இந்தக் கவிஞன் நிச்சயம் ஜெயிப்பான்

அன்பு நண்பர் சு. ரகுநாத் கவிதை வெளியில் புதியதாய் பிரசவித்துத் தவழத் துவங்கிய புதுக்கவிதைக் குழந்தை. அபத்தசிந்தை நோயாகத் தாக்காமல் சமுக மேம்பாட்டின் மீது தீராக் காதல் கொண்ட ஆரோக்கியமான குழந்தை என்பதாலேயே இதை வரவேற்கிறேன்.
கவிஞர் கந்தர்வன் “ஒவ்வொரு மனிதனும் சாவதற்குள் ஒரு முறையாவது ஒரு கவிதை எழுதிவிட வேண்டும்” என்று சொல்வார். காரணம் - கவிதை தான் மனிதனை மனிதனாய் உணர்த்தும் மகாசக்தி. ரகுநாத் மானுடநேயனாக தன்னை உணர்ந்துள்ளார். ஆக அவர் எழுதுவதற்கான முதல் தகுதியைப் பெற்றுவிட்டார். இனி பயணத்தை துவங்க வேண்டியது தான்.
“பனியின் நடுக்கம் 
சூரியனின் வியர்வை 
ஆற்றின் தாகம் 
நிலத்தின் வலி” 
இதை உணர்ந்ததுண்டா என்று கேட்கையில் "சூரியனின் வியர்வை” என்ற சொல் கற்பனைக்கு சவால் விட்டு சொக்கவைக்கிறது.
“கோபத்தில் விடும் காய் கூட சீக்கிரம் பழுத்து விடுகிறது” என்று குழந்தையை ரசிக்கும் ரகுநாத்தின் இவ்வரி எனக்கு மிகப் பிடித்திருந்தது. கவிஞர் மேத்தாவின் கண்ணீர் பூக்களின் காலத்து கவிமொழியை மீண்டும் தம் பிரதியில் இயக்கியுள்ளார். அதனை உரமாகக் கொண்டு, புதிய நடைக்குள் அவர் பிரவேசிக்க வேண்டும். தனக்கானதொரு கவிமொழியை அவர் கண்டடைவார் என்கிற நம்பிக்கை எனக்குண்டு. 
வார்த்தை நுட்பமானது. அதனுள் இயங்கும் நுண் அரசியல் அதை விட நுட்பமானது. நமது பிள்ளைகளுக்கான வரலாற்று பாடதிட்டத்திலிருந்து ஒரு சான்று : 
இரண்டு இனங்கள் இந்தியாவிற்குள் நுழைகின்றன. ஒரே குறிக்கோள் தான். ஆனால் ஒன்றை ஆரிய வருகை என்றும், இன்னொன்றை இஸ்லாமியப் படையெடுப்பு என்றும் எழுதுகிறோம். சொல்லிக் கொடுக்கிறோம். ஆரியத்திலிருந்து திராவிடத்தை மீட்க எத்தனை போராட்டம் - எத்தனை தலைவர்கள் - எத்தனை இயக்கங்கள் தேவைப்பட்டன!  அதை நினைவுப்படுத்தும் விதமாய் அதையொத்த யதார்த்த சொல்லாட்சி ஒன்றைச் சொல்கிறார் ரகுநாத் - 
“வழிமாறும் பெண்ணை ஆண் அடக்கவேண்டும். தடம் மாறும் ஆணை பெண் திருத்தவேண்டும்” என்றெழுதிவிட்டு ஏன் இப்படி, எனக்கேட்கிறார் ரகுநாத். ஒரே செயல் தான் - ஒன்று அடக்கப்படுகிறது. ஒன்று திருத்தப்படுகிறது. ஆதிக்கத்தின் ஒருதலைபட்சமான அணுகுமுறையை மிகக் காத்திரமாக, நுட்பமான அரசியல் நோக்கோடு கோடிட்டுக் காட்டியதை நான் மிக ரசித்தேன். 
ஆண்டவனை “இறந்தகால வினைச்செயல்” என்று எழுதி பகுத்தறிவு முகம் காட்டும் ரகுநாத், 
"அடுத்த வீட்டுப் பெண் என்றால் ஆடை களவு. 
தன் தங்கை என்றால் சேலை அருளா” 
என்று கிருஷ்ணனைக் குற்றவாளி கூண்டில் ஏற்றிப் பேத புத்தியை சுட்டிக்காட்டும் வரி சுகமானது. இக்காலக்கட்டத்திற்கு மிக அவசியமானது. 
39வது எண்ணில் வரும் மோர் கிழவி கவிதையில் சோலையம்மனுக்கு வைகையில் நீர் இல்லாமல் ஆழ்துளைகிணற்றில் நீர் பெறுவதை சொல்லுமிடத்தில், விழாவின் போது “வைகையில் வெயிலில் குளிக்கும் மக்கள் மந்தை” என்று முரணாகிப் போன சூழலை சொல்வது சமகால அவலம் குறித்த அவரது கவலைப் பதிவு.
	கதைவெளியில் முத்துகாமிக்ஸ், அம்புலிமாமா, பாலகுமாரன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, எனச் சிறுகதையில் ஒரு நீள்பயணம் வழியாக ஒருவாசகன் கடந்து வருகையில் படைப்பாளியாய் பரிணாமம் பெற்றுவிடுவதை போல் தான் கவிதை வனத்தினூடான பயணமும்.
	சு.ரகுநாத் இந்த நூலின் வழியாக துவங்கியுள்ள முதல் கவிதைப் பயணம் மகிழ்ச்சியை மட்டுமல்ல - சிறந்த கவிஞராய்ப் பரிமாணம் பெறுவார் என்கிற நம்பிக்கையையும் தருகிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். இன்னும் தீவிரமாகப் பயணப்பட தனது வாசிப்பு அனுபவத்தை அவர் விசாலமாக்கிக் கொள்ள வேண்டும். கவிதை எனும் மொழியின் இளவரசியைக் கொஞ்சமேனும் கைவசப் படுத்தும் மாயச்சாவி வாசிப்பின் துணையோடு கூடிய வாழ்வனுபத்தின் மையத்திலே தான் இருக்கிறது. தொடர்ந்து இதே உத்வேகத்தோடு முனையுங்கள் - ரகுநாத்! 
உங்கள் வளர்ச்சியை அன்போடும், ஆவலோடும் எதிர்பார்த்தபடியிருக்கும்.

                                                                                              * * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *