“இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை’’ சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டம் 09.02.2009

09.02.2009 அன்று புதுக்கோட்டையில்,
“இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை’’ சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை

யாரும் அறியா வைகறை இருளில் முதல் ஒளியாய் ஒருவர் எழுதுகோலை எடுத்துக் கொண்டு ஒரு இனத்தின் விடுதலைக்காகவும், தமிழ்மக்கள் நிம்மதியாக உறங்குவதற்காகவும் உழைத்துக் கொண்டிருக்கிறாரே அந்தப் பெருமை மிகுந்த தலைவரை, களங்கமில்லாச் சூரியனைத் தலைவராகப் பெற்ற,  96,000 கிளைக் கழகங்களையும், ஒரு கோடி உறுப்பினர்களையும் தன்னகத்தே கொண்ட தனித்த பெருமைமிக்க உலகின் ஒப்பற்ற ஒரே இயக்கமான திமுக சார்பிலே இன்றைக்கு, இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்கின்ற அமைப்பின் கட்டளையை ஏற்று ஏற்பாடு செய்யப்பட்டு மிகப் பெரிய எழுச்சியோடு இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்தப் பொதுக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கி அமர்ந்திருக்கின்ற, இந்த கழகத்தின் இரும்புத் தூணாக விளங்கி, இயக்கத்தைக் கட்டி காத்த பெரியவர் பெரியண்ணன் அவர்களது புதல்வரும், மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய மாவட்டச் செயலாளர் அரசு அவர்களுக்கும், இந்தப் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நமது மாண்புமிகு அமைச்சர் எஸ். ரகுபதி அவர்களுக்கும், வரவேற்புரை ஆற்றிய மாவட்ட அவைத் தலைவர் சந்திரசேகரன் அவர்களுக்கும், எனக்கு முன்பாக ஒரு கவிதை உரையை ஆற்றிச் சென்றிருக்கிற கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்களுக்கும், திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்களுக்கும் மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும், நன்றியுரை ஆற்ற இருக்கின்ற தோழர் அவர்களுக்கும் கழகத்தின் உடன்பிறப்புகள், இந்தப்பிரச்சினை குறித்து என்ன பேசப்போகிறோம் என்று அறிந்து கொள்ள காத்திருக்கும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய வணக்கம்.
	இந்தப் பொதுக்கூட்டம் நம்முடைய ஒப்பற்றத் தலைவரின் ஆணைப்படி இலங்கையிலே போர் நிறுத்தம் ஏற்பட வழிவகை செய்வதற்கு, இலங்கையிலே தமிழ் மக்கள் சுயாட்சியை, அரசியல் ரீதியாகப் பெற்றிட நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நகரத்திலே இக்கூட்டம் நடைபெறுவது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக எனக்குப் படுகிறது.  ஏனென்றால், இந்த புதுக்கோட்டை மாவட்டம் சரித்திர ரீதியாக, வரலாற்று ரீதியாகப் பார்த்தால் பல்லவர், சேரன், சோழர்களும், பாண்டியர்களும் ஆட்சி செய்த மாவட்டம்.  அஜந்தா, எல்லோராவிற்கு இணையாக சித்தன்ன வாசல் ஓவியங்களைப் பெற்றிருக்கிற மாவட்டம். அது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டியைத் தந்தது இந்த ஊர். வீரர், தியாகி சத்தியமூர்த்தி அவர்களை நமக்கு தந்தது இந்த புதுக்கோட்டை மாவட்டம்.  பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரால் மிகச் சிறப்பான முறையிலே இயங்கிக் கொண்டிருக்கிற பழப் பண்ணை அமைந்த மாவட்டம் இந்த மாவட்டம்.  இத்தனைச் சிறப்புகளைவிட கூடுதலான சிறப்புப் புதுக்கோட்டைக்கு உண்டு.  நம்முடைய தமிழகத்தின் வரலாற்றிலே பதியப் பெற்றிருக்கிற சிறப்பு ஒன்று உண்டு.  1948ம் ஆண்டு நம்முடைய கழகம் உருவாவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பாக இந்தப் புதுக்கோட்டை நகரிலே நடைபெற்ற ஒரு கூட்டத்துக்குத் தோழமைக் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தப் புதுக்கோட்டை நகருக்கு நமது ஒப்பற்றத் தலைவர் அவர்கள் வருகிறார் - தம்முடைய துணைவியார் உடல் நலிவுற்று இருந்த நிலையிலும்!  கூட்டத்தை முடித்துவிட்டு சரக்குந்திலே அவர் திரும்பிச் செல்கிற போது துணைவியார் இறந்த செய்தியை அவர் அறிகிறார். அன்றிலிருந்து ஆரம்பிக்கிற அந்தத் தியாகத்தின் தொடக்கப் புள்ளியாக இருந்தது இந்தப் புதுக்கோட்டை மாவட்டம் தான். இன்றைக்கு இந்த நகரத்திலே நம்முடைய தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களுடைய பிரச்சினையை, தமிழ் மக்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்த, ஈழப் பிரச்சினையில் நம்முடைய இயக்கத்தின் செயல்பாடு என்ன? கடந்து வந்த தடம் என்ன? என்பது குறித்து தெளிவாக மக்களிடையே ஒரு விழிப்புணர்வை, எழுச்சியை உருவாக்கும் விதமாக இந்தக் கூட்டம், பேரணியைத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  
நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள், கோவையில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு விழாவிலே ஒரு கருத்தை சொன்னார் - "திமுக என்பது உணர்வுகளின் கலப்பு, உணர்வுகளின் சங்கமம், ரத்தக் கலப்பு மிகுந்த இயக்கம் திமுக. சாதாரண ரத்தக் கலப்பு அல்ல, சுத்தம், சுயமான தமிழ் இரத்தக் கலப்பு மிகுந்த இயக்கம்" என்று சொன்னார்.  அதே உணர்வோடு தமிழர்களின் துயரத்திலே, தொப்புள் கொடி உறவுகளின் துயரத்திலே பங்கேற்று அதை துடைக்க நாம் இன்று மத்திய அரசை கேட்க, இந்த கூட்டத்திலே ஒரு உணர்வோடும், எழுச்சியோடும் கூடியிருக்கிறோம்.  இலங்கையிலே ஒரு பெண் கவிஞர் எழுதியிருக்கிறார்.  தன்னுடைய கவிதையை எழுதிவிட்டு எரித்து தற்கொலை செய்து கொண்டார்.  அவர் எழுதிய கவிதை, "ஒரு சமூகத்தின் தொப்புள் கொடிக்கு முன்பாக துப்பாக்கி முனை நீட்டப்படும்போது, ஒரு பூ மீது அமர்கின்ற மெல்லிய வண்ணத்துப் பூச்சியின் கனவு என்பது, எனக்கு சம்பந்தம் இல்லாத வெறும் சம்பவம் மட்டுமே".  ஆம், அங்கே ஒரு இனம் கொழுந்து விட்டு எரிந்து, அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கொத்து கொத்தாக நம்முடைய சகோதர சகோதரிகள், தமிழன், தமிழச்சிகள் கொல்லப்படுகிறார்கள்.  அப்படி இருக்கும் போது இங்கே நடைபெறுகிறது வெறும் சம்பந்தமற்ற சம்பவங்களா? அல்லது நாம் அதை சம்பந்தமுடைய சரித்திரமாக மாற்றப் போகிறோமா என்பது தான் நமக்கு முன்னால் உள்ள கேள்வி. நம்முடைய சகோதர சகோதரிகள் இப்படிப்பட்ட இனப் படுகொலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.  தனி ஒரு இனத்தின் மீது ஏன் இப்படிப்பட்ட ஒரு தாக்குதல் நடத்தப்படுகிறது?  இன்றைக்கு சரியாக 90 ஆண்டுகளுக்கு முன்பாக 1918ம் ஆண்டு 11வது மாதம், 11ம் தேதி, சரியாக 11 மணிக்கு, உலகையே உலுக்கிய முதல் உலகயுத்தம் முடிவிற்கு வந்தது.  அந்த உலகயுத்தத்தில் கூட எந்த ஒரு தனித்த இனத்தின் மீதோ, தனித்த மொழிபேசும் ஒரு இனத்தின் மீதோ, இப்படிப்பட்ட தாக்குதல் நடந்தது கிடையாது. ஒரு மொழியை பேசுகின்ற ஒரு குற்றத்திற்காக, நாம் பேசுகிற தமிழ் மொழியை அவர்கள் பேசுகிற ஒரு குற்றத்திற்காக ஒரு இனம் அங்கே கொத்து கொத்தாக அழிக்கப்பட்டு வருகிறது.  அதைப் பார்த்துக் கொண்டு நாம் எப்படி சும்மா இருக்க முடியும்? அதனால் தான் பேரணிகளும், பொதுக் கூட்டங்களும், பிரச்சாரங்களும், நமது தலைவரது கட்டளையின்படி, இங்கே ஏற்பாடு செய்யப்பட்டு, ஒரு புயல் வேகத்தில் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.  ஒரு வவுனியா தமிழன் மிக சமீபத்தில் சொல்வதைக் கேளுங்கள். அவன் சொல்கிறான், ஏன் எங்கள் தலையை குறிபார்த்து மட்டும் ஏன் வெடிகுண்டு கள் வீசப்படுகின்றன? "ஏன் நாங்கள் மட்டும் மருத்துவ உதவியின்றி, கேட்பாரின்றிச் செத்து மடிய வேண்டும்?  ஏன் எங்கள் இனத்து பெண்கள் மட்டும் வன்முறைக்கு ஆளாக வேண்டும்?  நான் அல்லது நாங்கள் தமிழனாக பிறந்த குற்றத்தைத் தவிர வேறு என்ன செய்திருக்கிறோம்?" எண்ணிப் பாருங்கள்.  அவன் தமிழன்.  அவன் பேசுகிற மொழிதான் நாம் பேசுகிற மொழி.  அவன் பேணுகிற கலாச்சாரம், நம்முடைய தமிழ் கலாச்சாரம். அவர்களுடைய பண்பாடு நம்முடைய பண்பாடு. அவர்களுடைய கலை, இலக்கியம் நம்முடைய தமிழ்கலை இலக்கியம். நம்முடைய கலைக்கும் இலக்கியத்திற்கும் ஈழத்தமிழர்களுடைய பங்களிப்பு எத்தனை முக்கியமானது தெரியுமா?  பழைய தமிழ் நூல்கள் பலவற்றைப் புதுப்பித்தவர்கள் அவர்கள், பழந்தமிழ் நூல்கள் பலவற்றிற்கு உரைநடை எழுதியவர்கள் ஈழத் தமிழர்கள். மிகக் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், விவிலய இலக்கியத்தை முதலாவதாக தமிழிலே மொழிபெயர்த்தவர் ஈழத் தமிழர் ஒருவரே.  தமிழில் மிக முக்கியமான இரண்டாவது நாவல் என்று சொல்லப்படுகிற "அசன்பே சரித்திரம்" என்கின்ற அந்த நாவல் எழுதப்பட்டது சித்திலெப்பை மரக்காயர் என்கின்ற ஒரு ஈழத் தமிழர் ஒருவரால். நண்பர்களே! உலகத்திலேயே மிகச் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு ஒன்று தொகுக்கப்படுகிறது, ஆண்டுகளுக்கு முன்பாக.  அந்தத் தொகுப்பிலே இடம் பெற்றிருந்த ஒரே ஒரு தமிழ் சிறுகதையை எழுதியவர் ‘அழகு சுப்ரமணியன்’ என்கின்ற ஈழத் தமிழர்.  ‘ஆனந்த குமாரசாமி’ என்கின்ற ஒரு மிகப் பெரிய ஒரு தமிழர் உலகளாவிய புகழ்பெற்ற `The Dance of Siva’ என்ற நூலை எழுதிய அவரும் ஒரு ஈழத் தமிழர். இப்படி நம்முடைய கலைக்கும், இலக்கியத்திற்கும் பெரும் பங்களிப்புச் செய்திருக்கிற அவர்களுடைய துயரம் குறித்தும், எதற்காக அவர்கள் இப்படிப்பட்ட ஒரு அல்லலுக்கு உள்ளாக வேண்டும் என்றும் நாம் கவலைப்பட்டு நிற்கின்ற நிலை இன்றைக்கு இருக்கிறது.  
எப்படிப்பட்ட நிலை அங்கு இருக்கிறது, எப்படிப்பட்ட அவலம் அது? ஒரு கிலோ அரிசியின் விலை அங்கே ரூ.150க்கு விற்கப்படுகின்றது.  கெரசின் ரூ.350க்கு விற்கிறது.  வீடு இழந்து, நாடு இழந்து, கிராமம் இழந்து புழுக்களைப் போல மக்கள் இடம் பெயர்கிறார்கள்.  அங்கே, பஞ்சம், குடிகளப் பெருக்கம், மருத்துவ வசதியின்மை,  இப்படியெல்லாம் அல்லல் பட்டு பற்பல நாடுகளுக்கு, வெளியே சொல்ல முடியாத அளவுக்கு குடிபெயர்ந்து செல்கின்ற இனம் எது என்று தெரியுமா? இன்றைக்கு உலகில் மூத்த, பழைய பெருங்குடி நாங்கள் என்று பெருமிதத்தோடு சொல்கின்ற தேசிய இனமான தமிழ் இனம்! அந்த நிலை மாற, அந்த அவலம் மாற, நாம் மத்திய அரசை மேலும் வலியுறுத்திக் கேட்கக் கூடிய நிலையிலே இருக்கின்றோம்.  இந்தப் போர் என்ன இலங்கைக்கு மட்டும் பிரத்யேகமான போரா என்ன?  கிழக்கு தைமூர் என்பது 1,500 தீவுகளுக்கிடையே உள்ள ஒரு சிறிய தீவு.  1985ல் போர்ச்சுகல் காலனியாக இருந்த அதனை அதிரடியாக இந்தோனேஷியா கைப்பற்றியது.  சும்மா இருந்தார்களா கிழக்கு தைமூர் மக்கள்,  கடைசிவரை போராடி ஐ.நா. சபையின் ஒப்புதலோடு கணக்கெடுப்பு நடத்தி தமக்கான ஒரு ஆட்சியை அவர்கள் அங்கே அமைத்துக் கொண்டார்கள்.  அது அங்கு மட்டுமா நடந்தது - யுகோஸ்லோவியாவிலும், அல்பேனியாவிலும் நடந்தது. உலகில் எந்தப் பகுதியில் இன்னல் நடந்தாலும், அதற்கு இந்தியப் பேரரசு கருணைக் கண்கொண்டு உதவிக் கரம் நீட்டி ஆதரவு கொடுத்ததற்கான சான்றுகள் உள்ளன.  கிழக்கு பாகிஸ்தானில் வங்க மொழி பேசுகின்ற மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.  கூட்டம் கூட்டமாக வந்து அகதிகளாக அவர்கள் இந்தியாவிலே குடியேறினார்கள் என்று கேள்விப்பட்டவுடனே, கருணைமிக்க முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் வங்கதேசம் என்ற ஒன்றை அந்த மக்களுக்காக உருவாக்கித் தந்தார்கள்.  அதனை நாம் வரலாற்றிலே பார்க்கிறோம். அதோடு உகாண்டாவிலே ஒரு ஆணை பிறப்பிக்கப்படுகிறது.  அடுத்த கணம் இந்தியர்கள் அனைவரும் உகாண்டாவிலியிருந்து வெளியேற வேண்டுமென்று.  இங்கே இந்தியப் பிரதமர் தனிப்பட்ட முறையிலே வான் ஊர்தி ஒன்றை (ஏரோப்பிளேனை) அனுப்பி அங்கிருக்கிற இந்தியர்களைப் பத்திரமாக கொண்டு வந்த வரலாற்றையும் நாம் அறிவோம்.  அவ்வளவு தூரம் ஏன்? இன்றைக்கு நீங்கள் தென்னாப்பிரிக்காவிலே இன வெறிக்கு எதிரான முதல் குரலை பதிவு செய்தது இந்தியாதான்.  பாலஸ்தீன போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு கொடுத்து ஆறுதல் கரம் நீட்டியதில் முதலிடம் வகித்தது இந்தியா தான்.  கருணைக் கண்கொண்டு உலகில் அத்தனை துயரங்களையும் இந்திய அரசாங்கம் அணுகியிருக்கிறது. அவர்களிடம் நம்பிக்கை வைத்து நாம் கேட்கிறோம்.  சமீபத்திலே கூட, காங்கோவிலே நடந்த உள்நாட்டுப் போரிலே ஐ.நா. படைகளுக்கு ஆதரவாக நம்முடைய படைகளும் அங்கே சென்றது குறிப்பிடத்தக்கது.  இத்தனை கருணை உள்ளத்தோடு நடந்து கொண்டிருக்கிற இந்திய அரசாங்கத்திடம் நாம் கேட்பது ஒன்றுதான்,  அரசியல் ரீதியிலான தீர்வு, சுமூகமான தீர்வு. மிகக் குறிப்பாக தமிழர்களுடைய வடக்கு, கிழக்கு மாகாணங்களை சுயாட்சி முறையிலே, அரசியல் ரீதியிலான தீர்வைக் காண உடனடியாக அங்கு போர் நிறுத்தம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும், அதற்கு மத்திய அரசாங்கம் முனைப்போடு செயல்பட வேண்டும் என்பது தான் தோழமைக் கட்சிகளாகிய நாம் அனைவரும் முன்வைக்கின்ற கோரிக்கை.  
சுதந்திரத்திற்குப் பிறகு, நம்முடைய தமிழ் மக்களை இலங்கை அரசாங்கம் எப்படி நடத்தி வந்தது?  1948க்குப் பிறகு அப்போதைய இலங்கைப் பிரதமராக இருந்த ஸ்டீபன் சேனநாயகா இரண்டு சட்டங்கள் கொண்டு வந்தார்.  அந்தச் சட்டத்தின்படி, அங்கிருந்த மலையக தமிழர்கள் 10 லட்சம் பேர் அந்தச் சட்டத்தின் மூலமாக நாடற்றவர்களாக அறிவிக்கப்பட்டார்கள்.  இந்தச் சட்டத்தின் மீதான விவாதத்திலே சிங்களக் கட்சியைச் சார்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ‘பெரைரா’ பேசுகிறார், அவர் தமிழர் அல்ல.  சிங்களக் கட்சியிலே பேசிய அவர், "இதுபோன்ற சட்டங்களை உருவாக்கி, இந்த நாடு சிங்களவர்களாகிய நமக்கு மட்டுமே சொந்தம் என்று நினைத்தோம் என்றால் என்றைக்கும் நாம் நிம்மதியாக இருக்க முடியாது".  சொன்னது சிங்களக் கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்.  அந்தச் சட்டத்தின் மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தந்தை செல்வாவும் அதை ஆமோதிக்கிறார்.  "தமிழ் மக்களை மௌனியாக இருக்கக் கொண்டு வந்த சட்டம் - என்றைக்கும் தீமையை விளைவிக்கும் அது," என்று சொன்னார் இலங்கையின் காந்தி தந்தை செல்வா.  அவர் சொன்னதுதான் நடந்தது.  யுத்தம் வந்தது.  என்றைக்கு யுத்தம் வந்தது என்றால், அஹிம்சை வழியில் போராடிப் பார்த்து அப்போராட்டம் தோற்ற நிலையிலே தான் யுத்தம் வந்தது.  மூன்று லட்சம் பேர் உயிரிழந்தனர், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் புலம் பெயர்ந்து வேறுநாடுகளுக்குச் செல்கின்றனர்.  மனம் நொந்து வெதும்பிய தந்தை செல்வா, இறுதியாகப் வட்டுக்கோட்டை மாநாட்டிலே "ஈழத் தமிழர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று சொன்ன நிலையிலே கூட போர் முடிந்ததா? அதோடு முடிந்ததா அந்தத் துயரமான காலகட்டம்? இல்லை - அதற்குப்பின் வந்த பிரதமர்கள் இரண்டு சட்டங்கள் "தரப்படுத்துதல் - சிங்களர் மட்டும்" கொண்டு வருகிறார்கள்.  அந்தச் சட்டங்கள் மூலமாக அங்கே இருக்கின்ற நம்முடைய தமிழ் மக்களுக்கு கல்வியிலே, சமூக நீதியிலே, சிவில் உரிமையிலே, தேசிய நீரோட்டத்திலே உரிமைகள் மறுக்கப்படுகின்றன.  அதற்குப் பின்பு தான் தீவிரமாகப் போராட்டம் வெடித்தது. 1977ல் ஜெயவர்த்தனா வருகிறார்.  வந்தவுடன் தமிழர்களுடைய பெயர்கள், கடைகள், தொழில்கள் அனைத்தையும் தரவுகளில் பட்டியலிட்டு சேமித்து வைத்துக் கொள்கிறார். 1981ல் உலகத்தின் புகழ்பெற்ற யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது.  1983 கலவரத்தின் போது இந்திராகாந்தி அம்மையார் சொன்னார், "எங்களுடைய கொல்லைப் புறத்திலே நடக்கின்ற கொடுமைகளைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க முடியாது" என்று.  சும்மாவும் இருக்கவில்லை.  முதலில் நரசிம்மராவை அனுப்பி வைத்தார்.  அவரைத் தொடர்ந்து, ஜி.பார்த்த சாரதி சென்றார். அவர் முன்வைத்த "இணைப்பு-1" என்கிற திட்டம், "தமிழர்கள் வாழ்கின்ற, தமிழ் பேசுகின்ற அந்தப் பகுதிகளில் சுயாட்சி இருந்தால் தான் அவர்கள் நிம்மதியாக வாழ முடியும்" என்ற அந்த திட்டத்தை சிங்கள அரசு ஏற்கவில்லை.  அதற்குப் பின்னால் நடந்த வரலாற்றை நீங்கள் அறிவீர்கள்.  1983க்குப் பிறகு 25 ஆண்டுகளாக நடக்கின்ற கோரங்களை நீங்கள் அறிவீர்கள்.  இன்னல்களையும், அவலங்களையும், இத்தனை துயரங்களையும், போர், பஞ்சம் இத்தனை அவலங்களையும் தாண்டி மிகக் குறிப்பாகப் பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு ஏற்பட்ட துயரங்களை எண்ணிப்பாருங்கள்.  
எழுதுகிறார் ஒரு பெண் கவிஞர், "என்னுடைய இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, என்னுடைய உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நான் எல்லையைக் கடக்கிறேன்.  எல்லையைக் கடக்கும் போது காலிலிருந்த செம்மண்ணைத் தட்டிவிட்டேன்.  செம்மண்ணும் போயிற்று, எம்மண்ணும் போயிற்று" என.  இன்னொரு பெண் எழுதுகிறார், தமிழகத்திலே உங்களுடைய தோழிக்குத் திருமணம் என்றால் எதைப் பரிசாகத் தருவீர்கள்?  புத்தகம், புதிய உடை இப்படி ஏதாவது தருவீர்கள்.  ஒரு ஈழத் தமிழ்ப் பெண் கேட்கிறாள், "என்னுடைய தோழிக்குத் திருமணம், எங்கு பார்த்தாலும் போர், மரணக் கூச்சல், எதைப் பரிசாகத் தருவேன்? கர்ப்பத்தடை மாத்திரையைத் தவிர?" என்று.  இப்படிப்பட்ட ஒரு நிலை அங்கே தொடர்ந்து கொண்டிருக்கிறது.  அங்கே மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன. உலகத்தில் எங்கேயாவது ஓர் அரசு தன் மக்கள் மீதே, அவர்கள் தனித்த மொழி பேசுகிறார்கள் என்பதற்காகக் குண்டு போட்டு அழிப்பதை நாம் கண்டதுண்டா? அதிலும் மிகக் குறிப்பாக சமீபத்திலே உலகத்திலே முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட கொத்துக் குண்டுகள் அங்கே வீசப்படுகின்றன.  மனித உரிமை ஆர்வலர்கள் மிகவும் விரும்பி வேண்டினாலும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மிக சமீபத்திலே இங்கிலாந்து அரசாங்கமும், அமெரிக்க அரசாங்கமும் இணைந்து வைத்த கோரிக்கைக்கு சிங்கள அரசு செவி சாய்க்கவில்லை.  
இத்தருணத்தில்தான் நம்முடைய கலைஞர் அவர்கள், காலம் காலமாக ஈழத் தமிழர்கள் மட்டுமல்லாமல், உலகத்தின் எந்த மூலையில் உள்ள தமிழர்கள் கண்ணீர் சிந்தினாலும் கூட அந்தக் கண்ணீருக்காக குமுறி வெடித்து எரிமலையாக மாறுகின்ற பெருமை மிக்க தமிழினத்தின் மீது என்றென்றைக்கும் பற்று வைத்திருக்கிற ஒரே தலைவர், தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வந்திருக்கிற அந்த வரலாற்றின் தொடர்ச்சியாக இன்றைக்கு மத்திய அரசை மிகவும் வலியுறுத்தி, மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கைக்குச் சென்று வந்திருக்கிறார். சிவசங்கர் மேனன் அங்கே சென்று வந்திருக்கிறார்.  இரண்டு நாள் போர் நிறுத்தம் என்று தற்காலிகமாக ஒரு சிறிய தீர்வும் அங்கே கிடைத்திருக்கிறது.  இத்தனையும் செய்கிற, இத்தனையும் சாதித்திருக்கிற அந்த ஒரு வாய்ப்பு யாருக்காக வந்திருக்கிறது என்றால், ஒரு பத்திரிக்கையாளர் தலைவரிடம் கேட்கிறார், உங்களை நீங்கள் எப்படி வர்ணித்துக் கொள்வீர்கள் என்று, அதற்குத் தலைவர் "நான் ஒரு மானமிகு சுயமரியாதைக் காரன்" என்று.  அந்த மானத்தோடும், சுயமரியாதையோடும் தமிழ் இன மானத்தோடும் இருக்கிற நம்முடைய ஒரே தலைவர் ஆட்சியிலே இருக்கின்ற ஒரே காரணத்தினால் தான். நடுநிலையாளர்கள், பொதுமக்கள் இன்றைக்கு கவனமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். புதிதாக முளைத்த தமிழினத் தலைவர் ஒருவர் இன்றைக்கு நீங்கள் ஐம்பதாண்டு காலத்திற்கு முன் வைத்த திட்டங்களையே இன்றைக்கும் வைக்கிறீர்களே என்று சொல்கிறார். நான் கேட்கிறேன், உங்களுடைய தாயை நீங்கள் ஐம்பதாண்டு கழித்தும் அம்மா என்று தானே கூப்பிடுகிறீர்கள்.  உங்களுடைய உடை, நடை, உணவுப் பழக்க வழக்கங்கள் மாறியிருக்கலாம்.  ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு உங்கள் தாய் பழசாகி விடுவாளா? பழமைக்கும், பழசுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எல்லாம் இப்படிப்பட்ட நோக்கத்தோடு பிரச்சினைகளை அணுகி எங்களுடைய தலைவரைப் பார்த்து கேள்வி கேட்க எந்த விதமான தகுதியும் இல்லை என்பதை மிக அழுத்தமாக இந்த சபையிலே பதிவு செய்கிறேன். இந்த ஆட்சியை துறந்து விட்டால், இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடும் என்கின்ற ஒரு பொய்யான, போலியான வாதத்தை முன்வைத்து இன்றைக்கு பொடாவிலே, தடாவிலே இருந்தவர்கள் பேசுகிறார்களே, அவர்கள் அவர்களுடைய பரிதாபமான நிலையை நினைத்துப் பார்க்க வேண்டும்.  இவர்கள் யாரிடம் உதவி கோரி நிற்பார்கள்? ஒரு அம்மையாரிடம் போய் நிற்பார்கள். அப்படி நின்றால் ஒரு பழமொழிதான் என் நினைவுக்கு வருகிறது.  எங்கள் ஊர் பக்கம் சொல்வார்கள், சாப்பாட்டுக்கு அல்லது பிழைப்பதற்கு வழியில்லை என்று சித்தப்பாவைப் பார்த்து காசுகேட்டு வரலாம் என்று ஒருவர் போனாராம்.  பிழைப்பதற்கே வழியில்லை, உடுத்துவதற்கே துணியில்லை என்று சித்தப்பாவைப் பிச்சை கேட்கச் சென்ற அவரது எதிரிலே ஈச்சம்பாயைக் கட்டிக் கொண்டு சித்தி வந்தாளாம். அந்தளவுக்கு சித்தப்பாவும், சித்தியும் வறுமையில் இருந்தார்களாம்.  ஆக, இந்தப் பிரச்சினையிலே, எங்கள் தலைவர் குறித்து விமர்சனம் வைப்பதற்கு, பேசுவதற்கு தகுதி இருக்கிறது என்பதைப் பொதுமக்கள், நடுநிலையாளர்கள் சற்று சிந்தித்துப் பார்த்துப் பேச வேண்டும். 
எதிர் கட்சியினருக்கு ஒன்று சொல்வேன் - இந்த திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலே இருக்கின்ற அரசு, ஆட்சியிலே இன்றைக்கு இருப்பதால் தான் நம்முடைய தமிழ் இனத்தின் இன்னல் குறித்துப் பேசவாவது முடிகிறது என்பதை மறந்துவிட்டு, எங்களது பங்களிப்புகள் அனைத்தும் நாடகம் என்று சொல்வீர்கள் என்றால், உங்களை விட சிறந்த நாடக ஆசிரியர்களும், உங்களை விட சிறந்த முகமூடி அணிந்தவர்களும் இந்த உலகில் இல்லை என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம், இந்த மக்களுக்குப் புரிய வைப்போம், என்பதை இந்த மன்றத்திலே நான் பதிவு செய்கின்றேன். எங்களுடைய இயக்கம், எனக்கு முன்னர் பேசியவர்கள் குறிப்பிட்டுச் சொன்னதைப் போல 1956ல் அல்ல, 1957ல் அல்ல, 1939லிருந்து இதிலே எப்படிப்பட்ட பங்களிப்பை செய்திருக்கிறது என்பதை உங்களுக்கு சற்று கோடிட்டுக் காட்டலாம் என்று நினைக்கின்றேன். 1939ல் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற அந்த தீர்மானம் முதல் தொடக்கம். 1956ல் சிதம்பரத்தில் திமுக பொதுக்குழுவிலே இலங்கைத் தமிழருக்காக தீர்மானத்தை முன்மொழிந்தவர் நம்முடைய தலைவர். வழிமொழிந்தவர் சுயமரியாதை இயக்கப் போராளி பொன்னம்பலனார் அவர்கள். 1977லிருந்து தொடங்குகிறது இலங்கைத் தமிழருக்கான நமது போராட்டத்தின் சரித்திரம். 29.08.1981ல் மிகப் பெரிய கண்டனப் பேரணியை நம்முடைய இயக்கம் நடத்தியிருக்கின்றது. 15.09.1981ல் தடையை மீறியதற்காக நம்முடைய தலைவர் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்கு முன்பாக ஐந்து லட்சம் பேர் திரண்ட ஒரு மிகப்பெரிய பேரணியை நம்முடைய தலைவர் தலைமையிலான இயக்கம் நடத்திக் காட்டியிருக்கின்றது.  1983 கருப்பு ஜுலை என்று சொல்லப்படுகின்ற அந்த கொடிய நாள் வருகின்றது. கூட்டங் கூட்டமாக தமிழர்கள் அங்கே கொல்லப்படுகின்றார்கள். இங்கு ஒரு பெரும் கண்டனப் பேரணியை நடத்திக் காட்டியது நம்முடைய இயக்கம். 10.08.1983 அன்று இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்த சட்டமன்ற பதவியைத் துறந்தவர் எங்களுடைய ஒப்பற்ற தலைவரும் இனமான பேராசிரியரும். அது மட்டுமா? 1986ம் ஆண்டு மதுரையிலே நடந்த தமிழ் ஆதரவு மாநாட்டை முன்னெடுத்து நடத்தியது நம்முடைய கழகம். அதிலே அகில இந்தியத் தலைவர்கள் என்.டி.ராமாராவ், வி.பி.சிங் இப்படி பலரை அழைத்து வந்து இந்தப் பிரச்சினை குறித்து கவனத்தை ஈர்த்து தீர்மானங்களைப் போட வைத்தது நம்முடைய கழகம். 
2002ல் ஏற்பட்ட அந்த நார்வே போர் நிறுத்தத்தை தன்னிச்சையாக 2008ல் இலங்கை அரசு நிறுத்திக் கொண்டுவிட்டது. இது தற்காப்பிற்கான போர் என்று போராளிகள் தரப்பிலே சொல்லப்பட்டாலும், இலங்கையின் ராணுவ தளபதி பொன் சேகா சொல்கிறார், "அதனை நாங்கள் நம்பத் தயாராக இல்லை, நாங்கள் அத்தனை பேரையும் கொன்று குவித்த பின்பு தான் போர் நிறுத்தம்" என்று சொல்கின்றார். 
அதற்குப் பின்பு இன்றைக்கு வரைக்கும், வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்கின்ற அந்தத் தீர்மானமாகட்டும், கொட்டும் மழையிலும் நடந்த மனிதச் சங்கிலியாகட்டும், இருபது கோடிக்கும் மேலாக நிதி திரட்டி செஞ்சிலுவைச் சங்கம் மூலமாகக் கொடுத்த அந்தக் கருணைஉள்ளமாகட்டும், மூன்று தடவைக்கும் மேலாக சட்டமன்றத்திலே தீர்மானம் இயற்றிய அந்த ஒரு உள்ளமாகட்டும், இன்றைக்கும் தமிழகத்திலே அங்கங்கு சிதறி இருக்கும் சக்திகளையெல்லாம் ஒன்று திரட்டி, ஒரு மிகப் பெரிய போராட்ட சக்தியாக பல்வேறு முனைகளிலும் இந்தப் பிரச்சினையை முன்னெடுத்துச் செல்கின்ற இந்தத் தடமாகட்டும், சேகுவேரா என்கின்ற அந்தப் போராளி சொன்னது போல, ``நொந்து போன இதயத்தோடும், ஓய்வுக்காகக் கெஞ்சுகின்ற நுரையீரலோடும் நான் என்னுடைய மனோ பலத்தை மட்டுமே தக்கவைத்து இந்தப் போராட்டத்திலே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்’’ என்று சொல்வது போல, தன்னுடைய உடல் நலத்தையும், உடல் நலக் குறைவையும் கருதாமல் இன்று கூட `உள்ளம் பள்ளம்’ என்கின்ற தலைப்பிலே மிக உருக்கமான ஒரு கடிதத்தை எழுதி, `செயல், எண்ணம், எழுத்து, பேச்சு’ ஆகிய நான்கு தளங்களிலும் இந்தப் பிரச்சினையின் தீவிரத்திற்காகவே சுவாசித்து, எண்ணி, பேசி, முழங்கி வந்திருக்கின்றவர் நம்முடைய ஒப்பற்ற தலைவர் கலைஞர் மட்டுமே. 
கனடா நாட்டிலிருந்து வருகின்ற இதழுக்கு, இலங்கையின் ராணுவத் தளபதி ஒரு பேட்டியளிக்கின்றார். ``இது சிங்களவர்கள் நாடு, இங்கு உரிமை கேட்க வேறு எவருக்கும் தகுதியோ, உரிமையோ இல்லை’’ என்று. இன்றைக்கு, இலங்கை அதிபரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சே மீதும், சரத் பொன் சேகா மீதும் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு என்ன தெரியுமா? இனப் படுகொலையை இவர்கள் (அமெரிக்கக் குடி உரிமை பெற்ற இவர்கள்) செய்தார்கள் என்கின்ற ஷரத்தின் கீழ் அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்திருக்கின்றார். ஆனால், தமிழர்களுக்காக, தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காக, தமிழ் மக்களுடைய சுயாட்சிக்காக அறவழியிலே எத்தனை விதமான பேசப்படாத, எழுதப்படாத அல்லது முறையாக எதிர்க் கட்சிகளுடைய மனதிலே தங்காவிட்டாலும், தமிழ் மக்களுடைய மனதில் ஒவ்வொரு அணுவிலும் தங்கியிருக்கின்ற வழக்குகளை எங்களுடைய இனமான தலைவர் கடந்த காலத்தில் தொடுத்திருக்கிறார், வாதாடி இருக்கிறார் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். மறைந்த முன்னாள் பிரதமர் நேரு அவர்கள் தன்னுடைய மேசையிலே இரும்பாலான கரம் ஒன்றை வைத்திருப்பாராம். ‘இரும்பால் செய்யப்பட்ட ஒரு கரத்தின் வார்ப்பு அது’.  அந்தக் கரத்தைப் பார்த்து காலையில் எழுந்தவுடன் அவர் நினைப்பாராம், ``இந்தக் கரம் எவ்வளவு அழகாகவும், வன்மையாகவும், தின்மையாகவும் இருக்கின்றது. இது எனக்கு நம்பிக்கையையும், வலிமையையும் கொடுக்கின்றது’’ என்று. அந்தக் கரத்திற்குச் சொந்தக்காரர் ஆப்ரகாம் லிங்கன். அதுபோல, நம்முடைய கலைஞர் அவர்களுடைய படத்தை உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற இலங்கைத் தமிழர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய இல்லத்தில் வைத்திருந்ததை நான் கண்கூடாகப் பார்த்தேன். ஆஸ்திரேலியாவுக்கும், கனடாவுக்கும் என்னுடைய ஆராய்ச்சிப் பணிகளுக்காக ஈழத் தமிழர்களைச் சந்தித்த போது, நாங்கள் எங்களுடைய கடைசி மூச்சையும், எங்களுடைய நம்பிக்கையையும் வைத்து எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற ஒரே தமிழினத் தலைவர், நம்முடைய தலைவர் கலைஞர் மட்டும் தான். அவருடைய காலத்திலே தான் எங்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். அவரால் மட்டுமே எங்களுடைய இனம் விடுதலைப்பெற்று, உரிமைகளைப் பெற்று மீண்டும் தலை நிமிர்ந்து வாழ முடியும் என்கின்ற நம்பிக்கையை அங்கே சந்தித்த இலங்கைத் தமிழர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 
பேரறிஞர் அண்ணா ஒரு முறை சொன்னார், தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல், யாருக்கும் அடிபணியாமல், யாரையும் அடிமையாக நடத்தாமல் வாழ்வான் என்று. அந்த ஒரு கருத்தைத் தான் இன்றைக்கும் உலகளாவிய அளவிலே வலியுறுத்திச் சொல்கின்றார் நம்முடைய ஒப்பற்ற தலைவர் பேரறிஞர். அவருடைய அந்தக் கருத்தையும், இந்தப் பிரச்சினைக்காக அவர் கடந்து வந்த, அவர் ஏற்றுக் கொண்ட காயங்களையும், தழும்புகளையும் பொதுமக்களுக்கு நாம் எடுத்துச் சொல்வதோடு, இந்தப் பிரச்சினை தமிழ் நாட்டுக்கும், இந்திய நாட்டுக்கும் மட்டுமான பிரச்சினை அல்ல. இது ஒட்டுமொத்த உலக மக்களின் பிரச்சினை. மனித குல மேன்மையிலும், மனித உரிமையிலும் ஆர்வம் இருக்கின்ற உலக மக்கள் ஒவ்வொருவரின் பிரச்சினை என்பதை முன்னிறுத்தி, ஐ.நா. சபையின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு நாம் நம்முடைய கொள்கையையும், திட்டத்தையும், இந்த பிரச்சார விளக்கக் கூட்டங்கள், மேடைப் பேச்சுக்கள் மூலமாக எடுத்தச் செல்ல வேண்டும். அதற்குத் துணையாக நிற்க இந்திய அரசை விரும்பி வேண்டி கேட்டுக் கொள்வோம். பற்பல வகையிலும் அந்த வரலாற்றுத் தடங்களிலே கருணையோடும், மிகுந்த அக்கறையோடும், பொறுப்போடும் நடந்து கொண்டிருக்கிறது நம்முடைய இந்திய அரசு. அதன் மீது மேலும் நம்பிக்கை வைத்து நாம் இந்த முறையும் வேண்டி கேட்டுக்கொள்வோம். இலங்ககைத் தமிழருக்கான, உடனடித் தீர்விற்கான மிக மிக நெருக்கடியான காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். இந்தக் காலகட்டத்தில் சரியான வழிகாட்டுதலையும், சரியான தீர்வையும் தரக் கூடியது எது? நம்முடைய தலைவர், அவருடைய தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை மக்களிடம் பதிய வைத்து, நம்முடைய இந்த எழுச்சிப் பயணத்தை வெற்றிப் பயணமாக மாற்றிட வேண்டும் என்பதைச் சொல்லி இங்கே நான் விடைபெற விரும்புகின்றேன்.  அதற்கு முன்பாக ஒரு ரஷ்யக் கவிதையைப் பகிர்ந்து கொள்கிறேன். அந்த ரஷ்யக் கவிதை கையைப் பற்றியது, அது சொல்கிறது -
‘இந்தக் கை ஒரு நெம்புகோலை அழுத்தும் போது வலிமை கொள்ளும்
இந்தக் கை ஒரு ஆப்பிளை எவ்வளவு அற்புதமாக ஏந்துகின்றது
இந்தக் கை ஒரு குழந்தையை எவ்வளவு ஆசையோடு அணைத்துக் கொள்கின்றது
	இது ஒரு பிச்சைக்காரனை விரட்டும் பொழுது நாணம் கொள்ளும்
	இது ஒரு நண்பனைப் பார்க்கும் போது நேசம் கொள்ளும்
	உள்ளங்கையில் நீர் ஊற்றிப் பாருங்கள், உலகையே தலைகீழாகப்	பார்க்கலாம்
- ஆகவே இதனை கறைபடியாமல் வைத்திருங்கள்"". கறைபடியாத அத்தகைய அற்புதக் கரங்களுக்குச் சொந்தக்காரர், இலங்கைத் தமிழரின் இன்னல் துடைக்கின்ற ஒரே தமிழ்க்கரம், நம்முடைய தலைவர் கலைஞருடையது மட்டுமே!

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *