விகடன் பிரசுரம்
வெளியிடப்பட்ட தேதி: 14 Jan 2013
சிலருடைய எழுத்துக்களை வாசிக்கும்போது அவர்கள் சொல்லிவிளக்கும் சூழலுக்குள் அப்படியே சுருண்டு கிடக்கத்தோன்றும். கதகதப்பான சாம்பலில் இருந்து எழ மனமே இல்லாமல் எழுகின்ற ஒரு பூனைக்குட்டியைப் போலத்தான் அந்த எழுத்துக்களின் ஈர்ப்பில் இருந்து நம்மால் விடுபட முடியும். எழுதிக் குவிக்கும் இயந்திரத்தனத்தில் இத்தகைய எழுத்துக்கள் எப்போதாவது – எவரிடம் இருந்தாவது வெளிப்படும். தமிழச்சியிடம் இருந்து வெளிப்பட்டிருக்கும் ‘மயிலிறகு மனசை’ப்போல்! ‘மயிலிறகு மனசு’ எனத் தலைப்பிட்டதாலோ என்னவோ… மிக மெல்லியத் தூரலைப்போல் நம்மை மிதக்க வைக்கிறது அவருடைய எழுத்து. கட்டுரைக்கான கட்டமைப்பிலும் கவிதைத்தனம் நிகழ்த்தியிருப்பது கைகுலுக்கத்தக்கது. நமக்கு மிக நெருக்கமான நண்பர்களிடத்தில் நம் எண்ணச்சாயல் நிச்சயம் இருக்கும். அறுபடாத ஆத்மார்த்த நட்பை அந்த எண்ணச்சாயலே ஏற்படுத்துகிறது. அந்த விதத்தில் தமிழச்சி அறிமுகப்படுத்தும் அத்தனை தோழிகளிடத்திலும் எளிமை, நேர்மை, யதார்த்தம் எனத் தமிழச்சியின் பிரதிபலிப்புகளையே பார்க்க முடிகிறது. தாயாய் வருடிக்கொடுக்கவும், குழந்தையைப்போல் அடம்பிடிக்கவும் கற்றுவைத்திருக்கிறது தமிழச்சியின் தமிழ். அதனால்தான் அன்பின் அவசியத்தைப் பெருமையாகவும், ஏக்கமாகவும் ஒரே நேரத்தில் அவரால் எடுத்துவைக்க முடிகிறது. ஒரு பூக்காரப் பெண்ணையும் தன் ரத்தம் பிரித்த மகளையும் ஒரே தட்டில்வைத்துப் பாசம் பாராட்டும் பக்குவம் தமிழச்சிக்கு வாய்த்திருப்பது வரம். நடிகை ரோகிணி தொடங்கி தன் வீட்டு வேலைக்காரப் பெண் பாண்டியம்மா வரை தமிழச்சி விவரிக்கும் நட்பும் நெகிழ்வும் அலாதியானவை. ‘சமயங்களில் வாழ்வின் விழுமியங்களை, அதிகம் படிக்காத அன்பானவர்களே நமக்குக் கற்றுத் தருகிறார்கள் – போகிறபோக்கில் ஒரு மாம்பூ மேலுதிர்வதுபோல்!’ என்ற வரிகளில் தமிழச்சியின் எழுத்து தோகை விரித்து ஆடுகிறது. அவள் விகடனில் தொடராக வந்தபோதே ஏராளமான இதயங்களைக் குத்தகைக்கு எடுத்த இந்தப் படைப்பு, நூல் வடிவில் நிச்சயம் உங்களையும் ஒரு பூனைக்குட்டியாக மாற்றும்!
No comment