பட்டாம்பூச்சிகளின் இரவு – ஆதிரா முல்லை கவிதை நூல் வெளியீட்டு விழா – 21.11.2014

பட்டாம்பூச்சிகளின் இரவு - ஆதிரா முல்லை
கவிதை நூல் வெளியீட்டு விழா - 21.11.2014

முல்லைக்குத் தேர் தந்த பட்டாம்பூச்சிகள்
- தமிழச்சி தங்கபாண்டியன்

	"கவிதை ஆயிரம் வாசல்களைத் திறந்துவிடும்
	திறவு கோலாகட்டும்
	ஒரு இலை வீழ்கிறது.
	ஏதோ ஒன்று பறந்து போகிறது.
	கண் பார்த்ததெல்லாம் படைப்பதாகட்டும்
	....
	கவிஞரே! ரோஜாவை ஏன் பாடுகிறீர்?
	உம் கவிதையில் ரோஜா மலரட்டும்"
என்ற சிலி நாட்டுக் கவிஞன் வின்சென்டோ ஹியூடோப்ராவின் ரோஜாக்கள் எப்போதாவதுதான் ஒரு கவிதைத் தொகுப்பில் முகரக் கிடைக்கின்றன. ஓரிரண்டு அவ்வாறு தட்டுப்பட்டாலும் மனம் நிறைவுற்று விடுவதன் காரணம் ஒருவேளை கவிதையைப் பொருத்தவரை நான் ஒரு ரசிகை, தேர்ந்த விமர்சிகர் அல்ல என்பதாலோ?
	ஆதிரா முல்லையின் பட்டாம்பூச்சிகளின் இரவிலே எனக்குச் சில ரோஜாக்கள் கிடைத்தன என்பது மகிழ்ச்சியே. காதல், தாய்மை, பெண் இருப்பின் வலி, இயலாமை, சமூகம் மீதான பிரமிப்பு, நட்பு, உறவுகள் - என விரிகின்ற ஆதிரையின் கவிஉலகம் மரபார்ந்த சொற்சுவையினால் கட்டப்பட்டது என்றாலும் மரபை அவ்வப்போது திமிர்த்து மீறுகின்ற தன்மையும் கொண்டது.
	"விரல்களில் கசிந்த
	இரத்தத்தைப்
	பார்த்த போது புரிந்தது
	கவிதை எழுதுவதைவிட
	சமையல் செய்வது
	எளிதென்று"
என்றெழுதும் ஆதிராவே அம்மரபார்ந்த கருத்தாக்கங்களைக் கேள்விக்குட்படுத்தி
	"மங்கை
	என்ற காரணத்தால்
	கல்பாவை
	உயிர் தந்து 
	கடவுளானான்!
	மனைவி
	என்ற காரணத்தால்
	உயிர்ப்பாவை
	மைதிலியைக்
	கனலாட்டிக்
	கல்லானான்"
என்றொரு கேள்வித் தீயைக் கொளுத்தி இராமனைக் கல்லாக்குகிறார்.
	இராமன் பிறன்மனை நோக்காத பேராண்மையாளன் மட்டுமல்ல, சந்தேகப்பிராணியும் கூட. சீதை இராவணனிடமிருந்து வந்தவுடன் சந்தேகித்துத் துளைக்கின்ற சராசரி ஆண்மன, ஆணாதிக்கச் சிந்தனையும் அவனிடத்தே உண்டு. அதைப் பின்வருமாறு கம்பராமாயணத்தில் படம் பிடித்துக் காட்டுவார் கம்பர் - இராவணனிடமிருந்து மீட்டு வந்த சீதையைப் பார்த்து, 
	"அரக்கர்களின் அரண்மனையில் மாமிசம் உண்டு, கள் குடித்து இருந்தாயே, அதில் எனக்கும் ஏதேனும் மிச்சம் மீதி கொண்டு வந்தாயோ?" என்கிறான்.
	மனைவியோடு சண்டை போடும் கணவன் தன் பக்கமிருக்கும் பலவீனம் மறைக்க அவளது பிறந்தகத்தை வம்பிழுப்பது வழக்கம். இராமனும் சொல்கிறான் – 
	"நல்ல குலத்திலா பிறந்தாய், வெறும் நிலத்தில் தானே பிறந்தாய், இப்படித்தானிருக்கும் 	புத்தி".
	முத்தாய்ப்பாய் இது –
	"இந்தக் கடலையே தீர்த்து, படை திரட்டி இங்கு வந்து, இந்த அரக்கர்களை வேரோடு அழித்தேனே - எதற்காக என்று நினைத்தாய்? உன்னை மீட்கவா? இல்லையில்லை - இராமனின் மனைவியை ஒருவன் கொண்டு சென்றுவிட்டானே எனும் பழியைப் போக்க" என்கிறான்.
	கேட்டுத் துடித்த சீதை சவுக்கடியாய் ஒன்றைச் சொல்கிறாள் -
	"எந்தவம் எந்நலம் என் கற்பு நான்
	இத்தனை காலமும் உழந்த ஈது எலாம்
	பித்து எனல் ஆய், அவம் பிழைத்தாம் அன்றே
	உத்தம! நீ மனத்து உணர்த்திலாமையால்!
இந்த நூற்றாண்டிற்கான அதிநவீனப் பெண்ணியச் சிந்தனை இது! 
	"தவம், கற்பு என்பதெல்லாம் பித்து என - பைத்தியக்காரச் செயலாய் ஆகிவிட்டதே உத்தம! நீ உணராததால்" என்ற சீதையின் குமுறல் - மனம் சார்ந்த புரிதலே ஆண், பெண் இணைவாழ்வில் அதிமுக்கியம் என்கிற நவீன மனத்தினை முன்வைக்கிறது. அதனையே இத்தொகுப்பின் மொத்தமான பெண்குரலாய் முன்னெடுக்கிறார் ஆதிரா.
	நமது சமூகத்தோடும், அதனுடைய சூழல்களோடும் உடனடியாகத் தொடர்பு கொண்ட கவிதைகளே மிக முக்கியமானவை. அவ்வகையில் ஆதிராவின் கொற்றவை நமது தொன்மத்தை மிக அழகாக இன்றைய நடப்புலகில் மீட்டுறுவாக்கம் செய்த கவிதை.

கொற்றவை
	அகோரப் பற்களும்
	நீண்ட நாக்கும்
	சூலமும்
	கத்தியும்
	ஈட்டியும்
	உடுக்கையும்
	இல்லாத 
	அழகான காளி

	அவனுக்கு 
	அலுவலகத்தில்
	மேலாளர்
	இருக்கையில்
	அமர்ந்திருக்கும்
	அவள்!
	ஆதிரையின் கவிதைப் போக்கில் எனக்கு மிகப் பிடித்த கூறாக அவரது சங்கஇலக்கியப் பதிவுகளைச் சமகால நடப்போடு இணைத்துக் கவிதை புனைவதைச் சுட்டுவேன். அவரது பெருந்திணை, கவிதை அதற்கு மிகப் பொருத்தமானதொரு சான்று.

பெருந்திணை...
	அற்றைத் திங்கள்...

	அன்போடு புணர்ந்த
	காதல் திணையில்
	காதல் தலைவனே
	தலைவியின்
	காதலன் ஆவான்
	தோழியின் துணையுடன்!

	இற்றைத் திங்கள்...

	வம்போடு புணரும்
	இணையத் திணையில்
	கணவனே மனைவியின்
	காதலன் ஆகிறான்
	கணினித் தோழியால்!

	எழுத்துக்கள் உரசும்
	இணையப் பாதையில்
	கருகிப் போனது
	அன்பின் ஐந்திணை

	கலாச்சாரம் கெடுத்து
	காற்றில் படர்ந்தன
	பெருந்திணைக் கொடிகள்
	மரபை மீறி

	கண்கள் பேசும்
	காதல் மொழியில் 
	வாய்மொழிதான்
	வாழ்வு இழக்கிறது!

	கணினி வீசும்
	காதல் வலையில்
	காதலே வாழ்வு
	இழக்கிறது!

	காட்சி வேட்கை
	ஐயம் தெளிதல்
	காதல் விதிகள்
	எதுவும் இன்றி
	கணினி வளர்க்கும்
	காம அக்கினியில்
	சாம்பல் ஆகிறது
	தமிழன் உருக்கிய 
	பண்பாட்டு நெய்!
	இந்தப் "பண்பாட்டு நெய்" சர்ச்சைக்குரிய சொற்றொடர். எது பண்பாடு - மாறுதலற்றதா, அதன் அளவுகோல் என்ன - இவைபோன்ற நுட்பமான கருத்தியல் சர்ச்சைகளைப் பின்னர் பார்க்கலாம். "தமிழ்ப் பண்பாடு என்பது தற்கால நிலைமைகளுக்கு ஏற்பத் தன்னை மறுபரிசீலனை செய்து கொண்டே போக வேண்டுமென்பதையும்," அதன் தவிர்க்க இயலாத கட்டாயத்தையும் நாம் மறந்து விடக் கூடாது. தமிழ் பண்பாடு என்பது கலாச்சாரக் காவலர்கள் தங்களைக் காபந்து செய்துகொள்ளப் பயன்படுத்திக்கொள்ளும் பதாகையாகிவிடக்கூடாது.
	ஆதிராவின் கவிதைகளில் காதலுணர்வும் மிக லாவகமாக, மென்மையாக, ஆனால் கட்டமைக்கப்பட்ட 'பெண்மை' விதியுடன் பல இடங்களில் கையாளப்பட்டுள்ளது. ஆணை முழுவதும் சார்ந்திருக்கின்ற காதலே அது.
	"பாதம் அசையும் போதெல்லாம்
	உன்னை உச்சரித்த மெட்டி
	என்னை நச்சரிக்கின்றது
	தேய்ந்து ஊமையாகுமுன்பு
	மீண்டும் ஒருமுறை
	உன் பற்களின் ஸ்பரிசம் கிட்டாதா?" 
	(மெட்டியின் புலம்பல்)
	"உன் மூச்சுச் சூட்டில்
	பொறிந்து வெளியேறியது
	அதுவரை நான்
	அடைகாத்து வைத்திருந்த நாணம்!
	இன்று உன் வாசிப்பிற்குள்
	கட்டுமானங்களை
	உடைத்த மரபுக்கவிதையாக நான்!
	(நாணம்)
	"உன் மீசையின் அடர்த்தியில்
	ஒளித்து வைத்திருந்தேன்
	என் காதலை
	உன் ஒவ்வொரு முறுக்கலிலும்
	அது மெய்சிலிர்க்கிறது என்னுள்"
	(மீசைக்குப் பின்னே)
எனும் ஆதிராவின் மேற்சொன்ன கவிதைகள் அமெரிக்கப் பெண்கவிஞர் ஹெலன் ஷெப்பீல்டின் The Love Poem Book எனும் சிறு கவிதை தொகுதியினை நினைவுபடுத்துகின்றது. தனது காதலுக்குப் பலமுகங்கள் எனும் கவிதையில் ஹெலன்,
	காதல் ஒரு விழா அல்ல
	நாட்குறிப்பு அல்ல
	...
	காதலே காலத்தின் சிறந்த முதலீடு
எனும் போது உலகெங்கிலும் இவ்வுணர்வில் ஒத்து ஒலிப்பதே காதல் கொண்ட பெண்குரலோ எனத் தோன்றுகிறது.
	"பாட்டாளிக்கு வேண்டுவது தோட்டம் நிறைய மலர்கள் அல்ல. குளிருக்கு வேண்டிய எரிபொருள்" என்று கலை, இலக்கியம் குறித்து மாவோ கூறியது ஒரு கவிஞனுக்கும் பொருந்துமென்பதை ஆதிராவின் புறம்சார்ந்த பல கவிதைகள் மெய்ப்பிக்கின்றன. சிவகாசியின் குட்டி தேவதைக்களுக்காகப் பரிந்து பேசுகின்ற இவரது குரல், மேதகு தேசியத் தலைவர், எம்மினத்தின் பெருமிதமான அடையாளம், மானமிகு போராளி பிரபாகரனது மகன் பாலச்சந்திரனது மரணம் குறித்துப் பொங்கி எழுந்து அறம் பாடுகிறது.
	அக்கவிதையைப் படித்தபின் உணர்ந்த அனுபவம் ஒரு சந்நதத்தை ஒத்திருந்தது. மரபார்ந்த வடிவத்தில் பாடப்பட்ட ஒரு அறம், "புரட்சிகர அரசியல் உள்ளடக்கம், அதி உயர்ந்த கலையியல் வடிவம்" இவற்றின் தேர்ந்த கலவையாக அக் கவிதை வெளிப்பட்டுள்ளது. ஆதிரைக்கு மிகப் பிடித்த பாரதியார் பற்றிய வ.ராவின் குறிப்பொன்றும் இங்கு நினைவிற்கு வந்தது.
	ஒரு சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துக்கொணடே இருந்த பாரதி, திடீரெனத் தன் மார்புக்கூட்டை நிமிர்த்தி நின்றபடி,
	"தங்கம் உருக்கித் தணல் குறைத்து
	தேனாக்கி எங்கும் பரம்பியதோர்
	இங்கிதம்"
என்று பாடி மூர்ச்சையாகி விடுகிறார். "இசைப்பாடல் என்பது பாரதியின் சன்னதம்" என்று வ.ரா இந்நிகழ்வைச் சுட்டிக் காட்டிக் குறிப்பிடுகிறார்.
	ஆதிரையின் ஓய்ந்தது உயிரின் ஓசையும் அப்படி ஒரு சந்நத இசைப் பாடல் தான். அதன் உணர்வெழுச்சி அப்பழுக்கற்ற சத்தியத்தின் தகிப்பைத் தருகின்றது.
	இங்கு தமிழ்க்கவிதை உலகின் தற்காலப்போக்கு ஒன்றைச் சுட்ட விரும்புகிறேன். ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்கக் கவிதைகளிலெல்லாம் சமூகப் பிரச்சனைகளை எடுத்துப் பேசுகிறார்கள். அவை கவிதையின் இலக்கியத் தகுதிக்கு எவ்விதத்திலும் ஊறு செய்வதில்லை எனவும் நம்புகிறார்கள். ஒரு கவிதை சமூகச் செய்தியைப் பேச நேர்ந்தால் அது அதனுடைய கலை அந்தஸ்திற்கு எவ்வித ஆபத்தையும் விளைவிக்கவில்லை எனும் தெளிவு அவர்களுக்குள்ளது. ஆனால் தற்காலத் தமிழ் இலக்கிய உலகில், குறிப்பாகக் கவிதைகளில், சமூகப் பிரச்சனையைக் கையாண்டால் அவை வெறும் "பிரச்சாரக் கவிதையெனக்" குறுக்கப்பட்டு "அறிவு ஜீவி விமர்சகர்கள்" எனப்படுபவர்களால் நிராகரிக்கப்படுகிறது. எத்தகைய முரண் இது!
	"மனுசங்கடா நாங்க
	மனுசங்கடா" என்று அய்யா இன்குலாப் திண்ணியம் குறித்து எழுதிய கவிதைக்கு நிகரான அறம் இங்கு வேறு யாருக்குண்டு? இக்கருத்தை வலியுறுத்தி கலைவிமர்சகர் இந்திரன், "W.H.Auden சொல்வது போல் Public Poetry, Private Poetry என இரண்டு வகைமை உண்டு, அகம், புறம் என்கிற மரபில் வந்தவர்கள் நாம். பிறகு ஏன் அகத்தில் மட்டும் நிற்க வேண்டும்? புறத்திற்கும் செல்வது அவசியமல்லவா?" என்று அழுத்தமாகக் கேட்டுப், புறத்திற்குச் சென்றால் இலக்கியத் தகுதியை இழந்து விடுவார்கள் என்போரின் கூற்றைப் புறந்தள்ளுங்கள் என்கிறார்.
	அவ்வகையில், ஆதிரா மிக வலுவாகப் புறம் சார்ந்த விஷயங்களை முன்வைத்தும், அகம் சார்ந்த காதலுணர்வினையும் (சமயங்களில் சமூகத்தின் அதரப் பழமையானவற்றைக் கேள்விக்குப்படுத்தியும்) முன்வைக்கின்றார்.
	"கட்டிலறை முத்துக்களுள் 
	ஒரு முத்து வரமென்றும்
	மறுமுத்து புறமென்றும்
	எறிவதுதான் பேதமென்றும் வஞ்சக்கோடு"
	(கோடு)
எனப் பெண் சிசுவிற்காக வாதாடுகையிலும்,
	"அன்றாடம் 
	பேருந்துப் பாடையிலும்
	அலுவலக மயானத்திலும்
	ஆண்வாடை மூச்சடைக்க
	சிக்கி முக்கி உரசல்களில் 
	பற்றி எரியாதிருக்க
	தண்டு வாழையா நான்?"
	(வெடிக்கும் முன்னே)
எனக் காமத்தைக் கட்டுப்பெட்டி என்றாலும் கடந்தாக வேண்டுமே என்று ஆதங்கப் படுகையிலும் அகமும், புறமும் மெல்லிய புள்ளியில் இணைகின்றன. தந்தை மகற்காற்றும் நன்றி எனும் கவிதையும்
	"அரிச்சுவடியில் அழகாய்ச் சிரிக்கும்
	அம்மா
	நேரில் அடிக்க வருகிறாள்
	அம்மா என்றதால்"
எனப் பகடி செய்கின்ற மம்மி கவிதையும்,
	"அம்மாவையும் நிலவின்
	வெளிச்ச வெளியில்
	ருசிக்க ருசிக்க
	அவள் உருட்டிக் கொடுத்த சோற்றையும்
	வளையல் சலசலக்க
	அவளது அழகுக் கை
	இழுத்து அரைத்த 
	அம்மியையும்
	நினைவூட்டுகிறது
	என் கையில்
	மெஹந்தியாக மாறிப்போன மருதாணி!
எனும் nostalgic தொனி அம்மாவும்... அம்மியும் கவிதையும் நாம் இன்று தொலைத்து விட்ட பல விஷயங்களைக் கண்முன் நிறுத்துகின்றன.
	ஆதிரை உலகவிசை முடுக்கு எனப் புதிய ஆத்திசூடி படைத்திருக்கிறார். சுற்றிலும் நர அசுரங்கள் வாமனங்களாக வளர்ந்து கொண்டிருக்க நரகாசூரனை அழித்து விட்டதாக ஏன் தீபாவளி கொண்டாட வேண்டுமெனக் கேள்விகேட்கிறார். "மதமிழந்த வேதம் யாவிலும் மனிதம் வாழலாம்" என வழிகாட்டுகிறார். ஏங்கி நிற்கையில் ஏமாற்றிச் சென்ற மழையை "ஆண் மழையே, நீயும் என் காதலன் போலத்தானே" எனச் சாடுகிறார். "பருவம் கடந்தும் காத்துக் கிடக்கம் ஜெலட்டின் குண்டு... எச்சரிக்கிறேன்" என முதிர்கன்னிக்காகத் துணிந்து குரல் தருகிறார். இவை அனைத்தும் எனக்கு மிக அணுக்கமாக, நெருக்கமாக இருப்பவை. ஆயின், ஒரு சிறு நெருடலுண்டு, இவரது பெருந்திணைக் கவிதையில். அதில் இவர் மேல் எனக்குச் சற்று ஊடலுமுண்டு. முழுவதுமாகக் கணினிக் காதலைச் சாடுதலும், 
	"கணினி வளர்க்கும்
	காம அக்கினியல்
	சாம்பல் ஆகிறது
	தமிழன் உருக்கிய
	பண்பாட்டு நெய்!
என்பதுவும் "வரலாற்றின் பழங்காலத்திற்குத் திரும்பிச் செல்லுதல், அதனை மட்டுமே உயர்வெனக் கொள்ளும் ஆபத்தை ஊக்குவிப்பதாக ஆகி விடுமோ" எனும் கிலேசத்தையும் தருகின்றது. 
	கலாச்சாரக் காவலர்கள் அனைவரும் தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்ற அதனைக் குத்தகைக்கு எடுத்திருக்கின்ற காலகட்டமிது. பண்பாட்டின் அத்தனை கவசங்களும் பெண்ணை மட்டுமே குறிவைத்து அவளது 'கற்பைக் காக்கின்ற' கடமையைக் கையிலெடுத்துக் கொண்டிருக்கிற நேரமிது. பண்பாடு என்பது உணவு, உடை, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், கலை, இலக்கிய வெளிப்பாடு, சடங்குகள் - இவை என்றால் ஆதியிலே தமிழ்ப் பண்பாட்டின் உச்சமென நாம் கருதும் சங்ககால வாழ் முறைப்படியேவா இன்றளவும் நமது உணவும், உடையும், மரபும் உள்ளன? அவற்றின் இளகிய தன்மை வழி எத்தனையோ வசதிக்கேற்ற மாற்றங்கள் வரவில்லையா? 
	இக்கேள்விகளனைத்திற்கும் பதில் கருப்பு வெள்ளையில் இல்லாதவரையிலும் நாம் 'பண்பாட்டு நெய்'யை வரையறுக்கவோ அல்லது உருக்கவோ முடியாதல்லவா? ஆனால் ஒரு படிமமாகத் "தமிழன் உருக்கிய பண்பாட்டு நெய்" யை நான் ரசிக்கவே செய்தேன் - கருத்தியல் ரீதியாக அல்ல.  
	ஆதிரை தனது கவிதைக்கான கட்டுமானப் பொருட்கள், கருக்கள் பலவற்றை மரபுக் கிடங்கிற்குள்ளிருந்து எடுத்தாலும் அதனைத் தன் கற்பனை வீச்சினால் சாணை பிடித்து விடுகிறார் என்பது தான் அவரது சிறப்புத்தன்மை. உதாரணமாக அவரது மோனாலிசாவின் மீசை, மீசை நரைக்கும் முன்னே எனும் கவிதைகளைச் சுட்டலாம். இரண்டு கவிதைகளிலும் புதுக் கற்பனையின் வெளிப்பாட்டிற்கு மீசையே உதவியிருக்கிறது. முன்னதில், புருவமற்ற மோனாலிசாவிற்கு பாரதியின் மீசையை அதில் ஒட்டவைக்கிறார்.
	"பாரதியார் மீசைக்குக்
	கால்கள் முளைத்தன
	ஓர் இரவில்
	இரவினிடையில் அவை
	மெல்ல நடந்து
	உறங்கிக் கொண்டிருந்த
	மோனாலிசாவின்
	விழிகளுக்கு மேல்
	பள்ளி கொண்டன
	புருவமற்ற ஏக்கத்தில்
	புன்னகையைத் தொலைத்த
	அந்தப் பேரழகியின்
	உதடுகளில் ஒட்டிக் கொண்டது
	பேராண்மையும்"
என்று யாருக்குமே தோன்றாத ஒரு கற்பனையைப் புகுத்துகிறார் (நம்மில் பலருக்கு மோனாலிசா ஓவியத்தில் புருவமற்று இருப்பதே தெரியாது).
	பின்னதில், பாரதி குறித்துப்பாடி 
	"மீசை நரைக்குமுன் மூச்சின்
	ஓசையை நிறுத்தி விட்டான்
	மீசையிலும் வெள்ளையனுக்கு
	ஆசை வரக் கூடாதென்று!"
எழுதிச் செல்கையில், மீசையில் கூட வெள்ளை முடி வந்து, வெள்ளையரின் நிறமென்கின்ற சாயல் தன் மீது படியக் கூடாதென இளமையில் உயிர் நீத்ததாகத் 'தற்குறிப்பேற்றணி'யைக் கையாள்கிறார்.
	குமரியில் நிமிர்ந்து நின்றான் என வள்ளுவப் பெருந்தகை குறித்தும், அடிக்கரும்பாய் இனித்தவரே என வள்ளியம்மாள் கல்வி நிறுவனங்களைச் சேவை மையங்களாகத் தோற்றுவித்த தமிழ்ப் புலவர், பெருமகனார் அய்யா அ.மு.ப குறித்தும் எழுதியுள்ளார். முழுவதும் மரபுக் கவிதைப் பாணியில் எழுதப்பட்ட அடிக்கரும்பாய் இனித்தவரே எனும் கவிதையில் "கீழ்க் கணக்கு நீதிநூலின் மறுபதிப்பே" என்ற அற்புதமான உவமையை மிக ரசித்தேன் - அதன் உண்மைத் தன்மைக்காக! அக்கல்லூரியில் Tutor ஆக ஆங்கிலத் துறையில் பல வருடங்கள் முன்பு நான் பணிபுரிந்த போது, நன்கொடை வாங்காமல் பெண்களுக்கென்றே நடத்தப்பட்ட கல்லூரி அது என்பதை மிக நன்கறிவேன். தனது அந்த உறுதிமிக்க கொள்கையினால் கல்வி வெறும் வியாபாரமல்ல என்று உலகிற்கு இன்றுவரை உணர்த்துகின்ற அய்யா அ.மு.ப விற்கு மிகப் பொருத்தமான அஞ்சலிக் கவிதை அது. பாராட்டுக்கள் ஆதிரா அய்யாவை இளைய தலைமுறைக்குக் கவனப் படுத்தியமைக்கு.
	ஆனாலும், மேற்சொன்னவற்றை விடக் கூடுதலாகத் திராவிட விருட்சம் எனும் பெரியார் குறித்த கவிதை, இரண்டு விஷயங்களுக்காகத் தனியாகக் கவனம் குவித்துப் பாராட்டப் பட வேண்டிய ஒன்று.
	முதலாவதாகத் தந்தை பெரியாரால் இந்த நிலைக்கு வந்திருக்கின்ற நான் கூட அவர் குறித்து கவியரங்கக் கவிதைகள், நினைவு நாள் கவிதைகள் போன்றவற்றைச் செய்திருக்கிறேனே தவிர, இயல்பாக, ஒரு வாஞ்சையோடு அவர் பற்றி இப்படி ஒரு கவிதை இதுவரை எழுதியதில்லை. பெரும்பாலான பெண் படைப்பாளிகள் தங்களைத் திராவிட இயங்கங்களோடு தொடர்பு படுத்திக் கொண்டாலோ, அல்லது அதன் உரம் பெற்றே பயணிப்பவர்கள் என்று அடையாளப் படுத்திக் கொண்டாலோ, தங்களை நவீனக் கவிதை உலகம் புறக்கணித்து விடக் கூடும் எனக் கருதுகின்ற சூழலில், மிக இயல்பாக, தன்னிச்சையாகத் தந்தை பெரியார் குறித்து, எளிமையான, உணவுப் பூர்வமானதொரு ஒட்டுதலோடு படைக்கபட்டிருக்கின்ற கவிதை இது!
	இரண்டாவதாக, அக்கவிதையின் நடையும், தொனியும். குழந்தைமையின் குதூகலமும், தமிழுணர்வின் செருக்கும், உரிமையோடு ஒரு பாட்டனித்தில் அவர்தம் மூக்குக் கண்ணாடியை ஒளித்து விளையாடும் உற்சாகமும், ஊடாகவே அவர்தம் உரிமைக்கான பங்களிப்பைப் போற்றும் பெருமிதமும், கலந்து சுவைத்துக் கட்டிய மரபுக் கதம்பமாக மணக்கிறது இக் கவிதை. கூடுதல் சுவையாக ஒரு கவிஞருக்கே உரிய கற்பனைத் திறத்தோடு "விளையாட நினைத்தாலும் முடியாமல் மலர்மேனி வெங்காயம் ஆனதையோ" என 'வெங்காயத்தை' மிகப் பொருத்தமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
	W.H.Auden சொன்னது போலக் "கவிதை ஒரு நிகழ்வா?" அல்லது Archibald சொன்னது போல "அர்த்தம் எதுவும் அற்றதே கவிதையா?" என்பதில் எனக்குத் தெளிவில்லை. ஆனால் "கவிஞனின் முதற்கடமை படைப்பது. இரண்டாவது கடமை படைப்பது. மூன்றாவது கடமை படைப்பது" என்று சொன்ன ஹியுடோவ்ரானவின் கூற்று மிகப் பிடிக்கும். அவ்வகையில் தனக்கே உரிய பாணியில், தனது உணர்வுகளைப் பட்டாம்பூச்சிகளின் இரவாகப் படைத்துத் தந்திருக்கின்ற ஆதிராவின் பயணம் தொடர்ந்து படைப்பதிலேயே தொடரட்டும் என வாழ்த்துகிறேன்.
	அவரது புத்தகத்தின் தலைப்பிற்கான பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதை பகல்கள் மட்டுமல்ல இரவுகளும் பெண்களுக்கில்லை (தூக்கத்தை மட்டுமே சுட்டுவதல்ல இரவென்பது - பெண்களுக்கு தற்போது மறுக்கப்படுகின்ற இரவென்னும் வெளியைச் சுட்டுவதே அச் சொல்) என்பதை வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போல மூடிய விழிகளிலும், பொறுப்பு, அது தரும் நினைவுச் சுமை, அதன் அலுப்பு இவைகளால் இரவுகள் எமக்கில்லை எனச் சொல்கிறது. கந்தர்வனின் 
	"நாளும், கிழமையும்
	நலிந்தோர்க்கில்லை
	ஞாயிற்றுக் கிழமையும்
	பெண்களுக்கில்லை"
எனும் கவிதையினை நினைவு படுத்துகிறது ஆதிரையின் இப்பட்டாம்பூச்சி!
	டார்ஜிலிங்கில் பிறந்து வளர்ந்த கவிஞர் விஷ்ணுகுமாரியின் புகழ்பெற்ற கவிதை நோயுற்ற காதலியின் கடிதம். அதில் அவர்,
	"காதல் இறப்பதில்லை
	அதை நீ
	கொல்லவே முடியும்" என்பார்.
	கவிதையும் அதுபோலவே இறப்பதில்லை. ஆனால் அதனைக் கொல்லவும் முடியாது. அத்தன்மையே அதன் தேவதைக் கொடையும், பிசாசுப் பிடியும். அக்கொடையையும், பிடியையும் இறுகப்பற்றி மென்மேலும் காதலியுங்கள், ஆதிரா - கவிதையை! ஆனால் அதற்கான கருத்தியல் தேர்வில் தெளிவாக இருங்கள். கட்டமைக்கப்பட்ட பெண்மை விதி விலங்குகளில் கவனமாகக் கால் பதியுங்கள்.
	"சூரியனின் கீழ் அனைத்தும்
	நமக்காக
	நமக்காக மாத்திரமே!"
	பறந்து வந்து இனியும் பல பட்டாம் பூச்சிகள்
	இந்த முல்லைக்குத் தேர் தரட்டும்! கவிதையில் கருத்தியல்
	தெளிவும், கூர்மையும் கைகூடித் துலங்கட்டும்!


உதவிய நூல்கள்:
	1. தமிழ்நாடன் - உலகக் கவிதைகள்.
	2. உரையாடல், கவிதை, அனுபவம் - இந்திரன், வ.ஜ.ச.ஜெயபாலன்

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *