பிரபஞ்சனை ஆங்கிலத்துறை - சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு மொழிபெயர்ப்பு குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தில்தான் (2002) முதன் முதலாக நேரடியாகச் சந்தித்தேன். "உங்கள் கதைகளில் வருகின்ற பெண் கதாபாத்திரங்களுக்கெல்லாம் ஏன் 'சுமதி' என்றே பெயர் வைக்கிறீர்கள்" என்றேன். "'சுமதி' எனது ஸ்நேகிதியின் பெயர். ஆமாம் ஏன் கேட்கிறீர்கள்? என்றார். "என் பெயரும் சுமதி"தான் என்றவுடன், கண்கள் சுருங்கச் சிரித்தார். அந்த 'ஸ்நேகிதி' என்ற சொல் அத்தனை மிருதுவாக அதன் முழு அர்த்தமுடன் ஒளிர்வதாக அன்றெனக்குத் தோன்றியது. அவருடைய மரி என்னும் ஆட்டுக்குட்டி சிறுகதையை அக் கருத்தரங்கத்திற்காக நானும், மீனாஷி ஹரிஹரன் எனும் பேராசிரியையும் இணைந்து மொழிபெயர்த்துள்ளோம் என்றேன். 'அப்படியா' என்று அந்தக் கதைக்குள் அவரும் அற்புதமரி எனும் பதின்பருவ ஆட்டுக்குட்டியாய் நானும் பயணிக்கத் துவங்கினோம். அவரது படைப்புக்கள் மீதான எனது வியப்பும், லயிப்பும் அந்த நேரடிச் சந்திப்பிற்குப் பின்பு மேலும் கூடியது. அவரது கனவு மெய்ப்பட வேண்டும் புதினத்தின் கதாநாயகியின் பெயரும் சுமதிதான். கணேசன் எனும் கொடுமைக்கார, கணவனால் மணவாழ்க்கை கசந்த சுமதியிடம் தோழி கல்பனா "நீ ஏன் அவனை அவ்வளவு சுலபமாக உன்னிடம் அனுமதித்தாய்" என்பாள். சுமதி அதற்கு "சில பெண்கள் செய்வது போல், நான் அவரை ஏங்க வைக்கவில்லை, பிகு பண்ணிக் கொள்ளவில்லை. இழக்கக்கூடாததை நான் இழக்கிறேன் என்பது போலப் பாவனை பண்ணி அவரைக் குற்ற மனப்பான்மைக்கு ஆட்படுத்தவில்லை... நானும் அவரை விரும்புகிறபோது, நான் இந்தச் சங்கமத்தை எந்தக் காரணம் சொல்லி மறுப்பது? ஏன் மறுக்க வேண்டும்" எனச் சொல்கின்ற பதில் ஒட்டு மொத்த பெண்களுக்கான தெளிவான, தீர்க்கமான குரல். பெண்கள், அவர்களது தனிப்பட்ட உணர்வுகள், சமூகத்தில் மறுக்கப்பட்ட அவர்களது இடம், வெளி குறித்துப் பிரபஞ்சன் அளவிற்கு எழுதிய படைப்பாளிகள் வெகு சொற்பம். வாழ்வின் ஆதாரம் அன்பு என்பதில் தீராத பற்றுள்ள படைப்பாளி. இலக்கியம் வாழ்வின் மீதான காதலை உறுதிப்படுத்தி, நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனும் தன் படைப்புகளின் வாயிலாக என்ன ஆகர்சித்தவர். சரி, தவறு எனும் தட்டையான மணற்பரப்பில் இல்லாமல், பலவீனங்களுடான சதுப்புநிலத்தில் வேர்கொள்பவை பிரபஞ்சனது படைப்புக்கள். தீர்ப்புக்கள் அற்ற, தவறும், உணர்தலும், அல்லது அதுவுமற்ற உரிமையான பாத்யதை மனிதர்களுக்கே என்பதால்தான் தனது கட்டுரைத் தொகுப்பிற்கே மனிதரை முன்னிறுத்தி மனிதர், தேவர், தரகர் எனத் தலைப்பிட்டுள்ளார். மனிதர்கள் தாம் அவரது கச்சாப்பொருள். "மனிதனுக்கு மட்டுமே உன்னதங்கள் சொந்தம். என் கதைகள் இந்த உன்னதங்களைச் சொல்வதற்காகவே பிறந்தவை" என்று 1986 இல் அன்னம் வெளியீடான பிரபஞ்சன் சிறுகதைகளின் முன்னுரையில் அவர் எழுதியதை வாசித்ததிலிருந்து பிரபஞ்சனை நான் மானசீகமாகப் பற்றிக் கொண்டேன். குடும்பத்தில் பெண்குழந்தை பிறக்காத, பெண்சாபமிருப்பதாக நம்புகின்ற ஒரு பெண்ணிற்கும் லஷ்மி எனும் மாட்டிற்குமான உறவைச் சொன்ன மனுஷி சிறுகதையின் வாயிலாகவே பிரபஞ்சனின் உலகத்திற்குள் நுழைந்தேன். அவரது யாரும் படிக்காத கடிதத்தில் "நீங்கள் மரம் என்றதும் அதை வெட்டி, அதனால் ஆகப்போகும் மேஜை, நாற்காலி, வீட்டுக்கு விறகு - என்று தொடர்ந்து செயல்பட்டீர்கள். நான் மரம் என்றதும் அதன் அழகு, குளுமை, பச்சை, உயிர் என்று யோசனையிலேயே நின்றுவிட்டேன்" எனும் வரிகளில் வருகின்ற அந்த 'நான்' தான் பிரபஞ்சன். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு உயிருக்குமுள்ளிருக்கின்ற, அதன் ஆன்மாவின் வண்ணத்தை வனைந்தெடுக்க அவரது பேனாவால் முடியும். 'ஐம்புலன்களையும் கூர்மைப் படுத்துவதே இலக்கியத்தின் பணி' எனும் பிரபஞ்சனது அப்பாவின் வேஷ்டியின் பச்சைக் கற்பூர வாசனையும், பூவைப்போலவே நல்ல வாசமடிக்கின்ற கள்ளின் நெடியும், இதோ இதனை எழுதுகின்ற இந்தக் கணம் எனது நாசியிலும். மகாரசிகரான பிரபஞ்சன், ஐம்புலன்களாலும் வாழ்வின் சுக, துக்கத்தைத் துய்ப்பவர். அப்பாவின் சிவப்புப்பட்டு வேஷ்டியின் நேர்த்தியைப் பற்றி, "காவேரிக்கரையில், சோற்றுக்குப் பஞ்சம் இல்லாத, வெற்றிலை பாக்குப் போட்டுச் சிவந்த, உடம்பில் இளஞ்சூடு பரவிய திருப்தியில் ஒரு மனிதன் தன் மனைவியோடு சேர்ந்து நெய்த வேஷ்டியாக இது இருக்க வேண்டும்" என்பார். அதைப்போல வாழ்வை ருசித்தும், கொண்டாடியும், கேள்விகேட்டும், விலகி நின்றும் பயன் துய்ப்பவர் தான் பிரபஞ்சனும். அந்த வேஷ்டியை பல வருடங்கள் கழித்து ஆசைதீரத் தான் கட்டிக் கொண்டு பூஜையில் அமருகின்றான் மகன். முனகலோடு வேஷ்டி கிழிந்து விடுகிறது, எழுதுகிறார் பிரபஞ்சன், "இருட்டில் குழந்தையின் கையை மிதித்து விட்டாற் போலிருந்தது". என்னால் மறக்கமுடியாத உவமை அது. இத் தொகுப்பிற்குப் பின் இன்றைக்கு ஏறக்குறைய அவரது அத்தனை படைப்புக்களையும் படித்த பின்பாகவும், ஏன் அதனை என் மனதின் அடி ஆழத்தில் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்? திப்பிலியார் எனும் அவரது கதை மாந்தன் அதில், "தென்னங்கீற்றுக்குத் தண்ணி பாய்ச்சரது இளநீ குடிக்கவா? அப்படி நினைச்சுக்கிட்டுத் தண்ணி ஊத்தரதே தப்பு. குருத்த வாட விடக்கூடாது. "குருத்து வாடினா, வாடற இடத்துல மனுசங்க இல்லைன்னு அர்த்தம்" என்று சொன்ன அந்த சொற்களுக்காகத்தான். சமூகத்தைப் போஷிப்பதோ, திருத்துவதோ எழுத்தாளனின் கடமையில்லை. ஆனால் சக உயிரொன்று நலிகையில் மானுட அறமெனும் சிறு இறகால் அதை வருடி நம்மை உயிர்ப்பிப்பவனே படைப்பாளி. அவ்வித்தையை மனிதர்களைக் கற்பதன் மூலம் கைவரப்பெற்று, கதைகளின் மூலம் அதனைக் கடத்துகின்ற ரசவாதி அவர். கதைகளின் காதலனான அவர் அடிக்கடி சொல்கின்ற கதை இது: ஆன்டன் செகாவிடம் ஒருவர், 'எதுவும் கதை ஆகுமா?' என்று கேட்டாராம். சேகாவ் சொன்னார்: "இதோ என் மேசை மேல் இருக்கும் ஆஷ்டிரேயை வைத்து கூட என்னால் கதை எழுத முடியும்" என்றாராம். 'கதைக்கு அது போதுமா?' என்றதிற்கு, செகாவின் பதில் - 'மனிதர்கள் லட்சம் ஆண்டுகளாக வாழ்கிறார்கள். பலகோடி கோடி மக்களின் வாழ்க்கை என்னை எழுது என்கிறது. ஆஷ்டிரேயை எழுதுவது, ஆஷ்டிரேயை எழுதுவது இல்லை. மாறாக மனித குலத்தை எழுதுவது...' அனுபவம், நேசம், மானுடத்தின் மீதான காதல், கனிந்த ஞானம் - இவற்றைப் பிசைந்து தகிக்குமொரு சிறு சுடரே பிரபஞ்சன். எழுதித் தீராத மனிதர்களின் பக்கங்களை அச் சுடரின் அருட்கசிவில் எட்டிப்பார்த்து மெய்மறக்குமொரு ரசிகை நான். அந்திமழையின் எழுத்தும் ஆளுமையும் சிறப்பிதழில் (ஜனவரி2017) வெளியான கட்டுரை.
No comment