“வெற்றித் தமிழர் மகளிர் பேரவை” சார்பில் நடைபெற்ற, “திருக்குறள் திருவிழாவில்”, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆற்றிய உரை!

"வள்ளுவர் எங்கள் அடையாளம் ! 
திருக்குறள் எங்கள் அறிவாழம்!" 
அன்பில் சிறந்த தாயென இனிமையாகக் குடிமக்களுக்கு வள்ளுவனுடைய முப்பாலில் சுட்டிய அத்தனை வழிவகையிலும் சாலப் பரிந்து, செங்கோல் நீதி வழுவாது அரசுடைமையாற்றி, இன்றைக்கு நீள்துயில் கொண்டிருக்கின்ற முத்தமிழ் அறிஞருக்கு, எப்பொழுதும் என் நெஞ்சில் நிறைகின்ற அவருக்கு, இந்த அவையில் முதலார்ந்த என் நினைவு வணக்கம். 
திருக்குறளை தன்னுடைய கண் எனவும், கருத்தெனவும், தான் எழுந்தவுடன் பருகுகின்ற ஒரு வாய் நீரெனவும், ஒரு கவளம் சோறெனவும், எழுதுகோலை எடுத்தபொழுதெல்லாம் எழுதுகின்ற முதல் எழுத்தெனவும் கொண்டிருந்த முத்தமிழ் அறிஞருடைய அடியொற்றி, குறளைத் தான் செல்கின்ற இடமெல்லாம் தன்னுடைய பேச்சில், எழுத்தில், அறிவார்ந்த சபைகளில் முன்னெடுத்துச் செல்லுகின்ற கவிப்பேரரசினுடைய முயற்சியின் ஒரு நீட்சிதான் இந்த நிகழ்ச்சி.
திருக்குறள் குறித்துப் பல்வேறுவிதமான கருத்துகள், ஏன் அது தமிழர்களுடைய அடையாளம் என்று பெருமிதத்தோடு நாம் உணர்ந்து கொள்வதற்கு வேண்டிய நிகழ்வுகள், அதற்கான உணர்வலைகள் இப்படி பலவற்றை இந்த மேடை நம்மோடு பகிர்ந்து கொண்டது. 
திருக்குறளை, திராவிடர்களுடைய அடையாளமாக, ஆரியத்திற்கும், மனு சாஸ்திரத்திற்கும், வருணாசிரமத்திற்கும் எதிரான, ஆவணமாகப் பார்க்கவேண்டும். இனத்தைச் சொன்னது மொழிதான், இனத்தின் மனதைச் சொன்னது மொழிதான் - எனும் கூற்றுக்கிணங்க தமிழ் மொழி என்கின்ற அமுதமான நம் மொழியிலே, திராவிடர்களுடைய சமுதாய, அரசியல், பொருளாதார வரலாற்றுப் பண்பாட்டு வாழ்வியலை, உலகப் பொதுமறையென உலகிற்குத் தந்தது திருக்குறள். மனுவிற்கு, வருணாசிரமத்திற்கு, ஆதிக்க சாதி நாங்களென்று நம்மையெல்லாம் அடக்கி வைத்த அத்தனைக்கும் எதிரான உலகப் பொதுமறையைத் தந்த திராவிடத்தின் முப்பாட்டன் திருவள்ளுவர். 
அந்த முப்பாட்டனுடைய திருஉருவை உலகெங்கும் திரும்பிப் பார்க்கவேண்டும் என்று, குமரியிலே, வாழை மரத்தண்டின், கதளிகரணம் என்கின்ற நுட்பத்தோடும், மெக்சிகோவில் இருக்கின்ற மாயர் கட்டட வகைப்படியும், அதன் சாயலோடும் அதனை நிர்மாணித்தார் முத்தமிழ் அறிஞர். குமரி முனையில் மட்டுமல்ல, திராவிடத்தின் நிலப்பரப்பு அத்தனையிலும் இந்தப் பெருமகனாரின் சிலை நிறுவப்படவேண்டும் என்று, பெங்களூருவிலும் அதனை நிறுவச் செய்தார். குறளுக்குக் குறளோவியம் தீட்டி, எளிய முறையில், ஒவ்வொரு இளைஞனும், யுவதியும் தன்னுடைய இல்லத்திலே குறளைப் படித்துக், கேட்டுத், தெளிந்து உணரவேண்டும் என்று உரை எழுதி, தொடர்ச்சியாக, தன்னுடைய ஆசான் தந்தை பெரியார், பேரறிஞர் வழியாகத், திராவிடத்தைத் தம் நெஞ்சுரம் என்று கொண்டிருக்கின்ற அனைத்து இளைஞர்களுக்கும் கடத்தியவர் கலைஞர். குறள் எவ்வாறு தமிழர்களுக்கான நெறியாக, திராவிடர்களுடைய வாழ்வியலை முன்னிறுத்துகின்ற அந்த முப்பாட்டனுடைய பெட்டகமாக, அந்த வழியிலேயே உலகத்திற்கு ஒரு பொது மறையாக வைக்கப்படுகிறது என்பதை, இன்றைய இளைஞர்கள், யுவதிகள் ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்? இந்த விழா, ஏன் இன்றைக்கு முன்னெடுக்கப்பட வேண்டும்? 
தந்தை பெரியார், முதற்கொண்டு அனைவரும் குறளைக் கொண்டாடினார்கள் என்பதை நாம் அறிவோம். பேராசிரியர்கூட திருக்குறளுக்கு உரை எழுத முனைந்திருக்கின்றார். பேரறிஞர் அண்ணா அதனைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்றார். சிறையிலே பேராசிரியர் பெருந்தகை இருந்தபொழுது "நான் சென்று பார்த்தேன். குறளுக்கு உரை எழுதுகின்ற முயற்சியிலே ஈடுபட்டிருந்தார். அவரைச் சுற்றி, ஒரே வள்ளுவர் மயம்தான். ஒருபுறம் பார்த்தால், பரிமேலழகரின் வள்ளுவர், ஒருபுறம் பார்த்தால், மணக்குடவரின் வள்ளுவர், குழந்தையின் வள்ளுவர், மற்றொரு புறம் பார்த்தால், பரிதியின் வள்ளுவர்." இப்படி அத்தனை பேரும் வள்ளுவர்களாக இருந்தாலும், எந்த வள்ளுவரை அவர் ஆய்ந்து, தேய்ந்து, தெளிகின்றார்? தந்தை பெரியார் சுட்டிய பகுத்தறிவு வள்ளுவரை, முத்தமிழ் அறிஞர் காட்டிய நம்முடைய திராவிடத்திற்கான வள்ளுவரை. திராவிட இயக்க ஆய்வாளர்கள், எது தமிழருடைய அறம்? எது திராவிடர்களுடைய பகுத்தறிவு? எது தமிழர்களுடைய வாழ்வியல் பண்பாடு? எது இவற்றின் சித்திரம்? எனக் குறளில் அறிந்து கொண்டதைத் தெளிகின்றார், தேர்கின்றார் பேராசிரியர். 
அவர் மட்டுமல்ல, திருக்குறளை எத்தனையோ பெருந்தகைகள், நன்மனார்கள் ஆராய்ந்திருக்கின்றார்கள். திருக்குறளில், சொல்லாதது எதுவும் இல்லை என்று சொன்ன மதுரை நாகனார் உள்பட, பலர் ஆராய்ந்துள்ளார்கள். வ.உ.சி, ‘‘திருக்குறள் தமிழர்களுக்கான நன்னெறி, நன்னறம்'' என்கின்றார். ‘‘திருக்குறளை, நன்றாக அறிந்தவர் உள்ளுவரோ, மனுவின் நீதி, குலத்துக்கொரு நீதி'' என்று கேட்கின்றார் மனோன்மணியம் சுந்தரனார். ஜி.யு.போப், ‘‘வள்ளுவர் பிற்படுத்தப்பட்ட மக்களின் குரு'' என்கின்றார். பகுத்தறிவாளன் இங்கர்சால், ‘‘அறிவை முதன்மையாக வைக்கின்ற திருக்குறளை நான் பெரிதும் பாராட்டுகின்றேன்'' என்கின்றார். 
காந்தியடிகளை, காந்தியடிகளோடு மிகுந்த நட்புணர்வு பாராட்டிய லியோ டால்ட்ஸ்டாயை நாம் அறிவோம். தொடர்ச்சியாக இருவரும் கடிதங்கள் எழுதி, தங்களுடைய நட்பைப் பாராட்டி வளர்த்துக் கொண்டிருந்த அந்த ஒரு சூழலிலே, ஒருமுறை ‘‘உங்களுடைய படைப்புகளில் நீங்கள் மிக ஆதாரமாகக், கருவாக வைக்கின்ற, அன்பு, நட்பு, துரோகம், காதல் இப்படி பற்பல குணநலன்களுக்கான அந்தக் கருவை, உங்களுடைய படைப்புகளுக்கான அந்த மையத்தை, அன்புமிக்க டால்ட்ஸ்டாய், நீங்கள் எதிலிருந்து எடுக்கிறீர்கள்?" என்ற கடிதம், காந்திஜியிடமிருந்து டால்ட்ஸ்டாய்க்கு அனுப்பப்படுகின்றது. பதிலுக்கு டால்ட்ஸ்டாய், "நீங்கள் மேற்சொன்ன என்னுடைய படைப்புகளில் நான் சொல்லியிருக்கின்ற, முன்வைத்துள்ள, விவாதித்திருக்கின்ற, வாழ்க்கைக்கான மையக் கருத்தை, உங்களுடைய இந்தியாவில், தமிழ்நாட்டில், தமிழ் மொழியிலே எழுதப்பட்ட திருக்குறளில் இருந்து எடுத்தேன்" என்று கடிதம் அனுப்புகிறார். 
சீகன் பால்குவை நாம் அறிவோம். நமக்கெல்லாம் முதல் தமிழ் அகராதியைத் தந்த, தரங்கம்பாடியில் தங்கியிருந்து, தமிழ் வளர்த்த அறிஞர், சீகன் பால்குவினுடைய தமிழ்ப் பணிக்காக அவரைப் பாராட்டி, இந்தியா எந்தவிதமான பரிசளிப்போ, பாராட்டு விழாவோ எடுக்கவில்லை. அவருடைய தமிழ்த் தொண்டிற்காகக், கல்விப் பணிக்காக, அவரைப் பாராட்டி, இங்கிலாந்தில், இங்கிலாந்து அரசவை அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுக்கிறது. இங்கிலாந்து அரசவையில் அந்தப் பாராட்டுப் பட்டயம் என்று சொல்லப்படுகின்ற சைட்டேசனை (ஊவையவiடிn) அவருக்கு வழங்கி கவுரவிக்க ஆர்ச் பிஷப் ஆப் கேண்டர்பரி வருகின்றார். சீகன் பால்குவைப் பார்த்து, ஆர்ச் பிஷப் ஆப் கேண்டர்பரி, "சீகன் பால்கு, உங்களுடைய பணிக்கான, இந்தப் பாராட்டிற்கான பட்டயம், உலகில் தலைசிறந்த செவ்வியல் மொழியான லத்தீன் மொழியில் எழுதப்பட்டு உங்களுக்கு வழங்கப்படுகிறது'' என்கின்றார். சீகன் பால்கு, அந்தப் பட்டயத்தைப் பெற்றுக்கொண்டு, "மெத்த வந்தனம், மகிழ்ச்சி. உங்களுடைய பாராட்டு எனக்கு மனநிறைவை அளிக்கின்றது. ஆனால், இதற்கான நன்றியுரையை, நான் எந்த மொழியிலே சொல்ல விரும்புகிறேன் தெரியுமா? உலகின் அனைத்து விழுமியங்களையும், அனைத்து விழுமியங்களுக்கான செல்வங்களையும், தன்னிடத்தே கொண்டிருக்கின்ற, உலகின் தலைசிறந்த செவ்வியல் மொழியான தமிழ் மொழியிலே சொல்ல விரும்புகின்றேன்'' என்கின்றார். 
ஆகவேதான் நண்பர்களே, நம் தாய்மொழித் தமிழ் மொழியிலே எழுதப்பட்ட, திராவிடர்களுடைய சமூக, அரசியல், பொருளாதார, பகுத்தறிவு பண்பாட்டுச் சித்திரம் திருக்குறள் என்பதால், வீதிதோறும், தெருமுனைகள்தோறும், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் நடத்தி, திருக்குறளை ஒரு மிகப்பெரிய இயக்கமாக எடுத்துச் சென்றார், தந்தை பெரியார். திருக்குறளை ஒரு கண்டன நூல் எனவும், ஒவ்வொரு திராவிடனுடைய கைகளிலும் திருக்குறள் இருக்கவேண்டும் எனவும், திருக்குறள்தான் நம்முடைய நீதி நூல் எனவும் முழங்குகிறார். 
திருக்குறளை, அவர் முன்னிறுத்துவதற்குரிய காரணங்களாக சிலவற்றை சுட்டுகின்றார், "நான் ஏன் திருக்குறளை, அதனுடைய கருத்துகளைத் தொடர்ச்சியாக, ஒரு அறிவான, நம் சமுதாயத்திற்கான பொதுமறையாக முன்வைக்கிறேன் என்றால், ஒரு பகுத்தறிவுவாதியாக, ஒரு சுயமரியாதைக்காரனாக, திராவிட இயக்கத்தை முன்னெடுத்துச் செல்பவனாக வைக்கின்றேனே அல்லாமல், வேறு எதற்காகவும் இல்லை" என்கிறார். மேலும், ‘‘தமிழ்க் கூறும் நல்லுகத்தைச் சார்ந்தவர்களே, நான் ஒவ்வொரு குறளையும் ஆராய்ந்து, படித்து உங்களுக்குத் தருவது எப்படி என்றால், என் வழியிலே நான் அதனை எப்படி விவரிப்பேன் என்றால், ஒரு நாத்திகனாக விவரிப்பேன்." எனவும் அறிவிக்கிறார். 
நாத்திகன் என்றால், வெறும் கடவுள் மறுப்பாளர் அல்ல. யாருடைய நம்பிக்கையிலும் நாம் அனாவசியமாகத் தலையிடுபவர்கள் அல்ல. நாத்திகன் என்ற சொல்லை, அந்த வார்த்தையை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். நாத்திகன் என்றால், அவன் கடவுள் மறுப்பாளன் மட்டும் அல்ல. அவன் அறிவைக் கொண்டு எதையும் ஆராய்பவன். மதத்தை, முன்னோர்கள் சொன்னதை, இவை இப்படி என்று போட்டு வைத்த அந்த சட்டங்களை, அறிவை மயக்குகின்ற விதி என்கின்ற சொல்லை, அறிவைக் கொண்டு ஆராய்பவன் நாத்திகன். ஆகவேதான், "நான் அறிவைக் கொண்டு ஆராய்ந்து, வள்ளுவரை நம்முடைய திராவிடத்தினுடைய முப்பாட்டனாக முன் நிறுத்துகின்றேன்" என்கிறார் பெரியார்.
ஏன் இந்தத் தலைமுறைக்குத் திருக்குறள் அவசியம்? கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, சி.பி.எஸ்.சி. ஆறாம் வகுப்புத் தேர்வில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது; அது என்ன கேள்வி தெரியுமா? நீ கீழ்சாதி, நான் மேல்சாதி என்கிறது மனுதர்மம். வருணாசிரமத் தருமப்படி, சூத்திரன் என்பவன் எந்தப் படிநிலையிலே வைக்கப்படுகின்றான் என்பதுதான் அக்கேள்வி!
இதற்கு விடையை நீங்கள் எங்கே எடுக்கவேண்டும்? இதற்கான விடையை நீங்கள் திருக்குறளில் எடுக்க வேண்டும். நம்முடைய குழந்தைகளுக்கு, இளைஞர்களுக்கு, யுவதிகளுக்கு திருக்குறளைச் சொல்லித் தரவேண்டும். ஏன் திருக்குறள் இந்த 21 ஆம் நூற்றாண்டிற்கு முக்கியம்? என்பதற்கான காரணங்களை முதலில் அவர்களிடம் கொண்டு செல்லுங்கள். மெக்காலே, தந்த ஆங்கில வழிக் கல்வியில் பயன்பெற்று, முதலாளித்துவக் கல்வியின் மூலமாகத்தான் நான் முனைவர் பட்டம் பெற்று, இன்றைக்கு உங்கள் முன்பாக வாதிடும் திறமை பெற்றிருக்கின்றேன். மறுக்கவில்லை, ஆனால், அந்த மெக்காலே, ‘‘உணர்வால், நிறத்தால், குருதியால் இந்தியர்களாக இருக்கின்றவர்களை, அறிவால், சிந்தனையால் ஆங்கிலேயர்களாக மாற்றவேண்டும் என்பதுதான் எங்களுடைய கல்விக் கொள்கை" என்றவர். "அதனை எப்படி நிறைவேற்றுவது? உலகம் முழுவதும் ஒப்புக்கொண்டிருக்கின்ற, தன்னளவிலே முழுமை பெற்ற ஆங்கில மொழியால் மட்டுமே இதனைச் செய்ய இயலும்" என்றும் சொன்னவர். ஆங்கிலேயருக்கு எப்பொழுதும் அந்தப் பெருமை உண்டு. என்னுடைய சாம்ராஜ்ஜியத்தில் எப்பொழுதும் சூரியன் மறைவதேயில்லை. ஆகவே, என்னுடைய மொழி அத்தனைக்கும் முதன்மையான மொழி என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டு. 
இந்த மனோபாவத்தை எதிர்த்துத்தான் சின்னுவே அச்சுபே எனும் ஆப்பிரிக்க எழுத்தாளர், 
‘‘எங்காவது, எப்பொழுதாவது ஒரு ஆங்கிலேயன் வந்து, சூரியன் அஸ்தமிக்காத தேசத்திற்கு நான் சொந்தக்காரன் என்று பெருமை பீற்றிக்கொள்வான் என்றால், இந்தியர்களாகிய நீங்கள் தலையை நிமர்த்திச் சொல்லுங்கள். ‘‘ஆமாம்! உண்மைதான், ஏனென்றால், கடவுள் இருட்டில் ஒரு ஆங்கிலேயனை நம்புவதற்குத் தயாராக இல்லை என்று சொல்லுங்கள்" என்றார். அத்தகைய கர்வம் மிக்க மெக்காலே, எங்களுடைய முழுமை பெற்ற மொழியான, அனைத்தையும் உள்ளடக்கியதான ஆங்கில மொழியில்தான் இவர்களுக்குக் கல்வி கற்பிக்கவேண்டும். ஏனென்றால், சமுதாயத்திற்கும், முன்னேற்றத்திற்கும் தேவையான அனைத்து அறிவையும் உள்ளடக்கிய எந்த ஒரு நூலும், இலக்கியமும் இந்தியர்களிடம் கிடையாது என்றார். முன்வைக்க வேண்டும் அல்லவா, நம்முடைய வள்ளுவத்தை மெக்காலேவின் முன்! என்ன இல்லை நம் வள்ளுவத்தில்? 
நம்முடைய அகக் கண்ணை, அறிவுக்கண்ணைத் திறந்து, திராவிடருடைய நாகரிகம் என்பது, உலகெங்கிலும் உள்ள அனைத்து நாகரிகங்களுக்கும் முற்பட்ட, முற்போக்கான, பகுத்தறிவு மிக்க, சுயமரியாதை மிக்க, ஆரியத்தால் சுமத்தப்பட்ட அடிமைத்தனத்தை, வருணாசிரமத்தை, மனுதர்மத்தை ஒழிக்கின்ற ஒன்று என்பதை, வாழ்வியல் ஒப்பியல் உண்மைகளோடு சொன்ன முப்பாட்டனை மெக்காலேவின் முன்பாக வைக்கவேண்டும் அல்லவா நாம்! 
எதற்காக நான் திருக்குறளை, திருவள்ளுவரை அவர்களுக்கு எதிராக அல்லது உலகம் முழுவதும் போற்றுகின்ற ஒரு மிகப்பெரிய புரட்சிவாதியாக முன்னிறுத்த விரும்புகின்றேன் என்றால், திருவள்ளுவர் ஒரு பொதுவுடைமைவாதி என்பதால்தான்!
‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" எனும் அந்த ஒரு குறள் போதாதா?
மனுதர்மத்திற்கு, நான் மேல் ஜாதி, நீ கீழ்ஜாதி என்கின்ற அந்த வர்ணாசிரம தர்மத்திற்கு எதிரானவர் நம்முடைய வள்ளுவர். உடலால் உழைப்பதைப் பாவம் என்று தர்ம சாஸ்திரங்கள் இழிவுபடுத்துகின்றன. அதிக ஆண்டுகள் கிடையாது - 100 ஆண்டுகளுக்கு முன்பாக, உழவு, முடி திருத்துதல், ஓடம் செலுத்துதல், துணி வெளுத்தல் - இவையெல்லாம் இழிஜனங்கள் செய்கின்ற தொழில் - பிராமணர்கள் இவற்றை செய்யக்கூடாது என்று தர்ம சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்ற நிலை இருந்தது. இராஜராஜ சோழன் நிலங்களைத் தானமாகக் கொடுத்து, நிலவுடைமையாளர்களாகப் பிராமணர்கள் வந்த பின்பும்கூட, அவர்கள் உழவுத் தொழிலை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. 
1921 ஆம் ஆண்டு மகாத்மா காந்திஜிக்கு தஞ்சாவூரில் இருந்து பிராமணவகுப்பைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் ஒரு கடிதம் எழுதுகிறார்கள். அவர்கள், உழவுத் தொழிலை மேற்கொண்டிருந்தாலும், அவர்களுக்கு அதுகுறித்து எள்ளளவும் கீழ்மையான எண்ணம் இல்லை. அந்த சமயத்தில், அந்தப் பகுதிக்கு விஜயம் செய்த, மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய மகாகுருவான காஞ்சி சங்கராச்சாரியார், "உடலால் உழைக்கின்ற பாவத்தைச் செய்கின்ற இந்த இருவரிடமிருந்து நான் காணிக்கையைப் பெற்றுக்கொள்ள மாட்டேன்" என்று மறுத்துவிடுகின்றார். அதனால், மனம் வருந்திய அந்த இரண்டு சகோதரர்களும் தம் நிலை குறித்துக் காந்திஜிக்குக் கடிதம் எழுதுகிறார்கள், காந்திஜி அதனை மிக வன்மையாகக் கண்டித்து, "எந்தத் தொழிலிலும் யாருக்கும், உயர்வு தாழ்வு கிடையாது" என்று பதில் அனுப்புகின்றார். 
ஆனால், உடல் உழைப்பை, வியர்வைக்கு உடனே கூலியைத் தரவேண்டும் என்கின்ற அதன் பெருமையை, ‘‘மெய்வருத்தக் கூலிதரும்'' என்று முன்வைத்தவர் நம்முடைய திருவள்ளுவர். எந்தத் தொழிலும் பிறப்பினால் நிர்ணயிக்கப்படுவதில்லை. அவரவருக்கான உயர்வு என்பது, அவரவரது மனதில், எண்ணத்தில் இருக்கிறது என்பதைத்தான், "வெள்ளத் தனையது மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு" என்றார். உள்ளத்தை மட்டும் அளவுகோலாக வைத்தவர் வள்ளுவர்தான். ஒரு பொதுவுடமைவாதியாக, சமதர்மவாதியாக, மனுஸ்மிருதி, வர்ணாசிரமம் சொல்லுகின்ற அனைத்திற்கும் எதிராக, நம்முடைய திராவிடத்தைப், பகுத்தறிவை, சுயமரியாதையை முன்வைப்பவராக வள்ளுவர் இருப்பதினால்தான், அவரை நாம் நம் திராவிடப் பூட்டன் என்கின்றோம். 
வள்ளுவத்திலிருந்தே முத்தமிழறிஞர் கலைஞர், நம் கட்சிக்கான செல் நெறியை எடுக்கின்றார். ரஷ்யாவிலிருந்து வெளிவருகின்ற ‘பிராவ்தா' என்கிற பத்திரிகை ஒருமுறை தலைவர் கலைஞரிடம், "உங்களுடைய கட்சியினுடைய செல் நெறிகள் எவை? என்று கேள்வி கேட்கிறது. கலைஞர் அதற்கு, ‘‘சமுதாயத்திலே பகுத்தறிவு, சமத்துவம். பொருளாதாரத்திலே சமதர்மம். அரசியலிலே ஜனநாயகம்.'' எனப் பதில் அளிக்கிறார். மேற்சொன்ன செல் நெறிகள் அனைத்தையும் நாம் அறம், பொருள் எனும் அதிகாரங்களில் பார்க்கலாம்.
தந்தை பெரியார், எதற்காக குறளை நான் இன்றைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்கிறேன் என்பது குறித்து, "100 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கும் டெக்ஸ்ட் புத்தகங்கள் வாங்கிப் படித்து மடையர்களாவதை விட, 3 அணாவுக்கு திருக்குறள் வாங்கிப் படித்து அறிவாளியாவது மேல் என்று தான் கூறுகிறேன். திருக்குறள் ஒன்றே போதும். உனக்கு அறிவு உண்டாக்க; ஒழுக்கத்தைக் கற்பித்துக் கொடுக்க; உலக ஞானம் மேம்பட. அப்படிப்பட்ட குறளைத்தான் நாம் இதுவரை அலட்சியப்படுத்தி வந்திருக்கிறோம். ஒரு தாசில்தார், ஒரு மாஜிஸ்ட்ரேட், ஒரு நீதிபதி, ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இவர்களுக்குக் கூட திருக்குறள் ஒன்றே போதும் தமது வேலையை சரியாகச் செய்ய. அவர்களை உத்தியோகத்துக்கு தேர்ந்தெடுக்க, பரீட்சை வைக்கும் பொது கூடத் திருக்குறளிலிருந்துதான் கேள்விகள் கேட்கப்பட வேண்டும். திருக்குறளை நன்கு உணர்ந்திருந்தால் போதும் என்று அவர்களுக்கு உத்தியோகம் வழங்கப்பட வேண்டும்... அனைவரும் திருக்குறளைப் படித்து அறிவுள்ள மக்களாகி இன்புற்று வாழ வேண்டுமென்பதுதான் எனது ஆசை" என்கிறார்.
‘‘ஒரு திருடன் களவாடினான் என்றால் அவன் எந்த நட்சத்திரத்தில் களவாடினான் என்பது சப்-இன்ஸ்பெக்டருக்குத் தெரிய வேண்டியதில்லை. அல்லது இமயமலையின் உயரம் என்ன வென்பதும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டியதில்லை. ஒரு சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கோ ஒரு தாசில்தார் வேலைக்கோ பி.ஏ. பட்டம் எம்.ஏ. பட்டம் தேவையில்லை. குறள் படிப்பே போதுமானது.'' என்று மேலும் அழுத்தமாக அவரது பாணியில் அறிவிக்கின்றார்.
திருக்குறளை எப்படி படிக்கவேண்டும்? யார், எந்தக் கண்ணோட்டத்தோடு குறளைப் பார்த்து எவ்வாறு தெளிவு கொண்டிருக்கிறார்கள் என்கின்ற திராவிட இயக்க ஆய்வாளர்களின் கண்ணோட்டத்தோடு படிக்கவேண்டும். எம்மனார் பல பேர் நான் முன்பே சுட்டியதைப்போல, உரைகள் பல எழுதியிருக்கலாம். ஆனால், எது சரியான உரை என்பதைத் தெளிதல் வேண்டும். பரிமேலழகருடைய உரையை நாம் ஒப்புக் கொண்டிருக்கின்றோமா? ஒப்புக்கொண்டாரா, நம்முடைய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்? 
அய்யா மு.வரதராசனார், பாரதிதாசனிடம் சென்று, ‘‘நான் திருக்குறளுக்கு உரை எழுதலாம் என்று இருக்கிறேன்'' என்கிறார். "என்ன பாங்கிலே உரை எழுத உத்தேசம்?'' எனக் கேட்கின்றார், பாரதிதாசன். "பரிமேலழகருடைய பாணியையொட்டி, எளிமையாக எழுதுவதாக உத்தேசம்'' என்கிறார் மு.வ. "அதற்கு ஏன், நீர் பரிமேலழகர் பாணிக்குப் போகவேண்டும்? சும்மாவே இருக்கலாமே! உன்னுடைய கருத்தை எழுதலாமல், ஏன் அவருடைய பாணிக்குச் செல்லவேண்டும்?'' என்று பாரதிதாசன் பட்டென்று பதில் சொல்லுகின்றார். 
ஏனென்றால், வடநூல் கொண்டே வள்ளுவர் குறளை இயற்றினார் என்ற எண்ணம் ஏற்படும்படி உரை செய்துள்ளார் பரிமேலழகர். எடுத்துக்காட்டு ஒன்றை இயம்புகின்றேன் என்கிறார் பாரதிதாசன், ஒழுக்கமுடைமை குடிமை என்பதற்கு உரை சொல்லுகின்றார் பரிமேலழகர் - "தத்தம் வருணத்திற்கும், நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கந்தன்னை உடையராதல். இதுதானா உரை?" என்று கேட்கின்றார் பாரதிதாசன். 
"பரிமேலழகர் செய்த உரையில், தமிழரைக் காணுமாறு இல்லை தமிழரின் எதிர்ப்புறத்தில் உள்ள இனத்தார் மேன்மையின் செருகலே கண்டோம்! ஆகவே, அவ்வுரை வேண்டாம் என்கின்றோம்" - இது பாரதிதாசன் கூற்று. தந்தை பெரியார் சொன்னதைப்போல, ஒரு மளிகைக் கடைக்குச் சென்று, யார் வேண்டுமானாலும், என்ன பொருட்களை வேண்டுமானாலும், அவரவர் தேவைக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். நாங்கள் பகுத்தறிவுவாதிகள், திராவிடத்தை முன்னெடுத்துச் செல்பவர்கள். எங்களுக்கு வேண்டியவற்றை வள்ளுவர் கொடுத்த திருக்குறளில் எடுத்துக் கொள்கிறோம். உங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். அல்லது விட்டுவிடுங்கள், என்கிறோம். பெரியார் திருக்குறளிலே அவருக்கு ஒவ்வாத கருத்துகளையும் முன்வைத்து முரண்பட்டார். 
இது பெண்கள் முன்னெடுக்கின்ற விழா. பெண்களாகிய நாம், அதிலும் குறிப்பாக தமிழ்ப் பெண்களாகிய நாம், அறிவாயுதம் ஒன்றை, மிகக் கூர்மையாகப், பகுத்தறிவு என்கிற ஆயுதத்தைப் பயன்படுத்தவேண்டும் என்பதைப் பெரியார் சுட்டிக்காட்டி, திருவள்ளுவரிடம் சில இடங்களில் மாறுபடுகின்றார். பெண்ணியவாதிகள் பலரும் முன்வைத்த கேள்விகள்தான் இவை - ஒரு குறிப்பிட்ட பெண்களைப் பரத்தையர் எனச் சமுதாயத்தில் இருந்து ஒதுக்கமாக விலக்கி வைத்து, ‘பரத்தையர் பிரிவு’ என்று சொல்லுகின்ற வள்ளுவர், பரத்தையரைச் சென்று சேருகின்ற ஆண்களை மட்டும் ஏன் தனிப்பட்ட முறையில், ஊரியன், இழி மகன் என்று மட்டுமே சுட்டுகின்றார்? ஏன் அவர்களையெல்லாம் ஒட்டுமொத்தமாக ஒரு பிரிவாகச் சுட்டவில்லை? வரைவின் மகளிர், இழிமகளிர் என்றெல்லாம் ஒட்டுமொத்தமாகச் சில பெண்களைக் கட்டம் கட்டிய திருவள்ளுவர், ஏன், பரத்தையரைச் சென்று சேர்கின்ற ஆண் மக்களை மட்டும், தனியராகவே இழிபடுத்துகின்றார்? அவர்களை ஏன் ஒரு தனிப்பட்ட பிரிவாக அவர் சுட்டவில்லை என்று பெண்களாகிய நாம் கேள்வி கேட்கவேண்டும். 
"அச்சமும், நாணமும், மடமும் முன்னிறுத்துதல் நிச்சமும் பெண்பார்க்கு உரிய" என்று தொல்காப்பியர் சொன்னால், அப்படியெனில், ஆண்களுக்கு எங்கே இலக்கணம்? ஏன் தொல்காப்பியர் அதனைச் சுட்டவில்லை? என வெற்றிப் பேரவையினுடைய மகளிர் அனைவரும் கேள்வி கேட்கவேண்டும். "பெண் வழிச் சேரல்", "வாழ்க்கைத் துணைநலம்" என்கின்ற அந்த இரண்டு அத்தியாயங்களை நீக்கிவிட்டுப் பாடத் திட்டத்தில் வையுங்கள் என்ற பெரியாரின் குரலை எதிரொலிக்க வேண்டும், கேள்வி கேட்பதுதான் அறிவாயுதம். 
இதுதான் திராவிட இயக்க ஆய்வாளர்களின் பார்வை! கொடுக்கப்பட்ட எதுவென்றாலும் சரி, ஆய்ந்தறிந்து, கேள்வி கேட்டுத் தெளிந்து, பின் ஒப்புக் கொள்ள வேண்டும்! பாரதியார் அன்று நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்தில், "தமிழைவிட வேறொரு பாஷை சுகமாக இருப்பதில் எனக்கு சம்மதம் கிடையாது. தமிழனைவிட வேறொரு ஜாதியான் அறிவிலும், வலிமையிலும் மேம்பட்டவனாக இருப்பதைக் கண்டால் என்னுடைய மனம் வருத்தமுறுகிறது. தமிழச்சியைக் காட்டிலும் வேறொரு ஜாதிக்காரி அழகாக இருப்பதைப் பார்த்தால், என் மனம் புண்படுகிறது" என்றார். 
அழகு என்பது அறிவாயுதம்தான் இங்கு. திருக்குறளையும் கேள்வி கேட்ட, பெரியாருடைய பார்வையோடு, திராவிட இயக்க ஆய்வாளர்களுடைய வழியில் நாம் அறிவாயுதமாகிய திருக்குறளை கொண்டு சென்று சேர்க்கவேண்டும். வருணாசிரமவாதிகளாகட்டும், மனுதர்மவாதிகளாகட்டும், வள்ளுவருக்கு காவி வர்ணத்தைப் பூசுகின்ற மதவாதிகளாகட்டும், அவர்கள் முன் வைக்கின்ற மடமைக்கு எதிர்தரப்பாக நாம் வைக்க வேண்டிய அறிவாயுதம் - நம்முடைய திராவிட நீதி நூலான திருக்குறள் மட்டும்தான். 
திருக்குறளை உயர்த்திப் பிடிப்பதன்மூலம், அதிலே இருக்கின்ற அத்தனை விஷயங்களையும், நமக்கான திராவிட கண்ணோட்டத்தோடு பொருத்திப் பார்ப்பதன்மூலம், 21 ஆம் நூற்றாண்டிற்கான சவால்களை நாம் மிகச் சரியாக சந்திக்க முடியும். மிகச் சரியாக திராவிட இயக்க ஆய்வாளர் குணா, ‘‘வள்ளுவத்தின் இடிபாடுகளின் மீதுதான் பிராமணீயம் வானாளவப் பறக்கிறது'' என்று சொல்லியிருப்பார். திருவள்ளுவர் ஓரிடத்தில்கூட, ‘‘பிராமணர்'' என்ற வார்த்தையை உபயோகிக்கவில்லை. பார்ப்பான் என்கின்ற வார்த்தைதான் அவர் உபயோகித்த வார்த்தை. கடவுள் என்ற சொல்லும் குறளில் கிடையாது. தமிழர்களாகிய நாம் காப்புக் கடவுளையும், ஏற்புடைக் கடவுளையும் வழிபடுகின்ற மரபிற்குச் சொந்தக்காரர்கள் அல்ல. தமிழர்களாகிய நாம், ஞாயிற்றை, திங்களை, மாமழையைப் போற்றுபவர்கள், வணங்குபவர்கள்! அந்த வழியிலே, திருக்குறளை, கலையோடு, இசையோடு, ஆடலோடு, பாடலோடு போற்றுவோம், கொண்டாடி மகிழ்வோம்! 

                                         * * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *