பத்மஜா புத்தக வெளியீட்டு விழா

"மதத்தின் இடத்தைக் கவிதை 
	எடுத்துக் கொண்டுவிடும்" 
என்று Mathew Arnold பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவதானித்தார். 
	இருபதாம் நூற்றாண்டு அமெரிக்கக் கவிஞரான Wallace Stevens குறிப்பிட்டார் - "After one has abandoned belief in God, Poetry is the essence which takes its place as life's redemption".
	"ஒரே சமயத்தில் பூத்துதிர்ந்த வாகை" எனத் தன் கவிதைகளைத் தந்திருக்கும் பத்மஜாவிற்கு "மலைப்பாதையில் வெளிச்சம் கிடைத்திருக்கிறது". கடவுளின் இடத்தை மட்டுமல்ல - கவிதை எல்லாவிதமான பொய்த்துப் போன நம்பிக்கைகளின் இடத்தையும் இட்டு நிரம்பும் எனும் என் நம்பிக்கை ஒவ்வொரு புதிய கவிதைத் தொகுப்பினை வாசிக்கையிலும் மீண்டும் உறுதிப்படுகிறது. 
	"ஒரு சிறுமி தன் தாய்க்குப் 
	பரிசளிக்கின்ற சேலையாய்" 
இக்கவிதைகளை நமக்கு அவர் பரிசளித்திருக்கிறார். 
	நான் அதிக மகிழ்வும் பெருமையும் கொள்கின்ற விஷயம் ஒன்று - பெரும்பாலான பெண்கள் தமது முதல் கவிதைத்தொகுப்பினை வெளியிடுகையில், அதற்கானதொரு முன்னுரையையோ, அல்லது அதன் வெளியீட்டு விழா உரையையோ, நான் பங்களித்திருக்கிறேன் என்பதே அது. 
	தி.பரமேஸ்வரி, சக்திஜோதி, தாராகணேசன், ச.விஜயலட்சுமி, ஈழவாணி, கீதாஞ்சலி எனும் எனது தோழிகளின் நீண்ட பட்டியலோடு, பத்மஜாவும் சேர்ந்ததினை, நான் இம்மாலை மகிழ்வோடு நினைத்துப் பார்க்கிறேன். 
	ஏனெனில், ஒவ்வொரு முறை ஒரு பெண் தனது அகவொளியைக் கலையின் மூலமாக வெளிப்படுத்தும்போது, சுதந்திரத்தின் ஒளியால் அவளது அழகும், ஆன்மாவும் மேலும் மெருகேறுகின்றது. அது கவிதையா, ஓவியமா, இசையா, இலக்கியமா - அல்லது அவைஏதுமில்லையா - என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. அவள் தனக்கான ஒரு வெளியைத் தீர்மானித்துத் தன் மொழியில், சுயாதீனமாக வெளிப்படுத்த வரும்போது, அவளைத் தூக்கி, கட்டி அணைக்கவும், தோள் கொடுக்கவும், கைகுலுக்கவும், நாம் தயாராகக் காத்திருக்க வேண்டும். காலம் காலமாக அடக்கப்பட்ட அவளது நாவு எச்சிலை உமிழ்ந்தால் கூட அது எனக்கு அமுதம்தான். 
	அவ்வகையில் பத்மஜா எனக்கு மிக முக்கியமானவர். ஒரு வாசகியாக, நல்ல ரசிகையாக எனக்கு அறிமுகமாகிச் சக படைப்பாளியாக என்னோடு இணைந்து கொண்டிருக்கின்ற அவர் இணையத்தில் எழுதியவற்றை இங்கே அச்சு வடிவில் கொணர்ந்திருக்கிறார். வாழ்த்துக்கள். அவரை அறிமுகப்படுத்திய எனதருமைத் தோழன், அன்பு அமிர்தம் சூர்யாவிற்கு நன்றி.
	என் நேசத்திற்கும், மிகுந்த மரியாதைக்குமுரிய கலாப்பிரியா, திரு. ராஜசுந்தரராஜன் (இவரது கவிதைகளின் தீரா ரசிகை நான்) ஆகியோரது முன்னுரையுடன் நேர்த்தியாக வடிவமைத்து கொணர்ந்திருக்கின்ற வேடியப்பனுக்குப் பாராட்டுக்கள். 
	எனது ப்ரிய கலாப்பரியாவின் 
	"பழகிப் போகும்...
	பஸ்ஸீக்கு ப் பாதையும் 
	பாதைக்குப் பஸ்ஸீம்" 
எனும் மறக்காத கவிதையைப் போலவே – 
	எனது மரியாதைக்குரிய திரு.ராஜசுந்தரராஜனின் பின்வருகின்ற, எனக்கு மிகப் பிடித்த
	அப்படி ஒரு நிலமை 
	வரும் என்றால் அக்கணமே 
	வாழோம் என்றிருந்தோம்.
	வந்தது
	அப்படியும் வாழ்கிறோம்
	நம்மோடு நாம் காண
	இத்தென்னைகள் தம்மேனி
	வடுக்கள் தாங்கி.
இக்கவிதையைப் போலவே... பத்மஜாவிடம் சில உண்டு -
	"ஒவ்வொரு புடவையும் 
	நெய்யப்படும் போதே 
	தான் யாருக்கெனத் தீர்மானித்துக்கொள்கிறது
	சில சேலைகள் 
	கலை(ளை)யும் போதே 
	மிக அழகாய்த் தெரிகின்றன"
என பத்மஜா சொல்கையில், objection your honour எனப் பெண்ணியவாதிகள் குரல் கொடுப்பார்கள் என்றாலும், எனக்குப் பிடித்திருக்கிறது. 
	கவிதை எழுதுவதற்கும், வெளியிடுவதற்கும் வயது ஒரு தடையல்ல. 'லாவண்யா' என்றொரு கவிஞர் தனது 55ம் வயதில் முதன் முதலாக, தன் "இன்னும் வரவில்லை உன் நத்தை ரயில்" என்றொரு தொகுப்பை வெளியிட்டவர். அதற்குப் பின் 12 வருடங்கள் கழித்துத் தனது 67 வயதில் இரண்டாவது கவிதைத் தொகுப்பினை வெளியிடுகிறார். அவரது மொத்த இலக்கியப் பங்களிப்பு இவ்வளவுதான். ஆனாலும் அவர் நமக்கு முக்கியமானவர் - அறிந்து கொள்ளப்படவேண்டியவர். பத்மஜாவும் அப்படித்தான். லாவண்யாவின் படைப்பு வெளியைப் பற்றி என் அன்பிற்குரிய அய்யா திரு.வெங்கட்சாமிநாதன் பதிந்திருக்கின்ற கருத்தே பத்மஜாவிற்கும் பொருந்தும். 
	"தன் கவித்துவ ஆற்றலால் தமிழ் இலக்கியத்திற்கு தன் பங்களிப்பு என்று ஆவேசமுற்றுப் படைத்தவை அல்ல லாவண்யாவின் கவிதைகள். அத்தகைய ஆவேசம் ஏதும் இவரது ஆளுமையில் இல்லை. தான் தன் காலத்தில் தன்னைச் சுற்றிய உலகில் காணும் நிகழ்வுகள் தன்னைப் பாதித்த, தான் அவற்றை உணர்ந்த பாங்கில் அது தன் சம காலத்தியவர் உணர்ந்ததிலிருந்து வேறு பட்டிருப்பதைப் பதிவு செய்யும் உந்துதலில் பிறந்தவை இக்கவிதைகள். தன் உணர்வுகளும் தன்னை அவை பாதித்ததும் மற்றவர்களிடமிருந்து வேறு பட்டிருப்பதே பதிவாகியுள்ளன. ரொம்பவும் பணிவும் அடக்கமும் கொண்டவர். புதுக்கவிதை வடிவம் தந்த துணிவில் ஏதோ தனக்குப் பட்டதை எழுத வந்தவர். இவர் பயமுறுத்துபவர் இல்லை" - என்று லாவண்யா குறித்துப் பதிகிறார் வே.சா. 
	பத்மஜாவின் கவிதைகளும் அப்படித்தான் - காதலை, நேசத்தை, ஒரு பெண்ணின் அனைத்து பருவத்திற்கான மனோ உணர்வை, காதலும், காமமும் ஒன்றாகும் லயத்தை மட்டுமல்ல, அவளது "பாழாய்ப்போன மனசை"யும் நம்முடன் பகிர்கின்றன. கூடவே, தன்னைக் கொன்றாலும் தனது கனவினைக் கொல்ல முடியாது எனும் தீர்க்கமானதொரு பெண் குரலையும் முன்வைக்கின்றன. 
	"கல்யாணம் ஆகி வந்த பிறகு குளிச்சா இல்ல?" எனும் சந்தேக அவலத்துடன் இன்றும் பெண் நோக்கப்படுவதையும், "சுமந்து, நடந்து, காத்து, நின்று இற்றுவிட்ட கால்களுடன் அவள் சிலுவை சுமப்பதையும்" சுட்டுகின்றன. 
	இருள், நிலா, மலை, கப்பல், ஒற்றை மீன், நட்சத்திரம், கால்கள், மரத்தாத்தன், முத்தம், நாய்க்குடைகள் - இவை உலவும் அவரது கவிதைகளை மொத்தமாய்ச் சுவைத்து முடித்தபோது ஆத்மாநாமின் இக்கவிதை வரிகளை நினைத்தேன் – 
	"அற்புத மரங்களின் அணைப்பில் 
	நான் ஒரு காற்றாடி. 
	வேப்ப மரக்கிளைகளின் இடையே
	நான் ஒரு சூரிய ரேகை. 
	பப்பாளிச் செடிகளின் நடுவே 
	நான் ஒரு இனிமை
	சடைசடையாய்த் தொங்கும் கொடிகளில் 
	நான் ஒரு நட்சத்திரம்"
எனக்கு மட்டுமல்ல - பத்மஜாவிற்கும் கவிமனசு அப்படித்தான். நாமெல்லாம் - கவிதை என்ற ஒன்றையே ஒளியில் நெய்து கொண்டும், இருளில் போர்த்திக் கொண்டும் கனவுகளில் விழிக்கிறோம் - நனவில் தூங்குகிறோம் - மிக முக்கியமாக 'நனவிலியில்' வாழ்கிறோம். 
	ஆத்மாநாம் எனக்கு மிகப் பிடித்த கவிஞர். பத்மஜாவின் முத்தம் குறித்த அருமையான பதிவுகள் இத்தொகுப்பில், அவரது நான்கு கவிதைகளில் உள்ளது. அவை ஆத்மநாமை எனக்கு நினைவூட்டின. 
	"பாடகன்" பாடுகின்றான். 
	அவனது இசையை மனம் ரசிக்கவில்லை 
	இசை புக மறுத்து, 
	உன் கழுத்து மருவை நாவால் வருடி 
	யாராவது முத்தமிட்டு இருப்பார்களா? 
	என்ற கேள்வியே மேலோங்கி நின்றது. 
	"நீ எனக்குத் தர நினைக்கும் சின்ன முத்தம்
	ஒரு சிவப்பு அரளியாய் என் மீது வாசம் வீசட்டும்" 
இன்னொன்று "கடைசி முத்தம்", மூன்றாவதாக "; வளரும் முத்தம்" எனும் தலைப்பில் ஒரு மிக அருமையான கவிதை.
வளரும் முத்தம்
	தராமல் போன முத்தமொன்று 
	நம்மிடையே வளர்ந்துகொண்டே 
	போகிறது 
	எந்த ஒரு கட்டுக்கும் 
	அடங்காமல் 
	உடன் என்னிடம் சேர 
	துடிக்கிறது 
	அதில் நேற்று முளைத்த
	சிறகுகள் 
	என் வயிற்றினுள் 
	படபடத்துக் கொள்கின்றன 
	என் ஒரு சிறுமுத்தம் 
	போதும் 
	அதை மரணிக்க
	இல்லை ஒரு சொல் 
	மாத்திரம்!
	இருந்தும் 
	பேருரு எடுக்கும் அதனை 
	புன்னகையோடே வளரவிடுகிறேன் 
	வியாபித்து 
	என்னையது 
	கொல்லும் நாளுக்காக! 
	ஒரு புன்னகைக்கு எப்படி மறுபுன்னகை பதிலோ அப்படித்தான் ஒரு முத்தத்திற்கும்”. மேற்சொன்ன கவிதையைப் படித்தவுடன் என் நேசிப்பிற்குரிய ஆத்மாநாமின் அந்த அதி அற்புதமான 'முத்தம்' கவிதை நினைவிற்கு வந்தது. 'கவிதைகளை யாரும் நம்மிடமிருந்து பிதுக்கி எடுத்துவிட முடியாது" (இந்திரன்) என்பதை விளக்கும் அற்புதமான ஆத்மாநாமின் இக்கவிதை இந்த 21ம் நூற்றாண்டிற்கான அவநம்பிக்கைக்கு மாற்றாக 'முத்தத்தை' - அன்பை முன்வைக்கிறது. 
முத்தம்
	முத்தம் கொடுங்கள் 
	பரபரத்து
	நீங்கள் 
	முன்னேறிக்கொண்டிருக்கையில்
	உங்கள் நண்பி வந்தால் 
	எந்தத் தயக்கமும் இன்றி 
	இறுகக் கட்டித் தழுவி 
	இதமாக 
	தொடர்ந்து 
	நீண்டதாக 
	முத்தம் கொடுங்கள் 
	உங்களைப் பார்த்து
	மற்றவர்களும் 
	அவரவர்
	நண்பிகளுக்கு முத்தம் கொடுக்கட்டும்
	விடுதலையின் சின்னம் முத்தம் 
	முத்தம் கொடுத்ததும் 
	மறந்துவிட்டு
	சங்கமமாகிவிடுவீர்கள் 
	பஸ் நிலையத்தில் 
	ரயிலடியில்
	நூலகத்தில் 
	நெரிசற்பூங்காக்களில் 
	விற்பனை அங்காடிகளில் 
	வீடு சிறுத்து
	நகர் பெருத்த
	சந்தடி மிகுந்த தெருக்களில் 
	முத்தம் ஒன்றுதான் ஒரே வழி
	கைவிடாதீர்கள் முத்தத்தை 
	உங்கள் அன்பைக் தெரிவிக்க
	ஸாகஸத்தைத் தெரிவிக்க
	இருக்கும் சில நொடிகளில் 
	உங்கள் இருப்பை நிரூபிக்க
	முத்தத்தை விட
	சிறந்ததோர் சாதனம் 
	கிடைப்பதரிது
	ஆரம்பித்துவிடுங்கள் 
	முத்த அலுவலை
	இன்றே
	இப்பொழுதே
	இக்கணமே 
	உம் சீக்கிரம்
	உங்கள் அடுத்த காதலி 
	காத்திருக்கிறாள் 
	முன்னேறுங்கள் 
	கிறிஸ்து பிறந்து
	இரண்டாயிரம் வருடங்கள் கழித்து 
	இருபத்தியோறாம் நூற்றாண்டை 
	நெருங்கிக்கொண்டிருக்கின்றோம் 
	ஆபாச உடலசைவுகளை ஒழித்து
	சுத்தமாக
	முத்தம் 
	முத்தத்தோடு முத்தம் 
	என்று 
	முத்த சகாப்தத்தைத்
	துவங்குங்கள். 
	கிரேக்க புராணம் - காதலன் நிழல்சுவற்றில் தெரிய, அதை வரையக் காதலி முற்பட்டதிலிருந்து ஓவியம் தொடங்குவதாக நம்புகின்றது. எனக்கென்னவோ பத்மஜா அன்பின் பிம்பங்கள் தன் முன் தோன்ற, அதை வரைய முற்படுகையில், கவிதையினைக் கண்டெடுத்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. மிக எளிமையான நேர் மொழியில் அவரது "எரி நிழல்" கவிதை அதைச் செய்கிறது. 
எரி நிழல்
	உன் தண்முகம் 
	கண்டேனில்லை 
	உன் புன்சிரி
	கண்டேனில்லை
	உன் குறுவிழி
	கண்டேனில்லை
	உன் திமிர்நடை
	கண்டேனில்லை
	உன் உயிர்ப்பார்வை
	கண்டேனில்லை
	உன்பருந்தோள் 
	கண்டேனில்லை
	உன் நெடுமார்பு
	கண்டேனில்லை
	உன் கடி மெய்யும் 
	கண்டேனில்லை
	கண்டதெல்லாம் 
	அது யாதெனின் 
	உன் மனம் 
	என் அகம் பற்றியதும் 
	பற்றியெரியும் 
	என் நிழலைத்தான். 
	"தொலைதூர மலையொன்று
	உயிரோடு உறுமாறும் உன் கண் முன்னால்" 
என்றொரு அருமையான வரியை எழுதிய கவிஞர் இந்திரன் மிகச் சிறந்த கலை விமர்சகர். அவர் ஒரு முறை சொன்னார் – 
	"வெறும் காட்சிப் படிமங்களை உருவாக்கி 
	காட்டுவது ஒவியர்களின் வேலை -
	கவிஞர்களின் வேலை அல்ல" 
	என்று. 
	உடனே அதற்கு மிகச் சரியானதொரு உதாரணமாக எனக்கு நினைவிற்கு வந்தது பிரமிளின், 
	"நட்சத்திரங்களை விட நிறையவே பேசுவது 
	அவற்றிற்கிடைேயுய்ளள இருள்" 
எனும் வரிதான்.
	"இருளின் நிறம்" என்கிற கவிதையில் அடர் இருளில் தன் மீதுபட்ட நகக்கீறல் ஒளியாகக் கிளருகின்ற ஒரு படிமத்தை முன்வைக்கிறார் பத்மஜா. 
இருளின் நிறம்
	இருளின் நிறத்தைக் கண்டுபிடிக்க முயன்றோம் 
	நாம் அன்று
	ஜன்னலின் சிறுதுளையில் நுழைந்த
	நிலாக்கீற்றைக் கூட அடைத்து
	சுற்றிச் சுற்றி பார்த்தாய் நீ 
	நம் நான்கு கண்கள் 
	மட்டும் பளிங்காய் ஒளிர்ந்தன
	மூக்குத்தி! என்றாய் 
	சிறு ஒளியாம் அதனை கழற்றி ஒளித்துவைத்தேன் 
	இருட்டின் நிறம் அருகிவிட்டது
	கண்ணுக்குத் தெரியா கருநீலத்தில் மூழ்கிக் கிடக்கும் 
	அவ்வமயம்
	அறியாது உன் நகம் 
	என் மீது பட்டதில் கிளர்ந்த பேர் சுடரில் இருள் 
	சட்டென போயே போய்விட்டது
	எப்போதாவது இருளின் நிறம் 
	கண்டுபிடிப்போமா நாம்? 
	"இருட்டின் நிறம் அருகிவிட்டது" என்னை நிறுத்தி வைத்த, வியக்க வைத்த சொற்பிரயோகம் இது. 
	அபியின் சாகாவரம் பெற்ற "தன் அடர்த்திக்குத் தானே திகைக்கும் இருள்" எனும் வரி இங்கு நினைவிலாடியது. 
	"நம்மைச் சுற்றிலும் காலாவதியாகிப் போன உவமைகள் ஏராளம். மிக உன்னதமான உவமைகள் நம்முடன் பழகியதின் காரணமாக அவற்றின் புதுமைப் பண்பை இழந்திருக்கின்றன. (உம்) 'நாற்காலியின் கால்' (இந்திரன்)"
	Password - கடவுச்சொல் நம்மோடு அன்றாடம் பழகிவருகின்ற சொல். ஆனால் அதனைப் புதுமையாகக் காதலன் பெயரைக் கடவுச் சொல்லாக வைக்கின்ற உவமையினைக் கையாள்கிறார் பத்மஜா தன் 'கரை ஒதுங்கிய கப்பல்' எனும் கவிதையில்- 
கரை ஒதுங்கிய ஒரு கப்பல்
	கப்பல் ஒன்று கரை ஒதுங்கியதாய் 
	ஊரெல்லாம் ஒரே புரளி!
	அதனுள் செல்ல, கடவுச் சொல் 
	அதன் பெறுநருக்கு மட்டும் தெரியுமாம்...
	ஊரையே கூட்டி முயல்கிறது அரசு! 
	என் முறை வருமுன்னே எப்படியாவது அதை 
	மாற்றிவிடு 
	இல்லையெனில் 
	எனக்கு மட்டும் தெரிந்த கடவுச் சொல்லான 
	உன் பெயரை 
	உலகின் முன் எப்படி உரக்கச் சொல்வேன் நான்?
	ப்ளீஸ் டா!
	"இரண்டு சோம்பிய முதலைகளாய்
	வெளி வெறித்துக கிடந்தோம் 
	வந்து வீழ்ந்தது ஒரு துளி மழை. 
	வாலசைக்க மறுக்கும் பல்லியாய் உளவாங்கி உறிஞ்சினோம்"
என்பவையும் அன்றாடம் நம்மோடு பழகிய, ஆனால் புதுமை இழக்காத உவமைகள் - பாராட்டுகள் பத்மஜா!
	தனக்குத் தெரிந்த, தான் அனுபவித்த உலகத்தையே பாசாங்கின்றித் தருகிறார் பத்மஜா - ஜிமிக்கியோடும், தாவணியோடும், அக்கா அண்ணியான கதை, பிண்டங்காக்கை பாட்டி, 'ஐ லவ் யூ' கிறுக்கலை வெள்ளையடித்து அழிக்காதே என இருட்டறையிலிருந்து இறைஞ்சும் ஒரு நடுங்கும் குரல், 'திருடா, ப்ளீஸ்டா' எனும் பிச்சிச் சிணுங்கல்கள், செவி சாய்க்கும் செல்லப் பிள்ளையார், 
	"ஓட்டை குழாயின் நீர்சொட்டும் 
	ஒலியில் நாள்தவறாது 
	உனது பெயர் . எப்படித் தூங்குவேன் நான்"
என அங்கலாய்க்கும் மனம், 
	"உன் பழைய பனியனின், மனம் 
	கிளர்த்திய வேட்கைகள்" எனத் தவிக்கும் பெண்ணின் மிக இயல்பான பாலூக்கம், முதலியவற்றைப் பகிர்ந்து கொள்கின்றவை தாம் இக்கவிதைகள். இடையிடையே துர்க்கனவாய் "நாயைப் பெண்டாளும் வால் வெட்டப்பட்ட குரங்கும்" உண்டு. 
அம்மா 
	இன்னும் சில மாதங்கள்தான் 
	என தீர்ப்பு வந்த நேரம்..
	ஆயிரம் முறை நீ ஓதிய கடவுள் கூட 
	தீர்ப்பை மாற்ற விழையவில்லை 
	மருத்துவமனை வராண்டாவில்
	வீழ்ந்து உருண்டு புரண்டு ஆழவேண்டிய
	மனநிலையில் மதிய காட்சிக்குப் போனோம் 
	எல்லாம் சரிதான் என்ற பாவனையில்.
	ஆயிற்று
	ஒவ்வொருவராகக் காண வருகின்றனர்
	கடைசியல் உன்னுடன் பேசுவதற்கு
	உன் எதிரில் கண்ணீர்விட அஞ்சி
	கல்லாய்ப் போனோம் அனைவரும் 
	நீ மயக்கத்தில் கண் அசந்த நேரமெல்லாம்
	முகம் வெறித்து மார்பு அசைகிறதா என்று 
	விழித்திருந்தோம் 
	நீயும் நானும் தனித்திருந்த சமயம்
	எனக்கு சாகும் வயசா? ஏன் இப்படி?
	என்று கேட்ட கேள்விக்கு
	என்ன பதில் நான் கூறியிருக்க இயலும்?
	வீடு திரும்பி கார்த்திகைக்கு நீ போட்ட கோலம் 
	அழியாமல் இருப்பதைக்கண்டு 
	அதை முத்தமிட்டு உன்னைக் கூவி
	அழைப்பதைக் தவிர?
	அம்மா...
	"கவிதாவஸ்தை" "யாருக்கும் புரியாக் கவிதை' என்ற கவிதைகளில் கவிதை எனும் ஊடகம் தன் சுயத்திற்கு அதன் தேடலுக்கு முன்பாக எவ்வுரு கொள்கிறது? எனச் சற்று உள்முகமாகப் பார்க்கவும் முயன்றிருக்கிறார். 
	கவிதை எப்போதும் வாசகனின் சொத்துதான் - அவனது அதிகாரம் மட்டுமே செல்லுபடியாகின்ற அரியாசனமல்லவா அது - அதனால்தான் என் ப்ரிய ஆத்மநாம் வாசகனுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறான் இப்படி – 
	"சாக்கடை நீரில் வளர்ந்த
	ஒரு எலுமிச்சை செடிபோல் நான் 
	அளிக்கும் கனிகள் 
	பெரிதாகவும் புளிப்புடனும் தானிருக்கும். 
	கொஞ்சம் சர்க்கரையை 
	சேர்த்து அருந்தினால் 
	நல்ல பானகம் அல்லவா?" 
	"கவிதையில் 'நான்' எனும் சுயம் குறித்த தயக்கங்களும் சந்தேகங்களும் நவீன காலத்தில் எழுதுபவர்களுக்கு இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. கவிஞன் இந்த வாழ்க்கையிலும் சரி, கவிதையிலும் சரி, இதை எந்த அளவிற்கு உக்கிரமாக உணர்கிறானோ அந்த அளவிற்கு அந்தச் சுயத்திலிருந்து தப்பித்து "வேறு நபர்களில்" தன்னை நிறைத்துக் கொள்கிறான்” என்பார் பிரம்மராஜன். பிறரின் வாழ்க்கைகளை வாழ்ந்து பார்க்கும் படைப்பாளி மனநிலைதான் அத. இதைத்தான் John Keats எனும் பெருங்கவிஞன் "Negative Capability" என்பார். இது இன்னும் நெருக்கமாகப் பத்மஜாவிற்குக் கைகூடி வருகையில், அவர் மென்மேலும் தனது கவிதைப் பாதையில் தீர்க்கமாகத், துலக்கமாகப் புலப்படுவார் என நான் நம்புகிறேன். 
பத்மஜாவை - அவரது கவிதைகளை எனக்குப் பிடித்திருப்பதற்கு மிக முக்கியமான காரணம் - அவரிடம் பிரகடனங்களோ, கோஷங்களோ, அரூப முழக்கங்களோ, போராளி முஸ்தீபுகளோ இல்லை என்பதுதான். 
	இப்பொழுதெல்லாம் மிக விரைவில் இலக்கிய உலகில் பிரபலமாக வேண்டும் எனில் - குறுக்கு வழி - ஒரு கவிதைத் தொகுப்பு போடுவதுதான். அதில் மேற்சொன்ன இன்னபிற கூறுகள் இருப்பின் - அடுத்த சில மாதங்களில் spot light அவர்கள் மீதுதான். இந்தக் கூட்டத்தில், கவனிக்கப்படாத எளிமையும், முன்துறுத்திக் கொண்டு நிற்காமல், உரக்கக் கோஷமிடாத, இசங்கள், அரசியலை முன்னிறுத்தி எழுதப்படாத, செம்மையான கவிமனம் கொண்டவர்கள் பத்மஜாவைப் போல ஏராளமானோர் இங்கு உள்ளனர். 
	மிகச் சமீபத்தில் நான் வாசித்த எனக்கு மிகப் பிடித்திருந்த சாம்ராஜின் வரியொன்று, "என்றுதானே சொன்னார்கள்" எனும் தொகுப்பிலிருந்து – 
	நவீன தமிழ்க்கவிதைகளில்
	ஆசன ஆய்ணடியப்பன்கள்' ஏராளம் 
	காலை முறுக்கித் தோள் மேல் போட்டு -
	அப்படியே தலை குப்புற நின்று -
	..... நமக்கு அவையெல்லலாம் சாத்தியமில்லை
	.... நமக்கு அவை தேவையுமில்லை
பத்மஜா உங்கள் வழியிலேயே ஏராளமான முத்தங்களும், அரளிப் பூக்களும், கப்பல்களும் உங்களை வழிநடத்தும் - நாங்களும் கூட வருகின்றோம்! 
	ஊடகங்களே... தயவுசெய்து பத்மஜா போன்றவர்களைக் கவனியுங்கள். அறிமுகப்படுத்துங்கள், பேசப்படுபவர்களாக முன்னிறுத்துங்கள். நான் பல மேடைகளில், கூட்டங்களில் சொன்னது தான் இது – 
	தமிழச்சி தொடங்கி .... மிகச் சிலரின் மீதே குவிக்கப்படுகின்ற கவனத்தைச், சத்தமின்றி, நம்பிக்கையின் ஒளியோடு, எளிமையின் வழியோடு, தம் அனுபவ உண்மை சார்ந்து எழுதுகின்ற ரிஷி, செ. பிருந்தா, கல்பனா, கு.உமாதேவி, அழகு நிலா, தென்றல், கனகதூரிகா, இப்படியான கவனிக்கத்தக்க பிற பெண் கவிஞர்கள் மீது உங்களது வெளிச்சத்தினைப் பாய்ச்சுங்கள். சாம்ராஜின் எனக்கு பிடித்த இன்னொரு வரி....
	இப்போது தங்க நாற்கரச் சாலை 
	கயத்தாற்றுக்குள் நுழைவதில்லை 
	பாலத்தின் கீழ் எங்கோ இருக்கிறான் 
	பாஞ்சாலங்குறிச்சிக்காரன்....
வாசகர்களே, ஊடகங்களே - உங்கள் தங்க நாற்கரச் சாலைகளை எங்கெங்கோ இருக்கின்ற பத்மஜாவைப் போன்ற பிற ஆளுமைகளை நோக்கிச் செலுத்துங்கள் - கவனியுங்கள் - கைதூக்கவிடுங்கள் - பாராட்டுங்கள். 
	அனுபவத்தைக் கால, வெளி, ஊடகங்களூடே வெளிப்படுத்துவதே கவிதை. 
	தேவியர் எவருக்குமே 
	வழங்கப்பட்டதில்லை 
	விசுவரூப வாய்ப்பு
என்று ஆதங்கப்படும் அன்பாதவனைப் போல, புரிந்து கொண்டு, புதிதாக எழுத வருகின்ற பெண்களை வரவேற்றுக் கொண்டாடுங்கள்!
	ஒருகைப்பிடி சிந்தனை, ஒரு கைப்பிடி உணர்வு + ஒரு சிட்டிகை அனுபவத்தின் உண்மை - சேர்ந்தது கவிதை. அது உங்களுக்குக் கூடி வந்திருக்கிறது பத்மஜா.   தொடருங்கள் - நிறைய எழுதுங்கள்! அதன் மூலம் எங்களோடு உங்களது பயணத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 
	தேவதேவன் சொல்வது போல் - உங்கள் தனிமையின் கிண்ணம் நிரம்பி வழியட்டும் கவிதைகளால்!.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *