மூன்றாம் உலகப்போர் என்ற புதினத்தின் மூலம் மேற்குத் தொடர்ச்சி மலையையும், இந்த மண்ணையும் சற்றே புரட்டிப் போட்டிருக்கின்ற கவிஞர் வைரமுத்து அவர்களுடைய இந்த புத்தகத் திறனாய்வு விழாவில் பங்கேற்பதில் மிக மகிழ்ச்சி. மூன்றாம் உலகப்போர் எனும் இப்புதினம் உலகின் பிறமொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டபின்பு, எம் மண்ணினுடைய இந்தக் கருப்புக் கவிஞன் இதே போல உலக அரங்கத்தில் அமர்ந்திருக்க, அவரிடத்தே சீனாவைச் சேர்ந்தவர்களும், ஜப்பானைச் சேர்ந்தவர்களும், ஐரோப்பியர்களும், ஆங்கிலேயர்களும் கையெழுத்து வாங்குகின்ற காலம் வெகுதூரத்திலில்லை. அதை மெய்ப்பிக்கும்வண்ணம், இந்த மூன்றாம் உலகப்போர் வெளிவந்திருக்கிறது. இந்த நாவல் வெயிடப்பட்ட ஐம்பத்திஐந்து நாட்களுக்குள் ஐந்தாவது பதிப்பைக் கண்டிருக்கிறது. தமிழ்ப் பதிப்பக உலகில் இப்படி ஒரு சாதனையைக் குறுகிய காலத்தில் வேறு எவரும் எட்டியதில்லை. அந்த பெருமைக்குக் கவிஞர் உரியவர் என்றால் அந்த பெருமையை ஊர் கூடிப் பங்குபோட்டு, உளமாற மகிழ நாம் அனைவரும் இங்கு கூடியிருக்கின்றோம். ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த எழுத்தாளரும், சிறையிலிருந்த போது உலகின் முதல் நாவல் என்ற கருதப்படுகின்ற "டான் குவிக்சோட் டி லா மான்ச்சா" வை எழுதிய டான்குவிக்சட் (Don Quixote) தொடங்கி, Ulysses எனும் மகத்தான நாவலை எழுதிய James Joyce வரை, தலைசிறந்த நாவலாசிரியர்களின் பலமே - அவர்களது இலக்கிய மொழி "என்ன சொல்கிறது" என்பதைவிட "என்ன செய்கிறது" என்பதுதான். இந்த மண்ணிலுள்ள மக்களுடைய சுவாசத்தை தன்னுடைய மூச்சிலும், அவர்களுடைய பேச்சு மொழியை தன்னுடைய ரத்தத்திலும், அவர்களுடைய கவுச்சி மணத்தைத் தன்னுடைய இலக்கிய மொழிநடையிலும், பொதிந்திருக்கின்ற கவிஞரது மூன்றாம் உலகப் போர் என்கின்ற புதினம் என்ன சொல்கிறது என்பதை நான் உங்களிடையே இப்போது பகிரலாம். ஆனால் அது என்ன செய்கிறது என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் தனியே அமர்ந்து தங்களுக்காகவே பயணித்து, அதனைப் படித்துப், பின் அனுபவித்துப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் இது வெறும் அச்சுகோர்த்து, எழுத்துவடிவிலே கொடுக்கப்பட்ட புத்தகம் மட்டும் அல்ல. இது உங்களுடைய முப்பாட்டன்களுடைய வீச்சறிவாள்; இது உங்களுடைய பூட்டிகளால் கட்டிவைக்கப்பட்ட களத்துமேட்டுக் கம்பு; இது உங்களுடைய அப்பத்தாவினுடைய அந்த ஆட்டு உரல்; இது உங்களுடைய அம்மத்தாவின் சுருக்கு பை; இது உங்களுடைய அக்காமார்களும், மதனியார்களும் ஒருவருக்கு ஒருவர் முழங்கையால் குத்திக்கொள்ளும் உலக்கை; இது உங்கள் தகப்பன்மார்களின் குழுதாடி; இது உங்களது ஆத்தாமார் தங்களுடைய கண்ணீரையும், மகிழ்வையும் மசாலாவோடு சேர்ந்து அறைத்த அம்மிக்கல்லும், திருகைக்கல்லும்! இது தகவல்களை மட்டும் முன்னெடுத்து செல்கின்ற, ஆராய்ச்சிகள், முடிவுகள் மட்டுமே நிரம்பிய தொகுப்பு அல்ல. இது முழுக்க முழுக்க இந்த மண்ணிலே பிறந்து, இந்த மண்ணிலே வாழ்ந்து, இந்த மண்ணிலே நடந்து, படுத்து, உழன்று கொண்டிருக்கின்ற, இன்னமும் இந்த மண்ணுக்காக உயிர் கொடுக்கவும் சித்தமானதொரு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்ற வேளாண் விவசாயி ஒருவருடைய வாழ்க்கைப் பதிவு. வேளாண் விவசாயி என்றால் அதில் நீங்களும் அடக்கம், நானும் உண்டு. எந்த புத்தகத்திற்கும் நீங்கள் அதற்குரிய முழுமையான விலை கொடுத்து வாங்க முடியாது. நீங்கள் கொடுப்பதெல்லாம் அதற்கான அச்சுக் கூலியும், காகித விலையும் மட்டும்தான். குறிப்பாக, இந்த மூன்றாம் உலகப்போர் புதினத்திற்கான விலை - வாங்கிய காகிதத்திற்கும், அச்சுக்கூலிக்கும்தான். கவிஞர் நம் முன்பு இதன் மூலம் வைத்துள்ள வாழ்க்கை விலையற்றது. மதிப்பு மிக்கது. அந்த வாழ்க்கை மூலம் சொல்லப்பட்டிக்கின்ற செய்தி இந்த உலகம் முழுவதற்குமானது! இந்தியா என்பது ஒரு வல்லரசு என்று நாம் பல்வேறுவிதமாக அறிவித்தாலும், நாம் இன்னும் வல்லரசு கிடையாது. நாம் இன்று வரை வளர்கின்ற, ஒரு மூன்றாம் உலக நாடு தான் என்பதைத் தான் இந்தப் புதினம் இரத்தமும், சதையுமான எளிய, உண்மையான மனிதர்கள் மூலம் உறுதிப் படுத்துகின்றது. ஒரு மூன்றாம் உலகப் பிரஜைக்கான உறுதி, திடம், மொழி, பண்பாடு, திமிர், கலை, இலக்கியச் செறிவு, முதுசொம் - இவற்றை மொத்தமாக ஒரு சங்கிற்குள் ஊற்றிய ஊழிப் பெருஞ்கடலெனக் கவிஞர் இங்கே பதிவு செய்திருக்கிறார் - அதன் உள்ளடக்கம், உருவம் - இவற்றின் வழியாக! மயாகோவ்ஸ்கி என்கின்ற உலகப் புகழ்பெற்ற ரஷ்ய கவிஞர் கவிதைகள் பிறப்பது எவ்வாறு என்று எழுதி வெளியிட்ட ஒரு சிறிய வெளியீட்டில் சொல்கின்றார் - "ஒரு படைப்பாளிக்கு, ஒரு கலைஞனுக்கு, ஒரு கவிஞனுக்கு சமூக ஆணை என்பது மிக மிக முக்கியம். சமூக ஆணை என்றால் என்ன? சமூக ஆணை என்பது சமூக யதார்த்தத்தில் கலைஞனின் தலையீடு ஆகும். அரசியலில் அறிவியல் சோசலிசம் அப்படியோ அது போலக் கலையில் சமூக ஆணை." ‘சமூக ஆணை’யும் மென்மையான மானுட உணர்ச்சிகளும் எதிரும் புதிருமாக இருக்க வேண்டியதில்லை என்பதற்கு மயாகோவ்ஸ்கியின் வாழ்க்கையும் கவிதைகளுமே சாட்சி. வாழும் ஒரு உதாரணமாக இந்தப் புதினத்தின் மூலம் வெளிப்படுகிறார் கவிஞர். இது போர் பற்றியதொரு புதினம். மனிதனுக்கும் இயற்கைக்குமான போர். புவி வெப்பமயமாதல் - உலகமயமாதல் என்ற இரண்டு சக்திகளும் வேளாண்மைக்கு எதிராகத் தொடுத்திருக்கும் போர் என்கிற கருவைச் சுமக்கிறது இப்புதினம். போர் என்பது தமிழர்களுக்கு புதிதானதொன்றல்ல. ஆனால் இது கண்ணுக்கு தெரிந்த எதிரிகளிடம் மோதுகின்ற போர் அல்ல. மிக நுட்பமான அரசியல், தட்பவெட்பப் போர். தமிழன் இதுகாறும் சந்தித்திராத, புதிய மிகச் சிக்கலான போர். அப்போரை எதிர்கொள்பவன், பலியாகின்றவன், ஒரு அப்பாவி தெற்கத்தித் தமிழ்நாட்டு விவசாயி மட்டுமல்ல - இந்திய விவசாயிகள் அனைவரும் தான்! நீட்ஷேவின் மிகக் கடைசியாக அவர் எழுதிய வரிகளாகக் கீழ்வருபவற்றைச் சொல்வார்கள்: "எனது பழக்க வழக்கங்களும், அதைவிட இன்னும் எனது இயல்புணர்ச்சிகளின் பெருமையையுமே அடியாழத்தில் எதிர்த்துக் கலகம் செய்யும் ஒரு கடமை எனக்கு இருக்கிறது. நான் சொல்வதைக் கேளுங்கள்! ஏனென்றால், நான் இப்படி, இப்படித்தான் இருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக நான் எதுவாக இல்லையோ, அதுவாக என்னை ஆக்கிக் குழப்பாதீர்கள்!" - இதை அவர் எழுதிய ஒரு நூற்றாண்டுக்குப் பின் கவிஞர் எழுதுகிறார் : "இந்தப் படைப்பை விவசாயி மகனாக இல்லாத ஒருவன் ஜீவனுள்ளதாக எப்படிச் செய்ய முடியும்? மூன்றாண்டுகள் ஆராய்ந்தேன்; பத்துமாதங்கள் எழுதினேன். எங்கள் மண்ணின் மக்கள் ஊடாக உலகத் துயரத்தைப் பதிவு செய்தேன். மண்ணில் முளைத்த மனிதர்கள் - உணர்ச்சியில் ஊறிய மொழி - சத்தியத்தில் நிகழும் சம்பவங்கள் - அனுமதிக்கப்பட்ட எல்லைக்கோட்டுக்குள் நிகழும் கற்பனை - நான் நடந்து பழகிய பூகோளம் - எல்லாரும் அறிந்த, ஆனால் எழுதப்படாத எளியவர்களின் சரித்திரம் இவற்றின் கூட்டுத் தொகுப்புதான் மூன்றாம் உலகப் போர்"" - தான் எதுவோ, தன் வேர் எதுவோ அதனைத் தெளிவாக முன்வைத்து ஊன்றி நடக்கிறார் கவிஞர். அவர் கலகக்காரரில்லை - ஆனால் பாசாங்கற்ற வாழ்க்கையை முன்வைப்பவர். "இலக்கியத்தின் உதவியோடு தன் பூர்விகத்தை அறிந்து கொள்வது ஏன் மனித நடவடிக்கையாக இருக்கக் கூடாது?" - என்பது வரலாற்றில் மானிடவியலாளர்களின் மிக முக்கியமான கேள்வி. தனது வேர் குறித்து கவிஞரது பதிவு: "‘ஜா’ வராது நம்ம சனங்களுக்கு. ‘ராஜா’ ன்னு சொல்லமாட்டாக; ‘ராசா’ன்னு தான் சொல்லுவாக. ரோஜான்னு சொல்லச் சொல்லுங்க; ‘ரோசா’ தான் வாயில வரும். ‘எம்ச்சியார்’, ‘சிவாசி’ன்னு சொல்லித் தான் பழக்கம் நம்ம நடிகர்கள. பேரு வச்சிருக்கான் பாரு பேரு - வாயிலேயே நொழையாத பேரு மூளையிலயா ஏறப் போகுது? பேருன்னா வெறும் பேரா? அதுல ஊரும் மண்ணும் ஒட்டியிருக்கணுமா இல்லையா? பேருல நம்ம ரத்தமும் வேர்வையும் கலந்து ஒரு வாடை அடிக்கணுமா இல்லையா? வம்சவரலாறு இருக்குடா ஒரு பேர்ல. பேருங்கறது வெறுஞ் சத்தமா? சரித்திரமடா. ஒட்டாத பேரு வச்சா ஓட்டுமா உதட்டுல? வெள்ளைக்காரன் எவனாச்சும் விருமாண்டின்னு பேரு வைக்கிறானா? டி.வி.யில சொல்றாகல்ல அமெரிக்க சேனாதிபதி ஒபாமான்னு - அந்தாளு பொண்டாட்டி பேரு ஓச்சம்மா-ன்னு வச்சா நல்லாயிருக்கும்ல.. வச்சிருக்கானா? வட நாட்ட எடுத்துக்க. பெரியக்கான்னு பேரு வைக்குமா பிரியங்கா? தண்டுச்சாமின்னு வப்பானா டெண்டுல்கரு? அவுக ஊரு மண்ணு பரம்பரையை ஒட்டித்தான வச்சிருக்காக. நாம மட்டும் மாறிப் போனா மூதாக்கமாரு விட்ட மூச்சு வீணாப் போகும்டா" - எழுதி வைக்க வேண்டும் இந்தத் தலைமுறைக்கு கவிஞரது இந்த வரிகளை ஒரு ஆத்தி சூடியென ! சொல்லித்தர வேண்டும் இந்த உணர்வை நமது இளைய தலைமுறைக்கு ஒரு விழிப்பூட்டலென!. ஏன் நம் மண்ணில் செல்லப்பாண்டி என்றும், தங்கப்பாண்டி என்றும், சின்னப்பாண்டி என்றும் பெயர் வைக்கிறார்கள்?. ஏன் கருப்பையா, மூக்கைய்யா, வெள்ளைச்சாமி, முத்துப்பேச்சி, வனப்பேச்சி என்று பெயர் வைக்கிறார்கள்? அவர்கள் அனைவரும் நம்முடைய பாட்டன், பூட்டன்மார்கள். நம் மண்ணில் ஏதோ ஒரு காலத்தில் உலவி, ஊர்க் காற்றில் கலந்தவர்கள், தமது ரத்தத்தை வியர்வையென நமக்காகக் தந்திருப்பவர்கள். ஒரு காலக்கட்டத்தில் ஊருக்காக, ஏதோ ஒரு பகை தீர்க்க, குறை களைய, நல்ல விஷயத்திற்காகத் தன் உயிரைக் கொடுத்த குடும்பத்திலுள்ள ஒருவரின் பெயராக அவை இருக்கலாம்!. ஆகவே ஒரு பெயரைச் சொல்லும்போது வரலாற்றின் உண்மை அதில் தகிக்கிறது. கவிஞர் இதனைச் செய்வதின் மூலமாக மிக முக்கியமான மனித நடவடிக்கையினை - தனது பூர்விகத்தை நிலை நிறுத்துவதை, ஒரு இலக்கிய செயல்பாடாகக், கலையின் வழியாக இங்கே முன்னிறுத்துகிறார். ‘மாதாம் பொவார்’ என்பது உலகப் பிரசித்தி பெற்ற ஒரு நாவல். உலகமெங்கிலும் தடைசெய்யப்பட்ட அந்த புகழ்பெற்ற நாவலை எழுதி முடிக்க அதன் ஆசிரியர் க்யுஸ்தாவ் ஃப்ளோபெர் (1821-1888) நாலரை ஆண்டுகள் எடுத்துக்கொண்டார் எனப்படுகிறது. அது சுய வாழ்க்கை வரலாற்று விதமான நாவல் அல்ல. எனினும்கூட நாவலாசிரியர், கதாநாயகி எம்மாவுடன் தன்னை மிக அதிகமாகவே ஐக்கியப்படுத்திக் கொண்டார். அவள் விஷம் அருந்தி இறந்துபோனதும் இவர் உடல் நலம் கெட்டுப்போய் பல நாட்கள் அவதியுற்றார் என்பார்கள். கவிஞரது இந்த நாவலுடன் அவர் அணுஅணுவாக வாழ்ந்திருக்கிறார். மிக அபாரமான உழைப்புடன் நுணுக்கமான தகவல்கள், தரவுகள் சேகரித்திருக்கிறார். அவற்றை வாழ்வின் குருதி கலந்து உயிர்ப்போடு சமைத்திருக்கிறார். நாவலில் வருகின்ற சின்னப்பாண்டி, முத்துமணி, கோபாலசாமி நாயக்கர், எமிலி, என ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தன்னுள் செரித்து, வெளிக் கொணர்ந்துள்ளார். அவை தத்தமது மொழி, வெளிகளில் உலவினாலும் - உணர்வு ஒன்றே தான்! அடையாளம் என்பதற்கும் தன்னிலை என்பதற்குமான வேறுபாடு மிக முக்கியம். கவிஞருடைய அடையாளம் - தமிழ் மொழி, இனம், நாடு, பண்பாடு, இலக்கியம் இப்படியாக இருக்கலாம். ஆனால் அவருடைய தன்னிலை - அது ஒரு உலகப் பிரஜையாக மானுடத்தின் மடியில் மட்டுமே அடைக்கலமாகி இருப்பது. கலை, இலக்கியமும் மட்டுமே அதைத் நமக்குப் புரிந்து, உணரவைக்க முடியும். கவிஞரது மொழியில், சொல்வதென்றால் இந்தப் படைப்பு, "உள்ளுர் மனிதர்களின் நாவலினால் பேசப்படும் உலகக்குரல், விழ வேண்டிய செவிகளில் விழுந்தாக வேண்டும். வாசிப்பு - ரசிப்பு என்ற எல்லைகளைத் தாண்டி, தீர்வுகளையே பரிசாகக் கேட்கிறது இந்தப் படைப்பு". ஒரு அடையாளமாகத் தமிழன், விவசாயி, மூன்றாம் உலகப் பின்காலனியப் பிரஜை எனப் பயணிக்கிறார் கவிஞர் இந்தப் புதினம் முழுவதிலும். ஆனால் ஒரு தன்னிலையாக அவர் தன்னைத் தெளிவாக உணர்ந்ததை புதினத்தின் நிறைவுப் பகுதி எடுத்துக்காட்டுகிறது. மானுடம் எனக்கு மட்டுமல்ல, எல்லா கலை, இலக்கியக் காரர்களுக்கும் கொடுத்திருக்கும் தெளிவும், தீர்க்கமும், பேரன்பின் முத்தமும் இதுதான். அந்தப் பேரன்பு முத்தத்தின் மொத்த உருவம் இப்புதினத்தின் நாயகன் சின்னப்பாண்டி. Hamlet, ஷேக்ஸ்பியரின் தலைசிறந்த நாடகத்தின் பிரபல கதாபாத்திரம். Hamlet என்பது அந்த இளவரசனைப் பற்றிய கதை மட்டும் தானா, அல்லது தந்தையை இழந்த மகனது பற்றிய கதை மட்டும் தானா? இல்லை - அவற்றைத் தாண்டிய உலகளாவிய தன்மையை, Hamlet எனும் பாத்திரமும், ஷேக்ஸ்பியர் எனும் கதை சொல்லியும், தங்களது நெருக்கடிகள், மற்றும் சிந்தனைகளின் மூலம் முன்வைத்து, அவற்றில் ஈடுபாடுகொள்ள வாசகர்களை அழைக்கிறார்களே - அதுதான், அந்த பொதுத்தன்மைதான், அது மட்டுமேதான் ஒரு படைப்பின் வெற்றி! அதைச் சாதித்தது சமகாலத்துச் சிந்தனை, உலகளாவிய மொழி என்கிற இரண்டு மந்திரங்கள் தான்! கருத்தமாயி, சின்னப்பாண்டி இவர்களுடைய கதைகளின் மூலம் கவிஞர் சாதித்ததும் இதைத்தான். அட்டனாம்பட்டியை அட்லாண்டாவிற்கு அழைத்துச் சென்றது மட்டுமல்ல, அட்டனாம்பட்டியை உலகளாவிய ஒரு கவனத்தை ஈர்க்கின்ற இடமாக, மாற்றத்திற்கு ஆட்படுகிற மையப்புள்ளியாக இடம் பெயர்த்து, ஒரு எளிய மனிதரின் வாழ்வு மூலம் ஒரு உலகப் படைப்பை நோக்கி நகர்ந்திருக்கிறார் கவிஞர். எனக்கு பெனடிக் ஆண்டர்ஸன் இந்த புதினத்தைப் படிக்கையில் நினைவிற்கு வருகிறார். "இலக்கியச் செயல்பாடுகளில், குறிப்பாக மூன்றாம் உலகச் சேர்ந்த படைப்பாளிகளின் படைப்புக்களில், ஒரு தேசியச் செயல்பாடு உண்டு" என்கிறார் அவர். "உலகளாவிய தன்மையை வழங்கல், மற்றும் குறிப்பிட்ட மொழியை வாசிக்க இயலும் எல்லாரையும் பார்த்துப் பேசுதல் ஆகிய இரண்டின் இணைப்புக்குச் சக்தி வாய்ந்த ஒரு தேசிய செயல்பாடு இருக்கிறது" என்பது அவர் கூற்று. கவிஞரும் இந்த மிகச் சிறந்த புதினத்தின் மூலம் ஒரு மிக முக்கியமான சக்தி வாய்ந்த தேசியச் செயல்பாட்டை முன்னெடுக்கிறார். "மறுக்கப்பட்ட பொருளாதாரத்தை, சுரண்டப்படும் வாழ்க்கையை இந்திய உழவர்களுக்குக் மீட்டுக் கொடுத்தால் போதும், அவர்கள் வாழ்க்கை நிமிர்ந்துவிடும். இங்கே மண் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது, மனிதர்கள் சபிக்கப்பட்டிருக்கிறார்கள்" என்கிற இவரது கூற்று தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கியமானது. தனித்து ஒலிப்பது. மிகத் தேவையானதொரு தேசியச் செயல்பாட்டைத் திடமானதொரு தமிழ் தேசியக் குரலோடு முன்னெடுத்து செல்கிறது இந்தக் குரல். "இரண்டு பணிகள் உள்ளன இந்தியாவிற்கு; விவசாயத்தை மீட்டெடுத்தல், அல்லது விவசாயத்திலிருந்து விவசாயியை மீட்டெடுத்தல்" எனும் இந்தக் குரல் உலகளவிலும் ஒலிக்க வேண்டும். கவிஞர் தனது இந்தப் புதினத்தின் மூலம் புதியதொரு விவசாயச் சமுதாயத்தினை, இயற்கைக்கு மீண்டும் திரும்புகின்ற வேளாண் புரட்சியை முன்னெடுக்கிறார். புரட்சி என்ற சொல் நீர்த்துவிட்ட காலமிது என்றாலும் - ஒரு நிலக்கரிக் கவிஞன் முன்னெடுக்கிற வைரப்புரட்சி இது! மேற்குத் தொடர்ச்சி மலையை மாதம் ஒரு முறையாவது பார்க்காவிட்டால் இந்தப் படைப்பாளிக்குப் பைத்தியம் பிடித்துவிடுமாம். "மேற்குத் தொடர்ச்சி மலை எங்கள் மண்ணின் முது பொருள் மட்டுமல்ல முதற் பொருளும் கூட" என்கிறார். நம் மேற்கு தொடர்ச்சி மலையை பற்றி இப் புதினம் தருகின்ற அத்தனை செய்திகளையும் பார்க்கின்றபோது, மேற்குத் தொடர்ச்சி மலையினை சில வருடங்களுக்கு முன்பு, நம் நாட்டினுடைய புராதான சின்னமாக, இந்திய தொல்லியில் துறை அறிவித்திருக்கின்ற அந்த செய்தி நினைவிற்கு வருகின்றது. அந்த முக்கியத்துவத்தைக் கவிஞர் ஒரு அரசியல் கிண்டலோடு நம்மிடம் இவ்வாறு பகிர்கிறார் - "கங்கா யமுனா நிதிகளைப் போல் இவை கவனிக்கப்படவில்லை. அசோகர் சக்கரவர்த்திக்குள்ளும், அக்பருக்குள்ளும் எங்கள் சேர-சோழ-பாண்டியர்கள் மறைக்கப்பட்டது போல் இமயமலையின் இடுக்குகளில் எங்கள் மேற்குத் தொடர்ச்சிமலை புதைக்கப்பட்டுவிட்டது" - இது மிகத் திடமானதொரு தமிழ்த்தேசியக் குரல்! பால்சாக் (Balzac) என்கின்ற ஃப்ரென்ஞ் நாவலாசிரியர் பற்றி எங்கல்ஸ் (Engels), "நான் கண்டறிந்த எழுத்தாளர்களில் மிகச் சிறந்த யதார்த்த எழுத்தாளர் இவர்தான்" என்பார். பால்சாக்கின் மானிட இன்பியல் எனும் புதினத்தை வாசித்த எங்கல்ஸ், "அந்தக் கால கட்டத்தைப் பற்றி ஒட்டு மொத்தமாக, உத்தியோகபூர்வமான வரலாற்று ஆசிரியர்கள், பொருளாதார வல்லுநர்கள், புள்ளி விவர நிபுணர்கள் ஆசிரியர்களிடமிருந்து தெரிந்து கொண்டதை விட அதிகமாக அந்த நூலிலிருந்து கற்றுக் கொண்டேன்" என்கிறார். கடந்த இருபத்தி ஐந்தாண்டுகளாக உலகின் கவனத்தைத் திசை திருப்பியிருக்கின்ற புவி வெப்பமயமாதல், உலகமயமாதல் அல்லது விவசாயத் தற்கொலைகள், அவற்றின் மூலகாரணம் குறித்துப் பல செய்திகளை நாம் அறிவோம். அரசு அறிக்கைகள், தொலைக்காட்சி, பத்திரிக்கை செய்திகள், நண்பர்களது உரையாடல், அறிஞர்களது ஆராய்ச்சிகள் - இவை சொல்லித் தீர்த்த விஷயங்களை, சொல்ல முடியாத வேதனையை இந்த ஒரு புதினம் இம் மண்ணின் மக்களுடைய வாழ்க்கையைச் சொல்வதன் மூலம், அதன் வலியைச் சுட்டுவதன் மூலம் செய்திருக்கிறது. இது ஒரு உலகத் தரத்தில் வைத்து பார்க்கப்பட வேண்டிய புதினம் என்பதற்கு இதனை விட வேறென்ன வேண்டும்? உலகளவிலேயே இந்த புதினத்தையொத்த வேறொரு புதினம் உண்டு. Roots : The Saga of American Family எனும் அப்புதினம் 1978 இல் வெளிவந்தது. ஒரு 18ம் நூற்றாண்டு ஆப்ரிக்க அடிமையாக தனது மிக இளவயதில் அமெரிக்காவிற்கு விற்கப்பட்ட அதன் கதாநாயகனது - அந்த கறுப்பின மனிதனது அடிமை வாழ்வும், வரலாறும் ஒரு மிக மிகப் பெரிய பண்பாட்டுப் புரட்சியை அமெரிக்காவில் ஏற்படுத்தியது. அமெரிக்காவில் நிறவெறி மற்றும் அடிமைத்தனத்தின் மீது மிகப் பெரிய சம்மட்டியாக விழுந்தது அந்தப் புதினம். வெளிவந்த அந்தக் காலக்கட்டத்தில், அமெரிக்காவில் மிகப்பெரிய பண்பாட்டுப் புரட்சி வெடிக்க அது காரணமாக இருந்தது. அதுபோலவே, கவிஞரின் மூன்றாம் உலகப் போர் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலக அரங்கில் எடுத்துச் செல்லப்பட்டால் மிக மிகக் காத்திரமானதொரு பண்பாட்டு மாற்றத்தை, அரசியல் மாற்றத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. உலகச் சமூக, அரசியல், பொருளாதார சூழல்களை மாற்றுகின்ற படைப்புகளாகச் சில புதினங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவதாகச் சொல்லப்படுவது, வெளிவந்த காலத்தில் மிக அதிகமாக விற்பனையான Hariat Peacher Stove (ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்) என்பவரின் புதினமான டாம் மாமாவின் குடில். அடிமைத் தனத்திற்கு எதிரான வெறுப்பை உருவாக்கி அமெரிக்க சுதந்திரப் போர் நிகழ அப்புதினம் வழி வகுத்தது. விவசாய இழப்பை தேசிய இழப்பாகக் கருத வேண்டும் எனும் கவிஞர் சொல்கிறார் - "ஆண்டுக்கு 41 ஆயிரம் மருத்துவர்களையும் 9 லட்சம் பொறியாளர்களையும் உண்டாக்கும் இந்தியா எத்தனை வேளாண்மைப் பட்டதாரிகளை உருவாக்கி விவசாய வெளிகளில் விட்டிருக்கிறது? இந்தியாவை நான் நேசிக்கிறேன்; அதனால் இவ்வளவு சிந்திக்கிறேன்" - மிகத் தொன்மையான விவசாய வாழ்வின் வீழ்ச்சியை, அதற்கான காரணத்தை அத்துயரிலிருந்து மீண்டு வெளிவரும் வழிகளை முன்வைக்கிறது இப்புதினம். பன்னாட்டு முதலைகளுக்கு எதிரானதொரு வெறுப்பை உருவாக்கி, விவசாயத்தை மீட்டெடுப்பதற்கான புதியதொரு போரை இப்புதினம் துவக்கலாம். இரண்டாவதாக சொல்லப்படுவது, 1931இல் வெளிவந்த Pearl S.Buck எழுதிய The Good Earth. சீன விவசாயிகளது துயரங்களை, மகிழ்ச்சியை, வீழ்ச்சியைப் பதிவு செய்த மிக முக்கியமான புதினம் அது. Pearl S.Buck எனும் அமெரிக்கப் பெண்மணி சீனாவில் பிறந்து, ஆங்கில மொழியில், சீன விவசாய மக்களது வாழ்வினை, மிக அற்புதமாகப் பதிவு செய்து அதற்காக நோபல் பரிசையும் பெற்றார். அவரது The Good Earth உலகை உலுக்கிய மற்றுமொரு சிறந்த புதினம். 1938இல் இந்தப் புதினத்திற்காக Pearl S. Buck-ற்கு நோபல் பரிசு கிடைத்தது. இரண்டாம் உலகப் போருக்கு முன்பு, சீனக் கிராமம் ஒன்றில் வாழ்ந்த விவசாயக் குடும்பத்தின் வீழ்ச்சி பற்றிப் பேசுகின்ற அந்தப் புதினம் தான் - அமெரிக்கர்களை 1931-ல் இரண்டாம் உலகப் போரின் போது சீனாவைத் தனது நட்பு நாடாகச் சேர்த்துக் கொள்ளவைத்தது. மூன்றாம் உலகப் போரின் கருத்தமாயியைப் போல அதன் பிரதான பாத்திரம் வாங் லூ. அமெரிக்காவின் Best Seller ஆக இன்றுவரை இடம் பிடித்துள்ள இப்புதினம் முப்பத்தி மூன்று அந்நிய மொழிகளிலும், கிட்டத்தட்ட ஏழு வகையான சீன மொழிபெயர்ப்புகளிலும் வெளிவந்துள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு முன்பாக எழுதப்பட்ட இப்புதினத்தில். ஒரு சீன விவசாயினுடைய வாழ்க்கை எவ்வாறு சூதாட்டத்திலும், தற்கால அரசியலிலும், விஞ்ஞான வளர்ச்சியாலும் தலைகீழாக மாறிப்போனது என்பதைப் படித்த அமெரிக்கர்கள் மனமுருகி அக்காலக்கட்டத்தில் ஒரு முக்கியமான முடிவை எடுத்தனர். இரண்டாம் உலகப்போரின் போது சீனாவைத் தங்களுடைய நேச நாடாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அம்முடிவு. வரலாற்று முக்கியத்துவமான அந்த முடிவை அன்று எடுக்க செய்தது Pearl S. Buck -ன் The Good Earth எனும் அப்புதினம்தான். அதுபோல நம்முடைய இந்திய அரசாங்கம், ஐ.நா. சபைக்கோ அல்லது புவி வெப்பமயமாதல் (Gobal Warming) குறித்த உலக அரங்கிற்கோ உரையாட, விவாதிக்கச் செல்கையில், மிக முக்கியமானதொரு முடிவை எடுக்க வைக்க இந்த மூன்றாம் உலகப் போர் வழி வகுக்கலாம். அதற்கான வல்லமை அதன் உயிர்ப்பு மிக்க பக்கங்களில் பொதிந்துள்ளது. மிகச் சுலபத்தில் மொழிபெயர்க்க முடியாத புதினம் இது. இடையில் புகுந்து வடிகட்ட முடியாத அடர்த்தியான பண்பாட்டு மொழி இதன் நடை. நம்முடைய பயிர்களுக்கு வரும் நோய்களை ஓரிடத்தில் பட்டியிலிடுகிறார் கவிஞர் : "நானும் மூணு தலைமுறையா மண்ணக் கிண்டியே மண்ட காஞ்சு கெடக்கேன். இன்னைக்கு எந்த வெள்ளாமையாச்சும் முழுசா வீடு வருதாப்பா? எங்கிட்டுருந்துதான் வந்துச்சோ வெள்ளாமைக்கு இத்தனை சீக்கும்? வாழை போட்டா ‘கு(i)ழ நோய்’ தாக்குது. கரும்பு போட்டா ‘செந்தா(i)ழ அடிக்குது’ தென்னைய நட்டா ‘மண்டைப் புழுவு’ விழுந்து குருத்து அழிஞ்சு போகுது. ‘செவட்டை’ அடிச்சா செத்தே போகுது தக்காளி, கத்தரி. வெண்டை நட்டா ‘கத்தாழைச் சீக்கு’. சக்கர வள்ளிக்கெழங்கு நட்டா ‘அரக்கு’ அடிக்குது. ‘காம்பழுகல்’ நோய் வந்து மொண்ணையாப் போயிருது மொளகாச் செடி. கணக்குப் போட்டுப் பாத்தா விதைச் செலவுக்கு வந்து சேரல வெள்ளாமை. எங்க போயிச் சொல்ல? நம்ம பக்கம் இருந்த கடவுளே கட்சி மாறிருச்சு"" இதனை எவ்வாறு, எந்த மொழியில், மொழி பெயர்க்க இயலும்? அம் மொழிபெயர்ப்பினது மூல, வட்டார வழக்குப், பண்பாட்டுச் சொற்களின் அடிக்குறிப்புக்களே ஒரு துணை நூலாகிவிடுமே! ‘நான் என்பது எனக்கு நிகழும் கதையே’ என்கிறார் பின்நவீனத்துவவாதி பார்த். கவிஞரின் கூற்று இது - "இந்தப் படைப்பில் புண்ணில் ஒழுகும் ரத்தமும் கண்ணில் வழியும் கண்ணீரும் இரவல் உணர்ச்சியல்ல - பெரிதும் என்னுணர்ச்சி. என்னைப் பெருமை செய்யும் சில படைப்புகளைப் போன்றதல்ல இது; மண்ணைப் பெருமை செய்யும் படைப்பு; மானுடத்திற்கான திடக்கண்ணீர்" - அவரென்பதும், நாமென்பதும் அவரவருக்கான கதைதான் என்பதை மெய்ப்பிக்கிறது கருத்தமாயின் வாழ்க்கை! பிறரது சரிதையின் ஊடாக தனது சுயத்தையும் வெளிப்படுத்தும் புதினம் ஒரு வகை என்றால், கருத்தமாயினது சரித்திரத்தின் மூலம் மானுடத்திற்குப் புதியதொரு சுயத்தைக் கட்டமைக்க முயல்கிறது மூன்றாம் உலகப் போர். அவ்வகையில் இது வெகு சனத்தின் சரித்திரம் - ஆனால் மானுடத்தின் சுயம். சாக்ரடீஸ் தனது உரையாடல் ஒன்றில் "பேச்சுதான் உண்மையானது. எழுத்து பொய்யானது. எழுத்து என்பது கெட்ட ஞாபகம் (ஈவில் மெமரி). பேச்சு என்பது சட்டபூர்வமான வாரிசு. எழுத்து சட்டபூர்வமான தகப்பன் இல்லாமல் பிறந்த மகன் (பாஸ்டர்ட்)" என்கிறார். "நான் பேசும்போது உயிர்ப்புடன் பேசுபவனாக இருக்கிறேன். என் பேச்சுக்கு நான் தகப்பனாக இருக்கிறேன். ஆனால் நான் எழுதும் பிரதியோ நான் இல்லாமல் கூட இருக்கிறது. அது தனது தந்தையுடன் எவ்விதத் தொடர்புமின்று ஒரு சட்ட விரோத வாரிசைப் போல் தனியே இருக்கிறது. பேச்சு உயிருள்ளது. எழுத்தோ இறந்தது. அதனால்தான் எழுத்து இறந்தவர்களின் கல்லறைகளின் கல்வெட்டுகளில் உறைந்த நிலையில் காணப்படுகிறது" என்றெல்லாம் சாக்ரட்டீஸ் எழுத்தை இழித்துப் பேசுகிறார். சாக்ரட்டீஸிற்கு ஒரு வேளை இந்த புதினத்தை படிப்பதற்கு வாய்ப்பு கிட்டியிருந்தால் - பேச்சு மொழி வாயிலாகத் நம் மூதாதையர், தாய், தந்தையர், பாட்டிமார்கள், பங்காளிகள், தோழிமார்கள், பேசிய வட்டார வழக்கு மூலமாக, எழுத்தை எவ்வளவு உயிர்ப்பு உள்ள ஒரு மொழியாக, சாகாவரம் பெற்றதாக, ஒரு இலக்கிய வடிவமாக மாற்ற முடியும் என்கின்ற ரசவாதத்தை இந்த புதினத்தின் மூலம் அவர் உணர்ந்திருப்பார். மேற்சொன்ன தன் கருத்தையும் மறுபரிசீலனைக்கு அவர் உட்படுத்தி இருக்கலாம்! Arthur Hailey இன் Roots, Pearl S.Buckஇன் The Good Earth, Peacher Stove இன் டாம் மாமாவின் குடில், ஆகியவற்றோடு வைத்துப் ஒப்பு நோக்க வேண்டிய படைப்பு இப்புதினம் என்றாலும், உணர்ச்சி வசப்படாமலோ, ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தாமலோ, தனியாக அமர்ந்து அழுது, சிரிக்காமலோ, இந்த புதினத்தைத் தள்ளி நின்று objective ஆகத் திறனாய்வு செய்தல் கடினம். இம்மண்ணில், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து, மண்ணோடு வளர்பவளான எனக்கு இது தரும் வாசிப்பு அனுபவம் மிக நெருக்கமான, அந்தரங்கமான நெகிழ்வையும், வலியையும், இயலாமையையும் தருகின்றது. திறனாய்வதை விட, இதனை உய்த்து உண்ணத்தான், அரற்றி அமரத்தான் எனக்கு விருப்பமதிகம். இப்புதினத்தின் பிரதான கதாபாத்திரமான கருத்தமாயி சொல்வார் - "மொதத் தேக்கங்கண்டு இருக்கே இதான் எங்கப்பன் சாமி - உனக்கு மாமன். ரெண்டாம் தேக்கங்கண்டு இருக்கே அதான் எங்காத்தா சாமி - உனக்கு மாமியா. இந்த மூணாவது புங்கங்கன்னு இருக்கே அதான் எந்தங்கச்சி சாமி - ஒனக்கு நாத்தனா. குலசாமிக மூணும் கூடவே வரும். தொட்டுக் கும்பிட்டுக்க" - விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஒவ்வொருவரும் அந்த மூன்று கண்டுகளோடு சேர்த்து, இந்தப் புதினத்தையும் வைப்போம்! எமது சிலிக்கான் பள்ளத்தாக்கின் இளையதலைமுறைக்கு நம் விவசாயப் பழங்குடி முன்னோரின் மூத்த ஆவணமாக கவிஞரது இப்படைப்பைப் பரிசளிப்போம்! * * * * *
No comment