இளங்கோ கிருஷ்ணன் புத்தக வெளியீட்டு விழா

"மனிதனுக்கு மொழி இருக்கிறது. அந்த மொழி அவனைத் தனிமைப்படுத்துகிறது. எனவே தற்கொலை செய்து கொள்ளவும் தூண்டுகிறது. தற்கொலை செய்து கொள்ள விரும்பும் ஒரே விலங்கும் அவனே" - என்கிறார் லக்கான். பொதுமனிதனைத் தனிமைப்படுத்துதலுக்குத் தள்ளுகிறது மொழி என்றால் ஒரு கவிஞனுக்கு அதற்குள்ளே இன்னுமொரு சுயமொழி கிளைத்து அவனை மேலும் தனிமைப்படுத்தி விடுகிறது. அவனது தனித்துவமான புஷ்பக விமானமும், சிலுவையும் அம்மொழிதான்.
	"மொழி என்பது உலகளாவிய மனித குலத்தின் வலி" என்றதுவும் லக்கானே. அவ்வலியை தனக்கே தனக்கான தன்வய, தன்மையப் பிரதேசமாகச் சுயமாக அறிவித்துக் கொண்டு, அதன் வழிப் பயணப்படுவன் கவிஞன் மட்டுமே. வலியையும், இன்பத்தையும் தனக்கானதொரு புனைவு மொழியில் ஒரு கவிஞன் வெளிப்படுத்துகையில் ஃபிராய்டும், லக்கானும் கலந்த கலவைதான் அவன். ஏனென்றால் ஈடிபஸ் சிக்கலுக்கு அடிப்படை புனைவு என்று ஃபிராய்ட் சொல்கையில், லக்கானோ அதற்கு மொழிதான் அடிப்படை என்கிறார். ஏனிந்த உளவியல் அறிஞர்களது அறிமுகம் ஒரு கவிஞன் குறித்துப் பேசுகையில் எனும் கேள்வி எழலாம். ஏனென்றால் - கவிதைகளுக்குள் பயணப்படுமுன் அக்கவிஞனின் உளப்பாங்கு மிக முக்கியம் எனக்கு. மனித மனம் பிரவேசிக்கின்ற புதிய பகுதிகள், பழைய சுவடுகளின் நினைவினை முற்றிலுமாகத் தொடர்பறுத்துவிடுவதில்லை. இவற்றைப் பிணைக்கின்ற மாய முடிச்சை முன்வைத்து அதன் சூட்சுமத்தில் இயங்குகின்றன இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள். 
	செத்த குழந்தையாய் கையில் கனக்கிறது மொழி, மரத்துப்போன
	படிமங்கள், கோஷப் பொய்கள். கைப்பிடி தளர்ந்துபோன
	வாள்களாய் வார்த்தைகள். சுடச்சுட பரிமாறப்பட்டிருக்கிறது
	வாழ்க்கை என்னுடைய உள்ளங்கையில். 
	கவிதை எழுதுவதற்கான நேரமில்லை இது.
	என்னைச் சுற்றிலும் 80 சதவீத மக்கள் எழுதப் படிக்கத் 
	தெரியாதவர்கள். தற்குறிகளால் நிரம்பி இருக்கிற மூன்றாம் உலகில் 
	கவிதை எழுத முனைவது பற்றி என்ன சொல்ல?

மொராக்கோ நாட்டு எழுத்தாளர் டஹர் பென் ஜெல்லோன்
(Tahar Ben Jelloun) சொல்கிறார்:

	"படிக்காதவர்கள் நிறைந்திருக்கிற ஒரு கண்டத்தில்தான் 
	எழுத்தாளர்களுக்கான மிகப் பெரிய தேவை இருக்கிறது. இங்கே
	எழுதுவது என்பது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுப்பது ஆகும்."
	எழுத்தாளர்களின் தேவையை வலியுறுத்தும் அங்கீகரிக்கும் மிக முக்கிய நிகழ்வே இது!
	18ம் நூற்றாண்டின் ஐரோப்பிய விமர்சகர்கள், Shakespeare 'Rules' என்கின்ற நாடக விதிகளைப் புறக்கணித்தார் என்றார்கள். கிரேக்க நாடக ஆசிரியர்கள் உருவாக்கிய விதிகளை மறுதளித்த எவரையும் மறுமலர்ச்சி காலகட்ட விமர்சகர்களும், 18ம் நூற்றாண்டின் விமர்சகர்களும் குறைபாடுள்ள படைப்பாளியாகவே பார்த்தனர். ஆனால், before the spirit of Art, இவை அனைத்தையும் மீறி, இன்று Shakespeare நிலைத்து நிற்கிறார்.
	அவ்வாறே Before the spirit of Art, 
	இதுவரை அதிகம் அறியப்படாத, இலக்கிய உலகில் பரவலாகக் கவனம் பெறாத, ஆனால் மிக முக்கியமான கவிஞர் இளங்கோ கிருஷ்ணனைக் குறித்த சமயத்தில் கெளரவப் படுத்தவேண்டுமென்பதற்காக இவ்விருது Chennai Literary Association அமைப்பினால் இவ்வருடம் வழங்கப்படுகிறது.
	ஒரேயொரு தொலைபேசி செய்யவே வந்தேன் என்றொரு புகழ்பெற்ற கார்சியா மார்க்வெஸின் சிறுகதை உண்டு.
	அதுபோலவே ஒரே ஒரு மதுப்போத்தல் அதற்கே நான் வந்தேன் என்றொரு கவிதையை இளங்கோ படைத்திருக்கிறார்.
	சந்தர்ப்ப வசத்தால் கணவனுக்கு போன் பண்ண வந்த மரியாவை மனநோய் மருத்துவமனையை விட்டு வெளியே செல்ல விடாமல் மனநோயாளியாக சேர்த்து விடுவதுதான் மார்க்வெஸ் கதையின் மையக்கரு. அவளுடைய கணவன் சாட்டர்னோ அவளைத் தேடிப்பார்த்து விட்டுப் பழைய கணவனுடன் போய்விட்டதாக சந்தேகப்படுகிறான். பல சிரமங்களுக்கிடையில் அவனுக்கு போன் செய்கிறாள் மரியா. இதற்காக அவளுடைய வார்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணுடன் அவள் உறவு கொள்ள வேண்டிய கசப்பான நிலைவந்தது. தேடி வந்த கணவனும் அவளை ஒரு மன நோயாளியாகவே பார்கிறான். டாக்டரும் அந்தப் பணிப்பெண்ணும் அப்படி ஒரு காட்சியையே உருவாக்குகிறார்கள். கணவன் தன்னைக் கண்டு மிரளுவதைக் கண்ட மரியா தன்னை மனநோயாளியாகவே ஏற்றுக் கொண்டு அந்த மருத்துவமனையிலேயே இருந்துவிடுகிறாள். அவளுக்கு பூனையும் சிகரெட் பெட்டிகளும் கணவன் அனுப்பி வைக்கிறான். அவற்றை மருத்துவமனையில் மற்றவர்கள் தட்டிப்பறித்துக் கொள்கிறார்கள். பிறகு ஒரு தீ விபத்தில் மரியா இறந்து விடுகிறாள் என்று கதை முடிகிறது. இந்த கதையில் வாழ்க்கை மனிதர்களைக் கொண்டு போகும் அவலத்தின் உச்ச நிலையை சம்பவங்கள் மூலமும் உரையாடல் மூலமும் தத்ரூபமாக வெளிப்படுத்துகிறார் மார்க்வெஸ்.
அதைப் போலவே வாழ்க்கை மனிதனைக் கொண்டு சென்ற அவலத்தின் உச்ச நிலையை ஒரு இசைப் பாடலின் சந்தநயத்தோடு வெளிப்படுத்துகிறது இளங்கோவின் பின் வரும் கவிதை:

அதற்கே
	ஒரே ஒரு மதுப்போத்தல்
	அதற்கே நான் வந்தேன்

	நகரெங்கும் படுகளம்
	ஊரே பிணக் காடு
	ஆனாலும் வந்தேன்
	அதற்கே நான் வந்தேன்

	நிலமெங்கும் கொடுநாகம்
	நீளும் வழி பாதாளம்
	ஆனாலும் வந்தேன்
	அதற்கே நான் வந்தேன்

	குன்றெங்கும் எரிமலை
	குறும்புதரில் கொள்ளிவாய்கள்
	ஆனாலும் வந்தேன்
	அதற்கே நான் வந்தேன்

	கடலெங்கும் பேய் அலைகள்
	கரையெல்லாம் முதலை
	ஆனாலும் வந்தேன்
	அதற்கே நான் வந்தேன்

	வனமெல்லாம் புலிக்கூட்டம்
	மரந்தோறும் வேதாளம்
	ஆனாலும் வந்தேன்
	அதற்கே நான் வந்தேன்
	வானெங்கும் விஷக்காற்று
	திசையெல்லாம் மின்னல்
	ஆனாலும் வந்தேன்

	ஒரே ஒரு மதுப்போத்தல்
	அதற்கே நான் வந்தேன்.
	இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் தமிழ் Sensibility எனப்படுகின்ற உணர்திறன் கொண்டவை. உள்ளீடற்ற, போலியான, ஒரு கானல் மண்ணில் வேர் கொள்ள முயல்கின்ற பெரும்பாலான நவீனத் தமிழ்க் கவிஞர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு, பட்சியன் சரிதம், சூதுரை காதை, மனமுரை காதை, அலருரை காதம், அந்தம் என்று செவ்வியல் மரபின் அச்சில் புதுமைத்துவம் பூண்டு சுழலுபவை. தமிழ் அடையாளத்துடன் தம்மை முன்னிறுத்துபவை. கவிதைகளை விட இவரது நுண்கதைகள் எனும் சிறுகதைகளில இக்கூறு மிகத் துல்லியமாகத் துலங்குகிறது. 
	அவை தமிழுக்கு மிகப் புதியதொரு முயற்சி. கீதாரி, ஒற்றைக்குரல், பத்மவனம், அகத்தியம் போன்ற அக்கதைகள் மொத்தமே ஒவ்வொன்றும் ஒரு பாரா அளவுதான். பெர்ணாண்டோ சொராண்டினோ எனும் லத்தின் அமெரிக்க எழுத்தாளரின் கதைகளைப் படித்தபோது உணர்ந்த இவ்வடிவத்தில் நுண்கதைகளைத் தான் முயற்சிப்பதாகக் கூறுகின்றார். அவற்றின் நாடோடித்தனமான அழகியல், ஒரு nomadic aesthetics என்னை மிகக் கவர்ந்தது. 
	அவருடைய இந்த அழகியலில் ஒரு Hybrid aesthetics உண்டு. புதிய வெளிப்பாட்டு முறையில், இந் நவீன யுகத்திற்கு ஏற்றவாறு அதன் சமகாலச் சிக்கல்களை வெளிக்கொணரும் உத்தியும், உள்ளடக்கமும் நிறைந்தவை அவை என்றாலும், அவற்றின் அடிநாதம் தமிழ் அடையாளமே. இங்கு எழுத்தாளர் அ.முத்துலிங்கம் குறித்துக் கலைவிமர்சகர் இந்திரன் சொன்னதைச் சுட்டலாம். "அவர் ஒரு சர்வதேச மனிதன்தான். ஆனால் அவரது எல்லாக் கதைகளின் கதை சொல்லியும் ஒரு தமிழ்த்தனமான புரிதல் உள்ளவன்தான்". இளங்கோ கிருஷ்ணனும் தன் நுண்கதைகளில் அவ்வாறே வெளிப்பட்டிருக்கிறார். 

அகத்தியம் 
	"கி.பி முதல் நூற்றாண்டைச் சேர்ந்த பினீஷிய கடலோடி ஒருவன் ஏடன் வளைகுடாவிலிருந்து கடல் மார்கமாக புறப்பட்டு யவனக் குதிரைகளுடன் புகார் நகரம் வந்து விற்றுச் செல்வதை தன் வழக்கமாக கொண்டிருந்தான். நாற்பதேழு முதல் ஐம்பது நாட்கள் வரை நீளும் அக்கடற் பயணத்தில் குதிரைச் சாணம் நாறும் தன் படுக்கையில் இருந்தபடி அரவம் பிங்கலம் பேசுவதைப் போன்ற குரலில் மென்மையாக பாடுவதும், சோம்பிப் படுத்துறங்குவதுமாய் இருப்பான். ஒரு முறை எட்டாவது நாள் பயணத்தில் வானில் விண்மீன்கள் நகர்ந்து கொண்டிருந்த நள்ளிரவில் காது கூசும் நிசப்தம் உணர்ந்து கலத்தின் முனைக்கு வந்து பார்த்தான். பெளர்ணமி சிறுத்தது போன்ற விண்மீன் ஒன்று வானில் தோன்றி பிராகித்துக் கொண்டிருக்க பாலாடை மூடியது போன்ற கடல் நீர் துளியும் அசைவின்றி கட்டிக் கிடந்தது. தன் மொழி பேசும் கறி மிளகு போன்ற நிறமுடைய அடிமை ஒருவனிடம் அதைப்பற்றிக் கேட்க அவன் அவ்விண்மின் அகத்தியம் என்று உரைத்தான். அகத்தியம் தோன்றுவது அரசனுக்கு ஆகாது என்றும் அகத்தியம் தோன்றினால் கடல் அலைகள் கட்டப்படும் என்றும் தென்னாட்டார் நம்புவதாகவும். இது ஏதோ துர்நிமித்தம் என்றும் கலங்கியவாறு சொல்பவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே படுக்கைக்குச் சென்றான். அன்றிலிருந்து தினமும் வானில் அகத்தியம் தோன்றுவதும் அது மறையும் வரை அலைகள் அறையப்பட்டிருப்பதும் நிகழ்ந்து கொண்டேயிருந்தன. கரை சேர்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு விடியலில் தொலைவில் நாவாய்கள் கூட்டம் கூட்டமாய் போவதைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தவன். அவைகள் தீடீரென மறைவதைக் கண்டான். சூரியனை மறைத்துக் கொண்டு கடல் எழுந்து ஆங்காரமாய் ஓடிவர திகைத்து நின்றான். கண்காணா உயரத்திற்கு வானில் தூக்கி எறியப்பட்ட கடல் நீர் பெருமழை போல் கலம் வீழ அவன் கலம் பலகை பலகையாய் பெயர்ந்து மூழ்கியதில் போதம் இழந்தான். மூன்றாம் நாள் நினைவு திரும்பிய போது எங்கோ ஓர் வைத்திய சாலையில் இருந்தான். அருகிலிருந்த இளம் வைத்தியன் தன் அரும்பு தாடிக்குள் புன்னகைத்தபடியே, "நீ இங்க வந்து ஒரு நாள் ஆச்சு" என பினீஷிய மொழியில் பேசினான். தன் தாய் மொழியை இந்தக் கருப்பன் பேசுகிறானே என்கிற ஆச்சர்யம் ஏதுமின்றி அவன் இவனைப் பார்த்தான் "உன் தண்டுவடத்தில் ஆழமான வெட்டுக் காயம் இருக்கு. நீ கொஞ்ச நாள் நடக்க முடியாது,” என்றவன் கண்களில் ஆர்வம் மின்ன, "அகத்தியம் தோணுச்சாமே கண்டோ" என்றான். இவன் "ஆம்" என தலையசைத்தான். சரிதான்.. அதாக்கும் அங்க மதுரை பத்திக்கிட்டு எரியுது அறியுமோ?" என்றான்.
	இதில் வழமையான சிறுகதை இலக்கணமான தொடக்கம், சம்பவக் கோர்வை, முடிவு இவை எதுமில்லை. நமது தொன்மமொன்றினை மையப் புள்ளியாக வைத்து, கூடவே நம் மக்களது தூமகேது தோன்றினால் துர்சகுனம் எனும் ஆதிநம்பிக்கையின் மீது ஒரு பயணத்தை, விபத்தைக் கட்டியெழுப்பி, ஒரு துனிஷீயன் வாயிலாக உலகெங்கும் (Butterfly Effect என்பது போல) வெவ்வேறாய் நிகழ்பவை 'அறமென்னும்' கண்ணியில் இணைக்கப்பட்டிருக்கின்றன எனும் உண்மையைக் கோடிகாட்டி, மலையாள மொழி பேசுபவனது 'கண்டோ'விலும், 'அறியுமோ'விலும் மதுரையில் நடந்த அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதை உணர்த்துகிறார். ஒரு சர்வதேச மனிதன் தான் இப்படைப்பாளி. ஆனால் அவனது "உள் கட்டுமானத்தை நிர்ணயிப்பது - அவனது உத்தரவைக் கேட்காமலேயே, ஒரு தமிழ்த்தனமான புரிதல் தான் - தமிழ் Sensibility தான்."
	ஆனால் அது ஒரு குறுகிய பிரதேச எல்லைக்கான பெருமிதமான ஒன்று தன்னைக் குறுக்கிக் கொள்ளாமல் சர்வதேசிய பிரயாணியாகவும் தன்னை ஒன்றுபடுத்திக் கொண்டு, தனது படைப்பினது வெளிப்பாட்டில் பொதுமைப் படுத்தப் படும் போது அழகான கலையாகிறது.
	இளங்கோவின் கவிதையொன்றின் தலைப்பு - ஒரு பைத்தியத்தின் உறக்க நேர உளறல்
	வாழ்வு தத்துவங்களின் மொழியில் 
	வியாக்கியானப் படுத்தப் படுகிறது. 
	கிருத்துவங்களின் மொழியில் 
	நிகழ்கிறது.
	"கிருத்துவம் புடுச்ச பய" என்பது வட்டார வழக்குச் சொல். பயித்தியம், கிறுக்கு என்பது அதன் பொருள். இந்தக் கிருத்துவம் கவிதைக்கு மிக அவசியம். அந்த madness கவிஞனுக்குக் கூடுதல் பலம். ஏனெனில் பலரும், பலவிதமாக உபயோகிக்கின்ற (நீதிமன்ற வழக்காடுதல், பேருந்தில் பயணித்தல், பேரம் பேசுதல், இப்படிப் பல) ஒரு மொழியையே அவனும் உபயோகிக்க வேண்டியதிருக்கின்றது.
எல்லோருடைய கைரேகையும் இருக்கின்ற அந்த மொழியைத் தனக்கானதொரு கவி மொழியாகத் தனது 'கிருத்துவத்தால்' வார்த்தெடுக்கின்றார் இளங்கோ கிருஷ்ணன். அதனால் தான் அவரால்,
	"இன்றின் வேங்கை மரத்தில் சீற்றம் அறவே இல்லை
	நான் தவறவிட்ட இரவு ஒன்று
	காகமாய் வந்து அமர்ந்திருக்கிறது அதன் உச்சியில்"
	என்று அற்புதமாக ஒரு படிமத்தைச் சொல்ல முடிகிறது.
	"நான் என்பது எனக்கு நிகழும் கதையே" என்று ரோலாண்ட் பார்த் சொல்வது உண்மைதானே, இளங்கோ? வாழ்த்துக்கள்!

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *