விருந்தோம்பல்

உலகத் தாய்மொழி தினம்
ஆண்டு தோறும் பிப்ரவரி 21 ஆம் திகதியை தாய்மொழி தினமாகக் கடைபிடிக்கப் படுகிறது.
நாடு, மதம், சாதிகளை கடந்து தமிழராகிய நம் அனைவரையும் ஒன்றிணைப்பது தமிழ் மொழி மட்டுமே, இது பல்லாயிரமாண்டு அழியாத நம் பண்பாட்டின் அடையாளம்.
இந்நாளை நெஞ்சில் நிறுத்தி நம் இளைய தலைமுறையினருக்கு தாய்மொழியின் அவசியத்தை எடுத்துரைக்க மற்றுமொரு அரிய வாய்ப்பு.
இந்த நாள் 1952ம் ஆண்டு வங்க மொழியை காப்பாற்ற டாக்கா பல்கலைக்கழக மாணாக்கர் போராடி உயிர் நீத்த நாளை குறிக்கும் விதமாக யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப் படுகிறது.
மத அடிப்படையில் 1947ல் பாகிஸ்தான் தோன்றியது ஆயினும் உருது மொழியை வங்க மொழி பேசும் மக்கள் மீது திணிப்பதை கண்டித்து நடந்த போராட்டத்தின் விளைவாக வங்க தேசம் என்கிற ‘பங்களாதேசு” நாடு உருவானது.
ஐம்பதுகளில் தமிழகத்து இந்தி எதிர்ப்பு போராட்டம், கடந்த 60 ஆண்டுகளாகத் தொடரும் ஈழத்து தமிழ் மொழி போராட்டம், புலம் பெயர்ந்த நாடுகளில் எல்லாம் நம்மைப் போன்றோர் தாய்மொழியை அழியாமல் காக்க நடத்தும் அன்றாட போராட்டம் இவற்றுக்கும் “உலகத் தாய்மொழி தினம்” பொருந்தும். 
உலகின் மொழிகளைக் காப்பாற்றும் ஒரு சிறு முயற்சியாக ஐக்கிய நாடுகள் சபை கடந்த 1999ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 21ஆம் நாளை உலகத் தாய்மொழி தினமாகக் கொண்டாடுகிறது, உலகின் மொழிகளைக் காப்பதற்கும் அதன் அவசியத்தை உணர்த்துவதற்குமே இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
ஆங்கிலேயர் இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்கிய போது மத அடிப்படையில் பாகிஸ்தானையும் உருவாக்கினர். 1947ல் ஆங்கிலேயரிடம் சுதந்திரம் பெற்ற பாகிஸ்தான் தற்போதைய வங்கத் தேசத்தையும் (பங்களாதேஷ்) உள்ளடக்கியது. ஒரே மதத்தைக் கடைபிடிக்கும் நாடாகப் பாகிஸ்தான் இருந்தாலும் உருது மொழியைக் கிழக்குப் பகுதியில் வாழும் மக்களின் மீது திணிக்கப்பட்டது. வங்க மொழியைப் பல நூற்றாண்டுகளாகப் பேசி வந்த கிழக்கு பாகிஸ்தான் மக்கள், தம் மதத்திற்காகவும் மொழியை விட்டுக்கொடுக்க மறுத்தனர். இதற்காகப் பாகிஸ்தான் நாட்டு அரசின் உருது மொழிக்கொள்கையை எதிர்த்து ஒரு பெரிய மாபெரும் போராட்டம் நடைபெற்றது. வங்க மொழியையும்
தேசிய மொழியாக அங்கீகரிக்கக் கோரி இந்தக் கிழக்கு பாகிஸ்தான் தழுவிய போராட்டம் பல ஆண்டுகள் நடைபெற்றது. இதன் உச்சமாக டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் 1952ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தில் அரசுக் காவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
தன் தாய்மொழிக்காகத் தன்னுயிரை இழந்த அப்துல் ஜப்பார், அபுல் பர்கட், ரஃபிக்குதின் அகமது, முகமது சலாவுதின் & அப்துஸ் சலாம் ஆகியோரின் நினைவாக உலகத் தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

பாகிஸ்தானில் இருந்து பிரித்து வங்கதேசத்தை உருவாக்க இந்தியா பெரும் பங்காற்றியது, அரசியல் காரணங்களுக்காக, மொழிப்பற்றினால் அல்ல என்பது தனியான செய்தி.
இதன் மூலம் நாம் அறிவது மொழி என்பது மத நம்பிக்கைகளையும் கடந்தது.

இதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு ஐரோப்பிய கண்டம், அவற்றின் நாடுகளைப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஐரோப்பாவின் அனைத்து நாடுகளும் கிருத்துவ மதத்தை (சில உட்பிரிவுகளாக) பின்பற்றும் மிகப் பெரும்பான்மையான மக்கள் தொகை கொண்டது.
பண்பாட்டிலும் மரபிலும் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் ஒத்த பழக்க வழக்கங்கள் கொண்டவை. ஒரே பொருளாதாரத்தையும் பின்பற்றப் பல நாட்டு நாணயங்களையும் விட்டொழித்து ஒரே நாணயத்திற்கும் தன்னை மாற்றிக்கொண்டார்கள். இருப்பினும் அவை பல நாடுகளாக எல்லைக்கோடுகளை வரைந்து தனி நாடுகளாக இருப்பது மொழிவாரியாகத்தான்.
இதன் மூலம் நாம் அறிவது மொழி என்பது மதம், பண்பாடு, பொருளாதாரம் ஆகிய கூறுகளையும் கடந்தது.
 
மேலும் ஒரு செய்தி, கனடா நாட்டில் கியூபெ என்ற மாகாணத்தின் முதன்மை மொழி ஃப்ரெஞ்ச். இதை நடைமுறை படுத்தப் பல்வேறு சட்டங்கள் உள்ளது, எடுத்துக்காட்டாகக் கணினியின் Operating System முதன்மை மொழி ஃப்ரெஞ்ச் மொழியில் தான் இருக்க வேண்டும், அந்த மாகாணத்தின் அனைத்து அரசாங்க இணையதளங்கள், ஏன் தனியார் இணையதளங்களும் முதல்மொழியாக ஃப்ரெஞ்ச் மொழியில் இருக்க வேண்டும் என்பது சட்டம். இதைப்போன்ற சட்டங்களினால் தான் ஒரு மொழியைத் தழைத்தோங்கச் செய்ய முடியும். அரசாட்சியில் மொழி காக்கப் பட்டதும் இந்த முறையில் தான்.

உலகமயமாக்கத்தின் மற்றுமொரு கொடிய முகம் மக்களின் தனித்தன்மையை ஒப்புக்கொள்ள மறுக்கும் அரசுகள் முன்னேற்றத்திற்குத் தேவை என்று கூறி மக்களின் மீது பொதுவான மொழியைப் புகுத்துவதுதான்.
“மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்”
என்று ஒரு பேதையுரைத்ததாகப் பாடிய மகாகவி சுப்பிரமணிய பாரதி, அன்று அங்கு வந்தமர்ந்து இந்த மழலைகளின் அமிழ்தினுமினிய தமிழ் மொழிப் பேச்சைக் கேட்டிருந்தானெனில், அதே பேதை மனம் மாறி,
“மெல்ல மெல்லத் தமிழினி ஓங்கும் – அந்த
மேற்கு மொழிகள் புறங்காட்டி ஓடும்”
 
விருந்தோம்பல் - விளக்கம்
விருந்தோம்பல் என்பது ஒரு விருந்தினர் மற்றும் அவரது புரவலர் ஆகியோருக்கு இடையிலான உறவு அல்லது பொதுவாக, உயிர்களுக்கு ஆதரவளிக்கும் குணத்தைக் குறிப்பது - அதாவது விருந்தாளிகள், வருநர், அந்நியர்கள் ஆகியோரை வரவேற்று அவர்களை விருந்தோம்பி மகிழ்விக்கும் மனமகிழ்விடங்கள், உறுப்பினருக்கான கழகங்கள், அவைகள், ஈர்ப்புகள், பிரத்தியேகமான நிகழ்வுகள் மற்றும் பயணிகள் மற்றும் சுற்றுலாவினருக்கான இதர சேவைகள் ஆகிய அனைத்தையும் இது குறிக்கும்.
தேவையுள்ள யாருக்கும் தாராள மனத்துடன் கவனிப்பையும், காருண்யத்தையும் வழங்குவதையும் விருந்தோம்பல் எனக் கூறலாம்.

விருந்தோம்புதல் என்பதன் பொருள்
விருந்தோம்புதல் என்பதன் ஆங்கிலச் சொல்லான ஹாஸ்பிட்டாலிட்டி என்பது இலத்தீன் மொழிச் சொல்லான ஹாஸ்பெஸ்என்பதிலிருந்து பெறப்படுகிறது. இச்சொல்லோ, 'அதிகாரம் கொள்ளல்' எனப் பொருள்படுவதான ஹாஸ்டிஸ் எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டது. ஹோஸ்ட் என்பதன் பொருளை சொற்சார்ந்து அப்படியே உரைப்பதாயின் "அந்நியர்களின் பெருமகன்" எனப் பொருளாகும் ஹோஸ்டியர் என்னும் சொல்லைக் கூறலாம். இதற்கு ஈடுகட்டுவது அல்லது இழப்பைச் சரிக்கட்டுவது எனப் பொருளாகும்.
ஹோமரின் காலங்களில் கிரேக்க மதக் கடவுளரின் தலைவராக இருந்த ஜீயஸ் என்னும் கடவுளின் பொறுப்பில் விருந்தோம்பல் இருந்ததாகக் கூறுவர். ஜீயஸ் கடவுளை ஜெனோஸ் ஜீயஸ் ('ஜெனோஸ்' என்பதன் பொருள் அந்நியன்) என்றும் கூறுவதுண்டு. விருந்தோம்பலே தலையாய பணி எனும் மெய்ம்மையை வலியுறுத்துவதாக இது அமைந்தது. கிரேக்கத்தில் ஒரு வீட்டுக்கு வெளியே சென்று கொண்டிருக்கும் அந்நியர் ஒருவரை அவ்வீட்டில் வசிப்பவர்கள் இல்லத்தினுள் வருமாறு அழைப்பு விடுப்பர். வீட்டின் தலைவரான புரவலர் அந்த அந்நியரின் பாதங்களைக் கழுவி, உணவு மற்றும் திராட்சை ரசத்தை அளித்து அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகே அவரது பெயரைக் கூடக் கேட்பார்.
புனித விருந்தோம்பல் என்னும் கிரேக்கக் கருத்தாக்கத்தினை தெலிமச்சஸ் மற்றும் நெஸ்டார் ஆகியோரின் கதை சித்தரிக்கிறது. தெலிமச்சஸ் நெஸ்டாரைக் காண வருகையில், நெஸ்டார் தன்னிடம் வந்திருக்கும் விருந்தாளி தனது பழைய தோழன் ஒடிஸ்ஸியஸின் மகன் என்பதை அறியவில்லை. இருப்பினும், தெலிமச்சஸை வரவேற்று, பிரம்மாண்டமான விருந்து ஒன்றை அளித்து அதன் மூலம் ஹோஸ்டிஸ் என்னும் அந்நிய விருந்தாளி மற்றும் ஹோஸ்டியர் என்னும் சமதையான புரவலர் ஆகிய இருவருக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்தி மற்றும் இவை இரண்டும் இணைகையில் விருந்தோம்பல் என்னும் கருத்துரு எவ்வாறு மிகச் சிறப்பாக வெளிப்படும் என்பதையும் தெரியப்படுத்துகிறார்.
பின்னர், நெஸ்டாரின் மகன்களில் ஒருவர் தெலிமச்சஸின் படுக்கை அருகிலேயே உறங்கி அவருக்குத் தீங்கு ஏதும் நேராது காவல் இருந்தார். மேலும் தெலிமச்சஸ் பைலோஸிலிருந்து நில வழியாக ஸ்பார்ட்டாவிற்கு விரைந்து செல்வதற்காக நெஸ்டார் அவருக்கு ஒரு இரதமும் குதிரைகளும் வழங்கித் தனது மகன் பிசிஸ்டிராஸ் என்பவனையே அதற்கு சாரதியாகவும் அனுப்பினார். பண்டைய கிரேக்கப் பண்புகளான பாதுகாப்பு அளித்தல் மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றை இவை மிக அருமையாகச் சித்தரிக்கின்றன.
மேற்கூறிய கதையின் அடிப்படையில் அதன் தற்போதைய பொருளானது, ஒரு புரவலர் தன்னை அணுகும் ஒரு அந்நியருக்குப் பாதுகாப்பும் கவனிப்பும் அளித்து, விருந்தோம்பலின் இறுதியில் அவர் தனது அடுத்த கட்டப் பயண இலக்கை அடைவதற்கு உதவுவதைக் குறிப்பதாக அமைகிறது.
 
சமகாலத்திய பயன்பாடு
சமகால மேற்கத்திய உலகில், விருந்தோம்பல் என்பது இன்னமும் பாதுகாப்பு மற்றும் உயிர் காத்தல் ஆகியவை தொடர்பானவையாக இல்லாது, மாறாக, நடத்தை முறைமைகள் மற்றும் கேளிக்கை ஆகியன தொடர்பாகவே உள்ளன. இருப்பினும், விருந்தாளிகளை மதிப்பது, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது, அவர்களைத் தமக்கு சமதையாக நடத்துவது போன்றவற்றை இன்னமும் அது ஈடுபடுத்துகிறது. அந்நியர்கள் மற்றும் அவர்களுக்கு எதிராக தமது நண்பர்கள் அல்லது குழுவில் உள்ளோர் ஆகியோருக்கு எந்த அளவு விருந்தோம்பல் காட்ட வேண்டும் என்பதில் கலாசாரம் மற்றும் துணைக் கலாசாரங்களுக்கு இடையில் வேறுபாடுகள் உள்ளன.
விருந்தோம்பல் சேவைத் தொழிற்துறை என்பது உணவகங்கள், சூதாட்டக் களங்கள், சுற்றுலா விடுதிகள் ஆகியவற்றை உட்படுத்தும். இவை வெளியாட்களுக்கு வசதிகள் மற்றும் வழி நடத்துதல்கள் ஆகியவற்றை வணிக உறவின் ஒரு பகுதியாக அளிக்கின்றன. ஹாஸ்பிடல், ஹாஸ்பைஸ் மற்றும் ஹாஸ்டல் என்னும் சொற்கள் அனைத்துமே விருந்தோம்பல் எனப் பொருள்படுவதான ஹாஸ்பிடாலிட்டி என்னும் சொல்லினின்றும் பெறப்பட்டவையே. இந்த நிறுவனங்கள் தனிப்பட்ட முறையில் கவனிப்பு அளிப்பதை இன்னும் கைக்கொண்டுள்ளன.
விருந்தோம்பலின் இத்தகைய பயன்பாட்டை ஆய்வதே விருந்தோம்பல் நெறிமுறைகள் என்பதாகும்.
"ஒரு நல்ல தலையணையை உங்களுக்காகக் கொண்டு வருகிறேன். அது நீங்கள் மிகவும் வசதியாக உணர உதவும்." விருந்தாளியை உபசரிப்பது என்பதைக் காட்டுவது இதுவே.
மேற்கத்தியப் பகுதிகளில், ஏதன்ஸ் மற்றும் ஜெருசேலம் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர் பூசல்களின் பின்னணியில் முன்னோக்கான மாறுதலுக்கு உட்சென்றதாக இரண்டு கட்டங்களைக் கூறலாம்: ஒருவர் தனிப்பட்ட முறையில் தமது கடப்பாட்டினை உணர்ந்து அளிக்கும் விருந்தோம்பல் மற்றும் நிறுவனங்கள் "அதிகாரபூர்வமாக" ஆனால், அநாமதேயமாக அளிக்கும் சமூக சேவைகள். இதற்கு ஏழைகள், அனாதைகள், நோயாளிகள், குற்றவாளிகள் போன்ற "அந்நியர்களுக்கு" இவை பிரத்தியேகமான இடங்களில் அளிக்கும் உதவிகளை உதாரணமாகக் குறிப்பிடலாம். இத்தகைய நிறுவனமயமான விருந்தோம்பலே மத்தியக் காலங்களிலிருந்து  மறுமலர்ச்சிக் கால மாற்றத்துடன் இணைவதாக இருக்கலாம். (இவான் இல்லிச் தி ரிவர்ஸ் ஆஃப் தி ஃப்யூச்சர் - (Ivan Illich, The Rivers North of the Future) விருந்தோம்பலுக்கு இது ஒரு எடுத்துக் காட்டு: 
 
உலகெங்கும் விருந்தோம்பற் பண்பு
மத்திய கிழக்குக் கலாசாரத்தில், தம்மிடையே வாழும் அந்நியர்கள் மற்றும் வெளிநாட்டிரை கவனித்துக் கொள்வதானது ஒரு கலாசார விதிமுறையாகவே கருதப்பட்டது. பல விவிலிய ஆணைகளிலும் உதாரணங்களிலும் இத்தகைய விதிமுறைகள் வெளியாகின்றன. 
இதன் உச்சமான உதாரணம் விவிலியத்தின் ஆதி ஆகமத்தில் காணப்படுகிறது. தேவதைகளின் ஒரு குழுவினை லோத் விருந்தோம்புகிறார். (அச்சமயம் அவர்கள் மனிதர்கள் என்றே அவர் நினைத்திருக்கிறார்). கும்பல் ஒன்று அவர்களை வன்புணர்ச்சி செய்ய முயலும்போது, அவர்களுக்குப் பதிலாகத் தமது மகளிரை எடுத்துக் கொள்ளுமாறு அவர் வேண்டுகிறார். "இவர்களை ஒன்றும் செய்யாதீர்கள். அவர்கள் பாதுகாப்பு வேண்டி என் கூரையின் கீழ் வந்திருக்கின்றனர்." என அவர் கூறுகிறார். (ஆதி ஆகமம் 19:8, என்ஐவி)
விருந்தாளி மற்றும் புரவலர் ஆகிய இருவரின் கடப்பாடுகளுமே கண்டிப்பானவை. ஒரே கூரையின் கீழ் உப்பைத் தின்பதன் மூலம் இந்தப் பிணைப்பு உருவாகிறது. ஒரு அராபியப் புனைவின்படி, ஒரு வீட்டில் சீனி என எண்ணி உப்பைத் தின்று விட்ட திருடன் ஒருவன், அது உப்பு என்று அறிந்ததும் தான் திருடிய அனைத்தையும் அங்கேயே விட்டு விட்டுச் செல்கிறான்.
 
பண்டைய உலகு
பண்டைய கிரேக்கர்கள் மற்றும் ரோமர்களுக்கு, விருந்தோம்பல் என்பது ஒரு தெய்வீக நிலையாக இருந்தது. தனது விருந்தாளிகளின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி விட்டனவா என்று உறுதி செய்து கொள்வது ஒரு புரவலனின் கடப்பாடாக இருந்தது. பண்டைய கிரேக்கச் சொல்லான எக்ஸெனியா (இதுவே இறைவன் இதில் ஈடுபடுகையில் தியோக்ஸெனியா என்னும் சொல்லானது) இவ்வாறு விருந்தாளி-நட்புச் சடங்கு உறவைச் சுட்டுவதாகும்.
பண்டைய உலகில் விருந்தோம்பல் எவ்வாறு மிகப் பெரும் இடம் பெற்றிருந்தது என்பதை பாசிஸ் மற்றும் ஃபிலோமின் கதை விவரிக்கிறது. இக்கதையில் பழங்காலத்தியக் கடவுளரான ஜீயஸ் மற்றும் ஹெர்மெஸ் ஆகியோர் ஃபிர்ஜியா நகரில் எளிய உழவர் போல வேடம் புனைந்து வருகின்றனர். இரவுக்கான உணவும் உறைவிடமும் தேடி அவர்கள் அலைகையில், பெரும்பாலும் மூடிய கதவுகளையே சந்திக்கின்றனர். இறுதியாக பாசிஸ் மற்றும் ஃபிலோமினின் இல்லத்தை அடைகின்றனர். தாங்கள் ஏழ்மையில் வாடியபோதும், இத்தம்பதி சிறந்த முறையில் விருந்தோம்புகின்றனர். தங்களிடம் இருக்கும் மிகக் குறைவான உணவை விருந்தினருக்கு அவர்கள் அளிக்கின்றனர். தங்களது விருந்தினர் உண்மையில் கடவுளர் என அறிகையில் தங்களது வீட்டைக் காக்கும் ஒரே வாத்தையும் வெட்டிப் படைப்பதற்கு முன்வருகின்றனர். இதற்கு வெகுமதியாக கடவுளர் அவர்களுக்கு வரம் ஒன்றை அளிக்கின்றனர். மேலும், விருந்தோம்பும் பண்பற்ற இதர நகர மக்களை வெள்ளத்தில் அமிழ்ந்து போகவிட்டு, இத்தம்பதியை மட்டும் காப்பாற்றுகின்றனர்.
 
செல்ட்டிக் நாகரிகங்களில் விருந்தோம்புதல்
விருந்தோம்பல் என்னும் பண்பு, குறிப்பாக பாதுகாப்பு அளிப்பது என்பதானது, செல்ட்டிக் நாகரிகத்தைச் சார்ந்த சமூகங்களில் மிகுந்த அளவில் மதிப்புற்றிருந்தது.
அடைக்கலம் கேட்டு வரும் ஒருவருக்கு புரவலரானவர் உண்டியும் உறைவிடமும் மட்டும் அன்றி தமது கவனிப்பில் இருக்கையில் அவருக்குத் தீங்கு ஏதும் நேராத வண்ணம் பாதுகாக்கவும் வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கு யதார்த்தமான வாழ்க்கையில் உதாரணம் ஒன்றை வரலாறு அளிக்கிறது. அது, 17ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த ஸ்காட்டிஷ் மெக்கிரெகோர் குலம் பற்றியதாகும். இலாமோண்ட் என்னும் குலத் தலைவர் கிளென்ஸ்டிரேவில் வாழும் மெக்கிராகோர் தலைவரின் இல்லத்தை அடைந்து தாம் எதிரிகளிடம் இருந்து தப்பித்து வருவதாகக் கூறி அடைக்கலம் கோருகிறார். தமது சகோதரத் தலைவரை கேள்விகள் ஏதும் கேட்காமலேயே மெக்கிரோகர் வரவேற்கிறார். பின்னர் இரவுப் பொழுதில், லாமோண்ட் தலைவரைத் தேடி வரும் மெக்கிரகோர் குல மக்கள், மெக்கிரகோரிடம், உண்மையில், அவரது மகனையே லாமோண்ட் தலைவர் கொன்று விட்டதாக உரைக்கின்றனர். விருந்தோம்பலின் புனிதக் கடமையின்பாற்பட்டு, மெக்கிரோகர் தலைவர் லாமோண்ட்டைத் தனது குல மக்களிடம் ஒப்படைக்க ம்றுப்பது மட்டும் அல்லாது, மறு நாள் காலை, அவரை அவரது பூர்வீக இடத்திற்குத் தாமே வழித்துணையாக உடன் சென்று அனுப்புவிக்கிறார். பின்னாளில் மெக்கிரோக்கர்கள் நாடுகடத்தப்படுகையில், அவர்களில் பலருக்கு அடைக்கலம் அளித்து லாமோண்டினர் இந்த நன்றிக்கடனை திரும்பச் செலுத்துகின்றனர். 
 
இந்தியாவில் விருந்தோம்புதல்
உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் இந்திய நாகரிகமும் ஒன்று. தொன்மையான ஏனைய கலாசாரங்களைப் போலவே, விருந்தோம்பலையும் உள்ளிட்ட, பல அருமையன புனைவுகளை முறையில் இந்தியக் கலாசாரமும் கொண்டுள்ளது. மூடன் ஒருவன் அழையாத விருந்தாளியுடன் தனது சிறு உண்டியை மறுபேச்சின்றிப் பகிர்ந்து கொள்கையில், தன்னிடம் வந்த விருந்தாளி மாறுவேடம் பூண்ட இறைவன் என்பதைக் கண்டு கொள்கிறான். அவனது தாராள மனதிற்காகக் கடவுள் அவனுக்கு மிகுந்த செல்வமளிக்கிறார். பசியுடன் இருக்கும் எவரும் உண்பதற்காக பெண் ஒருத்தி தன்னிடம் இருக்கும் கிச்சடி அனைத்தையும் சமைத்து அளிக்கிறாள்... ஒரு நாள் அவளிடம் இருக்கும் உணவுப் பண்டங்கள் அனைத்தும் தீர்ந்து விடவே, இறுதியாக, பசியுடன் வரும் ஒருவனுக்கு தன் உணவையே அவள் அளிக்கையில், இறைவனிடம் இருந்து என்றும் குன்றாது நிறைந்தே இருக்கும் கிச்சடி கொண்ட பாத்திரம் ஒன்றைப் பெறுகிறாள். குழந்தைகளாகத் தாம் இருந்த காலம் தொட்டே இத்தகைய கதைகளைக் கேட்டு வளரும் பெரும்பாலான இந்தியர்கள், விருந்தாளியே ஆண்டவன் எனப் பொருள்படும் "அதிதி தேவோ பவ:" என்னும் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதிலிருந்தே இல்லத்திலும், சமூக நிகழ்வுகளிலும் விருந்தாளிகளின் பால் அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளும் இந்திய அணுகு முறையானது உருவானது.
 
விருந்தோம்பல் நெறி முறைகள்
"விருந்தோம்பல் நெறிமுறைகள்" என்னும் சொற்றொடரானது வேறுபட்ட ஆயினும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரு கல்விசார் துறைகளைக் குறிப்பதாக அமைகிறது:
1.	விருந்தோம்பல் உறவுகள் மற்றும் நடைமுறைகளில் ஒழுக்கம் சார் கடப்பாடுகள் தொடர்பான தத்துவ இயல் ஆய்வு.
2.	வர்த்த ரீதியான விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் தொழிற்துறைகளின் வணிக நெறிமுறைகளை குவிமையப்படுத்தும் பிரிவு.
தேவைப்பட்ட எவருக்கும் உண்டியும் உறைவிடமும் அளிப்பதை வீரப் பெருமகனார் பேராண்மைப் பண்பு என விளங்குவதாகக் கொண்டனர்.
 
விருந்தோம்பல்
விருந்து என்ற சொல் இன்று மணவிழா, சிறப்புப்பெற்றவர்களை வாழ்த்துவது இவை போன்ற கொண்டாட்ட நிகழ்சிகளில், சுற்றத்தார்க்கும் நட்பு வட்டத்திற்கும் மற்றவர்க்கும், மகிழ்ச்சியின் வெளிப்பாடாக, வீட்டிலோ வெளிஇடங்களிலோ, அளிக்கப்படும் உயர்ந்தவகை உண்டியையே குறிக்கிறது. ஆனால், முன்னாட்களில் விருந்து என்றது புதியது அதாவது புதியவர் என்று பொருள்பட்டது. புதியதாகத் தன் இல்லம் நாடி வருபவரை அன்புடன் வரவேற்றுச் 'சோறிடுதல்' விருந்தோம்பல் எனப்பட்டது.
அன்பு முதிர்ந்த நிலையை ஆர்வமுடைமை என்று வள்ளுவர் குறிப்பார். இல்வாழ்வானுக்குரிய தலையாய ஐந்து கடமைகளில் விருந்தோம்பலும் ஒன்று எனக் கூறிய வள்ளுவர் அதற்கென தனியாக ஒரு அதிகாரம் படைத்து அதன் விழுப்பங்கள், பயன்கள், விருந்தோம்பும் முறை இவற்றை விளக்கியுள்ளார். 
 
விருந்தோம்பல் அதிகாரப் பாடல்களின் சாரம்:
•	81 ஆம்குறள் இல்லறம் நடத்துவது விருந்தினரைப் பேணுவதற்கே என்கிறது.
•	82 ஆம்குறள் சாவா மருந்தேயானாலும் விருந்தினரோடு உண்க எனச் சொல்வது.
•	83 ஆம்குறள் விருந்தினர் நாளும் வந்தாலும் அவர்களைப் பேணிக்கொள்ள வேண்டும் என்பதைச் சொல்கிறது.
•	84 ஆம்குறள் வருவோரை முகமலர்ச்சியுடன் பேணுவானது செல்வமும் மலரும் எனச் சொல்வது.
•	85 ஆம்குறள் வந்தவர் அனைவரும் உண்டனரா என்று உறுதி செய்தபின் தான் உண்பவன் நிலத்தில் விளைச்சல் பெருகும் என்கிறது.
•	86 ஆம்குறள் நாள் முழுவதும் இடையறாது விருந்து போற்ற விழைவானை வரவேற்க இன்பம் மட்டுமே நிறைந்த வேறோர் உலகம் காத்துக் கொண்டிருக்கிறது எனக் கூறுகிறது.
•	87 ஆம்குறள் இல்லற வேள்வியான விருந்தோம்பல் பயன் இவ்வளவு என்று சொல்லக்கூடிய ஒன்று இல்லை என்று சொல்கிறது.
•	88 ஆம்குறள் செல்வம் இருந்தபோது உணவிட மனம் இல்லாது இப்பொழுது அதை நினைப்பது காலங்கடந்த புரிதலாகிறது எனச் சொல்வது.
•	89 ஆம்குறள் செல்வமிருந்தும் விருந்து தலைப்படாதது மூடத்தனம் என்று குறிக்கிறது.
90 ஆவதுகுறள் வந்த விருந்தினரை மகிழ்வோடு ஏற்று மலர்ந்த முகத்தோடு மனத்தில் சற்றும் களங்கமில்லாமல் பேண வேண்டும் என அறிவுறுத்துவது. 
அறிமுகமானவர்களும் விருந்தினர்களாக வருவர். அறியாதவர்களும் வருவர். ஆனாலும் விருந்து என்பதற்குப் புதிது என்றும் விருந்தினர் என்பதற்கு புதியவர் என்றுமே பொருள். எத்துணை முறை வந்தாலும் சரி, பன்முறை பழகிவந்தாலும் சரி. அவர்களையெல்லாம் புதியராக எண்ணிப் போற்றவேண்டும் என்னும் விழுமிய எண்ணத்தால் எழும்பியதே இச்சொற்கள் போலும்!(இரா இளங்குமரனார்). 

கோவலன் தன்னை விட்டுப் பிரிந்திருந்ததனால் ...... தொல்லோர் சிறப்பின் விருந்துஎதிர் கோடலும் இழந்த என்னை......(சிலப்பதிகாரம் மதுரைக்காண்டம் கொலைக்களக் காதை 72-73) எனக் கண்ணகி விருந்தோம்புதலை ஆற்ற இயலவில்லையே என்று கலங்கினாள். ... விருந்து கண்டபோது என்னுறுமோ என்று விம்மும்'(சுந்தரகாண்டம், காட்சிப்படலம்) என்று கம்ப இராமாயணத்தில் இராமனிடம் இருந்து பிரித்துக் கொணரப்பட்டுத் தனிமையில் வைக்கப்பட்டிருந்த சீதையும் விருந்து பேண முடியாமற்போமே என்று வருந்துவாள்.
 
விருந்தோம்பல் அதிகாரக் கருத்துக்கள் இன்று பொருந்துகின்றனவா?
விருந்தோம்பலைப் பாட்டும் தொகையும் பாடல் காலத்து விருந்தோம்பலாக மட்டும் வள்ளுவர் நோக்கவில்லை; ஒரு புனிதமான வேள்வியாக விருந்தோம்பலை வள்ளுவர் கருதினார் (ராஜ் கௌதமன்). வள்ளுவர் காலத்துக்கு ஆயிரம் ஆண்டுகள் பின் வந்த உரையாசிரியர்கள் காலத்தில் விருந்தோம்பல் பொருளில் மாற்றம் காணப்பட்டது போல் தெரிகிறது. எந்த நேரத்தில் விருந்து வந்தாலும் உணவு தரவேண்டும் என்று வள்ளுவர் கூற மணக்குடவர்/பரிப்பெருமாள் உரை 'உண்ணுங் காலத்துப் புதியார் வந்தால் பகுத்துண்ண வேண்டும்' என்கிறது. அதற்குப் பின்பு விருந்தோம்பலின் எல்லை இன்னும் சுருங்கி, தொடர்புடைய சுற்றத்தார், நட்பினர் இவர்களே இப்பொழுது விருந்தினர் ஆகிவிட்டார்கள். சமூக-பொருளாதார அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களே விருந்தினர் யார் என்பதற்கான அடையாளம் மாறியதற்குக் காரணம்.
......விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு' என்று வள்ளுவர் விருந்தோம்பலை பிறர்க்கு உதவி செய்தல் என்ற பொருளிலேயே ஆண்டுள்ளார். பழம்பாடல்களிலும் குறளிலும் கூறப்பட்ட விருந்தோம்பல் முறை இன்று அப்படியே இல்லை என்றாலும் இன்று பசியாற்றல் நிகழ்வுகளை வேறுவடிவில் காணமுடிகிறது. அறச்சாலைகளிலும், சமுதாயக்கூடங்களிலும், செல்வந்தர்/செல்வாக்குடையவர் இல்லங்களிலும், இப்பொழுது வெளியாட்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. விருந்தோம்புவான் வரையறைக்குள் இவர்கள் முற்றிலும் பொருந்தமாட்டார்கள் என்றாலும் விருந்தோம்பும் பண்பு இவ்விடங்களிலும் காணப்படும். 
சில இல்லங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் 'காசுகொடுக்கும் விருந்தாளி' (Paying Guest) அதாவது பணம் பெற்று உணவு வழங்குதல் முறை உள்ளது. இதையும் பசியாற்றல் பணியாகக் கொள்வதில் குற்றம் இல்லை. இன்று விருந்தோம்பல் பணியை, தொழில் முறையாக ஆதாயம்பெற்றுச் செய்யும் உண்டுறை விடுதி (hospitality industry) செய்கிறது.
பொதுவாக இன்று வீடுகளில் உற்றார்க்கும் நண்பர்க்கும் செய்யப்படும் விருந்தோம்பல் அறமாகப் போற்றப்படாவிட்டாலும் இவ்வதிகாரத்தில் கூறப்பட்ட விருந்தோம்பும் பண்புநலன்கள் பின்பற்றப்படுகின்றன.
 
விருந்தோம்பல் அதிகாரச் சிறப்பியல்புகள்
இறவாமையைத் தருவதாகக் கூறப்படும் அமிழ்தம் கிடைத்தாலும் அதை விருந்தினர் புறத்திருக்கத் தான் மட்டும் உண்ணக்கூடாது என்பதை வலியுறுத்தும்விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று என்னும் உயர்ந்த கருத்துக் கொண்ட பாடல் (குறள் 82) இவ்வதிகாரத்தின் கண்ணே உள்ளது.
வித்தில்லாமலே விளைச்சல் பெருகும் எனச் சொல்லும் வித்தும் இடல்வேண்டும் கொல்லோ ..... எனத் தொடங்கும் செய்யுள் (குறள் 85) இங்குதான் உள்ளது. உணர்ச்சியும் கற்பனையும் ஒருங்கே இயைந்து படிப்போர் உள்ளத்தில் அழுத்தமாகப் பதியவைக்கும் வகையில் கருத்தைக் கூறிய குறட்பா இது.
குறள் 89-இல் உடைமையுள் இன்மை....... என்னும் அழகிய தொடர் அமைந்துள்ளது. செல்வமிருந்தும் விருந்தோம்பா மடமையை வளமையில் வறுமை என்ற பொருள்படும்படி இத்தொடர் குறிக்கிறது.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. என்ற ஓசை நயம் கொண்ட பாடல் (குறள் 90) இவ்வதிகாரத்து உள்ளது. நுண்ணுணர்வையும் மென்மையையும் கொண்ட அனிச்சமலரை விருந்தினர் உள்ளத்துக்கு ஒப்பிட்டது எண்ணி இன்புறத்தக்க உவமையாம். வீட்டிற்கு வரும் விருந்தினர் மனம் புண்படும்படி நடந்துகொள்ளக்கூடாது என்பதை இதனினும் அழுந்த யாராலும் கூறமுடியாது.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *