பிரபஞ்சப் பால்வீதியின் துருவ நட்சத்திரம் – பேரறிஞர் அண்ணா!

பிரபஞ்சப் பால்வீதியின் துருவ நட்சத்திரம் - பேரறிஞர் அண்ணா!
பேரறிஞரும் - பிறநாட்டு அறிஞர்களும்!
- தமிழச்சி தங்கப்பாண்டியன்

உலகப் பரப்பிலே பல்வேறு சிறந்த மனிதர்கள் பிறந்திருக்கிறார்கள், வாழ்ந்திருக்கிறார்கள், மறைந்திருக்கிறார்கள்; ஆனால் பற்பலரும் சென்ற, அவர்தம் சுவடிலேயே பின்தொடர்ந்து சென்று, அவர்களின் அடியொற்றியே வாழ்ந்தவர்கள் யாவரும் பிறவித் தலைவர்களாகப் போற்றப்படவில்லை. தமக்கான ஒரு பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்டு, முதல் பயணம் தொடங்கியவர்களே உலகில் எல்லாவிதமான, முன்னோடியான பாதைகளுக்கும் வித்திட்டிருக்கிறார்கள். விஞ்ஞானிகளாகட்டும், மெய்ஞ்ஞானிகளாகட்டும், இலக்கியவாதிகளாகட்டும், முன்னோர்கள் விட்டுச்சென்ற தடத்தினை திரும்பிப் பார்த்து அவர்களிடமிருந்து செறிவான காலடிகளை எடுத்துக்கொண்டாலும், அதற்குப் பின்பு அவர்கள் தொடங்குகின்ற தனித்த பயணமே அவர்களை தனித்து நிற்கின்ற ஒற்றை நட்சத்திரமாக இந்தப் பால் வீதியிலே தக்கவைத்துள்ளது. அவ்வகையில், மேநாட்டு அறிஞர்கள் பலரையும் படித்து, கிரகித்து, அவர்களிடமிருந்த அரசியல், பொருளாதார, நிலவழிச் சிந்தனைகளை தனக்குள்ளே செரித்துக்கொண்டு, தனித்ததொரு தமிழ்த் திராவிட தேசியம் கண்ட பேரறிஞர் அண்ணா, இந்தப் பால் வீதியிலே தனிப்பெரும் துருவ நட்சத்திரமாய் இன்றளவும் இதயங்களில் இருக்கிறார்.

பேரறிஞராய்ப் பிறப்பதே அரிது, ஆனால் அரிதிலும் அரிது, அந்தப் பேரறிஞர் தமக்கென்று ஒரு தக்க வாரிசை ஈர்ப்பது.  நம்முடைய பேரறிஞர் அண்ணா, தம் கருத்துக்களால், ஒருவரை, இருவரை அல்ல, லட்சோப லட்சம் தம்பிகளைக் கவர்ந்திழுத்து, ஒப்பற்ற இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவியவர். தத்துவார்த்த ரீதியாகவும், சிந்தனா ரீதியாகவும், பகுத்தறிவுவாதியாகவும், புதிய புதிய சொல்லாடல்களை தமிழிலே புகுத்துவதற்கு பேரறிஞருடைய கற்பனாசக்தியும், சிந்தனாசக்தியும் ஒரு காரணம் என்றாலும், அதற்கு அடித்தளமாக அமைந்தது அவருடைய பரந்த படிப்பாற்றல்தான்.

அடுக்கடுக்காக பிற நாட்டு அறிஞர்களுடைய பெயர்களைக் குறிப்பிட்டு, நம்முடைய தமிழகத்திலே மண்டியிருந்த வைதீகத்தின் அழுக்கையும், மௌடீகத்தின் போக்கையும் சாடுகின்றபோது அண்ணா, “விசித்திர வைதீகர்களை வீதி சிரிக்கச்செய்தார் சாக்ரடீஸ்! வைதீகத்தின் மடமையை விரட்டினார் வால்டேர்! மக்கள் மன்றத்திற்கு மதிப்புத் தரவேண்டும் என்று வாதாடினார் ரூசோ! வேத புத்தகத்தை விற்று விபச்சார விடுதிக்கு பணம் தரும் போக்கினைக் கண்டித்தார் விக்லிப்! ஆண்டவன் பெயரால் நடக்கும் அட்டூழியங்களை அம்பலப்படுத்தினார் மார்ட்டின் லூதர்! சீனரின் சிறுமதியைப் போக்க பாடுபட்டார் சன்யாட்சன்! துருக்கியின் மதி தேய்வதைத் தடுத்தார் கமால் பாட்சா! மதத்தின் பெயரால் மக்களை வதைப்பதை எதிர்த்தான் இங்கர்சால்! பேதமையைப் போக்கும் பணியை மேற்கொண்டார் பெர்னாட்ஷா! பொருளாதார ஏற்றத்தாழ்வை அடித்து நொறுக்கி பொதுவுடைமை கண்டான் காரல் மார்க்ஸ்” என எழுதுகின்றார்! அதுகாறும் பஜனையையும், புராண கதாபாத்திரங்களின் பெயர்களையும், இன்ன இன்ன கடவுள்களை பூஜித்தால் இன்ன இன்ன பலன்களைத் தரும் என்ற அளவிலே அறியப்படும் கடவுளர்களின் பெயர்களை மட்டுமே தெரிந்து வைத்திருந்த, பொதுமையாக இருந்த ஒரு தமிழ்ச் சமூகத்திற்கு, இத்தனை பெயர்களையும், தான் பேசுகின்ற மேடைகளிலே கொண்டு, சேர்த்து, அறிமுகப்படுத்திய அபாரத் துணிச்சல் பேரறிஞருக்கு இருந்தது. இத்தனை அறிஞர்களை அவர் அடுக்கடுக்காக சொல்வதற்குக் காரணம் என்ன? தூங்கிக் கிடந்த தமிழகம் எழும்பவேண்டும், 3500 ஆண்டு பாரம்பரியமிக்க, நீண்ட நெடிய கலை, இலக்கியப் பண்பாட்டினைக் கொண்ட தமிழினம் தன்னுடைய பெருமையை மீண்டும் உணரவேண்டும் என்பதற்காகத்தான்!. மேநாட்டவர்க்கு நிகராக இருந்தவன்தான் தமிழன். கங்கையிலும், கடாரத்திலும் புலிக்கொடியை நாட்டிவிட்டு, ரோம் நாட்டிற்கே பொன்னாடை விற்றவன் தமிழன் என்பதை சொல்லித்தான், பிற நாட்டு அறிஞர்களையும் பிற்பாடு மேற்கோள் காட்டுவார், பேரறிஞர்.  
நாகரிகத்திலும், அறிவியல் தர்க்கத்திலும் சிறந்து விளங்கிய, கிரேக்கத்திலே தோன்றிய முதல் பேரறிஞர் பெரிக்கிலிஸின் பேச்சாற்றலையும், சாக்ரடீசின் உரையாடல் முறையையும் பின்பற்றியவர் பேரறிஞர். “திருவாவடுதுறை தம்பிரானுக்கு பத்து விரலிலும் மின்னும் வைர மோதிரம் ஏன்? கையில் கமண்டலம் ஏன்? காதில் குண்டலம் ஏன்? குண்டலத்தின் நடுவே தங்கம் ஜொலிப்பதேன்? பக்கத்தில் பாடும் குயில்கள் ஏன்? ஆடும் மயில்கள் ஏன்? இதுவா துறவறம்?” என்று கேட்டு தமிழகத்து மேடைகளிலே இம்முறையை அறிமுகப்படுத்தியவர் `திராவிட டெமஸ்தனீஸ்’ என்று அழைக்கப்படுகின்ற பேரறிஞர். கிமு 354லேயே, தன்னுடைய முப்பதாவது வயதில் டெமஸ்தனீஸ் ஆற்றிய முதல் சொற்பொழிவு, அவன் அரசியல் உலகின் அரிமா என்று  போற்றப்பட்ட அளவிற்கு இருந்தது.  பேரறிஞருடைய முதல் சொற்பொழிவே அவரை அரசியல் அரங்கத்தின் அரிமா என்று உலகிற்கு அறிவித்தது.

1961ல் நேருவின் முன்னிலையில் - தான் சார்ந்திருந்த திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தி, அவருக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்துப் பேசிய அண்ணாவின் பேச்சு, சீசருக்கு எதிராகப் பேசிய சிசரோவின் பேச்சோடு இன்றென்றைக்கும் ஒப்புமை வைத்து பார்க்கக்தக்க அளவிற்கு பெருமையுடையது. “வயலிலே ஏர் பிடித்து உழும் உழவுத் தொழிலாளி திராவிடன்; இயந்திரங்களின் நடுவே உழன்று வேலை செய்பவன் திராவிடன்; கூலி வேலை செய்பவன் திராவிடன்; குப்பை கூட்டும் குப்பன் ஒரு திராவிடன்; மூட்டை சுமப்பவன், வண்டி இழுப்பவன் திராவிடனே; வாழ வீடு கட்டுபவன் திராவிடன்; காடுகளிலே கட்டை பிளப்பவன், பிளந்த கட்டைகளைச் சீவிக் கட்டிலும் மேசையும் நாற்காலியும் செய்பவன் திராவிடன்’’ என்று முழங்கிய அண்ணாவினுடைய வானொலிப் பேச்சையும், மேடைப் பேச்சையும் கேட்டு அன்றைய தமிழகத்திலே கணக்கற்ற பேச்சாளர்கள் உருவானார்கள். 

இங்கிலாந்தின் தலைசிறந்த நாவலராக சொல்லப்படும் எட்மண்ட் பர்க்கிற்கும், அண்ணாவிற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. சொல்வன்மை தவிர, எட்மன்ட் பர்க்கை சந்திக்கின்ற யாருமே இவர் ஒரு வித்தியாசமான தலைசிறந்த மனிதர் என்று சொல்லுவார்களாம். அண்ணாவோடு உறவாடிய பலரும், he is an extraordinary man என்று வியந்து சொல்லியிருப்பதை நாம் சரித்திரத்தின் பக்கங்களில் காண்கின்றோம். அதுபோல, புறத்தோற்றத்திலும் இருவருமே ஆர்வமில்லாதவர்கள். வேட்டியினுடைய அந்த முனை நேர்மாறாக இருப்பதைக்கூட கவனித்துக்கொள்ளாமல், அண்ணா கலைந்த தலையோடு காட்சி தருவார். எட்மன்ட் பர்க் 1766ல் இங்கிலாந்து நாடாளுமன்றத்திலே ஆற்றிய கன்னி உரைதான் அவரை உலகின் மிகப்பெரிய வித்தகராகவும், அரசியல் சொற்பொழிவாளராகவும் உயர்த்தியது. 1957ல் சட்டப்பேரவையிலே அண்ணா ஆற்றிய அந்த கன்னி உரைதான் அவரையும், உலகத்தின் அரங்கிலே வெளிச்சம் போட்டுக் காட்டியது.

உலகத்தையே புரட்டிப்போட்ட பிரன்ச்சு புரட்சிக்கு மூலகாரணமாகவும், ஆதாரமாகவும் இருந்தவர், தத்துவ சிந்தனாவாதியாக வாழ்ந்த வால்டேர். பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கு எதிரானவை அவருடைய எழுத்தும், பேச்சும். வால்டேரின் அந்த புரட்சிகரமான பாணியைப் பின்பற்றி அண்ணா எழுதுகின்றார், ``வியாழனன்று தேவ குருவை பூஜிக்க கல்வி வளரும், வெள்ளியன்று லஷ்மியைப் பூஜிக்க தனம் பெருகும், சனியன்று சனி பகவானைத் தொழ பீடைகள் ஒழியும்;  மறக்க வேண்டாம் - அந்தப் `பொதுவிதி’, பிராமணர்களுக்கு தானங்கள் செய்துவிட்டு, அவர்களைக்கொண்டு நடத்தினால்தான் பலன் உண்டு எனும் விதி, இத்தனையும் இருந்தால் கோமளம் ஏன் குதூகலமாக இருக்கமாட்டாள்? குமுதினி ஏன் வீணை வாசிக்கமாட்டாள்?’’ என்று.  இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து இயங்கிய இத்தாலியின் கரிபால்டியும், பொதுவுடைமைத் தத்துவம் மலர்ந்த செஞ்சீனமாக சீனாவை மாற்றிய சன்-யாட்-சன்னும் இளைஞர்களின் பேராதரவைப்பெற்ற துருக்கியின் கமால் பாட்சாவும், அண்ணாவுடன் ஒப்பு நோக்கத் தக்கவர்களே. 

உலக வரலாற்றினைக் கூர்ந்து அவதானித்து, எந்தெந்தத் தலைவர்கள் எப்படிப்பட்ட மக்கள் மையங்களை தேர்ந்தெடுத்து அதன் மூலமாக தங்களுடைய புரட்சிகரமான எண்ணங்களை இயக்குகிறார்கள், வெற்றிபெறுகிறார்கள் என்பதைக் கவனித்து வந்திருக்கின்ற பேரறிஞர், அமெரிக்காவின் மிகச் சிறந்த சொற்பொழிவாளர் வெப்ஸ்டருடனும் ஒப்புநோக்கத்தக்கவர். ஜான் ஆடம்ஸ், தாமஸ் ஜபர்சன் ஆகிய அமெரிக்காவின் முதலாம், இரண்டாம் அதிபர்களை குறித்து, வெப்ஸ்டருடைய இரங்கல் உரை என்பது மிகப் புகழ் பெற்ற இரங்கல் உரை. காந்தி சுடப்பட்டு இறந்தபொழுது,  பேரறிஞர் எழுதிய உரையும், பட்டுக்கோட்டை அழகிரியைப்பற்றி எழுதிய இரங்கல் உரையும் இன்றளவும் சிறப்பாகப் பேசப்படுபவை.

லிங்கனும், அண்ணாவும் கிட்டத்தட்ட இரு பிறவிகள் என்று சொல்லுகின்ற அளவிற்கு இருவருடைய வாழ்க்கையிலேயும் ஒற்றுமை இருக்கின்றன. 1809ல் பிறந்தவர் லிங்கன். 1909ல் பிறந்தவர் அண்ணா. லிங்கனும் ஏழைக் குடும்பத்திலே பிறந்தவர், அண்ணாவும் ஒரு எளிய குடும்பத்திலே பிறந்தவர். லிங்கன் இரவு முழுவதும் கண் விழித்துப் படிப்பவர், விடிய விடிய புத்தகங்களூடேயே வாழ்க்கையை நடத்தியவர் நம்முடைய பேரறிஞர். கிட்டத்தட்ட ஐம்பது மைல் சுற்றளவிலே அவர் படித்து முடித்திராத புத்தகங்களே இல்லை என்னும் அளவிற்கு லிங்கன் புத்தகங்களைக் கரைத்துப் குடித்திருந்தார். பல்லாயிரக்கணக்கான நூல்களை அடக்கிய கன்னிமாரா நூலகத்தில் அத்தனையையும் கரைத்துக் குடித்திருந்தார் பேரறிஞர். சற்றேனும் ஆடம்பரம் இல்லாதவர் லிங்கன், அடக்கத்தின் மறுஉருவம் அண்ணா. சினம் சிறிதும் அண்டாதவர் லிங்கன், ஆத்திரப்பட்டுப் பார்த்ததே இல்லை என்று இராணி அம்மையார் முதற்கொண்டு உடன்பிறப்புக்கள் அனைவரும் சொல்லக்கூடிய அளவிற்கு தன்னுடைய அந்த ஆளுமையை, தன்னுடைய கட்டுக்குள் எப்பொழுதும் வைத்திருந்தவர் அண்ணா. மிக வினோதமான ஒற்றுமை என்னவென்றால், இருவருமே தாங்கள் போட்டியிட்ட முதல் தேர்தலிலே தோல்வியைத் தழுவியவர்கள். இல்லியனாஸ் என்கின்ற மாவட்டத்திலே தோற்றவர் லிங்கன். முதன்முதலாகப் போட்டியிட்ட மாநகராட்சி பெத்தநாயக்கன் பேட்டையிலே போட்டியிட்டு தோல்வியை தழுவியவர் பேரறிஞர். 1863ல் லிங்கன் ஆற்றிய `கெட்டிஸ்பர்க் உரை’ என்பது இன்றளவும் வரலாற்றிலே ஒரு மறக்கமுடியாத உரையாக பொறிக்கப்பட்டிருக்கின்றது. லிங்கன் 267 சிறு சிறு ஆங்கில வார்த்தைகளில் அவ்வுரையை தயாரித்திருந்தார். அந்த உரைதான் இன்றளவும் உலகச் சொற்பொழிவுகளிலே தலையானதாக வைக்கப்பட்டு போற்றப்படுகின்றது. கெட்டிஸ்பர்க் தோல்வியிலிருந்து அமெரிக்க இனம் மீண்டு வரவேண்டும் என்பதை உணர்வுபூர்வமாக ஆற்றிய லிங்கனின் சொற்பொழிவுக்கு இணையாக, அண்ணா பற்பல சொற்பொழிவுகளை பல்வேறு காலகட்டங்களில் தமிழகத்திலே நிகழ்த்தியிருக்கின்றார். மிக முக்கியமாக இருவருக்கும் கொள்கை ரீதியிலே ஒரு ஒற்றுமை உண்டு. தனி மனித நலனைவிட பொது நலனே முக்கியமானது என்பதை இருவருமே உணர்த்தியவர்கள். வேட்டு முறையைவிட ஓட்டு முறை சிறந்தது என்ற அண்ணா, அதனை “The ballot is stronger than bullet” என்று சொன்ன லிங்கனின் வார்த்தைகளிலிருந்துதான் கையாண்டார். 
கடவுள், மதம், சமுதாயம் இவற்றைப்பற்றி பலவகையான புரட்சிகரமான கருத்துக்களை சொன்ன இங்கர்சாலுடனும் ``கடவுள் இல்லை என்றோ, கடவுள் இருக்கிறார் என்றோ நான் கூறவில்லை - அறிவோடு, ஆற்றலோடு கூடிய ஆபாசமற்ற கடவுள் நமக்கு இருக்கவில்லை என்றுதான் கூறுகின்றேன்’’ என்று சொன்ன அண்ணாவை ஒப்பிடலாம். 

முதலாளித்துவத்திற்கு எதிரான ஒன்றாக, ரஷ்யா மட்டுமல்ல, உலகமெங்கும்  பாட்டாளியினுடைய கொடி பறக்கவேண்டும் என்று நம்பியவர் ரஷ்யாவின் லெனின். இதே கருத்தைத்தான் தமிழகத்தில் முன்வைத்து, எப்பொழுதும் உழைக்கின்ற மக்களுக்காகவும், அதுகாறும் ஆதிக்கம் செலுத்திய மேல் சாதியினுடைய ஆதிக்கத்தை ஒடுக்கி, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கடைசிவரை, தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதற்குமே சேர்த்து குரல் கொடுத்தவர்தான் பேரறிஞர் அண்ணா. இருவருமே பொருளாதார, மெய்ப்பொருள் சொற்களை உருவாக்கி புதிதாக அதனை பேச்சு வழக்கிலே கொண்டுவந்தவர்கள். இருவருமே இளமைக் காலத்திலே பாடத்தை ஒழுங்காகப் படித்து வகுப்பிலே முதல் மாணவனாக வந்தவர்கள். லெனின் எப்பொழுதும் சொல்வார், `நமது ஆயுதம், அறிவு, ஆற்றல் என்பதுதான்’. அண்ணாவும் நம்மிடத்தே எப்பொழுதும், குறிப்பாக இளைஞர்களிடத்தில் அறிவையும், அது தருகின்ற ஆயுதத்தையுமே வலியுறுத்திப் பேசியவர். லெனின்தான் நமது ஆயுதம், நமது அறிவு, நமது ஆற்றல் என்று கொண்டாடினார்கள் ரஷ்யர்கள். அண்ணாதான் நம்முடைய தளபதி, அண்ணாதான் நம்முடைய தலைவர், பாசமிகு அண்ணா, பேரறிஞர் அண்ணா என்று போற்றிக் கொண்டாடியது தமிழகம். ருஷ்ய மொழியை மேடைப் பேச்சிற்கும், கொள்கைப் பரப்பிற்கும் ஏற்ற ஒரு மொழியில் உருவாக்கி பயன்படுத்தியவர் லெனின்.  ருஷ்ய மொழியிலேயே ஒரு அகராதியை உருவாக்கிய பெருமையும் லெனினுக்கு உண்டு. அதே வழியிலேதான் அண்ணாவும், தனக்கான ஒரு நடையை உருவாக்கிக் கொண்டவர். 

அண்ணாவினுடைய நாடகங்கள் மிகப்பெரிய சமூக மாற்றத்தை உருவாக்கிய கருவிகள்.  கிண்டல் தொனியோடு, சமூகத்திலே புரையோடியிருந்த  அவலங்களை ஒரு அங்கதச் சுவையோடு வெளிப்படுத்திய அண்ணாவை குறித்து பாரதிதாசன் ``புத்தெழுச்சியை, புதிய போக்கை, புதிய வாழ்வை, புதிய சிந்தனையை, புதிய புதிய சொற்களை கொண்டவை அண்ணாவின் நாடகங்கள். நோக்கிலும், போக்கிலும் அவை மோலியர் போன்றோரின் நாடகங்களைக் காட்டிலும் சிறந்தவை’’ என்கிறார். கல்கி அவர்களால், `தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று புகழப்பட்ட அண்ணா, கேல்ஸ்வொர்த்தோடும் இப்ஸனோடும் இணையாக வைத்துப் பார்க்கக்கூடிய நாடகங்களை எழுதியவர். 

அண்ணாவினுடைய அரசியல் முன்னோடி, தத்தவ முன்னோடிகள் பலர் இருந்தாலும், சிந்தனாபூர்வமாக - இனவழிச் சிந்தனை, நிலவழிச் சிந்தனை, பொருளாதாரச் சிந்தனை ஆகிய மூன்றிற்கும் அவர் தன்னுடைய முன்னோடியாக எடுத்துக்கொண்டது ஹெரால்ட் லாஸ்கி என்கின்ற இங்கிலாந்து நாட்டு அரசியல் நிபுணருடைய புத்தகங்களையும், அவருடைய கருத்துக்களையும்தான். இங்கிலாந்து நாட்டின் தொழிற்சங்கத் தலைவராக இருந்த லாஸ்கி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், யேல் பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்த மிகச் சிறப்பிற்குரிய ஒரு பேராசிரியர். அவருடைய தனிச்சிறப்பு என்னவென்றால் - வரிசைக்கிரமமாக, தர்க்கரீதியாகக் கருத்துக்களைத் தொகுத்துக்கொண்டு, பின்னர் எதிராளியை எதிர்கொள்வது என்பதாகும். அண்ணாவும் தன்னுடைய பேச்சு நடையிலும், உரைநடையிலும் இந்த ஒரு கருத்தாக்க முறையையே பயன்படுத்தினார்.

மிக முக்கியமாக அவர் ஹெரால்ட் லாஸ்கியிடமிருந்து எடுத்துக்கொண்ட கருத்து “சமத்துவம் என்பது எல்லோரையும் ஒரே விதமாக நடத்துவது அல்ல, எல்லோருக்கும் சம வாய்ப்பு தருவதாகும். Equality is not identity of treatment, but affording equal opportunity for all” என்பதுதான். சமூக நீதிக்கான முதல் வித்தாக, இதனை எடுத்துக்கொண்ட அண்ணாவை, இலக்கிய ரீதியாக டால்ஸ்டாயுடன் ஒப்பிடலாம்; எமிலி ஜோலாவோடு ஒப்பிடலாம்; பகுத்தறிவுக் கருத்துக்களுக்காக ரஸ்ஸலோடு ஒப்பிடலாம். ஆனால் அவர்களிடத்திலே எடுத்துக்கொண்ட, கற்றுக்கொண்ட எதனையும் அப்படியே கிளிப்பிள்ளை சொல்லுவதைப் போல ஒருக்காலும் திருப்பித்தந்தவர் இல்லை பேரறிஞர். அதனை நம்முடைய நிலப்பரப்பிற்கு, நம்முடைய இனத்திற்கு ஏற்றவாறு, நமக்கான ஒரு தளத்திலே, புதுமையான கருத்துக்களைப் புகுத்தி, தன்னுடைய கருத்துக்களையும் இணைத்துத் தந்தவர் தான் பேரறிஞர்.  

Robert Frost-இன், 
“Two roads diverged in a wood
I took the one less travelled by
And that has made the difference” என்ற கூற்றின்படி, 
பற்பல அறிஞர்கள், அரசியல் மேதைகள், இலக்கியவாதிகள் சென்ற தடங்களைப் பேரறிஞர் கற்றுத் தேர்ந்திருப்பினும், 
தனக்கென முத்திரை பதித்த ஒரு பாதையினைச் செதுக்கிப், பயணம் மேற்கொண்டவர் அவர். 

நமது ஐந்து விரல்களையும், பிற நாட்டு விரல்களோடும், கைகளோடும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆனால் நமக்கான ரேகை என்பதும், உள்ளங்கை என்பதும் மிகப் பிரத்யேகமானது, மிகமிக வித்தியாசமானது, தனித்தன்மை வாய்ந்தது.  அண்ணாவினுடைய கரங்களும் அப்படித்தான். ஆகவே, அவரை எத்தனைதான் நாம் பிற நாட்டு அறிஞர்களோடு ஒப்பிட்டு நோக்கினாலும், வரலாற்றிலே பதியப்பட்ட அவருக்கான இடம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. 

நேரு ஒரு முறை சொன்னார், ``அது ஒரு அழகான கரம், மென்மையும், வன்மையும், அழகும் நிறைந்த கரம், அதனை நான் தினமும் காலையில் எழுந்தவுடன் பார்ப்பேன், அது எனக்கு மிகவும் வலுவூட்டுகின்றது’’ என்று!. அந்தக் கரம் பித்தளையினால் செய்யப்பட்டு அவருடைய மேஜையிலே அணிகலனாக வைக்கப்பட்டிருந்த லிங்கனுடைய கரம்தான். தமிழக மக்களுக்கும், எனக்கும் எப்பொழுதும் வலிமையூட்டிக்கொண்டும், வலுவூட்டிக்கொண்டும் இருக்கின்ற, ஒப்பற்ற கரமாகிய, தலைவர் கலைஞர் அவர்களை, தமிழினத்தின் தலைமகனாக, தமிழகத்தின் வழிகாட்டியாக, நமக்கு விட்டுச் சென்றிருக்கின்ற, பேரறிஞரை அவரது இந்த நூற்றாண்டு விழாவில் பெருமையோடு நினைவு கூர்வோம்! 

* * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *