ப.சிதம்பரம் ஒரு பார்வை நூல் வெளியீட்டு விழா 29.12.2012

"நின் வெண்மையும் விளக்கமும் ஞாயிற்று உள
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள
நின் சுரத்தலும் வன்மையும் மாரி உள
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள"
என்பதற்கிணங்க, என்றென்றும் என் நெஞ்சில் நிறைந்திருக்கின்ற, எங்களது ஒரே தலைவர், 
"தமிழன் வாழ்ந்தால் விட்டுக்கொடு
தமிழன் தாழ்ந்தால் முட்டுக்கொடு"
என்பதை வாழ்முறையெனத் தேர்ந்து வாழ்கின்ற வரலாறு,
"வீரர்களிடமிருந்து வாளையும்
அறிஞர்களிடமிருந்து நூலையும்
பாணர்களிடமிருந்து இசையையும்
கலைஞர்களிடமிருந்து வாழ்வையையும்
தமிழர்களிடமிருந்து ஒற்றுமையையும் பறிக்க முடியாது"
என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம், இவ்விழாவில் கலந்து கொண்டு தலைமை தாங்கிச் சிறப்பிக்கின்ற தனிப் பெருந்தலைவர், முத்தமிழ் அறிஞருக்கு என் முதல் வணக்கம். 
	உள்ளங்கை மழைநீராகவும், புயல் தாங்கும் கடல் நீராகவும், பெரு வாழ்வு வாழ்கின்ற, புத்தகத்தின் முதல் பிரதியினைப் பெற்றுக் கொள்கின்ற, அம்மா, மரியாதைக்குரிய ஆச்சி அவர்களே, 
	"ஆதியில் சொல் இருந்தது"
என்பதை மாற்றி,  
	"ஆதியில் செயல் இருந்தது"
என்றானே அறிஞர் கதே - அதனைப் போல் செயல் திறன் மிக்க அமைச்சர், தன்னுடைய கண்ணியத்தைப் போன்றே பிறருடைய சுதந்திரத்தையும் மதிக்கின்ற அபூர்வமான அரசியல்வாதி, வெளியிடப்பட்ட இப்புத்தகத்தின் கதாநாயகன், மத்திய நிதியமைச்சர் அவர்களே வணக்கம். 
	வரவேற்புரை வழங்கிய கவிஞர் இலக்கியா நடராஜன் அவர்களே, தமிழ் வாழ்த்து இசைத்த டாக்டர் சீர்காழி G.சிவசிதம்பரம் அவர்களே, வாழ்த்துரை வழங்க இருக்கின்ற, திரு. B.S. ஞானதேசிகன், எம்.பி., தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அவர்களே, டாக்டர் ஒளவை நடராசன் அவர்களே, கலைஞானி டாக்டர் கமல்ஹாசன் அவர்களே, கவிப்பேரரசு வைரமுத்து அவர்களே, பேராசிரியர் கவிமாமணி அப்துல்காதர் அவர்களே, பார்வையாளப் பெருமக்களே... வணக்கம். 
	தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான விழா இது. தேசியத்திற்கும், திராவிடத்திற்குமான உறவுப்பாலம் இந்நூல் வெளியீடு. "மனிதனின் விதி தற்காலத்தில் அரசியல் வாயிலாகத் தன் அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது" என்றார் தாமஸ் மன் (Thams Mann). விதியின் மீது நம்பிக்கை அற்றவர்கள் நாங்கள். எனவே சொல்கிறேன் - அதனைத் திருத்தி, "மனிதனின் மதி தற்காலத்தில் அரசியல் வாயிலாகத் தன் அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது". அவ்வகையில் மதி மட்டுமல்ல - இரண்டு 'நிதிகள்' இணைந்து இருக்கின்ற, அரசியல் நாகரிகத்தை, பண்பாட்டை, அவற்றின் அர்த்தத்தினை வெளிப்படுத்துகின்ற அபூர்வமான விழா இது!
	திருவாரூரில் பிறந்தவர்களும், சிதம்பரத்தில் நடராசரைத் தரிசித்தவர்களும், காசியில் இறந்தவர்களும் முக்தி பெறுவார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. எனக்கு பக்தியிலும், முக்தியிலும் நம்பிக்கை கிடையாது. ஆனால் திருவாரூரில் பிறந்தவர் மீது மாறாத பக்தியும், சிதம்பரத்தின் மீது பெருமையும் உண்டு. திருவாரூரும், சிதம்பரமும் இது போல இணைந்திருந்தால் என்றும் தமிழ்நாட்டிற்கும், அரசியல் நாகரிகத்திற்கும் அது பெருமைதான்.
	கிரேக்கத்தின் அரசியல் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டது; ரோமானியர்களின் அரசியல் அன்பை அடிப்படையாகக் கொண்டது. என் தலைவர் முத்தமிழ் அறிஞரது அரசியலோ அவை இரண்டையும் சரிசமமாகப் பிசைந்த தனித்துவமிக்கது. கிரேக்கர்களிடமிருந்து சிந்தனையையும், ரோமானியர்களிடமிருந்து நல்ல நடைமுறைகளையும் மரபு வழியாகப் பன்னெடுங்காலமாத் தமிழன் பெற்றிருக்கின்றான் என்பதன் அடையாளமாகவே ஒரு தமிழாய்ந்த தமிழன், இன்னொரு புகழ்வாய்ந்த தமிழனைப் பெருந்தன்மையுடன் வாழ்த்த வந்திருக்கின்ற விழாவாய் இது நடைபெறுகின்றது! 
	ஒரு புரட்சிப்படையின் தளபதி நிம்மதியாகத் தூங்கவேண்டுமென்றால், தனது மெய்காப்பாளனிடம் அவன் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். இன்றைக்கும் காங்கிரஸ் மேலிடம், மூன்று தலைமுறைகளாகத் தம் நம்பிக்கைக்கு உரியவராகக் கருதுவது நமது நிதியமைச்சரைத்தான். அவர் குறித்த பார்வைகள் பலவற்றைப், பல்வேறு ஆளுமைகள் பதிந்திருக்கின்ற சிறப்பானதொரு ஆவணமாக இப்புத்தகம் திகழ்கின்றது என்றால், தமிழ் மோதிரக்கை வாழ்த்தென, முத்தமிழ் அறிஞர் தம் கரத்தால் அது வெளியிடப்படுவது இன்னும் கூடுதல் சிறப்பு. 
	திராவிட இயக்கமும் தேசிய இயக்கமும் அரசியல் ¡£தியாக வெவ்வேறொனவை என்றாலும், 'தமிழன்' எனும் சரடால் நீண்ட வருடங்களாக, ஒன்றாகக் கோக்கப்பட்டவையே. தமிழகத்தின் முதலமைச்சராகப் பெருந்தலைவர் காமராஜர் பொறுப்பேற்ற அன்றே அவரை ஆதரித்து 'விடுதலை'யில் தலையங்கம் எழுதியவர் தந்தை பெரியார். அவர் ஆட்சி செய்த 9 1/2 ஆண்டுகாலமும் அவரை ஆதரித்தவர் அவர். 
	1955 குடியாத்தம் தேர்தலில் அவர் போட்டியிட்டபோது, காங்கிரஸ் ஆட்சி ஆதரவு கேட்காத நிலையில், தாமே முன்வந்து, தேர்தலில் அவரை ஆதரித்தவர் பெரியார். அண்ணாவும், "குணாளா, குலக் கொழுந்தே" எனக் கொண்டாடினார். அதில் எள்ளவும் குறையாமல் அவரை ஆதரித்தவர் என் தலைவர் கலைஞர். 
	அரசியல் ¡£தியாகக் கடுமையாக மோதிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் கூட, 1969இல் பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, பெருந்தலைவரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தி, அரசியல் நாகரிகம் படைத்தவர் அவர். பெருந்தலைவருக்கு அவரது மகன் செய்யவேண்டிய அத்தனை கடமைகளையும் செய்தவர். வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழன், தமிழர் நலன் சார் உணர்வுகளே அவர்கள்  இருவரையும், இந்த இயக்கங்களையும் இணைத்தது. 
	“அரசியல் லாபம் பெறப் பெருந்தலைவரைப் போற்றுகிறார்", எனும் விமர்சனத்திற்கு பதலளித்து அவரது மறைவினையொட்டி, முத்தமிழறிஞர், 
		"அறம் தாங்கிப் பேசுவோம் நாம், 
		அறம் தாங்கி நடப்போம் நாம்" என அவருக்கான இரங்கல் கூட்டத்தில், "காமராசர் வீட்டுக்கு எதிர் வீட்டுக்காரன் நான் கட்சியைப் பொறுத்தவரையில்! அந்த அளவில் என் கடமைகளைச் செவ்வனே செய்தேன் - உங்கள் சொந்த வீட்டு விவகாரத்தில் நிச்சயமாக ஈடுபடாத நாகரிகமான, அன்பான எதிர் வீட்டுக்காரன்" என்றார். தமிழக அரசியலிலே கட்டிக் காக்க வேண்டிய பண்பாடு எது, நாகரிகம் எது என்பதற்கு எடுத்துக்காட்டு இது. அது இன்னும் தொடர்கிறது இந்த இரண்டு இயக்கங்களிலும் என்பதன் நீட்சியே இந்த நிகழ்ச்சியும். 
	தந்தை பெரியாருக்கும், பெருந்தலைவர் காமராஜருக்குமிருந்த அபூர்வமான நட்பைப் போல, தலைவர் கலைஞருக்கும், மத்திய அமைச்சருக்குமான இணக்கம் இங்கு அழகாக இலக்கியத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 
	நாட்டு விடுதலைக் கண்ணாடியில் காமராசர் காட்டியது காந்தியடிகளின் எளிமையான முகம்; சமுதாய விடுதலைக் கண்ணாடியில் காமராசர் காட்டியது தந்தை பெரியாரின் தெளிவான முகம். இவ்விரண்டையும் சரிசமமாக, தன் இரு கண்களெனப் பாவித்தவர் நமது உள்துறை அமைச்சர். சமூகநீதி குறித்த கருந்தரங்கம் ஒன்றில், "இடஒதுக்கீடு என்கிற விஷயத்தை முதலில் தொடங்கியது நாம் அல்ல - மனு நீதி தான் - மனுகுலத்தவர்தான்" - என அடி, ஆழம் வரை சென்று அலசி ஆராய்ந்து, சமூக நீதியை நிறுவுகையில் அவருக்குப் பெரியாரின் முகம். "மனுதர்மத்தைத் தள்ளி, மனித தர்மம் ஏற்கப்பட்டது காமராஜரால் தான்" என்று 1965இல் "விடுதலை"யில் தந்தை பெரியார் எழுதியது இங்கு நினைவிற்கு வருகிறது. 
	எப்போதும் வேட்டி, சட்டை அணிந்த எளிமையான தமிழராய், தொழிலாளர்களுக்காக ஊதியம் வாங்காமல் வாதாடிய வழக்கறிஞராய், ஒரு தொழிற்சங்கப் போராளியாய், தனது இருபத்தி மூன்று வயதில் அரசியலில் அடியெடுத்து வைத்தது முதல், இன்றுவரை இவருக்கிருப்பது ஒரு காந்திய முகம். 
	பேரறிஞர் அண்ணா முதலில் "நான் தமிழன் - பிறகு மனிதன்" என்றார்; காமராசர் "முதலில் நான் ஒரு இந்தியன் - பிறகு மனிதன்" என்றார். நமது மத்திய அமைச்சரோ அரசியல் அரங்கில் இந்தியனாகவும், இலக்கிய அரங்கில் மனிதனாகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர். 
	மாக்கியவெலியின் The Prince (இளவரசன்) என்ற நூலை இங்கிலாந்தில் முதலில் படித்தவர் தாமஸ் கிராம்வெல் எனும் அறிஞர் என்பார்கள். உலக அளவில் வெளிவந்திருக்கின்ற பொருளாதாரம் குறித்த சிந்தனைகளையும், புத்தகங்களையும் இந்தியாவில் முதலில் படித்தவர் நமது மத்திய அமைச்சராகதான் இருப்பார். 
நமது மத்திய நிதயமைச்சர், "A view from the outside" (why good economics works for everyone) எனும் அருமையான ஆங்கிலப் புத்தகம் எழுதி இருக்கிறார். Indian Express பத்திரிக்கையில் அமைச்சர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அது. அபாரமான ஆங்கிலப் புலமை இருந்தாலும் எளிமையுடனும், நகைச்சுவையுடன் கூடிய நடையில் Penguin வெளியீடாக வெளிவந்துள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் காலகட்டத்தில் கூடத் தன்னை, "I was a congressman, but I was not in the congress party" என்று அழகாக, நாசூக்காகத் தெரிவிக்கிறார். Switzerland இலிருந்து, அப்போது, தான் E-Mail இல் அனுப்பிய பத்தி ஒன்று, பத்திரிக்கைக்குச் சென்று சேராததை, "It is still floating in cyberspace" என்கிறார். அப்போதைய BJP அரசின் நிதியமைச்சர் 2003 - 05 ம் ஆண்டிற்கான Jaswant Singh இன் நிதிநிலை அறிக்கை குறித்து, அமைச்சர் Sarcastic ஆக, "In Mr. Singh's budget, unintended humour has taken the place of Urudhu completes and verses from Thirukural" எனக் குறிப்பிட்டது பலரது கவனத்தையும், பாராட்டையும் பெற்றது. பொருளாதாரம் குறித்து மட்டுமல்ல subjects which are close to my heart - children, women's empowerment, HIV/AIDS, என்று பலதரப்பட்ட விஷயங்களையும் குறித்து அதில் விவாதித்துள்ளார். 
	"Let's Celebrate children, and their childhood" எனத் தெருவோரம் வசிக்கின்ற, கைவிடப்பட்ட குழந்தைகளுக்காகக், குறிப்பாகப் பெண் குழந்தைகள் குறித்து அதீத அக்கறையுடன் அதில் ஒரு கட்டுரை உண்டு. 
	"நாம் போராடப் போவது உப்புக்காக அல்ல - உரிமைக்காக" என்று முழக்கமிட்டுத் தண்டியில் காந்தி எடுத்த ஒரு பிடி உப்பு ஆங்கிலேய ஆட்சியை ஸ்தம்பிக்க வைத்தது. இந்து மதத்தின் பெயரால் நடக்கும் மத விரோத செயல்களை, உள்துறை அமைச்சராக இருந்தபோது "காவித் தீவிரவாதம்" என்று அவர் குறிப்பிட்டபோது, பெருவாரியான எதிர்ப்பு வந்தபோதும், தான் சொன்ன சொல்லைத் திரும்பப் பெறாமல் உறுதியாக நின்றபோது தேசமே இவரைத் திரும்பிப் பார்த்தது. காந்திஜிக்கு ஒரு பிடி உப்பு உரிமை என்றால்,  இவருக்கு அந்த ஒரு சொல் ‘மதச்சார்பின்மைக்கான' உறுதி.
	பர்தோலி வெறும் வல்லபாய் பட்டேலை சர்தார் வல்லபாய் ஆக்கியது - வேதாரண்யம் வெறும் வேதரத்தினம் பிள்ளையைச் சர்தார் வேதரத்தினம் பிள்ளையாக்கியது. 1997ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி மாலை 5 மணிக்கு உலகப் பொருளாதார நிபுணர்கள் ஒட்டுமொத்தமாகப் பாராட்டிய, நிதியமைச்சரின் நிதிநிலை அறிக்கை, இந்தியாவின் நிதியமைச்சரை, "ஆசியாவின் சிறந்த நிதியமைச்சராக்கியது". 
	இலக்கிய ஆர்வமிக்கவர், தமிழின் செவ்வியல் படைப்புகளில் பற்றுதலும், நவீனப் படைப்புகளின்பாற் பரிச்சயமும் கொண்ட ரசனை மிக்க மனிதர், ஒரு புத்தக வெளியீட்டுக்கான தயாரிப்புகளில் கூட நிதிநிலை அறிக்கைக்கான கவனத்தையும், ஆர்வத்தையும் வெளிப்படுத்துபவர் இவர் என்பது எனக்கு மிகப் பெரும் வியப்பு! தமிழிலும், ஆங்கிலத்திலும் சிறப்பான பேச்சாற்றல் மிக்க மத்திய அமைச்சரது பலமொழிப் புலமையை தமிழ்நாட்டிற்கு வருகை தருகின்ற வடநாட்டுத் தலைவர்களது உரைகளை அவர் மொழிபெயர்க்கையில் கேட்டு வியக்காதவர் இருக்க முடியாது. 
	1964 ஜனவரியில் ஒரிசாவில் தலைநகர் புவனேசுவரில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. தமது தலைமை உரையைத் பெருந்தலைவர் காமராஜர் தமிழில் நிகழ்த்தினார். காங்கிரசு மாநாடு அப்போதுதான் முதன்முறையாகத் தமிழில் தலைமை உரையைக் கேட்டது. அதற்குப்பின்பாக, முதன்முறையாகச் சுவை குன்றாத, சபை ஈர்க்கின்ற அற்புதமான தமிழ் உரையைப் பொருள் விளங்காவிடினும், வடநாட்டுக் காங்கிரசு தலைவர்கள் கேட்க நேர்நததும் நமது நிதியமைச்சர் வாயிலாகத்ததான்! - அவரது மொழிபெயர்பு உரைகளில்தான்.
	தமிழினம் உலகிலேயே மிகக் குறைவான மூட நம்பிக்கை கொண்ட இனமென்று கால்டுவெல் பாராட்டி உள்ளார். ஆனால் ஒரு சம்பவம் - உங்களோடு பகிரவிரும்புகிறேன். திருமதி சண்பகம் துரைசாமி (சில ஆவணங்களில் சண்பகம் துரைராசன் என்று காணப்படுகிறது) என்னும் பார்ப்பனப் பெண் கணவனை இழந்தவர். பி.ஏ. பட்டம் பெற்று சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் (அப்போது அவருக்கு வயது 37க்குள் இருக்கலாம். கல்லூரியில் சேர முடியாத வயது), மருத்துவ கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்ததாகவும், தமக்கு தகுதி இருந்தும், தமிழ்நாடு அரசு பின்பற்றி வரும் இடஒதுக்கீட்டின் காரணமாகத் தமக்கு இடம் கிடைக்காமல் போய்விட்டது என்றும், எனவே இட ஒதுக்கீடு, மாணவர்களின் தகுதி திறமையைப் புறக்கணிக்கிகறது என்றும், தனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வகுப்பு வாரி உரிமை தடையாக இருக்கக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். 
	திருமதி சண்பகம் துரைசாமியைப் போலவே சி.ஆர். சீனிவாசன் என்னும் பார்ப்பனரும் பொறியற் கல்லூரியில் சேர விண்ணப்பத்திருந்தும் தான் ஒரு பார்ப்பனராக இருப்பதால் தமக்கு இடம் மறுக்கப்பட்டது என்றும் எனவே இடஒதுக்கீடு கூடாது என்றும் வழக்குத் தொடுத்தார். திருமதி சண்பகம் துரைசாமிக்காக வாதாடிய வழக்கறிஞர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் என்பவர். இவர் இந்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரலும், இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களுள் ஒருவரும் ஆவார். சீனிவாசன் தரப்பில் வாதாடியவர் நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்ற வி.வி. சீனிவாச அய்யங்கார் என்பவர். 
	சமூக நீதிக்கு எதிராக வாதாடிய அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரை, அந்த வழக்கில் அவர் அதி திறமையாக வாதாடியபோதும், 
முதல்தரமான வழக்குறைஞர் (First Grade Lawyer) இரண்டாந்தர அரசியல்வாதி (Second Grade politician) மூன்றாந்தர அரசதந்திரி (Third Grade Statesman). 
எனப் பழம்பெரும் காங்கிரசுக்காரரான திரு. செங்கல்வராயன் வருணித்தார். ஆனால் சமூக நீதி, மதச் சார்பின்மை என்கின்ற இரண்டு தளங்களிலும் மிக உறுதியாக நிற்கின்ற வழக்குறைஞர், நம் மத்திய அமைச்சர்.
	"இந்திய வரலாறு என்பது என்ன - 30 அடி உயரமுள்ள அரசன் 30 ஆயிரம் ஆண்டுகள் அரசாண்டான் என்று சொல்வது தானே?
	இந்திய புவியியல் மட்டுமென்ன? பாற்கடல் பற்றியதும், வெண்ணெய்க் கடல் பற்றியதும் தானே" என்று எள்ளி நகையாடியது யார் தெரியுமா? Lord Macaulay. இன்றைக்கு நாம் தூக்கிச் சுமந்து கொண்டிருக்கின்ற ஆங்கிலக் கல்வியின் பிதாமகன். அவனது கூற்றுக்கு மாறாக மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான தமிழனது அகம், புற வரலாற்றை ஐந்தினைப் புவியியிலைத் தன் பேச்சிலும், எழுத்திலும், மூச்சிலும் உயர்த்திப் பிடிக்கின்ற, இந்திய அரசியல் வரலாற்றை மாற்றுகின்ற, தீர்மானிக்கின்ற தமிழகச் சக்தியாக விளங்குகின்ற எங்கள் தலைவர் கலைஞரும், பாற்கடல், வெண்ணெய்கடலைக் கடைந்து அமுத நிதிக்கடல் தருகின்ற ஒரு அமைச்சரும் சேர்ந்து சிறப்பித்திருக்கின்ற இவ்விழாவில் நான் பங்கு பெற்றமைக்கு எனது மகிழ்ச்சியும், நன்றியும். 
	மக்கள் உரிமைக்கான ஜனநாயகத்தை அறிவிற்கான ஜனநாயகமாக மாற்றியதில் அமைச்சரது பங்கு மிக முக்கியமானது. வங்கிகளின் மூலம் மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கும் அவரது திட்டத்திற்கு, அதனால் பெரும் பயனுற்ற மாணவ சமுதாயத்தின் சார்பாக ஒரு மேனாள் பேராசிரியையாக அவருக்கு என் மனமார்ந்த நன்றி.
	சிறப்புமிக்கதொரு வழக்குறைஞர், பொருளாதார வல்லுநர், திறமையான அமைச்சர், தேர்ந்த அரசியல்வாதி - இவற்றையெல்லாம் விட என்னை மிக மிகக் கவர்ந்தது,  நான் என்றும் மதிப்பது அவரது இலக்கியவாதி எனும் மனதையும், ஆர்வத்தையும்! ஏனென்றால் தாமஸ் கார்லைல் என்ற ஸ்காட் எழுத்தாளர் கேட்டார் : 
	"மனித வரலாற்றில் யார் முக்கியமான மனிதன்? ஆல்ப்ஸ் நோக்கி முதன் முதல் படையெடுத்தவனா? அல்லது முதன் முதலாகத் தானே ஒரு இரும்பு மண்வெட்டியைச் செய்த பெயரற்ற காட்டுவாசியா? சட்டங்களும், அரசியல் சாசனங்களும் நம்முடைய வாழ்க்கை அல்ல, நாம் வாழ்க்கை நடத்துவதற்கான வீடுகள்". அதனை உண்மையாக உணர்ந்தவன் இலக்கியவாதி மட்டுமே!

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *