புதிதாய்ப் பிறப்போம் - ஈரோடு புத்தக கண்காட்சி பேச்சு புத்தக திருவிழாவின் நோக்கம் : சடங்காகவோ, சம்பிரதாயமாகவோ இல்லாமல், சமுதாய நோக்கில் மட்டுமே முழுவதுமாக நடத்தப்படும் இத்திருவிழாவில் நானும் உள மகிழ்ச்சியோடு பங்கேற்கிறேன். "நீரில் விளையும் நெற்கதிர்கள் சொர்க்கத்தின் விளைச்சல்கள் - நீங்கள் அவற்றை நேரிடையாக அறுவடை செய்யமுடியாது என்பார்கள்" ஆனால் சொர்க்கத்தை நீங்கள் நேரிடையாக அறுவடை செய்யலாம் - புத்தகங்களின் மூலம். ‘எங்கெல்லாம் அநீதி நடக்கின்றதோ, அங்கெல்லாம் என்னுடைய புத்தகங்கள் சென்று மானுடத்தின் மனசாட்சியைத் தட்ட வேண்டும்’ என்றார் Oscar Wilde எனும் புகழ்பெற்ற எழுத்தாளர். "ஒவ்வொரு புத்தகம் திறக்கப்படும் போதும், ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது" என்பதும் நாம் அறிந்ததே. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு புத்தகம் உங்களை அப்படியே புரட்டிப் போட்டு, அதுவரை இருந்த உங்களைக் கலைத்துப் போட்டுப், புத்தம் புதிதாய்ப் பிறக்க வைக்கலாம். Abraham Lincoln, Pandit Nehru, Nepolean, Cheguvera எனப் பலரும் புத்தகங்களோடு உண்டு, உறங்கிப் புதிதாய்ப் பிறந்தவர்கள்தான். இப்புத்தகத் திருவிழாவின் ஒரு நோக்கமாக இளைய தலைமுறையினருக்கு கடந்தகாலப் பெருமிதத்தையும், நிகழ்கால நிகழ்வுகள் குறித்த கவலையும் எதிர்காலம் பற்றிய கனவுகளையும், உருவாக்குவது என்று மக்கள் சிந்தனைப் பேரவை கூறிவுள்ளது. தமிழர்களாகிய நமது கடந்தகாலம் பெருமிதத்திற்குரியது. நான் தமிழன் என்று இன்றைய இளைஞன், Silicon பள்ளத்தாக்கிலே Software Engineer ஆக இருக்கின்ற ஒரு இளைஞன், சொல்லிக் கொள்கின்றானா? பிழைப்பதற்காக உலகின் பல பாகங்களுக்கும் செல்கின்ற அவன், வாழ்வதற்கான தருணங்கள் இருக்கின்றனவா? அவன் புதிதாய்ப் பிறக்கின்ற கணங்கள் எவை? உலக மக்களுக்கு நாகரிகம் கற்பித்தவர்கள் தமிழர்கள். முதன் முதலில் உழவுத் தொழிலையும், கடல் வாழ்வையும் வளர்த்த தமிழர்கள்தான், உலகெங்கும் வேரோடியிருக்கும் பண்பாட்டிற்கு தொட்டிலாய் இருந்தவர்கள். உலகில் முதன் முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும், நகரமைப்பும், நாடமைப்பும் கண்டவர்கள் நாம். உலகில் முதன் முதலில் மொழியிலக்கணமும், கலையும், ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும், பிற கூறுகளும் வகுத்தவர்கள் நாம் என்பதை மூதறிஞர் ந.சி. கந்தையா பதிவு செய்கிறார். வியன்னா அருங்காட்சியகத்தில் 1,500 ஆண்டுகளுக்கு முன் நடந்த தமிழரொருவரின் கடல் வணிகம் குறித்த பதிவு ஒன்று இருப்பதை, தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஹோசோனர் எனும் ஜெர்மன் ஆசிரியர் ஐரோப்பிலும், மேற்கு ஆசியாவிலும் அநேக இடப்பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இருப்பதைக் காட்டி இருக்கின்றார். கடல் கொண்ட குமரிக் கண்டத்திலே தோன்றிய தமிழர் நாகரிகம்தான் தென்னாட்டில் திராவிட நாகரிகமாக மலர்ந்து, சிந்துவெளி நாகரிகமாகப் படர்ந்து, பின் சுமேரியன் நாகரிகமாக விரிந்தது என்கிறார் புகழ்மிக்க வரலாற்று ஆராய்ச்சியாளர் HERAS - அனைத்து நாகரிகங்களுக்கும், தாய்மையானதாக, முன்னோடியாக விளங்கியது "திராவிட நாகரிகமே" என்று சொன்ன அவர், அதனால் தம்மை "நான் ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்த ஒரு திராவிடன்" என்று சொல்வதிலே பெருமை கொண்டார். "மிகத் தொன்மை வாய்ந்த தொல் தமிழே - அனைத்து மொழிக் குடும்பங்களுக்கும் (இந்தோ - ஆரிய மொழிகள் உட்பட) மூலமான மொழியாகக் கருதப்பட வேண்டும்" என்று கோட்பாட்டை ஆழமாக, விரிவாக ஆய்ந்து நிறுவியுள்ளார்கள் பலர். இன்று சிந்துவெளி நாகரிகத்தை ஆரியர் நாகரிகம் என வர்ணிக்கும் முயற்சியில் பி.பிலால், ராஜாராமன் போன்ற பலர் ஈடுபடத் தொடங்கியுள்ள நிலையில், ‘சிந்து வெளியில் முந்து தமிழ்’ நூலில் பூர்ணசந்திர ஜீவாவும், தமது Indus Script Dravidian நூலில் இரா.மதிவாணணும், அந்நாகரிக முத்திரை எழுத்துக்கள் தொல் தமிழே எனவும், தொல்காப்பி மொழியில் தரவுகளைப் பயன்படுத்தி நிறுவி உள்ளனர். அவற்றை ஆழமாய் நிறுவிட நமது ஆதிச்சநல்லூர் தாழிகளைவிட மயிலாடுதுறையில் கிடைத்துள்ள தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட கற்கோடாரியினைவிட வேறென்ன வேண்டும். தமிழர்கள் இனத்தாலும், பண்பாட்டாலும், மொழியாலும், நீண்ட நெடிய தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டவர்கள். இம்மண்ணில் காலங்காலமாக நிலவி வந்த திணைப் பண்பாடுகளின் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) அறுபடாத் தொடர்ச்சியும், அயற்பண்பாடுகளின் பரவலும் குறித்த விழிப்புணர்வுடன், திணைப் பண்பாடுகளும், அயற்பண்பாடுகளும் தொடர்ந்து உறவாடியதால் இன்று உருவாகியுள்ள பன்மைப் பண்பாட்டுச் சூழலிலே, நாம் நமது வேர்களையும், அடையாளங்களையும் மீட்டெடுப்பதுடன், அவற்றை இந்த தலைமுறைக்கு நினைவூட்டுகின்ற ஒரு முயற்சியாகவே இத்தகைய புத்தகத் திருவிழாக்களைக் கருத வேண்டும். உலகின் முதன் முதலில் வேளாண்மைக்கு நீர்ப்பாசனம் பயன்படுத்தப்படத் தொடங்கியது தென்னிந்தியாவில். தென்னிந்திய நெல் நாகரிகம் தென் சீனாவிலும் இந்தோனேசியாவிலும் இருந்து நெல் நாகரிகங்களோடு ஒப்பிடத்தக்கது. கோதுமை நாகரிகத்தின் மையம் சிந்துவெளி. தென்னிந்திய அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ள கல்லான ‘உழு’ என்பதிலிருந்தே உழவன் எனும் சொல் உருவாகி இருக்கலாம். ஆங்கில வழிக் கல்வி கற்ற வர்க்கத்திற்கு முளப்பாரி, பந்தக்கால், பொய்க்காலாட்டம், எம்.ஆர். ராதா, படிகாரம், புதுமனை புகுவிழா - எதுவும் தெரியாது. செலின் தியோன், சிட்னி ஷெல்டன், சிலிக்கன் பள்ளத்தாக்கு, சீன் கானரி - இவை தெரியும். அதுவே பொது அறிவு எனப் பறைசாற்றப்படுகின்றது என ஒரு ஆய்வு சொல்கிறுது அவர்தம் தமிழுணர்வைத் தட்டி எழுப்பி, அவர்களைப் புதிதாய்ப் பிறக்க வைக்கும் பொறுப்பு நமக்குள்ளது. அன்றைக்கு பாரதி அதைச் செய்தான் - உ.வே. சாமிநாதய்யர், நம் தமிழ்த் தாத்தா செய்யத் துணியாததை அக்கினிக் கவிஞன் பாரதி செய்தான். தமிழ்த் தெய்வமென்று சிலரால் போற்றப்பெறும் காலஞ்சென்ற தென் கலைச் செல்வர், பெரும் பேராசிரியர், பண்டாரகர். உ.வே. சாமிநாதர் அவர்களும் தம் வாழ்நாள் முழுதும் தமிழைக் கற்று மாபெரும் புலவராகித் தமிழ்ப் பேராசிரியராய்ப் பணியாற்றி, பல அரும்பெருந் தொன்னூல்களை வெளியிட்டுச் சிறந்த தொண்டாற்றியும், தமிழ்ப் பற்றுக் கொள்ளாதது மிக மிக வருந்தத் தக்கதாகும். தவத்திரு அழகரடிகளின் மாமனாரும் சென்னை வாணருமாகிய காலஞ்சென்ற திருவாளர் தணிகைமணியார் (எம்ஏ) ஒரு முறை சர்.சாமிநாதர் அவர்களிடம் சென்று, "ஐயா! நேற்றுத் தாங்கள் ஆற்றிய சொற்பொழிவு மிக நன்றாயிருந்தது" என்று சொல்ல, அப்பண்டாரகர் உடனே சீறி விழுந்து, "என்ன ஐயா, நீங்கள் கூடச் சுயமரியாதைக்கார ராகிவிட்டீர்கள்! உபந்நியாசம் என்றல்லவா சொல்ல வேண்டும்! சொற்பொழிவு என்கிறீர்களே! இப்புதுச்சொல்லை எங்கே கற்றுக்கொண்டீர்கள்? எனக் கழறினாராம். மற்றொருமுறை பண்டாரகரின் பழைய மாணவரும், குடந்தைப் பொன் வணிகருமான திரு.ப.தி.சொ. குமாரசாமி அவர்கள் சென்னை வந்து பண்டாரகரைக் கண்டு "ஐயா நலமாயிருக்கிறீர்களா? " என்று அன்புடனும், ஆர்வத்துடனும் வினவ பண்டாரகர் கடும் புலிபோல் பாய்ந்து, "என்ன உங்களுக்குச் சமஸ்கிருதத்தின் மேல் இவ்வளவுதுவேஷம்? க்ஷேமம் என்று சொல்லக்கூடாதா? ஏன் நலமென்று வழக்கமற்ற சொல்லைப் பயன்படுத்துகிறீர்கள்? " என்று சீறி விழுந்தாராம். ஆனால் பாரதி சொல்வதைக் கேளுங்கள்... "தம்பி நான் ஏது சொல்வேனடா! தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக்காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாக இருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது" என்று நெல்லையப்பருக்குக் கடிதம் எழுதிய பாரதியின் தமிழ்ப்பற்றை சந்தேகிக்க இடமில்லை. இதனைப் படிக்க நேருகின்ற இன்றைய 21ம் நூற்றாண்டு இளைஞன் ஒவ்வொருவனும் புதிதாய்ப் பிறப்பான் அல்லவா? தனிமனிதனின் எதிர்காலமும், சமுதாயத்தின் எதிர்காலமும் ஊடுபாவுபோல் ஒன்றிணைந்திருக்கிறது. 20ம் நூற்றாண்டு, மனிதர்களைத் தனித்தனியான அணுக்களாக, பரஸ்பரம் பகைமை கொண்டவர்களாக, ஒவ்வொருவரும் மற்றவரை ஒரு புறப் பொருளாகப் பார்க்கிறவர்களாகப் பிரித்து வைத்துள்ளது. கட்டுப்படுத்த முடியாத வரலாற்றுச் சக்திகளை, சமூக நிகழ்வுகளை எதிர்கொள்ளும் மனிதன் செய்வதறியாது திகைத்து நிற்கிறான், சிதிலமடைகின்றான். ஆனால் அதிலிருந்து அவன் மீண்டு அவ்வப்பொழுது புதிதாய்ப் பிறக்கவேண்டும். "கணந்தோறும் புதிய வியப்பையும், கணந்தோறும் வெவ்வேறு கனவையும், கணந்தோறும் நவநவமாய்க் களிப்பையும்’’ என்று பாரதி சொன்னது நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ளத்தான். மனிதன் அடிப்படையில் ஒரு சமுதாய ஜீவி என்றும் எளிய உண்மையை உணர்த்த கார்ல் மார்க்ஸ் தேவை இல்லை. ஒவ்வொரு மனிதனும் தான் என்னவாக வேண்டும் என்பதைத் தானே முடிவு செய்துகொள்ள வேண்டும். அவனேதான் தன்னைத் தான் விரும்பும் வகையில் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதில் யாருக்கும் தடைஇல்லை. ஆனால் இந்த உலகம் முற்றிலும் அவனுக்கே சொந்தமான தனிப்பட்ட உலகமா? நமக்கு முக்கியத்துவமும் விருப்பமும் உள்ள பொருள்களையும் விஷயங்களையும் தேர்வு செய்வதிலும், அவற்றைக் கொண்டு ஏதேனும் ஒன்றை உருவாக்குவதிலும்தான் நமது உலகினை ஆக்கிக் கொள்கிறோம். விஞ்ஞானியின் உலகம் - அவனது ஆய்விற்கான உலகம், அந்த உலகம் அவனுக்கு முன்பே பல நூற்றாண்டுகளாக இதர விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது. இப்போது அவன் அதனை விரிவாக்குகிறான், செழுமைப்படுத்துகிறான், மறுபடைப்புச் செய்கிறான். அது போன்றுதான் கலைஞனின் உலகமும், தொழிலாளளியின் உலகமும். உலகம் நமக்கான உலகமாக மாறுவது கூட்டு முயற்சியின் மூலம் தான். அது எந்த அளவிற்கு உணர்வு பூர்வமாக மற்ற மனிதர்களுடன் மானுட உறவில் இணைக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு, மனித இருத்தலும் அர்த்தம் பெறுகிறது. 1912ஆம் ஆண்டு இந்தியாவின் Viceroy Lord Hardings மீது வெடிகுண்டு வீசிய வங்காளத்தின் போர்வாள், ராஷ்பிகாரி போஸ், புரட்சிகர இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பொழுது, அவருக்கு வயது 15. ஸ்பெயினின் ஆக்ரமிப்பினை எதிர்த்து, க்யூபாவிற்கு ஆதரவாகக் களம் இறங்கிய, காலனி ஆதிக்கத்திற்கு எதிரான முதல் தீப்பொறி, ஹோஸே மார்த்திக்கு, அப்பொழுது வயது 17 மட்டுமே. வியட்நாமில், ‘புரட்சிகர வியட்நாம் இளைஞர் சங்கம்’ எனும் அமைப்பை உருவாக்கி, வியட்நாம் போருக்கு ஆதரவு திரட்டிய ஹோ-சி-மின் ஒடிந்துவிழும் தோற்றத்திலிருந்த ஓர் இளைஞன். முதல் பிரெஞ்சுப் புரட்சியின் ஒளியை முன்னுக்குக் கொண்டு சென்ற Francis Noyel-Babob முழுச் சமத்துவத்துக்கான பொதுவுடமைக் கருத்தாளர், புரட்சியில் ஈடுபட்ட பொழுது அவரது வயது 25; அதற்காகத் தூக்கிலிடப்பட்ட பொழுதோ வயது 33. "அவர்கள் மீது கண்ணீர் விழவில்லை தேவதைகளின் கரங்கள் அவர்களது உடல்களை எடுத்துச் சென்றன’’ என்கிற ஓர் ஆங்கிலேயரின் இரங்கற் கவிதையோடு உயிர்துறந்த பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் அனைவருமே இளவயதுப் புரட்சியாளர்கள். "நாம் இருவரும் நெருங்கின உறவினர்கள் அல்லர், ஆனால் இந்த உலகத்தில் அநீதி தலையெடுக்கின்ற போதெல்லாம் கோபமும், வெறுப்பும் கொண்டு, நீ குமுறி நடுங்குவாயானால் நாம் இருவரும் தோழர்கள்’’ என்று சொன்ன புரட்சிகரச் செம்மைவாதி சேகுவாரா, புரட்சிக்காக தன்னை தயாரித்துக் கொண்ட, லத்தீன் அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட பொழுது அவரது வயது 21. மேற்சொன்ன இவர்கள் அனைவருமே உணர்வு பூர்வமாக மானுட உறவில் தம்மை இணைத்துக் கொண்டு உன்னத லட்சியத்திற்காகப் போராடத் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொண்டார்கள். இலக்கியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நுதல்பொருளாக எப்போதும் இருந்து வருபவன் உலகிலுள்ள சாதாரண மனிதன்தான் என்று கூறினார் சார்த்தர் எனும் ஃப்ரெஞ்ச் தத்துவவாதி. எதையும் உருவாக்கவும், உருவானதைக் கலைக்கவுமான வலிமை, சுருக்கமாகச் சொன்னால் செயல்படுவதற்கான வலிமை வாசகனிடம் உள்ளது. அதற்குக் காரணம், மனிதன் தன்னை இடைவிடாது தினந்தோறும் புதிது புதிதாகக் கண்டுபிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் கடமை எழுத்தாளரிடம் இருப்பதுதான் என்றும் சார்த்தர் கூறினார். ஆக, நாம் நம்மை இடைவிடாது புதிது புதிதாகக் கண்டெடுத்தல் அவசியம். நாம் இந்த உலகில் வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியாது. போர்க்களத்தை விட்டகன்று, மலையுச்சியில் வசதியாக உட்கார்ந்து கொண்டு, யார் உதைக்கிறார்கள், யார் உதைபடுகிறார்கள் எனத் தீர்ப்புக் கூறி, போர் எப்படி முடியப் போகிறது என்பதைப் பற்றிக் கனவு கண்டுகொண்டிருக்கும் உரிமை ஏதும் நம்மில் யாருக்கும் இல்லை. இலங்கைப் பெண் கவிஞரின் கவிதை ஒன்று, "எங்கும் போர், பஞ்சம், குடிகளப் பெருக்கம், இடப் பெயர்வு பசி, பட்டினி, கற்பழிப்பு, மரணம் - இந்நிலையில் தோழியின் திருமணம் - எதைப் பரிசாகத் தர? புத்தகத்தையா, பாவனைப் பொருட்களையா,வாசனைத் திரவியத்தையா? எதைத் தருவேன் - கர்ப்பத்தடை மாத்திரைகளைத் தவிர? " இந்தத் துயரத்தில் நாம் பங்கு பெற்றாக வேண்டும். இன்னும் சொல்லப் போனால், இந்த உலகில், சிறப்புரிமை பெற்ற பார்வையாளன் எவனும் இல்லை. வாழ்க்கை ஒவ்வொரு கணமும் பல புதிரான கேள்விகளுக்குள் நம்மை இழுக்கின்றது. நாம் புதிதாய்ப் பிறப்பதற்கு என்ன செய்ய வேண்டும். இந்த உலகம் மாற்ற முடியாத தெய்வீக விதிகளால் ஆளப் படுவதில்லை என்பதையும், அதில் எதனையும் மாற்ற முடியும் என்பதனையும் உணர வேண்டும். ஆனால் அதனைச் சாதிப்பதற்கு அதற்குரிய சுதந்திரம் வேண்டுமல்லவா. நம்மில் எத்தனை பேருக்கு அது சாத்தியப்பட்டிருக்கிறது? "பூக்காரியே பூக்காரியே இந்தப் பூக்களை விற்று இதனை விட உன்னதமான வேறு எதனை வாங்கப் போகிறாய்? " நமது உல்லாஸமான இச் சுதந்திரம் பூவிற்பதைத் தொழிலாகக் கொண்ட அப்பெண்ணிற்குச் சாத்தியமா! சுதந்திரம் என்பது சொர்க்கத்திலிருந்து வழங்கப்படும் வெகுமதி அல்ல. மனிதர்களின் சமூக வாழ்நிலை அவர்களது உணர்வைத் தீர்மானிக்கிறது, பொருளாதார அடித்தளம் மேலடுக்கை நிர்ணயிக்கிறது என்பதை நாம் அறிவோம். இச்சூழ்நிலையில் சமுதாயத்திலும், வரலாற்றிலும் தனிநபரின் பாத்திரம் என்ன? அவன் தன்னைத்தானே எப்படிப் புதுப்பித்துப் புதிதாய்ப் பிறக்க முடியும்? எந்தச் சூழ்நிலையிலும் மனிதனால் சுதந்திரமான தேர்வுகளைச் செய்ய முடியும். அதன் மூலமே நாம் கணந்தொறும் புதிதாகப் பிறக்க முடியும் என நான் நம்புகிறேன். தேசப்பிதா காந்தியை எடுத்துக்கொள்ளுங்கள். பல சமயங்களில் அவருக்கு இருந்த நெருக்கடிகளை அவர் தனது உடலை மையமாக வைத்துக் கடந்தார். இந்த சுதந்திரமான தேர்வின் மூலம் அவர் பல சிக்கலான அரசியல், வரலாற்று நிகழ்வுகளைச் சிடுக்கு எடுத்ததோடு மட்டுமல்ல, தன்னைத் தானே பரிசோதனைக்குட்படுத்தி புதிதாக்கிக் கொண்டார். தேடுதல் உள்ளவரை தானே நாம் புதிதாய்ப் பிறப்பெடுப்போம். காந்தியின் உடலரசியல் என்றொரு அருமையான புத்தகம் - தோழர் இராமானுஜம் எழுதியது, ‘கருப்புப் பிரதிகள்’ பிரசுரத்தின் வெளியீடு. அதிலிருந்து சில கருத்துக்கள்: உடலை மையப்படுத்தும் காந்தியின் அரசியலுக்கு இரண்டு பெரும் சவால்கள் உருவானது. முதல் சவால் என்பது இரட்டை வாக்குரிமைக்கு எதிராக அவர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம். இதை அம்பேத்கர் அறிவார்ந்த தளத்திற்கு எடுத்துச் செல்ல முற்பட்டபோது. காந்தி அதனை உடல் தளத்திற்கு எடுத்துச் சென்றார். அம்பேத்கரின் அரசியல் நிலைப்பாடு, காலனிய ஆட்சியாளர்கள் காந்திக்குக் கொடுத்த சவால்களைக் காட்டிலும் மிக இறுக்கமானது. மிக ஆழமானது. அம்பேத்கரின் அறம் சார்ந்த அரசியலே காந்தியின் உடலை காப்பாற்றியது என்றால் அதை அறிந்துதான் காந்தியும், தன் உடலைப் பணயமாக வைத்தார் என்று சொல்லலாம். காந்தியின் உடல் வென்றது. ஆனால் அறிவார்ந்த விவாதம் பின்னுக்கு தள்ளப்பட்டு நின்றது. ஒரு தளத்தில் உண்ணாவிரதப் போராட்டம் என்பதே அறிவார்ந்த தளத்தில் உரையாடல் சாத்தியமற்றுப் போகும் போதுதான் பலமான ஆயுதமாக உருமாறுகிறது. காந்தியின் இந்தப் போராட்ட முறை எதையும் அறிவார்ந்தத் தளத்தில் வைத்துப் பார்க்க தீர்மானமாய் மறுத்தது. அடுத்து தோழர் பகத்சிங்கின் மரணம். இர்வின் பிரபுவோடு காந்தி போட்ட ஒப்பந்தத்திற்கு முன் நிபந்தனையாய் தோழர் பகத்சிங் மற்றும் பிற தோழர்களின் உயிரை காப்பாற்றுவதை முன் நிறுத்தியிருக்க முடியும். ஒப்பந்தத்திற்கு முந்தைய தினம் நேரு, காந்தியோடு இதுபற்றி விவாதிக்க வந்தபோது காந்தி மௌனவிரதம் இருக்கும் நாள் என்பது மிகப்பெரிய நகை முரண். ஒரு சராசரி இந்தியப் பெண் தன் உடலையும், மனதையும் குடும்ப நன்மைக்காக வதைபடுவதை முதன்மைப்படுத்துகிறாள். இந்தப் பெண் பலதருணங்களில் ஸ்தூலமான அடையாளங்களோடு இயங்கினாலும் அது முற்றும் முழுவதுமான யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. இந்த வதைபடும் பெண் என்பவள் ஒரு ‘உன்னதத்தாய்’. தன் உடலுக்கு ஆண் உடல் செய்யும் வன்முறைகளை மௌனமாக ஏற்றுக் கொள்ளுபவள். தனக்குத் தீங்கு விளைவித்தாலும் எதிர் வினையாற்ற மறுப்பவள். காந்தி இந்த லட்சியத் தாயாகத் தன்னை உருவகப்படுத்திக் கொண்டார். இந்தத் தாய் தவறியேனும் மற்றவருக்குத் தீங்கு விளைவிக்க மாட்டாள். தன்னை வதைத்துக் கொள்வதன் மூலம் தன் எதிரியைப் பணிய வைக்கும் சக்தி படைத்தவள் இந்தத் தாய். மௌனத்தின் மூலம் தீர்மானமாகத் தன்னை வெளிப்படுத்தக் கூடிய சக்தி படைத்தவள் இவள். இந்தத்தாய் அறிவுத் தளத்தை ஒதுக்கி அறத்தளத்தில் இயங்கியவள். இயேசு கிறிஸ்து, சாக்ரடீசுக்குப் பிறகு உலக வரலாற்றில் மனித மனங்களில் உள்ள குற்ற உணர்வை படைப்பாக்கத் திறனோடு உபயோகிக்கும் திறமையுடையவர் காந்தி என்று மிக அழகாக அசீஷ்நந்தி எழுதியுள்ளார். இந்தப் படைப்பாக்க மனமே இந்தியக் குடும்பங்களில் காணப்படும் மிகச் சாதாரண உண்ணாவிரத வெளிப்பாட்டை மிகப்பெரிய அரசியல் வடிவமாக உருமாற்றம் செய்தது. ஆனால், காந்தி இந்த உத்தியின் மூலம் தன்னைத் தானே ஒவ்வொரு முறையும் அடுத்த தளத்திற்காகப் புதுப்பித்துக் கொண்டார் என்றே நான் பார்க்கிறேன். இன்னுமொரு விஷயம் - எதனையும் புதிதாக வேறொரு கோணத்திலிருந்து பார்க்கும் பொழுதும், அலசி முடித்துவிட்ட விஷயங்களைத் தனித்துவமாக வேறுபடுத்திப் பார்த்து வெளிக்காட்ட முனையும் போதும் நாம் புதிதாகிறோம். இதற்கும் காந்தியிலிருந்தே உதாரணம் தருகிறேன். பகவத் கீதைக்குப் பல்வேறு உரைகள் உண்டு. ஆதி சங்கரர் முதல் திலகர், அரவிந்தர் வரை எழுதிய பல்வேறு உரைகள் சாத்தியப்பட்டுள்ளது. ஆனால் காந்தி பகவத்கீதைக்குக் கொடுத்த விளக்கம் இந்த உரைகள் எல்லாவற்றையும் நிராகரித்தது. மனித ஆன்மாவுக்குள் நடக்கும் நல்லது - தீயது இவற்றிற்கு இடையேயான முரண் மற்றும் போராட்டமே பகவத்கீதை என்றார். காந்தியின் நிலைப்பாடு பகவத் கீதையின் பிரதி சார்ந்தது அல்ல. பிரதியிலிருந்து மட்டுமல்லாமல் வரலாற்றிலிருந்தும் மிகச் சுலபமாக பகவத் கீதையைக் காந்தி பிரித்து எடுத்துவிட்டார். இதற்கான ஆதாரத்தைக் காந்தியிடம் கேட்டிருந்தால் அதற்கு அவசியமில்லை என்று சொல்லி யிருக்கக்கூடும். காந்தியைக் கொன்ற கோட்சே பகவத்கீதைக்குக் காந்தி கொடுத்த விளக்கத்தை மறுத்து, அது மனதளவில் நடப்பது அல்ல, உண்மையான போர் பற்றி பேசுகிறது என்றான். காந்திக்கு இது எப்படிச் சாத்தியமானது? எந்தத் தளத்தில் நின்று அவர் பகவத் கீதையை எதிர்கொண்டார்? ரபீந்த்ரநாத் தாகூர் மற்றும் காந்தி சம்பந்தப்பட்ட இரண்டு நிகழ்வுகளை நாம் இவற்றோடு இணைத்துப் பார்க்க முடியும். ஒருமுறை காந்தி சாந்தி நிகேதன் சென்றிருந்தபோது ஒரு இளம் பெண் அவரிடம் ஆட்டோகிராப் நோட்டை நீட்டி இருக்கிறாள். காந்தி அதில், ‘தீரயோசிக்காமல் எந்த வாக்குறுதியையும் கொடுக்காதே. அப்படிக் கொடுத்து விட்டால் உன் உயிரை விட்டேனும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சி செய்’ என்று எழுதிக் கையெழுத்திட்டார். காந்திக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த தாகூர் காந்தியின் வாசகத்தைப் படித்துக் கோபம் கொண்டார். அந்தப் பெண்ணிடம் கவிதை ஒன்று எழுதி, காந்திக்கு புரிய வேண்டும் என்பதற்காகவே, ‘கொடுத்த வாக்குறுதியைத் தவறு என்று பின்னால் உணர்ந்தால், அதை விட்டெறிந்து விடு’ என்று ஆங்கிலத்தில் எழுதினார். இந்த நிகழ்வில் நாம் யார் சார்பு எடுக்கிறோம் என்பது, நாம் எந்தத் தளத்தில் இயங்குகிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டது. அவ்வாறே நாம் புதிதாகப் பிறக்கவும் முடியும். அறிவு சார்ந்த பார்வையை தாகூர் முன்வைத்தார் என்றால் காந்தி அறம் சார்ந்த பார்வை முன்வைத்தார். காந்தி முன்வைத்த அறம் என்பது கூட்டு மரபின் உன்னதம். அது எக்காலத்திற்கும் உண்மை யானதாகவோ, முழுமையானதாகவோ இருந்திருக்க சாத்தியமில்லை என்றாலும் இந்திய நிலபிரபுத்துவ ‘உன்னதத்’ தாய்போல் இதுவும் ஒரு கனவு. இந்தக் கனவை நம் அறிவார்ந்த தளத்தில் வைத்து ஆராய முடியாது. தாகூர் வைத்த விமரிசனம் காந்திக்கு புரியாமல் இருப்பதற்குச் சாத்தியமேயில்லை. தாகூரின் நிலைப்பாட்டை காந்தி ஒரு போதும் போற்றமாட்டார். இந்தக் கூட்டுமரபின் கனவிற்கு வெளியே இருந்த தாகூர், காந்திக்கு மகாத்மா என்று பட்டம் கொடுத்தது விசித்திரமானதுதான். மற்றொரு சம்பவம், 1934-இல் ஜனவரியில் நிகழ்ந்தது. பீகாரில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என்று ஆயிரக்கணக்கானோர் மாண்டனர். காந்தி அதைப் பற்றி எழுதும் போது, ‘நம்மை போன்ற மனிதர்களால் நம்ப முடியாமல் போகலாம். இந்த நிலநடுக்கம் என்பது கடவுள் நாம் செய்யும் பாவங்களுக்குக் குறிப்பாக தீண்டாமை என்ற பாவத்திற்குக் கொடுத்த பெரும் தண்டனை. என்னைப் பொறுத்தவரை இந்தத் துயர சம்பவத்திற்கும், தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரத்திற்கும் தொடர் புண்டு’ என்று எழுதினார். தீண்டாமையை எதிர்த்த தாகூரால் ஒரு இயற்கைப் பேரழிவை அதுவும் குழந்தைகள், பெண்கள் என்று ஆயிரக்கணக்கானோர் மரணம் கண்ட ஒரு பேரழிவுக் குறித்து காந்தி இப்படி விளக்குவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்குப் பதிலாக அவர், ‘எல்லாவற்றையும் காட்டிலும் துயரப்படக்கூடிய விஷயம் எதுவென்றால் காந்தியின் இந்த அறிவு சாரா விளக்கத்தைப்பெரும்பான்மையான இந்தியர்கள் ஏற்றுக்கொள்வதுதான்’ என்று எழுதினார். (அ.மார்க்ஸ் தன் நூலில் வைதீக சனாதனிகளிடமிருந்து காந்தியை வேறுபடுத்திக் காட்ட இந்த நிகழ்வைக் குறிப்பிடுகிறார். MIDS-யை சேர்ந்த டாக்டர் லஷ்மணன் இதே சம்பவத்தைக் குறிப்பிட்டு தாகூர், காந்திக்கு கொடுத்த ‘மகாத்மா’ என்ற பட்டத்தைத் திரும்பப் பெற்றதாகத் தெரிவித்தார்) காந்தியின் இந்த விளக்கத்தையும், தாகூரின் கோபத்தையம் நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பது, நாம் எந்த மரபை அடிப்படையாகக் கொண்டு பார்க்கிறோம் என்பதை பொறுத்துதான். காந்தியிடம் எந்த ஒரு நிலைப்பாட்டிற்கு அணுகினாலும் அறம் சார்ந்த தளத்தில் மட்டும் இயங்குவதை உணர முடியும். அறிவார்ந்ததளம் எப்போதுமே அவர் முன் தலைகுனிந்து நிற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இளைஞர்களே, யுவதிகளே - நீங்கள் எந்தத் தளத்தில் இயங்கப் போகிறீர்கள் என எடுக்கின்ற முடிவு, உங்களைப் புதிதாய் மீண்டும் பிறக்க வைக்கும். சிந்தியுங்கள், புதிதாய்ப் பிறப்பெடுங்கள். ஆக, காந்தி குறித்து தாகூரின் விமர்சனம், அறிவு X அறம் சார் தளம் சார்ந்த தெளிவு, இவற்றை ஒரு சராசரி இந்தியக் குடிமகன் அறியும்போது, கூர்ந்து உணரும்போது அவன் புதிதாய்ப் பிறப்பெடுக்கிறான். வரலாறைப் புத்தகங்களின் வழியாகவோ அல்லது கட்டமைக்கப்பட்ட உன்னதங்கள் வழியாகவோ அதன்பின் அவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். மகாத்மா காந்தியின் இராட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். இன்றளவும் அவரது நினைவு தினத்தில் தலைவர்கள் இராட்டையில் நூல் நூற்பது ஒரு சம்பிரதாயமான குறியீட்டு நிகழ்வு. எளிமையும், கதரும் ஊடுபாவான ஒரு படிமம். ஆனால், இரபீந்திரநாத் தாகூர், காந்தியின் இராட்டை இந்திய மக்களின் தொகையின் குறைந்த பட்ச நிர்வாணத்தை மறைக்கக்கூட போதுமானதாக இருக்காது என்றார். தாகூர் இராட்டைப் பொருளாதாரத்தை ஏற்றுக் கொள்வில்லை. காந்தியின் இராட்டை தவறான பொருளாதாரத்தைத்தான் முன்வைத்தது. அதில் சந்தேகமில்லை. காந்தி இதை அறியாதவராக இருந்திருக்க முடியாது அவர் பொருளாதாரத்தையும் வரலாற்றிலிருந்து பிரித்து அறத்தளத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சித்தார். காந்தி தீண்டாமையை எதிர்த்தார். ஆனால் தன்னை சனாதனி என்று போற்றிக் கொண்டார். வருணப்பிரிவு பொருளாதாரத்திற்கு அவசியம் என்றார். (ஆனால் அவருடைய மகனுக்கும், இராஜகோபாலாச்சாரி மகளுக்கும் நடந்த திருமணத்தை காந்தி எதிர்த்தார்) இராஜாஜியும் எதிர்த்தார். காந்தி தன்னைச் சனாதனி என்று சொல்லிக் கொண்டது கூட ஒரு நிலப்பிரபுத்துவத் தாய் மனநிலையை வைத்துத் தான். (அம்பேத்கர், பெரியார் போன்றோர் இவ்விஷயத்தில் காந்திக்கு எதிர்நிலை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை). ஒரு கருத்தை, ஒரு நிகழ்வின் எதிர்வினையை, கண்முண் காணா வரலாறைப் பிறரது அபூர்வ தரிசனத்தில், ஒரு சராசரி மனிதன் உணர நேரிடும் போது, அதனூடாக அவன் மறுபிறப்பெடுக்கிறான். மகாத்மாவின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களைத் தாண்டி, அவர் பல பரிசோதனைகளை மேற்கொண்டபடிதானிருந்தார். அதில் மிக முக்கியமானது அவரது பிரம்மச்சரிய விரதம். 1906 முதல் சாகும் வரை பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்வதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டார். சாகும்வரை அந்த உறுதிமொழியோடு போராடிக் கொண்டிருந்தார். 1920 வாக்கில் நடக்கும்போது இளம் பெண்கள் தோளில் தன் கைகளைப் போட்டுக் கொள்ளும் பழக்கத்தைக் காந்தி தொடங்கினார். நையாண்டியாக அந்தப் பெண்கள் தன்னுடைய ‘கைத்தடி’ என்று குறிப்பிட்டார். இதன் அடுத்தகட்டமாக பெண்கள் அவர் உடலுக்கு மசாஜ் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். இதனைத் தொடர்ந்து குளிக்கும் போது பெண்களுடன் சேர்ந்து குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார். சுசீலா நாயர் அவர்கள் அவரோடு சேர்ந்து குளிப்பது என்பது வழக்கமாகவே இருந்தது. அத்தகைய சமயங்களில் காந்தி உடன் குளிக்கும் பெண்கள் சங்கடப்படாமல் இருக்க, தன் கண்களை மூடிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதுபெரும் சர்ச்சையைக் கிளம்பிய போது இந்த குளியல் சடங்கைப் பற்றி விலாவரியாக எழுத காந்தி எவ்வித தயக்கமும் காட்டவில்லை. இதன் அடுத்த கட்டமாக இளம் பெண்களுக்கு அருகிலோ, நெருக்கமாகவோ அவர்களுடனோ படுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார். இவை எல்லாமே திரைமறைவும் இன்றி நிகழ்த்தப்பட்டது. இந்தப் பரிசோதனைகளின் நோக்கம் என்பது ஆண் உடல், பெண் உடல் இவற்றிற்கு இடையேயான வேற்றுமையைக் களைந்தெடுப்பதே ஆகும். இந்தப் பிரம்மச்சரிய பரிசோதனைகளை வினோபாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் இந்தப் பரிசோதனைகளை முன்வைத்து ஹரிஜன் பத்திரிகை ஆசிரியர் குழுவில் இருந்து வெளியேறினார். ஒருசமயம் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில்: "பரிசோதனைகளை, மனதளவில் நடத்த விரும்பவில்லை" என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். மரபுக்கு எதிரான காந்தியின் இந்த பரிசோதனைகள் பற்றிக் கேட்டபோது, "இத்தகைய முயற்சிகள் இல்லாமல் முன்னேற்றம் காண முடியாது" என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். அத்தோடு, "சில சமயங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிமுறைகளை மீறுவதையும் என்னுடைய கடமையாகக் கருதுகிறேன்". ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிமுறைகளை அறத்தின் பாலோ அல்லது அறிவின் தெளிவு கொண்டோ நாம் மீறும் ஒவ்வொரு முறையும் புதிதாய்ப் பிறப்பெடுக்கின்றோம். மரபு சார்ந்த சிந்தனைகள், உருவகங்கள், அடையாளங்கள் எல்லாவற்றையும் தன்னிலைக்கு எடுத்து வந்து மறுஉருவாக்கம் செய்வதைக் காந்தியிடம் திரும்பத் திரும்பக் காணமுடியும். அதன் மூலமே அவர் புதிதாகப் பிறப்பெடுத்தபடி இருந்திருக்கிறார். காந்தி தன் பேத்தி மனுகாந்தியோடு பரிசோதனையில் ஈடுபட்டதும் அது வெளியுலகிற்குப் பிரபலப்படுததப்பட்டதும் அவரைப் பெருஞ்சிக்கலில் மாட்டியது. எல்லோருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. ஒரு துயர நாடகத்தின் கடைசிக் காட்சிபோல் காந்தி உதாசீனப்படுத்தப்பட்டார். அவரைக் கண்டித்து ஆயிரக்கணக்கான கடிதங்கள் அவருக்கு அனுப்பப்பட்டது. தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில், அவரும் மனுகாந்தியும் தூக்கத்தின் நடுவே கொலை செய்யப்பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை என்று எழுதினார். ஆனால் இன்றளவும் இவ்வளவு வெளிப்படையாகத் தன் அத்தனை சோதனைகளையும் தெரியப்படுத்திப், பகிர்ந்து கொண்டு, விமர்சனங்களுக்கும் வழி விட்டமையாலேயே அவர் ‘மகாத்மா’ எனப்படுகிறார். ‘மக்கள் சிந்தனைப் பேரவை’ முன்வைக்கம் முப்பெரும் முழங்கங்கள். 1) இல்லந்தோறும் நூலகம் 2) நூலகமில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் 3) நல்ல நூல்களே நல்ல நண்பர்கள் சட்டைப்பையில் எப்போதும் இருக்கும் நல்ல நண்பன் புத்தகம் மட்டுமே தான். ஒரு இல்லத்தில் நுழைகின்ற ஒரு புது நூல் அந்த இல்லத்தின் எவரையாவது புதிதாய்ப் பிறக்க வைக்கலாம். ஒரு ஊரில் புதிதாகத் திறக்கப்படுகின்ற ஒரு நூலகம் ஒரு தெருவையே புதிதாய் மாற்றி அமைக்கலாம். சரியான காலகட்டத்தில் எழுதப்பட்ட ஒரு புத்தகம் நாட்டையே புதியதொரு பாதையில் திருப்பலாம். சதத் ஹசன் மண்டோ எழுதிய சிறுகதை ஒன்று பிரிவினை காலகட்டத்தில் நடந்த கொடுமைகளைப் பற்றியது. அக்கதை, என்னை உலுக்கியது, என்னைப் புடம் போட்டுப் புதிதாக்கியது, மதம், இனம் எனும் தடைதாண்டி மனிதன் மட்டுமே முக்கியம் என என்னைப் புதிதாய்ப் பிறக்க வைத்தது அந்தக் கதை இதுதான். கதையின் தலைப்பு ‘திற’. எந்த ஒரு புத்தகத்தையும் அதற்குரிய முழுமையான விலை கொடுத்து நீங்கள் வாங்கி விட முடியாது. நீங்கள் கொடுப்பதெல்லாம் அச்சுக்கூலியும், அந்தக் காகிதத்திற்குரிய விலையும் தான். என்னைப் புரட்டிப் புதிதாக்கிய இரு புத்தகங்களை உங்களோடு இன்று பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. புத்தகத் திருவிழாவிற்கு வந்து, புத்தம் புதிதாய்த் திரும்பிச் செல்லுங்கள். வாழ்த்துக்கள். நன்றி...
No comment