மடத்துக்குளம் அரிமா சங்கம்
வீரபண்டிய கட்டபொம்மன் மண்டலம்
மடத்துக்குளம் சோழர் வரலாறு பேசும் குலசேகர சாமி கோவில்:
மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள சோழமாதேவி கிராமத்தில், ஆயிரம் ஆண்டு கள் பழமையான மூன்றாம் வீரசோழரால் (1168 – 1196 ) குங்குமவல்லியம்மன் உடனமர் குல சேகர சாமி கோவில் கட்டப்பட்டது. சைவ கோவிலில், சிவனும் அம்பாளும் ஒரே சன்னதி யில் இருப்பது போல் அமைப்பது வழக்கம். இங்கு, இருவருக்கும் தனிக் கோவில்கள் உள்ளன. பிரதான கோவிலாக உள்ள குலசேகர சுவாமி கோவில், வயல்வெளிக்கு மத்தியில் அமராவதி கால்வாய் கரையில் அமைந்துள்ளது. நுழைவுவாயில் மண்டபத்தில் இரு நந்திகள் உள்ளன. முழுக்க முழுக்க கற்களால், கற்றளி முறையில் கோவில் அமைந்துள்ளது.
முன் மண்டபத்தில் மட்டும், 24 கல் துாண்கள் மேற்கூரையை தாங்கி நிற்கின்றன. வரலாற்றைப் பறைசாற்றும் வகையில், கோவில் சுவர்களில் கல்வெட்டுக்கள் உள்ளன. வீர ராஜேந்திர சோழர் ( 1207 – 1256) தனது ஆட்சிக்குட்பட்டிருந்த இரட்டையம்பாடி (பழநி அருகிலுள்ள ஊர் ) கிராமத்தின் வருவாயை இந்தக் கோவிலுக்கு வழங்கியதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோழர்களின் கட்டடக் கலையை கொண்ட கோவிலும். அமராவதி நதி பாய்ந்து வளமாக்கும் நிலங்களும் கொண்ட மடத்துக்குளம் அரிமா சங்கத்தின் வீரபாண்டிய கட்டபொம்மன் மண்டலத்தின் விழாவிலே சிறப்புரை ஆற்றுவதில் நான் மகிழ்கிறேன்.
வீரப்பாண்டிய கட்டபொம்மன் மண்டலம்:
வீரபாண்டிய கட்டபொம்மன் பெயர்க்காரணம்:
விஜயநகர ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு ஆந்திராவிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள்தான் கட்டபொம்மனின் முன்னோர்கள். அப்பொழுது, “வீரபாண்டியபுரம்” (இப்போதுள்ள ஒட்டப்பிடாரம்) என்ற ஊரை ஜெகவீர பாண்டியன் (நாயக்கர் வம்சம்) ஆட்சி செய்து வந்தார். அவருடைய அரசவையில் ‘பொம்மு’ என்ற கெட்டி பொம்மு அமைச்சராக பணியாற்றினார். இவர், ஆந்திர மாநிலத்தில் உள்ள பெல்லாரி என்ற இடத்தை பூர்வீகமாக கொண்டவர். தெலுங்கில் ‘ கெட்டி பொம்மு ‘ என்று சொல்லுக்கு வீரமிகுந்தவர் என்று பொருள். இந்த கெட்டி பொம்மு எனும் சொல்லே நாளடைவில் ‘கட்டபொம்மு’ என்ற சொல்லாக மாறியது. தமிழகத்தில் இந்த சொல்லை ‘கட்டபொம்மன்’ என்று அழைத்தனர்.
ஜெகவீர பாண்டியனின் இறப்பிற்கு பிறகு கட்டபொம்மு அரச பதவியை ஏற்றார். இவர் மக்களால் ‘ஆதி கட்டபொம்மன்’ என்று அழைக்கப்பட்டார். பொம்மு மரபில் இவர்தான் முதல் கட்டபொம்மன். இந்த மொம்மு வம்சத்தாரில் வந்தவர்களே திக்குவிசய கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியர். இவர்களுக்குப் புதல்வராகப் பிறந்தவரே வீரபாண்டியன் என்ற இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன். இவர் தொடர்ந்து நாயக்கர் வம்சத்தில் அரசாண்டு வருவதால் ‘பொம்மு நாயக்கர்’ என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவர் வீரபாண்டியன், கட்டபொம்மன், கட்டபொம்ம நாயக்கர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இத்தகைய வீரம் செறிந்த வீரபாண்டிய கட்டபொம்மன் பேரில் இந்த மண்டலம் அமைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். ஆக, மடத்துக்குளம் அரிமா சங்கத்தின் வீரபாண்டிய கட்டபொம்மன் மண்டலத்தில் உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
என்னுடன் இந்த விழாவிற்கு வருகை தந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கக் கூடிய மரியாதைக்குரிய பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே ஈஸ்வரசாமி அவர்களை இந்த இனிய தருணத்திலே வணங்கி மகிழ்கிறேன். அரிமா சங்கத்தினுடைய தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடிய அரிமா பி.ராமதுரை அவர்களையும் மற்றுமுள்ள அரிமா சங்க நிர்வாகிகளையும் மகிழ்வான இந்த தருணத்திலே வணங்கி மகிழ்கிறேன்.
அரிமா
அரிமா, வயமா, மடங்கல், சிகைமா, சிகையம், சீயம் – ஆகியன சிங்கத்தைக் குறித்த தமிழ்ச்சொற்களாம். பிடரி மயிரைக் குறிக்கும் சொல்லான சிகை – என்ற காரணப்பெயராக அமைந்த பெயர்களே சிங்கம் , சிகைமா, சிகையம், சீயம் ஆகியனவாகும். இதிலிருந்து அழகான ’அரிமா’ என்ற தமிழ்ச் சொல்லை எடுத்து தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக இப்பெயரை வைத்துள்ளனர். அந்தவகையில் தமிழ்ப்பெயரைத் தாங்கியுள்ள அரிமா சங்க நிர்வாகிகளை மீண்டுமொரு முறை பாராட்டி மகிழ்கிறேன்.
Give Love- அன்பு செய் :
அன்பு செய்! என்பது அரிமா சங்கத்தினுடைய உயிர்மிகு உயர்ந்த வாசகமாக இருப்பதை நான் கண்டேன். அன்பினால் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஆகையால்தான், அன்பே கடவுள் என்று சொன்னார்கள். உலகப் பொதுமறையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் கூட,
’’அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்றும் உரியர் பிறர்க்கு.’’
என்று அன்பின் மேன்மையை அழகாகச் சொல்லிச் சென்றுள்ளார். அன்பின் மிகுதியாலேயே வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று அருட்பிரகாச வள்ளலார் தன் வரிகளைத் தந்து சென்றுள்ளார். அன்பு என்கிற அச்சாணியில் தான் இந்த உலகம் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது. அன்பு என்றைக்கு இந்த உலகத்தில் வற்றிப் போகிறதோ அன்றைக்கு இந்த உலகம் சுக்கு நூறாகிப் போகும். அன்பு இந்த மண்ணில் இருக்கின்ற வரை மனிதம் வாழும். உயிர்கள் வாழும். அன்பு செய்வதையே அகமாகக் கொண்டிருக்கக் கூடிய மடத்துக்குளம் அரிமா சங்கத்திற்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பைப் பற்றிச் சிந்திக்கின்ற போது,
’’அன்பை விற்கவோ, வாங்கவோ முடியாது. அன்புக்கு அன்பே விலை’’
என்று ஜான் கீட்ஸ் சொன்ன வரிகள் தான் நினைவுக்கு வருகின்றது.
பிறருக்கு உதவுதல் என்பது குணமல்ல… வரம்!
அமெரிக்காவின் நியூயார்க் நகரம். அது ஒரு மருத்துவமனையின் பிரத்யேக வார்டு. உள்ளே இருந்த படுக்கையில் முதியவர் ஒருவர் படுத்திருந்தார். அவருக்கு வந்திருந்தது உயிரைக் கொல்லும் ஒருவகை புற்றுநோய். இன்னும் ஓரிரு நாள்கள்கூட அவர் தாங்க மாட்டார் என்று மருத்துவர்களே பேசிக்கொண்டிருந்தார்கள். அன்று மாலை நேரத்தில், அந்த முதியவரின் வார்டுக்கு, அவரை கவனித்துக்கொள்ளும் நர்ஸ் வந்தார்.
“சார்… உங்களைப் பார்க்க உங்க மகன் வந்திருக்கார்.’’
கிழவர் கண்ணைத் திறந்து பார்த்தார். வலி நிவாரணி மாத்திரைகள், மயக்க மருந்துகள் அதிக அளவில் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்ததால், கண்களையே மெதுவாகத்தான் அவரால் திறக்க முடிந்தது. நீர்த் திரையிட்ட கண்களால், எதிரே மங்கலாக நர்ஸுக்கு அருகே ஓர் உருவம் இருந்ததைப் பார்த்தார். அவருக்கு எதிரே 20 வயதுக்குள் இருக்கும் ஓர் இளைஞன் நின்றுகொண்டிருந்தான். சீருடை அணிந்திருந்தான். அவன் அணிந்திருந்த சீருடை `யூத் மரைன்’ (Youth Marine) என்கிற, அமெரிக்க அரசு நடத்தும் இளைஞர்களுக்கான ஒரு திட்டத்துக்கானது. படுக்கையில் இருந்த முதியவர், நர்ஸிடம் தன் மகன் `யூத் மரைன்’ புரோக்ராமில் இருக்கிறான் என்று சொல்லியிருந்தார். அதனால்தான், நர்ஸ் அவனைச் சரியாகக் கண்டுபிடித்து அவர் முன்னே நிறுத்தியிருந்தாள்.
இளைஞன் படுக்கைக்கு அருகே போய் நின்றான். அவர், தன் கைகளால் அவன் கைகளைப் பிடிக்கத் துழாவினார். அதைப் பார்த்ததும் இளைஞன் தன் கையை அவர் கைக்கு அருகே நீட்டினான். நடுங்கும் தன் கரங்களால் முதியவர் பாசத்தோடும் வாஞ்சையோடும் அவன் கைகளைப் பற்றிக்கொண்டார். பிறகு கண்களை மூடிக்கொண்டாள். நர்ஸ், ஒரு நாற்காலியைக் கொண்டுவந்து, முதியவரின் படுக்கைக்கு அருகே போட்டாள். இளைஞன் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டான். அன்று இரவு முழுக்க அவர், அவனுடையக் கைகளைப் பிடித்தபடியே இருந்தார்.
அவ்வப்போது அந்த நர்ஸ், அவர் உடல்நிலை எப்படியிருக்கிறது என்று பார்ப்பதற்காக உள்ளே வருவார். இளைஞன், முதியவரின் கைகளைப் பற்றியபடி இருப்பான். ஒருமுறை பொறுக்க முடியாமல் நர்ஸ் சொன்னார்… “தம்பி… நீங்க வேணும்னா கொஞ்ச நேரம் வெளியே போய் ரெஸ்ட் எடுங்களேன். எவ்வளவு நேரம்தான் இப்படியே உட்கார்ந்திருப்பீங்க?’’
“வேண்டாம். பரவாயில்லை’’ என்று சொல்லிவிட்டான் அந்த இளைஞன். நர்ஸின் வற்புறுத்தலால் ஒரே ஒரு கப் காபி மட்டும் கேட்டு வாங்கிப் பருகினான். அடுத்த நாள் அதிகாலையில் நர்ஸ் வந்தபோது அந்த இளைஞன் சில நல்ல வார்த்தைகளை, முதியவரின் காதில் சொல்வதைக் கண்டாள். ஆனாலும் அவர் கண் திறக்கவில்லை. அவர் கைகள் மட்டும், இளைஞனின் கையை இறுகப் பற்றியிருந்தது. விடிந்தது. கிழவர் இறந்துபோயிருந்தார். இளைஞன், அவருடைய தளர்ந்த கையைத் தன் கையிலிருந்து வெகு ஜாக்கிரதையாக விடுவித்து, மெள்ள படுக்கையில் வைத்தான். வெளியே வந்தான். நர்ஸிடம் விஷயத்தைச் சொன்னான்.
“ரொம்ப சாரி தம்பி… உங்க அப்பாவின் மரணத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்…’’ என்றார் அந்த நர்ஸ்.
“நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. அவர் என் அப்பா இல்லை. இதுக்கு முன்னாடி நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை.’’
“அவர் உங்க அப்பா இல்லைன்னா, நான் அவர்கிட்ட உங்களைக் கூட்டிட்டு வந்தப்போவே சொல்லியிருக்கலாமே… ஏன் சொல்லலை?’’
“நீங்க அவர்கிட்ட என்னைக் கொண்டு வந்து நிறுத்தினப்பவே தப்பா என்னைக் கூட்டிட்டு வந்துட்டீங்கனு தெரிஞ்சுடுச்சு. நீங்க ரொம்ப அவசரத்துல இருந்தீங்க. அதோட அந்தப் பெரியவரைப் பார்த்ததும், அவர் தன் மகனுக்காக ஏங்குறார்ங்கிறதும், அவன் இப்போ இல்லைன்னும் புரிஞ்சுது. அதோட அவர் என் கையைப் பிடிச்சதும், அவரால நான்தான் அவரோட மகனா, இல்லையான்னு சொல்ல முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டிருக்கார்னு புரிஞ்சுது. அவரோட அந்தக் கடைசி நிமிஷத்துல அவருக்கு எந்த அளவுக்கு அவரோட மகனின் அருகாமை தேவைப்படுதுனு புரிஞ்சுது. அதான் அப்படியே உட்கார்ந்துட்டேன்.’’
நர்ஸ் பதில் பேச முடியாமல் பார்த்துக்கொண்டிருக்க, அந்த இளைஞன் மெள்ள நடந்து வெளியே போனான்.
மெல்வின் ஜோன்ஸ்
1879 ஆம் ஆண்டு 13ம் நாள் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அரிசோனா மாநிலத்தில் சிலா ஆற்றின் கரையில் அமைக்கப்ட்டிருந்த ராணுவ முகாம் ஒன்றில் பிறந்த மெல்வின் ஜோன்ஸ் என்பவரால் 1917ம் ஆண்டு இந்த “அரிமா சங்கம்” என்ற அமைப்பு தொடங்கப் பட்டது. பின்னர் அது பல்வேறு கட்டங்களைத் தாண்டி இன்று உலகளாவிய அமைப்பாக 203 நாடுகளில் பரவி உள்ள இவ்வமைப்பு, உலகம் முழுவதும் நலிந்தோர்க்கான நலதிட்டங்களை செய்துவருகிறது.
அரிமா– வின் பொன்மொழி:
சிங்கங்களின் பொன்மொழி “நாங்கள் சேவை செய்கிறோம்” என்பதாகும். உள்ளூர் லயன்ஸ் கிளப் திட்டங்களில் பார்வை பாதுகாப்பு, செவிப்புலன் மற்றும் பேச்சு பாதுகாப்பு, நீரிழிவு விழிப்புணர்வு, இளைஞர்கள், சர்வதேச உறவுகள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் பல திட்டங்கள் ஆகியவை அடங்கும்.
பன்னாட்டு அரிமா சங்கங்கள் (Lions Clubs International, LCI)
உலகளாவிய ரீதியில் நலிந்தோர்க்கான நலதிட்டங்களைச் செய்துவருகிறது. மொத்தம் 203 நாடுகளில் 44,500 சங்கங்களில் 1.4 மில்லியன் உறுப்பினர்களுடன் இவ்வியக்கம் செயற்பட்டு வருகிறது
ஹெலன் கெல்லரின் கோரிக்கை:
தன்னுடைய ஒன்னரை வயதிலேயே பார்வையும் கேட்கும் திறனையும் இழந்த ஹெலன் கெல்லர் என்ற அம்மையார் 1925ஆம் ஆண்டு நடைபெற்ற அரிமா சங்க பன்னாடு கூட்டத்தில் பார்வைத் திறனைக் காப்பதற்கும், பார்வையற்றோர்க்குத் தொண்டு செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்தார். உங்களால் பார்க்கமுடிகிறது, உங்களால் கேட்க முடிகிறது, நீங்கள் இரக்கமுள்ளவர்களாகவும் திகழ்கிறீர்கள். குருட்டுத் தன்மைக்கெதிரான புனித வீரர்களாக நீங்கள் தொடர்ந்து விளங்கமாட்டீர்களா? என்று வினவினார். அரிமாக்கள் அதை ஏற்று “பார்வைத்திறன் காத்தல், மற்றும் பார்வையிழந்தோர்க்குப் பாடுபடுதல்”என்பதைத் தங்களின் முக்கிய செயல் திட்டமாக ஏற்றுக் கொண்டனர்.
இந்தியாவில் பன்னாட்டு அரிமா சங்கம்:
1956 ஆம் ஆண்டு பிப்ரவரி மூன்றாம் நாள் மும்பையில் நோசிர் என். பண்டோல் என்பவரைத் தலைவராகக் கொண்ட புதிய சங்கம் தொடங்கப்பட்டது. 1957ஆம் ஆண்டு அரிமா மாவட்டம் 304 தொடங்கப்பட்டு, பண்டோல் முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 23.7.1957ல் தென்னகத்தில் முதன் முதலாக பெங்களூரிலும், பின்னர் 21.9.1957இல் சென்னையிலும் தொடங்கப்பட்டது.
பன்னாட்டுத் தன்னார்வலர் நாள்!
திசம்பர் 5 சர்வதேச தன்னார்வலர்கள் தினம்! மக்கள் பயன்பாட்டுக்காக பிரதிபலன் எதிர்பாராமல் சேவையாற்றுவோம். பன்னாட்டுத் தன்னார்வலர் நாள் (International Volunteer Day) என்பது ஆண்டு தோறும் டிசம்பர் 5 ஆம் நாள் உலகெங்கும் நினைவு கூரப்பட்டு வருகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1985 ஆம் ஆண்டில் இந்நாளை சிறப்பு நாளாக அறிவித்தது. இந்நாள் உள்ளூரிலும், சர்வதேச அளவிலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதோடு, தன்னார்வ முயற்சிகளை ஆதரிக்க அரசாங்கங்கள் ஊக்குவிப்பதோடு, நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு தன்னார்வப் பங்களிப்பை அங்கீகரிக்கவும் வழி வகுக்கிறது.
பேரிடர் காலங்கள் உள்ளிட்ட பல பிரச்னைகளின் போதும் மக்களின் மேம் பாட்டுக்காக எந்தப் பிரதிபலனும் இல்லாது மக்கள் ஆர்வமாக முன் வந்து தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் 1985ம் ஆண்டு ‘சர்வதேச தன்னார்வலர்கள் தினம்’ கொண்டாடப் பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5ம் தேதி தன்னார்வலர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
தன்னார்வ சேவையை உலகம் முழுவதும் செய்ய வேண்டும். நாடுகள் பல்வேறு பிரச்சனைகளில் பாதிப்பு அடையும் போது பொருளாதார உதவி மற்றும் உணவு உதவிகளையும் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அதில் ஈடுபடும் தன்னார்வலர்களைப் பலப்படுத்தவும் ஊக்கப் படுத்தவும் இத்தினம் கொண்டாடப் படுகிறது.
இதன் அடிப்படையில் புயல், வெள்ளம், பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர் எத்தகையதாக இருந்தாலும் உலகின் எந்த நாடாக இருப்பினும் அரசின் கரங்கள் நீள்வதற்கு முன்னதாகவே தன்னார்வ நிறுவனங்கள் துயர் துடைப்பு பணிகளைத் தொடங்கி விடுகின்றன. உலகத்தின் எந்த மூலையில் வாழும் உயிர்க்கு ஒரு துன்பம் எனில் நாடுகளின் எல்லைகளைத் தாண்டி இன மத மொழி வேறுபாடுகளைக் கடந்து பகை நாடாக இருப்பினும் தேவையான உதவிகளை செய்வதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்னணியில் இருக்கின்றன.
இயற்கை பேரிடர் மட்டுமின்றி செயற்கை யான நெருக்கடி காலங்களில் கூட தன்னார்வ சேவை நிறுவனங்கள் தொண்டாற்றி வருகின்றன. திருவிழா காலங்களில் தண்ணீர் பந்தல் அமைப்பது தொற்று நோய்கள் பரவும் நேரத்தில் நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவது உட்பட பல்வேறு பணிகளைப் பட்டியலிடலாம்.
மக்கள் சேவையே மகேசன் சேவை. என் கடன் பணி செய்து கிடப்பதே என்கிற முதுமொழிகளுக்கு ஏற்ப தொண்டாற்றி வரும் தொண்டு நிறுவனங்களின் பணி மிகவும் பாராட்டுதலுக்குரியது. இயல்பான நேரங்களில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட பல்வேறு செயல்பாடுகளைத் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு இணையாகச் செய்து வருகின்றன.
அரசின் நல்வாழ்வு திட்டங்கள் பல இருப்பினும் ஒரு சில கட்டுப்பாடுகளாலும் நடைமுறை இடர்ப்பாடுகளினாலும் முழுமையாக பலன்கள் பயனாளிகளுக்குப் போய் சேருவதில் காலதாமதமாக சென்று சேர்கின்றன. ஆனால் இதுவே தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மிகச் சுலபமாக எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி சரியான நேரத்தில் திட்டங்களின் பயன்பாடுகள் பயனாளிகளுக்குச் செல்ல வழிவகுத்து வெற்றி பெறு கின்றன.
அரிமா சங்கம் உலகம் முழுவதும் கண்பார்வை கிடைக்கப் பெறும் வகையில் இலவச கண் சிகிச்சை முகாம்களை இலட்சக்கணக்கில் நடத்தியும் கண்தானத்தினை ஊக்குவித்தும் வெற்றிப் பாதையில் பயணித்து வருகிறது. இறந்தவர் கண்ணை, மண்ணில் புதைப்பதைவிட, பிறர் கண்ணில் விதைப்போம் என்ற நோக்கில் அரிமா சங்கமானது மிகச் சிறப்பாகச்செயல்பட்டு வருகின்றது. உலகம் முழுவதும் தன்னார்வ சேவை அமைப்பு என்றாலே அரிமா சங்கம் முதலிடத்தில் நிற்கிறது.
அதேபோல், உலகளாவிய அளவில் தொண்டாற்றி வரும் ரோட்டரி சங்கத்தின் பெரும் பொருட்செலவாலும் சிறப்பான திட்டமிடுதலாலும் உலகளவில் போலியோ என்னும் இளம்பிள்ளை வாதம் என்கிற கொடிய நோயை அறவே வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்க முடிந்தது என்பதே தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயல் பாட்டிற்கு ஓர் எடுத்துக் காட்டாகும்.
இது போல் எண்ணிலடங்கா நற்பணி மன்றங்கள், சமுதாய அமைப்புகள், பொது நல அமைப்புகள் உலகம் முழுவதும் கணக்கிடலங்காத சேவைதிட்டங்களை உள்ளூர் அளவிலும் உலகம் முழுவதுமாகவும் செவ்வனே செயலாற்றி வருகின்றன.
இத்தகைய ஊருக்கு உழைத்திடும் நற்பண்புகளை, மனித நேயத்தை, பொது நலச் சிந்தனைகளை, சுயநலமின்றிப் பொது நோக்கத்தோடு செயல்படும் உயர்ந்த குணங்களை, கல்வி நிலையங்களிலிருந்து சிறுவயது முதலே வளர்த்திடும் வண்ணம் நாட்டு நலப்பணித்திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், சாரணர் இயக்கம் போன்ற பற்பல இயக்கங்கள் செயலாற்றி வருகின்றன. அதன் வளர்ந்த வடிவமே அரிமா சங்கமாகும்.
இவற்றில் ஏதாவதொரு ஒரு அமைப்பில் சேர்ந்து பயிற்சி பெறும் மாணவ மாணவிகள் பின்னர் தன் வாழ்நாளில் சமூக அக்கறை கொண்ட மனிதர்களாக திகழ் கின்றனர். எனவே இந்த நன்னாளில் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்துவோம். பாராட்டுவோம். தொண்டு நிறுவன செயல்பாடுகளுக்குத் துணைநிற்போம் ஒத்துழைப்பு நல்குவோம்.
தென்னை மட்டையில் பாடை
துறவி ஒருவரிடம் பலர் சீடர்களாக இருந்து பயிற்சி பெற்றார்கள். ஒருநாள் இவர் தன் சீடர்களிடம், “ஒரு சில கிராமங்களில், இறந்த மனிதர்களைத் தென்னை மட்டையில் பாடைகட்டித் தூக்கிக்கொண்டுபோய், அடக்கம் செய்கிறார்களே, அது ஏன்?” என்று கேட்டார். அதற்கு ஒவ்வொரு சீடரும் ஒவ்வொரு மாதிரியான பதிலைச் சொன்னார்கள். இறுதியில் ஒரு சீடர் எழுந்து, “தென்னை மரத்திலிருந்து விழும் தென்னை மட்டை, மரத்தில் தனக்கென ஒரு தடத்தைப் பதித்துவிட்டுத்தான் விழுகின்றது. மனிதரும் இந்த மண்ணைவிட்டுப் பிரிகின்றபொழுது, தனக்கென ஒரு தடத்தைப் பதித்துவிட்டுச் செல்லவேண்டும் என்பதற்காகத்தான், அவ்வாறு செய்கின்றார்கள்” என்று சொன்னார். ஆம், மனிதர்களாகிய நாம் இந்த மண்ணுலகில் வாழ்ந்ததற்கான தடம் இருக்கவேண்டும். அதற்கு நாம் இயற்கை கொடுத்த இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழவேண்டும்.
லயன்ஸ் கிளப் விஷன் திட்டம்
கண் ஆரோக்கியம் குறித்து சமூகத்திற்குக் கல்வி கற்பிக்க லயன்ஸ் கிளப் விஷன் திட்டம் கண் முகாம்கள் மற்றும் பார்வை விழிப்புணர்வு கருத்தரங்குகளை ஏற்பாடு செய்கிறது. இது பார்வைக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து மாநிலம் முழுவதும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
குறிப்பாக வசதி குறைந்த சமூகங்களில் உள்ளவர்களுக்கு, தேவைப்படும் நபர்களுக்கு, திரையிடல்கள், பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் உள்ளிட்ட தரமான கண் பராமரிப்பு சேவைகளைத் தருவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நமக்கெல்லாம் கண்ணப்ப நாயனார் புராணம் தெரியும். சிவபெருமானுக்காகத் தன்னுடைய இரண்டு கண்களையும் கொடுக்கவும் தயங்காதவரே கண்ணப்ப நாயனார். அந்தக் கண்ணப்ப நாயனாரைப் போல சமூகத்தில் இருக்கக்கூடிய ஏழை எளிய மனிதர்களின் கண்களில் ஒளி ஏற்றுவதற்காகத் தொடர்ந்து கண் சிகிச்சை முகாம் நடத்தி வருகின்ற சாதனையை நம்முடைய அரிமா சங்கம் தொடர்ந்து செய்து வருகின்றது. அந்தச் சேவையானது உலகம் முழுவதும் அவர்களால் செய்யப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக மடத்துக்குளம் அரிமா சங்கமும் செய்து வருவது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். இன்னும் இன்னும் அவர்களின் சேவை தொடர வேண்டும் என்று கூறி அவர்களை வாழ்த்துகிறேன். மீண்டும் ஒருமுறை இந்த அற்புதமான நிகழ்விற்கு வருகை தர, அழைப்பு விடுத்த அரிமா சங்கத்தின் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மீண்டும் மீண்டும் நன்றி பாராட்டி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.
No comment