எத்தனை பேரை வழிநடத்த முடியும்?' எனக் கேட்க, அதற்கு அந்தத் தளபதி, 'என்னைப் போன்றவர்களுக்கு இன்னும் சற்று கூடுதலாக சிப்பாய்கள் இருந்தால் நல்லது' என்றார். 'என்னைவிட அதிகமானவர்களை நீங்கள் வழிநடத்த முடியுமென்றால் நீங்கள் ஏன் என் தலைமையின்கீழ் பணியாற்ற வேண்டும்?' என்று சிரித்துக்கொண்டு மன்னர் லியுபாங் கேட்டார். அதற்குத் தளபதி, 'உங்கள் கம்பீரம் சிப்பாய்களுக்கு கட்டளையிடுவதில் இல்லை, எங்களைப் போன்ற தளபதிகளுக்கு ஆணையிடுவதில் இருக்கிறது. அதனால்தான் நாங்கள் உங்கள் குடிமக்களாக வாழ்கிறோம்' என்று விடையளித்தார். மேற்சொன்ன சீனச் சரித்திர சம்பவத்திற்கு அச்சொட்டான எடுத்துக்காட்டு - தளபதி! இன்றுவரை தலைவரின் ஆணைப்படி வழிநடக்கும் எளியதொரு தொண்டர்! எமக்கெல்லாம் நம்பிக்கை உரம் தந்து வழி நடத்தும் எஃகுக் கரமே! 
	எம் தலைவர் பெற்றெடுத்த பெருவரமே - வணக்கம்!
	இளைஞர்களது மனதைக் கெடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டபோது, தத்துவஞானி சாக்ரடீஸ் ஏதென்ஸிலிருந்து தப்பியோடுவதற்கு வந்த உதவிகள் அனைத்தையும் மறுத்தார். தப்பியோடுதல் தன் வாழ்வு முழுவதும் அந்நகரின் மீது கொண்டிருந்த உறுதிப்பாட்டுக்கு மாறானது என்றும், அதுவரை வலியுறுத்திய பகுத்தறிவிற்கு எதிரானது என்றும் கூறினார்.
	சாக்ரடீஸ் அந்நகரின் மீது கொண்டிருந்த மாறாத பற்றினைப் போல், கழகத்தின் பால் உறுதிப்பாட்டோடு நிலைத்திருக்கின்ற கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கும், கழகத் தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் வணக்கம். 
	கிரேக்க நகரத்தின் சட்டங்களும் செயற்பாடுகளும் சர்வாதிகாரியின் மாளிகையிலிருந்து உருவானவை அல்ல. அரசியலின் செயற்களமாக விளங்கிய, அரசியல் மன்றம் கூட்டுமிடமான அகோரா எனும் சந்தையிடத்தைச் சார்ந்த, சமமான குடிமக்களிடமிருந்து உருவானது. அவ்வாறே நம் இயக்கமும் செயற்பாடுகளும் என்பதற்கு எடுத்துக்காட்டே இத்தகைய மாநாடுகள்.
	இன்றைக்கு கழகத்தின் 10வது மாநில மாநாடு நடைபெறுகின்ற இந்தச் திருச்சி, திராவிட இயக்கத்தில் பண்பாட்டு மறுமலர்ச்சி என இங்கு பேச வந்திருக்கிற எனக்கும், நமக்கும், கழகத்திற்கும், நம் தலைவருக்கும் மிக முக்கியமானதொரு இடமாகும்.
	1982இல் இந்தச் திருச்சியிலே நடைபெற்ற கழகத்தின் பொதுக்குழுவிலேதான் மறைந்த என்னுடைய தந்தை திரு.தங்கபாண்டியன், இளைஞரணியின் மாநிலச் செயலாளாராக நம்முடைய தளபதி நியமனம் செய்யப்பட வேண்டும் என்று முன்மொழிகின்றார். “நேருவிற்குப்பிறகு இந்திராகந்தி, இந்திராகாந்திக்குப் பிறகு அவருடைய மகன் என்ற குற்றச்சாட்டை தளபதியின் விஷயத்தில் முன்வைக்க முடியாது. அவர் மிசாகால முடிவுவரை, அரைக்கைச்சட்டை அணியாமல், முழுக்கைச் சட்டையே அணிந்திருந்தார். காரணம் - தழும்புகள் அவரது அத்தனை ஆண்டுகால உழைப்பின் தழும்புகள். அவற்றை எண்ணிப் பார்த்து தளபதியை நியமனம் செய்ய வேண்டுமென" இதே திருச்சியில் அவ்வாறு முன்மொழிந்த என் தந்தையையும் இக்கணம் நினைவில் நிறுத்துகிறேன்.
	இந்தி எதிர்ப்புப் போருக்கான முதற் பொறியைத் தந்ததும் இந்தச் திருச்சிதான்.
	1924, இல் நீதிக்கட்சி வெளியிட்ட ஒரு கண்டன அறிக்கையின் வித்து திருச்சிதான். திருச்சியைச் சேர்ந்த காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த பெற்றோர் சிலர், "இந்தியைக் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் விருப்பப்பாடமாக வைக்க வேண்டுமெனக் கூறி மாகாணப் பொதுக்கல்வி இயக்குநரிடம் விண்ணப்பம் கொடுக்க, அதனை ஆதரித்து 'இந்து' Hindu ஆங்கில நாளேடு, அதற்கு ஆதரவாகத் தலையங்கம் தீட்டியிருந்தது. அவ் விண்ணப்பத்தையும், ஆதரித்த இந்துவின் தலையங்கத்தையும் எதிர்த்து, நீதிக்கட்சியின் தலைவர்கள் அன்று வெளியிட்ட கண்டன அறிக்கை நம் பண்பாட்டின் உயிரான மொழிகாக்கும் போருக்கு முதல் வித்திட்டது. 
	1938, இல் இந்தித் திணிப்பை எதிர்த்துத், தமிழர் பெரும்படையொன்று, "இன்று நாம் நடத்திக் கொண்டிருப்பது மொழிப் போர் மட்டுமல்ல - பண்பாட்டுப் போர் "என அறிவித்துச், சென்னைக் கடற்கரை நடைபயணம் துவங்கியது, திருச்சி உறையூரிலிருந்துதான்.
	1945, செப்டம்பரில், கறுப்புச் சட்டைப் படை அமைப்பு மாநாடு நடைபெற்றது இங்குதான். 
	1952 ஆகஸ்டில், புகைவண்டி நிலையங்களிலுள்ள பெயர்ப் பலகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துக்களைத் தார் கொண்டு அழிக்க பேரறிஞர் அண்ணா கட்டளையிட்டபோது, இதே திருச்சியில், அஞ்சல் நிலையத்தின் பெயர்ப் பலகையிலிருந்த இந்தி எழுத்துக்களை அழித்தது யார் தெரியுமா - நமது தலைவரே! 
	அதே கரம்தான் பொதுப்பணி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது பஸ்ஸைப் பேருந்து எனவும், கண்டக்டரை நடத்துனர் எனவும், டிரைவரை ஒட்டுநர் எனவும், 'லைசன்ஸை' உரிமம் எனவும் மாற்றி, திராவிட இயக்கம் முன்னிறுத்திய திருக்குறள், சிலப்பதிகாரம், சங்கம் முதலியவற்றின் பண்பாட்டு மீட்டெடுப்பாகப் பேருந்துகளில் திருக்குறளையும், அய்யன் திருவள்ளுவர் படத்தையும் இடம்பெறச் செய்தது.
1956, மே மாதம், போரறிஞர் அண்ணாவின் முன்னிலையில் நடைபெற்ற திருப்புமுனை மாநாடு, 
	1965 ஜனவரியில் தமிழ்ப் பேரறிஞர்களால் கூட்டப்பட்ட 'இந்தி எதிர்ப்பு மாநாடு',
	1990, 1996, 2006 என மூன்று சிறப்புமிக்க நமது கழக மாநாடுகளைக் கண்டதும் இதே திருச்சிதான். 
	2014-இல் இதோ கழகத்தின் பத்தாவது மாநில மாநாடு. தலைவரின் வாழ்க்கையில் திருச்சிக்குத் தனியிடமுண்டு. அவருக்கான மும்முனைப் போராட்டங்களைத் தந்தது திருச்சிதான். 
	திராவிட இயக்கத்தின் பண்பாட்டுக் கருத்தியலாக அடையாளப் படுத்தப்பட்ட ஆதிக்க சாதி எதிர்ப்பு, மொழி, இன அடையாளம், சாதி ஓழிப்பு, பிற்பட்டோர் நலன், கலை, இலக்கியத்தில் தமிழனது செவ்வியலையும், நாட்டார் வழக்கையும் மீட்டெடுத்தல் எனப் பல முனைகளிலும் போராடிய திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியான போராட்டத்தின் வீர்யத்தைக் கழகம் தொடர்ந்து முன்னெடுத்ததும் இந்தத் திருச்சியில்தான். முதல் போராட்டம், மொழிக்காக - கல்லக்குடியிலே. இரண்டாவது விவசாயிகளுக்காக நங்காவரத்திலே, மூன்றாவது சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுக்காகப் பேட்டை வாய்த்தலையிலே!
	திராவிடர் எதிர் (vs) ஆரியர் எனும் கருத்தியலை மிகச் சுருக்கமாகப் பேரறிஞர் மொழியில் சொல்வதானால் - 'ஜனாப் ஜின்னா யார்?' என்று ஒரு பத்திரிக்கையாளர் பேரறிஞரைப் பார்த்துக் கேட்கின்றார் பேரறிஞர் சொல்கின்றார் - "ஜனாப் ஜின்னா முஸ்லிம். திரு. ஜின்னா திராவிடர். ஸ்ரீமான் ஜின்னா ஆரியர்" என்று. 
	இந்தியக் கல்வி வரலாற்றில் ஆங்கில மொழியைத் திணித்து ஆங்கிலேய மனோபாவம் மிக்க இந்தியர்களை மெக்காலே உருவாக்க நினைத்தது உண்மைதான். ஆனால் அந்த முடிவை மெக்காலே எடுத்திராவிட்டால் சமஸ்கிருத - அரபு மொழி வழி வந்தவையே கற்பிக்கப் பட்டிருக்கும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
	வெள்ளையர் ஆட்சிக் காலத்திலேயே ஒரு புரட்சி அரசாங்கத்தை நீதிக்கட்சியால் உருவாக்க முடிந்தது என்றாலும், திராவிட இயக்கமே ஆங்கிலேயர் வழங்கிய புத்தொளி மரபினை உள்வாங்கிச் சமயம், இலக்கியம், கலை ஆகிய பண்பாட்டுத் தளங்களில் தமிழ் அடையாளத்தை மீட்டெடுத்தது.
	1920ம் ஆண்டில், முதல் நீதிக்கட்சி அமைச்சரவை உருவாகும் வரை, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடமில்லை. 1920 ஆண்டு வரை மருத்துவக் கல்லூரியில் சேர குறைந்த பட்ச சமஸ்கிருத அறிவு வேண்டும் என்பது நிபந்தனை. 1915 ஆண்டு வரை சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கென்று ஒரு பாடத்திட்டக் குழு கிடையாது.
	ஆனால், அந்த நிலையை இன்றைக்கு அடியோடு மாற்றி தமிழ்நாடு பெயர் மாற்றம், சுயமரியாதை திருமணத்திற்கு அங்கீகாரம், கலப்புத் திருமணங்களுக்குத் தனிச் சலுகை, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் மரபு, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், தமிழ் ஆண்டுக் கணக்கு, தைத் தமிழ்ப் புத்தாண்டு, கல்லூரி வரை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவசக் கல்வி, தமிழ் வழித் தேர்வு எழுத அனுமதி என நீளூம் பண்பாட்டு மறுமலர்ச்சியில், 
	"மனுவின் மொழி அறமானதொரு நாள்
	அதை 
	மாற்றும் நாளே தமிழர் திருநாள்" 
என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வழியொற்றி, நமது கழகம் ஆற்றிய பங்கே பிரதானமானது. 

திராவிட இயக்கத்தின் கூறுகள் மூன்று : 
	1. 'தமிழியல் வழக்கை' மீட்டெடுத்தல்.
	2. கலை இலக்கியப் பண்பாட்டுப் புரட்சியினைத் தொடர்ந்து முன்னெடுத்தல். 
	3. மேற்சொன்னவற்றை அரசியல் அதிகாரத்தின் மூலம் நிலைநாட்டுதல். 
இவற்றைத் தொடர்ச்சியாக இன்றைக்கும் முன்னெடுத்துக் கொண்டிருப்பது நமது கழகம் மட்டுமே. 
	1994இல் ஆலிஸ் எனும் ஒரு மூத்த தென் ஆப்பிரிக்க கறுப்பினப் பெண் முதன் முதலாக வாக்களித்தபோது ஒரு பிரிட்டிஷ் செய்தித்தாள், 
	"ஆலிஸ், வரலாற்றில் தன் முத்திரையைப் பதிக்கிறாள்" என்று தலைப்புச் செய்தி வெளியிட்டது. கழகமும் ஒவ்வொரு முறையும் ஆட்சியை வென்ற போதெல்லாம் வரலாற்றில் தன் முத்திரையைப் பதித்ததால்தான், 
	தமிழ் செம்மொழி உயர் நிலை பெற்றது 
	இணையதளம் சென்று அறிவியல் முகம் பெற்றது
	தமிழ் கற்றே தமிழ்நாட்டில் பயில மேண்டுமெனும் நிலை வந்தது
	கோயிலுக்குள் சென்று இழந்த இடத்தைப் பெற்றுக் கொண்டது
	தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு ஆனது
	அனைத்துச் சாதியினரும் அர்ச்சகரானதோடு, 
		தமிழ் அர்ச்சனை மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்டது.
	'க்யூ போனோ?' என்று ரோமானியர்கள் வழக்கமாகக் கேட்பார்கள். 
	'யார் நலம் பெறுகின்றனர்' என்பது அதன் அர்த்தம்.
	திராவிட இயக்கத்தின் தோற்றுவாய் தமிழர்களின் நலனை மேம்படுத்த மட்டுமே என்றாலும், பேரறிஞர் அண்ணா நமது இயக்கத்திற்குத் திராவிடர் முன்னேற்றக் கழகம் என்று இன வழிப் பெயர் வைக்காமல், திராவிட முன்னேற்றக் கழகம் என நிலவழிப் பெயர் வைக்கும் பொழுது சொன்ன கூற்று இங்கு மிக முக்கியமானது:
	திராவிடர் முன்னேற்றக் கழகம் என்று கூறும்பொழுது அதில் திராவிடர்கள் மட்டுமே அங்கம் பெறலாம் என்று அரண் எழுப்புவதாக அமைந்து விடுகிறது. இப்போதுள்ள உலகச் சூழ்நிலைக்கு, காலப் போக்குக்கு இது உகந்ததாக எனக்குப் படவில்லை. நம்முடைய கட்சியின் இலட்சியம் திராவிட மண்ணில் திராவிடர்கள் மட்டுமே வாழலாம் என்று வரையறை செய்வது குறுகிய நோக்கமாகும், முடியாத செயலுமாகும். இந்த மண்ணுக்கு நன்றியுள்ளவர்களாக நடந்து கொள்ளும் எந்த இனத்தவரும் இன்னலின்றி இன்ப வாழ்வு வாழப் பணியாற்றுவதே நம் கட்சியின் இலட்சியமாக இருக்க வேண்டும். இங்கே திராவிடமும் வாழலாம், ஆரியமும் வாழலாம்” என்றார் அவர்.
	இங்கே திருக்குறளோடு, கம்பராமயணமும் இருக்கலாம். 
	இங்கே சிலப்பதிகாரத்தைப் போற்றுவோம். பெரியபுராணத்தை விமர்சிப்போம். ஆனால் ஒருபோதும் எவற்றிற்கும் இடமில்லையென ஒதுக்கமாட்டோம். 
	பாவேந்தர் பாரதிதாசனுக்குக் கம்பன் தமிழ் பிடிக்கும். கவித்துவம் பிடிக்கும். ஆனால் கதை பிடிக்காது என்றாலும், டி.கே.சி. அவர்கள் கம்பராமாயணத்தைத் திருத்திச் சுருக்கி வெளியிட்டதைப் பாவேந்தர் கடுமையாகக் கண்டித்தார். டி.கே.சி.யின் செயலை 'மேவாத செயல்' என்று குற்றஞ்சாட்டினார்.
	ஒருமைப்பாடு (Uniformity) என்பது ஒன்று - ஒற்றுமை (Unity) என்பது வேறென்று. திராவிடர்களாகிய நாம் பிறருடன் ஒருமைப்பாட்டோடு இருக்க வேண்டிய அவசியமில்லை - ஆனால் ஒற்றுமையோடு வாழ்வது முக்கியம்! 
	ஆம் -
	திராவிடர்களாகிய நாங்கள் 
	எங்களுடைய 
	கண்ணியத்தைப் போன்றே 
	பிறருடைய சுதந்திரத்தையும் 
	மதிக்கிறோம். 
	ஆனால், 
	எந்த நேரத்தில் எவரை 
	எதிர்த்துப் போராடுவது 
	எதற்காகப் போராடுவது
	எப்படிப் போராடுவது 
எனும் எங்களது ஆயுதங்களை அந்தப் பிறரே தீர்மானிக்கிறார்கள்.
	அந்தக்கணத்திற்கு எப்போதும் நாம் தயாராக இருக்க, 
	எனதருமைக் கழகத் தோழர்களே, தோழியரே,
	"ஒரு குலத்துக்கு ஒரு நீதி 
	பேசும் மனுவை வீழ்த்துவோம் 
	கல்வி உங்களை மகிழ்ச்சியும் 
	உரிமையும் உடையவர்களாக்கும்" 
என்று சொன்ன, ஜோதிபா பூலேயையும், 
	இந்துத்வாவிற்கு எதிராகவும், சமூக நீதிக்காகவும் எழுத்து, சொல், செயல் என அனைத்துத் தளங்களிலும் போராடிய அண்ணல் அம்பேத்காரையும், 
	குனிந்து கிடந்த நம்மை 
	நிமிர்த்திய வளைந்த 
	கைத்தடி வைத்தியர் - 
	தந்தை பெரியாரையும், 
	பேரறிஞரையும், 
	ஒப்பற்ற நம் தலைவரையும், 
	அவர்தம் வழி நடக்கின்ற 
	தளபதியையும்,
	முன்னிறுத்திப் பின்தொடர்வோம். 
	நன்றி...

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *