சகோதர சகோதரிகளே இலக்கிய ஆர்வலர்களே எழுத்தாளர்களே கவிஞர்களே பதிப்பாளர்களே மற்றும் இங்கு கூடியிருக்கின்ற அத்தனை பெருமக்களுக்கும் என் வணக்கங்கள்.

ஆவலாதிகளை கேட்டு

அலுத்துவிட்ட வனப் பேச்சியை

மாறுதலுக்காக கூட்டிப் போனேன்

விருதுநகர் பொருட்காட்சிக்கு

குதிரை ராட்டினமும் மிட்டாய் கடிகாரமும்

ஓலை பெட்டி தீப்பண்டமும் மட்டுமே

அறிந்திருந்த அவளுக்கு அது பெரும் பிரமிப்பு

அப்படியான விருதுநகரில் என் சொந்த மண்ணில் புத்தகங்களை கொண்டாடி மகிழ கிடைத்த வாய்ப்பிருக்கு பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.

 

காரல் சகான்  சொன்னான்:

“ஒரு புத்தகம் ஒரு மரத்திலிருந்து உருவாக்கப்பட்டதாகும். அது பல நூற்றாண்டுகளாக உயிரோடு இல்லாத ஒரு நபரின் மனதில் இருந்து இப்போது நேரடியாக உங்களிடம் பேசுகிறது.”

புத்தகங்கள் வெறும் காகிதக் கட்டுகள் அல்ல, அது அறிவின் துளிகள், மனித மனங்களைப் பரிமாறும் கனவுகள். நம் பாரம்பரியம், கலாசாரம், அனுபவங்களைப் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் கொண்டிருக்கின்றன.

இந்த விருதுநகர் புத்தகக் கண்காட்சி, மரங்களையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவத்தை நமக்குப் புகுத்துகிறது.

ஒரு நைஜீரிய நாவலாசிரியரை வாசிக்கத் தொடங்கியபோது தமிழகத்தின் ஏதோவொரு வட்டார நாவலை வாசிக்கும் உணர்வே முதலில் தோன்றியது. பழங்குடி கிராமங்களில் நடக்கும் திருவிழாக்கள், வழிபாட்டு முறைகள் பற்றி நாவல் முழுவதும் குறிப்புகள் இருக்கிறது. இந்தக் கதையை இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு உயிர்ப்போடு இருந்த உலகின் எந்தவொரு மண்சார்ந்த சமூகத்திற்கும் பொருத்தி வாசிக்கலாம். இந்த நாவலில் நாம் கவனிக்கவேண்டிய இன்னொரு முக்கிய வசீகரம் தெய்வங்கள். தர்க்கங்கள் தெளிவுபடாத காலத்தில் இயற்கையின் அங்கங்கள் யாவற்றுக்கும் தெய்வங்களை உருவாக்கியவை மண் சார்ந்த சமூகங்கள். தமிழ் மனதுக்கு இது கூடுதலான நெருக்கத்தைக் கொடுக்கிறது. நவீன ஆப்ரிக்க இலக்கியத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட நைஜீரிய நாட்டு நாவலாசிரியர், கவிஞர் மற்றும் இலக்கிய விமர்சகரான சினுவா அச்சிபே எழுதிய “சிதைவுகள்” தான் அது.

தமிழ் இலக்கியத்தில், தமிழ் நிலத்தின் வாசனையைப் பரவச்செய்யும் படைப்புகள் பல உள்ளன. நாம் மறந்தபோன தாவரங்களை, பூக்களை, பாத்திரங்களை, உறவுகளை, சொலவடைகளை  பல கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகளில் காணமுடியும். என் படைப்புகளிலும் இதை நீங்கள் காணலாம். `எஞ்சோட்டுப் பெண்’, `வனப்பேச்சி’, `மஞ்சணத்தி’, `அருகன்’ ஆகிய கவிதை தொகுப்பிலும் `பாம்படம்’, `சொல் தொடும் தூரம்’ ஆகிய கட்டுரை நூல்களிலும் இவையே பிரதானமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நவீன தமிழ் கவிதையின் தோற்றமெனக் கருதப்படும் பாரதியாரின் வசனக் கவிதைகளும்கூடச் சூழலியல் பொருண்மைக் கொண்டதுதானே? புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படும் ந.பிச்சமூர்த்திப் பறவைகளை வைத்து ஒரு காவியமே எழுதியுள்ளர். ந.பிச்சமூர்த்தியின் எழுத்தில் காணும் பூக்கள், மரங்கள், செடிவகைகள், விலங்குகள் அவற்றின் விசித்திரக் குணங்கள் நம் சாதாரண வாழ்க்கையில் நமக்குத் தெரிய வராதவை.

ஒவ்வொரு பதின் ஆண்டுகளுக்கும் தமிழ் எழுத்துலகில் ஒரு கருத்தியல் மாற்றம் ஏற்பட்டு வந்துள்ளது. தலித்தியம், பெண்ணியம் போலத் தற்காலம் பசுமை இலக்கியத்துக்கு உரியது என்பதில் எந்த அய்யமும் இல்லை. இதைக் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர்கள் பலரும் பசுமை இலக்கியத்தின் மேல் தம் கவனத்தைத் திருப்பியிருப்பது வரவேற்கத்தக்கது. மூத்த ஆளுமைகள் பலரும் தம் எழுத்துக்களில் சூழலியலை ஏற்கனவே பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சங்க இலக்கியத்தின் தனித்துவம் என்னவென்று வரலாற்று ஆய்வாளர் Romila Thapar சொல்வதாவது : “சங்க இலக்கியங்களின் தனித்துவம் வாய்ந்த அம்சம், அப்பாடல்களில் சுற்றுச்சூழல் குறித்த தெளிவும், சங்ககால தமிழர்களின் வாழ்வியல் நெறிகளை, சூழலியல் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டு கூறுவதும் தான். இது பிற மொழி இலக்கியங்களில் காண்பது அரிது.”

”வனப்பேச்சி” வங்காரி மத்தாய். பூமித்தாய் பூமாதேவி என்று சொல்வார்களே. அந்தத் தாயின் வயிறு குளிரப் பச்சிலை வைத்தியம் செய்த தாய் இவர்.

ஒரு விதை

என்பது எத்தனை

மரங்களின் வீடு

ஓரு மரம்

என்பது எத்தனை பறவைகளின்  கூடு,

என்றுரைத்தவர் அவர்.

“மிகக் கடினமான தருணங்களிலும், வாய்ப்புகள் நிறைந்தே இருக்கும்..” என்ற தனது வாக்கியத்தை, தான் பிறந்தது முதலே உண்மையாக்கி வாழ்ந்தவர் மத்தாய்..

நமது வளங்களை முறையாகக் கையாள்வதிலும், பங்கிடுவதிலும் தான் நாட்டின் வளர்ச்சி நிறைந்துள்ளது என்பதை தீர்க்கமாக நம்பிய மத்தாய், இயற்கையுடன் இயைந்த வாழ்வை வலியுறுத்தினார். தனது வாழ்நாளில் பனிரெண்டு நாடுகளில், பதினான்கு கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு காரணமாய் இருந்துள்ளார் வங்காய் மத்தாய்..

பெரும் கானகத்து சிட்டுக்குருவியாகவே இருக்க விரும்புகிறேன், என்றார் மரங்களின் தாய்! சுற்றுச்சூழல் போராளி  வங்காரி மத்தாய். மரம் வளர்த்ததற்காகவும், சுற்றுச்சூழல் போராளியாக செயல்பட்டதற்காகவும் நோபல் பரிசு பெற்றவர் வங்காரி மத்தாய். தன் வீட்டுத் தோட்டத்தில் முதலில் 9 மரக்கன்றுகளை நட்டு, பணியைத் தொடங்கினார். காடுகளைப் பாதுகாக்க ‘கிரீன் பெல்ட்’ இயக்கம் தொடங்கினார். 30 ஆண்டுகளில் 3 கோடி மரங்கள் வளர்க்க இலக்கு நிர்ணயித்தார். இதுவரை இந்த இயக்கம் 5 கோடி மரங்களுக்கு மேல் நட்டுள்ளது. ஏழைப் பெண்களை திரட்டி, சமூகப் பணிகளில் ஈடுபடுத்தினார். நைரோபி யில் பூங்காவை அழித்து, 62 மாடிக் கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியை, போராட்டம் நடத்தி கைவிடச் செய்தார்.

சமூக முன்னேற்றத்துக்காக போராட்டங்களை முன்னின்று நடத்தியதால் கைது செய்யப்பட்டு, பலமுறை சிறையில் அடைக்கப் பட்டார். மணமுறிவு, வழக்கு, விசாரணை, நஷ்டஈடு என சொந்த வாழ்க்கையிலும், பொது வாழ்விலும் பல துயரங்களை சந்தித்தார். ஆனாலும், துவண்டுவிடாமல் தன் பணிகளில் கவனம் செலுத்தியவர் அவர் சொன்ன ஒரு வாக்கியத்தை இங்கே நினைவு கூற விரும்புகிறேன்.

“We are called to assist the Earth to heal her wounds and in the process heal ourselves.”

என் கவிதையில் உள்ள உச்சகட்ட பெண் சக்தியை “வனப்பேச்சி” என்று அடையாளப்படுத்துகிறேன். வனப்பேச்சி என் மாற்று ஈகோ. அவள் ஒரு பழங்குடி கிராம தெய்வம், அதன் பெயர் “காட்டில் வசிக்கும் ஒரு பைத்தியம், கடுமையான பெண்” என்று பொருள்படும். ஒரு தென் பிராந்திய கிராமப்புறப் பெண்ணின் கரடுமுரடான மற்றும் முரட்டுத்தனமான உணர்வைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தக் கட்டுகளும் இல்லாத ஒரு பெண்! அவள் ஒருபோதும் தன் தலைக்கு மேல் எந்த தங்குமிடத்தையும் விரும்பவில்லை – அவள் சுதந்திர மனப்பான்மையின் உருவகம்! அவள் காட்டில் வசிக்கிறாள் மற்றும் பெண்மையின் தாய்வழி மேலாதிக்கத்தை எதிரொலிக்கிறாள். அவள் மக்களின் காவல் தெய்வம், தமிழில் காவல் காப்பது என்று பொருள்படும். பேச்சி எனப்படுகின்ற திறந்த வெளியில் இருக்கின்ற ஒரு கிராமத்து சிறு தெய்வ பெண் உருவம் என் இளம் பிராயத்தின் முதல் கூட்டுக்காரி வளர் பருவத்தில் உடன் சுற்றித்திரிந்த சோட்டுக்காரி மிக அந்தரங்கமாக என்னுடன் கலந்துவிட்ட அர்த்தனாரி.  ஒரு கட்டற்ற வன தேவதையாக திரிகின்ற என் கனவுகளின் சொந்தக்காரி.

என் பார்வையில் இயற்கையில் காணப்படும் நல்லிணக்கம் எனது சொந்த உள் சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தின் கூட்டுப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும்.

கருவேல மரத்தில் ஒன்று சரி என்று கேலியாய்

சிலுப்பி கொண்டதையும் பார்த்தேன்

மயிலொன்றின் கால் தரம் என மனதில் பதித்த

உன் உருவத்தை சொற்களால் வரைய முடியாத

என் போதாமையை கரம்பை  மண்

தன் கோடுகளால் நிரப்பியது

நெடி துயர்ந்த பனை தோழிகள்

 

உச்சித்தொட்ட என் மகிழ்ச்சி பெருமூச்சால்

தம்மை விசிறி கொண்டன

முழுக்க  முட்போர்த்தியிருந்த

பிரண்டை செடி தன்னளவில்

ஒரு  முள்ளுதிர்த்து புன்னகைத்தது

முனை நிமிர்ந்து பூர்த்திருக்கும்

 

கருவேல முள் ஒன்று

உன் பெயர் கேட்டு அடம் பிடித்தது

அழுகை விரைத்த குழந்தை என

இரண்டு ஒரு காய்களை வழிய விட்டிருந்த

முருங்கைக்கோ சிரிப்பு தாளவில்லை

சிறுமஞ்சள் பூக்களுடன் கொட்டி தீர்த்து விட்டது

 

சர்வ  தேசியத்துக்கு  எதிராக அல்லது மாற்றாக எனது நிலம் சார்ந்த அடையாளங்களை,  வட்டார வழக்குகளை,  மண் சார்ந்த மனிதர்களை முன் வைப்பது என்பது ஒரு பின் நவீனத்துவ செயல்பாடு தான்.  நவ காலனிய ஆதிக்க சூழலுக்கு எதிரான கேள்வி எழுப்புவது என் அரசியல்.

புறநானூற்றில் மரத்தைத் தோழியாக, சகோதரியாக பெண்கள் பாவித்து உரையாடிய பாடல்கள் உண்டு. ‘மஞ்சணத்தி மரம்’ அவ்வகை எனக்கு. எனது ஒவ்வொரு பருவமும் மஞ்சணத்தி மரத்தோடு பினைந்துள்ளதைக்  நீங்கள் காணலாம்.

எனதுதூர் வயக்காட்டுவரப்பில் கால் வழுக்கி விழுந்ததும்

ஊருணியின் கரம்பை மண்ணில் உருவமில்லாப்

பொம்மைகள் செய்ததும்,  மஞ்சணத்தி பழங்களின்

சுவையில் பற்களை கரையாக்கிக் கொண்டதும், நேர்த்திக்

கடனுக்காய்  நெருக்கமாய் கோர்த்திருக்கின்ற

மணிகளோடும் முனியம்மா கோயிலின் முன்புறம்

சிறு தேங்காய் பொருக்கியதும்,  ஊர்கூடம் தேர் முட்டியும்

கிடையாது அடையும் கரிசல் காடும் என்னுள் எப்பொழுதும்

பூரி கிடக்கின்ற உயிர் பிம்பங்கள். அவை கவிதைக்கல்

எறியப்படுகையில் ஆழ்மனதிலிருந்து மேல் எழும்பி

வரி வடிவம் காட்டிவிட்டு,  மறுபடியும் அடி மனத்துள்

உடைய போய்விடும் பாதரச கண்ணாமூச்சிகள்.

 

இறைவன், மனிதனுக்குத் தந்த வரம், மரம்! அயல்நாடு சென்ற குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணனிடம் அந்நாட்டு அதிகாரி ஒருவர் பேசும்போது, “நாங்கள் மரங்களை மிகவும் நேசிப்போம்” என்றாராம். அதற்கு இராதாகிருஷ்ணன், “நாங்கள் மரங்களை நேசிப்பதோடில்லாமல் வணங்கவும் செய்வோம்” என்று கூறினாராம். ஆம், நம் பாரதத் திருநாட்டில் ‘மரங்கள்’ வணக்கத்திற்குரியவை. இவ்வாறு வணக்கம் செய்யும் மரபை காலங்காலமாகத் தமிழர்கள் பின்பற்றி வருகிறார்கள் என்பதற்கு சங்கத் தமிழ் இலக்கியங்களே சான்று!

தமிழர் பண்டு தொட்டு அரசமரம், ஆலமரம், வேப்பமரம், கடம்பமரம், வாகைமரம், வில்வமரம், கொன்றைமரம் முதலிய பல்வேறு மரங்களை வணங்கி வந்திருக்கின்றனர் – வணங்கியும் வருகின்றனர். அதே போல் கோயில்களில் உள்ள மரங்களையும் தலவிருட்சமாகக் கருதி வணங்குவர். முருகன் கடம்பன் எனவும், சிவன் கொன்றை மரத்தோன் எனவும் அழைக்கப்பெறுவர். திருமால் ஆலமர இலையிலிருந்து உதித்தார் என்றும் கூறுவர். நெய்தல் நில பரதவர் பனையை வழிபட்டனர். பலராமன் பனைக் கொடியோன் எனப்பெற்றான்.

சிவபெருமான் ஆலமரத்தின் கீழ் தெற்கு முகமாக அமர்ந்துள்ளதால் ‘தென்முகக் கடவுள்’ என அழைக்கப்பட்டார். இதை “ஆலமர் செல்வர்’ எனக் கலித்தொகை(83) கூறுகிறது. கடம்ப மரத்துக் கடவுளை வழிபட்டால் அக்கடவுள் கொடியோரை விரட்டும்; விலக்கும் என்பது நம்பிக்கை. அத்தகு கடவுள் நிலை பெற்ற கடம்பமரம் மன்றத்தில் இருந்தது என்பதை,

‘மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்

கொடியோர்த் தெறூஉம் என்ப’ (87)

என வரும் குறுந்தொகைப் பாடல் விளக்குகிறது. வேங்கை மரத்தையும், வயல்களை ஒட்டி வளர்ந்திருக்கும் வேங்கைமரக் கடவுளையும் வணங்கினால், வயல்கள் விளையும்; அவை காக்கப்பெறும் என்பதை,

‘எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும்

குருகார் கழனி’ (216)

என நற்றிணைக் குறிப்பிடுகிறது. வேப்பமரம், காளியம்மனின் மரமாகக் கருதப்படுகிறது. காளி கோயில் அனைத்தும், வேப்ப மரத்தையே தலமரமாகப் பெற்றிருக்கும்.

பக்கத்து நாட்டின் மீது போரிடச் செல்வோர் வேப்பமரத்தை வணங்கிச் செல்வர். போரில் பங்கேற்ற மறவர்கள் சிலர் விழுப்புண் பெறுவர். அவ் விழுப்புண்ணோடு வீரரை இரவில் தனியே விட்டால் அவர்களைப் பேய் பற்றும்; புண்ணும் ஆறாது என்றும் மக்கள் நம்பினர். எனவே, வீரர்கள் உறையும் இடத்தில் பெண்டிர் நாகசம்பங்கி (இரவம்) இலையையும் வேப்பிலையையும் செருகி வைத்திருந்தனர் என்று புறநானூறு(28) கூறுகிறது.

தமிழகச் சிற்றூர்களில் அரசமரமும் வேப்பமரமும் சேர்ந்து வளர்ந்த இடங்கள் வழிபாட்டிற்குரிய இடங்களாகத் திகழ்கின்றன. அரசமரம் மணமகனாகவும், வேப்பமரம் மணமகளாகவும் உருவகிக்கப்பட்டு, அவ்விரு மரங்களுக்கும் திருமணமும் நடத்திவைப்பர். இம்மரத்தடியில் நாக உருவங்கள் பதிக்கப்பட்டிருக்கும். நல்ல மணவாளனைப் பெற நினைக்கும் பெண்டிர், இம்மரங்களைச் சுற்றிவந்து வழிபடுவர் என்பதற்கும் சான்றுகள் உள்ளன. வழிபடு மரத்தின் சுற்றுப்புறத்தை மகளிர் கூட்டிப் பெருக்கித் தூய்மையாக்குவர், மாலை சூட்டி அழகுபடுத்துவர் என்பதை,

“ஆல முற்றங் கவின்பெறத் தைஇய

பொய்கை சூழ்ந்த பொழின்மனை மகளிர்’

என அகநானூற்றுப் பாடல் ஒன்று நயத்தக்க நாகரிகமாய் நவில்கிறது.

மரங்கள் என்றாலே நம் அனைவருக்கும் பிடித்த பல்லுயிர்களின் இருப்பிடமான ஒரு இயற்கை அங்கமாகும்! ஊழிக் காலம் தொட்டு மரங்களை சார்ந்து மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள். சங்க காலத்தில் பல பாடல்களில் நம்மைச் சுற்றியிருக்கும் மரங்கள் குறித்து தெளிவாக விரிவாக விளக்கி உள்ளார்கள் நம் மூதாதையர்கள்.

இயற்கை தான் முதல் கடவுள். அவள்தான் எல்லோரையும் அரவணைத்தாள். குகைகளுக்குள் பதுங்கியிருந்த நாம் வெளிச்சம் பழகி, வேட்டையாடி, ஆடைகள் அணிந்து, நெருப்பைப் கண்டறிந்து என்று படிப்படியாக முன்னேறினோம். நீலகிரி வெறும் பழங்குடியினர் வாழும் இடம் என்ற அளவில் மட்டுமே அறிந்த நமக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு சுமேரியர்களோடு வணிகத் தொடர்புகள் இருந்திருக்கிறது என்பது அதி ஆச்சரியத் தகவல். அகநானூறு பாடல்கள் அன்றைய காலகட்டத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

மக்கள் பண்பாடு, இயற்கை வழிபாடு, மூத்தோர் வழிபாடு, நடுகல் வழிபாடு, குலாச்சாரங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், வட்டார அளவிலான நம்பிக்கைகள், குடும்ப அளவிலான சடங்குகள் என்று பல்வேறு வகையான வழக்காறுகளை பின்பற்றி வந்துள்ளனர்  நம் முன்னோர்கள். சமூக பொருளியல் வாழ்வுக்கான குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளுடன் கூடிய நம்பிக்கைகளும் சடங்குகளும்தான் இவைகள்.

சமயப் பரப்புரைக்காக இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்த கிறிஸ்தவ மதகுருமாரான நூலாசிரியர் ஹென்றி ஒயிட் ஹெட் தென்னிந்தியாவில் பல்லாண்டுகள் பல இடங்களில் பணியாற்றி இருக்கிறார்.  அப்போது வெவ்வேறு கிராமங்களில் மக்களிடையே நிலவிய பலவிதமான வழிபாட்டு முறைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. போகிற போக்கில் கண்டதையும், சில  தகவலாளிகள் சொன்னதைக் காதில் கேட்டும் நூல்களை எழுதிக் குவித்த மற்ற ஐரோப்பியர்கள் போல் அல்லாமல் விரிவாகவும்,  ஆழமாகவும் கள ஆய்வுகள் மேற்கொண்டவர் ஹென்றி ஒயிட் ஹெட்.

கிராம தேவதை என்று அழைக்கப்படும் கிராம தெய்வங்களைச் சேர்ந்த மத நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் மற்றும் திருவிழாக்கள் இன்று இந்து மதத்தின் ஒரு முக்கிய பாகமாக உள்ளது.  தென்னிந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கிராம தேவதை கோவிலைக் காணலாம். இந்தக் கோவில்கள் அந்தக் கிராம மக்களால் வழிபடப்பட்டும் திருவிழாக்கள் கொண்டாடப்படும் வருகின்றன. இந்தக் கோவில்கள் அளவில் சிறியதாகவே இருக்கும் பெரும்பாலான இடங்களில் இந்தக் கோவில்கள் மூன்று அல்லது நான்கு அடி உயரம் மட்டுமே உள்ள சிறு செங்கல் கட்டிடங்கள். ஆனாலும் கிராமத்தில் ஒரு பெரும் அழிவு கொள்ளை நோயோ,  பஞ்சமோ, கால்நடைகளுக்கு ப் பெரும் நோயோ வரும் போது அவற்றைக் காப்பாற்ற கிராம மக்கள் கிராம தேவதை கோவிலுக்கு வருகின்றனர். கிராம தெய்வங்கள் பிரபஞ்ச சக்திகளோடு அல்லாமல் கிராம வாழ்வின் நிதர்சனங்களான காலரா, பெரியம்மை, கால்நடை நோய்களுடன் தொடர்புடையவர்கள்.

பெரும்பாலான கிராம தெய்வங்கள் பெண் தெய்வங்களே! கிராம தெய்வங்கள் மிருகபலி கொடுத்து வழிபடப்படுகின்றன. எருமை, ஆடுகள், செம்மறி, பன்றி மற்றும் பல பறவைகள் என பல்லாயிரக் கணக்கில் மிருகங்கள் பலி கொடுக்கப்படுகின்றன. சில அய்யனார் கோவில்களில் கோயில் பூசாரி சுருட்டுகளும், நாட்டுச் சாராயம் அல்லது கள்ளைப் பெற்றுக் கொள்கிறார்.

கிராம தெய்வங்களின் கோவில்கள் எல்லாம் ஒன்று போலவோ அல்லது அழகு மிக்கதாகவோ இல்லை. அவையெல்லாம் ஒரு சிறு கிராமத்தின் நலனைக் காக்கும் சிறு தெய்வங்களின் கோயில்கள். எனவே அவையெல்லாம் பயத்தைக் கொடுப்பதாக இருக்கின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அய்யனார் கோயில்கள் பெரிதும் சிறியதுமான குதிரைச் சிற்பங்களுடன் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலான இந்தக் கோயில்கள் சிறு செங்கல் கட்டிடங்களே. மூன்று அல்லது நான்கு அடிச் சுவருடன் ஒரு கல்லில் செதுக்கிய மூலவர் சிற்பத்துடன் இருக்கின்றன. இன்னும் பல கிராமங்களில் ஒரு மரத்தின் அடியில் உள்ள மேடையில் கற்களும், வேல் கம்புகளும் இந்தத் தெய்வங்களைக் குறிக்கின்றன. இன்னமும் சில இடங்களில் ஒரு பெரிய கல், மரத்தின் அடியிலோ அல்லது வெட்ட வெளியிலோ நடப்பட்டு அது ஐயனாரைக் குறிக்கிறது.

நம் ஊர் எழுத்தாளர் எஸ்ரா  சொல்வது போல: “எங்க ஊர்ல மனிதர்கள் அல்ல.. தெய்வங்கள்தான் அதிகம் கைவிடப்பட்டவர்கள். ஒரு காட்டுக்குள்ள ஒரேயொரு கோயில் இருக்கும். ஒருத்தன் கூட அங்க போக மாட்டான். ஒரு வழிபாடும் கிடையாது. ஒரு பொங்கல்.. படையல் எதுவும் கிடையாது. பசித்த தெய்வங்கள்தான் அந்த நிலத்தினுடைய காவலாளிகளா இருக்கும். அந்த பசித்த தெய்வங்களுக்கு பெரிய கோவில்கள், மேடை, தேர் இருக்காது. எந்த அலங்காரமும் இருக்காது. கடவுளை மறைத்து கூறை போட்டிருக்க மாட்டாங்க. வெட்ட வெளியில காற்றும் மழையும் வெயிலும் படும் அளவுக்கு இருக்கும்.

ஆனால், கையில் ஒரு பெரிய வாள் இருக்கும். அது வேட்டையாடித்தான் வாழணும்னு நினைக்கற கடவுள்.

அந்த காட்டு தெய்வங்கள கடந்து போகிற மக்கள், அதைக்கண்டு பயப்படுவார்களே தவிர அதன் மேல பெரிய மரியாதையெல்லாம் வச்சிருக்க மாட்டாங்க.

இப்படியே இருக்கும்போது.. பல வருடங்கள் கழிச்சு திடீரென்று ஒருநாள் அந்த காட்டு தெய்வங்களுக்கு உணவளிக்கலாம்னு மக்கள் முடிவுசெய்வாங்க.

எங்கெங்கேயிருந்தோ கிளம்பி வருவாங்க. திடீர்னு அந்த காடு ஒளிர துவங்கும். காட்டு தெய்வத்துக்கு கிடாய்கள் வந்துட்டே இருக்கும். எங்கே பார்த்தாலும் வேடிக்கைகள், இசை, கிடா வெட்டு, கறி வேகுற வாசனை.

பல வருஷ பசிய அந்த காட்டு தெய்வம் ஒரு நாள் ரெண்டு நாளுல தின்று தீர்க்கும். அந்த தெய்வத்தோடு சேர்ந்து மனிதர்களும் தின்று தீர்ப்பார்கள். இதெல்லாம் நடக்குற நேரத்துல யாரோ ஒருத்தருக்கு சன்னதம் வரும். சாமி இறங்கும். யாரோ ஒருத்தருடைய உருவத்துல அந்த தெய்வம் வந்து வெறிகொண்டு ஆடும். யாரும் சமாதானப்படுத்தி அதை அடக்கிட மாட்டாங்க. சாமிதான ஆடட்டும்னு விட்ருவாங்க. தானே ஆடி சமாதானம் கொண்டு பிறகு அது எல்லாரையும் ஆசிர்வாதம் பண்ணும்.

அந்த கொண்டாட்டம் முடிஞ்ச பிறகு பழையபடி அந்த தெய்வம் தன் தனிமைக்கு திரும்பிடும். மறுபடி பழையபடி புறக்கனிப்புக்கு போயிடும். மறுபடி பழையபடி அதுவொரு பசித்த தெய்வம்தான்.

மனிதர்களுக்கு தெய்வங்கள் வேணுமான்னு தெரியாது. ஆனா, கண்டிப்பாக தெய்வங்களுக்கு மனிதர்கள் வேணும்.”

மரபியலில் தொடங்கி, தாவரங்கள், பாம்புகள், டைனசோர்கள், பூச்சிகள் என அத்தனை உயிர்களோடும் பயணித்து, இறுதியாக விண்வெளி வரை செல்லும் பயணமே இன்றைய குழந்தைகளுக்கு நாம் அளிக்கும் படிப்பாகும். அறிவியலை, அதுவும் சூழலியலை மிக எளிமையான முறையில், குறிப்பாக மாணவர்களுக்கு புரியும்படி எழுதுவது என்பது மிக சவாலான விஷயம். அதை நேர்த்தியாக செய்து கொண்டிருக்கும் பல சமகால எழுத்தாளர்களை நாம் அங்கீகரிக்க வேண்டும்.

அறிவியல் தமிழை முன்னெடுத்தவர்களில் பி.எல்.சாமி – புதுச்சேரியின் ஆளுநராகவும், தமிழறிஞராகவும், சங்க நூல்களில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்தவராகவும் அறியப்பட்ட முக்கியமானவர். அவருடைய கூர்மையான அறிவியல் பார்வைக்கு ஒரு எடுத்துக்காட்டு –

‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்’

என்ற குறள் வரிக்கு,

‘கவரிமா என்பது தன் உடம்பிலிருந்து ஒரு முடி நீங்கினும் தன் மானத்துக்கு இழுக்கு எனக் கருதி உயிர்வாழாது’ என உரையாசிரியர்கள் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில், ‘கவரிமா என்பது இமயமலை போன்ற குளிர் மிகுந்த பகுதிகளில் வாழும் ‘யாக்‘ எனப்படும் எருது போன்றதொரு விலங்கே’ என்றும், ‘கடுங்குளிரைத் தாங்க அதன் மயிர்க்கற்றைகள் போர்வையாக உதவுகின்றன’ என்றும், ‘அவற்றை இழந்தால் அதனால் உயிர் வாழ முடியாமல் போய்விடும்‘ என்ற கருத்தின் அடிப்படையிலேயே அக்குறள் உருவானதாக அரியதொரு அறிவியல் பார்வையை பி.எல்.சாமி முன்வைத்தார்.

முதுக்குறை குருவி (தூக்கணாங்குருவி), மனையுறைக் குருவி (சிட்டுக்குருவி), கூகை (வெண்ணாந்தை), ஊமன் (கொம்பன் ஆந்தை), குருகு ( கூழைக்கடா), நத்து நாரை (நத்தைக் குத்தி நாரை) என தமிழிலக்கியங்களில் சுட்டப்பட்டுள்ள பெயர்களை, இன்றைய இளையதலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துகிறார். வலசைப் பறவைகள், வாழ்விடப் பறவைகள் மட்டுமின்றி பறவைகளின் காப்பிடங்கள் குறித்தான சங்க இலக்கியப் பாடல் வரிகளில் அரியதொரு ஆய்வை முன்னெடுத்து, அவை இன்றைய அறிவியலோடு ஒத்திசைந்துப் போவதை நுட்பமாக பதிவு செய்துள்ளார்.

‘தமிழ்நாட்டில் மீன்களின் பெயர்கள் இடத்திற்கு இடம் மாறுவதுண்டு. தமிழ்நாட்டில் பல இடங்களில் சுதும்பு என்றழைக்கப்படும் மீனைத் திருநெல்வேலி, நாஞ்சில் நாட்டுப் பகுதிகளில் ‘குதிப்பு’ என்று அழைக்கின்றனர். மழைக்காலத்தில் இந்த மீன் நீரிலிருந்து குதித்து விடுவதால் குதிப்பு என்று பெயர் வந்தது. இந்த மீனைப் பள்ளு நூல்கள் குறிப்பிட்டுள்ளன’ என்று மீன் குறித்த பல அரிய செய்திகள் நமக்கு இவர் அளித்துள்ளார்.

பிரம்மாவின் தலையிலிருந்து அனைத்து தாவரங்களும், மரங்களும் உருவாகின, என புராண கதைகள் உள்ளன. தொல்காப்பியத்தில், 52 தாவரங்களும்; சங்க இலக்கியங்களில், 207 தாவரங்களும்; சங்கம் மருவிய காலத்தில், 185 தாவரங்களும், பக்தி இலக்கிய காலத்தில், 238 தாவரங்களும் இடம் பெற்றுள்ளன.  சங்கப் புலவர்கள் பெரிதும் தாவரங்களின் மலர்களைப் பற்றிய குறிப்பிடுகின்றனர்.  ஆயினும் இவற்றின் இயல்பு தண்டு இலை முதலியவற்றை கூறும்  புலவர்களும் இல்லாமல் இல்லை.  இவர்களுள் கோடல் கொன்றை பற்றி கணிமேதாவையாரும் உன்னைப்பற்றி உபயோச்சனாரும் வரவு பற்றி கபிலரும் மிகச் சிறப்பாக பாடி உள்ளனர்.  நெய்தல் குளவி பாலை முதலிய தாவரங்களின் தாவரப் பெயர்களை கண்டுபிடித்ததற்கும் அவற்றை உறுதிப்படுத்தியதற்கும் சங்கத்தமிழ் சான்றோர் கூற்றுதான் துணை செய்தது.

நம் இலக்கியங்கள் அடை யாள படுத்திய, 400க்கும் மேற்பட்ட மரங்களில் எத்தனை மரங்கள் தற்போது உள்ளன, என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். உலகம் தோன்றிய நாள் முதல் மரங்கள் உள்ளன; ஆதி காலம் தொட்டே, மரங்களும், மனிதர்களும் பிரிக்க முடியாத வாழ்வியல் உள்ளது. எங்கேயோ காணக்கூடிய அற்புதங்களை கண்டு அதிசயிக்கும் மனிதன், கண்முன் அழியும் இயற்கையின் அற்புதங்களைப் பற்றி ஒரு கவலையும் இல்லாமல் வாழ்வது கூட உலக அதிசயமாயுள்ளது; அப்படித்தான் மரங்கள் அழிவதும் நிகழ்ந்து வருகிறது.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *