பேராசிரியர் பட்டிமன்றம் 29.01.2022

பேராசிரியர் பட்டிமன்றத்தில் "பேராசிரியருக்கு வலிமை சேர்ப்பது ஆளுமைத்திறனே" எனும் தலைப்பில் ஆற்றிய உரை
      ''ஒரு புயற்பொழுதில்
      கலைஞரும் நீயும்
      இரு கரங்களாகக்
      காத்திராவிட்டால்
      திராவிட தீபம்
       அணைந்து போயிருக்கும்!"
      தனது இளம் வயதில் அந்த பேச்சில் அவர் குறிப்பிடுகிறார் “தன்னுணர்வு பெற்றாலன்றித் தமிழன் அடிமை மயக்கம் நீங்கித் தன்னுரிமையுடன் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு வழியுமுண்டோ?”
      பொதுவுடைமைக் கொள்கையை நிலைநாட்டிய கார்ல் மார்க்ஸுக்கு உற்ற துணையாக விளங்கிய ஏங்கல்ஸ் போல, சமூக நீதிக் கொள்கையை நிலைநாட்டிட தலைவர் கருணாநிதிக்கு உற்ற பெருந்துணையாக எப்போதும் உடன் இருந்தவர் பேராசிரியர். இப்போதும் அந்தக் கொள்கையை உறுதிபடக் காத்திடவும், தி.மு.க-வின் வளர்ச்சியை மென்மேலும் மேம்படுத்தவும் உங்களின் ஒருவனான எனக்கு எப்போதும் தந்தையைப் போல் துணைநிற்கிறார்.
       பேராசிரியர் அவர்கள் மதுரையில் நடைபெற்ற இளைஞர் அணி துவக்க விழாவில், திமுகவின் கொள்கைகளை தாங்கி பிடித்து, அத்தீபத்தை அணையாமல் பாதுகாக்க வல்லவர் தளபதிதான் என்று அடையாளம் காட்டியவர் இனமானப் பேராசிரியர், அடையாளம் காட்டியது மட்டுமல்லாமல், பிற்காலத்தில் தளபதியை செயல் தலைவராக்கி அழகு பார்த்தவர் பேராசிரியர் அவர்கள். அவர் சுட்டிக் காட்டிய தலைவர் தளபதியின் அரிய செயற்பாடுகளால் ஒவ்வொரு இயக்கத் தொண்டனும் இன்று பெருமிதம் கொள்கிறான்.
       1957-ல் தி.மு.க பங்கேற்ற முதல் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் அன்பழகன். தொடர்ந்து சட்டமன்ற மேலவை உறுப்பினராக ஒருமுறை, நாடாளுமன்ற உறுப்பினராக ஒருமுறை, சட்டமன்ற உறுப்பினராக எட்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சுகாதாரத்துறை, கல்வித்துறை, நிதித்துறை அமைச்சராகவும் மக்கள் பணியாற்றிருக்கிறார்.
       பேராளுமை என்றால் என்ன, நண்பர்களே- அனைத்து விதமான பன்முகத் திறமைகளும் கொண்டவர், அதனைச் சிறப்பாகப் பல்வேறு தளங்களிலும் வெளிப்படுத்துபவர் என்பதுதானே. என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்த தெளிவு, அதை எப்படியாவது செய்ய வேண்டும் எனும் அறம்; அதனை நேர்படச் செய்கின்ற ஆற்றல் - இவற்றின் ஒட்டுமொத்தக் கலவையே ஆளுமை. இதன் ஓர் அலகு தான் ஆற்றல். நடுவர் அவர்களே, அவ்வகையில் பேராசிரியருக்கு பெரும் வலிமை சேர்ப்பது அவரது பன்முக ஆளுமைத் திறனே. அவரது ஆளுமையின் அலகுகள் எத்தனை எத்தனை:
        தான் பெற்ற கல்வித் தகுதியாலும், பணியனுபவத்தாலும் பேராசிரியர் - "நாங்கள் உங்களுக்காகப் பேசுகிறோம்... பேராசிரியர் எங்களுக்காகப் பேசுகிறார்... அதன் அர்த்தம் என்னவென்றால்... நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் எங்கள் உரையில் இருக்கும். நாங்கள் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பேராசிரியரின் உரையில் இருக்கும்” என பல மேடைகளில் பேசியிருக்கிறார் கருணாநிதி.
         1942ம் ஆண்டு திருவாரூர் விஜயபுரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் இனைந்து நடத்திய சிக்கந்தர் விழாவில் அறிமுகமாகி முத்தமிழ் அறிஞர் நீடு துயில் கொள்ளும் வரை அவரை நீங்கிடா உயிர் நண்பர்.
         கருணாநிதி, அன்பழகன் நட்பென்பது தனிப்பட்ட இரு மனிதர்களின் நட்பாக மட்டுமல்லாமல், திராவிட இயக்கக்கொள்கையைக் காத்திடும் நட்பாக, தி.மு.கழகத்தை காத்திடும் நட்பாக, தமிழக மக்களின் நலனை மேம்படுத்தும் நட்பாகவே கடைசி வரையிலும் இருந்தது. அன்பழகன் எனும் சுயமரியாதைக்காரனின் வாழ்வில் கருணாநிதியுடனான நட்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
         தம் கட்சித் தலைவருக்குத் தோழன் மட்டுமல்ல, இன்பமோ, துன்பமோ, அவரை விட்டகலா அரணாகவும், கொள்கை ஆசிரியராகவும் இருந்தவர்.
         நமது கழகம் துவங்கப்பட்ட 1949ஆம் ஆண்டு, பேரறிஞரால் திமுகவின் தொழிலாளர் அணிக்குத் தலைமை தாங்கப் பணிக்கப்பட்டுச் சிறப்புற பணியாற்றிவர். சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், அவை முன்னவர், நாடாளுமன்ற உறுப்பினர், சுகாதாரத்துறை, கல்வித்துறை, நிதித்துறை அமைச்சர், எழுத்துப்பணி, இயக்கப்பணி, மக்கள் பணி, பகுத்தறிவு மேடைப் பிரச்சாரப் பணி, இலக்கியப் பணி, இதழாளராகப் பத்திரிக்கைப் பணி... என எத்தனையத்தனை அலகுகள் கொண்ட பேராளுமை அவர்! இந்த ஆளுமை தானே பேராசிரியருக்கு பெரும் வலிமை சேர்ப்பது!
         நம் கழக வரலாற்றை எழுதிய கே.ஜி.இராதாமணாளனைத் துணை ஆசிரியராகக் கொண்ட ‘புதுவாழ்வு’ எனும் பத்திரிக்கையை நடத்திய இதழாளர்.
          அதனால்தான், தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ளச் சொன்னால்,
மனிதன் 
அன்பழகன்
சுயமரியாதைக்காரன்
அண்ணாவின் தம்பி
கலைஞரின் தோழன்...
இப்படித்தான் அறிமுகப்படுத்திக்கொள்வேன் எனக் கூறி, தன் வாழ்நாள் முழுவதும் அதன்படி வாழ்ந்தும் காட்டினார் அன்பழகன்.
        நடுவர் அவர்களே... எதிர்கட்சி அன்பர்களே... கொஞ்சம் மூச்சு நிதானித்து மீண்டும் சொல்கிறேன், உங்களுக்கு இருக்கின்ற ஒரேயொரு மந்திரச் சொல் ‘ஆற்றல்’ மட்டுமே.
ஆனால் என் பக்கத்தில் பேராசிரியரின் ஆளுமைப் பட்டியலைக் கேட்டீர்கள் அல்லவா?
தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் ஆகிவிட முடியுமா? எனும் பழமொழியை அறிவீர்கள் தானே?
         தடி எடுக்கின்ற ஆற்றல் மட்டும் இருந்தால் போதுமா, தண்டல் வேலையைச் சரியாகச் செய்ய மனிதாபிமானம், ஆற்றல், நுண்மாண் நுழைபுலம், தொலைநோக்குப் பார்வை, சமூக நீதிக்கான போர்க்குணம், பகுத்தறிவுப் பயணம், இனமான உணர்வு, உரிமைகளுக்கான எழுச்சி - இத்தனை அலகுகளும் நிறைந்த ஆளுமை வேண்டும், நண்பர்களே!
        அத்தனை பண்புகளுக்கான உதாரணங்களைப் பேராசிரியரின் வாழ்க்கையில் பார்க்கலாம்.

சமூக நீதிக் காவலர்:
	தலைவர் கலைஞர் அவர்களிடம் ஆலோசித்துப் பணிமூப்பு அடிப்படையில் (இனவாரி சுழற்சி முறையைப் பின்பற்றி) பணிநியமனம் வழங்கிட வழி செய்தார்கள். 

மனிதாபிமானம்:
	கல்வித்துறை அதிகாரிகளை அழைத்து, மகளிருக்குப் பணியிட வாய்ப்புகள் வழங்கும் பொழுது, அவர்கள் குடியிருப்புப் பகுதியில் இருந்து வெகுதொலைவில் பணியமர்த்தாது, அருகிலேயே பணியிட ஆணை வழங்கிட வேண்டும் என்று உத்திரவிட்டார்கள்.
	கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு ஒரு கோப்பு வருகிறது, 8 ஆண்டுகள் பணிமுடித்த ஆசிரியர் ஒருவரை பணி நீக்கம் செய்ய வேண்டுமென்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 
	அந்த ஆசிரியர் சமர்ப்பித்திருந்த கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் நம்பகத்தன்மை உடையவை. அவரைப் பணிநியமனம் காலம் கடந்து செய்யப்பட்டமையால் - முறையற்ற நியமனம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அமைச்சர் அவர்கள் துறையின் செயலரை அழைத்து, இத்தனை ஆண்டு காலம் ஆசிரியர் பணிபுரிந்தவர் இதனை நம்பி திருமணம் செய்து படிக்கும் நிலையில் உள்ள குழந்தைகளை வைத்துக்கொண்டு, இவர் எந்தப் பணிக்குச் செல்லமுடியும் என்ற நிலையை அரசு உயர் அதிகாரிகள் அதனை ஏற்றுக் கொள்ளாத நிலையில், இரண்டு பக்கத்திற்கு மேல் அமைச்சர் அவர்களே கைப்பட எழுதி, தலைவர் கலைஞர் அவர்களிடம் அமைச்சர் அவர்களின் நிலைப்பாட்டில் ஆதரவாக ஒப்புதல் அளித்தார்கள்.
எந்தவித பரிந்துரைக்கும் செல்ல இயலாத ஒரு ஆசிரியப் பெருமகனுக்கு உதவி நல்கியதை அறிந்த ஆசிரியர் தனது குடும்பத்தினருடன் வந்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த சமயத்தில், சென்னைக்கு ஏன் வீண் செலவு செய்து வந்தீர்கள். கால் கடுதாசு போட்டால் போதுமே! எனக்கு வரக்கூடிய அனைத்துக் கடிதங்களையும் முழுமையாக நான் படிப்பவன் என்று கூறினார்.
	
அமைச்சர் பணி:
	ஒரு நாள் அலுவலகப் பணிகளை முடித்துக் கொண்டு பிற்பகல் 1.45மணிக்கு இல்லம் புறப்பட்ட சமயம், கோப்புகளை சுமந்து வந்த தலைமைச் செயலகப் பணியாளரிடம் எங்கு கொண்டு செல்கிறீர்கள் எனக் கேட்டதற்கு தங்கள் அலுவலகத்திற்குத் தான் என்று கூறினார். உடன் அமைச்சர் அவர்கள் அலுவலகத்திற்குத் திரும்பிவிட்டார்.
	1996லிருந்து ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி சீரமைப்பு மாநாட்டினை அனைத்துப் பள்ளிகளிலும் தேவையான ஆய்வக உபகரணங்கள், மர இருக்கைகள், நூல்கள் முதலியவை பரந்த உள்ளம் கொண்டோரிடம் பெற்று பிரித்து அளித்து வழங்கினார்கள். 
	10 மணிக்கு அரசு நிகழ்ச்சி துவக்கம் 9.30 மணிக்கே அங்கு சென்றுவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மாணவச் செல்வங்களைக் கண்டிப்பாக மலர்தூவி வரவேற்பதைத் தவிர்த்தும், முடிந்தால் சாரண சாரணிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தேசிய மாணவர் படையைச் சேர்ந்தவர்கள் வரவேற்பு வழங்கினால் போதும் என்ற நிலையில் உறுதியாக இருந்தார்.

அப்பழுக்கற்ற நேர்மையாளர்:
	அந்த சமயம் ஒரு உதவியாளர், மாநில விருந்தினர் மாளிகையில் இருந்து மதிய உணவை வரவழைக்கலாம் என்று கூறினார். அமைச்சர் அவர்கள் அரசு இல்லங்கள் ஒதுக்கப்படும் வரை வெளியூரில் உள்ள அமைச்சர்கள் தான் பயன்படுத்த வேண்டும் என்று கூறி, என்னிடம் ஒரு இருபது ரூபாயைக் கொடுத்து ஒரு தயிர் சாதமும் பக்கோடாவும் வாங்கி வரச் செய்து கோப்பினை முழுமையாக ஒப்புதல் அளித்து மாலை 6 மணிக்கு வீடு திரும்பினார்கள்.
ஒரு ஆசிரியர் மாறுதலுக்கு 15கும் மேற்பட்ட முக்கியப் பிரமுகர்கள் பரிந்துரைத்த நிலையில், துறை அதிகாரிகளிடம் உள்ள மாறுதல் வேண்டுகோளையும் பெற்று, வரைபடங்களை (Map) வைத்துக் கொண்டு, நீண் தூரத்தில் காலம் காலமாகப் பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கு, அத்தனை பரிந்துரைகளையும் ஒதுக்கி வைத்தார்கள். தான் ஒரு அமைச்சர் என்ற நிலைக்கு அப்பாற்பட்டு, எழுத்தர் பணியினை மேற்கொண்டு நியாயத்தின் அடிப்படையில் செயல்பட்டார்கள்.
	கோப்புகளை அன்றைக்கே பார்வையிட்டு முடிப்பது, அலுவலகம் வர இயலாத ஆழ்நிலையில் இல்லத்திற்கே கோப்புகளை வரவழைத்துப் பார்த்து அனுப்பிவிடுவார்கள். அரசுக் கோப்புகளை தாமதப்படுத்துவதில் சிறிதளவும் உடன்பாடு கிடையாது. 
 
      அறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்
      திறன் அறிந்தான் தேர்சித் துணை. 
என்ற குறள் தகுந்த ஆளுமைகளை அடையாளங் காண உதவுகிறது. அதன் பொருள்:
     அறவழிகளை அறிந்து, அறிவமைந்த சொல்லையுடையவனாய், எப்பொழுதும் செய்யும் செயலின் திறத்தை அறிந்தவனே மன்னனுக்கு தேர்ந்த துணையாவான். பேராசிரியரின் ஆளுமைத் திறனை பற்றியது இக்குறள்.
      நமது இயக்கத்தின் முன்னோடியாக திகழ்ந்தவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்றோர் பேராசிரியரின் ஆளுமைத்திறத்தினை கண்டு, உணர்ந்து, அவரிடம் பல்வேறு பொறுப்புகளை ஒப்படைத்தனர், நமது இன்றைய தலைவரை, தளபதியின் தலைமை பண்புகளை அறிந்து மதுரையில் நடந்த இளைஞர் அணியின் துவக்க விழாவில் தளபதிதான் எதிர்காலத்தில் திமுகவை வழிநடத்த வல்லவர் என்று அறிவித்ததே அவரது ஆளுமை திறத்திற்கு சான்று.
      பேராசிரியர் ஓர் இதழாளர் என்பது பலபேருக்கு தெரியாது. “ புதுவாழ்வு “ என்ற மாத இதழை பிப்பரவரி 1948 முதல் தொடர்ந்து பல பொருளாதார சிக்கலுக்கிடேயே நடத்தியவர், பேராசிரியர் தான் ஆசிரியர், திமுக வரலாற்றை எழுதிய கே. ஜி. இராதாமணாளன் தான் அப்பத்திரிக்கையின் துணை ஆசிரியர். 
       திமுக ஆரம்பிக்கபட்ட 1949 ஆண்டு, அறிஞர் அண்ணா அவர்கள் பேராசிரியரை திமுகவின் தொழிலாளர் அணியை துவக்கி தலைமை தாங்க பணித்தார். அப்பணியினை வெற்றிகரமாக நடத்தி தொழிலாளர் அணியினை நிறுவனப்படுத்தியவர். 
       கலைஞரின் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கபட்டவுடன் அவர் செய்த முதல் காரியம் அத்துறையின் பெயரை மக்கள் நல்வாழ்வுத் துறை என பெயர் மாற்றியது எனலாம். 
       இன்றைய கரோனோ காலத்தில் மிகப் பெரிய அளவில் உலக கவனத்தை ஈர்த்துள்ளது தமிழகத்தின் பாரம்பரியமான சித்த மருத்துவம் மற்றும் ஏனைய மாற்று மருத்துவ முறைகள்.

       பேராசிரியரின் பெருமையைக் கழகத்தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ அறிஞர் அண்ணா அவர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே கண்டெடுத்த இந்த முத்தினைத், தமிழ்த்தாயின் மணிமகுடத்திலே பதித்து மகிழச்சியடைந்தார். அறிவு, ஆற்றல், அனுபவத்தில் அண்ணாவுக்கு அடுத்து எனக்கு அண்ணனாக இருக்கிறார்.
       குறளின் அறம், பொருள், இன்பம் மூன்றையும் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்புக்கு உவமை கூறுவது அவரது வழக்கம். வீடுபேறு புகையிலையைப் போல, அதைத் தவிர்த்துவிடலாம் என்பது அவரது கொள்கை விளக்கம். திருக்குறளைப் படித்து அதனால் மனம்கவரப்பட்டு வள்ளுவரை வியந்து போற்றிய ஆல்பர்ட் சுவைட்சரை அடிக்கடி மேற்கோள் காட்டுவது அவரது விருப்பங்களில் ஒன்றாக இருந்துள்ளது.
        சித்த மருத்துவத்துவம் மற்றும் பாரம்பரிய தமிழ் மருத்துவத்திற்கு பேராசிரியரின் பங்களிப்பு மிகவும் சிறப்பான ஒன்று. 
        தமிழ்தாத்தா உவேசா அவர்கள் எப்படி தமிழ் ஒலைச்சுவடிகளை தேடி அலைந்து அச்சிட்டாரோ, அதே முறையில் சித்த மருத்தவ ஓலைச்சுவடிகளை தேடி கண்டுபிடிக்க ஒரு மருத்துவரை டாக்டர் துரைராஜ் என்பவரை நியமித்து அவற்றை தேடி கண்டுபிடித்து ஓலைச்சுவடிகளை படியெடுத்து அதை அச்சில் ஏற்றி சித்த மருத்துவ களஞ்சியம் உறுப்பெற காரணமாக திகழ்ந்தவர். சித்த மருத்துவ கல்லூரியை பாளயங்கோட்டையில் நிறுவியவர்.
 
நிதி அமைச்சர்:
       நிதி அமைச்சராகப் பணிபுரிந்த சமயம், அரசு சிலைகளைப் பராமரிக்க ஏழு ஏணிகளாக கொள்முதல் செய்ய வேண்டும் என் ஒரு கோப்பு வருகிறது. அதற்கு அமைச்சர் அவர்கள் அனைத்து சிலைகளும் கடற்கரைச் சாலையிலும் சில சிலைகள் சற்று தூரத்திலும் அமைந்துள்ளது. அனைத்துத் தலைவர்களுக்கும் ஒரே நாளில் மரியாதை செய்யப்படுவதில்லை. வெவ்வேறு காலகட்டங்களில் செய்யப்படுகிறது 2 ஏணிகள் வாங்கவும், ஏற்கனவே பழுதாகி உள்ள ஏணிகளைச் செப்பளிட்டுப் பயன்படுத்தவும் பணித்தார்கள் அரசுக்கு வீண் செலவு வைப்பதில் உடன்பாடு கிடையாது.

அரசிற்கு வீண் செலவு வைக்காதவர்:
        மேலும் பல்வேறு காலகட்டங்களில் அமைச்சராகப் பணிபுரிந்த காலத்தில் வெளியூர் சுற்றுப் பயணத்தின்போது வானூர்தியைத் தவிர்த்து, தொடர் வண்டியில் முதல் வகுப்பில் இரண்டு படுக்கை உள்ள பெட்டியில் பயணம் செய்வார், நான்கு படுக்கை உள்ள பெட்டியில் பயணம் செய்வது அரசுக்கு வீண் செலவினம் என்பார்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *