மதுரை 14வது புத்தக திருவிழாவில் நிலமும் நானும் எனும் தலைப்பில் ஆற்றிய உரை

தேதி: 06 Sep 2019
நிலமும் நானும்....

’லகரம் மாறியதால்
விளைநிலம்
விலைநிலமானது’
என்று காடு, கான்கிரீட் காடுகளாக மாறுவதை ஒரு புதுக்கவிஞன் வலியோடு எழுதிச் செல்கிறான்.

ஒரு நாடு, நல்ல நாடு அல்லது கெட்ட நாடு என்பது அங்கு வாழும் ஆடவர்களைப் பொருத்தது என்று ஒளவையார் கூறுவதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 நாடாகொன்றோ காடாகொன்றோ 
 அவலாகொன்றோ மிசையாகொன்றோ 
 எவ் வழி நல்லவர் ஆடவர்,
 அவ் வழி நல்லை வாழிய நிலனே
மக்களால் நிலத்துக்கு சிறப்பு… நிலத்தால் மக்களுக்கு அடையாளம். நிலமே மக்கள் அடையாளம்.

நானோ புரட்சி
        கடந்த 2006ல் மேற்கு வங்கத்தின் சிங்குரில் டாட்டா நிறுவனம் நானோ தொழிற்சாலை அமைப்பதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது.997 ஏக்கர் நன்செய்நிலம் விவசாயிகளிடமிருந்து பிடுங்கப்பட்டது. இதனால் பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் வாங்கப்பட இருந்தது. இதற்கு எதிராக விவசாயிகள் கொதித்து எழுந்தனர். இதை கட்டுப்படுத்த முடியாமல் கம்யூனிஸ்ட் அரசு திணறியது. பெரிய போராட்டங்கள் தொடங்கியது.  விவசாயிகளோடு தெருவிற்கு வந்து போராட்டத்தில் குதித்தார் மமதா. அதுவரை அவரை பல கிராம மக்களுக்கு தெரியாது. ஆனால் போராட்டத்திற்கு பின் அவர் விவசாயிகளின் குரலானார். அந்த நொடியே தீதி என்று மக்களால் அவர் அன்போடு அழைக்கப்பட தொடங்கினார். டாட்டா நிறுவனம் மேற்கு வங்கத்தை விட்டு வெளியே செல்லும் வரை போராடுவேன் என்று உறுதியாக நின்றார்.
         போராட்டம் என்றால் சாதாரண போராட்டம் கிடையாது. 26 நாட்கள்.. தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்தார். ஒவ்வொரு நாள் விரதமும் அவரை அரியணை நோக்கி நகர்த்தியது. டாட்டாவிற்கு எதிராக அவர் 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அது அவர் அரசியல் வாழ்க்கையில் பெரிய திருப்பமாக அமைந்தது. இந்திய வைரல் இந்திய வைரல் மேற்கு வங்கம் மட்டுமில்லாமல் இந்தியா முழுக்க இவரின் உண்ணாவிரதம் வைரல் ஆனது. தீதி உண்ணாவிரம் இருக்கிறார், நாள் 1..நாள் 10.. நாள் 20 என்று நாட்கள் நீண்டு கொண்டே சென்றது. டாட்டா நிறுவனம் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பியது. மாநில அரசும் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் விழிபிதுங்கியது அந்த போராட்டம் கடைசியில் வெற்றியில் முடிந்தது.     
        டாட்டா நிறுவனம் ''உங்கள் நிலமே வேண்டாம்'' என்றுவிட்டு ஊரைவிட்டு சென்றது. மோடியின் ஆதரவுடன் கடைசியில் தனது தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை குஜராத்திற்கு மாற்றியது டாட்டா. அப்போது மம்தாவிற்கு குவிந்த விவசாயிகளின் ஆதரவுதான் இப்போதும் அவரை பெரிய தலைவராக வைத்து இருக்கிறது. நிலத்துக்காக அந்த போராட்டம் நடந்த இடம் கொல்கத்தா மெட்ரோ சேனல் பகுதி 

இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.

மு.வ. உரை: 
எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.

சாலமன் பாப்பையா உரை:
நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள்.

கலைஞர் உரை:
வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்
 
அமேசான் பழங்குடியினர் நில வெற்றி….
         உலகம் முழுவதும் பழங்குடியினரை அவர்களின் பூர்விக நிலத்தைவிட்டு அகற்றும் வேலையைப் பல அரசுகள் செய்தவண்ணம் இருக்கின்றன. காடுகளின் இயற்கை வளமும் அவற்றில் கொட்டிக்கிடங்கும் கனிம வளமும் அரசு, தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றின் பேராசையைத் தூண்டுகின்றன. பல பெருவணிக நிறுவனங்கள் காடுகளைத் தங்கள் கட்டுக்குள் கொண்டுவர அவற்றில் வசிக்கும் பழங்குடிகள் தடையாக இருக்கிறார்கள் என்பதால், அவர்களை வெளியேற்றுவதற்காகத் தந்திரமாகப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
      ஆனால், அப்படியான தந்திரங்கள் அனைத்தையும் தங்கள் உறுதியால் உடைத்தெறிந்து இருக்கிறார்கள் ஈக்வடாரில் வசிக்கும் அமேசான் பழங்குடியின மக்கள். எண்ணிக்கையில் ஐந்தாயிரத்துக்கும் குறைவான இவர்கள்தாம், உலகைத் திரும்பிப் பார்க்கவைக்கும் சட்டப் புரட்சியை நடத்தியிருக்கிறார்கள். தங்கள் மூதாதையர்களின் நிலத்தை ஆக்கிரமித்த எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக இவர்கள் தொடர்ந்த வழக்கில் வெற்றிபெற்றுள்ளனர்.
        நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் ஈக்வடார் அரசு தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு அமேசான் காட்டில் வசிக்கும் வோரானி பழங்குடிகளின் மூதாதையர்களின் பூர்விக இடத்தில் கிட்டத்தட்ட நாலரை லட்சம் ஏக்கர் நிலத்தை வழங்கியிருந்தது. இதை எதிர்த்து சில வாரங்களுக்கு முன்பு மத்திய ஈக்வடார் பகுதியில் அமைந்துள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் தனியார் எண்ணெய் நிறுவனத்தை வெளியேற்றக் கோரி வோரானி பழங்குடியினர் வழக்குத் தொடர்ந்தனர். 
        “நாங்கள் இந்த நிலத்தில் பல ஆண்டுகளாக அமைதியான முறையில் வாழ்ந்துவருகிறோம். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நடக்கும் போராட்டம்தான் இந்த எண்ணெய் நிறுவனங்களை வெளியேற்றுவதற்கான முயற்சி. எங்களுடைய உரிமைக்காக நாங்கள் நடத்தும் இந்தப் போராட்டத்தில் எங்கள் நிலத்தை ஆக்கிரமித்துள்ள எண்ணெய் நிறுவனங்களை வெளியேற்றியே தீருவோம்” என்றார் வோரானி பழங்குடியினத் தலைவர் நெமொந்தே நென்கிமோ.
         ஈக்வடார் நாட்டு சட்டத்தின்படி காட்டு நிலத்தில் தாங்கள் வசிக்க உரிமை உண்டு என்பதைப் பழங்குடிகள் சுட்டிக்காட்டினார்கள். தங்கள் நிலத்தை மற்றவர்கள் ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது எனவும் அவர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகப் பழங்குடிகளின் நிலங்களை எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 
        பழங்குடிகளின் நிலம் அவர்களுக்கே சொந்தம் எனச் சட்டம் சொல்கிறபோது, அரசின் இந்த நடவடிக்கை சட்டத்தை மீறும் செயல். சட்டத்தை மீறும் எந்த நடவடிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது. வோரானி பழங்குடிகளின் நிலத்தை அவர்களிடமே திருப்பி அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
       ஈக்வடார் நாட்டில் அமேசான் பழங்குடியினர் 4,800 பேர் வசிக்கிறார்கள். சட்டபூர்வமாக நடந்த நில மீட்புப் போராட்டத்தில் தங்களுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி, தங்களது நம்பிக்கையை அதிகரித்த உற்சாகத்தில் இருக்கின்றனர் அமேசான் பழங்குடியினர்.
 
        தொல்காப்பியம் நிலத்தையும் பொழுதையும் முதற்பொருள் என்கிறது. காடு, நாடு, மலை, கடல் என நான்கு வகை நிலங்களைக் குறிப்பிடுகிறது. தமிழ் இலக்கணத்தில் இவை ஐந்து திணைகளாக வகுக்கப்பட்டுள்ளன. இவை நிலத்திணைகள் எனப்படுகின்றன. இவற்றுள், 
1.	மலையும் மலை சார்ந்த நிலமும் குறிஞ்சி எனப்படும்.
2.	காடும் காடுசார்ந்த நிலமும் முல்லை எனப்படும்.
3.	வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் எனப்படும்
4.	கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல் எனப்படும்.
5.	மணலும் மணல் சார்ந்த பகுதிகளும் பாலை எனப்படும்.

மண்ணுக்கும் பெண்ணுக்கும்தான் அத்தனை போர்களும் நடந்தது. ராமாயணம், மகாபாரதம், ஹோமர் எழுதிய இலியட் என எல்லாவற்றிலும் மண், பெண் பிரச்சனைதான். இன்னொரு நிலம்தேடிதான் மனிதன் நிலாவில் கால்வைத்ததும்... இப்போது சந்திரயான் -2 நிலவைத் தொட்டதும்....

யூத நிலம் …..
யூதர்களின் புனிதமாக கருதப்பட்ட, சாலமனின் புதுப்பிக்கப்பட்ட கோயில். யூதர்கள் புனித இடமாக கருதிய ஜெருசலேம். இவையே யூதர்கள் உலகெங்கும் சிதறடிக்கப்பட காரணம்.
யூதர்கள் தங்களை கடவுளால் ஆசிர்வதிக்கபட்டவர்கள், தாங்களே கடவுளின் பிள்ளைகள் ௭ன கூறினார்கள். அவர்கள் மோசஸ் அருளிய பத்து கட்டளைகளை, தோராவை பின்பற்றினர். அவர்களின் கடவுள் ஜெகோவா.
முதலில் இயேசுவும் ஒரு யூதரே. அவரை இறை தூதர் ௭ன்று மக்கள் கூறியுதும், இயேசு சாலமனின் புதுப்பிக்கப்பட்ட கோயில் இடியும், அதை தான் மீண்டும் கட்டுவேன் ௭ன்றுரைத்ததும் இயேசுவை சிலுவையில் அரைய காரணமாயிற்று. இதுவே யூதர்கள் சிதறடிக்கப்பட காரணம். இயேசுவை கொன்ற யூதர்கள் ௭ன்ற கறை அவர்கள் மேல் படிந்தது.
இரண்டாவது மதமாற்றம். ரோம் மிகப்பெரிய பேரரசு. அப்போதைய ரோமின் மன்னன் கான்ஸ்டான்டைன் கிறிஸ்துவத்தை தழுவியது யூதர்களுக்கு பெரும் சிக்கலாகிப் போனது. அவர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். இல்லையெனில் நாடுகடத்தப்பட்டனர்.
அதைப்போலவே கிறுஸ்துவ, முஸ்லீம் மதங்களின் ஆதிக்கம் யூதர்களை சிதறடித்தது. யூதர்கள் பிற மதங்களை சார்ந்தோரை யூதர்களாக ஏற்கமாட்டார்கள். ௭ல்லா இடங்களிலும் இதனால் துரத்தப்பட்டனர். கொன்று குவிக்கப்பட்டனர்.
ரோமிர்க்கும் யூதர்களுக்கும் நடந்த யுத்தம், சிலுவை போர்கள் அனைத்தும் யூதர்களுக்கு சாதகமாக அமையவில்லை. இதனால் யூதர்கள் வீழ்ந்தனர்.
யூதர்கள் தங்களுக்கு சொந்த நாடு வேண்டும் ௭ன தீர்மானித்தீர்கள். அதற்காக பாலஸ்தீனத்தில் பல நில வங்கிகளை நிறுவினர். நிலவங்கி அரேபிய முஸ்லிம்களுக்கு நிலத்திற்கு பணம் கொடுக்கும். அதை அவர்களால் திருப்பி தர இயலாது. அந்த நிலங்களை தன்வசப்படுத்தும். நிலவங்கிக்கு பணம் யூதர்களால் உலகெங்கும் இருந்து அனுப்பப்படும். இப்படி நான்கு ஆண்டுகளில் பெரும்பகுதியை தன்வசப்படுத்தி யூதர்கள் பாலஸ்தீனில் இஸ்ரேல் ௭ன்ற நாட்டை உருவாக்கினர். இன்று வரை நடக்கும் இஸ்ரேல், பாலஸ்தீனம் பிரச்சனைக்கு இதுவே காரணம். நிலப்பிரச்சனை.
இப்போது உலகிற்கு சவால் விடும் வல்லமை பொருந்திய நாடாக உயர்ந்து நிற்கிறார்கள். அதற்கும் காரணம் அவர்கள் சிதறடிக்கப்பட்டதே. மொசாட் அவர்களின் உளவுத்துறை அமைப்பு. இன்று வரை யூதர்கள் அனைத்திலும் கொடிகட்டி பறக்க காரணம் இந்த உளவுத்துறை அமைப்பு. உலகின் ௭ல்லா இடங்களிலும் இவர்கள் பரவியது அவர்களுக்கு இப்போது சாதகமாக அமைந்துவிட்டது. இஸ்ரேலை யாரும் தொட முடிவதில்லை. தொட்டால் மொசாட் அவர்களை விட்டுவைப்பதில்லை.

புறநானூற்றில் வரும் நிலமிழந்த பாரிமகளிர் பாடல் :
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் 
எந்தையும் உடையோம் எம்குன்றும் பிறர் கொள்ளார்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்
வென்று எறிமுரசின் வேந்தர்எம் 
குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே... 

(திணை: பொதுவியல் துறை: கையறு நிலை)

[ அந்த நாள் அந்த வெண்ணிலா...
எங்கள் தந்தையும் இருந்தார் எங்கள் குன்றும் இருந்தது
இந்த நாள் இந்த வெண்ணிலா...
பகைவர் எங்கள் குன்றைக் கைப்பற்றினர்; எங்கள் தந்தையும் இல்லை....
பாரி மகளிர் தம் தந்தையை இழந்த போது பாடியது ]

’முல்லைநிலக்குன்றுகள்
தாருக்கடியிலும் தண்டவாளத்திற்கு அடியிலும்
கிடக்க
குறிஞ்சி தேயிலையால் தேய்ந்துபோக
நெய்தல் பணக்காரனின் விடுமுறை வீடுகளாக
மருதம், பயிரும் வரப்புமிழந்த
சாலைகளுடனும் நட்டுவைத்த கருங்கற்களுடனும்
நகர்களாக
நீ பாலையை மட்டுமே பார்க்க வேண்டியிருக்கும்’
என்று கிறித்தவக் கல்லூரி தாவரவியல் பேராசிரியர் து. நரசிம்மன் ஒரு கவிதையில் ஐவகை நிலத்துக்காகக் கண்ணீர் வடித்துச் செல்கிறார்.

எட்டுவழிச் சாலை நிலத்தை இழந்தவர்களுக்கு
எட்டுவலிச் சாலையாகிவிட்டது….
`நிலத்தை விட்டு வெளியேறுங்கள்; மறுத்தால் கழுத்தை அறுத்துக்கொள்வேன்'- போலீஸையே கலங்கடித்த பெண்

 `என் நிலத்தை விட்டு வெளியேறுங்கள்; இல்லையென்றால் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொள்வேன்' என்று பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடினார் தேவதர்சினி.
சேலம் முதல் சென்னை வரையிலான பசுமைச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கான அளவிடும் பணி மின்னல் வேகத்தில் நடந்தது. . இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடுமையாகப் போராடி வருகின்றனர். ஆங்காங்கே விவசாயிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுனர்.
இந்நிலையில், பசுமை வழிச் சாலைக்கு நிலம் அளவிடும் பணி திருவண்ணாமலை மாவட்டத்தில்  நடந்தது . அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதையும் மீறி போலீஸ் அடக்குமுறையோடு நிலம் அளவிடப்பட்டு வருகிறது. கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு, சாலையனூர், பெலாசூர் பகுதியில் ஒரு குழுவும் அதேபோல் செய்யாறு அடுத்த எருமை வெட்டி, பெரும்பாளையம், கீழ் கொத்தூர் பகுதியில் மற்றொரு குழுவும் நிலம் அளவீடு செய்து வருகிறது. இதற்கு எதிப்பு தெரிவித்து எருமை வெட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரமேஷின் மகள் தேவதர்சினி என்பவர் தன் கழுத்தில் பிளேடை வைத்துக்கொண்டு 'என் நிலத்தை விட்டு வெளியேறுங்கள் நிலத்தில் அளவீடு செய்தால் கழுத்தை அறுத்துக்கொள்வேன். எனக்கு என் உயிர் முக்கியம் இல்லை விவசாயம்தான் முக்கியம். இந்த நிலத்தை வைத்துதான் நாங்க உயிர் வாழுறோம். எங்களுடைய 5 ஏக்கர் நிலம். 2 கிணறு என எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டால் எங்கள் குடும்பம் எப்படி பிழைக்கும்.
இந்த நிலத்தை வைத்துதான் எங்க அப்பா 3 பெண் பிள்ளைகளைப் படிக்க வச்சாரு. எங்கள காப்பாத்தினது இந்த நிலம்தான். அத நான் விடமாட்டேன். என் நிலத்தை அளக்காதீங்க வெளியேறுங்க' என்று கழுத்தில் பிளேடு வைத்துக்கொண்டு போராட்டம் நடத்தினார் தேவதர்சினி.
அவர் கழுத்தில் பிளேடு வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தபோது ஒரு பெண் போலீஸ் அவரின் கையில் இருந்த பிளேடை பிடுங்குவதற்கு அவருடைய கையைப் பிடித்து இழுத்தார். இதில் எதிர்பாராத விதமாக தேவதர்சினியின் கழுத்தில் பிளேடு கிழித்து ரத்தம் வந்தது. அதையும் பொருட்படுத்தாமல் அழுதுகொண்டே தேவதர்சினி, `எங்களுக்கு விவசாயம்தான் முக்கியம்' எனக் குரல் கொடுத்தார். அதன்பின் அங்கு நிலம் அளப்பது நிறுத்தப்பட்டு அதிகாரிகளும் போலீஸும் அந்த இடத்தை விட்டு வெளியேறியது. அதன் பின்பு தேவதர்சினியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

என் கவிதையில் எங்கள் நில நினைவுகள்….
’ நகரத்து கோடை மதியங்களில்
ஐஸ்கிரீம் ருசிப்பதற்காக
வரிசையில் நிற்கும் போது
வெயிலுக்கு உகந்த அம்மன் கோவில்
நீர் மோர்  பந்தல் நினைவிற்கு வருகிறது
மனதின் ருசி அறியுமா
மாநகர வெயில்? ’
       என்ற கவிதையும்
’வேப்பம்பூ சிரிக்கிற
வெயில் காலம் 
கசந்ததேயில்லை.
வேப்பம் பழங்கள் பிதுக்கி
காயவைத்த கொட்டைகளைக் காசாக்கி,
சீனி மிட்டாய் வாங்கித் 
தின்ற உச்சிப் பொழுதுகளில்’
என்ற இந்தக் கவிதையும் மல்லாங்கிணறு என்ற என் காலடிபூமியின் ஞாபகச் சித்திரங்கள்.

என்னுடைய மேட்டு நிலம் -  கலாப்ரியா 
என்னுடைய மேட்டு நிலம்
நேற்றுப் பெய்த மழையில்
குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது

என்னுடைய மேட்டு நிலத்தை.
இன்றை வெயில்
நெருப்பால் வருத்திக்கொண்டிருந்தது

(என்னுடைய மேட்டு நிலம்
நாளைய ‘வெறுமையில்’
தவம் புரிந்து கொண்டிருக்கும்)
என்னால்- அதன்
எல்லா அனுபவங்களையும்
உணர முடிகிறது.

ஏனென்றால்,
இறந்துவிட்ட - என்னை
அதில் தான் புதைத்திருக்கிறார்கள்.

தமிழீழம் சாத்தியப்பட்டிருந்தால் உலகில் முற்றும்முழுமையான தமிழ்நிலமாக ஈழம் நிமிர்ந்து நின்றிருக்கும். அதை நான் முடிந்த கனவாகக் கருதவில்லை…..

பாட்டிலில் அடைத்த மண் / பகத்சிங்
ஒரு கையில் மதம், மறுகையில் புரட்சி என்று உருவானவர்கள் மத்தியில் பகத்சிங் மத அடையாளங்களை துறந்து நின்றார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலைச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன், 12 வயதான பகத்சிங் பள்ளிக்குச் செல்லாமல், புகைவண்டியில் ஏறி, அமிர்தசரஸ் சென்று, அந்த இடத்தை பார்த்தான். அந்த இடத்திலேயே உயிரற்றவனைப் போல் பல நிமிடங்கள் நின்று கொண்டிருந்த அவன், அந்த மண்ணை எடுத்துத் தன் நெற்றியில் பூசிக்கொண்டான். கொஞ்சம் மண்ணை, ஒரு சின்னக் கண்ணாடிப்புட்டியில் போட்டுக் கொண்டான். அவன் வீடு திரும்பியதும், அவனுக்காக வைத்திருந்த உணவையும் மாம்பழங்களையும் உண்ணுமாறு அவன் சகோதரி கூறினாள். எல்லாவற்றையும் விட, அவனுக்கு மிகப் பிடித்தமான மாம்பழங்களைக் கூட உண்ணாமல், அந்த இரவு அவன் உண்ணாவிரதமிருந்தான். உணவு உண்ணுமாறு சொன்னபோது, தன் சகோதரியைப் பக்கத்தில் அழைத்துச் சென்று, ரத்தம் கலந்த அந்தப் புனித மண்ணைக் காட்டினான். சாப்பிடவே இல்லை. அவன் குடும்பத்தினர் கூற்றுப்படி, அவன் தினந்தோறும், புத்தம் புது மலர்களை அந்த மண்ணில் வைத்து அதன் மூலம் எழுச்சியைப் பெற்றுக் கொண்டிருந்தான்’ 

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *