விநாயகமூர்த்தி புத்தக வெளியீட்டு விழா உரை

எந்தச் சிமிழுக்குள் அடங்கும்
                       இந்தச் சுரைக்காயின் அந்தர ருசி?
    
    “இந்தக் குயில் ஒரு பூவாக 
	இருக்குமாயின் அதிலிருந்து 
	குரல் ஒன்று பறித்துக் கொள்வேன்.” 
					- கொதோ

மலையுச்சியிலிருந்து கவனமீர்த்தபடி முழங்கிக் கொட்டுகின்ற அருவியல்ல கவிதை. களைப்புற்றோ, களிப்புடனோ பயணிக்கின்ற வழிப்போக்கன் வலியின் அயர்வில், மகிழ்வின் துடிப்பில் பாதையோரம் அமர்ந்து தனக்குத்தானே பேசுவது போல் அனத்திக் கொள்வது. யாரும் கேட்க வேண்டும் என்கிற அவா அற்றது. தன் குரலைத் தானே கூடக் கேட்க விரும்பாதது. கவிஞனுக்குக் கொஞ்சம் அரற்றியாக வேண்டும். இப் பிரபஞ்சத்தின் துகளில் சிறு தூசாக அவனது மன அவசமோ, துள்ளலோ, வலியோ, கலந்து கிடந்தால் போதும். விநாயகமூர்த்தியின் கவிதைகள் அப்படித்தான். அவனுக்கு தான் எழுதுபவை ‘கவிதை’ தானா என்ற அக்கறையோ, கவலையோ, பிரக்ஞையோ கிடையாது. உணர்வின் எழுச்சியும், சிந்தனையின் தீர்க்கமும் இசைந்திருக்கிறதா எனும் ‘கோட்பாட்டுக்’ கவலையற்றிருப்பதாலாயே இவை கவிதைகள்.
	அவனது கவிதைகள் எனக்கு நெருக்கமானது “இனக்குழு வாழ்முறை” என்ற புள்ளியில்தான். தனித்து இயங்கும், தனிமனித உணர்வுகளைத் தூக்கிப் பிடித்து நிறுத்துகின்ற நவீனத்துவத்திற்கு எதிரான கூட்டியக்க, மனிதர்களோடு சதா புழங்குகின்ற குழு வாழ்வின் சமூக மனம் எங்களுடையது. தன் மன உணர்வுகள், தனிமனித வெளிப்பாடுகள் என முற்றிலும் அக உலகில் பயணிக்கின்ற கவிதைகளே ‘மௌன வாசிப்பிற்குரிய’ சிறந்த கவிதைகள் எனக் கொண்டாடுப்படுகின்ற பொதுவான போக்கு தமிழ்க் கவிதை பரப்பிலே உண்டு. அதற்கு நேர் எதிர்த்திசையில், தான் வாழும் நிலப்பரப்பில், தன் அன்றாட வாழ்வில் எதிர்ப்படுகின்ற, சந்திக்கின்ற, (அதிகம் கவனிக்கப்படாத, இதுகாறும் பேசப்பட்டிராத) மனிதர்களைக், குறிப்பாக நிலத்திலும், உழைப்பிலும் காலூன்றி நிற்கும் பெண்களைப் பற்றிப் பேசுபவை விநாயகமூர்த்தியின் கவிதைகள்.
	குறைந்தபட்சமாக ஒரு ஆட்டோவில் கூட்டிச் செல்வதையே தன் காதலனின் முதல் தகுதியாகப் பார்க்கின்ற பெண்கள், ‘கட்டணக் கழிவறை வாசலில் சுடிதாரில் திட்டுத் திட்டாய் ஈரம்படிய வெளியேறுகிற’ இளம்பெண்கள், எத்திய பல் மூட முயற்சிக்கிற கட்டச்சிகள் - இவர்களைப் பற்றிப் பேசுகிற கவிதைகள். 
எண்பது சதவீதம் படிப்பறிவற்ற மக்களின் முதல் தலைமுறைப் பட்டதாரிகளின் உலகம் இரு வகைமைப்பட்டது. ஒன்று - தனக்குக் கிடைத்த பொருளாதார சுதந்திரத்துடனான வேலையில் தாய்நாட்டிலோ, அயலகத்திலோ வசதி வாய்ப்புக்களுடன் வாழ்ந்து கொண்டு, எப்போதாவது பண்டிகை சுக, துக்கமென தன் ஊர், வேர் என எட்டிப் பார்த்து உருண்டோடும் வாழ்வு. மற்றொன்று - உணர்வாலும், புத்தியாலும் முழுமையாகத் தன் பூர்வீகத்துடன் உறவாடியபடியே, நவீன வாழ்வின் பிழைப்பு முகத்தோடு ஒன்ற முடியாமல் கையறு நிலையில் ‘வாழாவெட்டி’யாக இருப்பது.
	விநாயகமூர்த்தியின் கவிதைகள் இரண்டாம் வகையினரது வலியை - முதலாளித்துவ, நவீனத்துவ, ஒற்றைமயமான சமகால வாழ்விற்குத் தம்மை ஒப்புக்கொடுத்துத் திகைக்கும் அவர்தம் கையறு நிலையை, அபத்தத்தைப் பேசுபவை!
	அவை தெருப்புழுதி, இருண்ட பாலத்தடி, கவனிப்பாரற்ற ஒரு கண்ணீர்த்துளி இவற்றின் குவிமையம். தனிமையிலிருந்து சமூகத்துக்கு, உள் அறையிலிருந்து பொது வெளிக்குக் கவிதையை நகர்த்துகின்ற மிக முக்கியமான பணியை விநாயகமூர்த்தி செய்திருக்கிறான் என்றாலும், அதனை வலிந்ததொரு அடையாளமாக இல்லாமல், “என் போக்கு இது - அங்கீகாரத்திற்கென மெனக்கிடாத என் இயல்பு இது” என்றே பதியவைத்திருக்கிறான்.
	ஜெயகாந்தனையும், அசோகமித்திரனையும் வேறுபடுத்திக் காட்டுகையில் சு.வேணுகோபால், “இவ்வளவு நுட்பமான தகவல்களை ஜெயகாந்தன் போன்ற நகர்சார் எழுத்தாளர்களிடம் காண முடியாது. அவர்களின் கதைகளின் பின்புலம் என்பது கோட்டுச்சித்திரங்கள் போன்றனதாம். அசோமித்திரனிடம் பின்புலம் நிஜத்தின் அசைவாக மாறுகிறது” என்று எழுதி இருப்பார்.
	விநாயகமூர்த்தியின் எல்லாக் கவிதைகளிலும் பின்புலம் என்பது ‘நிஜத்தின் அசைவுகள்’ தான்! 
ஒவ்வொரு கவிதையும் அவனது வாழ்வின் பெருமூச்சை, ரணத்தை, ஆற்றாமையை, சுற்றியிருக்கும் உறவுகளின் இரத்தமும், சதையுமான உறவாடல்களை, யதார்த்த வாழ்வில் அவற்றைத் தொலைத்த உண்மையைச் சொல்கின்றது. அவனது ‘தமிழரசி அத்தாச்சி’ நான்தானென - என்னைப் போல் எங்களூர்க்காரிகள் எத்தனையோ பேர் ரகசியமாகத் தத்தம் முந்தானையில் கண்களைத் துடைத்தபடி அக் கவிதைகளைக் கடக்கிறார்கள். இயலாதவனாக, கையறு நிலையிலுள்ளவனாக, வெட்கமும், கூச்சமும், தயக்கமும் உள்ளவனாக, தலைகுனிந்தே சாலைகளைக் கடப்பவனாக இருக்கின்ற அவனை அள்ளி அணைக்காத அத்தாச்சிகளின் தாய்மடி இருக்கிறதா என்ன? 
உப்பரிந்து போன ஒரு ஜாக்கெட்டை, கசங்கிய சேலையை, எண்ணெய் வழியும் முகத்தை, இதற்கு முன்னர் கனவுக்கன்னியாக இருந்தவள், கலியாணம் கட்டியபின் திராபையாக எப்படி மாறிப் போனாள் என்பதைக் கணிக்கும் தாயுமான மனம் கொண்ட கொழுந்தன்மார்கள், சேக்காளிகள் ஒரு பீடி வலித்தபடி, கெட்ட வார்த்தையில் திட்டியபடி அக் கவிதைகளைக் கடக்க முடியாமல் தேம்புகிறார்கள்.
அவனது கவிதைகள் படம்பிடிக்கின்ற ஆண் உலகம் எனக்கு மிக அண்மித்து, அறிமுகமான உலகம். அதில் உறவாடும் அந்த ஆண்மகன் தன்னை ‘வாழாவெட்டி ஆண்மகன்’ என அழைத்துக் கொண்டாலும் ஆண்மை கொன்ற தாயுமானவன். அடைப்புக் குறியில் அடைபடா அன்பு செய்பவன்!
	‘யாருமற்ற அய்யனாரோடு’ சுருட்டு வாங்கிப்போய் பேசுகிறவன். திருவிழாவில் வேடிக்கை மட்டுமே பார்க்க விதிக்கப்பட்டவன் தான் என அறிவித்துக் கொண்டாலும் சிறுமிகளுக்குப் பலூன்களையும், அய்யனாருக்குச் ‘சுருட்டைக் கொறை’ எனும் அறிவுரையையும் தருபவன். தாலி இல்லாத கழுத்துக்கும், கறுத்து அழுக்கடைந்த மஞ்சள் கயிறு தொங்குகிற கழுத்துக்குமான வேறுபாட்டை அறிந்தவன். Waxing செய்யாத கைகளின் பேரழகையும், கன்னத்து முடிவின் பூனைரோமங்களையும் ரசிப்பவன், பருவங்கள் மாறுகிறபோது வெட்கப்படுகின்ற பெண்களின் முகச் சுருக்கங்களை மழையில் உணர்பவன். ப்ரூ, சன்ரைஸை ‘மயிரு’ என்பவன், வீட்டுத் திண்ணையில் அழுக்குத் துணி கட்டிலில் கைவிடப்பட்ட பெருசுகளின் புகார்களை உட்கார்ந்து கேட்பவன், எசமானன் செத்தபின் அரற்றிக் கொண்டே கிடக்கும் கிழமாட்டை நேசிப்பவன், காதலியின் திருமணத்திற்குச் சென்றபின் நீண்ட தரிசுக்காட்டை ஒத்தையில் கடப்பவன், 	வேப்பெண்ணெய் மசுத்துல வீசுகின்ற மரிக்கொழுந்து வாடைக்குக் கிறங்குபவன்...
	விநாயகமூர்த்தியின் பின்புலமும், வாழ் நிலமும், எனதும் ஒன்றே. இன்னும் சொல்லப்போனால், மூன்றாம் உலகக் காலனியப் பிரஜைகளில், இன்னமும் இனக்குழு வாழ் முறையிலும், பூர்வீகக் குடியின் மொழி, பண்பாட்டுத் தகவிலும் நீடித்திருக்கின்ற குடிமக்களின் குரல் எம்முடையது.
அவனது உலகமும், எனதும் சாரையும், நல்லதும் போல! 
அது வேப்பெண்ணெய் குடிக்கின்ற அப்பத்தாக்கள், குன்னி இடுப்பைப் பிடித்துக்கொண்டுப் பேரனுக்குக் கடுங்காப்பிப் போடும் அம்மாச்சிகள், பின்படிக்கட்டில் அமர்ந்து பேன் பார்க்கும், ஈர் உருவும் “என் மயன்” எனப் பெருமைப்படுகின்ற அம்மாக்கள், மாமன் மக்களிடம் கேலி பேசுகின்ற, உரிமையுள்ள, நெஞ்சுகொள்ளா, அன்புகொண்ட அத்தாச்சிகள், மாரைப் பார்க்கிற விடலைப் பையனைச் செல்லமாகக் கண்டித்தபடி தூக்கி வளத்த அக்காமார்கள், ‘மக கிட்ட வெளாட நாள் கெடக்கு’ என வம்பிழுக்கும் அத்தைமார்கள், கல்லாப்பெட்டி சிங்காரம் போலிருக்கிற மாமாக்கள், வாக்கப்பட்டு டவுனுக்குப் போனபின் வீட்டை அண்ணமார்களுக்கு வளர்த்த வேப்பமரமுடன் எழுதிக் கொடுக்கும் - பூக்கட்டுகிற தங்கச்சிகள், தாளிக்கிற கடுகு நம் முகத்தில் தெறிக்கிற கோபக்காரிகளான சோட்டுக்காரிகள், அச்சுமுறுக்கைப் போலக் கோலம் போடுகிற சித்தியின் மக்கமார்கள், கொழுந்தன்மார்களுக்கு எலும்புக்கறி அள்ளிப் போட்டுக், குமரிப் பெண் வைத்திருப்பவர்களுக்கு, அவனது அருமை பெருமைகளைச் சொல்லும் தமிழரசி அத்தாச்சிகள், இரயிலில் மட்டும் பழக்கமாகி உசிராக அன்பு வைக்கும் அம்பது வயசுக் கீரைக்காரிகள், கஞ்சிக்கு வழியில்லாத வீட்டில் பொறந்த கிறுக்கு முண்டைகள், ‘எங்க மாமா’ வென சினிமா பைத்தியமாயிருந்த அன்னமயில் அத்தைகள், தன் பெயரைத் தமிழில் கூப்பிட மாட்டார்களா என வடநாட்டு அடுக்ககம் ஒன்றில் ஏங்கும் தமிழ்க்குட்டிகள் - இவர்களால் நிரம்பியது. என் வாழ்வும் அவனைப்போல இப்பெண்களால் ஒளிர்வும், கருமையும் பெற்று மகிழ்வதும், வருந்துவதும்!
நோபெல் பரிசு பெற்ற, 77 வயது ஐ.பி. சிங்கரிடம் "நீங்கள் ஏன் எப்போதும் உங்களது சின்னஞ்சிறு வட்டமான யூத மக்களைப் பற்றி மட்டுமே எழுதுகிறீர்கள்?" என்று கேட்கப்பட்டபோது அவர் சொன்னார்: 
"உண்மையான கதாபாத்திரங்கள் உண்மையான மக்களிடமிருந்தே பிறக்கின்றன. உண்மையான மக்களுக்கு ஆழமான வேர் உண்டு. வெறுமனே ஒரு பொதுவான மனிதனைப் பற்றி ஒரு நாவல் எழுதிவிட முடியாது. அதற்காக தனக்கென ஒரு முகவரி உள்ள ஓர் ஆணையோ, பெண்ணையோ தேர்ந்தெடுக்க வேண்டும். இதனால் தான், உண்மையான எழுத்தாளர்கள் தங்களுக்குச் சொந்தமான சூழலிலேயே, தங்களுக்குச் சொந்தமான மூலையிலேயே தங்கிவிடுகிறார்கள்".
விநாயகமூர்த்தியும் அப்படி தனக்கான ஒரு மூலையில் புகார்களின்றி வாழ்பவன்! தனக்கான உண்மையான மக்களைக் கண்டறிந்து கொண்டாடுபவன். கீழ்வரும் இந்தக் கவிதையைப் பாருங்கள்:
““எல்லாம் பாக்குறாங்க,
இதுல கால்வைக்க
இவ்வளவு நேரமா..?” என
வணிக வளாகமொன்றின் 
நகரும் படிக்கட்டுகளில் 
கால் வைக்கத் தடுமாறும்
அம்மாவிடம் சிடுசிடுக்கும்
நகரத்து மகன்கள்
ஆய் கழுவிப் பழக
ஆறு வருடங்கள்
கடக்க வேண்டியதிருந்தது.”
சமூகத்தின் மேல்தட்டு வர்கத்தினர் அறிந்திராத, அவர்களுக்குப் புரிந்திராத வெளியும், உணர்வும் மேற்சொன்ன கவிதை சுட்டுவது. இது கவிதையே அல்லவென்று கூடச் சிலர் கடக்கலாம். ஆனால், அது சுட்டும் அனுபவத்தைக் கவனியுங்கள் - உள் வாங்க இயலுமெனில் இது கவிதை தான்!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின், தமிழ்த்துறைப் பேராசிரியர் இரவிக்குமார் எப்போதுமே,
“கவிதை, காலத்திற்குக் காலம் வடிவங்களையும் உள்ளடக்கங்களையும் மாற்றிக்கொண்டே இருக்கிறது. 'இதுதான் கவிதை' என்று பழக்கப்பட்ட வாசக மனம், கவிதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. நவீன கவிதைகளையே படித்துப் படித்துப் பழக்கபட்டவனுக்குக் காளமேகப் புலவர் பிடிக்காமல் போகக்கூடும். டி.எஸ்.எலியட், கீட்ஸின் கவிதைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. 'Keats is also a poet' என்கிற வாசகம் நினைவிற்கு வருகிறது. வால்ட் விட்மனின் கவிதைகளைத் தொடக்க காலத்தில் டால்ஸ்டாய் நிராகரித்ததையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே, ஒரு கவிஞனின் அனைத்துப் படைப்புகளையும் திறனாய்வாளர்களும் வாசகர்களும் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு காலத்தில் படைக்கப்பட்ட கவிதையை வாசிக்கின்ற வாசகர்களின் மனநிலை வேறொரு காலத்தில் மாறவும் கூடும். எனவேதான், ஒரு கவிதை எந்தப் பின்னணியில், எந்தக் காலக்கட்டத்தில் எழுதப்பட்டது என்ற ஆய்வு முக்கியமானது.” என அடிக்கோடிட்டுச் சுட்டுவார்.
அந்தரத்தில் மிதக்காமல் நிலத்தில் காலூன்றி நிற்கும் வலுவான திணைப் பண்பாடு சார் இனக்குழு மக்களின் எச்சமான உறவுமுறை வாழ்க்கை, இன்றைய காலகட்டத்தில் நகரம்சார் அவர்தம் இடம்பெயர்வுச் சிக்கல்கள், விழுமியங்கள் அபத்தங்களானதொரு இயலாமை - இவற்றைப் பின்னணியாகக் கொண்டது விநாயகமூர்த்தியின் கவிதைப் பரப்பு. இந்தப் பின்புலத்திலேயே அவனது கவிதைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
வெறுமனே நாட்டார் வழக்காற்றுக் கூற்றுகளை ஆவணப்படுத்தவோ, பிரதியெடுக்கவோ கவிதை எதற்கு? அதற்குள் ஒளிந்திருக்கின்ற மனித வாழ்வை, ஒளிர்ந்து மின்னி மறையும் அதன் புதிர்களை அவனுக்கானதொரு யதார்த்தமான மொழியில் வெளிப்படுத்துவதில் தானே அவன் படைப்பு கவிதையாகிறது. அதற்கு எத்தனையோ உதாரணக் கவிதைகளை இத் தொகுப்பிலிருந்து சுட்டலாம். ஒரு சோறு பதமாகத், தமிழரசி அத்தாச்சிக்கான பின்வரும் கவிதை: 
“கல்யாணப் பந்தியில் 
சாப்பாட்டுக்கு அமர்ந்திருந்தால்
"கொழுந்தன் மாப்ளையாகப் போறவரு.
எலும்புக்கறியா அள்ளிப் போடுங்க" என
இடுப்பிலிருக்கிற குழந்தைக்கு 
சோறூட்டியபடியே
பரிமாறுபவர்களை கூப்பிட்டு கூப்பிட்டு
நான் சாப்பிட்டு முடிக்கும் வரை 
தமிழரசி அத்தாச்சி
பக்கத்திலேயே நின்றுகொண்டிருப்பாள்.

கல்யாண வீட்டில் நிற்கிற
வீட்டில் குமரிப்பெண் வைத்திருப்பவர்களிடம்
என்னைக் காட்டி காட்டி
எதையாவது சொல்லிக்கொண்டிருப்பாள்.
பேச்சில் ஒத்து வருபவர்களை
நைஸாக அழைத்துக் கொண்டுவந்து
என் பக்கத்தில் நின்றபடி
வேறெதையோ கேட்பதுபோல
என் அருமை,பெருமைகளை
என் வாயாலேயே சொல்லவைப்பாள்.
எனக்கெதுவும் அறியாததுபோலவே
நானும் சொல்வதுண்டு.
அப்பா,அம்மாவை விட
அத்தாச்சிகளுக்குதான் 
இப்படியொரு திறமை உண்டு.

கல்யாண வீட்டில் அவசரமாக
யாரும்,எதுவும் எடுத்துவரச் சொன்னால்
சட்டென அவள் குழந்தையை 
என் மடியில் வைத்து
"ஒங்க மகனைப் பாத்துக்குங்க
கொழுந்தனாரே" என
உரிமையாக என் குழந்தையாக்குவாள்.

"ங்கொண்ணன் காளைமாட்டை 
புடிக்கதான் லாயக்கு.
கொழுந்தன் நீங்களாச்சும்
பசுமாட்டை அடக்க கத்துக்குங்க.." என
புருசனை ஏற,இறங்கப் பார்க்க
நான் தலைகுனிந்து வெட்கப்பட
"பாருங்க கொழுந்தன் வெக்கப்படுற அழகை....
இந்த மனுசன் வெக்கம் கிலோ என்ன 
வெலைன்னுக் கேப்பாரு " என
அண்ணன் குமட்டில் குத்துவாள்.

ஸ்கூல் முடிஞ்சோன 
டவுசரை கழட்டி தூக்கிப்போட்டுட்டு சுத்துற 
என்னையக் கூப்புட்டு 
அவ அப்பாவுக்கு ஒரு சொக்கலால் பீடிக்கட்டு
துவையலுக்கு ரெண்டு தேங்காச்சில்லு
தலைக்கு கடல் ஷாம்பூ பாக்கெட்டு ஒண்ணு 
வாங்கிட்டு வரச் சொல்லி
தமிழரசி அத்தாச்சி 
என் கைல காசு கொடுத்து
முன்னாடி நடக்கவிட்டு
"டேய்,மொட்டக்குண்டி நாயகம்"ன்னு 
கத்தி சிரிச்சப்பலாம் எனக்கு 
வெக்கம்னு ஒண்ணே இல்லை.

இந்த மாதிரி
கல்யாணம்,காட்சிலப் பாத்துக்கிட்டு 
"போய்ட்டு வர்றேன் அத்தாச்சி"ன்னு
நான் சொல்லிட்டுக் கிளம்புறப்பதான்
என்னைய முன்னாடி நடக்கவிட்டு
அத்தனை பேர் முன்னாடி
"டேய், மொட்டக்குண்டி நாயகம்"ன்னு 
அத்தாச்சி நைஸாக் கூப்பிடயில 
நான் லேசாத் திரும்பி வெக்கமாச் சிரிக்க
அதுக்கு அத்தாச்சி காட்டுற
முகபாவனைகள்ல 
சுண்டவச்ச கருவாட்டுக்குழம்புல
ரெண்டுநாள் ஊறுன 
சுரைக்காயோட ருசி.”
மேற்சொன்ன கவிதை எவ்வளவு நுட்பமாக உறவுமுறையினூடாக உரிமையோடு இழையோடும் அன்பைச் சொல்கிறது. இது காதலா, காமமா, இரத்த உறவு மட்டுமா - எந்தச் சிமிழுக்குள் அடங்கும் அந்தச் சுரைக்காயின் ருசி?
	"ஒரு கவிதையின் தேர்ந்த சொற்கள், படிமம், குறியீடு போன்ற உத்திகளை விளக்குவதில் எனக்குப் பயிற்சியில்லை. இந்தவித உத்திகளின் புரிதல்களுக்கு அப்பால் கவிதைகளை என்னால் அடையாளம் காண முடியும். அதில் மனிதம் இருப்பதொன்றே எனக்குப் போதுமானது. அந்நியமாகிப் போகும் வாழ்க்கையை எனக்கு நெருக்கத்தில் அது கொண்டு வந்து நிறுத்தினால் போதும்" - என்பார் இன்குலாப் அய்யா.
	கீழ்வரும் கவிதையில் படிமமோ, குறியீடோ, உவமையோ இல்லை. ஆனால் ‘துடி’யான மனுச வாழ்வொன்று உண்டு!
“தொழுவத்தில் கூட்டி அள்ளி
தலையில் சுமந்து சென்று
வயலில் கொட்டியபின் 
அவள் தோள்பட்டையில் வடிந்து
ஒட்டியிருக்கிற 
பசுமாட்டுச்சாணி,ஆட்டுப்புழுக்கை
பச்சைக் கறை.

அப்படியே 
அங்கேயே 
புல்லறுத்து சுமந்து வருகையில்
அவள் நெற்றி வியர்வையில் ஒட்டியிருக்கிற 
பிய்ந்த நொச்சி இலை
நசுங்கிய அருகம்புல்.

அத்தக்கூலிக்கு 
வேலிக்கருவை வெட்டப்போய் 
முதுகில் முள்கிழிசலுடன் 
ஒட்டிவந்த
கருவேலக் கொழுந்து.

வேலை முடிந்துத் திரும்புகையில்
ஊருணியில்
தலை முங்கி எழுந்து
ஈரச் சேலை சுற்றி
அவள் நீர்த்துளிகள் மண்ணில் விழ
நடந்து வருகையில்
அவள் கழுத்தில் ஒட்டிவந்த 
குளத்தின் இளம்பச்சை பாசி.

துணி மாற்றியதும் 
சீவிச் சிங்காரித்து 
அவள் ஹேர்பின்னில் சொறுகிய
பச்சை மரிக்கொழுந்து.

அம்மை போட்டிருந்த 
என் பருக்கட்டிகளில் 
அவள் கையால் தடவிவிட்ட
அரைத்த வேப்பங்குலை.

அந்த இரவிலேயே சவமாகிப்போனவளின்
கை பூனைமுடிகளில் 
ஒட்டி படர்ந்திருக்கிற 
நசுக்கிய பச்சை அரளிக்காய்த்துகள்.

இலை,தழை,காய்களுக்கென்றே
ஒரு வாசனை இருக்கிறது.

பச்சை நிறத்திற்கென்றே
ஒரு வாசனை இருக்கிறது.

தமிழரசி அத்தாச்சிக்கென்றே
ஒரு வாசனை இருக்கிறது.

எரிக்கும்போதும்
ஊர்முழுக்க நெடிவீசிடும்
பச்சை வாசனை."
நான் எப்போதும் நினைவு கூர்கின்ற கலை, இலக்கிய விமர்சகர் இந்திரனது கூற்று:
“இன்றைய மூன்றாம் உலக இலக்கியத்திற்கு முன்னால் ஒரு வரலாற்றுக் கடமை எழுந்து நிற்கிறது. வெளிநாட்டு ஆட்சியின் கீழ் நசுங்கி, தங்களது பண்பாட்டு முகம் சிதைக்கப்பட்டு, வரலாற்று உண்மைகள் அழிக்கப்பட்டு விட்ட இந்த நாடுகள், இன்று தங்கள் அடையாளம் என்ன என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றன. இத்தகைய நிலையில் இருக்கும் வளரும் நாடுகளின் இலக்கியத்தின் கடமை, இழந்த அடையாளங்களை மீட்டெடுப்பதும், தம்மைச் சுற்றி இருக்கும் இன்றைய வாழ்க்கைப் பற்றிய நேர்மையான புரிதலுடன் அதைப் படம் பிடிப்பதுமாகும்.”
தம்பி விநாயகமூர்த்தியின் கவிதைகள் அதைத் தான் செய்கின்றன.
ஆனால் அதனைத் தன் கடமையெனப் பதாகை பிடித்தோ, முன்தீர்மானம் கொண்டோ இல்லாமல், போகிற போக்கில் - தன் இருத்தல் குறித்த புதிரான கேள்விகள், வியப்புகள், அபத்தங்கள் - இவற்றைச் சிரங்கு வந்தால் தானாகச் சொறிந்து கொள்வது அனிச்சையாக, வெகு இயல்பாகச் செய்கின்றன!
பின்வரும் அவனது கவிதை எனக்கு வித்யாசங்கரின் ஒரு கவிதையை நினைவூட்டியது.
“இதே சாயலில்,
எனக்கும் உங்களுக்கும்
சிறிது இடைவெளி இருக்க வாய்ப்புண்டு.
இளையராஜாவும் மணிரத்னமும்
எனக்கு இளையராஜா,மணிரத்னம்.
உங்களுக்கு ராஜா சார்,மணி சார்.

பன்னாட்டு இலக்கியவாதிகளின் பெயர்களை 
வரிசைக்கிரமமாக சொல்லி முடித்து 
”இவர்களில் யாரையேனும் வாசித்துள்ளீர்களா”
என்கிறீர்கள்.
கி.ரா., அசோகமித்திரன், ஜெயகாந்தனிடம்
எனக்கு நன்கு பரிச்சயம் உண்டு.
உலக சினிமாக்களை அலசியெடுத்துவிட்டு
“கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா?”
என்கிறீர்கள் கிண்டலாக.
வழக்கு எண் 18/9,ஆரண்யகாண்டத்தை
கொண்டாடத் தெரிதல் எனக்கு போதுமானது."
மறுபடியும் கலை, இலக்கிய விமர்சகர் இந்திரனுக்கே வருகின்றேன். வித்யாசங்கரது சந்நதம் தொகுப்பை முன்வைத்து, அவரது கவிதையின் போக்கு குறித்துப் பகிரும் போது, கலை, இலக்கிய விமர்சகர் இந்திரன், 
“கவிதையில் 'சர்வதேச பாணி' என்ற ஒன்று கிடையாது. கவிதையைப் படைக்கும் மூலப்பொருள் மொழியாக இருக்கும் வரையிலும், கலைகளிலேயே அதிகமாக பிரதேசத் தன்மை கொண்டது கவிதையாகத்தான் இருக்க முடியும். "மொழிபெயர்க்க இயலாதது எதுவோ அதுவே கவிதை" என்று வரையறை செய்யும் அளவுக்கு பிரதேசத் தன்மை கொண்டது கவிதை என்பதை நன்கு உணர்ந்து கொண்டிருக்கிறார் வித்யாஷங்கர். இதனை இவரைப் போலவே பிற நவீனத் தமிழ்க்கவிஞர்களும் புரிந்து கொள்வார்களெனில் இன்றைய தமிழக்கவிதை உள்ளீடற்ற, போலியான, ஒரு கானல் மண்ணில் வேர்கொள்ள முயன்று, துவண்டு போகாமல் தப்பிக்க முடியும். நமக்குள்ளேயே தோண்டிச் சென்று நமக்குள் இருக்கும் சிறப்பான பண்புகளை, வெளிப்பாடுகளை சர்வதேச கவிதை உலகிற்கு தமிழின் பரிசாகக் கொடுக்க நம்மாலும் பெறமுடியும்” என்கிறார்.
அவ்வகையில், விநாயகமூர்த்தி கொடுத்திருக்கும் பரிசுகள் பல. 
“நெருஞ்சிக்காட்டில் 
செருப்பில்லாமல் நடப்பதுதான் 
தமிழரசி அத்தாச்சிக்குப் பிடிக்கும்.
கேட்டால் 
நெருஞ்சி முள் குத்துவது
எங்கப்பன் கெட்டவார்த்தைல 
என்னைய வையிறது மாதிரி.
வைஞ்சாலும்
அது அப்பன் குரல்ல கேக்குறப்ப
ஜாலியா இருக்கும்ல.
நெஞ்சுல ஆழமா தைச்சுடாம
மேலாப்புல வையிறாரு பாரு.
கருவமுள்ளைப் போல் உள்ளிறங்காது 
அந்த நேர வலி கொடுக்கிற சுகம் என்பாள்.

முள் குத்த குத்த
பாதத்தைத் தட்டிவிட்டு தட்டிவிட்டு நடப்பவள் 
நெருஞ்சிப்பூவொன்றை பிய்த்து 
காதில் ஒட்டிவைத்து 
'தோடு நல்லாருக்கா'வெனச் சிரிப்பாள்.
என் அம்மா போட்டிருக்கிற
தங்கத்தோடும்
நெருஞ்சிப் பூ வடிவத்திலானதுதான்.

சமயங்களில் 
அந்தியில் சுப்பிக்கட்டுடன் 
வீடு திரும்புபவளின் 
தாவணியெல்லாம் 
நாயுருவி முள் ஒட்டியிருக்கும்.
அதில் ஒன்றை எடுத்து 
மூக்குத்தியென ஒட்டிக்கொள்வாள்.

அத்தை பல்லைக் கடித்து 
"கிறுக்கு முண்டையல பெத்துவச்சுருக்கேன்" என 
விரட்டி அடிப்பாள்.
"கஞ்சிக்கு வழியில்லாத வீட்டுல 
பொறந்தவளுக 
எல்லாருமே கிறுக்கு முண்டையதான்" என 
அதற்கும் சிரிப்பாள் அத்தாச்சி.

சற்று மின்னிய 
நெருஞ்சிப்பூவைப் போலிருக்கும் 
ஒரு தங்கத் தோடு 
அத்தாச்சிக்கு 
வாங்கிக் கொடுத்து 
அந்த கிறுக்கு முண்டை முகத்தில்
புன்னகை சிந்தவிடவேண்டும் என 
இப்போதெல்லாம்
எப்போது 
நெருஞ்சிமுள் குத்தினாலும் நினைத்துக்கொள்கிறேன்.”
எனும் தமிழரசி அத்தாச்சிக்கான கவிதையும்,
"காளைமாட்டுக் கிழவனை
கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
பெயர்க்காரணம் கேட்காதீர்கள்.
என் பெரியப்பா.
பெரியம்மா செத்து இரண்டுவருடங்களாகிறது.
அவருக்கென 
ஒரு அழகிய சித்திரம் இருக்கிறது.

அவர் குளிக்க
எப்போது ஊருணிக்கு வந்தாலும்
இரண்டு தோள்பட்டைகளிலும்
இரண்டு பேரக்குழந்தைகள் இருப்பார்கள்.

கூட்டாம்புளியான் கடைக்கு 
மூக்குப்பொடி வாங்கப்போனால்
அவரது வலதுகை சுண்டுவிரலை
மூத்த மகனின் மகளும்
இடதுகை சுண்டுவிரலை
சின்ன மகனின் மகனும் 
பிடித்தபடி நடந்துவருவார்கள்.

கோயில் திண்ணையில்
மாலையில் காற்றுவாங்க அமர்பவர்
இரண்டு தொடைகளிலும்
இருவரை வைத்துக்கொண்டு
விளையாட்டு காண்பித்துக்கொண்டிருப்பார்.

இருவருக்குமே
ஆப்பிள் பலூன்,கொக்கச்சு என
ஒரே விஷயங்கள் பிடிக்க
அவர்தான் காரணமென
நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.

தண்ணீர் பாய்ச்சுகிற பிரச்சினையில்
அண்ணன்-தம்பி அடித்துக்கொண்டு
தனித்தனி பிரிந்தபின்
எந்த வேளை உணவு
எந்த வீட்டில் சாப்பிடுவது?
எந்த ராத்திரி 
எந்த வீட்டில் தூங்குவது?
எந்த வாரம்
எந்த மருமகளுடன் சந்தைக்குப் போவது?
காபித்தண்ணி யார் வீட்டில்?
சோப் வாங்கிக்கொடுப்பது யார்?
என தலை பிய்க்கிற
குழப்பங்களெல்லாம்
அவருக்கு பெரிதாய்த் தெரியவில்லை.

பேத்தி மாற்றி
பேரன் மாற்றியென
இனி
ஒற்றைத் தோள்பட்டை
ஒற்றை சுண்டுவிரல்
ஒற்றைத் தொடை என 
மற்றொன்று காலியாகவே 
இருக்கப்போகிற வேதனையில்தான்
உயிரை விட்டுவிடுவாரென நினைக்கிறேன்."
அண்ணன் தம்பி சண்டையில் பேரன், பேத்திகளை இழந்துவிட்ட காளை மாட்டுக் கிழவனை முன்னிறுத்திய மேற்சொன்ன கவிதையும் ‘சர்வ தேச கவிதை உலகிற்கு’ குறிப்பிடத்தகுந்த ‘தமிழின் பரிசுகள்’ தாம்!
தனக்கும், தன் மண்ணுக்கும், வாழ்முறைக்கும், உண்மையாக இருக்க முயன்று, அதன் வழியாகத் தான் சந்திக்கும் சமகாலச் சிக்கலையும், அபத்தங்களையும் பதிவு செய்கின்ற விநாயகமூர்த்தியின் கவிதை மொழி உப்புக்கண்டக் கவுச்சியும், மருக்கொழுந்து நாற்றமும், உழைத்து உப்புக் கரிக்கின்ற வியர்வையின் நெடியும் கலந்த இந்நிலத்தின் மொழி. அதன் கொடையைப் பிற மொழிகளில் மொழிபெயர்த்தாலொழிய அந்நியர் அறிய முடியாது. அது அவர் தம் பெரு இழப்பே!
அந்நிலத்தை, அம்மொழியை நான் இரத்தமும், சதையுமாக, நிணமும், நாற்றமுமாக அறிந்தவள். அப் புழுதியில், சகதியில், வியர்வையில், கவுச்சையில் அமிழ்ந்து உணர்ந்தவள். ஆகையால் அவனது கவி உலகைக் கொண்டாடுபவள். அது என் வரமே!
ஜப்பானியக் கவிஞரும் சிற்பியுமான டக்கமுரா கொட்டாரோ சொல்வார்:
“என் கவிதை என் குடல்களிலிருந்து உருவாகிறது
என் கவிதை நானன்றி வேறல்ல” என்று!
விநாயகமூர்த்தியின் கவிதையும் அவ்வாறு உருவானதுதான்.
சில கவிதைகள் கதைப் பாடல்களைப் போல இருக்கலாம். சில உரைநடைக் கதைச் சித்திரங்களைப் போலிருக்கலாம். சில கவிதை எனும் சட்டகத்திற்குள்ளேயே வரவில்லை எனவும் சிலர் விமர்சிக்கலாம். ஆனால் அவை அனைத்தும் வாழ்க்கை! அதன் மூச்சுக்காற்றை, பசியை, இயல்பூக்கமான காமத்தை, அபத்தத்தை படைப்பின் வழி கடத்தும் அனுபவங்கள்!
பிரமிள், “தங்கத்தை எடைபோட இரும்பு எடைக்கற்களைப் பயன்படுத்தும்போது தங்கம் இரும்பையும் எடைபோடுகிறது. அதுபோல... அவர் என்னை எடை போடுவதில்தான் அவரும் அளக்கப் படுகிறார்.” என்பார். 
விமர்சனங்களுக்கான பதில் அம்மட்டே!
எங்களது வாழ்வை, எம் நிலத்தின் மொழியை, அதன் காத்திரமான பண்பாட்டுச் சித்திரங்களை, வேரூன்றியிருக்கின்ற மானுட விழுமியங்களை, எடை போட, அதனை நீங்கள் ஒரு கணமேனும் வாழ்ந்திருக்க வேண்டும்! இல்லையென்றால் அத்தாச்சிகளின், அக்காமார்களின், கொழுந்தன்மார்களின், அண்ணன்மார்களின், தமிழ்க்குட்டிகளின், அப்பத்தாக்களின், ஆச்சிமார்களின், ஆத்தாக்களின் சிரிப்பையும், கண்ணீரையும், கொடுவாயையும், வியர்வையையும், சிறுநீரையும் கவிதைகளாகப் பார்க்க முடியாது உங்களால்!
பார்க்க முடியாவிட்டாலும் பாதகமில்லை!
அய்யனாரின் சுருட்டைக், கருப்புவின் சாராயக் கொடையைக் கண்ட பூசாரிகள் ‘தரிசனத்’திற்கு மயங்குபவர்கள் அல்ல - அவர்கள் அருள் இறங்கும் ஆவேசத்திற்குக் கட்டுப்பட்டவர்கள்!
கவிதை அவர்தம் சந்நதங்களுக்கான எளிய படையல் தான்!
                                      • • • • •

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *