பெண்ணியப் பார்வையில் ஆண்கவி உலகு

படைப்புத் துறையில் இயங்குகின்ற ஒரு பெண்ணாகச் சக ஆண் கவிஞர்களது படைப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்வதும் சமயங்களில் அவை குறித்துப் பகிர்தலும் மிக முக்கியமான செயல் என்று நான் கருதுகின்றேன். 
	நான் ஒரு பிரதியோடு சந்திப்பு கொண்டு, வெளியே எடுத்து வருகின்ற 'உள்ளார்ந்த அறிவின்' மீது இலக்கியத் திறன் தனது கவனிப்பைச் செலுத்துகிறது. நான் ஒரு வாசகி என்பதை விட ஒரு பெண் வாசகி என்பதும், பெண்கள் எழுதுகின்ற பிரதிகளைப் படிப்பதற்கும், ஆண்கள் (மிகக் குறிப்பாக இங்கு ஆண் கவிஞர்கள்) எழுதுகின்ற பிரதிகளைப் வாசிப்பதற்குமான சிற்சில வேறுபாடுகளை, அதிர்வுகளைத் தொட்டுச் செல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். 
	இரண்டு மிகப் பெரிய சவால் பரப்புகள் என் முன்பு. முற்றிலும் இறுதியென அறுதியிடப்படாத / 'பெண்ணியம்' & 'ஆண் கவி உலகு' - இவற்றிடையேயான பயணம் என்பது ஒரு முழுமைப்பட்ட பார்வையாக இருக்க இயலாது என்பதால் - I accept with humbleness - I am restricting myself to situate, participate & point out few junctures - in this process. 
	இங்கு நான் ஜானதன் கல்லருடைய மிக முக்கியமான கூற்றொன்றைச் சுட்ட விரும்புகிறேன். 
	ஷேக்ஸ்பியரின் சமகாலத்து வாசகனுடைய எதிர்பார்ப்பகளிலிருந்து வேறுபட்ட எதிர்பார்ப்புகளோடு 1990களின் வாசன் 'ஹேம்லட்'டை அணுகுகிறான். வாசகர்களுடைய எதிர்பார்ப்பு எல்லைகளைப் பல்வேறுபட்ட காரணிகள் பாதிக்கலாம். வாசகர் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அது என்ன வேறுபாட்டை உண்டுபண்ணுகிறது, அது என்ன வேறுபாட்டை உண்டு பண்ணவேண்டும் என்று பெண்ணிய விமர்சனம் சர்ச்சித்துள்ளது. 'ஒரு பெண் வாசகர் என்ற கருதுகோள் (hypothesis) ஒரு பிரதியின் பாலியல் சங்கேதங்களுடைய தனிச்சிறப்பின் மீது நம்முடைய கவனத்தை ஈர்ப்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பிரதியைப் பற்றி நம்முடைய புரிந்துகொள்ளலை எவ்வாறு மாற்றுகிறது?' என்று எல்ய்ன் ஷோவால்டர் (Elaine Showalter) கேட்கிறார். இலக்கியப் பிரதிகளும் அவை பற்றிய பொருள் விளக்கங்கள் குறித்த மரபுகளும் ஒரு ஆண் வாசகரையே கற்பித்தில் கொண்டிருப்பதாகவும் ஒரு ஆணின் கருத்துப் பார்வையில் பெண் வாசகர்களையும் (பிரதிகளை) வாசிக்கத் தூண்டுவதாகவும் தோன்றுகின்றன. எவ்வாறு படைப்புகள் பல்வேறு யுக்திகள் மூலம் ஆண்மயப் பார்வையை நியதியாக்குகின்றன என்பதைப் பெண்ணிய விமர்சகர்கள் இலக்கிய ஆய்வில் ஆராய்ந்துள்ளார்கள். அவ்வகைக் கட்டமைப்புகள் மற்றும் விளைவுகள் குறித்த ஆய்வு, பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் கூட எவ்வித வாசிப்பு முறைகளை மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் சர்ச்சித்துள்ளார்கள். (இலக்கியக் கோட்பாடு, 101)
	இப்படி வாசிப்பு முறைகளை மாற்றவேண்டும் என்கின்ற பட்சத்தில் ஒரு பெண் வாசகியாக, ஆண்களது கவி உலகு (தமிழ் இலக்கியப் பரப்பில்) எவ்வாறு எனக்கு அறிமுகமாகின்றது, அர்த்தப்படுகின்றது, பகிரப்படுகின்றது என்பதை விவாதிப்பதே எனது நோக்கம். பெண்ணியப் பார்வை என்பது - மிகக் குறிப்பாக ஆண்மையக் கருத்தாடல்களின் புரிதலும், அதனைத் தகர்க்கின்ற தெளிவும், கூடுதலாக ஆணைப்புரிந்து கொள்கின்ற தன்மையும், ஒன்றிணைந்த, பெண்ணிய நோக்குள்ளது என்பதே இங்கு மிக முக்கியம். 
தமிழ்க் கவிதை வரலாறு மூவாயிரமாண்டு பாரம்பர்யம் உள்ளதெனும் போது, அதன் ஆண் கவி உலகை ஒரு பிடியில் அள்ளுவது என்பது பூனை கடலைக் குடிக்க எண்ணுவது போலத்தான். ஒரு வசதி கருதி கடந்த 10 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகளுக்கு உட்பட்ட ஆண் கவிஞர்களது படைப்புகள் என வரையறுத்துக் கொண்டாலும் கூட - அது எவ்வகையில் மிகச் சரியான அணுகுமுறை என்கிற நியாயமான கேள்வி எழுகிறது. ஆகவே, நான் கால வரையறை, குறிப்பிட்ட சில கவிஞர்கள் போன்ற சட்டகங்களை விடுத்து, என் பார்வைக்குக்கிட்டிய, கைப் பரப்பில் கிடைத்த புத்தகங்களிலிருந்து சில கவிதைகளைக், கவிஞர்களைச் சுட்டுகிறேன். தவிர்க்கப்பட்ட, விலக்கப்பட்ட, மறக்கப்பட்ட கவிஞர்கள் என்கிற வார்த்தைகளை இங்கு தயவுசெய்து கற்பிதம் செய்து கொள்ளக் கூடாது. இது ஒரு சிறு முன்னோட்டம் - முழுமை பெற்ற ஒரு கருத்தாக்கக் கட்டுரை அல்ல! 
	இத்தலைப்பு பெரும் கடல். கடற்கரையில் நின்று சிப்பியைக் கூட இதில் பொறுக்க முடியாது. நுரைப் பூக்கள் சிலவே உங்கள் பார்வைக்கு இங்கு! மேலும் கவிதைப் பரப்பில் இயங்குகின்ற ஒரு பெண் மட்டுமே நான் என்கிற தெளிவும், சிறந்த படைப்பாளி அல்ல என்கின்ற புரிதலும் எனக்கு உண்டு! 
	ஒரு பெண்ணாக ஆண் கவி உலகை அணுகும்போது "ஓரு பிரதியின் அர்த்தம் என்பது அதனுடைய வாசகனின் அனுபவம்" என்கிற கூற்று முன்நிற்கின்றது. இங்கும், நான் ஜோனதன் கல்லரின் மிக முக்கியமான இந்தக் கேள்வியை முன்வைக்கின்றேன் - "நோக்கம், பிரதி, சூழமைவு, வாசகன் - இவற்றில் எது அர்த்தத்தைத் தீர்மானிக்கிறது?" எடுத்துக்காட்டாக - ரவி சுப்ரமண்யனுடைய பின்வரும் இக்கவிதைகளைப் பாருங்கள் –

பெண்
	ஒட்டிக் கொண்ட மகரந்தங்கள்
	சூல்
	கனத்துக் கொண்டிருந்தது

	பொழுதுகளை இதமாக்கிய பிரமையில் இருந்த போதுதான்
	மனச்சுவர்கள் அதிர்ந்து நொறுங்க
	வந்து விழுந்தது அச் சொல்
	
	இலக்கு தவறாது வெடித்த
	அச்க்ஷணத்தின் அதிர்வு கொடூரமானது

	பின் ஒரு நிலையில் இருக்க விடாதபடி
	உலுக்கி எடுக்கும்
	அடி வயிற்றை துளைக்கும் வலி

	உதறிக் கதற முடியாதபடி
	தவித்துத் திமிறின
	மடக்கிக் கட்டிய கால்கள்

	அசைத்து அசைத்து அரற்றும் ஆகிருதியை
	அழுத்திப் பிடித்தபடி கரங்கள்

	தளதளக்கும் பனிக்குடத்தின் பிசுபிசுப்பு கசிகிறது
	உக்கிரம் கொண்ட வலி தொண்டை வரள சபிக்கிறது

	'மூச்சை இன்னும் இழுத்து விடு
	பல் கடித்து இன்னும் அழுத்தி
	இன்னும் அழுத்தி....இழுத்து விடு'

	வாதை நிரம்பிய இரவு 
	நீண்டு கொண்டே யிருக்கிறது

	திடீரென குத்துப் பட்டது போல்
	கிழிபட்டு வீறிட
	மயக்கமும் நிசப்தமும்

	சுருட்டிப் போட்ட அழுக்குத் துணியாய்
	துயர் வடியாத நிர்வாணத்தோடு
	உதடு கடித்தபடி மெல்லக் கண் திறந்த அவள் முன்
	கொழகொழப்பும் ரத்தமும்
	திருத்தப் படாத நஞ்சுக் கொடியுமாய்
	தாதி காண்பித்தபோது
	அவள் கையில் இருந்தது கடவுளின் கருணை.

சீவு
	சிக்கெடு 
	அலங்கரி 
	சிரி 
	பூட்டு 
	பூசு 
	உடுத்து 
	பளபளப்பெல்லாம் கூட்டு 
	எல்லாம் அவிழ்க்கத்தான்
	இவை இரண்டுமே ஒரு பெண்ணாலும் எழுதப்பட்டிருக்கலாம் என்கிற பொதுத்தன்மை கொண்டவை - இன்றைக்குப் பாலுமை, மாற்றுப்பாலினம், ஒருபால்புணர்ச்சி முதலியனவை அடைந்துள்ள மாற்றங்கள், அவற்றிற்கான அங்கீகாரங்கள் - இவற்றை முன்வைத்துப் பார்க்கும்போது - அந்த இரண்டாவது கவிதை ஒரு பெண் இன்னொரு பெண்ணைப் பார்த்து எழுதுவதாகவும் இருக்கலாமே என எனது பெண் வாசக மனம் கேட்கிறது. இந்தக் கவிதையை எழுதிய ஆண் கவி மனதை முதற் கவிதைக்காகக் கொண்டாடும் பெண் வாசக மனம், இரண்டாவது கவிதையைப் பெண்ணிய நோக்கில் கடுமையாக உதாசீனம் செய்யும். அப்படியெனில் - அந்த ஆணின் கவி உலகை எதனை வைத்து நான் அளக்க? நோக்கம், பிரதி, சூழமைவு, வாசகன் - இவற்றின் எதன் துணையோடு நான் பயணிக்க?
	அக்கவிதைகளின், 
1.	நோக்கம் - இரண்டிலும் வெவ்வேறான ஒன்றைச் சுட்டுகின்றன. முதல் கவிதை அச்சொட்டாகப் பெண்ணின் உடல், மன, ரீதியான பிரசவ அழுத்தமும், ஆசுவாசமும் குறித்துப் பேசுகிறது. இரண்டாவது - புணர்ச்சிக்கான தேவையை, நடைமுறையை மிக யதார்த்தமாகச் சொல்கிறது. 
2.	பிரதி - இரண்டு பிரதிகளுமே இப்பின்நவீனத்துவக்காலக் கட்டத்தில், மறுவாசிப்பில் வேறு அர்த்தம் தருகின்றவை. முதல்கவிதையில், தாய்மை என்கின்ற பண்பைச் சிலாகித்துப், போற்றி, பிரசவித்தலைப் புனிதமாக்கி, குழந்தைப் பிறப்பினைக் கருணை என்பதை - காலம் தோறும் கட்டமைக்கப்பட்ட ஆண் மையக் கருத்தாடலாகப் பார்க்கலாம் - மறுவாசிப்பில்! 
இரண்டாவது கவிதையைத், தன்பாற்புணர்ச்சியை விரும்புகின்ற ஒரு பெண்ணோ, ஆணோ எழுதுகின்ற பிரதியாகவும் பார்க்கலாம் - மறுவாசிப்பில்! 
3.	சூழமைவு - "அர்த்தம் என்பது சூழமைவிற்குக் கட்டுப்பட்டது - ஆனால் சூழமைவு எல்லையற்றது" என்கிறார் ஜோனதான் கல்லர். 

எடுத்துக்காட்டாக, 
	அமெரிக்க வரலாற்றில் அடிமை முறையின் பிரசன்னம் (presence) பல சமயங்களில் ஒப்புக்கொள்ளப்படவில்லை. ஆனால் அது அமெரிக்க இலக்கியத்தில் தனது அடையாளத்தை ஆழமாகப் பதித்திருக்கிறது என்று டோனி மாரிசன் வாதிடுகிறார். மேலும் எல்லைப்புறச் சுதந்திரம், தடையற்ற சாலை வழி உரிமை, தடையற்றக் கற்பனைச் சுதந்திரம் என்று சுதந்திரம் பற்றிய பிரச்சனையில் அமெரிக்க இலக்கியம் தன்மை ஈடுபடுத்திக்கொண்ட இடங்கள் இந்த அடிமையாக்கச் சூழமைவில் வைத்து வசிக்கப்பட வேண்டும். ஏனெனில் இந்த அடிமையாக்கச் சூழமைவிலிருந்துதான் அவை முக்கியத்துவம் பெறுகின்றன. பிரிட்டிஷ் பேரரசின் காலனிகளில் நிகழ்ந்த சுரண்டல்தான் பிரட்டனில் மதிப்புமிக்க குடும்ப வாழ்க்கையின் ஆதாரமான செல்வவளத்தை வழங்குகிறது. இந்தப் பின்புலம் ஜேன் ஆஸ்டினுடைய நாவல்களில் விலக்கப்பட்டுப் போயிருக்கின்றன. ஆனால் அந்தப் பின்புலத்தில் வைத்தே அவை விளக்கப்பட வேண்டும் என்று எட்வர்ட் சயீத் சொல்லியிருக்கிறார். அர்த்தம் சூழமைவுக்குக் கட்டுப்பட்டது; ஆனால் சூழமைவு எல்லையற்றது. (இலக்கியக் கோட்பாடு, 108) என்றும் சுட்டுகிறார் அவர்.
	அப்படியெனில் ஒரு ஆண் கவி உலகின் மேற்சொன்ன கவிதைகளைச் சூழமைவின் எல்லையற்ற வெளிக்குள் எப்படி வரையறுக்க எனும் குழப்பம் வருகின்றது. அவனது மனம் சார்ந்த வாழ்க்கை, சகாப்தத்தின் சமூக இறுக்கங்கள், மாறுதல்கள் குறித்த அக்கறை, எதிர்பாலினம் (பெண்) மீதான கருத்தியல் மாற்றங்கள், புரிதல்கள், அணுகுமுறை - இவை நாள்தோறும், மறுவாசிப்பிற்கு உட்படுத்தப்படுகின்ற இக்காலக்கட்டத்தில், ஒரு ஆண்கவி உலகைச் சிற்சில கவிதைகளை வைத்து மட்டுமே அவதானிக்க முடியுமா? அப்படி முடிந்தாலும் அது சரியான கணிப்புதானா?. 
	4) வாசகன் : வாசகன் என்று வரும்போது ஜோனதன் கல்லர் - ஒரு படைப்பின் அர்த்தம் என்பது ஏதோ ஒரு கணத்தில் ஆசிரியன் தன்னுடைய மனத்தில் கொண்டிருந்த ஒன்று அல்ல; அது வெறுமனே படைப்பின் ஒரு பண்பும் அல்ல, ஒரு வாசகனின் அனுபவமும் அல்ல. அர்த்தம் தப்பிக்கவே இயலாத ஒரு கருத்தாகும்; ஏனென்றால் அது எளிமையான ஒன்றும் அல்ல, எளிமையாகத் தீர்மானிக்கப்படமுடிவதும் அல்ல. அது ஒரே சமயத்தில் ஒரு அகமியின் அனுபவமும் ஒரு படைப்பின் பண்பும் ஆகும். அது நாம் என் புரிந்துகொள்கிறோம் என்பது மட்டுமே அல்ல. மேலும் அது நாம் பிரதியில் என்ன புரிந்துகொள்ள முயல்கிறோம் என்பதும் ஆகும். (இலக்கியக் கோட்பாடு, 107) என்கிறார். ஆக, பெண் வாசகியாக நான் என்ன புரிந்து கொள்கிறேன் என்பதைவிடவும், நான் என்ன புரிந்து கொள்ள முயல்கிறேன் என்பதை ஒரு பெண் என்கிற கருத்தாக்கம் முன்மொழிகிறது, தீர்க்கமான தெளிவான பெண்ணியப் புரிதல் அதனை முன்னெடுக்கிறது என்பதே இங்கு என் தெளிவு.
	ஜோனதன் கல்லர் இன்னொன்றும் சொல்கிறார் - இயல்பான ஒன்று என்று ஏற்றுக்கொள்ளப்படும் எதையும் விமர்சிப்பது, இயல்பான ஒன்று என்று நினைக்கப்பட்டது அல்லது அறிவிக்கப்பட்டது எதுவும் உண்மையில் ஒரு வரலாற்று, கலாச்சார விளை பொருளே என்று தெளிவுபடுத்திக் காட்டுவது அண்மைக் காலக் கோட்பாட்டின் பிரதான கருப்பொருளாக இருந்து வந்திருக்கிறது. இங்கு என்ன நிகழ்கிறது என்பதை வேறு ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம்: 'இயல்பான பெண்ணாக என்னை நீ உணர வைக்கிறாய்', என்று அரிதா ப்ரேங்க்ளின் (Aretha Franklin) பாடும்போது, அவளை ஒரு ஆண் நடத்தும் விதத்தில், கலாச்சாரத்துக்கு முந்தைய அந்த 'இயல்பான'ப் பாலின அடையாளம் தனக்கு உறுதிப்படுத்தப்படுவது கண்டு அவள் மகிழ்ச்சியுறவதாகத் தோன்றுகிறது. ஆனால், 'இயல்பான ஒரு பெண்ணைப்போல என்னை நீ உணர வைக்கிறாய்' என்று அவளுடைய கூற்று, இயல்பாகக் கருதப்படுகிற அல்லது வழங்கப்பட்டுள்ள அவளுடைய அடையாளம் என்பது ஒரு கலாச்சாரப் பங்கு என்பதை உணர்த்துகிறது. அந்த அடையாளம் கலாச்சாரத்திற்குள்ளேயே உண்டாக்கப்படுகிற ஒரு விளைவாகும். அவள் ஒரு 'இயல்பான பெண்' இல்லை. மாறாக அவள் ஒரு இயல்பான பெண்ணாக உணரவைக்கப்பட வேண்டியிருக்கிறாள். இயல்பான பெண் என்பவள் ஒரு கலாச்சார விளைபொருளாகவே இருக்கிறாள். (இலக்கியக் கோட்பாடு, 21 & 22) ஆக "நான் ஒரு இயல்பாக உணர வைக்கப்பட்ட பெண். இயல்பான பெண் என்பவள் ஒரு கலாச்சார விளைபொருளாக இருக்கிறாள்" என்கிற தெளிவோடு அணுகும் போது தான் ஒரு பெண் வாசகி கண்டடைகின்ற ஆண் கவி உலகு இங்கு மேலும் தெளிவாகின்றது. அதன் நுண்ணரசியலும் பிடிபடுகின்றது. 
	ஆனால் முற்றிலுமாகக் கோட்பாடுகளின் வழியாக மட்டுமே ஒரு ஆண் கவி உலகைக் கண்டுணர முடியாது - அது அவசியமுமில்லை. பொதுவாக எனது உரையாடல்களில் கோட்பாடுகள் அல்லது அவை குறித்த மேலைநாட்டுச் சிந்தனையாளர்களது மேற்கோள்கள் அதிகமிருப்பதாக ஒரு சாரார் - சிலர் குற்றமாகக் கூடச் சுட்டுவதுண்டு. அவர்களுக்குமே நான் சொல்வது ஜோனதன் கல்லரின் இக் கூற்றைத்தான் - பிரதிகளின் தொகுப்பைப் புரிந்து கொள்ள கோட்பாடுகள் எனக்கு உதவுகின்றன - அவ்வளவே! ஆனால் அதைக் கற்று நாம் துறைபோக முடியாது - என்கிற புரிதல் எனக்குண்டு. அது அவ்வளவு அவசியமுமல்ல. என்றாலும், சில தெளிவார்ந்த கண்டைதலுக்குத், தர்க்க பூர்வமான நிலைப்பாட்டிற்கு, திறனாய்ந்து ஒன்றைச் சுட்டுவதற்கு, பிரதிகளின் அரசியலைச் சுட்ட, தகர்த்துக் கட்டமைக்க அவை உதவுகின்றன - அவ்வளவே. 
	'என்ன, நீங்கள் லக்கானைப் படிக்கவில்லையா? (இலக்கியப் படைப்பில்) பேசும் அகத்தின் பிரதிபலிப்பு அமைவைக் கணக்கில் எடுக்காமல் தன்னுணர்ச்சிப் பாடலைப்பற்றி எப்படி உங்களால் பேச முடியும்?' அல்லது, 'பால் தன்மை மற்றும் பெண்களின் உடல்கள் நரம்புக் கோளாறுகளுக்கும் ஆளுாகும் தன்மை ஆகியவற்றைத் தீவிர விவாதத்துக்குள் கொண்டு வருதல் பற்றிய பூக்கோவின் விளக்கத்தைப் பயன்படுத்தாமலும், அந்நிய ஆட்சியில் பெருநகர்க் குடிமகனைப் பற்றிய கட்டுமானத்தில் காலனியத்தின் பங்கை காயத்ரி ஸ்பைவக் மெய்பித்துக் காட்டுவதைப் பயன்படுத்தாமலும் விக்டோரிய நாவலைப்பற்றி உங்களால் எப்படி எழுத முடியும்? சிலசமயங்களில், கோட்பாடு உங்களை அறிமுகமில்லாத களங்களில் கடிமான வாசிப்புக்கு ஆட்படுத்தும் கொடிய தண்டனையாகக்கூடக் காட்சியளிக்கும், இப்படியான வாசிப்பில், ஒரு படிப்புப் பணியை முடித்தபின் கிடைப்பது ஓய்வு இல்லை, மேலும் கடினமான பணிகள்தான். (ஸ்பைவைக்கா? சரி, ஆனால் ஸ்பைவைக்கைப் பற்றிய பெனினட்டா பேரியின் விமர்சனத்தையும் அதற்கு ஸ்பைவக்கின் மறு மொழியையும் படித்தீர்களா?) எனும் கூற்றை இங்கு நினைவுகூர்கின்றேன்.
	கோட்பாட்டில் வல்லமை பெறமுடியாத தன்மையே அதற்கான எதிர்ப்புக்கு முக்கியமான காரணமாக உள்ளது. இதில் எவ்வளவுதான் துறை போனவராக உங்களை நினைத்துக் கொண்டாலும், ழான் பாத்ரிலா, மிகைல் பக்தின், வால்டர் பெஞ்சமின், ஹெலின் சிசூ, சி.எல்.ஆர்.ஜேம்ஸ், மெலனி க்ளெய்ன், அல்லது ஜுலியர் க்ரிஸ்தெவா-வை 'நீங்கள் படிக்க வேண்டுமா' அல்லது அவர்களை நீங்கள் 'வசதியாக' மறந்துவிடலாமா என்பதில் நீங்கள் உறுதியாக ஒரு முடிவுக்கும் வரமுடியாது. (இலக்கியக் கோட்பாடு 22,23,24) என்பதையும் நான் நம்புகின்றேன்.
	ஆக, முற்று முடிவாக, ஒரு சில கவிதைகளை வைத்து, சில கோட்பாடுகளை உட்புகுத்தி அவை ஒரு ஆண் எழுதியவை என்பதற்காக, அவற்றின் எடைக்கல்லில் மேலேற்றி ஆண் கவி உலகை அவதானிப்பது என்பது எவ்வளவு அபத்தமோ அதே அளவு அபத்தம் அந்த ஆண் கவி உலகு பற்றிப் பேசாமலிருப்பதும்!
	சமூகவியல் எனும் நூலில் ஸ்டீவ் புரூஸ் (தமிழில் பூரணச்சந்திரன்) சொல்கிறார் : 
	தனிப்பட்ட ரசனை என்பதற்கும், உண்மையான சிறப்பு என்பதற்கும் இடையில் நியாயமாக எங்கு ஒரு கோடு கிழித்துக் காட்ட முடியும்? சர்வதேச யூத நிதியாளர்களின் கூட்டமைப்பினால்தான் உலகம் இயங்குகிறது என்றோ, மேற்கத்திய அரசுகள் வெளிக்கிரகத்தவர்களோடு தொடர்ந்து தொடர்புவைத்திருக்கிறார்கள் என்றோ தனிப்பட்ட நம்பிக்கை வைப்பதற்கான மக்கள் உரிமையை நான் ஆதரிக்கிறேன். ஆனாலும் இந்த நம்பிக்கைகள் சரியானவை அல்ல என்றும் வலியுறுத்துவேன். (சமூகவியல், 126)
	ஒரு கலாச்சாரத்தில் ஆண்குழந்தைகளும் பெண்குழந்தைகளும் சமமாக நடத்தப்படலாம். ஆனால், பெற்றோர் ஆவதற்கான கஷ்டங்களும் மகிழ்ச்சிகளும் உலகம் முழுவதும் ஒன்றாகத் தான் உள்ளன. அதுபோலத்தான் கவிஞராக உள்ளதில், கவிஞராக ஆவதற்கான கஷ்டங்களும், மகிழ்ச்சியும் ஒன்றுதான்! பல நூற்றாண்டுகளாக, கிழக்கு ஆப்பிரிக்காவின் மசாய் இனத்தவர் கடினமான சூழல்களில் மாடுகளை வளர்ந்து வந்துள்ளனர். ஆகவே ஸ்காட்லாந்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள மாட்டுக்கறி விவசாயிகளோடு அவர்களுக்கு எவ்விதத் தொடர்பு இருக்கமுடியாது என்று நம்பலாம். ஆனால், ஸ்காட்லாந்தின் பான்ஷயர் பகுதியின் மெத்லிக் கிராமத்தைச் சேர்ந்த சிறுவிவசாயி ஒருவர் மசாயுடன் ஏற்படுத்திய கூட்டின் விளைவாகத்தான் ஆப்பிரிக்காவில் சிம்மெண்டல் மாடுகளின் முதல் தலைமுறை 1990இல் உருவாயிற்று. தங்கள் உலகங்கள் வெவ்வேறாக இருக்கலாம், ஆனால் இரண்டு இனத்தவரும் மாடுகளை நேசிப்பவர்கள், எனவே பொதுச்செயல்பாட்டிற்கான பொதுமொழி ஒன்றை உருவாக்கிக் கொள்ள முடிந்தது. (சமூகவியல், 128) அவ்வகையில், ஆண், பெண் கவி உலகு வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் பொதுச் செயல்பாட்டிற்கான ஒரு பொதுமொழியாகக் கவிதையை உருக்கொள்ள வைப்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. அது வெறுமனே ஆண் உலகு, அல்லது தனித்ததொரு பெண் உலகு என - இவற்றைக் கறாராக, வரையறுத்து அதன் அடையாளங்களைச் சொல்கின்ற மொழியால் மட்டுமே தகவமைக்கப்பட வேண்டுமென்பதில் எனக்கு, மேற்சொன்ன கூற்றினாலாலேயே மாற்றுக் கருத்தும் உண்டு.
	இங்கு நான் 'சார்பியல் நோக்கு' என்ற ஒரு பார்வையையும் முன்வைக்க வேண்டும். இதுகுறித்து ஸ்டீவ் புருஸ் மேலும் சொல்வது :- 
	கலாச்சார ஆய்வுகளில் சார்பியல்நோக்கு ஏன் பிரபலமாகியுள்ளது என்பதை நாம் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். பிளைட்டனைவிட ஆஸ்டின் சிறந்த எழுத்தாளாரா என்பதும், பிக்காசோவைிட கான்ஸ்டபிள் சிறந்த ஓவியரா என்பதும் ரசனையைச் சார்ந்த விசயம். பல சமூகங்களில், சமூகப் படிநிலை தான் ரசனையின் படிநிலைகளையும் உருவாக்குகிறது. ஒரு குறிப்பிட்டவர்க்கம் எது நல்ல கலை எது மோசமானது என்பதை முடிவுசெய்கிறது.1950களில் பிரிட்டனில், 'எனக்குக் கலைப்பற்றி அதிகம் தெரியாது, ஆனால் நான் எதை ரசிச்கிறேன் என்று எனக்குத் தெரியும்' என்று அதிகமாகப் படிக்காத கீழ்மத்தியதர வகுப்பினர் கூறுவதாக மேற்குடித் தற்பெருமையாளர் (கீழ்வகுப்பினரின் ரசனையின்மையைக் குறைகூறும் விதமாக) நகையாடுவது வழக்கம். (சமூகவியல் 125 & 126)
	எனது ரசனையின் அடியொற்றி இங்கு சில கவிதைகளைப் பகிர்ந்துகொள்கிறேன் –
 
கணையாழி கவிதைகள்

இதயவீணை தூங்கும்போது 
	பேசும் கேள்என் கிளியென்ணுன் 
	கூண்டைக் காட்டி. வால் இல்லை 
	வீசிப் பறக்கச் சிறகில்லை 
	வானம் கைப்பட வழியில்லை 
	'பார்பார் இப்போது பேசு'மென 
	மீண்டும் மீண்டும் அவன் சொல்ல 
	'பறவை என்னுல் பறப்பதெனும் 
	பாடம் முதலில் படி'யென்றேன். 

கைதியின் குழந்தை 
	நீலவானின் 
	நினைவே மறந்த 
	கூண்டுக் கிளிகளின் 
	காதலில் பிறந்த 
	குஞ்சுக் கிளிக்கு
	எப்படி, எதற்கு 
	வந்தது இறகுகள்! 
				- கல்யாண்ஜி
				ஜனவரி 1978

துணை 
	வராதே போ
	மழையே 
	முற்றத்தில் ஊசலிட்ட
	குருவிகள் இரண்டு 
	மூன்று நாட்களாய் 
	பட்டினி. 

காதலன் 
	ஜில்லென்ற 
	தொடுதலில் 
	உஷ்ணங்கள் 
	ஜனிப்பது 
	என்ன ரசாயணம்? 
				-தஞ்சாவூர்க் கவிராயர் 
				ஏப்ரல் 1973

'காலிஃபிளவர்' 
	கோஸின் தமக்கை நீதானோ 
	என்பது போலே ருசிக்கிறாய் 
	இலையை இடுப்பில் சுற்றியே 
	வெளுப்பாய் நீயும் மினுக்குறாய் 
	சிறிதே மஞ்சள் பூசிக்கொண்டு 
	ஐஸ்க்ரீம் போலும் தோன்றுகிறாய் 
	புதுசாய் சந்தையில் இருந்தாலும் நீ 
	துணியேன் அணிந்து கொள்ளலை 
	தமிழில் உனக்கு பெயரில்லை 
	தமிழ் மண்ணில்தானே விளைகிறாய் 
	காலிப்பூவென சொன்னாலோ 
	ஆட்சேபம் ஏதும் உனக்குண்டோ? 
				-ஆத்மாநாம் 
				ஜூன் 1973

'யாவரும் கேளிர்'
	கார்டு கவர்களின் 
	இந்தி எழுத்தை 
	நன்றாய் அடித்து 
	மசியால் மெழுகி 
	அஞ்சல் செய்யும் 
	தனித்தமிழ் அன்பர் 
	'பாபி' பார்த்ததும் 
	'இருடிக் கபூரும் 
	இடிம்பிள் கபாடியாவும் 
	(ரகரமும் டகரமும் 
	மொழிமுதல் வாரா) 
	அருமையாய் நடித்தனர்' 
	என்று தனது 
	டயரியில் எழுதிப் 
	புன்னகை செய்தார் 
				-ந. ஜயபாஸ்கரன்
				ஏப்ரல் 1974

பெண் மனம் 
	சூர்யன் புத்ரியோ 
	சந்திரிகையின் சோதரியோ 
	மாறன் மனைவியின் 
	மறுபிறப்போ - நீயென 
	புகழ ஆசைதான். 

	பண்டு தொட்ட காலம் முதல் 
	எத்தனைப் பாடாவதி கவிகள் 
	பிதற்றி யிருப்பார்கள் இப்படி. 

	இரவல் வார்த்தைகளில் 
	புகழ்ந்தால் உனக்கென்ன பெருமை? 

	புதிதாகப் புகழ 
	ஒன்றும் தோன்றவில்லை 
	நீயே சொல்லடீ - என்றேன். 

	அவள் நாணிக்கோணி 
	தலை கவிழ்ந்து 
	முகம் சிவந்தும் சொன்னாள்;

	'டிம்பிளை விட 
	நான் அழகுதானே....?' 
				- கி. ஞானதீபன் 
				ஜூன் 1974

	நான் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல இக்கவிதைகள் மிகக் கறாராகக், காலவரிசைப்படியோ, அனைத்துப் படைப்பாளிகளின் ஆளுமைகளையும் உள்ளடக்கிய பட்டியலில் தேர்ந்தோ எடுக்கப்பட்டவை அல்ல - என் மனப் பரப்பில் நினைவில் நிற்கின்ற, சிலவற்றை எனது நோக்கின் கைத்துணையாக மேலே சுட்டியிருக்கின்றேன். இவற்றில் 'பெண் மனம்' என்கிற ஒரு கவிதையைத் தவிர மற்றவை அனைத்தும், ஒரு ஆண் எழுதியது என்கின்ற அடையாளங்களற்று, ஒரு பொது மொழியில் இயங்குகின்றன. ஏன் 'பெண் மனம்' எனும் கவிதை கூட மீள் வாசிப்பில் ஒரு பெண்ணே இன்று எழுதியிருக்கக் கூடிய சாத்தியத்தைத் தன்னுள்ளே வைத்திருக்கிறதல்லவா? ஓரினச் சேர்க்கையினைத் தெளிவாகத் தேர்ந்த பெண்ணொருத்தி தன் துணைக்காகவோ அல்லது இவைபோன்ற தெரிவுகளற்ற மற்றொரு பெண் வெறும் 'பகடிக்காகக்' கூட 'பெண் மனம்' கவிதையினை எழுதலாம் - எழுதியருக்கவும் கூடும். 
	ஆண் உடலைக் கொண்டாடியவர் Michael Angelo. அதே Michel Angelo பெண் உடலைக் கொண்டாடி இருந்தாலும், ஒரு கலைஞனாக நாம் அவரது படைப்பை உச்சி முகர்வோமே அன்றி, வெறும் ஆண்மையவாதம், அல்லது பெண்உடலைப் போகத்தின், காமத்தின் வடிகாலாக அவர் கையாண்டுள்ளாரென அதனை ஒருக்காலும் தவறாகப் புரிந்து கொள்ளமாட்டோம். கலையின் மொழி நமக்குத் தருகின்ற அற்புதமான தரிசனம் அது. நுண்ணரசியலைப் புரிந்து கொள்ளும் அதே நுட்பமுடன், அழகியலையும், ஒரு கலைஞனின் கலை வெளிப்பாட்டு நோக்கம், அதன் வெளிப்பாட்டுத் தன்மை இவற்றின் கூடலையும் ஒரு தேர்ந்த ரசிகராக நாம் பிற கலைப்படைப்புக்களில் எவ்வாறு கைக்கொள்கிறோமோ, அதே அளவுகோலை 'ஆண் கவி உலகு' நமக்களித்துள்ள கவிதைகளை உணரவும், பகுக்கவும், துய்க்கவும், அவதானித்து எடைபோடவும் நாம் துணை கொள்ள வேண்டும். 
	தனித்த விருப்பங்கள், நம்பிக்கைகளின் உண்மைத்தன்மை - இவை குறித்த தெளிவு ஒரு சார்பியல் தன்மைக்கான மறுப்பினையும் நமக்குத் தருகின்றது. ஆண், பெண் - இவர்களது கவி உலகு வெவ்வேறானது என்றாலும் கூட, ஏன் ஒரு பொது மொழி சாத்தியமில்லை? அப்படிச் சாத்தியப்படுத்துதலை ஒரு சார்பியலாக ஏன் ஒரு பெண் மறுக்க வேண்டும்? துல்லியமான, ஸ்தூலமான ஒரு பிரிவினைக் கோட்டை அவள் ஏன் இரு உலகுக்கிடையில் கிழிக்க வேண்டும் - பெண்ணிய விவாதங்கள், வாதங்களின் கறார்த்தன்மை எந்த அளவிற்கு இரு கவி உலகிற்குமான பொதுத்தன்மையைக் குலைத்துப் போடுகின்றன - இவைதான் - இந்தக் கேள்விகள்தான், இனி நாம் இந்தத் தளத்தில் மேலும் பயணம் செய்யவேண்டிய போக்குகள் என நினைக்கிறேன். 
	ஒரு சார்புநோக்குள்ளவர் எந்த விமரிசனத்தையும் கருத்தியல் என்று கூறிப் புறக்கணிக்கின்ற தவறைப் ஒரு பெண்ணிய நோக்குள்ள வாசகியாக நான் செய்துவிடக் கூடாதென்றே கருதுகின்றேன். 
	அமெரிக்கச் சமூகவியலாளர் கிளிபோர்டு கீயர்ட்ஸ் கூறியதுபோல, கிருமிகளற்ற ஒரு சுற்றுச்சூழலை உருவாக்க இயலாதென்று நமக்குத் தெரியும். இருந்தாலும் நமது இதயச் சிகிச்சை ஒரு சாக்கடையில் செய்துகொள்ள விரும்பமாட்டோம். நவீன மருத்துவ மனையில்தான் செய்துகொள்ள விரும்புவோம்.(சமூகவியல், 125) 
	அந்த நவீன மருத்துவமனையில் ஆண்களும், அவர்களது கவி உலகும் அடக்கம் என்கின்ற தெளிவு இருந்தால் போதும் - பெண் வாசகிக்கு! பெண்ணியப் பார்வையின் பலத்தோடு கூடுதலாக மேற்சொன்ன அவதானங்களும் அதிமுக்கியம் என்கிற கடப்பாடும் அவளுக்கு மிக மிக அவசியம்!
	பின்வரும் ரமேஷ் பிரேதனின் கவிதை எனக்கு மிக நெருக்கமானது :

அவளும் அவனுக்குமிடையே ஒரு பழம்
	மாதவிலக்கு நாட்களில் 
	அவள் நெற்றியில் 
	குங்குமம் இடுவதில்லை 

	அவன் அந்த நாட்களில் 
	ரத்தத் திலகமிட்டு 
	அலுவலகம் செல்வான் 

	இணையரின் அன்யோன்யம் 
	இசங்களுக்கு அப்பாற்பட்டது 

	பிழிந்தால் 
	மனிதக் குருதி 
	வடியும் பழம்
	ஒரு ஆணின் கவி உலகை அரசியலற்று, வெறும் அன்பால் மட்டுமே நான் ஒருபோதும் அங்கீகரிக்கப் போவதில்லை. அவ்வகையில் "இணையரின் அன்யோன்யம், இசங்களுக்கு அப்பாற்பட்டது" என்பதை எனது இதயம் அச்சொட்டாக ஏற்கிறது. ஆனால், "பிழிந்தால் மனிதக் குருதி, வழியும் பழம்" என்பதே பகுத்தறிவு சார், தெளிவான, புத்திஜீவியான பெண்ணிற்கு உவப்பானதும், சரியானதுமாகும் என்கின்ற எடைத்தராசும் என்னிடத்தில் உண்டு. 
	அவளும் அவளுக்குமிடையேயே கனிந்தும், 
	புதிதாகவும், செழுமையாகவும், 
	உரமாகவும் கவிதைப் பழம் என்றுமிருக்கட்டும்!


 
உதவிய நூல்கள் : 

	1) கணையாழி கவிதைகள் - முதல் பத்து: கணையாழி வெளியீடு.
	2) இலக்கியக் கோட்பாடு - மிகச் சுருக்கமான அறிமுகம் : ஜானதன் கல்லர் (தமிழில், ஆர். சிவகுமார்)
	3) சமூகவியல் - மிகச் சுருக்கமான அறிமுகம்: ஸ்டீவ் புரூஸ் (தமிழில், க. பூரணச்சந்திரன்)

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *