‘எரவாணத்தில் பதுக்கிய ஏவுகணை - பேரறிஞர் அண்ணா’ பட்டுக் கனவிலும், பஞ்சுப் பொதியிலும் அமிழ்ந்திருந்த தமிழகத்தின் பாமரத்துத் தறியை இடம் பெயர்த்து, ஈரோட்டிற்கு எடுத்து வந்தது ஒரு காஞ்சீபுரத்துக் கலைக் கரம். `அண்ணா’ வெனும் அக்கரம், இனமான ஆடையொன்றைத் தமிழருக்குத் தனியாகத் தயாரித்துத் தர, அதுவரை ஆட்சி செய்த, மேல்சாதி ஆயத்த ஆடைகள் ஒழிந்து போய், அன்று முதல், தோளிலே நீண்ட துண்டு அணிந்த கம்பீர உடை அமுலுக்கு வந்தது! “இமயத்தில் புலி பொறித்து, கடாரத்தை வென்று ரோம் நகருக்குப் பொன்னாடை விற்றவன் தமிழன்” என முழங்கிய அண்ணா மூத்த தமிழ்ப் பெருங்குடியை உலக அறிவெனும் விரிகடற் பால் சாதுர்யமாய்த் திசைதிருப்பிய திராவிடப் பாய்மரம்! புத்தகங்களைத் துடுப்பாக்கிப் பிறவிப் பெருங்கடலைக் கடந்த பேரறிஞர்- “அறிவாலும் ஆற்றலாலும் ஆகாத காரியமில்லை, எவரெஸ்டின் உச்சிக்கு எவரும் ஏறலாம்” என ஏழைக்கு எழுத்து உரமூட்டிய நன்னம்பிக்கைத் திசைமானி! ஆரிய சுழற்சியில் சிக்காமல், உயர் சாதியத் திட்டுக்களில் தட்டாமல், வைதீகக் கரை(றை) தொட்டு நிற்காமல், தமிழினக் கப்பலை உலகின் அனைத்து அறிவுத் துறைமுகங்களுக்கும் அழைத்துச் சென்ற சமத்துவ மாலுமி! எரவாணத்தில் பதுக்கிய ஏவுகணையாய் ஏழையின் குடிசையில் கல்வியைச் சொருகிய சமூகநீதிப் போராளி! சாலையிலே நாம் நடந்து செல்வோம், ஆனால், ஒரு சாலையே நடந்து செல்லுமா? ஆம்- அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு ஒரு வாசக சாலையே அன்று நடந்து சென்று ‘ஆற்றோரம்’ என உரை ஆற்றியதே! எந்தக் கடலாயினும் சேர்கின்ற நதிகளின் தோற்றுவாய் அறியாது. தேற்றுவார் இல்லாது தேம்பி அழுதிருந்த தமிழினத்தின் ஆற்றுவாயாக வந்த அறிவுக் கடல் அண்ணாவோ, உலகின் அனைத்து நதிகளையும் ஒரு சேர அறிந்து, அவற்றின் பிள்ளை நாகரிகங்களையும் பெயர் சொல்லிக் கூப்பிட்ட பேரதிசயம் கண்டு மலைத்துப் போனது `அண்ணாமலை’ அன்று! அட, சாலை பறந்தும் செல்லுமா? ஆம்- அமெரிக்காவின் `யேல் பல்கலைக்கழகத்திற்குப்’ பறந்து சென்ற இத் தமிழ்ச்சாலை அணிந்திருந்ததோ `ஆங்கில’ இறக்கையினை. அங்கே `வெள்ளிக் கரண்டியோடு’ பிறந்த வெள்ளைப் புருவங்களை ஒரு கருப்புத் தமிழ்க் கண்ணாடி கரவொலியால் உயர்த்திற்று! அவர்தம் மூக்கின் மேலமர்ந்த வெளுத்த விரல்களை சிலையாய்ச் செதுக்கிற்று- தமிழ் வெற்றி(லை)ச் சாயம் படர்ந்த அண்ணாவின் ஆங்கில உளி! விழிமூடி துயிலும் எங்களின் விலைமதிப்பற்ற இன்பத் திராவிடமே- வெள்ளை மாளிகையின் கதவுகளை ஒரு கறுப்புக் கைப்பிடி திறக்கின்ற அந்தத் தொலைநோக்குக் கனவொன்றை உன் இதயத்தில், தம்பிமார் அமர்ந்திருக்கும் இடம்போக எஞ்சியிருக்கும் விளிம்பொன்றில் பத்திரமாகப் பொதிந்திருந்தாய்- பலித்தது அது இன்று! `ஒளியின் பிம்பங்களாய் நாம் திகழுகிறோம்’ என்றுரைத்த நீ `ஒபாமா’ ஒளிர்வதை இங்கிருந்தே இமைமூடி இரசிக்கின்றாயா? கறுப்புச் சலவை மொட்டுக்குள் கண் உறங்கும் தமிழ் வண்டே எம் அண்ணா, நீ, ``ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றாய்’’ நானோ ஏழையின் சிரிப்பில் உன் உருவாய் இன்றிருக்கும் என் தலைவரைக் காண்கின்றேன்! * * * * *
No comment