கலிபோர்னியா விரிகுடா குறள்கூடம் விழா உரை – 25.02.2020

தேதி: 24 Feb 2020
காலதேச வர்த்தமானங்களைக் கடந்து நிற்கும் வள்ளுவம்!
-	தமிழச்சி தங்கபாண்டியன்

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து 
வான்புகழ் கொண்டதமிழ் நாடு
என்றான் மாக்கவி பாரதி.
திருக்குறளை, திராவிடர்களுடைய அடையாளமாக, ஆரியத்திற்கும், மனு சாஸ்திரத்திற்கும், வருணாசிரமத்திற்கும் எதிரான, ஆவணமாகப் பார்க்கவேண்டும். இனத்தைச் சொன்னது மொழிதான், இனத்தின் மனதைச் சொன்னது மொழிதான் - எனும் கூற்றுக்கிணங்க தமிழ் மொழி என்கின்ற அமுதமான நம் மொழியிலே, திராவிடர்களுடைய சமுதாய, அரசியல், பொருளாதார வரலாற்றுப் பண்பாட்டு வாழ்வியலை, உலகப் பொதுமறையென உலகிற்குத் தந்தது திருக்குறள். மனுவிற்கு, வருணாசிரமத்திற்கு, ஆதிக்க சாதி நாங்களென்று நம்மையெல்லாம் அடக்கி வைத்த அத்தனைக்கும் எதிரான உலகப் பொதுமறையைத் தந்த திராவிடத்தின் முப்பாட்டன் திருவள்ளுவர்.
	ஆண், பெண், பல்வேறு இனத்தவர், பலவித மதத்தினர், இல்லறத்தார்,துறவியர், ஏழை,செல்வர், கற்றோர்,கல்லாதோர், குடிமக்கள்.அரசு, இளைஞர்,முதியோர், நல்லவர், கெட்டவர் என எல்லா தரப்பு மனிதர்களுக்குத் திருக்குறள் பொருந்தும்; அதனாலேயே அது உலகப்பொதுமறை!
திருக்குறளை எத்தனையோ பெருந்தகைகள், நன்மனார்கள் ஆராய்ந்திருக்கின்றார்கள். திருக்குறளில், சொல்லாதது எதுவும் இல்லை என்று சொன்ன மதுரை நாகனார் உள்பட, பலர் ஆராய்ந்துள்ளார்கள். வ.உ.சி, ‘‘திருக்குறள் தமிழர்களுக்கான நன்னெறி, நன்னறம்'' என்கின்றார். ‘‘திருக்குறளை, நன்றாக அறிந்தவர் உள்ளுவரோ, மனுவின் நீதி, குலத்துக்கொரு நீதி'' என்று கேட்கின்றார் மனோன்மணியம் சுந்தரனார். ஜி.யு.போப், ‘‘வள்ளுவர் பிற்படுத்தப்பட்ட மக்களின் குரு'' என்கின்றார். பகுத்தறிவாளன் இங்கர்சால், ‘‘அறிவை முதன்மையாக வைக்கின்ற திருக்குறளை நான் பெரிதும் பாராட்டுகின்றேன்'' என்கின்றார்.
தமிழ்ச்சமூகத்தின் மிகப்பெரிய அடையாள ஆளுமை திருவள்ளுவர். திருக்குறள் என்ற படைப்பு மனிதகுலத்துக்குக் கிடைத்த மாபெரும் வரம். ஒவ்வொரு சாதாரண மனிதனும், மாமனிதனாக உயர்ந்துகாட்ட உதவும் ஒரே காலப் பொக்கிஷம் திருக்குறளாகும். மனித மனத்தைப் பண்படுத்தவும் பொன்னாக்கவும் பயன்படும் சிந்தனைப் பேழையே குறள்நெறி.
தந்தை பெரியார், எதற்காக குறளை நான் இன்றைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்கிறேன் என்பது குறித்து, "100 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கும் டெக்ஸ்ட் புத்தகங்கள் வாங்கிப் படித்து மடையர்களாவதை விட, 3 அணாவுக்கு திருக்குறள் வாங்கிப் படித்து அறிவாளியாவது மேல் என்று தான் கூறுகிறேன். திருக்குறள் ஒன்றே போதும். உனக்கு அறிவு உண்டாக்க; ஒழுக்கத்தைக் கற்பித்துக் கொடுக்க; உலக ஞானம் மேம்பட. அப்படிப்பட்ட குறளைத்தான் நாம் இதுவரை அலட்சியப்படுத்தி வந்திருக்கிறோம். ஒரு தாசில்தார், ஒரு மாஜிஸ்ட்ரேட், ஒரு நீதிபதி, ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இவர்களுக்குக் கூட திருக்குறள் ஒன்றே போதும் தமது வேலையை சரியாகச் செய்ய. அவர்களை உத்தியோகத்துக்கு தேர்ந்தெடுக்க, பரீட்சை வைக்கும் பொது கூடத் திருக்குறளிலிருந்துதான் கேள்விகள் கேட்கப்பட வேண்டும். திருக்குறளை நன்கு உணர்ந்திருந்தால் போதும் என்று அவர்களுக்கு உத்தியோகம் வழங்கப்பட வேண்டும்... அனைவரும் திருக்குறளைப் படித்து அறிவுள்ள மக்களாகி இன்புற்று வாழ வேண்டுமென்பதுதான் எனது ஆசை" என்கிறார்.
         உலகமே கொண்டாடும் திருக்குறளைத் தமிழர்கள் சற்றுக் குறைவாகக் கொண்டாடுகிறார்களோ என்று குன்றிமணியளவு சின்னஞ்சிறு ஆதங்கம் எனக்குண்டு. அதைத் துடைத்தெறியும் விதமாக விரிகுடா குறள்கூடத்தின் திருக்குறள் பரப்பும் தொண்டு உச்சிமேல் வைத்து மெச்சத் தக்கது.
நிலம்பெயர்ந்தாலும் திருக்குறளை உளம்பெயர்க்காத இந்தத் தமிழர்களின் மாண்பு உவகையூட்டுவதாகும். ஒருநூலை அறிஞர்கள் மட்டும் போற்றினால் போதாது. எளியவர்களும் அதனை எடுத்தோத வேண்டும். குறிப்பாகக் குழந்தைகள் நெஞ்சில் நிறுத்தப்படும் இலக்கியமே நிலமுள்ள வரை நிலைத்து நிற்கும்.
ஒவ்வொரு குறளையும் பொருளுடன் ஒப்பித்து, ஒரு டாலர் பொருள் பெறும் குழந்தைகள் உன்னதங்களைப் பெறுகிறார்கள். மழலை மேதையாகிறார்கள். தமிழின் ஆயுள் நீள உதவுகிறார்கள். பொதுவாகத் திக்குவாய் சரியாக நாவில் தேன் தடவுவார்கள். இனிமேல், திருக்குறளைத் தடவ வேண்டும்!
மகாகவிகள் உங்களோடு பேசக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பார் ரஸ்கின். எங்கே? ”உங்கள் வீட்டில், புத்தகங்களின் வடிவில்”, என்பார் அவர். அப்படித்தான் வள்ளுவர் தனது உலக பொதுமறையான குறள் மூலம் நம்மோடு கருத்தாடக் காத்துக் கொண்டிருக்கிறார். வாருங்கள்… தமிழ்ச்சமூகமே சாதி மத பேதங்கடந்து திருக்குறளைக் கொண்டாடுவோம். 
விரிகுடா குறள்கூடத்தினருக்கு
வண்ணமிகு வாழ்த்துகள் !
* * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *