'மனிதக் கூட்டத்தின் இந்த இனக்குழு இயற்கையான எளிமையுடனும், வலிமையுடனும் எவ்வளவு வியப்பிற்கு உரியதாக இருக்கிறது' என ஏங்கல்ஸ் கூறியது போல, இங்கு சங்கமித்திருக்கும் தமிழ் இளைஞர்களுக்கும், மார்க்ஸ் சொல்கிறார் "தத்துவவாதிகள் இதுகாறும் உலகத்திற்கான விளக்கத்தை மட்டுமே கொண்டு வந்தனர், ஆனால் செய்ய வேண்டியதோ உலகத்தை மாற்றுவதுதான்" என. மாறுதலுக்கான முதல் புள்ளி இளைஞர்கள். உலகத்தில் மனிதனுடைய நாகரிகம் முதன்முதலில் தோன்றிய இடம் மெசபடோமியா. அதாவது இன்றைய ஈராக்! கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பாக நாகரிகம் தோன்றிய இடம்! அந்த இடத்திலே, 1710இல் ஹவுராவி என்ற மன்னன் ஆண்டு வந்தான். உலகத்தில் முதல் சட்டத்தை தொகுத்தவன் அவன்தான். அவனுக்குப் பின்பாக, 'உருக்' என்ற அந்தப் பகுதியை ஆண்டுவந்த மன்னனின் பெயர் கில்மேஷாக். அவன் மறைந்த பிறகு, அவனைப் பற்றி ஓர் ஆதிகாவியம் எழுதப்பட்டது. உலகத்தில் முதன்முதலாக எழுத்திலே வடிவமைக்கப்பட்ட காவியம் அது ஒன்றுதான். இன்றைக்கும் 'சுமோரியன்' மொழியிலே எழுதப்பட்ட அந்த ஆதிகாவியம், பதினோரு மண் தட்டைகளிலே பாதுகாக்கப்படுகின்றது. அந்த கில்மேஷாக் காவியம், பலமுறை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றது. மிகச் சமீபத்திலே அந்தக் காவியத்தை மொழி பெயர்த்த அந்த நூலாசிரியர் அதனை இப்படித் தொடங்கி இருக்கின்றார் - "The one who saw all I will declare to the World! The one who knew all I will tell about" என்று. தமிழினம் உலகிலேயே மிகக் குறைவான மூட நம்பிக்கை கொண்ட இனமென்று கால்டுவெல் பாராட்டி உள்ளார். ஆனால் ஒரு சம்பவம் - உங்களோடு பகிரவிரும்புகிறேன். திருமதி சண்பகம் துரைசாமி (சில ஆவணங்களில் சண்பகம் துரைராசன் என்று காணப்படுகிறது) என்னும் பார்ப்பனப் பெண் கணவனை இழந்தவர். பி.ஏ. பட்டம் பெற்று சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் (அப்போது அவருக்கு வயது 37க்குள் இருக்கலாம். கல்லூரியில் சேர முடியாத வயது), மருத்துவ கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்ததாகவும், தமக்கு தகுதி இருந்தும், தமிழ்நாடு அரசு பின்பற்றி வரும் இடஒதுக்கீட்டின் காரணமாகத் தமக்கு இடம் கிடைக்காமல் போய்விட்டது என்றும், எனவே இட ஒதுக்கீடு, மாணவர்களின் தகுதி திறமையைப் புறக்கணிக்கிகறது என்றும், தனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வகுப்பு வாரி உரிமை தடையாக இருக்கக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். திருமதி சண்பகம் துரைசாமியைப் போலவே சி.ஆர். சீனிவாசன் என்னும் பார்ப்பனரும் பொறியற் கல்லூரியில் சேர விண்ணப்பத்திருந்தும் தான் ஒரு பார்ப்பனராக இருப்பதால் தமக்கு இடம் மறுக்கப்பட்டது என்றும் எனவே இடஒதுக்கீடு கூடாது என்றும் வழக்குத் தொடுத்தார். திருமதி சண்பகம் துரைசாமிக்காக வாதாடிய வழக்கறிஞர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் என்பவர். இவர் இந்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரலும், இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களுள் ஒருவரும் ஆவார். சீனிவாசன் தரப்பில் வாதாடியவர் நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்ற வி.வி. சீனிவாச அய்யங்கார் என்பவர். சமூக நீதிக்கு எதிராக வாதாடிய அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரை, அந்த வழக்கில் அவர் அதி திறமையாக வாதாடியபோதும், முதல்தரமான வழக்குறைஞர் (First Grade Lawyer) இரண்டாந்தர அரசியல்வாதி (Second Grade politician) மூன்றாந்தர அரசதந்திரி (Third Grade Statesman). எனப் பழம்பெரும் காங்கிரசுக்காரரான திரு. செங்கல்வராயன் வருணித்தார். "இந்திய வரலாறு என்பது என்ன - 30 அடி உயரமுள்ள அரசன் 30 ஆயிரம் ஆண்டுகள் அரசாண்டான் என்று சொல்வது தானே? இந்திய புவியியல் மட்டுமென்ன? பாற்கடல் பற்றியதும், வெண்ணெய்க் கடல் பற்றியதும் தானே" என்று எள்ளி நகையாடியது யார் தெரியுமா? Lord Macaulay. இன்றைக்கு நாம் தூக்கிச் சுமந்து கொண்டிருக்கின்ற ஆங்கிலக் கல்வியின் பிதாமகன். அவனது கூற்றுக்கு மாறாக மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான தமிழனது அகம், புற வரலாற்றை. தனிமனிதனின் எதிர்காலமும், சமுதாயத்தின் எதிர்காலமும் ஊடுபாவுபோல் ஒன்றிணைந்திருக்கிறது. 20ம் நூற்றாண்டு, மனிதர்களைத் தனித்தனியான அணுக்களாக, பரஸ்பரம் பகைமை கொண்டவர்களாக, ஒவ்வொருவரும் மற்றவரை ஒரு புறப் பொருளாகப் பார்க்கிறவர்களாகப் பிரித்து வைத்துள்ளது. கட்டுப்படுத்த முடியாத வரலாற்றுச் சக்திகளை, சமூக நிகழ்வுகளை எதிர்கொள்ளும் மனிதன் செய்வதறியாது திகைத்து நிற்கிறான், சிதிலமடைகின்றான். ஆனால் அதிலிருந்து அவன் மீண்டு அவ்வப்பொழுது புதிதாய்ப் பிறக்கவேண்டும் - அதற்குப் புதிய கேள்விகளைப் பழயனவற்றை நோக்கிக், குறித்து எழுப்பவேண்டும் "கணந்தோறும் புதிய வியப்பையும், கணந்தோறும் வெவ்வேறு கனவையும், கணந்தோறும் நவநவமாய்க் களிப்பையும்'' என்று பாரதி சொன்னது நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ளத்தான். மனிதன் அடிப்படையில் ஒரு சமுதாய ஜீவி என்றும் எளிய உண்மையை உணர்த்த கார்ல் மார்க்ஸ் தேவை இல்லை. ஒவ்வொரு மனிதனும் தான் என்னவாக வேண்டும் என்பதைத் தானே முடிவு செய்துகொள்ள வேண்டும். அவனேதான் தன்னைத் தான் விரும்பும் வகையில் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதில் யாருக்கும் தடைஇல்லை. ஆனால் இந்த உலகம் முற்றிலும் அவனுக்கே சொந்தமான தனிப்பட்ட உலகமா? நமக்கு முக்கியத்துவமும் விருப்பமும் உள்ள பொருள்களையும் விஷயங்களையும் தேர்வு செய்வதிலும், அவற்றைக் கொண்டு ஏதேனும் ஒன்றை உருவாக்குவதிலும்தான் நமது உலகினை ஆக்கிக் கொள்கிறோம். விஞ்ஞானியின் உலகம் - அவனது ஆய்விற்கான உலகம், அந்த உலகம் அவனுக்கு முன்பே பல நூற்றாண்டுகளாக இதர விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது. இப்போது அவன் அதனை விரிவாக்குகிறான், செழுமைப்படுத்துகிறான், மறுபடைப்புச் செய்கிறான். அது போன்றுதான் கலைஞனின் உலகமும், தொழிலாளியின் உலகமும். உலகம் நமக்கான உலகமாக மாறுவது கூட்டு முயற்சியின் மூலம் தான். அது எந்த அளவிற்கு உணர்வு பூர்வமாக மற்ற மனிதர்களுடன் மானுட உறவில் இணைக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு, மனித இருத்தலும் அர்த்தம் பெறுகிறது. 1912ஆம் ஆண்டு இந்தியாவின் Viceroy Lord Hardings மீது வெடிகுண்டு வீசிய வங்காளத்தின் போர்வாள், ராஷ்பிகாரி போஸ், புரட்சிகர இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பொழுது, அவருக்கு வயது 15. ஸ்பெயினின் ஆக்ரமிப்பினை எதிர்த்து, க்யூபாவிற்கு ஆதரவாகக் களம் இறங்கிய, காலனி ஆதிக்கத்திற்கு எதிரான முதல் தீப்பொறி, ஹோஸே மார்த்திக்கு, அப்பொழுது வயது 17 மட்டுமே. வியட்நாமில், ‘புரட்சிகர வியட்நாம் இளைஞர் சங்கம்' எனும் அமைப்பை உருவாக்கி, வியட்நாம் போருக்கு ஆதரவு திரட்டிய ஹோ-சி-மின் ஒடிந்துவிழும் தோற்றத்திலிருந்த ஓர் இளைஞன். முதல் பிரெஞ்சுப் புரட்சியின் ஒளியை முன்னுக்குக் கொண்டு சென்ற குசயnஉளை சூடிலநட -க்ஷயbடிடிb முழுச் சமத்துவத்துக்கான பொதுவுடமைக் கருத்தாளர், புரட்சியில் ஈடுபட்ட பொழுது அவரது வயது 25; அதற்காகத் தூக்கிலிடப்பட்ட பொழுதோ வயது 33. "அவர்கள் மீது கண்ணீர் விழவில்லை தேவதைகளின் கரங்கள் அவர்களது உடல்களை எடுத்துச் சென்றன'' என்கிற ஓர் ஆங்கிலேயரின் இரங்கற் கவிதையோடு உயிர்துறந்த பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் அனைவருமே இளவயதுப் புரட்சியாளர்கள். "நாம் இருவரும் நெருங்கின உறவினர்கள் அல்லர், ஆனால் இந்த உலகத்தில் அநீதி தலையெடுக்கின்ற போதெல்லாம் கோபமும், வெறுப்பும் கொண்டு, நீ குமுறி நடுங்குவாயானால் நாம் இருவரும் தோழர்கள்'' என்று சொன்ன புரட்சிகரச் செம்மைவாதி சேகுவாரா, புரட்சிக்காக தன்னை தயாரித்துக் கொண்ட, லத்தீன் அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட பொழுது அவரது வயது 21. மேற்சொன்ன இவர்கள் அனைவருமே உணர்வு பூர்வமாக மானுட உறவில் தம்மை இணைத்துக் கொண்டு உன்னத லட்சியத்திற்காகப் போராடத் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொண்டார்கள். இலக்கியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நுதல்பொருளாக எப்போதும் இருந்து வருபவன் உலகிலுள்ள சாதாரண மனிதன்தான் என்று கூறினார் சார்த்தர் எனும் ஃப்ரெஞ்ச் தத்துவவாதி. எதையும் உருவாக்கவும், உருவானதைக் கலைக்கவுமான வலிமை, சுருக்கமாகச் சொன்னால் செயல்படுவதற்கான வலிமை வாசகனிடம் உள்ளது. அதற்குக் காரணம், மனிதன் தன்னை இடைவிடாது தினந்தோறும் புதிது புதிதாகக் கண்டுபிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் கடமை எழுத்தாளரிடம் இருப்பதுதான் என்றும் சார்த்தர் கூறினார். ஆக, நாம் நம்மை இடைவிடாது புதிது புதிதாகக் கண்டெடுத்தல் அவசியம். நாம் புதிதாய்ப் பிறப்பதற்கு என்ன செய்ய வேண்டும். இந்த உலகம் மாற்ற முடியாத தெய்வீக விதிகளால் ஆளப் படுவதில்லை என்பதையும், அதில் எதனையும் மாற்ற முடியும் என்பதனையும் உணர வேண்டும். ஆனால் அதனைச் சாதிப்பதற்கு அதற்குரிய சுதந்திரம் வேண்டுமல்லவா. நம்மில் எத்தனை பேருக்கு அது சாத்தியப்பட்டிருக்கிறது? "பூக்காரியே பூக்காரியே இந்தப் பூக்களை விற்று இதனை விட உன்னதமான வேறு எதனை வாங்கப் போகிறாய்?" நமது உல்லாஸமான இச் சுதந்திரம் பூவிற்பதைத் தொழிலாகக் கொண்ட அப்பெண்ணிற்குச் சாத்தியமா! சுதந்திரம் என்பது சொர்க்கத்திலிருந்து வழங்கப்படும் வெகுமதி அல்ல. மனிதர்களின் சமூக வாழ்நிலை அவர்களது உணர்வைத் தீர்மானிக்கிறது, பொருளாதார அடித்தளம் மேலடுக்கை நிர்ணயிக்கிறது என்பதை நாம் அறிவோம். இச்சூழ்நிலையில் சமுதாயத்திலும், வரலாற்றிலும் தனிநபரின் பாத்திரம் என்ன? அவன் தன்னைத்தானே எப்படிப் புதுப்பித்துப் புதிதாய்ப் பிறக்க முடியும்? எந்தச் சூழ்நிலையிலும் மனிதனால் சுதந்திரமான தேர்வுகளைச் செய்ய முடியும். அதன் மூலமே நாம் கணந்தொறும் புதிதாகப் பிறக்க முடியும் என நான் நம்புகிறேன். உடலை மையப்படுத்தும் காந்தியின் அரசியலுக்கு இரண்டு பெரும் சவால்கள் உருவானது. முதல் சவால் என்பது இரட்டை வாக்குரிமைக்கு எதிராக அவர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம். இதை அம்பேத்கர் அறிவார்ந்த தளத்திற்கு எடுத்துச் செல்ல முற்பட்டபோது. காந்தி அதனை உடல் தளத்திற்கு எடுத்துச் சென்றார். அம்பேத்கரின் அரசியல் நிலைப்பாடு, காலனிய ஆட்சியாளர்கள் காந்திக்குக் கொடுத்த சவால்களைக் காட்டிலும் மிக இறுக்கமானது. மிக ஆழமானது. அம்பேத்கரின் அறம் சார்ந்த அரசியலே காந்தியின் உடலை காப்பாற்றியது என்றால் அதை அறிந்துதான் காந்தியும், தன் உடலைப் பணயமாக வைத்தார் என்று சொல்லலாம். காந்தியின் உடல் வென்றது. ஆனால் அறிவார்ந்த விவாதம் பின்னுக்கு தள்ளப்பட்டு நின்றது. ஒரு தளத்தில் உண்ணாவிரதப் போராட்டம் என்பதே அறிவார்ந்த தளத்தில் உரையாடல் சாத்தியமற்றுப் போகும் போதுதான் பலமான ஆயுதமாக உருமாறுகிறது. காந்தியின் இந்தப் போராட்ட முறை எதையும் அறிவார்ந்தத் தளத்தில் வைத்துப் பார்க்க தீர்மானமாய் மறுத்தது. அடுத்து தோழர் பகத்சிங்கின் மரணம். இர்வின் பிரபுவோடு காந்தி போட்ட ஒப்பந்தத்திற்கு முன் நிபந்தனையாய் தோழர் பகத்சிங் மற்றும் பிற தோழர்களின் உயிரை காப்பாற்றுவதை முன் நிறுத்தியிருக்க முடியும். ஒப்பந்தத்திற்கு முந்தைய தினம் நேரு, காந்தியோடு இதுபற்றி விவாதிக்க வந்தபோது காந்தி மௌனவிரதம் இருக்கும் நாள் என்பது மிகப்பெரிய நகை முரண். ‘எதனையும் புதிதாக வேறொரு கோணத்திலிருந்து பார்க்கும் பொழுதும், அலசி முடித்துவிட்ட விஷயங்களைத் தனித்துவமாக வேறுபடுத்திப் பார்த்து வெளிக்காட்ட' முனையும் போதும் நாம் புதிதாகிறோம். இதற்கும் காந்தியிலிருந்தே உதாரணம் தருகிறேன். பகவத் கீதைக்குப் பல்வேறு உரைகள் உண்டு. ஆதி சங்கரர் முதல் திலகர், அரவிந்தர் வரை எழுதிய பல்வேறு உரைகள் சாத்தியப்பட்டுள்ளது. ஆனால் காந்தி பகவத்கீதைக்குக் கொடுத்த விளக்கம் இந்த உரைகள் எல்லாவற்றையும் நிராகரித்தது. மனித ஆன்மாவுக்குள் நடக்கும் நல்லது - தீயது இவற்றிற்கு இடையேயான முரண் மற்றும் போராட்டமே பகவத்கீதை என்றார். காந்தியின் நிலைப்பாடு பகவத் கீதையின் பிரதி சார்ந்தது அல்ல. பிரதியிலிருந்து மட்டுமல்லாமல் வரலாற்றிலிருந்தும் மிகச் சுலபமாக பகவத் கீதையைக் காந்தி பிரித்து எடுத்துவிட்டார். இதற்கான ஆதாரத்தைக் காந்தியிடம் கேட்டிருந்தால் அதற்கு அவசியமில்லை என்று சொல்லி யிருக்கக்கூடும். காந்தியைக் கொன்ற கோட்சே பகவத்கீதைக்குக் காந்தி கொடுத்த விளக்கத்தை மறுத்து, அது மனதளவில் நடப்பது அல்ல, உண்மையான போர் பற்றி பேசுகிறது என்றான். காந்திக்கு இது எப்படிச் சாத்தியமானது? எந்தத் தளத்தில் நின்று அவர் பகவத் கீதையை எதிர்கொண்டார்? ரபீந்த்ரநாத் தாகூர் மற்றும் காந்தி சம்பந்தப்பட்ட இரண்டு நிகழ்வுகளை நாம் இவற்றோடு இணைத்துப் பார்க்க முடியும். ஒருமுறை காந்தி சாந்தி நிகேதன் சென்றிருந்தபோது ஒரு இளம் பெண் அவரிடம் ஆட்டோகிராப் நோட்டை நீட்டி இருக்கிறாள். காந்தி அதில், ‘தீரயோசிக்காமல் எந்த வாக்குறுதியையும் கொடுக்காதே. அப்படிக் கொடுத்து விட்டால் உன் உயிரை விட்டேனும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சி செய்' என்று எழுதிக் கையெழுத்திட்டார். காந்திக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த தாகூர் காந்தியின் வாசகத்தைப் படித்துக் கோபம் கொண்டார். அந்தப் பெண்ணிடம் கவிதை ஒன்று எழுதி, காந்திக்கு புரிய வேண்டும் என்பதற்காகவே, ‘கொடுத்த வாக்குறுதியைத் தவறு என்று பின்னால் உணர்ந்தால், அதை விட்டெறிந்து விடு' என்று ஆங்கிலத்தில் எழுதினார். இந்த நிகழ்வில் நாம் யார் சார்பு எடுக்கிறோம் என்பது, நாம் எந்தத் தளத்தில் இயங்குகிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டது. அவ்வாறே நாம் புதிதாகப் பிறக்கவும் முடியும். அறிவு சார்ந்த பார்வையை தாகூர் முன்வைத்தார் என்றால் காந்தி அறம் சார்ந்த பார்வை முன்வைத்தார். மற்றொரு சம்பவம், 1934-இல் ஜனவரியில் நிகழ்ந்தது. பீகாரில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என்று ஆயிரக்கணக்கானோர் மாண்டனர். காந்தி அதைப் பற்றி எழுதும் போது, ‘நம்மை போன்ற மனிதர்களால் நம்ப முடியாமல் போகலாம். இந்த நிலநடுக்கம் என்பது கடவுள் நாம் செய்யும் பாவங்களுக்குக் குறிப்பாக தீண்டாமை என்ற பாவத்திற்குக் கொடுத்த பெரும் தண்டனை. என்னைப் பொறுத்தவரை இந்தத் துயர சம்பவத்திற்கும், தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரத்திற்கும் தொடர் புண்டு' என்று எழுதினார். தீண்டாமையை எதிர்த்த தாகூரால் ஒரு இயற்கைப் பேரழிவை அதுவும் குழந்தைகள், பெண்கள் என்று ஆயிரக்கணக்கானோர் மரணம் கண்ட ஒரு பேரழிவுக் குறித்து காந்தி இப்படி விளக்குவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்குப் பதிலாக அவர், ‘எல்லாவற்றையும் காட்டிலும் துயரப்படக்கூடிய விஷயம் எதுவென்றால் காந்தியின் இந்த அறிவு சாரா விளக்கத்தைப்பெரும்பான்மையான இந்தியர்கள் ஏற்றுக்கொள்வதுதான்' என்று எழுதினார். (அ.மார்க்ஸ் தன் நூலில் வைதீக சனாதனிகளிடமிருந்து காந்தியை வேறுபடுத்திக் காட்ட இந்த நிகழ்வைக் குறிப்பிடுகிறார். MIDS-யை சேர்ந்த டாக்டர் லஷ்மணன் இதே சம்பவத்தைக் குறிப்பிட்டு தாகூர், காந்திக்கு கொடுத்த ‘மகாத்மா' என்ற பட்டத்தைத் திரும்பப் பெற்றதாகத் தெரிவித்தார்) காந்தியின் இந்த விளக்கத்தையும், தாகூரின் கோபத்தையம் நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பது, நாம் எந்த மரபை அடிப்படையாகக் கொண்டு பார்க்கிறோம் என்பதை பொறுத்துதான். காந்தியிடம் எந்த ஒரு நிலைப்பாட்டிற்கு அணுகினாலும் அறம் சார்ந்த தளத்தில் மட்டும் இயங்குவதை உணர முடியும். அறிவார்ந்ததளம் எப்போதுமே அவர் முன் தலைகுனிந்து நிற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இளைஞர்களே, யுவதிகளே - நீங்கள் எந்தத் தளத்தில் இயங்கப் போகிறீர்கள் என எடுக்கின்ற முடிவு, உங்களைப் புதிதாய் மீண்டும் பிறக்க வைக்கும். சிந்தியுங்கள், புதிதாய்ப் பிறப்பெடுங்கள். வரலாறைப் புத்தகங்களின் வழியாகவோ அல்லது கட்டமைக்கப்பட்ட உன்னதங்கள் வழியாகவோ அதன்பின் அவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். மகாத்மா காந்தியின் இராட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். இன்றளவும் அவரது நினைவு தினத்தில் தலைவர்கள் இராட்டையில் நூல் நூற்பது ஒரு சம்பிரதாயமான குறியீட்டு நிகழ்வு. எளிமையும், கதரும் ஊடுபாவான ஒரு படிமம். ஆனால், இரபீந்திரநாத் தாகூர், காந்தியின் இராட்டை இந்திய மக்களின் தொகையின் குறைந்த பட்ச நிர்வாணத்தை மறைக்கக்கூட போதுமானதாக இருக்காது என்றார். தாகூர் இராட்டைப் பொருளாதாரத்தை ஏற்றுக் கொள்வில்லை. காந்தியின் இராட்டை தவறான பொருளாதாரத்தைத்தான் முன்வைத்தது. அதில் சந்தேகமில்லை. காந்தி இதை அறியாதவராக இருந்திருக்க முடியாது அவர் பொருளாதாரத்தையும் வரலாற்றிலிருந்து பிரித்து அறத்தளத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சித்தார். காந்தி தீண்டாமையை எதிர்த்தார். ஆனால் தன்னை சனாதனி என்று போற்றிக் கொண்டார். வருணப்பிரிவு பொருளாதாரத்திற்கு அவசியம் என்றார். (ஆனால் அவருடைய மகனுக்கும், இராஜகோபாலாச்சாரி மகளுக்கும் நடந்த திருமணத்தை காந்தி எதிர்த்தார்) இராஜாஜியும் எதிர்த்தார். காந்தி தன்னைச் சனாதனி என்று சொல்லிக் கொண்டது கூட ஒரு நிலப்பிரபுத்துவத் தாய் மனநிலையை வைத்துத் தான். (அம்பேத்கர், பெரியார் போன்றோர் இவ்விஷயத்தில் காந்திக்கு எதிர்நிலை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை). ஒரு கருத்தை, ஒரு நிகழ்வின் எதிர்வினையை, கண்முண் காணா வரலாறைப் பிறரது அபூர்வ தரிசனத்தில், ஒரு சராசரி மனிதன் உணர நேரிடும் போது, அதனூடாக அவன் மறுபிறப்பெடுக்கிறான். மகாத்மாவின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களைத் தாண்டி, அவர் பல பரிசோதனைகளை மேற்கொண்டபடிதானிருந்தார். அதில் மிக முக்கியமானது அவரது பிரம்மச்சரிய விரதம். 1906 முதல் சாகும் வரை பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்வதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டார். சாகும்வரை அந்த உறுதிமொழியோடு போராடிக் கொண்டிருந்தார். 1920 வாக்கில் நடக்கும்போது இளம் பெண்கள் தோளில் தன் கைகளைப் போட்டுக் கொள்ளும் பழக்கத்தைக் காந்தி தொடங்கினார். நையாண்டியாக அந்தப் பெண்கள் தன்னுடைய ‘கைத்தடி' என்று குறிப்பிட்டார். இதன் அடுத்தகட்டமாக பெண்கள் அவர் உடலுக்கு மசாஜ் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். இதனைத் தொடர்ந்து குளிக்கும் போது பெண்களுடன் சேர்ந்து குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார். சுசீலா நாயர் அவர்கள் அவரோடு சேர்ந்து குளிப்பது என்பது வழக்கமாகவே இருந்தது. அத்தகைய சமயங்களில் காந்தி உடன் குளிக்கும் பெண்கள் சங்கடப்படாமல் இருக்க, தன் கண்களை மூடிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதுபெரும் சர்ச்சையைக் கிளம்பிய போது இந்த குளியல் சடங்கைப் பற்றி விலாவரியாக எழுத காந்தி எவ்வித தயக்கமும் காட்டவில்லை. இதன் அடுத்த கட்டமாக இளம் பெண்களுக்கு அருகிலோ, நெருக்கமாகவோ அவர்களுடனோ படுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார். இவை எல்லாமே திரைமறைவும் இன்றி நிகழ்த்தப்பட்டது. இந்தப் பரிசோதனைகளின் நோக்கம் என்பது ஆண் உடல், பெண் உடல் இவற்றிற்கு இடையேயான வேற்றுமையைக் களைந்தெடுப்பதே ஆகும். இந்தப் பிரம்மச்சரிய பரிசோதனைகளை வினோபாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் இந்தப் பரிசோதனைகளை முன்வைத்து ஹரிஜன் பத்திரிகை ஆசிரியர் குழுவில் இருந்து வெளியேறினார். ஒருசமயம் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில்: "பரிசோதனைகளை, மனதளவில் நடத்த விரும்பவில்லை" என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். மரபுக்கு எதிரான காந்தியின் இந்த பரிசோதனைகள் பற்றிக் கேட்டபோது, "இத்தகைய முயற்சிகள் இல்லாமல் முன்னேற்றம் காண முடியாது" என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். அத்தோடு, "சில சமயங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிமுறைகளை மீறுவதையும் என்னுடைய கடமையாகக் கருதுகிறேன்". ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிமுறைகளை அறத்தின் பாலோ அல்லது அறிவின் தெளிவு கொண்டோ நாம் மீறும் ஒவ்வொரு முறையும் புதிதாய்ப் பிறப்பெடுக்கின்றோம். மரபு சார்ந்த சிந்தனைகள், உருவகங்கள், அடையாளங்கள் எல்லாவற்றையும் தன்னிலைக்கு எடுத்து வந்து மறுஉருவாக்கம் செய்வதைக் காந்தியிடம் திரும்பத் திரும்பக் காணமுடியும். அதன் மூலமே அவர் புதிதாகப் பிறப்பெடுத்தபடி இருந்திருக்கிறார். காந்தி தன் பேத்தி மனுகாந்தியோடு பரிசோதனையில் ஈடுபட்டதும் அது வெளியுலகிற்குப் பிரபலப்படுததப்பட்டதும் அவரைப் பெருஞ்சிக்கலில் மாட்டியது. எல்லோருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. ஒரு துயர நாடகத்தின் கடைசிக் காட்சிபோல் காந்தி உதாசீனப்படுத்தப்பட்டார். அவரைக் கண்டித்து ஆயிரக்கணக்கான கடிதங்கள் அவருக்கு அனுப்பப்பட்டது. தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில், அவரும் மனுகாந்தியும் தூக்கத்தின் நடுவே கொலை செய்யப்பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை என்று எழுதினார். ஆனால் இன்றளவும் இவ்வளவு வெளிப்படையாகத் தன் அத்தனை சோதனைகளையும் தெரியப்படுத்திப், பகிர்ந்து கொண்டு, விமர்சனங்களுக்கும் வழி விட்டமையாலேயே அவர் ‘மகாத்மா' எனப்படுகிறார். "மனித வரலாற்றில் யார் முக்கியமான மனிதன்? ஆல்ப்ஸ் நோக்கி முதன் முதல் படையெடுத்தவனா? அல்லது முதன் முதலாகத் தானே ஒரு இரும்பு மண்வெட்டியைச் செய்த பெயரற்ற காட்டுவாசியா? சட்டங்களும், அரசியல் சாசனங்களும் நம்முடைய வாழ்க்கை அல்ல, நாம் வாழ்க்கை நடத்துவதற்கான வீடுகள்". அதனை உண்மையாக உணர்ந்தவன் இலக்கியவாதி மட்டுமே! * * * * *
No comment