எம்.ஜி.ராமச்சந்திரனும், கார்ல் மார்க்ஸ்சும் 1600-களில் ஆங்கிலக் கவிதைப் பரப்பிலே நான்கு தத்துவவாதிகள் (John Davies, Samuel Daniel, George and Lord Brooke) ஒன்றிணைந்து, ‘ஒரு கிருத்துவ மனிதம்’ என்ற சட்டகத்தினுள், தத்துவக் கவிதைகள் எழுதத் துவங்கினார்கள். விவிலியத்தை நாம் ஒரு மத நூலாக மட்டுமே பார்ப்பதில்லை அல்லவா? அந்தச் சட்டகத்தை மட்டும் வைத்துக்கொண்டு, அதற்கு முற்றிலும் புதிதான, அவைதீக, சிதிலப்பட்ட, அலைந்து உழலுகின்ற, பந்தாடப்படுகின்ற உள் மனத்தின் ரணத்தின் நிணத்தோடும், பிணவாடையின் சவக்களையோடும், வெளிவந்ததிருந்தது பாலையின் இத்தொகுப்பு. "இந்தக் கதைத் தொகுப்புக்குள் நுழைந்து வெளிவந்தவர்கள் எவ்வளவு நிர்வாணங்களைப் பார்த்தீர்கள்? இவர்கள் அனைவரும் இருளில் வாழ்ந்து கொண்டிருக்கிறவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? - அவர்கள் ஒவ்வொருவரும் சொல்வார்கள் - "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது என்று - எம்.ஜி.ராமச்சந்திரனையும், கார்ல் மார்க்சையும் போல!" - என்கிறார் ஸ்ரீபதி தனது அவதானிப்பில். எனக்கோ தொகுப்பைக் கீழே வைத்தவுடன் தோன்றியது - ப்ராய்டும், கார்ல் மார்க்சும் போல என்று! "சமூகத்தை மார்க்ஸ் அணுகிய விதத்திலும், ஃப்ராய்ட் அணுகிய விதத்திலும் வேறுபாடுகளுண்டு. சமூகமே மனிதனை உருவாக்குகிறது என்கிறார் மார்க்ஸ். சமூகத்தை மனிதனே உருவாக்குகிறான் என்கிறார் ஃப்ராய்ட்" (பக்கம் 59 - ஃப்ராய்ட் யூங் லக்கான் - அறிமுகமும் நெறிமுகமும் - தி.கு. இரவிச்சந்திரன்). ஒரு ஃப்ராய்டிய உளப்பகுப்பாய்வுப் பிரதியாக இக்கதைகளை நான் ஆய்வதற்கு முன்பாக மிகமுக்கியமான "எனதேயான எளிய உலகத்தில் இருந்தே நான் பாலை நிலவனை இதில் கண்டுபிடித்தேன்". "ஒவ்வொருவரிடமும் ஒரு நிலா இருக்கிறது" என்கிற அவரது வரியை நான் கடன் வாங்கிக் கொண்டு இத்தொகுப்பில் நுழைந்தால் புரிந்தது - பாலைக்கோ குழந்தைமையில் நிலா தனது தந்தையின் மலத்தைக் கையில் ஏந்தியபொழுது இருந்தது. தந்தை தூக்கித்தில் எழுப்பித் தருகின்ற, வறுக்கப்பட்ட ஆட்டின் இரண்டு காதுகளைத் தின்றபோது இருந்தது, நிலா இதில் அவருக்கு நிறங்களாகவும் இருக்கிறது - பேரொளியால் மெருகேற்றப்பட்டவருடனான காதல் கொண்ட பழுப்பு நிறக் கண்களையுடையவனின் துக்கமாகவும், துரோகத்தின் நஞ்சால் மெருகேற்றப்பட்ட இரவு போன்ற நிறமாகவும், வெளிறிய சுண்ணாம்புச் சுவராகவும் கொஞ்சம் வளர்ந்தபின் இருக்கிறது. அந்த நிலா - தொகுப்பு முழுவதிலும் பாழ்மையாக, நோய்மையாக, உடலாகக், இருளாக, சவமாக, துரோகத்தின் சாம்பல் நிறமாக, காமமாக, அதிகாரமாக, பறவையாக, கசப்பாகத் துன்பமாகப் பலருக்கும் இருக்கிறது. இந்த பலர் என்பவர் - இதிலே யார்? அவன், மனைவி, மகன், ஷங்கர், ஸ்ரீதேவி, நகுலன், பாமா, குணசேகரன், மித்ராகக்கா, சாரதி, ஸ்ரீகிருஷ்ணன், அப்சல், பாபு, முரளி, தீபன், ஆறுச்சாமி, ஆகாஷ், ஜீசாய், மஹாராஜா, சந்தோஷ் - இப்படிப் பலரும் வந்தாலும், அவர்களில் ஒரு குரல் தனித்து நின்று மன்றாடுகிறது அது. "சமகாலத்தில் சிதிலப்பட்ட எதோ உள்ளுணர்வு கலந்த ஒளியைத் தேடிக் கொண்டிருக்கும் பாலை நிலவனின் குரல். குறிப்பாக - ‘நாவல் எழுதுபவனில்’ சந்தோஷாக அவனை நான் உணர்ந்தேன். "சந்தோஷ் என்பவனின் தகப்பனுக்குப் பிறந்தவன் நான். நீ சந்தோஷ் என்பவனின் சகோதரனா?" என்ற அந்தக் கேள்வி என்னை மீண்டும் ஃப்ராய்டிற்குத் திருப்பியது. "குலக்குறியும் விலக்கும்" நூலில் மானிடவியல் கூறும் மனித இன வளர்ச்சிக் கட்டங்களைத் தனியார் வளர்ச்சிக் கட்டங்களோடு இணைநிலையாக்குகிறார். குறிப்பாகத் தொன்மம், சமயம், அறிவியல், கட்டங்கள் முறையே குழவிப் பருவம், குழந்தைப் பருவம், முதிர்ச்சிப்பருவம் ஆகியவற்றுடன் இணைக்கிறார். மேலும் தொன்மக் கட்டத்தைத் தன்மோகத்துடனும், சமயக் கட்டத்தை இடிபால் சிக்கலுடனும், அறிவியலைப் புறநிலை மோகத்துடனும் இணைக்கிறார்" (பக். 59 ஃப்ராய்ட் யூங் லக்கான் அறிமுகமும் நெறிமுகமும் - தி.கு. இரவிச்சந்திரன்). "வெள்ளை அங்கியும், இரத்த நிறத் தோள் பட்டையும் அணிந்த மஹாராஜா"" எனும் parody கதை விவிலியத்தின் தானியேல் : 7 : 9, 10. "நான் பார்த்துக் கொண்டிருக்கையில் சிங்காசனங்கள் வைக்கப்பட்டது, நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார். கோடானகோடி பேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்...." எனும் மேற்கோளுடன் துவங்குகிறது. இலங்கையின் தற்பொழுதைய இனப்படுகொலைக் கோரமுகத்தைப் பாலை நிலவனின் இராஜா, தளபதி சித்திரங்களில் காட்சிப் படுத்திவிட்டுச் சொல்கிறார். "மஹாராஜாவின் பிரத்யேக ஆயுதம் வாளும் கவசமுமல்ல - அவை காவலளர்களின் உடமை. ராஜாவின் ஆயுதம் நஞ்சேற்றப்பட்ட மிருதுவான சொற்காளகவே இருந்திருக்கிறது. இப்போது தளபதி அது போன்ற ஒன்றையே தேர்ந்தெடுக்க விரும்புகிறார்" இலங்கையின் சிங்களவர்களால் புனையப்பட்ட தொன்மத்தைத் தன் மோகத்துடன், ஃப்ராய்ட் வழி நான் பார்த்த இடம் இது. ‘மூலிகை’ என்கிற கதையில் சமயக் கட்டத்தை இடிபால் சிக்கலுடன் இணைக்கலாம். கதையின் நாயகன் சாமுவேல் - கசப்பினாலும், துன்பத்தினாலும் பிழியப்பட்ட விநோத மூலிகையின் சாறு கொண்ட மனிதன். தடைசெய்யப்பட்ட போதை தரும் இலைகளைக் கடத்தியவன். ருக்மணியின் அம்மணத்தில் ஆறெனப் பாய்பவன், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அன்னை மரியாளுக்கு மெழுகுவாத்தியையும் உப்பையும் கொண்டு போய் வைத்து, அவன் அப்பா அருமைராஜன் கொடுத்த ஸ்தோத்திரப் பாடல்களை இதயத்திலிருந்து மீட்டுபவன். அவனும், ருக்மணியும் புணர்ந்தபின், ருக்மணி தனது அந்தரத்தை ஒரு பூனைக்குப் பிறாண்டக் கொடுப்பவள். இதனூடே யசோதோ என்பவளும் வருகிறாள். பல ஆண்களால் சுவைக்கப்பட்டும், குறிப்பாக பருவம் எய்துவதற்கு முன் ஒரு கிழவனால் அவள் பாலியல் சித்ரவதைப்பட்டவள். அவைளைப் பற்றிய விவரணையில் பாலை நிலவனது வரிகள். "தனக்குள் நெருப்பைச் செலுத்தும் ஆடவர்களின் குரல் வளையைக் கடித்துக் குதறிவிட வேண்டுமென்றுதான் முத்தமிடத் தொடங்குவாள். ஆனால் தீடிரென்று வசியம் செய்யப்பட்டது போல, தனது உடலை இயக்குபவனிடம் ஒரு மெல்லிய மலரெனக் கொடுத்து விடுவாள். அவன் ஒரு புரவியை ஓட்டிச் செல்வதைப் போல, ஓட்டிச் சென்று ஒரு எருமை மாட்டை விட்டுச் செல்வது போல உடலை விட்டுச் சென்று விடுவான்" "ஆன்மாவின் வாசனையே, மலவாசனைதான் எனும் அம்மா" கருந்திரை - II (பாலச்சந்திரனின் அம்மாவின் நித்திரைக் குறிப்பில் காணலாம்). துல்லியமாக இதில் இடிபால் சிக்கலைப் பார்க்க முடியாவிட்டாலும் கூட, பெண் உடம்பின் மீதான கட்டற்ற வெறியுற்ற ஆணின் காமம், பெண் தனது வேட்கைக்கான தேவையாக ஒரு ஆணின் உடலை அவள் கையாள்வது போன்றவற்றின் நுட்பமான பதிவு இக்கதை. முதிர்ச்சிப் பருவத்தினை அறிவியல் கட்டத்தோடு ஃப்ராய்ட் இணைக்கிறார். ஊர் ஊராகச் சுற்றும் ஒரு வேலை, அது கொசுவலை விற்பனை அல்லது வேறு எதுவாகட்டும், ஒரு முதிர்ச்சிப் பருவ சிதிலப்பட்ட இளைஞன் "விவசாயிகளின் கடைசி உலகத்தையும் பார்கிறான்". வியாபாரத்தில் தோற்றவர்களைக் காண்கிறான், மலத்தின் மீது மலக் குழியின் மீது பழைய பேப்பர் விரித்துப் படுப்பவனைப் பார்க்கிறான். தானே எல்லாவனுமாகவும் இருக்கின்ற அவனுக்குத் "தனிநிலை, சமூகநிலை பற்றிய சிந்தனை மட்டுமல்லாமல் இனம்சார்ந்த வளர்ச்சி பற்றிய சிந்தனையும் இருக்கிறது". ‘பாம்புச்சட்டை’ எனும் வீடு பற்றிய கதையில் பாலை சொல்கிறார். "குடியிருப்பு வாசிகளான பலரும் இந்தப் பெருச்சாளிக் குழியில் தான் கால்நூற்றாண்டு காலம் மலமிருந்து வருகிறார்கள் என்பது கூட தவறு, ஆசன வாயிலிருந்து மலம் எவ்வளவு கனத்திற்கு விழுகிறதோ அந்தளவுக்கு சப்தமும் மேலெழும்ப வேண்டும். இங்கேயும் நியூட்டனின் விதி மறைந்திருக்கவே செய்கிறது. இது போன்ற மூன்றாம் உலக நாடுகளில் கக்கூஸ்களில் மலமிருந்து பழக்கப்பட்டவர்கள் எதையும் ஜீரணம் செய்துவிட முடியாத மரண அவஸ்தையுடன் வயிற்றுடனே வாழ்ந்து வருகிறார்கள்". அநேகமாக பாலையின் எல்லாக் கதைகளிலும் ‘மலம்’ பிரதானமாக இடம் பெறுகிறது. இக்குறியீடு ஃப்ராய் எனும் குழந்தைப் பாலுமையின் மூன்று கட்டங்களான வாய்மோகம், குதமோகம், லிங்கக் கட்டம் ஆகியவற்றை நினைவு படுத்துகின்றது. அதோடு, "மலம் என்பது முழுமைக்கும் புறநிலை அல்ல அகநிலையின் ஓர் அங்கம். அதுவே ஒரு கட்டத்தில், புறநிலை ஆகிறது. அதாவது அகநிலையின் ஒரு பகுதியே புறநிலை ஆகிறது. (பக்கம் -31) அதனை ஒரு வலிமையான குறியீடாகப் பாலை கையாள்கிறார் - தனிநிலைக்கும், சமுகநிலைக்குமாய். இலக்கியத்திற்கும், உளவியலுக்கும் இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற யூங் - படைப்பாளி ஒரு புதிர் என்கிறார். தனியாள் நிலையிலும், தனியாளற்ற நிலையிலும் தொகுப்பு முழுவதும் இயங்கி இருக்கின்ற பாலையின் இக்கதைகளைப் படிக்கும் போது அவரது ‘ஆழ்மனத்தை’ நான் தேடி, அடைந்துவிட்டேன் என நம்பி, உங்களிடையே பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் இவை. ஆனால், அவனது ரகஸியம் என்னவென்று கடைசி வரை என்னால் அறிந்துவிட முடியாது - படைப்பாளியின் சிக்கலும், படைப்பின் மகத்துவமும் அதுதான். அவனது சொற்களிலேயே "ஒரு உளவியலானாலும், ஒரு கடவுளும், ஒரு குழந்தையையும், ஒரு சாத்தானும் சேர்ந்து எழுதிய கதைகள் இவை. அகிலமெல்லாம் பறந்து திரியும் புனைவின் ஓர் அந்தர நடனம் தான் அவனது நனவிலி மனம்" அந்த மனம் எழுதிய, நமது ஊனை, உயிரை ஊடறுத்துச் செல்லும் கதைகள் இவை. நவீனச் சிறுகதைப் பரப்பில் மிக முக்கியமானவை. புனைவின் வெளியில் பாத்திரங்களாகவே வருகின்ற பூனையும், பாம்பும், சிலுவையும், பறவையும் இவனை ஒரு ஆளுமையுள்ள படைப்பாளியாக அறிவிக்கின்றன. "மகிழ்ச்சியின் புனிதமான Wine" ஐப் பருக முடியாத, உப்பின் தடயமற்ற புளிப்பின் வாடையையுடைய கோப்பைகளை மட்டுமே அறிந்த சவங்களாகி விட்டோமோ எல்லாரும் எனும் அதி முக்கியமான கேள்வியை எழுப்புகிறது தலைப்புக் கதையான "எம்.ஜி & மார்க்ஸ்". ஆம், "நமது சொந்தப் பிணத்தைக் குளிரூட்டுவது அவ்வளவு சுலபமானதல்ல - ஆனால் பாலையின் கதைகளைப் படித்தபின் கொஞ்சம் சுரணையாவது வரவேண்டும் நமக்கு. ஆமென்! நாம் எல்லாருமே Hamlet, அல்லது ழயஅடநவ ஆக, அல்லது மாதாம் பொவாரியாக அல்லது ஜேனி ஸ்டார்க்ஸாக இருக்கலாம் என உணரவைத்தவை பாலையின் கதைகள். (கதைகளில் வருகின்ற சில வரிகள் சம தத்துவம் வாய்ந்தவை) MGR & Marx - முழுக்க தர்க்க ரீதியிலான இக்கதை - நாம் நம்புகின்ற எல்லாவிதமான கோப்புகளையும் கேள்விக்குள்ளாக்குகிறது. குற்ற உணர்விக் குள்ளாக்கப்படுகின்ற மனிதன் அதனை எதிர்கொள்கின்ற விதத்தைப் பேசுகிறது. * * * * *
No comment