"உனது கடைசி இரு காசுகளை இவ்வாறு செலவு செய் : ஒரு காசு ரொட்டிக்கு - மறுகாசு லில்லி மலருக்கு" என்கிறது சீனப்பழமொழி ஒன்று. Fetna வருடந்தோறும் தன் இரு காசுகளையும் தமிழுக்கே செலவு செய்கிறது. தனித்துவம் வாய்ந்த தமிழ்த் திணைகள் போல, இவ்வமைப்பும், தனிமனித வாழ்வைத் தமிழுடன் இணைத்துப், பொது உலக வாழ்வை மேன்மையடையச் செய்கிறது என நான் நம்புகின்றேன். ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடம் பெயரும் மக்கள் தம் தாய்மொழியை உயிரனைய நேசித்தல் இயல்பே எனினும், நம் உணர்வோடு கலந்த நம் தமிழ் மொழியை நமது கலாச்சார மரபின் தொடர்ச்சியாகவும், நீண்ட நெடிய நமது பண்பாட்டின் நீட்சியாகவும் பரப்புதலை Fetna முன்னெடுத்துச் செல்வது மிக நல்லதொரு முயற்சி. உலகம் முழுக்க விரவியிருக்கும் தமிழ் மக்களின் உணர்வையும் செயல் திறனையும் தமிழே முன்னெடுத்துச் செல்கிறது. அகக் கூறுகளான அன்பும் கருணையும், காருண்யமும், பகிர்தலும், புறக்கூறுகளான அறமும், வீரமும், நெறிமுறையும் அது ஈட்டும் வெற்றியும் தமிழின் இயல்பிலேயே, தமிழனின் வாழ்முறையோடு இயைந்து இருக்கிறது. பூமிப்பந்தில் ஏதாவது ஒரு புள்ளியில் இரு தமிழர்கள் சந்திக்கும் போது அவர்களது அறிமுகப் புன்னகையில் இழைந்தோடுவது ‘தமிழால் இணைவோம்’ என்பதுவே; அடுத்தடுத்த அவர்தம் தொடர் சந்திப்புக்களில் ‘செயலால் வெல்வதே’ இணைந்த கண்ணிகளைத் தொடர் பயணமாக்குதலைச் சாத்தியப்படுத்தும். அவ்வகையில் Fetnaவின் தொடர் பயணத்தில் இவ்வருடம் பங்குபெற்று, நானும் இணைந்து கொள்வது மிக மகிழ்ச்சி. இந்தி மொழியை மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என்று புருஷோத்தம தாஸ் தாண்டன், மொரார்ஜி தேசாய் போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் முனைந்து நிற்கையில் அப்போதைய பிரதம மந்திரி நேருவின் செயலாளர் திரு பணிக்கர் என்பவர், நேருவிடம் பின்வருமாறு சொன்னாராம்: "ஐயா- இந்தி மொழியின் இலக்கியங்கள் இரண்டே இரண்டு - ஒன்று துளசிதாசரின் இராமாயணம் மற்றது ஆல் இண்டியன் ரயில்வே கைடு." எந்த மொழியையும் இழிவுபடுத்துதல் நமது நோக்கமன்று. ஆனால் தமிழ் மொழியின் செவ்வியல் தன்மையையும், அதன் மூவாயிரமாண்டு இலக்கியச் செழுமையையும் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டின் இயந்திரச் சூழலிலே, இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்வதோடு, அதனை அடுத்த தளத்திற்கு எவ்வாறு செயல்முறையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் சுட்ட வேண்டியது நமது கடமை. அடுத்த தலைமுறைக்கான புதிய ஆத்தி சூடியாகப் பின்வருவனவற்றை அறிவிப்போமா - பிழைத்தலுக்காக அல்ல வாழ்வதற்காக! இயன்றவரை தூய தமிழைப் பயன்படுத்துவோம். தமிழின் மரபான விழுமியங்களை இளையோருக்கு எடுத்துச் சொல்லி அதன் வேர்களை நிலைநிறுத்துவோம். அதே சமயம், பிற மொழிகளைக் குறைத்து மதிப்பிடாமல், புதியன கற்று அவற்றை இறக்கைகளாய் அணிவோம். தமிழ் மொழி சார்ந்த நடுநிலையான மாற்றங்களைப் பொது விவாதம் நிகழ்த்தி மனதார நடைமுறைப்படுத்தி, மொழியின் வளர்ச்சிக்கு ஆவன செய்வோம். தமிழின் தற்போதைய நிலையினை மதிப்பீடு செய்து, செய்ய வேண்டிய மாற்றங்களை உற்றுநோக்கி, அவற்றைக் களைவதற்கான செயல்களைப் புரிவோம். உலகின் ஆகச் சிறந்த தமிழர் வாழ்வியலை வாழ்வோம். வாழச் செய்வோம். மாற்றுக்கருத்துகளை மதிப்பதும், வாழ்வின் நிச்சயமின்மையை உள்ளடக்கியதுமான நம் தமிழ்ப் பண்பாட்டினைக் கொண்டாடுவோம். தமிழின் இலக்கண இலக்கியச் செழுமையைப் போற்றுவோம். கூடவே நவீன இயக்கங்களையும் அரவணைப்போம். தொல்தமிழ் இலக்கியத்தைப் பிற மொழியினருக்கு அறிமுகப்படுத்துவோம். பிறமொழி இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்ப்போம். கைகுலுக்குவதன் மூலமே இதயங்களை இணையச் செய்ய முடியுமென நம்புவோம். தமிழ் வளர்த்த அறிஞர்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம். இணையத்தில் தமிழ் பரப்புவோம். தமிழர் உணவுகள் குறித்த விழிப்புணர்வு கொள்வோம். சுவைப்போம். பகிர்வோம். உணர்வோடு உள்ளுணர்வும் சரிவிகிதத்தில் இருப்பதுதான் தமிழனின் வாழ்வு என்பதை உரக்கச் சொல்வோம். வீண் பெருமை பேசுவது எவ்வளவு ஆபத்தானதோ அது போலவேதான் நம் ஆகச்சிறந்த பலத்தை நாம் உணராமல் இருப்பதுவும். சங்க இலக்கியம் முதல் கைபேசித் தமிழ்மென்பொருள் செல்லினம் வரை தமிழின் வளர்ச்சி அற்புதமானது. ஆகவே நண்பர்களே, தமிழால் இணைவோம் செயலால் வளர்வோம் வாழ்வைக் கொண்டாடுவோம். * * * * *
No comment