Out of suffering have emerged the strongest souls;

the most massive characters are seared with scars.

 Khalil Gibran

வினோதங்களின் கலவையாக வியாபித்து இருக்கக் கூடியவர்களே கவிஞர்கள். அவர்களை எந்தச் சட்டதிட்டங்களுக்குள்ளும் கொண்டு வர முடியாது. அவர்கள் விவரிக்க முடியாத சுதந்திர வெளிகளை யாசிக்கக் கூடியவர்கள். இந்த மாறுபட்ட மனநிலைகளே, சாதாரண மனிதர்களிடமிருந்து கவிஞர்களையும் படைப்பாளிகளையும் வித்தியாசப்படுத்துகிறது.

கவிதைகள் எப்படி உருவாகும்? எந்த விதத்தில் உருவாகும்? எப்போது உருவாகும் என்றெல்லாம் யாரொருவராலும் கண்டு சொல்ல இயலாது. ஒரு நல்ல கவிதை, தான் உருவாகத் தனக்கான சூழ்நிலையைத் தானே உருவாக்கிக் கொள்ளும். அப்போது, கவிஞன் அந்தக் கவிதையை உருவாக்குகின்ற கருவியாக இருந்தாலே போதும்.

ஒரு மரத்தின் இலைகளைப் போல கவிதை இயல்பாக வரவில்லை என்றால், அது வராமல் இருப்பது நல்லது என்கிறார் ஜான் கீட்ஸ். தன்னியல்பில் தோன்றாத கவிதைகள் காலத்தின் பேரோட்டத்தில் காணாமல் போய்விடும். தன்னெழுச்சியையும், தன்னூக்கத்தையும் கொண்டிராத படைப்பாக்கங்கள் மங்கி மரணித்துப் போய் விடுகின்றன. சாதாரண அன்றாடத் தருணங்களில் தனக்கான கைப்பிடி மண், கையளவு வானம், ஒரு குவளை நீர் – இவற்றைக் கண்டடையும் அற்புதக் கவிஞன் எனதன்பு கிருபா.

அன்பின் தூய்மையோடு வாழ்ந்தவரே கிருபா. ஆயிரக்கணக்கான நட்பின் கால்களால் நடைபோட்டவர். மங்கிய மஞ்சள் நிற புன்னகைக்குச் சொந்தக்காரர். தன்னைச் சுற்றி நடக்கும் அபூர்ப கணங்களுக்குச் சொல்தானம் செய்து கவிதை எனும் அசாத்தியங்களைச் சாத்தியமாக்கியவர். சாதாரணங்களும், இரக்கக்குணமும் இரண்டறக் கலந்த இயல்புக்காரர். கிருபாவை நினைக்கும்  போதெல்லாம் ஆங்கிலக் கவிஞன் ஜார்ஜ் கோர்டன் பைரன் நினைவுக்கு வந்து போகிறான்.

இளம் பிராயத்தில் இருந்தே கூர்மையான சிந்தனையும், இரக்க குணமும் கொண்டவர் பைரன். ஒருமுறை அவருடைய நண்பனை அவனை விடப் பெரிய சிறுவன் ஒருவன் போட்டு அடித்துத் துன்புறுத்திக் கொண்டிருந்தான். சுற்றியிருந்த மற்றவர்கள் அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். அப்போது அங்கு வந்து இதனைப் பார்த்த பைரன் , “நீ அவனை இன்னும் எத்தனை அடி அடிக்கப்போற?” என்று கேட்டார்.

இப்படியொரு கேள்வியை எதிர்பார்க்காத அவன் ஆச்சரியத்தோடும் திகைப்போடும் “ஏன் கேக்குற?” என்று கேட்டான்.” இல்லை! நீ அவனை அடிக்கின்ற அடில பாதி அடிய நான் வாங்கிக்கிறேன்… தயவு செஞ்சி அவன விட்டுடு!” என்று பைரன் மன்றாடினாராம். அதற்குப் பிறகு அடித்துக்கொண்டிருந்தவன் என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ந்துபோய், மேற்கொண்டு அவனை அடிக்காமல்  அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டானாம். அப்படித்தான் பிறர் துயர் கண்டு துடிக்கும் கிருபா கோயம்பேட்டில் அந்த வடநாட்டு சகோதரரைக் காப்பாற்றச் சென்று காவல்துறையில் சிக்கிக் கொண்ட சம்பவத்தைப் பார்க்கின்றேன்.

மேலும், பைரன் விலங்குகளிடமும் அதீத அன்பு கொண்டிருந்தார். அவர் வளர்த்த நாய் ஒன்று இறந்தபோது “நான் செத்தால் இதன் பக்கத்திலேயே புதையுங்கள்” என்றாராம். தன் கல்லூரிக் காலத்தில் நாய் வளர்க்க அனுமதி மறுக்கப்பட்டதால் கரடி வளர்த்துப் புரட்சி செய்தவரே பைரன் ஆவார். இப்படி வெகுசன எண்ணவோட்டத்திலிருந்து தன்னியல்பில் வாழ்ந்தவரே கிருபா. அவரின் கவிதைகள் அபூர்வ கணங்களின் உயிர் சாட்சிகளே!

இரவு என்பது உறங்குவதற்கு மட்டுமே என்று நாம் கருதிக் கொண்டிருக்கின்றோம். மறுநாளை மலரச் செய்வதற்கு பார்க்கப்படும் கரும் ஒத்திகை நேரமாகவே இதனைப் பார்க்கப் பழகியிருக்கின்றோம். இரவைப் பற்றி நம்மிடம் எந்த ஒரு பெரிய கருத்தாடல்களும், பெரிதான சிந்தனைகளும் ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால், கிருபாவின் இரவு வண்ணமயமானது.

கருமையின் அருமை உணராமல்

ஓர் இரவை விருந்துக்கு

அழைக்க முடியாது.

அந்த இரவையே ஒரு விருந்துக்கு அழைக்கும் கிருபாவின் மேல் இரவு பெருங் காதல் கொள்ளாமல் இருக்குமா? நாம் எதையெல்லாம் பொருட்படுத்தாமல் கடந்து செல்கின்றோமோ அவற்றைப் பாடுபொருளாக்கி அதில் அபாரமான வரிகளைத் தருவதே கிருபாவின் வித்தகமாகும். மழை பிடிக்காத மனிதர்கள் யாருமில்லைதானே? அதை மீண்டுமொரு முறை, தன் கவிதையில் நிரூபணம் செய்கிறார்.

அழகான மேகம்

மழையாகும் நேரம்

நனையாத யாரும்

அழகில்லையே!

மழை, மேகம், நனைதல் ஆகியவை எல்லோரும் அறிந்த சொற்கள் தாம். ஆனால், கிருபாவிற்கு இவை வெவ்வேறான அனுபவ வார்த்தைகள்! தன் வாழ்வு குறித்து அவரிடம் ஆயிரமாயிரம் கேள்விகள் குவிந்து கிடக்கின்றன. அது குறித்த குற்ற உணர்ச்சிகளும் அவர் வாழ்ந்த நாட்களில் கிருபாவை அலைக்கழித்திருக்கின்றன. அதன் வெளிப்பாடாகவே, பின்வரும் இந்தக் கவிதை பின்னப்பட்டுள்ளது.

நான் செய்வதற்கும்

என்னால் செய்யப்படுவதற்கும்

இன்னும் ஒரே ஒரு குற்றம்தான் மீதமிருக்கிறது.

முன் செய்த குற்றங்கள் என்னென்ன என்பதற்கான பட்டியல் இட்டாலும் கோபிக்க முடியாத பேரன்புக்காரன் அல்லவா கிருபா?

அழகியலும், படிமமும், நவீனத்துவமும், கவித்துவமும் சரி விகிதத்தில் கலந்து உருவாக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் கவிதையைப் பாருங்கள் –

ஒளி ஒரு தாளம்

சக்தியின் கூத்தில்

இருள் ஒரு ராகம்

இரண்டும் புணர்ந்து

பெற்றெடுத்ததுதான்

காலம்

இவைகளைப் பின்னிக் கொண்டிருக்கிறது

நேரம்

தத்துவ விசாரங்களும் மொழியின் சூட்சுமங்களும் கவிஞனின் மன அந்தரங்கங்களும் பின்னிப் பிணைந்து உருவாகியுள்ள செம்மைக் கவிதை இது!

கிருபாவின் வாழ்க்கை தடங்களில் எத்தனையோ ஏமாற்றங்கள், தவிப்புகள், தடுமாற்றங்களும் நிரம்பி வழிந்தாலும் அவருடைய கவிதைகளில் அந்த அலுப்பு ஒருபோதும் தெரிந்ததில்லை. தன்னுடைய அனைத்துச் சிரமங்களையும் கவிதைகளில் பொலிவாக மாற்றிக் காட்டி விடுவார். இந்தக் கவிதையில் தன் குறைகள் தோய்ந்த வாழ்க்கையைத் தோகை போர்த்தி காட்டுகிறார் –

சூரியனின் கண்களில்

ஒளிர்ந்த அலுப்பு

சலிப்பூட்டவில்லை

எனக்கும்

என் பாலைவனத்துக்கும்

எனத் தன் வாழ்க்கைப்பாட்டை கிருபாவால் மட்டும் மிகையின்றிக் கவிதையாக்க முடியும்!

‘சொற்களில் இருந்து அர்த்தங்கள் மெளனத்திற்குத் திரும்பும் வழி இது’ என்று எழுதியுள்ள கிருபாவின் வரிகளில் மட்டுமே அடங்கியிருக்கிறது அவருடைய சொற்களுக்கான அர்த்தம்.

வாழ்வில் எத்தனையோ மேடு பள்ளங்களையும் புதைகுழிகளையும் கடந்து வந்த கிருபா இன்று நம்மிடையே இல்லை. தயக்கங்களும் வெள்ளந்தித்தனங்களும் இரண்டறக் கலந்த கிருபாவைப் போலவே அவருடைய கவிதைகளும் மிக எளிமையானதாக, அதே சமயம் நவீனத்தின் புத்தொளிகளையும் கொண்டவை. சாதாரண மனிதர்களுக்குத் தட்டுப்படாத ஒரு மாறுபட்ட வாழ்வியல் சூழலைக் கொண்டிருக்கக்கூடிய மனிதர்களுக்கு மட்டுமே தட்டுப்படுகின்ற அரிய தருணங்கள் கிருபாவிற்கு மட்டுமே கையளிக்கப்பட்டவை. கிருபாவின் கையெழுத்தில் இவற்றைப் பார்க்கும் போது, சிறு விம்மலோ, கேவலோ இல்லாமல் அவற்றை எப்படிக் கடக்க?

கிருபாவின் கையெழுத்துகளைப் பார்க்கிற போது பழுப்பு நிறம் தோய்ந்த அவருடைய மிகச் சன்னமான புன்னகையே மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறது. ரூபமாக அவனில்லை இப்போது. ‘தமிழச்சி நான் இங்க இருக்கேன்’ என நள்ளிரவில் தொலைபேசும் அவனது குரலும், சிரிப்பும் அழிவற்ற நினைவின் பெருஞ்சாபமும், வரமும் எனக்கு.

பாதசாரிகளுக்குச் சொந்தமில்லை

பாதச்சுவடுகள்

மணல் புயல் வீசியோய்ந்த

பாலைவனத்தில்

அழியாமல் பாதச்சுவடுகள்

எனும் கவிதையில் நிலைகுத்தி நிற்கிறேன் – அவன் பாதம் பதிந்த, சுற்றித் திரிந்த, வசித்த இடங்கள் அனைத்தையும் அறிந்தவள் அல்ல நான். ஆனால், அவனது கட்டற்ற அன்பின் சுவடை அறிந்தவள் – அதனாலாயே இக் கவிதைகளை விட்டு இன்னமும் கரையேறாதவள்!

* * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *