முன்னகர்வின் மகிழ்ச்சி – மு.முருகேஷின் ‘ஹைக்கூ’ கவிதைகளை முன்வைத்து ஒரு பகிரல்

தமிழ் ஹைக்கூ பரப்பில் தொடர்ந்து ஆர்வமுடன் இயங்கி வருகின்ற கவிஞர் முருகேஷ், இந்த நூலில், 2001-ம் ஆண்டு தொடங்கி, 2006-ம் ஆண்டு வரையிலான ஹைக்கூ நூல்கள் மற்றும் சில தரவுகளிலிருந்து பெண்ணியச் சிந்தனைகளை முன் வைக்கின்ற கவிதைகளைத் தேர்வு செய்து ஆய்விற்கு உட்படுத்தி இருக்கின்றார். இருபதாம் நூற்றாண்டின் புதிய போக்குகளை, விழிப்புணர்வினைக், குறிப்பாகப் பெண்களின் உணர்வுநிலை, வாழ்வுநிலைத் தளங்களில் ஏற்பட்ட மாற்றத்தை இக்கவிதைகள் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என விவாதிக்கின்ற முருகேஷை ஒரு கவிஞராக மட்டுமே அறிந்தவள் நான் - ஆய்வாளராக அறிய இது ஒரு சந்தர்ப்பம். 
	வரலாற்றில் பெண்கள் பதியப் பட்டிருப்பதனை விட மறக்கப்பட்டதே அதிகம். "1620ல் வரலாற்றுப் புகழ்பெற்ற மேஃபிளவர் கப்பலில் பயணத்தை மேற்கொண்ட ஆரம்ப கர்த்தாக்களின் நினைவைப் போற்றுவதற்காகப் ஃப்ளைமவுத் கப்பல் துறையில் நினைவுக்கல் செதுக்கப்பட்டபோது, புது உலகை நிர்மாணிப்பதற்காக அவர்களுடன் அக்கப்பலில் பிரயாணம் செய்த பதிணேழு பெண்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை. பொதுவாக, ஒவ்வொரு சகாப்தத்தின் வரலாற்றாசிரியர்களும் பெண் இனத்தைப் பற்றி சிறிதும் அக்கறை காட்டவில்லை....... இருந்தபோதிலும் உலகின் மாதர்களுக்கு ஒரு வரலாறு இருந்து வந்துள்ளது" என்கிறார் ரோஸலிண்ட் மைல்ஸ் ‘உலக வரலாற்றில் பெண்கள்’ எனும் நூலில். 
	மறக்கப்பட்ட பெண்ணின் வரலாறு புத்துருவாக்கம் செய்யபட்டது ‘பெண்ணியம்’ எனும் சிந்தனைப்போக்கு முகிழ்த்த காலகட்டத்தில் தான் என்றால், பெண்குரல் - தன் நிலை குறித்த தெளிவுடனும், திடமுடனும் புதியதொரு வீச்சினைத் தொட்டது கலை, இலக்கிய வெளிப்பாடுகளில். பெண், கல்வியறிவு, புலமை, அறிவுசார்ந்து இயங்குதல், மரபின் பொய் வேலி உடைத்தல் - இவற்றின் துணை கொண்டு தனக்கான மொழியை உருவாக்கியபோது படைப்பாற்றல் எனும் தளத்திலும் ‘பெண்ணியச் சிந்தனை‘
 மிக முக்கியமான போக்கெனச் சூல் கொண்டது. பத்தொன்பதாவது நூற்றாண்டு தோற்றுவித்த இச்சிந்தனை தமிழ் ஹைக்கூ கவிதைகளில் எவ்வாறு வெளிப்படுகின்றது என்று சிலவற்றைத் தேர்ந்து, ஆராய்ந்திருக்கிறார் முருகேஷ். 
	தமிழ் ஹைக்கூக் கவிதைகளில் நீண்ட காலமாக ஆற்றலுடன் எழுதிவருபவர் என்பதே முருகேஷின் தனிப்பெரும் அடையாளமாக இருப்பதை உணரமுடிகிறது. இதழ்கள் வாயிலாகவும் வெளிப்பாட்டு வடிவ முயற்சிகளிலும் தமிழ் ஹைக்கூவை வளர்த்தெடுப்பதில் அக்கறையுடன் திகழ்பவர். மலையாள மொழியில் இவரின் ஹைக்கூக் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதும் ஒரு எளிய நற்சான்று. நெகிழ்வு, காட்சிப்படிமம், வாழ்வு, அபூர்வக் கவனிப்பு, சமுதாயம், நுண்ணுணர்வு, அகம், நடப்பியல், அழகான பொய்கள், மறுவாசிப்பு, நகைச்சுவை, கருப்பொருள் பதிவு போன்ற கூறுகளை உள்ளடக்கிய தமிழ் ஹைக்கூக் கவிதைகளை படைத்தளித்திருக்கிறார். கல்யாண்ஜி அணிந்துரையொன்றில் சொல்வதைப் போல "ஏளைரயடகளுக்கும ஏளைiடிn என்று சொல்லப்படுகிற தரிசனத்திற்கும் ஆழ்ந்த அழகியல் தொடர்பிருக்கிறது". அதற்கான சாத்தியங்கள் தமிழ் ஹைக்கூக்களில் தென்படுமெனில் ஏற்படுகிற ஆனந்தத்தை ஒரு தேநீர் பருகிக் கொண்டாடலாம்தான். 
	ஹைக்கூப் பரப்பில் இவரின் செயலூக்கம் உள்ளபடியே போற்றத்தக்கது. அன்பும் உரிமையும் கொண்ட இவரின் ஆளுமை ஹைக்கூ முயற்சிகளுக்கு மிகப் பொருத்தம். புதிதாக எழுத வருபவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பதில் முன்னணியில் இருப்பவர். முருகேஷின் சில ஹைக்கூக்களைப் பகிர்ந்து கொள்வது சரியாக இருக்கும். 
		இரவில் தாமதமாய் 
வீடுவந்தேன் 
சலலத்தன தவளைகள்.
	
தவளை குதித்தது 
தாமரை இலையில் 
உருளும் நட்சத்திரம். 
ஹைக்கூவிற்கான மனோநிலை வெளிப்படுகின்ற கவிதைகள் இவை. 

		குழந்தையற்ற தொட்டில் 
ஆடிக்கொண்டிருக்கிறது
காற்றில்.

		கறிக்கடை க்யூ 
எலும்புக்காக 
நாயருகே நான். 

		கிழிசலைத் தைக்கும் தாய் 
விளையாட்டாய்க் கிழிக்கும் 
குழந்தை. 
ஒரே சமயத்தில் பங்குகொள்பவனாகவும், பார்வையாளனாகவும் கவிஞன் தென்படுகின்ற கவிதைகள் மேற்சொன்னவை.
		தூங்கும் அம்மா 
தாலாட்டும் 
சின்னக் கொலுசு. 

		நடுநிசியில் 
விழித்தெழுந்து பார்த்தால் 
குழந்தைக்குப் பாலூட்டும் தாய். 
	
மிட்டாய் வண்டியின் 
மணியொசை 
வழித்தெழும் குழந்தை. 
குழந்தைமையைத் தொலைத்துவிடாத ஞானமும், கவனமும், ஹைக்கூவின் கூறுகளில் ஒன்றென்பதை உணர்ந்த கவிதைகள் இவை. 
		பூட்டிய வீடு 
தனிமையில் பேசுமோ
தொலைபேசி மணி. 
	
நண்பனின் மரணம் 
இடுகாட்டில் நுழைகையில் 
நெற்றியில் முதல் தூரல். 
அகவழிப் பயணத்தில், இயற்கையின் பருவங்களையும், அதன் வெளிப்பாடுகளையும் இணைத்துக் கொண்டு உரையாடுவது ஹைக்கூவின் மற்றொரு குணாம்சம். அந்தப் பாங்கினை வெளிக்கொள்கின்ற கவிதைகள் மேலே குறிப்பிட்டவை. அனுபவத்திலும் கோணங்களிலும் மனதில் தேங்குபவை. 
கல்யாணக் கூட்டம் 
முதிர்கன்னியின் தலையிலும்
கொஞ்சம் அட்சதைகள் 
என்பதும் அவரின் பார்வையே. ஒரு ஆணின் பார்வையாக இக்கவிதை இருப்பதுடன் தற்போது தமிழ் ஹைக்கூவில் பெண்ணியம் என்ற தலைப்பில் இவரின் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு புத்தகமாவது நல்லூக்கம் அளிக்கிறது. ஹைக்கூ குறித்தும், தமிழ் ஹைக்கூ குறித்தும், பெண்ணியம் குறித்தும், தமிழ் ஹைக்கூவில் பெண்ணியம் குறித்தும் சமூக அரங்கில் ஒரு ஆக்கப்பூர்வத் தாக்குதலை விளைவிக்க இப்புத்தகத்தால் இயலுமெனில் முன்நகர்வின் மகிழ்ச்சியே. 
		வளைக்குள் சிக்கியும் துடிக்காமல் 
உற்சாகமாய் மீன்கள் 
கோஷா விழிகள், 
என்னும் நிர்மலா சுரேஷின் கவிதை பர்தாவுக்குள் தம்மைப் பழக்கிக் கொண்டுவிட்ட பெண்களின் நிலையை முன் வைக்கிறது. காலம் காலமாய் அவ்விழிகள் தம்மியல்பை விடுத்து வேறு கரை ஒதுங்கிவிட்டன. உற்சாகத்தின் உண்மைப் பொருள் வலியெனக் கொள்ள கவிதையின் தேவை அவசியப்படுகிறது. துடிக்காமல் இருப்பதாகச் சொல்லித் துடிக்க வைப்பதும் அவ்விதமே. 
		இலைகளற்ற மரத்தில் 
விண்மீன்கள்
விரையும் நிலா. 
என்னும் கல்பனாவின் கவிதை ஜப்பானிய ஹைக்கூவிற்கு இணையானது. கோணம் மிக அற்புதமானது. பெண்ணியம் என்றில்லை வேறு எப்படிமத்திற்கும் பொருந்திப்போகும் படிமம். இதுவே ஹைக்கூவின் அலாதித்தன்மை. விரையும் நிலா என்கையில் மனதிற்குள் நிகழும் கோணத்தின் சாத்தியம் ஹைக்கூவின் ஆகச் சிறந்த கூறு. இலைகளற்ற மரம் நிச்சயமாய் பெண்ணியம் பேசுகிறதுதான். அதன் வலி அப்படிச் சொல்லிவிட வைக்கிறது. 

உன்னால் முடிகிறது 
குயிலே 
ஊரறிய அழுவதற்கு.  
என்னும் மித்ராவின் கவிதை கேட்டவுடன் ததும்பும் பொருள் நிரம்பியது. உன்னால் முடிந்தது என்னாலும் முடியுமென எனக்குத் தெரியும்தான். ஆனாலும் அது இயலாத சூழலின் நிர்கதி என்னை இப்படியொரு கவிதை எழுத வைத்திருக்கிறது. ஒரு காடும் ஒரு குயிலும் ஒரு பெண்ணும் உரையாடிக்கொண்டிருக்கும் இக்காட்சிதான் எத்துனை ஆதங்கத்தினை வெளிக்கொணர்கிறது...? 
		"நான் ஒரு பெண். 
		என்னைப் போன்று ஏராளமானவர்கள் 
		ஒன்று சேர்ந்து கர்ஜிப்பது
		உங்கள் காதுகளில் விழவில்லையா? 
இதை நீங்கள் உதாசீனம் செய்யமுடியாது.
நான் ஒரு பெண். 
நான் வளர்வதைக் கூர்ந்து கவனியுங்கள். 
காலோடு கால் சேர்ந்து நிற்கும் என்னைப் பாருங்கள். 
நிலப்பரப்பை என் அன்புக்கரங்களால் அரவணைக்கிறேன்.
ஆயினும் இன்னும் நான் ஒரு கருவே. (சிறுமுளையே)
என் சகோதரன் என்னைப் புரிந்து கொள்ளும் வரையில் -
இன்னும் நெடுந்தூரம் கடந்து செல்ல வேண்டும் நான்...
எனும் ஹெலன் ரெட்டியின் பாடலை இங்கு நினைவு கூறலாம்.
	இவ்வாய்வில் குறிப்பிட்டவற்றைத்தவிர்த்து பெரும்பான்மையானவை பெண்ணியம் பற்றிய சுவடுகள் இல்லாதவையே. ஆயினும் எழுதப்பட்டிருக்கிற தமிழ் ஹைக்கூக் கவிதைகளிலிருந்து பெண்ணிய சிந்தனையை ஆய்ந்து அறிவது நல்நோக்கமே. குறிப்பிட்ட எந்த ஒரு சிந்தனை போக்கினையும் கண்டறிய ஹைக்கூவிற்குள் பயணிக்க முற்படுவது முரணான செயலாயினும் ஒரு கல்வி சார் செயல்பாடாக (யn யஉயனநஅiஉ சநளநயசஉh) வெளிப்படுகையில் அது தவிர்க்க முடியாததாக இருக்கலாம். முருகேஷின் நூலாக்க முயற்சிக்கு வாழ்த்துக்களும் ஆய்வுக்கு பாராட்டுதல்களும்.  

                                                                                       * * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *