திமுக முப்பெரும் விழாவில் ஆற்றிய உரை, திருவண்ணாமலை 15.09.2019

திருவண்ணாமலை, திமுக முப்பெரும் விழாவில் ஆற்றிய உரை

தலைவர் கலைஞருக்குப் புகழ் வணக்கம்
தளபதிக்குத் தலை வணக்கம்
கவியரங்கத்தைத் துவக்கி வைத்த -
கானகத்தின் அடர் கனிவும்
பகுத்தறிவின் தீஞ்சுடரும் கலந்த கம்பீரக் கவிஞர், 
மாண்புமிகு பாராளுமன்றத் துணைத்தலைவர்
கனிமொழிக்கு முதல் வணக்கம்.
கவியரங்கத் தலைமைக்கு அடுத்த வணக்கம்
சக கவிஞர்களுக்குச் சுக வணக்கம்
மாவட்டச் செயலாளர் மரியாதைக்குரிய 
அண்ணன் வேலு அவர்களுக்கு வணக்கம்
தொண்டர்களுக்குத் தமிழ் வணக்கம்

1950ஆம் ஆண்டு 
இதே தினத்தில் மறைந்த
முதுபெரும் தமிழறிஞர்
தனித்தமிழ் போற்றிய 
மறைமலை அடிகளுக்குப்
புகழ் வணக்கம்!

ஈரோட்டு எரிமலை பெரியார் மட்டும்
இல்லையென்றால்
ராமகாவியம் வந்த மண்ணில்
ராவண காவியம் வந்திருக்காது
அவசரமாய் அமேஸானில் 
பலநூறு பெரியாரின் படைப்புக்களை
இப்போது சிலகாலமாய்
ஆன்மீக அலப்பறைகள், தாங்கமுடியவில்லை…
என் தந்தை பெரியாருக்குப் பட்டாசு வணக்கம்!

ஏழைகளின் யேல் பல்கலைக்கழகமே
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் 
மணமுண்டு என்ற மாண்பாளரே…
உமக்கு நீர் பொடி போட்டுக் கொண்டே
தமிழ்ப்பகைக்கு வெடி வைத்துத் தகர்த்த 
தென்னாட்டு பெர்னாட்ஷாவே -
 பேரறிஞர் அண்ணாவுக்கு ஆரவார வணக்கம்! 

எம் தமிழினம் தலை நிமிரத்
தலைவர் பெற்ற பெருவரமே -
எங்கள் தளபதியாரே
சிரந் தாழ்த்துகிறேன்.
 
நாற்பதும் நமதே 
தோற்பதும் உமதே என்று 
இலையைக் குலைநடுங்க வைத்த,
தாமரையைத் தலைகுனியச் செய்த,
இரண்டாம் ராஜராஜன் போல்
இரண்டாம் கலைஞர், நம் தளபதி

அழகிய பூக்களைப் பிடிக்கும் – சில
அரசியல் பூக்களைத்தான் பிடிக்காது
தாமரை பூக்கும் தடாகம் அல்ல தமிழ்நாடு
இப்போதும்… தமிழ்நாட்டில் பூக்கள் மலர பொடா இல்லை  
எப்போதும்…. தாமரை மலரவே தடா என்று
தடாலடி காட்டிய தைரியத் தலைவர்
எங்கள் தளபதி

மூன்றாவது அணியின்
மூலகர்த்தா. 
தேசிய அரசியலில் 
வீசிய புயல்.

தமிழ்நாட்டிலிருந்தே
தில்லியை ஆளும் தீர்க்கம்.
இனமான அரசியலின்
தன்மானத் தொடர்ச்சி.
இப்படித்தான் தொடரும்
நம் தளபதியாரின்
சாதனை நிகழ்ச்சி.

வெள்ளுடை வீரனாய் யெனா நகரினுள்
நுழைந்த வெற்றி வீரன் நெப்போலியன் போல்
வெள்ளுடைச் சீலராய்த் தலைநகரைப் புரட்டிப் போட்ட
தமிழகத்தின் வரைபடமே!
தமிழர்களின் திரவியமே!

திருவண்ணாமலையிலிருந்து
திக்கெட்டும் புகழும்
தளபதியாருக்கு ஒரு மகிழ் வணக்கம்!

எனக்கான தலைப்பு - “கலைஞரின் சிறப்பு”
தொல்காப்பியப் பூங்கா படைத்த
ஒல்காப் புகழ் தலைவரே!
தமிழின் தங்க இலக்கியமாம்
சங்க இலக்கியத்துக்கு 
சாகாத ’சங்கத்தமிழ்’ சமைத்த
சாதனைத் தலைவரே!
திருவள்ளுவத்துக்கு நுரைபொங்கும் உரைவளம் தந்து
வள்ளுவனுக்குக் கோட்டம் வனைந்து
நிலம் ஜெயித்த தீப்புலவன் திருவள்ளுவனுக்குக்
கடல் ஜெயித்து வர
கன்னியாகுமரியில் நின்றகோலம் தந்த
கன்னித்தமிழ்க் காவலரே!
ஐம்பெருங்காப்பியங்களில் தோய்ந்து
அதைப் பாமரனும் ரசிக்கும்படி
நாடகத்தமிழாய் நயம்பட படைத்த
எங்கள் தென்னாட்டு ஷேக்ஸ்பியரே!
உங்களைப் பத்தாயிரம் முறை வணங்குகிறேன்
அது பத்தாது என்பதால் 
மீண்டும் மீண்டும் வணங்கி மகிழ்கிறேன்.

உமக்கான சிறப்புக்களைச்
சொல்லச் சொல்லப் புன்சிரித்துச்
சிலிர்த்துக் கிடக்கிறது தமிழ்.
உம்மிடத்தே முன் நெற்றி
முத்தம் பெறாத
என் முதல் அரசியல் கள வெற்றி
கடல் மழை போலெனக்கு!

பாராளுமன்றத்தின் முதல் நாளில்
கோபாலபுரத்தின் மாடியில்,
உம் காலடியில் அல்லவா நானிருந்தேன்.
உம் மானசீக வாழ்த்தைப் பெற்றுத்தானே
என் கன்னிப் பேச்சை சபைக்களித்தேன்!

சோம்பேறி, கனவு காணும்போது கூட
கடைக்காரனைப் பார்த்து
உரித்த வாழைப்பழம் இருந்தால் கொடு என்பது 
போலத்தான் கனவு காண்பான்… என்று
சுயமொழி சொன்ன சுயமரியாதைத் தலைவரே!

மீண்டுமொரு ராஜ வணக்கத்தை
நீர் துயிலும் திசைநோக்கி திகைப்போடு 
சமர்ப்பித்து விட்டு
சமாதானமடைகிறேன்!

ஐம்பெருங்காப்பியங்களே
தலைவர் கலைஞரின்
ஐம்புலன்கள்….
அவரின் ஒவ்வொரு புலனும் 
ஒவ்வொரு காப்பியம்
அதனால்தான் அவர் வாவென்று சொன்னதும்
கைகட்டி அன்போடு
வந்துநின்றது தமிழகம்!

தலைவர் கலைஞர் யார்?

காலப்பாம்பு 
தன் சட்டையை உரித்துக் கொள்ள
ஒரு எரிமலை வெப்பம் தேவைப்பட்டது.
அந்த வெப்பத்தைக் 
கரண்டியில் அள்ளி வராமல் 
வண்டியில் வாரி வந்த 
திருக்குவளை தீரர்!
பகுத்தறிவு புரட்சிக்கு…
மூடநம்பிக்கை வீழ்ச்சிக்கு…
தமிழ்மொழி வளர்ச்சிக்கு…
சுய மரியாதை எழுச்சிக்கு…
தமிழ்க்குலத்தின் உயர்வுக்கு…
ஆரம்பத்தில் உழைத்தவர் அண்ணா
கடைசிவரை உழைத்தவர் கலைஞர்!

வீசும் காற்றுக்குக் கூட
விடுமுறையுண்டு -
ஆனால், தலைவர் கலைஞருக்கோ
உழைப்பே உணவு!
களைப்போ கசப்பு!

தலைவர் கலைஞர் யார்?

நகம்வெட்டவே 
தயங்கிய சமூகத்திற்கு 
முகம் மாற்றியவர்
முத்தமிழ் அறிஞர் கலைஞர்!

பஞ்சைகளாய்
பராரிகளாய்க் கிடந்த மக்களை
நெஞ்சை நிமிர்த்தி நடைபோட வைத்தவர்!

குனிந்து குனிந்தே
கூன் விழுந்த தமிழர்களை
இமயம்போல் எழுந்து நின்று 
போராடத் தூண்டியவர்!

நல்ல தலைமையில்லாமல்
நலிந்துகிடந்த
உலகத் தமிழனைத் உயர்த்திப் பிடித்து
ஏற்றம் தந்த தமிழினத் தலைவர்!

தலைவர் கலைஞர் யார்?

அரை நூற்றாண்டுகால இந்திய
அரசியலின் அடையாளமாய்த் திகழ்ந்தவர்!

அந்தக் கால சாணக்கியரைவிட
இரண்டு மடங்கு சிந்தித்ததால்
தற்கால அரசியல் சாணக்கியரானவர்!

புராணம் பேசி 
புளுகிக் கொண்டிருந்த
திரைப்படத்தைச் 
சுமூகமாகச் சமூகம் பேச வைத்த 
கலைவித்தகர்!

இலக்கியம் என்பது எட்டாக்கனியாக
இருந்ததை மாற்றி
அதை எளிமையாக்கி
எல்லோருக்கும் பட்டா போட்டுக் கொடுத்த பாட்டாளி!

தலைவர் கலைஞர் யார்?
 

திருக்குவளையில் 
உதித்திட்ட அதிசயம்… 
தார் ரோட்டில் கிடந்த அரசியலைத்
தேர்மேல் ஏற்றித் தலைநிமிர்த்த,
ஈரோட்டில் பாடம் படித்த
ஈடு இணையில்லாப் போராளி!
சாஞ்சிக் கிடந்த சமதர்மத்தைக்
காஞ்சித்தலைவனோடு சேர்ந்து
தூக்கி நிறுத்தியதோர் பேரொளி!

தன் பேனா என்னும்
தன்னிகரில்லா ஆயுதம் ஏந்தினார்…

புழுத்துக் கிடந்த பொய்மை பொசுங்கியது
முளைத்துக் கிடந்த மடமை பொசுங்கியது
வருணாசிரமம் என்னும் வஞ்சம் பொசுங்கியது
சூழ்ந்து கிடந்த சூழ்ச்சி பொசுங்கியது
கட்டி வைத்திருந்த கைவிலங்கு பொசுங்கியது
அதர்மத்தின் அடிப்படை பொசுங்கியது
அனைத்தையும் பொசுக்கிவிட்டு
அரசியல் செய்ய வந்தார்
அன்றுமுதல் சமதர்மம் என்னும் 
சூரியன் ஒளிர்ந்தது
தமிழர் மானம் மிளிர்ந்தது!

சோம்பலைச் சாம்பலாக்கிய சரித்திரமே...
எங்கள் நியூரான்களில் தளபதியின் உருவில் 
நிலைத்துக் கிடக்கும் பொற்புதையலே...

உங்களின் செம்மாந்த சிறப்புகள்
ஒன்றா இரண்டா? 

மனிதனை மனிதனே சுமக்கும்
கை ரிக்சா முறையை….
இதயம் வலிக்க இழுத்த
ஏழையின் துயரை….
தன் துயரமாக எண்ணி
இதயம் கசிந்து
அந்தக் கொடுமையை
அடியோடு ஒழித்த அருமருந்தல்லவா நீர்?

லட்சோப லட்ச தொண்டர்களில்
தன்னை முதல் தொண்டனாகக் கருதியே
கடைசிவரை கடமையாற்றிய தமிழ்க் கற்கண்டல்லவா நீர்?

உலகெங்கும் உள்ள
பத்துக் கோடி தமிழருக்கும்
பற்றுக்கோடானவரே... 
எம் பதிற்றுப் பத்தே...

சாமானியனால் தமிழ் சமைக்க முடியும்
சாமானியனால் சமூகத்தை மாற்ற முடியும்
சாமானியனால் முட்டாள்தனங்களை 
முடித்துவைக்க முடியும்
சாமானியனால் சாதிபேதங்களுக்குச் 
சம்மட்டி அடிகொடுக்க முடியும்
சாமானியனால் சனாதனத்தைச் சாய்க்க முடியும்
சாமானியனால் அரசியல் புரட்சிக்கு வித்திட முடியும்
சாமானியனால் எதையும் செய்யமுடியும் 
வாழ்வில் உய்ய முடியும் எனத்,
தன் வாழ்க்கைப் பாடத்தினால்
நம்பிக்கை விதைகளை விதைத்த வீரத் திருமகனே ...

பூமியெங்கும்
சல்லடை போட்டுத்
தேடினேன் -
உமக்கு நிகர் நீரே!

நிலமெல்லாம் 
ஒற்றாய்ந்தேன்
வானெல்லாம் 
வானூர்ந்தேன்
கடலெல்லாம் 
வலை வீசினேன்
மலையெல்லாம் 
ஊடுருவினேன்
எங்குமில்லை
உம்மைப் போல்
மங்குதலில்லாத
பொங்கு புகழ் கொண்ட
உன்னதத் தலைவர் இன்னொருவர்!

தென்பாண்டிச் சிங்கம் தீட்டிய பெருந்தகையே!

தீ எரிந்தால்
தீர்ந்துவிடும்
மின்னல் வெட்டினால்
முடிந்திடும்
இடி இடித்துவிட்டால்
அமைதியாகும்
காற்று வீசினால்
ஓய்ந்துவிடும்
எங்கள்  தானைத் தலைவரே -
நீங்கள் மட்டுந்தான்
எதிலும்
முடிவற்ற தொடக்கம்!
நீங்கள் மெரினாவில் மட்டுமல்ல
எங்களுக்குள்ளும் அடக்கம்!

சங்கத்தமிழ் தந்த சான்றாண்மையே!
தமிழைச் செம்மொழியாக்கிய தகைமையே!


எழுத்தைத் தொட்டீர் -
இலக்கியத்துக்கே
கலங்கரை விளக்கமானீர்!
பகுத்தறிவைத் தொட்டீர் -
இந்திய இங்கர்சாலாய்
இறுதிவரை இமயல்போல் உறுதிகாத்தீர்!
பேச்சைத் தொட்டீர் -
நாடு முழுவதும் டெமஸ்தனீஸாக நடைபோட்டு
நாவன்மைக்கு உதாரணமானீர்!
அரசியலைத் தொட்டீர் -
தூய்மை அரசியலையும்
துணிச்சல் அரசியலையும் முன்னெடுத்து 
அகஸ்டஸ் மன்னனிவன்
எனும் அதிசயத்தை நிகழ்த்தினீர்!
ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தீர்!
எளியவர்களின் பசிக்கும் கல்விக்கும்
வாழ்வாதாரத்திற்கும் வழிசெய்து கொடுத்து
ஏழைகளின் ஏந்தலானீர்!
நாளைய இளைஞருக்கு
நம்பிக்கைக் கீற்றானீர்!
எங்கே   
பூமிக்குள் ஒருமுறை 
புரண்டு படுத்திடுங்கள் -
எங்கள் ஓய்வறியா உண்மைத் தலைவரே
பொன்னாகிப் போகட்டும் இந்தப் பூமியும் !

 ஐந்துமுறை தமிழகத்தையும்
ஆயிரமாயிரம் முறை தமிழையும்
ஆண்ட என் உயிர் மூச்சே
உமக்கு நிகர் நீரே!

அஞ்சுகத்தம்மாள் பெற்றெடுத்த அருந்தவ ஆச்சரியமே!
முத்துவேலர் கண்டெடுத்த அபூர்வ நித்திலமே!

ஆயிரங்கால் பாய்ச்சலில்
அகிலம் அளந்தவரே!
லட்சம் சிறகு வீசலில்
வானம் கடந்தவரே!
கோடித் துடுப்பு அசைப்பில்
சாதாரணமாய்ச்
சாகரம் குடித்தவரே!
அறியாமை பாறை பிளக்க
நூறாயிரம் ஜெலட்டினாய்
வீரியமாய் வெடித்தவரே!
பல்லாயிரம் தும்பிக்கை பலத்தில்
சொல்லாயிரம் வில்லாயுதமாக
ஏந்திய நாத்திக நாயகரே !

நீங்கள் இல்லாதிருந்திருந்தால்
டால்மியாபுரம் எப்படி கல்லக்குடியாகக் கருவுற்றிருக்கும்?
சமத்துவபுரம் எப்படி சாத்தியப்பட்டிருக்கும்?
உழவர் சந்தை எப்படி உருவாகியிருக்கும்?
பாரதிதாசன், மனோன்மணியம் சுந்தரனார், பெரியார்
பல்கலைக்கழகங்கள் எப்படி பிறந்திருக்கும்?
ஆசியாவிலேயே முதன்முறையாகக் கால்நடைக்கென்று
ஒரு பல்கலைக்கழகம் எப்படி உதித்திருக்கும்?
பெண்ணுக்குச் சொத்துரிமை எப்படிக் கிடைத்திருக்கும்?
தாய்த் தமிழ் கோவிலுக்குள் எப்படி நுழைந்திருக்கும்?
இட ஒதுக்கீடு எப்படி நிலைத்திருக்கும்?
சமூக நீதி எப்படி சாத்தியப்பட்டிருக்கும்? 
மொத்தத்தில்
நீங்கள் இல்லாதிருந்திருந்தால்
தமிழ்நாடு எப்படித்
தமிழ்நாடாக இருந்திருக்கும்?


சாமானியனாகப் பிறந்து 
சரித்திர நாயகனாய்
உலக வரலாற்றில் நிலைத்த, 
எம் உதிரத்தில் கலந்த 
திரு உருவே -

இருந்திருக்க வேண்டும் நூறாண்டுகள்  எம்மோடு!
என்றுமே என் உணர்வும், உயிரும் உம்மோடு!

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *