“ஈழத்தமிழர் துயர்துடைப்போம்” – தேனாம்பேட்டை பொதுக்கூட்டம் – 12.11.2008

12.11.2008 அன்று, "ஈழத்தமிழர் துயர்துடைப்போம்"  எனும் தலைப்பில்
சென்னை, தேனாம்பேட்டை, ஆலையம்மன் கோயில் அருகில் நடைபெற்ற
பொதுக் கூட்டத்தில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆற்றிய உரை


	"நீ இந்த தேசத்தின் எந்த மூலையில் இருக்கிறாயோ எனக்குத் தெரியாது,  ஆனாலும், என்றாவது ஒரு நாள், வழக்கமான தினத்தைவிடவும் மேலும் மெருகோடு நிலவு உனக்குத் தெரியுமானால், என் அருமை காதலி, நான் உன்னை நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்பதை நீ நினைத்துக்கொள்," என்று ஒரு மராட்டியக் கவிதை போகும். என் ஈழத்தின் சகோதர சகோதரிகளே, நீங்கள் இக்கணம் வன்னியில் எந்த மூலையில், எந்தத் துயரத்தில் இருக்கிறீர்களோ எனக்குத் தெரியாது.  ஆனாலும், முன் எப்போதும்விட நிலவு அதிக பிரகாசமாக உங்களுக்கு தோன்றுமாயின், இந்தத் தமிழ் தேசத்தின் சகோதரர்களும், சகோதரிகளும் உங்களுக்காக வடித்திருக்கின்ற கண்ணீரின் ஒரு பெரிய வடிவம்தான் அது என்பதை நீங்கள் நினைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த மாலைப் பொழுதில், திராவிட இயக்க தமிழர் பேரவையின் சார்பாக தென் சென்னை மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற, நம்மினத்து சகோதர சகோதரிகளின் துயர் துடைக்கின்ற இந்த கூட்டத்திலே சிறப்புரை ஆற்ற வந்திருக்கிற, என்றென்றைக்கும் என்னுடைய மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய அண்ணன் சுப.வீரபாண்டியன் அவர்களுக்கும், மிக அருமையான ஒரு தமிழிலே நெஞ்சை மிதமாகவும், அதே சமயத்தில் ஆழமாகவும் தடவி விட்டுச் செல்லக் கூடிய ஒரு சொற்பொழிவை ஆற்றிய கவிஞர் மல்லூரி அவர்களுக்கும், என்னுடைய மரியாதைக்குரிய சகோதரர், திமுக மாநில தொண்டரணிச் செயலாளர் உமாபதி அவர்களுக்கும், மேடையிலே இருக்கிற மற்றும் பலருக்கும் என்னுடன் எப்போதும் உணர்வுப் பூர்வமான ரீதியிலே உறவு கொண்டாடுகிற திராவிட இயக்கத் தமிழ் பேரவை தோழர்களுக்கும், சகோதரர்களுக்கும் என்னுடைய வணக்கம். ``இந்தச் சமூகத்தின் தொப்புள் கொடிக்கு முன்னால் துப்பாக்கி நீட்டப்படும்போது, ஒரு மெல்லிய பூ நுனியின் மேல் அமர்கின்ற வண்ணத்துப் பூச்சியின் கனவு என்பது, எனக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத வெறும் சம்பவிப்பு மட்டுமே’’ என்று சொன்ன இலங்கையின் பெண் கவிஞரின் கவிதையோடு என்னுடைய உரையை இங்கே நான் தொடங்குகிறேன்.  
எல்லா காலத்திலும் நடப்பது ஒன்றுதான். அதிகாரத்தின் கொடூரமான போர்.  அழிவு, அதன் பின்னால் மானுடத்தின் துயரம்.  இன்றைக்கு சரியாக 98 ஆண்டுகளுக்கு முன்பு, 11ஆம் தேதி, 11வது மாதம், 1918ஆம் ஆண்டு, மிகச் சரியாக 11.00 மணிக்கு, உலகையே உலுக்கிய முதல் மகா உலகப் போர் முடிவுக்கு வந்தது.  11ஆம் தேதி, 11வது மாதம், 11.00 மணியளவிலே பிரான்ஸ் நகரத்திலே கொம்பேஜியான் என்ற இடத்திலே இருந்த ஒரு ரயில் பெட்டியிலே ஜெர்மனிக்கும், நேச நாடுகளுக்கும் இடையேயான அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.  போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான அந்த தினத்திலிருந்து இன்றைக்கு இரண்டு நாட்களே கடந்திருக்கின்றன.  உலகையே உலுக்கிய அந்த முதல் உலகப் போரில் கூட தனிப்பட்ட மொழியைப் பேசுகின்ற எந்தத் தனியான இனத்தின் மீதும் இப்படிப்பட்ட ஒரு தாக்குதல் நடந்ததில்லை.  இன்றைக்கு நடக்கின்றது.  எப்படி நடக்கின்றது?   எந்த நிலையிலே அந்த மக்கள் இருக்கின்றார்கள்?  ஒரு தீப்பெட்டி 30 ரூபாய்.  ஒரு கிலோ அரிசி 200 ரூபாய்.  
ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 350 ரூபாய்.  ஆண்டுக்கணக்காக மின்சாரத்தைப் பார்க்காத மக்கள், காட்டிலும், நகரங்களிலும், வீதியிலும் அலைந்து, உழன்று திரிந்து கொண்டிருக்கிறார்கள்.  தமிழ் என்கின்ற மொழியைப் பேசுகிற ஒரே காரணத்தினால், தமிழன் என்பவனுடைய கலாச்சாரத்தைப் பேணுகின்ற ஒரே காரணத்தினால், மனித இழப்புகள். சிக்கல்களும், வேதனையும், அவலமும், பேதமையும், வெளியே சொல்ல முடியாத அளவுக்குத் துயரங்களும் நிறைந்த ஒரு வாழ்வை, சிதலமடைந்த ஒரு வாழ்வை வாழ்கிறார்கள். யுத்தம், போர்க்களம், வன்முறை, கொலை, கற்பழிப்புகள் இத்தனைக்கும் மேலாக, புழுவிலும் கீழாக அகதிகளாக புலம் பெயர்கின்ற  அப்படிப்பட்ட ஒரு அடிமை வாழ்வு.  இத்தனைக்கும் ஆட்படுத்தப்பட்டு செத்துக்கொண்டிருப்பவர் யார் தெரியுமா?  உயிரோடும், உணர்வோடும், தொப்புள் கொடி உறவோடும் நம்மிலே ஒரு பங்காக, நம்முடைய அங்கமாக இருக்கின்ற ஈழத் தமிழர்களும், தமிழச்சிகளும். உலகில் மூத்த, பெருமைமிக்க, பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற பழங்குடி மக்கள் நாங்கள் என்ற பெருமையோடு, தமிழினம், தேசிய இனம் இன்றைக்கு திட்டமிடப்பட்டு ஒழித்துக் கட்டப்படுகிறது.  ``சிலுவைப் போருக்குப் பின்னால், யூதப் படுகொலைகளுக்குப் பின்னால் நாங்கள் பிறந்தோம்’’ என்று சொல்கிற ஈழத் தமிழர்கள், இன்றைக்கு அவர்கள் இருந்த இடம் தெரியாமல், தடம் தெரியாமல் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.  எழுதுகின்றாள் என்னுடைய சகோதரி, ஒரு ஈழத்துப் பெண் கவிஞர்- ``என்னுடைய இருப்பை காப்பாற்றிக் கொள்வதற்காக நான் பிறந்த மண்ணிலிருந்து எல்லையை கடக்கின்றேன், என் பாதத்தில் ஒட்டியிருக்கின்ற செம்மண்ணையும் தட்டியாயிற்று,  செம்மண்ணும் போயிற்று,  எம்மண்ணும் போயிற்று போ!’’ என்று.  இன்னொரு சகோதரி எழுதுகின்றாள் - ``திருமணம் நடக்கின்றது தோழிக்கு, போர்கள், பஞ்சம், குடிகளப்பெருக்கம், இந்தச் சூழ்நிலையிலே திருமணம் புரிகின்ற தோழிக்கு, உடை, புத்தகம், பாவனைப் பொருள் இவற்றில் எதனை நான் பரிசாகத் தருவேன்? கர்ப்பத்தடை மாத்திரைகள் தவிர, நான் எதனை பரிசாகக் கொடுப்பேன்?’’ நினைத்துப் பாருங்கள்,  மிக அருமையாக, நிலா காய்கின்ற இரவு ஒன்றிலே, அடுத்த கணம் பற்றிய அச்சம் சிறிதும் இன்றி மிக அருமையான இருக்கைகளிலே, ஒளி வெள்ளத்திலே, அமர்ந்து கொண்டு, ஒரு பேச்சைக் கேட்கின்ற சூழ்நிலையிலே இங்கே இருக்கின்ற அமைதியான வாழ்க்கை வாழுகின்ற சூழ்நிலையிலே, நம்முடைய தொப்புள் கொடி உறவுகளின் அவல நிலையை சற்றே நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.  இந்த நிலை என்பது இலங்கையிலே நடக்கின்ற இந்த சுதந்திரத்திற்கான போர் என்ன வரலாற்றிலே புதிதா?  நாம் கடந்து வந்த வரலாற்றிலே இலங்கைக்கு மட்டுமென்ன பிரத்தியேகப்பட்ட சரித்திரமா?  வரலாறு என்றால் என்ன?  மார்க் பிளாக் என்கின்ற பிரெஞ்சு நாவலாசிரியர் சொல்கின்றார் - ``எங்கே மனித வாடை அடிக்கின்றதோ, எங்கே ரத்த வாடை அடிக்கின்றதோ, அங்கேதான் ஒரு வரலாற்று ஆசிரியருக்கு வேலை’’. ஏனென்றால், வரலாற்று ஆசிரியர், தேவதைக் கதைகளில் வருகின்ற பூதம் மாதிரி. வரலாறு என்பது கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்குமான ஓர் உரையாடல். அது எதிர்காலத்திலே எப்போதும் பதியப்படும் என்றால், எதிர்காலத்திலே நம்மினத்து சகோதர சகோதரிகள் நிலை எப்படிப் பதியப்படப்போகின்றது. அதற்காக நாம் என்னென்ன செய்திருக்கின்றோம். இந்த வரலாறு என்பது தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமானதா? அல்ல தோழர்களே, நினைத்துப் பாருங்கள்.  
கிழக்குத் தைமூர் என்பது சுமார் 15,000 தீவுகளுக்கு நடுவிலே இருக்கின்ற ஒரு சின்னஞ்சிறிய தீவு.  1975லே போர்ச்சுகல் காலனியாக இருந்தபோது, அதை, அதிரடியாக இந்தோனேசியா கைப்பற்றியது.  சும்மா இருந்தார்களா கிழக்குத் தைமூர் மக்கள்?  இறுதிவரை போராடினார்கள்.  போராடி ஐநா சபை ஒப்புதலோடு மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தி, தமக்கான ஆட்சி முறையை அமைத்துக் கொண்டார்கள். கிழக்குத் தைமூரில் மட்டுமா?  யுகோஸ்லோவாகியாவில் என்ன நடந்தது?  அல்பேனியா என்ன செய்தது? இறுதி வரை போராடி தமக்கான அரசியல் உரிமைகளை பெற்றுக்கொண்டார்கள்.  ``ஒரு தேசத்தின் உயிர் மூச்சு - அரசியல் விடுதலை’’ என்று சொல்லிச் சென்ற  பேரறிஞர் அண்ணாவின் தலைமை கொண்ட, கலைஞர் வழியிலே இருக்கின்ற இயக்கத்தை சேர்ந்தவள் நான்.  படித்துப் பாருங்கள் அந்த அரசியல் வரலாறுகளை. கிழக்குப் பாகிஸ்தானிலே வங்க மொழி ஒடுக்கப்படுகிறது என்று சொன்ன அந்தக் கணம், கூட்டங்கூட்டமாக வங்கத்து மக்கள் அகதிகளாக இங்கே வந்து சேருகிறார்கள் என்பதைக் காரணம் காட்டி, ``வங்க தேசம்’’ என்ற ஒன்றை இந்தியா உருவாக்கவில்லையா?  உகண்டாவில், அடுத்த கணமே இந்தியர்கள் அனைவரும்  வெளியேற வேண்டுமென்று அச்சுறுத்தல் வந்த உடனே, அன்றைய பிரதமர் ஒரு விமானத்தினை அனுப்பி அவர்கள் அனைவரையும் இங்கு பாதுகாப்பாகக் கொண்டு வந்து சேர்க்கவில்லையா? அவர்களில், எவற்றில் நாம் தாழ்ந்து விட்டோம்.  நம்முடைய தமிழர்கள் இவர்களில் எதிலே குறைந்து விட்டார்கள்.  நமக்காக கதவு இல்லையா? அல்லது நமக்காக தோள்கள் இல்லையா? அவர்களைக் காக்கின்ற தார்மீக பொறுப்பு நமக்கில்லையா? இந்தப் பிரச்சினை என்பது தமிழ்நாட்டிற்கோ, இந்தியாவிற்கோ மட்டுமான அரசியல் பிரச்சினை மட்டுமல்ல, அது உலகளாவிய மனிதாபிமான பிரச்சினை என்பதை, நாமெல்லாம் முதலில் இந்தியர்கள், பின்புதான் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற, அப்படி சொல்லிக் கொண்டே தமிழ்நாட்டிலே இருக்கின்ற தமிழர்களாகிய இந்தியர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.  
இது தமிழன் ஒவ்வொருவருடைய பிரச்சினை.  சுதந்திர இலங்கை நம்முடைய தமிழர்கள் எப்படி நடத்தி வந்து இருக்கின்றது ஆதி காலத்திலே? அங்கே சிங்களவர்கள் உலவுகின்ற அந்த தேயிலைத் தோட்டத்தை திருத்தி அமைத்து, ஒவ்வொரு நாளும் உழைத்து, அங்கே போய் முதன்முதலில் குடியேறிய நம்முடைய மலையகத் தமிழர்களை அவர்கள் எப்படி நடத்தினார்கள்.  1948லே இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கிறது.  வந்தவுடன் இலங்கையின் முதல் பிரதமர் இரண்டு திட்டங்களை, சட்டங்களை கொண்டு வருகிறார். அந்த சட்டங்களின்படி, சுமார் 10 லட்சம் மலையக மக்கள் நாடற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். என்றென்றைக்கும் நுகர்ந்து இன்பத் தேனை பருகுகின்ற சிங்களவர்களுக்கு, வியர்வை சிந்தி உழைத்த நம்முடைய தமிழின மக்கள்தான் அன்றைக்கும் அந்த இனவாதத்திற்கு முதன்முதலாக பலியானார்கள். அந்தச் சட்டம் அங்கே கொண்டுவரப்படும்போது, இலங்கை பாராளுமன்றத்தில் அந்த சட்டம் குறித்த விவாதத்திலே சிங்கள கட்சியைச் சார்ந்த பெரைரா என்ற நாடாளுமன்ற உறுப்பினர் சொல்வதை கேளுங்கள், தமிழன் சொல்லவில்லை, சிங்கள கட்சியைச் சார்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சொல்கிறார், ``இம்மாதிரியான இனவாதம் ஹிட்லரோடு முடிந்து போனதாகவே நாங்கள் நினைத்திருந்தோம்’’.  தோழர்களே! கவனமாகக் கேளுங்கள்,  இது 1950லே, ஒரு சிங்கள கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சொல்கிறார், ``இம்மாதிரியான இனவாதம் ஹிட்லரோடு முடிந்து போனதாகவே நாம் நினைத்திருந்தோம்.  சிங்களர்களான நாம் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றும், நாம் மட்டுமே இந்த தீவில் தங்க தகுதியுள்ளவர்கள் என்று நினைப்போமானால், நாம் ஒருக்காலமும் முன்னேற முடியாது’’.  அதற்கு பின்பு, அதே சட்டத்தின் மீது நடந்த விவாதத்திலே பங்கு பெற்ற ஈழத்தின் அஹிம்சா வழிப் போராளியான தந்தை செல்வா என்ன சொல்கின்றார், ``இலங்கை அரசாங்கம், தான் விரும்பாத மக்களைப் பேச விடாமல் மௌனிகளாக ஆக்க இந்த சட்டத்தின் மூலம் முயற்சிக்கின்றது.  என்றாவது ஒரு நாள் இந்த சட்டம் இந்த தீவிலுள்ள மக்கள் அனைவரையும் பாதிக்கும்’’ என்று சொன்னார்.  சொன்னது போலவே நடந்தது, யுத்தம் வந்தது. எத்தனை எத்தனை மக்கள் கொல்லப்பட்டார்கள். 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள்.  10 லட்சத்திற்கும் மேற்பட்ட நம்முடைய தமிழர்கள் புழுக்களைவிட கேவலமான பனிப் பிரதேசங்களிலும், அயல் தேசங்களிலும் சென்று, நாடு இழந்து, மொழி இழந்து, அடையாளம் இழந்து, மூன்றாம் தர குடி மக்களாக நடத்தப்படுகின்றார்கள்.  ஆக, அந்தக் காலத்திலே இருந்து நீங்கள் பார்த்தால், அதற்கு பின்னும் 1950களில் வந்த சிங்கள அரசாங்கத்தை சேர்ந்த பிரதமர்கள் என்ன செய்கிறார்கள்? ``தரப்படுத்துதல்’’ என்ற ஒரு சட்டத்தையும், ``சிங்கள மக்கள் மட்டுமே’’ என்ற சட்டத்தை மட்டுமே கொண்டு வருகிறார்கள். இந்த இரண்டு சட்டங்களால் தமிழ் மக்கள் தங்களுக்கு கல்வி, சமூக நீதி ஆகிய உரிமைகள் மறுக்கப்பட்டு, தேசிய நீரோட்டத்திலிருந்தும், சிவில் உரிமை வாழ்க்கை முறையிலிருந்தும் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.  இந்த அவல நிலைக்கு எதிராக அவர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டங்கள், ஒத்துழையாமை இயக்கங்கள், அஹிம்சா வழியான போராட்டங்கள் அத்தனையையும் இரும்புக் கரம் கொண்டு சிங்கள அரசாங்கம் அடக்குகின்றது.  ஒரு பக்கம் அஹிம்சா வழி தோற்றுப் போன நிலைமை,  மறுபக்கம் இளைஞர்கள் ஆயுதத்தை எடுக்கின்ற ஒரு காலகட்டம்.  மனம் நொந்த தந்தை செல்வா, இறுதியாக வட்டுக்கோட்டை மாநாட்டிலே, ``தனித் தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு’’ என்ற தீர்மானத்தை இயற்றிவிட்டு, இனி கடவுள் மட்டுமே தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டுமென்று சொல்லிவிட்டு இறந்து போனார்.  இத்தனையும் வரலாற்று சான்றுகள். 
அதற்குப் பிறகாவாது விடிவு காலம் வந்ததா என்றால் இல்லை.  1977ம் ஆண்டு ஜெயவர்த்தனே ஆட்சிக்கு வருகிறார். வந்தவுடன் செய்த முதல் வேலை என்ன? தமிழர்கள் - அவர்களுடைய பெயர்கள், அவர்களுடைய நடவடிக்கைகள், அவர்கள் எந்தவிதமான வேலையிலே இருக்கின்றார்கள், அவர்களுடைய ஆண்டு வருமானம் என்ன? தமிழர்களுடைய கடைகள் எவை எவை? என்கின்ற ஒரு பட்டியல் தயாரிக்கப்படுகிறது.  அதுகாறும் மறைமுகமாக நடந்து வந்த அடக்கு, ஒடுக்கு முறை, ஒரு கருப்பு ஜூலைத் திங்கள், 1983ம் ஆண்டு கட்டவிழ்த்து விடப்படுகிறது.  யாழ் திருநெல்வேலி தபால் நிலையத்திலே ஒரு இராணுவ வண்டி தகர்க்கப்படுகின்றது. 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை ஒரு காரணமாக வைத்து பகிரங்கமாக தமிழர்களை எரிக்கின்ற அந்த ஒரு கொடுஞ்செயலிலே அந்த அரசு ஈடுபடுகின்றது.  அந்த கருப்பு திங்களான அந்த ஜூலை 23ம் தேதி,  எத்தனை தமிழர்கள், தமிழச்சிகள் கொல்லப்பட்டார்கள்? 3 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். வெளிக்கடை சிறைச்சாலைக்குள்ளும் அந்த வன்முறை கட்டவிழ்க்கப்படுகின்றது. 93 இளைஞர்கள் உயிரோடு சிதைக்கப்படுகிறார்கள். குட்டி மணி, ஜெகனின் கண்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. அன்றோடு முடிந்ததா அந்தத் துயரம், அந்தத் துக்கம், அந்த அவலம், அந்த யுத்தம் அன்றோடு முடிந்ததா என்றால், இல்லை நண்பர்களே, இன்றளவும் அது வெவ்வேறு ரூபங்களிலே நம்மைத் துரத்தித்தான் வந்திருக்கிறது. 
ஒன்றை மிகத் தீர்க்கமாக, மிக முக்கியமாகச் சொல்கிறேன்.  இன்றைக்கு முதலில் நாங்கள் இந்தியர்கள், பின் நாம் தமிழர்கள் என்று சொல்கின்ற எல்லோரும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒரு மாபெரும் தலைவர், ``இலங்கையிலே நடைபெறுவது உள்நாட்டுச் சண்டை அல்ல, அது இனப் போராட்டம்’’ என்று சொன்னதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அன்றைக்கு விழித்துக் கொண்ட இந்தியா சொன்னது, கொல்லைப்புறத்திலே இத்தனை அக்கிரமங்கள் நடப்பதை பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்று சொல்லி அரசாங்க அதிகாரிகளை அனுப்பி வைத்தது. நரசிம்மராவுக்குப் பிறகு சென்ற ஜி.பார்த்தசாரதி, இணைப்பு-சி என்ற சட்டத்தை முன்வைக்கின்றார்.  அவர் என்ன சொல்கின்றார்? ``தமிழர் பகுதிகளை தன்னாட்சி கொண்ட அமைப்பாக மாற்றினால்தான் தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியும்’’ என்று சொன்னார்.  நடந்ததா அது?  நடக்கவிட்டதா சிங்கள அரசு?  இல்லை.  அவருக்குப் பின்னால் இலங்கை சென்ற ஏ.பி.வெங்கடேசுவரன் சொல்வதைக் கேளுங்கள்.  ``வங்காளிக்காரன், பஞ்சாபிக்காரன் இவர்கள்  சம்பந்தப்பட்டதாக இலங்கைப் பிரச்சினை இருந்திருந்தால் இந்தியா இந்நேரம் மீண்டும் ஒரு வங்கப் போரை தொடங்கி இருக்கும்’’ என்று.  ஆக, அரசு அதிகாரிகள் சென்றார்கள், போனார்கள், பேசினார்கள்.  எதுவாகினும் நடந்ததா? நம்முடைய பிரச்சினை என்று அப்பொழுது இந்திய அரசு அதனை எடுத்துக்கொண்டது.  இலங்கையில் மட்டுமல்ல எத்தனை இடங்களில் அது தார்மீகமான நேசக்கரம் நீட்டியிருக்கின்றது.  அதனை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  தென் ஆப்ரிக்காவிலே இனவெறி அரசுக்கு எதிராக முதல்முதலாக குரல் கொடுத்து அதற்கு எதிரான ஒரு நிலையை எடுத்தது இந்திய அரசாங்கம்.  பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக அந்தப் பிரச்சினையில் உணர்வுபூர்வமாக, தார்மீகமான ஆதரவைக் கொடுத்தது நம்முடைய இந்தியாதான்.  காங்கோவிலே உள்நாட்டுப் போர் நடந்தபோது, ஐக்கிய நாடுகள் படையோடு சேர்ந்து, நாம் நம்முடைய நாட்டு படையையும் அனுப்பி வைக்கவில்லையா? இன்றைக்கு கனடா நாட்டிலே கியூபா மக்களுக்காக தனித்ததொரு அங்கீகாரமிக்க சட்டம் இருப்பது போன்ற ஒரு சட்ட அங்கீகாரத்தை நாம் ஏன் இலங்கையிலே ஏற்படுத்த முடியவில்லை? இன்றைக்கும் இரண்டே மொழி பேசுகின்ற மக்கள் இருக்கிற இலங்கையிலே ஏன் தமிழ் மொழி என்கிற மொழியைப் பேசுகிற ஒரே காரணத்தால் தமிழனுக்கு இந்த நிலை.  இலங்கை இருக்கிற இடம் அப்படிப்பட்ட இடம்.  இந்து மகா சமுத்திரத்திலே, மன்னார் வளைகுடாவிற்கு அருகிலே மிகமிக ளுவசயவநபiஉ யீடிளவைiடிn என்று சொல்லப்படுகிற இராணுவ ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் ஒரு முக்கியமான இடத்திலே இருக்கிற அந்தக் காரணத்தினால்தான் தமிழர்கள் அங்கே காலூன்றி, வேறூன்றி தங்கள் கொடியைப் பறக்க விடுவதை எந்த காலத்திலும், அந்த அரசு அல்ல, உலகத்திலே இருக்கிற வல்லரசுகள் கூட அதை ஒத்துக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.  
இன்றைக்கு இலங்கையிலே என்ன நடக்கிறது?  மன்னார் வளைகுடா மூலமாக பாகிஸ்தானிலிருந்தும், சீனாவிலிருந்தும், இஸ்ரேலிலிருந்தும் இராணுவ தளவாடங்களையும், நிதி உதவிகளையும் பெற்று இனப்படுகொலையை தொடர்ந்து நடத்தி வருகிறது அரசு.  அந்தப் படுகொலைக்கு எதிராக நான் சார்ந்திருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகம் செய்திருக்கிற அந்தப் பங்களிப்பைப் பற்றி நான் உங்களிடத்திலே கண்டிப்பாகச் சொல்ல வேண்டும்.  தமிழர்கள் என்கிற உணர்வோடு, தமிழன் கொல்லப்படுகின்ற ஒவ்வொரு கணத்திலும் என் கண்களிலிருந்தும், இதயத்திலிருந்தும் ரத்தம் வழிகின்றது என்று சொன்ன தலைவரின் தலைமையை ஏற்று இருக்கிற ஒரு இயக்கத்திலே வந்தவள் நான்.  இன்று நேற்று அல்ல தோழர்களே, அவர்களுக்காக, 1939ஆம் ஆண்டிலிருந்து அவர்கள் படுகின்ற துயரங்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கிற ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை இன்றைக்கு இந்த மக்கள் மன்றத்திலே நான் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கின்றேன்.  நேற்றைக்கு வந்து, இன்றைக்கு அரசியலில் நுழைந்து, நாங்கள் நாளைக்கு நாற்காலியை பிடித்துக் கொள்ளப்போகிறோம் என்பவர்கள் எல்லாம் இலங்கைப் பிரச்சினையை பாண்டி பஜாரிலே ஏதோ பூ வியாபாரம் செய்வதைப் போன்று பேசி வருகிறார்கள்.  
எங்கள் கட்சி செய்திருக்கிற நடவடிக்கைகளைப் பற்றி நான் உங்களிடத்திலே கண்டிப்பாகச் சொல்லியாக வேண்டும். 1956ம் ஆண்டு சிதம்பரத்தில் திமுக பொதுக்குழுவை கூட்டி, இலங்கைத் தமிழர்களுக்கான தீர்மானத்தை தலைவர் கலைஞர் முன்மொழிகின்றார்.  சுயமரியாதை இயக்கப் போராளி பொன்னம்பலனார் வழிமொழிகிறார்.  1956க்கு முன்பே 1939லே இந்த வரலாறு தொடங்குகிறது.  10.08.1939லே அன்றைய தென் இந்திய நல உரிமைச் சங்க நிர்வாகிகள், பெரியார், அண்ணா, பட்டுக்கோட்டை அழகிரி மற்றும் பல முன்னணித் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து இலங்கையிலுள்ள தமிழ் மக்களை இலங்கையிலுள்ள அரசு கொடுமையாக நடத்துவதற்கு எதிராக, ``நாம் நம்முடைய கண்டனத்தை இங்கே பதிவு செய்யவேண்டும்.  அதை இந்தக் கூட்டம் மிக வன்மையாக கண்டிக்கிறது’’ என்று பதிவு செய்திருக்கிறார்கள்.  1981லே நடத்தப்பட்ட போராட்டத்திலே பங்கேற்று எங்களுடைய தலைவர் சிறைக்கு சென்றிருக்கிறார்.  1983இல், இந்தக் கருப்பு ஜூலைக்கு பின்பு, முகவை மாவட்டத் திமுக மாநாடு இலங்கை தமிழர்களுக்கான பாதுகாப்பு மாநாடாக மாற்றப்பட்டு, அங்கே அதற்கான பிரச்சினை விவாதிக்கப்பட்ட பின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. 04.08.1983லே, மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு, திமுக ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கின்றது. 05.08.1983லே ரயில் மறியல் போராட்டம் பண்ணியிருக்கின்றது.  07.08.1983லே திமுக செயற்குழு கூடி தீர்மானத்தின் மூலம் ஒரு கோடி கையெழுத்து பெற்று ஐநா சபைக்கு அனுப்பி வைத்திருக்கின்றது.  ஜூலை 25, 1983லே குட்டிமணி கொல்லப்படுகின்றார்.  அடுத்த நாள் 26ஆம் தேதி சுமார் 8 லட்சம் பேர் பங்கேற்ற தமிழர் பாதுகாப்புப் பேரணியில் தலைவர் கலந்துகொண்டிருக்கிறார்.  10.08.1983லே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வாக இந்தப் பிரச்சினைக்காக அவர்களுடைய சட்டமன்றப் பதவிகளை தூக்கி எறிந்தவர்கள், எங்களுடைய இனமானத் தலைவரும், இனமான பேராசிரியரும். 04.05.1986 அன்று மதுரையிலே நடந்த தமிழர் ஆதரவு மாநாட்டில் (கூயஅடை நுணாயஅ ளுரயீயீடிசவநசள டீசபயnளையவiடிn), திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய மாநாட்டிலே, வி.பி.சிங், என்.டி.இராமராவ் மற்றும் அனைவரும் கலந்து கொண்டு அங்கு கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இப்படி ஆதிகாலம் தொட்டே, சரித்திரத்திலே என்றைக்கெல்லாம் அவர்கள் துன்பப்படுகிறார்களோ அன்றைக்கெல்லாம் எங்களுடைய கண்டனத்தை மிக அழுத்தமாக பதிவுசெய்ததோடு மட்டுமல்ல களத்திலே இறங்கி பதவியை தூக்கி எறிந்தவர்கள்தான் எங்களுடைய தலைவரும், எங்களுடைய திமுக முன்னணியினரும்.  இன்றைக்கு மட்டுமல்ல 2002லே நார்வே பிரதிநிதிகளால் செய்யப்பட்ட அந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை, 2008 பிப்ரவரியிலே எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி ஒப்பந்தத்தை வாபஸ் வாங்கிக்கொள்கிறது இலங்கை அரசு. அன்றிலிருந்து இன்றுவரை என்னென்ன வன்கொடுமைகள் அங்கே நிறைவேறி இருக்கிறது. அதற்காகவும் மிக மிக காட்டமான குரல் கொடுத்தது எங்களுடைய கட்சி ஒன்றுதான்.  அனைத்துக் கட்சி கூட்டங்களைக் கூட்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்கின்ற அந்தத் தீர்மானத்தை போட்டது ஆகட்டும் அல்லது கொட்டும் மழையிலே எந்தவிதமான எதிர்ப்புகள் தடைகள் வந்தாலும் மனிதச் சங்கிலி மூலமாக உங்களுடைய மன உணர்வுகளைக் கொண்டு சென்று சேர்க்கின்ற அந்தத் தீர்மானமாகட்டும் அல்லது 20 கோடி ரூபாய்க்கு மேலாக அங்கே உயிரிழக்கின்ற எங்களுடைய தமிழீழ மக்களுக்காக இன்றைக்கு திரட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கிற அந்த நிதியாகட்டும், செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக அந்த நிதி கண்டிப்பாக போய்ச் சேரும் என்ற உத்தரவாதத்துடன் இன்று திரட்டிக்கொண்டிருக்கிற அந்த நிதி ஆகட்டும்-  எதிலே இல்லை எங்கள் தலைவருடைய பங்களிப்பும் கண்ணியமும்?  இவை, வரும் தேர்தலுக்காகவும், வெறும் வரட்டு ஜம்பத்துக்காகவும் விடப்படுகின்ற அறிக்கைகளோ அல்லது நடவடிக்கைகளோ இல்லை. 
இன்றைக்கு தமிழக சட்டமன்றத்திலே தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார். மிக முக்கியமான அந்தத் தீர்மானத்தை இங்கே உங்களோடு நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.  அவர் சொல்கிறார், "இந்தியப் பேரரசின் உதவியுடன் இலங்கைத் தமிழர்களுக்காக அந்த உணவு, உடை, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களை தமிழகத்திலிருந்து செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக சர்வதேச அமைப்புகளின் வாயிலாக அனுப்பி வைத்திருக்கிறோம். அரசின் சார்பில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்ற தீர்மானத்தை வலியுறுத்தி இருக்கிறோம்.  சென்னையில் வரலாறு படைத்த மனித சங்கிலி அணிவகுப்பு நடத்தி எழுச்சியூட்டி இருக்கிறோம். கடைசியாக இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் நீக்கப்படவேண்டுமானால் அங்கு உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படவேண்டும்.  போர் நிறுத்தம் என்பது இரு தரப்புகளால் ஒப்புக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவேண்டிய ஒன்று.  ஆகவே, தமிழர்களுடைய கோரிக்கைகள் புரிந்து, பேச்சுவார்த்தை நடத்தி, அரசியல் ரீதியாக தீர்வு காண்பதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டுமென்று தமிழ்நாடு சட்டப்பேரவை இந்திய அரசை வலியுறுத்துகிறது.  இந்தியப் பேரரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இலங்கை அரசை, போர் நிறுத்தத்திற்கு இணங்க வைத்து, தமிழர்கள் வாழும் அந்தப் பகுதியில், நிலையான அமைதியும் சக வாழ்வும் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று தமிழ்நாடு சட்டப் பேரவை வழியாக கேட்டுக் கொள்கிறேன்"" என்று ஒரு குறிப்பிடத்தக்க தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார். 
அனுதினமும் காலை முதல் இரவு வரை அவருடைய சிந்தனைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவர்கள் இன்றைக்கு ஈழத் தமிழ் மக்களே.  அண்ணன் சுப.வீ. அவர்கள் அந்த அவல நிலை குறித்து குறுந்தகடு பதிவு ஒன்றை அவரிடம் சென்று கொடுத்தார்.  அன்று முழுவதும் உணவின்றி அதிக மன உளைச்சலோடு இருந்தார் தலைவர்.  இன்றளவும் அதே மனநிலையோடுதான் இருக்கின்றார்.  கையாலாகாத நிலையில் இருக்கும் நம்முடைய தமிழர்களை நாம் விட்டுவிடக் கூடாது என்ற தார்மீக ரீதியான உணர்வு அவருக்கு இங்கே இருக்கின்றது.  
இலங்கை அரசு இன்றும் செய்துகொண்டிருப்பது என்ன? கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இராணுவ செலவை 7 சதவீதம் அது அதிகரித்திருக்கின்றது.  அங்கே, மனித உரிமை குழுக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது.  இந்திய மருத்துவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவிக்கிறார் ராஜபக்ஷே.  அந்த நாட்டினுடைய இராணுவத் தளபதி சரத் பொன் சேகா கெனடா நாட்டினுடைய பத்திரிகைக்கு பேட்டியளிக்கிறார்.  அதில் பாருங்கள்.  ``இலங்கை என்பது சிங்களர்களின் நாடு.  இதில் மற்றவர்கள் உரிமை கேட்பதற்கு எதுவுமே இல்லை’’ என்று சொல்வது யார்?  இலங்கை இராணுவ தளபதி சரத் பொன் சேகா.  அப்படியென்றால், தொப்புள் கொடி உறவாக, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அங்கே சென்ற எங்களுடைய தமிழர்களுடைய எதிர்காலம் என்ன? போர் நிறுத்தம் வேண்டுமென்று சொன்னவுடன் இலங்கை விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் சொல்கிறார், "நாங்கள் போரை மீண்டும் ஆரம்பிக்கவில்லை. ஆரம்பித்தது இலங்கை அரசு.  நாங்கள் நடத்துவது தற்காப்புப் போர்.  இன்றே இப்பொழுதே போர் நிறுத்த நாங்கள் தயார்" என்று சொல்கிறார்.  பதிலுக்கு இலங்கை அமைச்சரும், பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளருமான கெகேலியா ராம்புக் வெல்லர் என்ன சொல்கிறார்?  ``விடுதலைப் புலிகள் ஆயுதத்தை கீழே போடவேண்டும்,  நாங்கள் எந்த நிலையிலும் அவர்களை நம்பத் தயாராக இல்லை’’ என்று.  ஆக, பரஸ்பரம் உங்களிடத்திலே நம்பிக்கையும், புரிந்துணர்வும் இல்லாத ஒருதலைப்பட்சமாக ஓர் அரசு அங்கே இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை இந்திய அரசு உணரவேண்டும்.  உணர்ந்து, தமிழக அரசு அதற்காக முன்வைத்திருக்கிற அத்தனை கோரிக்கைகளும் முன்னிலும் தீர்க்கமாக, முன்னிலும் காத்திரமாக கவனம் செலுத்தி அரசியல் தீர்வை இங்கே கொணர வேண்டுமென்பதை நான் இங்கே மிகக் காத்திரமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்.  
ஒரு வவுனியா தமிழன் சொல்கிறான். எங்கள் தலையைக் குறிபார்த்து குண்டுகள் ஏன் விழவேண்டும்?  உணவு மருந்துப் பொருட்களின்றி நாங்கள் ஏன் சாகவேண்டும்?  நாங்கள் செய்த குற்றங்கள்தான் என்ன?  தமிழனாகப் பிறந்ததைத் தவிர.  அவர்கள் செய்த குற்றம்தான் என்ன?  தமிழர்களாகப் பிறந்ததைத் தவிர.  நாம் பேசுகின்ற மொழியை அவர்கள் பேசுகிறார்கள்.  நம்முடைய கலை, இலக்கிய பண்பாடுகள் அவர்களிடத்திலே இருக்கின்றன.  தமிழ்நாட்டிலும், தமிழ் மொழிக்கு, தமிழகத்திலே வாழ்வோர் செய்திருக்கின்ற பங்களிப்புக்கு சிறிதும் குறைந்தது அல்ல இலங்கைக் தமிழர்களின் பங்களிப்புகள்.  பழந்தமிழ் நூல்களுக்கு உரைகள் எழுதியிருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள்.  நிகண்டுகள் வடித்திருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள்.  முதல்முதலாக விவிலியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஆறுமுக நாவலர் ஒரு ஈழத் தமிழர்.  இன்றைக்கு நவீன தமிழ் இலக்கியத் திறனாய்வாளர்களாகப் போற்றப்படுகின்ற கைலாசபதியும், சிவத்தம்பியும், எஸ்.பொன்னுத்துரையும் ஈழத் தமிழர்களே.  அருமையான கதைகளை, நவீன கவிதைகளை  அறிமுகப்படுத்திய தர்மு சிவராம் (எ) பிரமிள், சேரன், அ.முத்துலிங்கம் போன்ற இலக்கிய படைப்பாளிகளும் ஈழத் தமிழர்கள்தான்.  இலக்கியத்திற்கும் கலைக்கும், நம்மைப் போன்றே அவர்களும் பங்களிப்பைச் செய்தவர்கள். ஆனால், ஒரு மொழியை பேசுகிற ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக, அதிலும் ஒரு நாடு தன்னுடைய குடிமக்கள் மேலேயே குண்டுகளைப் போட்டு கொல்வது என்பது உலக சரித்திரத்திலே எங்கேயும் கேள்விப்பட முடியாத ஒன்று தோழர்களே.  எங்காவது மீனவர்கள் கடல் எல்லையை கடப்பதற்காக சுடப்பட்டு இறந்திருக்கிறார்களா? எந்தச் சரித்திரத்திலாவது இப்படிப்பட்ட செய்திக் குறிப்பை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?  ஆகவே, நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்று தான். இலங்கையிலே இருக்கிற நம்முடைய சகோதர சகோதரிகளுக்கும், தமிழர்களுக்கும், தமிழச்சிகளுக்கும், இன்றைக்கு எழுகின்ற இந்த எழுச்சியின் மூலமாக, ஒரு நிரந்தரமான தீர்வு ஏற்படவேண்டும்.  நம்முடைய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும்.  சமரசப் பேச்சுவார்த்தைக்கு இருவரும் வரவேண்டும்.  இன்றைக்கு போராளிகள் என்பவர்கள் நீங்கள் அவர்களை வேறுவிதமாக சித்தரித்தாலும், நாளைக்கு வரலாற்றிலே பதியப்பட போகிறவர்கள்தான்.  ``அவர்களது உடலின்மீது கண்ணீர் விழவில்லை.  அவர்களுடைய உடல்களை தேவதைகள் எடுத்துச் சென்றன’’ என்று ஆங்கிலேயர் இரங்கல் கவிதையோடு அடக்கம் செய்யப்பட்ட பகத்சிங், அன்றைக்கு ஒரு தீவிரவாதியாக சொல்லப்பட்டவன்தான்.  பின்னாளிலே நம்முடைய போராளியாக நாம் அவனைக் கொண்டாடவில்லையா?`
ஆகவே, தோழர்களே, என்னுடைய சக கவிஞர் அம்புலி என்ற ஒரு இலங்கை பெண் கவிஞர் எழுதுகின்றாள் - `` புலித் தலைவியாய் மாறியிருந்தாள், முன்பு எங்களிடையே உலா வந்த குறும்புச் செ30ல்வி. இப்போது அவள் அழகாக இருக்கவில்லை, ஆரோக்கியமாக கூட உலவவில்லை. வெட்கமுற்று, ஒதுங்கிச் சிரிக்காமல், ஆளுமை நிறைந்து நடக்கும் அவளே, எழுதுவாள் எம் அழகிய காலம்’’. நாங்கள் வெட்கமுற்று, சிரித்து, ஒதுங்கி நின்று, ஆடம்பர மோகங்களில் உடைகளை அணிந்து கொண்டு போராடத் தயங்கும் பெண்கள் அல்ல. தொப்பி அணிந்து கொண்டு காட்டிலே அங்கே போரிடுகிற எங்களுடைய தமிழச்சிகளுடைய தொப்புள் கொடி உறவுகளுடைய தமிழச்சிகள் நாங்கள். அனைவரும் சேர்ந்து எழுதுவோம் ஒரு அழகிய காலத்தை அங்கே என்று உறுதி கூறிக் கொண்டு விடை பெறுகின்றேன். 
நன்றி!  வணக்கம்!!!
* * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *