தேதி: 31 Mar 2010
பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை: அழகான ஒரு குழந்தையை பெற்றெடுப்பதன் மூலமோ, அழகான ஒரு சிறிய தோட்டத்தை உருவாக்குவதன் மூலமோ, சமுதாயத்திலே மிகவும் பின்தங்கியிருக்கிற மக்களுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ கல்வியை அளிப்பதன் மூலமோ நீங்கள் முன்பு இருந்ததைவிட மென்மையும், அழகாகவும் ஆகிறீர்கள் என்று சொன்ன எமர்சனின் கூற்றுக்கேற்ப இந்த பகுதியிலே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து வருகின்ற இளஞ்சிங்கங்களைப் போன்ற மாணவர்களுக்கு கல்வி என்கின்ற ஒன்றை பன்னெடுங்காலமாக வழங்கி வருகின்ற பாரம்பரியமும், வரலாற்றுச் சிறப்பும் கொண்ட பச்சையப்பன் கல்லூரியின் வரலாற்றுத் துறை ஏற்பாடு செய்திருக்கின்ற இந்த அருமையான விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றி அமர்ந்திருக்கின்ற இந்தக் கல்லூரியின் முதல்வர் அவர்களே, என் பொருட்டு மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டு மிக அருமையான அறிமுக உரை ஆற்றியிருக்கின்ற டாக்டர் சி.கிருபேந்திரன், Head of the Department (History) அவர்களே, இங்கே அமர்ந்திருக்கின்ற வரலாற்றுத் துறையின் முனனோடிகளாகத் திகழ்கின்ற பேராசிரியர்களே, பிற துறையைச் சார்ந்த பேராசிரியப் பெருமக்களே, fridgeல் வைத்த ஆப்பிள் போல மிகக் கஷ்டமாக, இந்த குளிரூட்டப்பட்ட அறைக்குள்ளே ஒரு மணி நேரமாவது இருக்க வேண்டுமே என்கின்ற சிறு அவஸ்தையோடு இந்த காலை நேரத்திலே இங்கே அமர்ந்திருக்கிற வரலாற்றுத் துறையைச் சார்ந்த மற்றும் பிற துறைகளைச் சார்ந்த பெரும்பான்மையான மாணவர்களே, சிறுபான்மையான மாணவிகளே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய காலை வணக்கம். இந்தக் கல்லூரியிலே வரலாற்றுத் துறையின் நிறைவு விழாவான இன்றைய தினத்திலே, “காலத்திலே அழியாத தமிழ்” என்ற தலைப்பிலே பேசவேண்டும் என்று என்னுடைய தோழி என்னை கேட்டுக்கொண்டபொழுது, மூன்று விதமான மனோநிலை உண்டானது. ஒன்று, ஆங்கிலத் துறையிலே விரிவுரையாளராகப் பணியாற்றியிருந்த என்னை வரலாற்றுத் துறையிலே எத்தனை தன்னம்பிக்கை இருந்தால் இத்தகைய தலைப்பிற்கு உரையாற்ற அழைப்பார்கள்? என் மீது எத்தகைய நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது குறித்து வந்ததால் கிடைத்த மகிழ்ச்சி. இன்னொன்று, கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக, கல்லூரி வாழ்க்கையை விட்டுவிட்டு வேறு ஒரு களத்திலே இருக்கின்ற கட்டாய நிலையிலே, கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் ஏதாவது ஒரு கல்லூரியின் வாசலை மிதிப்பது என்பது, வகுப்பறைக்கு சென்று வருவது என்பது, என்னுடைய தாய் வீட்டிற்கு சென்று வருவதைப் போல இருப்பதால், அது இரண்டாவது மகிழ்ச்சியை அளித்தது. மூன்றாவது என்னவென்றால், இந்தக் கல்லூரி தமிழுக்கு மட்டும் பேர் பெற்ற கல்லூரி அல்ல. இந்தக் கல்லூரியிலே பயின்ற மாணவர்கள் புகழ்பெற்ற சரித்திரத்திலே இடம் பெற்ற அரசியல்வாதிகளாக, வாழ்க்கையிலே அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்கியவர்களாக இருந்தார்கள் என்பதை நீங்கள் அனைவரும் அறிந்ததுதான். குறிப்பாக, பேரறிஞர் முதற்கொண்டு பேராசிரியர் வரையிலான அனைவரையும் இந்தக் கல்லூரி தயாரித்து அனுப்பியிருக்கிறது என்பதனால், நெப்போலியனை தோற்கடித்த அந்த ஜெனரல் சொன்னானாம், என்னுடைய வெற்றி என்பது இந்த யுத்த களத்திலே தீர்மானிக்கப்பட்டது அல்ல. இந்த வெற்றி என்பது நான் படித்த ஈடென் பள்ளிக்கூடத்து விளையாட்டு மைதானத்திலேயே தீர்மானிக்கப்பட்டது என்று சொன்னான். அந்த அளவிலே அவர்களையெல்லாம் தயாரித்து ஒரு பெருமைமிக்க வாழ்விற்கு அனுப்பிய ஒரு கல்லூரி என்பதாலும், குறிப்பாக வரலாற்றுத் துறையிலே பேசுகின்ற இந்த வாய்ப்பு என்பது எனக்கு அதிக மகிழ்ச்சியை அளித்தது. நிகழ்ச்சிக்காக வந்து இறங்கியவுடன் இந்தத் துறையைச் சார்ந்த பேராசிரியப் பெருமக்கள் அழகான ரங்கோலியை எனக்குக் காட்டினார்கள். நான் அருமையான ரங்கோலியைக் கண்டு ரசித்துக்கொண்டே கடப்பதற்கு முன்பு அருமையான செய்தியைச் சொன்னார்கள், இது எங்களுடைய மாணவர்கள் வரைந்த ரங்கோலி என்று. ஒன்பது விதமான இதயங்கள் வரையப்பட்டிருந்தது. அதைப் பார்த்தவுடனேயே எனக்கு தெரிந்திருக்கவேண்டும், மாணவர்கள் வரைந்தது என்று. இருந்தாலும், மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்த ஒரு விஷயம் என்று அதனை நான் பார்க்கிறேன். உணவு சமைப்பது அல்லது கோலம் போடுவது இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் ஒரு பெண் சார்ந்த விஷயங்களாகவே பார்க்கப்பட்டு, கட்டமைக்கப்பட்ட ஒரு சமூக நிலை. வரலாற்றை திருப்பிப் போடுகிற விதமாக இத்தனை நலினத்தோடு ஒரு அருமையான கோலத்தை எங்களால் வரைய முடியும் என்று நீங்கள் காட்டியிருக்கும் அந்த விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. பெண் தன்மை, ஆண் தன்மை என்றெல்லாம் பாகுபாடு பார்க்கின்ற நிலையைக் கடந்து முழுவதுமாக மனிதம் என்று இயங்குகின்ற ஒரு மனோநிலையில் இருக்கின்ற மாணவர்களாகிய உங்கள் முன்னால் இந்தத் தலைப்பு குறித்த என்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்வதிலே எனக்கு பெருத்த மகிழ்ச்சி. என் குறித்து அறிமுகம் செய்த பேராசிரியர், சாத்தேயைப் பற்றி உங்களிடம் சொன்னார். சாதேயைப் பற்றிய இயங்கியலைப் பற்றியும் உங்களிடம் சொன்னார். ஒரு முறை சாத்தேயை கைது செய்யவேண்டிய கட்டாயம் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு வந்தது. அப்பொழுது பிரெஞ்சு அதிபராக இருந்தவரிடம் சென்று சாத்தேயை கைது செய்யவேண்டும் என்று காவல்துறையைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். அப்பொழுது அவர் சொன்னாராம், சாத்தேயை கைது செய்வது என்பது இயலாத காரியம். ஏனென்றால் சாத்தேதான் பிரான்ஸ், பிரான்ஸ் தான் சாத்தே என்று சொன்னாராம். அந்த அளவிற்கு இலக்கியவாதிகளையும், தத்துவவாதிகளையும் கொண்டாடிய தேசம் பிரெஞ்சு தேசம் என்று பெருமையாகப் பேசப்பட்ட தேசம். அதற்கு சற்றும் சளைத்ததல்ல நம்முடைய தமிழ்நாடும், நாம் பிறந்து வளர்ந்த இந்த தமிழ் தேசமும். சாத்தேயைப் போன்ற எத்தனையோ பேர் தோன்றியிருந்த தேசம் தான் நம்முடைய தேசம். இன்றைக்கு நீங்கள் கடல் கடந்து சென்று ஒரு ஆங்கிலேயனிடத்திலே உங்களுடைய மொழி பற்றிச் சொல்லும்பொழுது என்னுடைய மொழிக்கு எழுத்து வடிவிலான இலக்கியம் என்பது சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது என்று சொன்னால் அவர்கள் மூக்கின் மேல் விரலை வைப்பார்கள். I have a history of written script which has its own literature which dates back to 3500 years ago என்று ஒரு ஆங்கிலேயனிடம் நீங்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் நிலையை நமக்குத் தந்தது இந்தத் தமிழ் மொழிதான். கடுங்கோலன் வரையிலான 89 பாண்டிய பேரரசர்களால் உருவாக்கப்பட்டு, 449 புலவர்களால் ஆராயப்பட்டு, 4440 ஆண்டுகள் நிலைத்திருந்தது முதல் சங்கத் தமிழ். வெந்தேர் சேரன் முதல் முடத்திருமாறன் வரை 49 பாண்டிய பேரரசர்களால் பாதுகாக்கப்பட்டு, அகத்தியர் முதல் தொல்காப்பியர் வரையிலான 59 கவிவானர்களால் ஆராயப்பட்டு, 3700 ஆண்டுகள் முழுதாக பாதுகாக்கப்பட்டு, பாண்டிய நாட்டை கடல்கோல் கொண்டபொழுதும் அதிலே தப்பிப்பிழைத்து சீரிளமை குன்றாமல் இருக்கின்ற தமிழ். கடல்கோலில் தப்பிப் பிழைத்த முடத்திருமாறன் முதல் உக்கியப் பேரழுதி வரையிலான பிற்கால 49 பாண்டிய பேரரசர்களால் தலைதூக்கி நிறுத்தப்பட்டு, 449 தலைசிறந்த புலவர்களால் வளர்க்கப்பட்டு, நலம் வாழி வந்த தமிழ் என்று வரலாறு நமக்கு தமிழ் குறித்து பெருமையோடு பதிவு செய்திருக்கிறது. தமிழ் மொழி என்கின்ற ஒன்றை நம்முடைய நீண்ட நெடிய இனத்தாலும், பாரம்பரியத்தாலும் பேசகின்ற பெருமைக்கு உரியவர்கள் நாம் என்று இன்றைக்கு இந்த 21ம் நூற்றாண்டிலே நினைத்துப் பார்க்கும்பொழுது, காலம்தோறும் வரலாற்று ரீதியாக இது எப்படி நம்மிடையே புழங்கி வந்திருக்கிறது, எப்படி நம்முடைய பெருமைக்குரிய ஒரு விஷயமாக வந்திருக்கிறது என்பதை பார்த்தோமானால், உங்களுக்கு நான் சொல்லவேண்டிய அவசியமில்லை. உலக வரலாற்றிலே, உலக மக்களுக்கு நாகரிகம் கற்றுத் தந்தவர்கள் தமிழர்கள். முதன்முதலில் உழவுத் தொழிலையும், கடல் வாணிபத்தையும் முன்னெடுத்த தமிழர்கள்தான், இன்றைக்கு உலகெங்கும் புரையோடி இருக்கின்ற நாகரிகத்திற்கு தொட்டிலாய் விளங்கியவர்கள். உலகில், முதன்முதலாக வீதியமைப்பு, வீடமைப்பு, நகரமைப்பு, நாளமைப்பு கண்டவர்கள் நாம். உலகில் முதன்முதலாக மொழி இலக்கணமும், ஆட்சிக் குறிப்புகளும், கலைகளும், சட்டங்களும், பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்தான் என்பதை முதரறிஞராகிய நா.சி.கந்தைய்யா தன்னுடைய புத்தகங்கள் பலவற்றிலே மிக அருமையாகப் பதிவுசெய்திருக்கின்றார். வியன்னாவிலே இருக்கின்ற அருங்காட்சியகம் ஒன்றிலே சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தமிழர் ஒருவருடைய கடல் வாணிபம் பற்றிய குறிப்பு இருப்பதாக உங்கள் துறையைச் சார்ந்த தொல்லியல் அறிஞர்கள்தான் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்றார்கள். ஹொசேனன் என்கின்ற ஒரு ஜெர்மானிய பேராசிரியர் மேற்கு ஐரோப்பாவிலும், கிழக்கு ஆசியாவிலும் இருக்கின்ற அநேகமான இடப்பெயர்கள் தமிழ் பெயர்களாக இருக்கின்றன என்று பெருமையோடு சொல்லியிருக்கின்றார். கடல் கொண்ட குமரிக் கண்டத்திலே பிழைத்த திராவிட நாகரிகம்தான் சிந்து சமவெளி நாகரிகமாகக் கடந்து, பின்னர் சுமேரிய நாகரிகமாக தழைத்து விரிந்தது என்பதை ஆதாரபூர்வமாக நிறுவிய, நம்முடைய முதல்வர் அவர்கள் சுட்டிக்காட்டிய வீராஸ் என்கின்ற பெருமகனார், உலகின் அனைத்து நாகரிகங்களுக்கும் திராவிட நாகரிகமே, தொல் தமிழ் நாகரிகமே, ஆதாரமாக இருந்திருக்கிறது என்பதால் தன்னை எப்படி அழைத்துக் கொண்டாள் தெரியுமா? நான் ஸ்பெயின் தேசத்திலிருந்து வந்தாலும், ஸ்பெயின் தேசத்திலேயிருந்து வந்த திராவிடன் என்று சொல்லிக்கொள்வதிலே பெருமையடைகின்றேன் என்று சொன்னார். தொல் பெருமை வாய்ந்த ஆதி தொல் தமிழே, உலகின் அனைத்து மொழிக் குடும்பத்திற்கும், இந்தோ-ஆரிய மொழிக் குடும்பம் உட்பட உலகின் அனைத்து மொழிக் குடும்பத்திற்கும் ஆதாரமான தாய்மொழியாக விளங்குகின்றது என்பதை இன்றைக்கு நாம், நம்முடைய கால்கள் முதலான பற்பல அவயவங்களால் உணரப்பட்டு வைத்திருக்கின்றோம். பிற்காலத்திலே, சிந்து சமவெளி நாகரிகம் என்பது ஆரியருடைய நாகரிகமாக இருக்கலாம் என்று விளித்துக் காட்டுகின்ற முயற்சியிலே ராஜாராமன், மீரான் என்கின்ற சிலர் ஈடுபட்டிருந்தாலும் தன்னுடைய சிந்து வெளியில் மூன்று தமிழ் என்கின்ற புத்தகத்தில் கா.பூர்ணசந்திர ராவும், Indus Script Dravidian Language என்கின்ற புத்தகத்தில் இரா.மதிவாணனும் அந்த சமவெளி நாகரிகத்திலே கிடைத்த எழுத்துக்கள் எல்லாம் தொல் தமிழ் எழுத்துக்களே என்று தொல்காப்பிய மொழி இலக்கணத் தரவுகளை வைத்து நிறுவிக் காட்டியிருக்கின்றார். அவற்றை இன்றும் ஆழமாக நிறுவிட ஆதிச்சநல்லூர் தாழிகளைவிட நமக்கு வேறென்ன வேண்டும். அதுபோல, உலகத்திலே முதனமுதலாக வேளாண்மைக்கு நீர்ப்பாசனத்தை பயன்படுத்தப்பட்டது நம்முடைய தென்னிந்தியாவிலே தான். தென்னிந்தியாவின் தென் நாகரிகம் தென் சீனாவிலும் இந்தோனேசியாவிலும் இருக்கின்ற நாகரிகத்திற்கு ஒப்பானது என்பதை குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்றார்கள். நம்முடைய அகழ்வாராய்ச்சியிலே கிடைத்த அந்த ‘உழு’ என்கின்ற கருவியினைப் பின்பற்றியே ‘உழவன்’ என்கின்ற சொல் உருவாகியிருக்கலாம் என்பதும் நிரூபிக்கப்பட்ட ஒரு கருத்துதான். நீண்ட நெடிய பாரம்பரியமிக்க இத்தனை பெருமைமிக்க நம்முடைய தமிழ் மொழியை நாம் ஆய்ந்து, அறிந்து, பெருமையோடு, தமிழன் தமிழ் மொழியிலே பேசுகின்றோம் என்று தலைநிமிர்ந்து நிற்கின்ற நிலைமை இன்று இருக்கின்றதா என்ற அந்தக் கேள்விக்கு போவதற்கு முன்னால், எத்தனை அயல் நாட்டு தமிழறிஞர்களால் பாராட்டப்பட்டது என்ற ஒரு சில தகவல்களை நாம் பார்க்கலாம். உங்கள் எல்லோருக்கும் தெரியும், நான் தமிழ் படித்த மாணவன் என்று என் கல்லறையிலே எழுதுங்கள் என்று திருக்குறளை மொழிபெயர்த்த ஜி.யூ.போப் சொன்னதை நீங்கள் அறிவீர்கள். சீகன் மார்க் என்கின்ற ஒரு தமிழ் அறிஞன் இருந்தார். அவர் மேலை நாட்டிலிருந்து வந்து, இங்கிருக்கும் தரகம்பாடிக்குச் சென்று அங்கே தங்கியிருந்து, தமிழ் மொழியைக் கற்று, தமிழ் மொழிக்கென்று ஒரு பிரத்யேகமான அகராதியை உருவாக்கினார். அவருடைய தமிழ் புலமைக்காக, அவருடைய தமிழ் பணிக்காக, ஆசியா முழுதும் பயணம் செய்து அவர் இங்கிலாந்துக்கு சென்றபோது இரண்டாம் ஜார்ஜ் மன்னனுடைய அரசவையிலே இந்தப் பணியைப் பாராட்டி அவருக்கு ஒரு பாராட்டுப் பட்டயம் வழங்கப்படுகின்றது. அந்தப் பதக்கத்தை மதபோதகர் அவருக்கு வழங்குகின்றார். அவர் அளிக்கும்பெழுது சொல்லுகின்றார், சீகன் மார்க் அவர்களே, இந்த பாராட்டுப் பத்திரமானது உலகின் தலைசிறந்த மொழியான லத்தீன் மொழியிலே எழுதப்பட்டு உங்களுக்கு அளிக்கப்படுகிறது என்று சொன்னார். பெற்றுக்கொண்ட சீனக் மார்க், மிக்க நன்றி, ஆனால் நான் என்னுடைய பதிலுரையை ஒரு மொழியிலே சொல்லப்போகின்றேன். அது உலகின் அனைத்து விழுமியங்களையும் தன்னகத்தே ஒரு சேர அமைந்திருக்கிற தமிழ் மொழியிலே. உங்களுடைய படைப்புகளிலே நீங்கள் எப்பொழுதும் வலியுறுத்துகின்ற அன்பு, காமம், நட்பு ஆகிய இத்தகைய மன உணர்வுகளுக்கான கருப்பொருளை நீங்கள் எங்கிருந்து எடுக்கிறீர்கள்? என்று காந்தீஜி ஒரு முறை டால்ஸ்டாய்க்கு கடிதம் எழுதுகின்றார். டால்ஸ்டாய் எழுதுகின்றார், என்னுடைய அனைத்து படைப்புகளுக்கான ஊற்றுக்கண்ணை நான் உங்களுடைய இந்தியாவிலே இருக்கின்ற தமிழ் மொழியிலே எழுதப்பட்ட இலக்கியமான திருக்குறளிலே இருந்து எடுக்கிறேன் என்று சொல்கிறார். நயாக்ராவிலே இன்றைக்கும் நல்வரவு என்று தமிழிலே எழுதப்பட்டிருக்கின்றது. ஜப்பானிலே இருக்கின்ற ஒரு பல்கலைக்கழகத்திலே, யாதும் ஊரே யாவரும் கேளீர் என்கின்ற நம்முடைய புறநானூற்றுப் பாடலை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்து, தமிழிலும் எழுதி வைத்து, ஒரு முகப்பு ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. புத்தரும் தமிழ் படிக்க ஆசைப்பட்டார் என்று ரத்தினவிகாரம் என்கின்ற சமஸ்கிருத நூல் நமக்கு சொல்கின்றது. ஜெரூசலத்திலே இருக்கின்ற அலிவோ மலையிலே இருக்கின்ற மிகப் புனிதமான கிருஸ்துவ தேவாலயத்திலே கிருஸ்துவினுடைய போதனைகளை உலகின் தலைசிறந்த 68 மொழிகளிலே எழுதிவைக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இத்தனை சிறப்புகளையும் உடைய நம்முடைய தமிழ் மொழியை பக்கம் பக்கமாக பேசிக்கொண்டே போகலாம். வரலாற்று ரீதியாக நம்முடைய மொழி நமக்கு எந்த காலகட்டத்திலே என்னென்ன செழுமையை கொடுத்திருக்கிறது எப்படி வந்திருக்கிறது என்கின்ற புரிதல் இருந்தால்தான் நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் மொழி குறித்த உணர்வோடும் பெருமிதத்தோடும் மொழியை எப்படி உணர்வது என்கின்ற பயன்பாட்டுத் தன்மைகளை மாணவர்களாகிய நீங்கள் எடுத்துச்செல்ல வேண்டும், எடுத்துச் செல்ல முடியும் என்று நான் திடமாக நம்புகின்றேன். வரலாறு என்றால் என்ன? என்கின்ற கேள்விக்கு நான் தந்த பதிலையே உங்களிடம் சுட்டிக்காட்டினார். வரலாறு என்பது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும், நிகழ்காலத்திலே நடக்கின்ற ஒரு உரையாடலே. ஒன்றைச் சொல்லலாம் என்று நான் நினைக்கின்றேன். அது நீட்சேவினுடைய வரலாறு குறித்த ஒரு பதிவு. நீட்சே சொல்லுகின்றார், வரலாறு நமக்குத் தேவைதான். ஆனால் ஐரின் தோட்டத்தில் சீரழிந்து நோக்கமின்றி திரியும் கல்லறைக்கு தேவைப்படும் விதத்தில் அல்ல, என்று. நீங்கள் வரலாற்றிலிருந்து எதனை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதுதான் மிக மிக முக்கியமானது. துவக்கமே இயக்கமாக அமைகின்றது வரலாறு என்று சொன்ன மார்க்ஸ், வரலாறு குறித்து என்ன சொல்லுகின்றார்? வரலாறு ஒருமுகத்தன்மை மட்டுமே கொண்டிருப்பதில்லை. அல்லது ஒரு காலகட்டத்தை மட்டுமே கொண்டிருப்பதில்லை. மாறாக, நிகழ்காலமே வரலாற்றுக்குரிய இடமாகும். இவ்விதமாக ரோம் என்று நீங்கள் சொல்வீர்களென்றால், ரோம் என்பது நிகழ்காலத்தால் செறிவூட்டப்பட்ட கடந்த காலம் என்பதை முன்வைக்கின்றார். அதை அவர் வரலாற்றின் இடையறாத தொடர்ச்சியிலிருந்து வெட்டி பிரிக்கின்றார். பிரெஞ்சு புரட்சி தன்னைத்தானே ரோமின் மறுபிறப்பாகக் கண்டது. பழைய கால ஆடைகள் புதிய பாணியாக முன்னிலைப் படுத்தப்படுவது பழங்கால ரோமை முன்னிலைப்படுத்தியது. ஆரியத்தின் அதிர்வுகளை நாம் அறிவோம். நாம் திராவிடம். நமக்குத் தந்த திராவிட மொழி இன உணர்வைத் தந்தது தமிழ் என்கின்ற ஒரு உணர்வோடு இன்றைய தமிழை முழங்குபவர்கள், அதிலும் மிகக் குறிப்பாக, நாவல், உரைநடை, சிறுகதை, இவையெல்லாம் என்னுடைய தளங்கள் இல்லை என்பதால், கவிதை என்கின்ற ஒன்றிலிருந்து, இன்றைய மொழியிலே, எனக்கு வழங்கப்பட்ட மொழியை நான் எப்படி கையாளுகின்றேன் என்கின்ற அந்த விடைக்கு வருகின்றேன். சாத்தே இயங்குதலின் தந்தை என்று நாம் அனைவரும் அறிவோம். இலக்கியம் என்றால் என்ன என்ற அவருடைய கட்டுரைக்கு மிகச் சிறப்பான பதில் ஒன்றை எழுதி இலக்கிய உலகில் அதரடியாகப் பிரவேசித்தவர் பால்ஸ் என்கின்ற பின் நவீனத்துவ விமர்சகர். பால்ஸ் சொல்வார் இலக்கியம் என்றால் பிறவி தரும் இன்பம். இந்த புத்தகம் உங்களுக்குத் தருகின்ற இன்பம் மட்டுமே இலக்கியம். அதைத் தாண்டி அதிலே சென்டிமென்ட இல்லை, வரலாறு இல்லை, ஒன்றும் இல்லை. ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் வரை விரவிக் கிடக்கின்ற இன்பமே இலக்கியம் என்கின்ற புகழ்பெற்ற கட்டுரையை பால்ஸ் எழுதிய பின்பு, கார்ல்ஸ் காணாமல் போனார், அவருடைய இயங்கியல் அர்த்தமற்றுப் போனது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் வாழ்வதற்கான சுதந்திரம் இருக்கிறது. தன்னுடைய வாழ்விற்கான அர்த்தத்தை அவனே தான் கட்டமைக்கிறான் என்பதை முன்வைத்தவர் பால்ஸ். நீட்சே வந்தார். 18ஆம் நூற்றாண்டிற்கு முன்புவரை மனிதன் இறக்கவே இல்லை என்று சொன்னார். மனித இனம் என்று ஒன்று இருந்தது, ஆனால் மனிதன் பிறந்தது 18ஆம் நூற்றாண்டுக்குப் பின்புதான் என்று சொன்னார் ஃபோகோ. ஏன் தெரியுமா? நீட்சே 18ஆம் நீற்றாண்டில் கடவுள் இல்லை என்று அறிவிக்கின்றார், கடவுளின்றி நிர்கதியாக விடப்பட்ட மனிதன் தன்னுடைய வாழ்வை பொறுப்புணர்வோடு எப்படி எடுத்துச் செல்வது என்று தெரியாமல் திகைக்கின்றான். அப்பொழுதுதான் அவனுடைய பிறப்பு உண்மையாக நிகழ்கின்றது என்கின்ற கருத்தை முன்வைக்கின்ற ஃபோகோ இன்னொன்றையும் சொல்லுவார். இந்த இயங்கியல் என்பது ஒத்துவராத, காலாவதியான ஒரு விஷயம். ஏனென்றால், மனிதம் முழுவதும் ஒரு அதிகாரத்தால் கட்டமைக்கப்படுகின்றான். தன்னுடைய அடையாளத்தை வடிவமைத்துக் கொள்ளக்கூடிய சுதந்திரம் அவனுக்கில்லை. ஒவ்வொரு நிமிடமும் ஒரு அதிகாரத்தால் கட்டமைக்கப்படுகின்ற மனிதன் எப்படி இயங்குகின்றான், தனக்கான ஒரு சுதந்திரத்தோடு என்கின்ற ஒரு அடிப்படையான கேள்வியை முன்வைத்து சாத்தரை மறுத்தார் ஃபுடோ. ஃபுடோவை அடியொற்றி பார்க் வந்தார். அதே பார்க் தான் மிகப் புகழ்பெற்ற இன்னொரு வாசகத்தையும் சொன்னார். உலகம் எனக்கு கொடுத்திருக்கின்ற முதல் மொழியிலிருந்து இன்னொரு மொழியை கண்டுபிடிப்பதே என்னுடைய வாழ்க்கைக்கான மிகப்பெரிய சவால் என்று சொன்னார். மாணவர்களே ஒன்றை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அதாவது உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற தமிழ் மொழி, மிகத் தொன்மையான, பாரம்பரியமிக்க ஒரு மொழி. அதனுடைய சிறப்புக்களை இத்தனை நேரம் நான் சொன்னேன், நீங்கள் கேட்டீர்கள், பற்பலரும் உங்களுக்கு தந்தார்கள். ஆனால் இன்றைய 21ம் நூற்றாண்டிலே உலகம் நமக்குக் கொடுத்த நம்முடைய தமிழ் மொழி என்பது நமக்கான எந்த சாத்தியங்களைத் தருகின்றது அதிலிருந்து நீங்கள் இன்னொரு மொழியை எப்படி கண்டடைகிறீர்கள் என்ற ஒரு கருத்தை பின்நவீனத்துவவாதிகள் மிகமிக முக்கியமானதாக வைக்கின்றார்கள். ஆலிசின் வன்டர்லேண்ட் என்கின்ற ஒரு கதையை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதிலே ஆலிஸ் என்கின்ற ஒரு சிறுமிக்கும், இன்னொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு உரையாடல் வரும். கேத்தரின் என்பவர் அந்த உரையாடலைப் பற்றி இப்படிச் சொல்கின்றார். பொருள் பற்றி நடக்கும் விவாதத்தில் யார் சொல்வது சரி? என்று சிறுமிக்கும் ஹம்பி டம்பி என்கின்ற பொம்மைக்கும் விவாதம் வருகின்றது. * * * * * *
No comment