புள்ளிகள் கோடுகள் கோலங்கள் – பாரதிமணி

புள்ளிகள் கோடுகள் கோலங்கள் – பாரதிமணி
காந்திபாய் தேசாய் :
	நான் விரும்பி அடிக்கடி Frankfurt போவதற்கு அங்கு நான் தங்கும் Presidential Suite மட்டும் காரணமல்ல. (இங்கு நான் திரையுலகில் எதிர்கொள்ளும் ஒரு டார்ச்சரைப் பற்றியும் சொல்லவேண்டும். 'அடுத்தவாரம் அவுட்டோர் இருக்கு. ஹீரோவுக்குப் பெரிய ஸூட்டா போட்டுடுங்க' என்பார் இயக்குநர். அவர் சொல்வது உடையையல்ல. ஹீரோ தங்குவதற்கான Suite. அதே போல 'எடிட்டிங் ஸூட்டு' என்கிற வார்த்தை அடிக்கடி காதில் விழும். எனக்கு 'முட்டாப்பசங்களா, அது ஸூட்டு இல்லைடா, ஸ்வ்யீட் - Suite. வாயில் நுழையலேன்னா ஸ்வீட்னாவது சொல்லு. அது நிச்சயமா ஸூட்டு இல்லைடா' என்று அலறவேண்டும் போலிருக்கும். தமிழ்நாட்டில், குறிப்பாகத் திரையுலகில் தப்புத்தப்பாக ஆங்கிலம் பேசுவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது). (புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணி : 194)
	(தில்லியில் என் சர்தார்ஜி நண்பன் வீட்டில் ஒரு நாள் சாப்பிடப் போயிருந்தபோது, அவன் தந்தை 'சங்கோஜப்படாமல் சாப்பிடு' என்பதை இப்படிச்சொன்னார்: "Beta. This is your house. Eat shamelessly!") (புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணி : 195)
	அவர் வாழ்நாளில் 25 பிறந்தநாட்களை மட்டுமே அவரால் கொண்டாட முடிந்தது. காரணம் அவர் பிப்ரவரி 29-ம் தேதி பிறந்தவர். 99 ரன்களில் அவுட்டாகும் டெண்டூல்கர் மாதிரி சதம் அடிக்க முடியாமல் ஒரு சோகமான மனிதராக தனது 99-ம் வயதில் காலமானார். (புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணி : 204)

சிங் இஸ் கிங் :
	இவர்களிடம் இல்லாதது பாகிஸ்தான் பாஸ்மதியின் நெல் விதைகள். போட்டி காரணமாக அவைகளை நேர்வழியில் பெறமுடியாது. அரசாங்கத்தை நம்பிப்பயனில்லை. இந்திய எல்லையை ஒட்டியிருக்கும் எல்லா பஞ்சாபி விவசாயிகளும் ஒன்றுசேர்ந்து இரகசியமாக நீண்டகாலத் திட்டமொன்று தீட்டி எதிர்க்குரலே இல்லாமல் அதற்கு வேண்டிய பணத்தையும் திரட்டி முழுமுனைப்போடு ஐந்து வருடங்கள் பாடுபட்டார்கள். நாட்டில் அமைச்சர் சி.சுப்பிரமணியம் கொண்டுவந்த 'பசுமைப் புரட்சி' நடந்துகொண்டிருந்த காலம். ஓரிரு ஆரம்பத் தோல்விகளுக்குப்பிறகு, குறிப்பிட்ட ஒரு இரவில் இவர்கள் ஆவலோடு காத்திருந்த பாகிஸ்தானி பாஸ்மதி நெல்விதைகள் நாற்பது லாரிகளில் இந்திய எல்லைக்குள் வந்திறங்கின. Pakistani Rangers-க்கும் நமது எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் அவர்கள் 'கண்களை மூடிக்கொள்ள' கோடிக் கணக்கில் செலவழித்தார்கள். மூன்றுவருடங்களுக்கு இந்த விதைகளை விற்காமல், இந்திய எல்லையோரத்தில் மறுபயிரிட்டு வீரியமுள்ள விதைகளாகப் பல்கிப் பெருக்கினார்கள். As they say, the rest is history! இப்போது இந்தியா உலகத்திலேயே முதன்மையான பாஸ்மதி அரிசி ஏற்றுமதி நாடு. (புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணி : 210,211)
	'சிங் இஸ் கிங்' என்று முழக்கமிட்ட அபினவ் பிந்த்ராவின் தந்தை ஏ.எஸ்.பிந்த்ரா ஒரு நேர்காணலின்போது, எல்லோரையிம்போல, முதல்வருக்கும், மந்திரிகளுக்கும், மத்திய அரசுக்கும் நன்றி சொல்லிக் கொண்டிருக்கவில்லை. தன்னம்பிக்கையை ஊட்டி வளர்த்த தன் மகன் வெற்றிக்குத் தானே காரணம் என்று ஆவணம் தொனிக்கக் கூறினார். 'அவன் மெடல் வாங்கினப்புறம் இந்தக் கூட்டம் போடறீங்களே, நேத்தெல்லாம் எங்கடா போயிருந்தீங்க?' என்பதைச் சொல்லாமல் சொன்னார். எனக்கு எட்டாவதில் படித்த சாமுவேல் ஜான்ஸனின் "All this accolade... had it been earlier, had been kind" என்ற வாக்கியம்தான் நினைவுக்கு வந்தது. இந்த ஆவணம்தான் 'அஸ்லி பஞ்சாபியத்' என்று பொருள்படும். அதிகார வர்க்கத்தின் காலில் விழும் கலாச்சாரம் அவர்களுக்குத் தெரியாது. அதே சமயத்தில் குசேலனாக இருக்கும் நண்பனைப் பார்க்கப்போகும்போது, அவனது ஏழைத்தந்தை காலில், 'பெஹ்ரி பென்னா ஜீ' என்று விழுந்து வணங்கவும் தவறமாட்டார்கள். ஆரம்ப காலத்தில், ஏன் இப்போதும்கூட அவர்களுக்கு மதராஸி என்றால் சற்று இளப்பம்தான். தில்லி போனபோது நான் முதலில் கற்றுக்கொண்டது பஞ்சாபி வசவுகளை எப்படிக் குரல் ஏற்ற இறக்கத்துடன் உச்சரிப்பது என்பதே. ஒரு சர்தார் பேச ஆரம்பித்தால், ஒரு வார்த்தைக்குள் இரு வசவுகளாவது நிச்சயம் இருக்கும். Most of them are unprintable! குல்தீப் சிங் எனக்கு அடிக்கடி கொடுத்த சர்ட்டிபிகேட் இது: 'ஸாலே! பத்துப் பஞ்சாபியைக் கொன்னுட்டு நீ ஒரு மதராசி பிறந்திருக்கே. பஞ்சாபி தா பாப் ஹோ, ஸ்ஸாலா!' 
(புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணி : 214,215)
	எனக்கு இதில் முன்னோடியாக இருந்தவர் "We have so many donkeys as PMs" என்று சொன்ன எழுத்தாளர் குஷ்வந்த் சிங். என் வீட்டுக்கு வந்தால் அவருக்குப் பிடித்த ஷிவாஸ் ரீகலை பேகம் அக்தர் இசையுடன் பருகுவார். மூன்றுக்குமேல் என்றுமே கிடையாது. என் முன்னாலேயே ஒருநாள் என் மனைவியைப் பார்த்து, "Jamuna, You are very beautiful. One day, I am going to elope with you!" என்று சொன்ன 94 வயதாகும் Lovable கிழட்டு ராட்சசன்! Sex, Scotch and Scholarship என்ற அவர் எழுதிய புத்தகத்தில் வரும் ஒரு வரி: I started drinking at the age of 25, I have never been drunk even once in the sixty years of drinking. (புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணி : 216)
ரோஜாவின் ராஜா :
	ஓரமாக நின்று, சாந்தமான அவரது முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, 'இந்த உத்தமர் சில வருடங்களுக்கு முன்னால், புகழின் உச்சியிலேயே இறந்திருக்கலாமே - 1962 சீனப்போரின் அவலங்களையும், கிருஷ்ணமேனன், சீனப்பிரதமர் சூ-என்-லாய் போன்றோரின் பொய்களையும், வஞ்சகங்களையும் தவிர்த்திருக்கலாமே' என்று நினைக்கத் தோன்றியது. 
பிரபல புகைப்படக் கலைஞர் ரகு ராய் எடுத்த ஒரு படத்தில் வாயில் சிகரெட்டுடன் உதட்டைப் பிதுக்கியபடி சோகமாகத் தோற்றமளிப்பார் நேருஜி. தமிழ்நாட்டின் வரைபடத்தை உற்றுக் கவனித்திருக்கிறீர்களா? அதில் நீண்ட மூக்குடன் சிகரெட் குடிக்கும் நேரு எனக்குத் தெரிவார். சிகரெட்டாகத் தெரிவதுதான் இப்போது சில அரசியல்வாதிகளுக்கு இனிப்பாகவும், சிலருக்கு புளிப்பாகவும் இருக்கும் ராமர் பாலம்! டி.வி.யில் தினமும் வானிலை அறிக்கை படிக்கும்போது, பின்னால் இருக்கும் தமிழ்நாட்டைக் கூர்ந்து கவனித்தால், அதில் உங்களுக்கும் நேருஜி தெரியக்கூடும்! (புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணி : 227)
லெனின் :
	"லெனின் சார், உங்களுடைய Sense of Values - ஐ நான் மதிக்கிறேன். ஆராதிக்கிறேன். ஆனாலும் ஒரு வயதுக்குமேல் நமக்கு ஓரளவு Sense of Proportion - ம் தேவையாக இருக்கிறது. அறுபது வயதான பின் நம் குழந்தைகள் ஆசைப்படுகிறார்களேன்ற ஒரே காரணத்துக்காக, நமக்கு விருப்பமில்லாவிட்டாலும், திருக்கடையூர் கோவிலில் உட்கார்த்தி வைக்கப்பட்டு, குடம் குடமாகத் தண்ணீர் அபிஷேகம் செய்து கொள்வதில்லையா? அதிலும் ஒரு சந்தோஷமிருக்கிறது. அரசியலில் உங்கள் வயதே ஆன சுதந்திர இந்தியா எத்தனை சமரசங்களுக்கு உட்பட்டிருக்கிறது? நமக்கெல்லாம் விழாவெடுக்க யாரும் க்யூவில் காத்துக்கொண்டிருப்பதில்லை. இந்த விழா நீங்கள் சொல்லி ஏற்பாடு செய்ததல்ல. மற்றவர்கள் மகிழ்வுக்காக கொஞ்சம் விட்டுக் கொடுங்களேன்!" என்று கேட்டுக் கொண்டேன். (புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணி : 284)
	போன மாதம் நடந்த திரு.கக்கன் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது வாழ்க்கையில் சில சம்பவங்களைக் கொண்ட ஒரு குறும்படம் தயாரிக்கப்பட்டது. அதில் நான் கக்கனாக நடித்தேன். ஏனென்றால் திரு.கக்கனைப்போல் வாழமுடியாது,
	இந்தியாவிலேயே இரண்டாவது முறையாக ஒரு தமிழனுக்கு சிறந்த இயக்குநருக்கான தங்கத் தாமரை விருது 2003-ல் என் நண்பர் லெனினுக்குக் கிடைத்தது, ஊருக்கு நூறுபேர் படத்துக்காக. அந்தச் செய்தி அன்று நம் தமிழ்ச் சானல்களுக்கு முக்கியமாகப்படவேயில்லை. 'மானாட மயிலாடுவதில்' தான் அவர்களுக்கு அக்கறை. மலையாள ஏஷியாநெட் மூலம்தான் நான் செய்தியறிந்தேன் (படத்தில் நானும் தலையைக் காட்டியிருக்கிறேன்!). அதற்கான ரொக்கப்பரிசு ரூ.25000 - த்தை, படவிழாவுக்காக நாங்கள் கோவை போயிருந்தபோது, தொண்டாமுத்தூர் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுக்குத் தானமாகக் கொடுத்துவிட்டார். சரி, போனால் போகட்டும் என்று பார்த்துக் கொண்டிருந்த எனக்கு இன்னும் அதிர்ச்சியளித்த விஷயம், அவர் தனக்கு ஜனாதிபதி கழுத்தில் போட்ட தங்கப் பதக்கத்தையும் கழட்டி அந்த மாணவன் கழுத்தில் போட்டதுதான்! அந்தப் பதக்கம் இப்போது சேட் காயலான் கடைக்குப் போகாமல், அந்தப் பையன் வீட்டில்தான் இருக்குமென்று நம்புவோம். (புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணி : 288,289)
அன்னை தெரசா :
	எனக்கு அன்னை தெரசாவிடம் ஒரு தீராத மனக்குறையுண்டு. வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே உழைத்தவருக்கு தன் மரண நேரத்தை தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை. ஆம், அன்னை இறந்த நாளில் தான் இளவரசி டயானாவும் பாரீசில் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். எல்லா ஊடகங்களும் காமிராவைத் தூக்கிக்கொண்டு அவர் பின்னால் போய்விட்டன. எல்லா மலர் வளையங்களும் டயானாவுக்கே வைக்கப்பட்டன. அன்னையின் மரணம் "Mother Theresa also died" என்ற அளவில் இரண்டாம் பட்சமாகப் போய்விட்டது. இந்த விளம்பர யுகத்தில், இறக்கும்போதும் சரியான அநரம் பார்க்க வேண்டியிருக்கிறது! (புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணி : 297)
சுஜாதா :
	சுஜாதாவின் எழுத்துலகத்தை 'நைலான் கயிறுக்கு முன்/நைலான் கயிறுக்குப்பின்' என்று பிரித்தால், நைலான் கயிறுக்குப்பின் அவரைக்கட்டவே முடியவில்லை! (புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணி : 338)
இ.பா :
	இ.பா. அரசின் கலைமாமணி விருதை வேண்டாமென்று மறுத்தவர். தனது கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி தயங்காமல் சொல்பவர். அமெரிக்காவில் வசிக்கும் தன் மகன் முகுந்த் சிரமப்பட்டு வாங்கிக்கொடுத்த 'பச்சை அட்டையை (American Green Card) அங்கு வசிக்க தனக்குப் பிடிக்கவில்லையென்று அங்கேயே வீசி எறிந்துவிட்டு, ஆற்காட்டாரின் மின்வெட்டுகளை சந்திக்க நிரந்தரமாக சென்னை வந்தவர். (புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணி : 339)

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *