“மனிதனுடைய ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகங்கள் தான்ˮ- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
நூல் பாண்டியன்:
கவிதை பாடும் புலவர்களுக்கு அந்தக் கால மன்னர்கள் பொற்கிழி வழங்குவது வழக்கம். இந்தக் காலத்திலும் ஒரு பாண்டியன் சென்னையில் இருக்கிறார். புத்தகங்களைத் தேடி ஓடும் வாசகர்களுக்கு இவரும் பரிசில்களை வழங்குகிறார். இவருடைய பொக்கிஷ அறை முழுக்க நிறைந்திருப்பவை புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள். அந்தப் புத்தகங்களைப் பரிசில் என்று சொல்வது சாலப் பொருந்தும், காரணம் எல்லாமே அரிதானவை.
சென்னை அசோக் நகர் – கே.கே. நகர் இணையும் காமராஜர் சாலையில் 32 ஆண்டுகளுக்கு மேலாக ஆதி பராசக்தி பழைய புத்தகக் கடையை நடத்திவரும் நூல் பாண்டியனை, புத்தக வியாபாரி என்று சுருக்கிவிட முடியாது. மின்நூல்களும் இணையமும் கோலோச்சும் இந்தக் காலத்தில் மறுபதிப்பு இல்லாத நூல்களை, அதிலும் முதல் பதிப்பு நூல்களைச் சேகரித்து விற்பவர் அபூர்வமானவர்தானே.
புத்தகங்கள் மீது சின்ன வயசு முதலே இவர் கொண்ட காதலின் அடையாளமாக, வாடிக்கையாளர்கள் வெறும் பாண்டியனை, ‘நூல் பாண்டியனாக’ மாற்றி கௌரவித்து இருக்கிறார்கள்.
“நான் எத்தனையோ வேலைக்குப் போனாலும், கடைசியா புத்தக விற்பனைக்கே வாழ்க்கை இழுத்துட்டு வந்திடுச்சு” என்று சொல்லும் இவர் பழம் பெரும் பதிப்பாளர் முல்லை. பி.எல். முத்தையாவின் உறவினர்.
1980-களில் பி.டி. ராஜன் சாலை பிளாட்பாரத்திலும் அருகிலிருந்த மரத்திலும் புத்தகங்களை அடுக்கி, பிரம்மாண்டத் திறந்தவெளி கடையாக இவர் வைத்திருந்த முறை, அந்தப் பகுதியைக் கடக்கும் ஒவ்வொருவரையும் ஒரு நிமிடம் நிறுத்தி பார்த்துவிட்டுப் போக வைத்துக்கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேல் பிளாட்பாரத்திலேயே தனது ஷோரூமை நடத்தி வந்த இவர், தற்போது அதற்கு எதிரே உள்ள வணிக வளாகத்தில் கடையை நடத்திவருகிறார். ஒவ்வொரு நாளும் புத்தகங்களைத் தேடி இவருக்கு வரும் நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகளே, இவரிடம் உள்ள புத்தகங்களின் மதிப்புக்குக் கட்டியம் கூறுகின்றன.
நாம் ஏன் புத்தகம் படிக்க வேண்டும்?
மண்டேலா… இவர் புத்தகம் படிக்க அனுமதித்தால் போதும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை சிறையில் இருக்கிறேன் என்றாராம். ஆனாலும் அரசாங்கம் அவர் படிப்பதற்கு அனுமதி தர யோசித்தது. ஏன் தெரியுமா? ஒரு புத்தகம் 100 நண்பர்களுக்கு ஈடானது. ஒரு புத்தகம் சஞ்சீவி மூலிகையை விட மேலானது. ஒருவர் அருகில் புத்தகம் இருந்தால், அவரிடம் வாள், துப்பாக்கி, பீரங்கி என்று வலிமையான ஆயுதங்கள் பல இருப்பதை விட அது வலிமையானது. இதனால் தான் ஒரு நாட்டை அடிமைப்படுத்த எண்ணும் எதிரிகள், அந்த நாட்டின் நூலகத்திற்கு தீயிட முயற்சிக்கின்றார்கள். புத்தகங்கள் எதிரிகளை திக்கு முக்காட வைப்பவை. நம்மிடம் புத்தகங்கள் இருந்தால் நம் எதிரிகளும் நம்மிடம் திக்கு முக்காடுவர்.
- கரிசல் இலக்கியங்கள்
பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் கரிசல் இலக்கிய வளம் எனும் ஆய்வு கட்டுரை நூல் வெளியீட்டு விழாவில் தோப்பில் முகமது மீரான் பேசியது.
கரிசல் இலக்கியம் என்பது உழைப்புடன் தொடர்புடையது. கல்வியறிவு இல்லாத, நூலகமே இல்லாத, படித்தவர்களே இல்லாத குக்கிராமங்களில் பிறந்து வளர்ந்தவர்களால் படைக்கப்பட்டது கரிசல் இலக்கியமாகும். இந்த இலக்கியத்தில் உள்ள சொற்கள் பலருக்கும் தெரியாது. இந்தச் சொற்களுக்கு தமிழ் அகராதியிலும் விளக்கம் கிடையாது. அதற்காக அவை அனைத்தும் தமிழ்ச் சொற்கள் அல்ல என்பதை ஏற்க முடியாது. வட்டார மொழியில் படைக்கப்பட்டிருப்பதையும், மண்சார்ந்து படைக்கப்பட்டிருப்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். கரிசல் இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சொற்கள் தான் உண்மையான சுத்தமான தமிழ் சொற்கள்.
பல நூற்றாண்டு சிறப்புமிக்க தமிழ் இலக்கியத்தின் பாரம்பரியமாகக் கரிசல் இலக்கியத்தை காணலாம். மீனவர்கள், தாழ்த்தப்பட்டோர், தலித் சமூகத்தினர் இடையே கையாளப்பட்ட சொற்கள் இந்த இலக்கியத்தில் அதிக அளவில் காணப்படுகின்றன. செயற்கை தமிழாக இல்லாமல் மண்ணோடும் மண்வாசனை சார்ந்தும் உழைப்புடன் சேர்ந்தும் சாதாரண மக்களால் படைக்கப்படுவதே கரிசல் இலக்கியம் ஆகும்.
- எது கரிசல் நிலம்?
தெற்கத்திச் சீமை எனப்படும் திருநெல்வேலி, சிவகாசி, கோவில்பட்டி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வானம் பார்த்த பூமியாகக் கிடக்கும் கரிசல் நிலத்தைக் கதைக் களனாகவும் அங்கு வாழும் மனிதர்களையும் வெந்து தணியும் அந்த கந்தக பூமியில் வெயில் மற்றும் வறட்சி உடனான அவர்களுடைய பாடுகளையும் (விவசாயம்) அந்தப் பாடுகளுக்கு நடுவில் துளிர்க்கும் மகிழ்ச்சி, வலி, போராட்டம் என அந்தப் பகுதியின் வாழ்வியலை, அந்த மண்ணுக்கே உரிய வட்டார மொழி நடையில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக எழுதப்பட்டு வரும் இலக்கியமே கரிசல் இலக்கியம். இதனுடைய பிதாமகர்தாம் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன்.
தண்ணீர் வழிந்தோடும் நாஞ்சில் பகுதியில் (நாகர் கோயில், கன்னியாகுமரி) பிறந்து வளர்ந்த ஒருவர் கி.ராவின் கதைகளைப் படித்தால் குடிநீர் பஞ்சத்தால் நா வறண்டுபோன உணர்வைப் பெறுவார். குளிரும் ரம்யமும் நிறைந்த நீலகிரியில் பிறந்த ஒரு வாசகர், கி.ராவின் எழுத்துகளில் ஒளிரும் வெயில் வாழ்க்கையை வாசிக்க நேரும்போது அவருக்குள் வியர்த்துப் போய்விடுவார்.
3.
கரிசல் ( கருப்பு மண் ) இலக்கியம் என்பது தமிழ் இலக்கியத்தின் ஒரு அம்சமாகும், இது தமிழ்நாட்டில் உள்ள பல பகுதிகளின் மண் தொடர்பான இயங்கியல் இலக்கியங்களை உள்ளடக்கியது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய மாநிலத்தின் தென்கோடி பகுதிகள், கிராமப்புற வாழ்க்கையின் பொதுவான கரிசாவின் சந்ததியான அவர்களின் இலக்கியங்களில் பிரதிபலிக்கின்றன. இது கந்தக மண்ணில் வெப்பமான காலநிலையில் தங்கள் கைகளால் வேலை செய்து, தங்களுக்கு கிடைத்ததைச் செய்யும் மக்களைப் பற்றி பேசுகிறது. வன்முறை மற்றும் அன்பின் இரகசியங்களை அவர்கள் அறிவார்கள்; மரியாதை மற்றும் அதிகாரம்; நேர்மை மற்றும் வறுமை மற்றும் துன்பத்துடன் நல்லது கெட்டது என்ற உணர்வு இவ்விலக்கியம் பேசுகிறது.
- கி.ரா
கி.ரா. அவர்களின் வாழ்க்கை என்பது தான் வாழ்ந்த கரிசல் வட்டார மண்ணோடும் மக்களோடும் ஒன்றிணைந்ததாகவே இருந்திருக்கிறது. இவற்றின் வெளிப்பாடுதான் தன்னுடைய ஒவ்வொரு கதையிலும் தன் மண் சார்ந்த வட்டாரச் சொற்களை எளிதில் உணர்ந்துகொள்ளக் கூடிய அளவில் கதையோட்டத்திற்கு ஏற்ப இழைத்து பதிவு செய்திருக்கும் நிலை.
குலக்கைக்குள், சேம்பியன், துட்டி, பாந்தம், பாதகத்தி, நொட்டாங்கை, முட்டு முழுக்கு முதலான சொற்கள் கரிசல் வட்டாரத் தன்மையை உணர்த்துவதோடு, அச்சொற்கள் கரிசல் பகுதியில் வாழும் மக்களின் சமூக பண்பாட்டுப் பரிமாணங்களையும் வெளிப்படுத்துவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
வழக்காறுகளைப் பிணைக்கும் பாங்கு
கி.ரா. அவர்கள் கரிசல் வட்டார மக்களிடத்தில் உள்ள நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள், கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள் முதலானவற்றை முழுமையாக உள்வாங்கியுள்ளார். நாட்டுப்புற வாய்மொழி வழக்காறுகள் என்பது, அம்மக்கள் தம் வாழ்வின் சூழல் சார்ந்து கொண்டிருக்கும் அறிவின் வெளிப்படுத்துதல்கள்.
இத்தகைய வழக்காறுகளை கி.ரா. அவர்கள் கதையின் போக்குக்கு ஏற்பவும் தான் கூறவரும் கருத்தின் அழுத்தத்திற்கு ஏற்பவும் வருணனைகளாகவும் நேரடியாக பழமொழிகளாகவும் பயன்படுத்தும் நேர்த்தியைக் கொண்டிருக்கிறார்.
1.
உலகத்தில் பிறந்த ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண் பிறந்திருப்பாள் என்பதை கதையில் வெளிப்படுத்த எண்ணும் கி.ரா., கரிசல் பகுதியில் வழங்கும் “அம்மி செய்த தச்சன் குழவியையும் செய்து போடாமலா இருப்பான்” என்றும்,
2.
‘அண்ணாச்சி’ என்னும் தலைப்பிலான அனுபவப் பகிர்வில், அண்ணாச்சி நாளிதழ்களையும், மாதப் பத்திரிகைகளையும் மேலோட்டமாகப் பார்க்கும் நிலையை “சரகு அரிக்கத்தான் நேரம் இருந்தது, குளிர் காய நேரம் இல்லை” என்ற பழமொழியைக் கூறி வெளிப்படுத்தும் உத்திமுறை கி.ரா. கூறவரும் கருத்தை ஆழப்படுத்துகிறது எனலாம்.
இவ்வாறு, நாட்டுப்புற வழக்காறுகளை கருத்து வெளிப்பாட்டிற்கு மட்டுமல்லாது கதை உருவாக்கத்திற்கும் பயன்படுத்தும் உத்திமுறை கி.ரா. அவர்களுக்கே உரிய அழகியலாக உள்ளது.
இந்த அழகியலை எமனுக்கு எருமை வாகனம் வந்த வரலாறு, மொய்ப்பன் கதைகேட்ட வரலாறு, டீ, காபி, பேருந்து ஊருக்குள் வந்த வரலாறுகளோடு இணைத்துக் கூறும் முறைகளிலும் உணரலாம்.
- ‘நம்பிக்கைகள் பரிகாரங்கள்’
‘நம்பிக்கைகள் பரிகாரங்கள்’ என்னும் தலைப்பிலான கதைப் பகிர்வில், வீட்டுக்கு ‘தூரமான’ பெண்கள் கறிவேப்பிலைச் செடிக்குப் பக்கத்தில் போனாலே பட்டுப்போகும் என்ற கரிசல் வட்டார மக்களின் நம்பிக்கையைப் பதிவு செய்திருக்கிறார்.
இதோடு, இந்த நம்பிக்கைக்கு “இனிமேல் கறிவேப்பிலைக் கன்று வைத்தால், வீட்டுக்கு தூரமான பெண்டுகளைக் கொண்டு நடச் சொல்லுங்கள்” என்று ஒரு பாட்டி கூறுவதாகப் பதிவு செய்திருப்பது, நாட்டுப்புற மக்கள் தம் நம்பிக்கையையும், பரிகாரமாகவும் கொண்டிருக்கக் கூடிய வழக்கத்தைத் தெளிவாக கதையோட்டத்தில் வெளிப்படுத்துகிறார்.
கண்ணேறு கழிப்பு:
இதே போன்று, குழந்தைகளுக்கு கல்யாணச்சீர் தைத்தல், உறம் விழுதல் முதலான நோய்களைப் போக்கும் கரிசல் வட்டார வழக்குகளையும், முச்சந்தி மண்ணெடுத்து கண்ணேறு கழிக்கும் முறையையும் பதிவு செய்கிறார்.
‘கிராம வினோதங்கள்’ என்னும் தலைப்பிலான கதைப் பகிர்வில், மெட்ராஸில் இருந்து வந்த ஒருவர் ஒரு முருங்கை மரத்தில் காய்த்திருக்கும் முருங்கைக் காயைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுக் கூறும் வார்த்தைகளைக் கேட்ட கிராமவாசி, அப்படியெல்லாம் கூறக் கூடாது, அப்படிக் கூறுவதைக் கேட்டால் முருங்கை மரத்தின் உரிமையாளரின் ஏச்சுப் பேச்சுக்கு ஆளாகக்கூடும் என்று கூறுவது, கிராம மக்கள் கொண்டிருக்கும் “கண்ணேறு நிலையை” உணர்த்துகிறது.
அம்மி உரல் மீது அமரக்கூடாது:
அம்மி, உரல் ஆகியவற்றின் மீது ஒருவர் அமர்ந்தால் அப்பொருள்கள் தேய்வது போல அதன் மீது அமருபவர்களும் தேய்வார்கள் என்பது போன்ற பல நம்பிக்கைகளையும் கி.ரா. பதிவு செய்வது, இலக்கிய வெளிப்படுத்துதலில் பண்பாட்டுக் கூறுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை அறியச் செய்கிறது.
ஒருகூடை மாம்பழம் இலவசமாகத் தந்தவர்:
தஞ்சாவூரில் இருந்து வந்த ஒருவர் நண்பரின் வீட்டிற்கு ஒரு கூடை நிறைய மாம்பழங்களை இலவசமாகக் கொண்டுவந்து கொடுத்த நிலையைக் கேட்டு ஆச்சர்யம் அடையும் மெட்ராஸ் நபரின் மனநிலையைப் பதிவுசெய்யும் கி.ரா. அவர்கள், கிராம மக்கள் தன் நிலத்தில் விளையும் விளைபொருள்களை இலவசமாகத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளும் கிராமப் பண்பாட்டு நிலைகளை மேலும் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது எனலாம்.
- கிரா–வின் நெருப்பு சிறுகதை
அவரது முக்கியமான சிறுகதை “நெருப்பு”. கிராமத்தில் நள்ளிரவில் வீடுகள் தீப்பற்றி எரிகின்றன. அம்மை கண்ட குழந்தை ஒன்று எரிகிற வீட்டில் கிடக்கிறது. அதைக்காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்துப் பாய்ந்தவள் அவ்வூரின் சேரியைச் சேர்ந்த பெண். கடைசியில் இருவருமே இறந்து கரிக்கட்டையாய்ப் போகிறார்கள். இரண்டு பிரேதங்களும் சேர்ந்தே கிடக்கின்றன. நெருப்புக்கு தீண்டாமை உண்டா, இரண்டு உயிர்களின் சாதி தெரியுமா நெருப்புக்கு என்பதான கேள்விகளை எழுப்புவதாய் அக்கதையை எழுதியிருப்பார் கி.ரா.
- எனக்கு நான்கு தலைகள்:
“எனக்கு மொத்தம் நான்கு தலைகள். முதல் தலை சங்கீதம் தான். ரெண்டாவது தலை அரசியல். மூணாவது தலை இலக்கியம். நாலாவது எனது சொந்தத்தலை ” என்று சொல்லும் கி.ரா. சங்கீதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இளம் வயதில், நாதஸ்வர வித்துவான் குருமலை பொன்னுச்சாமி பிள்ளையிடம் சங்கீதம் கற்றவர். விளாத்திகுளம் சுவாமிகள், காருகுறிச்சி அருணாச்சலம், வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.
- கி.ரா. திறந்து வைத்த ‘கதவு’
நவீனத் தமிழ் இலக்கியத்தின் சிறுகதை வடிவத்தில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. காலங்களை வென்ற, மொழி எல்லைகளைக் கடந்த பல கதைகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட கதைகளில் ஒன்று கி.ராஜநாராயணன் எழுதிய ‘கதவு’. இது அவருடைய இரண்டாவது சிறுகதை. 1959இல் ‘தாமரை’ இதழில் வெளியாகியிருந்தது. ‘தாமரை’ இதழ் ஜீவாவால் தொடங்கப்பட்டிருந்த காலம் அது.
கி.ரா.வின் முதல் கதையான ‘மாயமான்’, ‘சரஸ்வதி’ இதழில் வெளியாகியிருந்தது. இளம் வயதில் இசை கற்றுக்கொண்டு இசைக்கலைஞராக மாற விரும்பிய கி.ரா. காசநோய் போன்றவற்றுடன் போராடியதால், அந்த விருப்பதைக் கைவிட்டார். 35 வயதுக்கு மேல்தான் கி.ரா. எழுதத் தொடங்கியிருந்தார்.
‘கதவு’ கதைக்கு உத்வேகம் அளித்த சம்பவமாக அந்தக் காலத்தில் தமிழகத்தில் நடைபெற்றுவந்த காங்கிரஸ் ஆட்சியின் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டுகிறார் எழுத்தாளர் நாறும்பூநாதன். நாடு விடுதலை பெற்று பத்தாண்டுகளே கடந்திருந்த நிலையில், நாட்டில் வறுமை தீவிரமாக இருந்தது, காரணம் வறட்சி.
வேளாண்மையே முதன்மைத் தொழில். ஆனாலும் ஏழைக் குடியானவர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியை வசூலிப்பதில் அதிகாரிகள் தீவிரம் காட்டினார்கள். அன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் சின்னம் உழவு மாடு. ஆனால், அரசுக்கு வரி செலுத்தாத உழவர்களிடமிருந்து உழவு மாடு பிடுங்கப்பட்டது. வேளாண்மைக்கு அடிப்படையான மாட்டை ஜப்தி செய்த பிறகு, அந்த உழவர் எப்படி வரியைக் கட்ட முடியும்? இந்த முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டே கி.ரா. ‘கதவு’ கதையை எழுதினார் என்கிறார் நாறும்பூநாதன். தன் மனத்தைத் தைத்த ஒரு சம்பவத்தை காலத்தை வென்ற கதையாக்கும் சூட்சுமம், தேர்ந்த எழுத்தாளனிடம் சாத்தியமாகும்.
கதவு– கதைச்சுருக்கம்:
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ரங்கம்மா கூலி வேலை செய்து, தனது குழந்தைகளைக் காப்பாற்றிவருகிறார். பிழைப்புக்காக மணிமுத்தாறுக்குப் போன கணவனிடமிருந்து நாலைந்து மாதமாக அவர்களுக்கு எந்தத் தகவலும் இல்லை. மூத்த மகள் லட்சுமி, மகன் சீனிவாசன், ஒரு கைக்குழந்தை என மூன்று குழந்தைகள். வீட்டுத் தீர்வையை (வரி) கட்ட முடியாமல் போகவே, தலையாரி பல முறை தாமதித்த பிறகு, கடைசியாக எச்சரிக்கை செய்துவிட்டுப் போகிறார். பிறகு ரங்கம்மா இல்லாதபோது கதவைக் கழற்றிச் சென்றுவிடுகிறார். குழந்தைகளைப் பொறுத்தவரை அந்தக் கதவுதான் முதன்மை விளையாட்டுப் பொருள், கனவுகளோடும் கற்பனைகளோடும் அவர்களை சுமந்து ஆடும் கதவு அவர்களுக்குப் பேருந்து. ’கதவாட்டம்’ அவர்களின் விருப்பமான பொழுதுபோக்கு. இப்போது அது இல்லாமல் குழந்தைகள் தவிக்கிறார்கள். கதவற்ற வீட்டில் ரங்கம்மாவின் கைக்குழந்தை குளிரால் ஒரு நாள் இறந்துவிடுகிறது. வீட்டில் மிச்சமிருந்த கொஞ்சம் தானியத்தைப் போட்டு வைத்த கஞ்சியையும் நாய் குடித்துவிட்டுப் போய்விடுகிறது.
கதவு எடுத்துச் செல்லப்பட்டு சில நாட்கள் கழித்து, பள்ளிக்கூடத்திற்கு அருகிலுள்ள சாவடிக்குப் பின்புறம் தங்கள் வீட்டின் கதவை சீனிவாசன் கண்டுபிடிக்கிறான். ஆர்வம் துள்ள ஓடிவந்து அக்கா லட்சுமியிடம் தெரிவிக்கிறான். அந்த இடத்தில் யாருக்கும் பயனில்லாமல் கதவு சும்மா சாத்தி வைக்கப்பட்டுள்ளது. இருவரும் சென்று கதவை வாஞ்சையாக வருடி இறுகப் பிடித்துக்கொள்வதுடன் கதை நிறைவடைகிறது
பிரான்ஸ் வரை சென்ற கதவு கதை
பிரான்ஸில் இருந்து வந்திருந்த ஓர் ஆய்வாளர், ‘கதவு’ கதையை பிரெஞ்சில் வாசித்திருப்பதாகவும் அது அற்புதமான கதை என்றும் சொல்லி வியந்ததாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கிறார். இந்திய கிராமங்களின் வறுமை, மக்கள் படும் பாடுகள் குறித்து உலக கவனத்தை ஈர்த்தது சத்யஜித் ரேவின் ‘பதேர் பாஞ்சாலி’. அதேபோன்றதொரு அழுத்தமான சித்திரத்தை இந்தச் சிறுகதை வழியே கி.ரா. சாத்தியப்படுத்தி இருப்பதாக எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.
- இடைசெவல் எனும் இமயம்:
“நேத்து ஒருத்தர் வந்தார். ‘இடைசெவல் போனேன். என்னா செழிப்பு, அடேயப்பா…’ன்னு சிலாகிச்சார். நான் சொன்னேன்… அது இடைசெவலோட ஒரு முகம். மழைக்காலத்து முகம். மஞ்சள் குளிச்சுட்டு ஈரத்தோட வந்து நிக்கிற குமரி மாதிரி இருக்கும். பாத்துக்கிட்டே இருக்கலாம். கோடையில நேரெதிர். வெக்கைக் காத்தடிக்கும். மனுஷனுக்கு மனுஷன் புன்னகையோட பாக்கமாட்டான். கொடுமையா இருக்கும். கொஞ்சநாளைக்கு முன்னால பையன்களுக்கு சொத்து பிரிச்சுக்கொடுக்க அங்கே போனேன். ‘இனிமே எக்காரணம் கொண்டும் இடைசெவல் வரமாட்டேன்’னு சொல்லிட்டு வந்துட்டேன். எனக்குப் பிரியமான பெண்கள் அங்கே இல்லை. பிரியமான நண்பர்களும் இல்லை. எல்லாரும் போய்ச் சேந்துட்டாங்க. வீடுக எல்லாம் காலியாருக்கு. நான் எங்கே போறது…” – கண்கள் கலங்கின.
- கரிசல் தமிழின் தொன்மத்தைச் சுமந்த கழனியூரன்
வரலாறு என்பது மக்களிடமிருந்துதான் தொடங்குகிறது. ஆனால், தமிழில் மக்கள் வரலாறு பெரியளவில் எழுதப்படவில்லை. ஒவ்வோர் ஊருக்கும் ஒரு வரலாறு உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றில்தான் ஒரு சமூகத்தின் பண்பாடு, கலாசாரம் எல்லாம் அடங்கியிருக்கின்றன. ஆனால், தமிழில் வட்டார வரலாறு எழுதப்படவே இல்லை. அது எழுத்தாளர்களுக்குத் தீண்டத்தகாத வேலையாக அல்லது தகுதியற்ற வேலையாக இருக்கிறது. கி.ரா. அதை வெகு சிறப்பாக முதல்நிலை எழுத்தாக்கினார். அவரின் வழித்தோன்றலான கழனியூரன், அதை முன்னெடுத்துச் சென்றார்.
ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கழனியூரன், `தாய் வேர்’, `கதை சொல்லியின் கதை’, `நெல்லை நாடோடிக் கதைகள்’, `மண் மணக்கும் மனுஷங்க’, `நாட்டுப்புற நீதிக் கதைகள்’, `மண்ணின் கதைகள்’, `மக்களின் கதைகள்’ என 44 நூல்களை எழுதினார். `கதை சொல்லி’ இதழுக்குப் பொறுப்பாசிரியராகவும் இருந்தார். கழனியூரனின் இயற்பெயர் அப்துல்காதர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கழுநீர்குளம் அவரது சொந்த ஊர்.
மக்கள் மத்தியில் தீவிரமாகக் களப்பணியாற்றி உயிர்ப்பாக மிஞ்சியிருக்கும் கதைகளைச் சேகரித்துத் தொகுப்பதையே தம் பணியாகக்கொண்டிருந்தார் கழனியூரன். கி.ரா-வோடு இணைந்து தொகுத்த `மறைவாய்ச் சொன்ன கதைகள்’ அவரின் ஆகச்சிறந்த பணி.
கிராமங்களில் சாதாரண பேச்சிலேயே பழமொழிகளையும் சொலவடைகளையும் பொழிவார்கள். பாதிக்குப் பாதி பாலியல் விஷயமாகத்தான் இருக்கும். கேலி, கிண்டல், கோபம், மகிழ்ச்சி, வசை எல்லாவற்றிலும் பாலியல் ஒட்டியிருக்கும். அதையெல்லாம் கவனமெடுத்துச் சேகரித்து, தன்மை குலையாமல் செம்மைப்படுத்தி ஆவணப்படுத்திய கழனியூரன், தம் இறுதிகாலம் வரை மக்களோடு மக்களாக நின்றே இலக்கியம் செய்தார்.
முன்னோடி கி.ரா–வின் பின்னோடி கழனியூரன்:
அந்தக் காலத்திலும் பாலியல் விழிப்புணர்வை உருவாக்க நம் மூதாதையர்கள் சில ஏற்பாடுகளை வைத்திருந்தார்கள். ஆண்களுக்கு மட்டுமல்ல… பெண்களுக்கும் அப்படியான ஏற்பாடுகள் உண்டு. `ஔவை நோன்பு’ என்பார்கள். ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் பூப்பெய்திய இளம் பெண்களும் மூத்த பெண்களும் இணைந்து இந்த வழிபாட்டை நடத்துவார்கள். இதில் ஆண்களுக்கு அனுமதியில்லை. வழிபாட்டில் பயன்படுத்தும் பொருள்கள், பிரசாதங்களைக்கூட ஆண்கள் கண்ணில் காட்ட மாட்டார்கள். ஒதுக்குப்புறமான ஓர் அறையில் வழிபாடு நடக்கும். நடுவில் பிள்ளையார் வீற்றிருப்பார். (அங்கு பிள்ளையார் ஏன் வந்தார் எனத் தெரியவில்லை). முதலில் உப்பில்லாத அரிசிமாவில் கொழுக்கட்டைகள் செய்து படைப்பார்கள். பிறகு, அனைத்துப் பெண்களையும் அருகில் அமர்த்தி, மூத்த பெண் ஒருவர் கிசுகிசுத்த குரலில் ஒரு கதை சொல்வார். (ராஜா-ராணி கதைதான்) சிருங்காரமும் சிலேடைகளும் கலந்திருக்கும். உறவுகள், உளவியல் என எல்லாம் இருக்கும்.
ஆண்களுக்கும் அப்படியான ஏற்பாடு இருந்தது.
இன்று `கரகாட்டம்’ என்ற பெயரில் நடக்கிறதே குறவன் குறத்தி ஆட்டம், அதுதான் அந்தக் காலத்திய இளைஞர்களுக்குப் பாலியல் பாடம். எல்லையில் இருக்கும் காவல் தெய்வத்துக்கு ஆண்டுக்கொரு முறை திருவிழா நடக்கும். அதில் பெரியோர் முன்னிலையில் குறவன் குறத்தி ஆட்டம் நடக்கும். பாலியல் வார்த்தைகள், கதைகள், சீண்டல்கள் என அந்தக் கலை விரியும். பிற்காலத்தில் திரைப்படங்கள் பாலியல் பாடங்களைப் போதிக்கத் தொடங்கின. தெய்வீகக் கலையாக இருந்த கரகாட்டமே `குறவன் குறத்தி’ ஆட்டமாக மாறியது. இன்று ரிக்கார்டு டான்ஸ்களே செயல்முறைப் பயிற்சியை அளித்துவிடுகின்றன.
இப்படியான நவீன காலகட்டத்தில், நம் மூதாதையர்கள் பயன்படுத்திய பல அறங்கள் காணாமல்போய்விட்டன. அவற்றை மீட்பதில் நாம் நம் அடையாளங்களை மீட்பதும் அடங்கியிருக்கிறது. பெருவாரியான இலக்கியவாதிகள் புனைவுக்குத் தரும் முக்கியத்துவத்தை நாட்டுப்புற வழக்காறுகளை ஆவணப்படுத்தவோ, அவற்றை மையப்படுத்தவோ தருவதில்லை. கி.ரா. அப்படியான எழுத்துக்கு முன்னோடி. அவருக்குப் பிறகு கழனியூரனைச் சொல்லலாம்.
- சொட்டாங்கல் சொட்டுகள்
ஆர்.கே.நாராயணனுக்கு, மால்குடி நாள்கள் போல தமிழச்சிக்கு மல்லாங்கிணறு நாள்கள்” என்று நான் தலை என்று அன்போடு அழைக்கும் கல்யாண்ஜி சென்ற ஆண்டு சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்து போகின்றன . எனக்கான மூலை மல்லாங்கிணறுதான். எனக்கான கதாபாத்திரங்களை அந்த மண்ணிலிருந்துதான் எடுக்கிறேன். எனக்கு ஒரு நிமிடம் ஓய்வு கிடைத்தாலும் தலை சாய நினைப்பது என் மண்ணில்தான். அங்குதான் என் வாழ்க்கையை செம்மைப்படுத்திய கொத்தனாரம்மா, குருவாச்சி, கச்சம்மா, கோமதியக்கா இருக்கிறார்கள். அவர்களையும் என் எழுத்தில் பதிவு செய்திருக்கிறேன்.
இன்றைக்கும் மல்லாங்கிணறு போனால் என்னை எம்.பி.யாகவோ, தமிழச்சியாகவோ தெரியாது. `சார் மக வந்திருக்கு’, `டீச்சர் மக வந்திருக்கு’ என்றுதான் சொல்வார்கள். அதுதான் என் அடையாளம். என் மண் சார்ந்து, கரிசக்காடு சார்ந்து, மனிதர்கள் சார்ந்து, வாழ்வியல் சார்ந்து எழுதுவதுதான் என் எழுத்து” என்றார்.
குருவாச்சி
“இதென்ன மெட்ராஸ்ல ‘சீனி’யப் போய்ச் சக்கரைங்கிறீங்க? அப்புறம் வெல்லக்கட்டிய என்னம்பீங்க?”னு துலுக்கன்குளம் ஆத்தாளு ஒரு வாட்டி கேட்டவுடன், குருவாச்சியின் அதப்பிய கன்னங்களும், சதா அரிசியை அதக்கி, மெதுவாக அதை ருசித்து அரக்கிக்கொண்டிருக்கிற அவளது தடித்த உதடுகளும், வெல்லக்கட்டி வாசமடிக்கும் அவளது கனமான மூச்சுக் காத்தும் நினைப்புக்கு வந்தது.
“ஏ குட்ட குருவாச்சி”னு யாராச்சும் கூப்ட்டா அவ்ளோதான் – “ஏன் நெட்டையாப் பொறந்து இந்த நாட்ட நிமித்திட்டீகளாக்கும்! குட்டையாப் பொறந்து கொறஞ்சு போனவுகளுமில்ல – நெட்டையாப் பொறந்து நெறஞ்சு போனவுகளுமில்ல”ன்னு பிலுபிலுவெனப் பிடித்துக்கொள்வாள்.
குருவாச்சியின் ஆசைகளும் சிதைந்த வாழ்வும்
மல்லாங்கிணர் தாண்டி விருதுநகர் டவுனுக்கு போகவேண்டும் என்கிற குருவாச்சியின் ஆசை. கலர் கலரா சுருக்கு பையி வச்சுக்கணும் என்கிற குருவாச்சியின் ஆசை. தலையில வேப்பெண்ணை வாசம் வீசும் குருவாச்சி எனக் குருவாச்சி பற்றி எக்கச்சக்கமான ஞாபகங்கள் இருக்கு. ரொம்ப நாள் கழிச்சு பார்க்கும்போது, அவ அப்படியே மாறிப் போய் இருந்தா. அருப்புக்கோட்டையில் நடத்திய பெண்கள் தின மருத்துவ முகாம்ல கடைசியா அவள பார்க்கும்போது, என் மனசெல்லாம் ரொம்ப வருத்தமா இருந்தது. அவ வாழ்க்க அடியோட மாறியிருந்தது. அவ ஒரு சுருக்குப்பை வைத்திருந்தாள். அதுல அதே அந்த வேப்பெண்ணை வாசத்தை அப்படியே உள்ளுக்குள்ள அடக்கி வைத்திருந்தா. மக்கிய அரிசியையும் கவிச்சி மணத்தையும் அதுக்குள்ள வச்சிருந்தா.
குலுதாடி அழகம்மா ஞாபகங்கள்:
அழகம்மாக்குத் தையல் தைக்கவும் நல்லா வரும். ஓட்டுத் தையல், சங்கிலித் தையல், அரும்புத் தையல்னு எல்லாம் கத்துகிட்டுப் போடுவா. வகுத்துக்கு மேல வாகா துணிய வச்சுக்கிட்டு கண்ணெடுக்காம தலகாணி ஒறைகளுக்கு அரும்புத் தையல்ல பூப்போட்டு, ஒட்டுத் தையல்ல ஓரந் தச்சுருவா. எனக்கு ஒருவாட்டி ஒயிலாட்ட கர்சீஃபுல இதயம் தைச்சு அதுக்குள்ளாற அம்பு விட்டுக் கொடுத்தா.
‘குலுதாடி’களுக்குப் பதிலாகப் பிளாஸ்டிக் டிரம்கள் வந்துவிட்டன. ‘தையல் மிஷின்’ வாங்க ‘நலத்திட்ட உதவி’ வழங்கும் ஒரு பொதுநல விழாவில், வளர்ந்திருந்த பேத்தியோடு ‘டோக்கன்’ வாங்கிக்கொண்டிருந்த அழகம்மாவைப் பார்த்தேன். ஆள் மெலிந்து ஒட்டிய வயிறோடு ஒடுங்கித் தளர்ந்திருந்தாள். வீட்டுக்காரர் இறந்துபோய், பள்ளிச் சீருடைகள் தைத்து குடும்பம் நடத்துவதாகச் சொன்னவளின் கைகளைப் பற்றிக்கொண்டேன். பிய்ந்துபோன பட்டன்போல அந்த ‘டோக்கன்’ என் கைகளில் தங்கிவிட்டது அழகம்மா நினைவாக.
என் பால்யங்களில் என்னோடு சுற்றி அலைந்த ஜீவன்கள்:
கூழாங்கல் நிறைமதி, கொட்டாப்புள்ளி வெங்கடாசலம், அரிசி திங்கும் குருவாச்சி, காக்கா பொன் கதிரேசன், பேந்தாகோலி கட்டதொரை, குன்னிமுத்து சிலம்பாயி, குலுதாடி அழகம்மா, சில்லு மூக்கு ரூபி ஸ்டெல்லா, வேப்பம்பழம் ஜக்கம்மா, பெருமாளக்கா மக பொம்மக்கா, பூக்கார அக்கா மகன் பாண்டி, சுந்து சுந்தரராஜன், செவலை கேசவன், திம்சு பவுனுசெல்வி, பேச்சு, சோனை, சேர்மக்கனி, சின்ராசு, லிங்கம்மா இப்படி எத்தனையோ பேர் என் பால்ய காலங்களில் என்னோடு சுற்றித்திரிந்தவர்கள். அவர்களுடைய ஞாபகங்கள் இந்தக் கரிசக்காட்டு மண்ணில் ஒட்டிக் கிடக்கின்ற கருப்பை போல என் மனசுக்குள் ஒட்டி கிடக்கின்றது. அதைத்தான் நான் பல்வேறு நேரங்களில் இலக்கியமாக பிரதி செய்கின்றேன். என்னோடு சுற்றித்திரிந்த இந்த ஜீவன்களை, இந்த மனிதர்களைப் பற்றி எழுதுகிற போது தான் எனக்கு ஒரு பெரிய இலக்கிய அடையாளமும் தனித்துவமும் கிடைத்து விடுகின்றன.
சோகமாக நெஞ்சில் அப்பிக் கொண்ட அம்மாசி:
ஆறாம் வகுப்பிற்கு நான் விருதுநகர் சென்றுவிட்டேன் அம்ம அப்போதும் நாலாம் வகுப்பில்தான். திடீரென காமாலையிட இரண்டு மாதம் படுத்து ஒன்பதாம் வகுப்பு பெரிய லீவில் இல்லாமல் போய்விட்டாள் அம்மாசி. ஊரில், முட்டுத்துணிக்குப் பதில் “ஸானிடரி நாப்கின்ஸ்’ வந்துவிட்டது. நடுத்தெரு ஆட்டுரலுக்கு ஆளில்லாமல் ‘மிக்ஸிக்கள் வந்துவிட்டன. நொம்பலம்’ என்று மேனும் அலுத்தபடி, ரோசமுடன் சிலுப்பிக் கொண்டு நிமிர்த்து திரிந்த ‘அம்மாசி’க்குப் பதிலாகத்தான் யாருமில்லை.
மனதைத் தூண்டும் புத்தக வாசிப்பு:
புத்தக வாசிப்பு, நம் மனதை எழுச்சிகொள்ளச் செய்யும்; தூண்டும். முதுமையில் வரும் அல்சைமர் (Alzheimer) டிமென்ஷியா (Dementia) போன்ற மறதி நோய்களைத் தள்ளிப்போடும். மூளையை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்; நினைவாற்றல் குறையாமல் பார்த்துக்கொள்ளும். குழப்பமான மனநிலையில் சரியான முடிவெடுக்கும் ஆற்றலைக் கொடுக்கும். அறிவாற்றலைத் தூண்டும் புதிர் விளையாட்டு (Puzzles), சதுரங்க விளையாட்டு போன்றவை தரும் அதே நல்ல பலன்களை புத்தக வாசிப்பும் கொடுக்கும்.
வாசிப்பை நேசித்த சிங்காரவேலர்:
தமிழகத்திற்கு வருகை புரிந்த மார்க்சிய தோழர்கள் பலரை சந்தித்தவர்களுள் ஒருவராகிய வரலாற்றாளர் அமீர் ஹைதர்கான் சிங்காரவேலரது புத்தக ஆர்வம்குறித்து தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடும் போது, ‘தென் இந்தியாவில் தனிநபர் நூலகங்களில் மிகப்பெரியது தோழர் சிங்காரவேலர் தனது இல்லத்தில் வைத்திருக்கும் நூலகமே’ என்று எழுதினார். மீரட்டிலிருந்தும் கான்பூரிலிருந்தும், அலகாபாத்திலிருந்தும் தோழர்கள் கிடைக்காத புத்தகங்களைத் தேடி நம்பி சிங்காரவேலர் இல்லம் தேடி வருவார்களாம். தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அனைவராலும் அழைக்கப் பட்ட அவரிடம் புத்தகம் இரவலாக பெற்று வாசித்தவர் பலர். யாருக்குமே புத்தகம் என்றால் அவர் தருவதற்கு தயங்கியதே இல்லை என்கிறார்கள்.
பிரதமர் ஆன பிறகு மாஸ்கோவுக்கு விஜயம் செய்த முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு உலகப் பிரசித்தப் பெற்ற லெனின் நூலகத்திற்கு சென்றார். குவிந்த நூல்கள் அடுக்கிய பிரம்மாண்டமான அந்த நூலகத்தில், ஒரு குறிப்பிட்ட இடத்தை கடந்த போது நேருவுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே ‘சென்னை சிங்காரவேலர் கலெக்ஷன்ஸ்’ என்று ஒரு தனிஅறை. அதில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை கண்டு அதிசயித்த நேரு அந்த அறையிலிருந்து வெளியே வர ஒன்னரை மணிநேரம் ஆனதாம்.
No comment