“காமராஜ் ஒரு சகாப்தம்’’ – இரண்டாம் பதிப்பு நூல் வெளியீட்டு விழா

``தமிழ்நாட்டின் நிலப்பரப்பையும், நீர்நிலைகளையும், நதிகளையும் மக்களையும் அவர்கள் செய்கின்ற தொழில்களையும் நான் மிகத் தெளிவாக அறிந்து வைத்துள்ளேன்.  எனக்கு இந்த பூகோள அறிவு போதும்.  நேர்கோடுகளும், வளைகோடுகளும் சொல்வது மட்டுமே பூகோள சாஸ்திரம் என்றால், அவை சொல்லுகின்ற புத்தகங்களை நான் படிக்காமல் விட்டதற்காக வருத்தப்படமாட்டேன்’’ என்று சொன்ன `படிக்காத மேதை` பெருந்தலைவர் காமராசர் அவர்களுடைய வாழ்க்கைச் சரித்திரத்தைக் `காமராஜ் ஒரு சகாப்தம்’ என்ற பெயரிலே இன்றைக்கு இங்கே வெளியிடப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்று, சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற மாண்புமிகு மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களுக்கும்,
	சாக்ரடீஸுக்குப் பின்பு பிளாட்டோ, பிளாட்டோவுக்குப் பின்பு அரிஸ்டாட்டில் என்கிற வழியிலே, பெரியார், பேரறிஞர், போற்றுதலுக்குரிய எங்களுடைய ஒப்பற்ற ஒரே தலைவர் கலைஞர் ஆகிய மூவரின் அத்தனை பண்பாட்டு, கலை, இலக்கியச் சிதறுகள் அனைத்தையும் ஒன்றாகத் திரட்டி இளைஞராக இன்று உருவெடுத்து நிற்கின்ற, எங்களுடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக, இன்றைக்கு எங்களுடைய இதயங்களெல்லாம் பூரிக்கும் வண்ணம் துணை முதல்வராக இங்கே அமர்ந்திருக்கின்ற, மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய எங்களுடைய தளபதி அவர்களுக்கும் என்னுடைய முதல் வணக்கம். இங்கே இந்த நூலினுடைய முதற்படியைப் பெற்றுக் கொண்ட சட்டமன்ற காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் பெரிய வர்டி.சுதர்சனம் அவர்களுக்கும், நிகழ்ச்சித் தொகுப்பாளர் அவர்களுக்கும், வரவேற்புரை ஆற்றியவர்களுக்கும், முன்னிலை வகித்த காங்கிரஸ் பேரியக்கத் தொண்டர்கள் அனைவருக்கும், பெருந்தலைவர் படத்தைத் திறந்துவைத்த பெரியவருக்கும், எனக்குப் பின்பாக நூலினை திறனாய்வு செய்யவிருக்கின்ற மரியாதைக்குரிய ஐயா அவ்வை நடராசன் அவர்களுக்கும், மரியாதைக்குரிய பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கும், வாழ்த்துரை வழங்கவிருக்கின்ற காங்கிரஸ் பேரியக்கத்தின் அன்பர்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம்.
	நூல் ஆசிரியர் மரியாதைக்குரிய அன்பர், நண்பர் கோபண்ணா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்தும் வணக்கமும்.  பார்வையாளர்களுக்கும் பத்திரிக்கை நண்பர்களுக்கும் என்னுடைய இனிய வணக்கம்.
	நூலினுடைய முதற் பதிப்பை, எங்களுடைய ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்கள் வெளியிட்டிருக்கின்றார்.  பெருந்தலைவர் குறித்து பெறுமதிப்பும், பேரன்பும், மரியாதையும் வைத்திருக்கக் கூடிய அவர், பெருந்தலைவர் குறித்த நெகிழ்ச்சியான நினைவுகள் பலவற்றைத் தம்முடைய கட்டுரைகளிலும் புத்தகங்களிலும் பதியவைத்திருக்கின்றார்.  அவற்றிலே ஒன்று, ``என்னுடைய தாயார் மறைந்த செய்தியைக் கேட்டறிந்து, நான் என்னுடைய தாயாருடைய உடலை எடுத்துக் கொண்டு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வருவதற்கு முன்பாக, அங்கே ஒருவர் மாலையோடு என்னுடைய அன்னைக்கு அஞ்சலி செலுத்துவதற்குக் காத்திருந்தார். அவர் ஒப்பற்ற பெருந்தலைவர் காமராசர்’’ என்று உள்ளம் உருகச் சொல்லியிருந்தார்.  ஆகவே, அந்த முதற் பதிப்பை வெளியிடுகிற பெருமைக்கும் உரிமைக்கும் உரியவர் எங்களுடைய ஒப்பற்ற தலைவர் கலைஞர் என்றால், இரண்டாம் பதிப்பை வெளியிடுகின்ற பெருமைக்கு உரியவர் எங்களுடைய தளபதி! ஏனென்றால், அதற்கும் ஒரு வரலாற்றுச் சம்பவத்தைச் சான்றாக இங்கே சொல்லிக் காட்ட விரும்புகிறேன்.  தமக்கும் பெருந்தலைவர் காமராசருக்கும் உள்ள அந்த பாசப்பிணைப்பைப் பற்றிக் குறிப்பிடும்போது, இன்னொரு இடத்திலே தலைவர் கலைஞர் சொல்லுகின்றார், ``என்னுடைய மகன் (தளபதி) அவர்களுடைய திருமணப் பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு, நான் பெருந்தலைவரைப் பார்க்கச் சென்ற நேரம்.  அவர் உடல் நலிவுற்று மிகவும் பலகீனமான நிலையிலே படுத்திருந்தார். நான் பத்திரிக்கையைக் கொடுத்துவிட்டு, கண்டிப்பாக நீங்கள் இந்தத் திருமணத்திற்கு வரவேண்டும்’’ என்று அன்புக் கட்டளையிட, அதனை ஏற்று, தளபதி அவர்களுடைய திருமணத்திற்கு, உடல் நலிவுற்ற நிலையிலும் சென்று, மணமேடை அருகே காரில் சென்று வாழ்த்திய அந்தப் பாசப்பிணைப்பிற்காக இரண்டாவது பதிப்பையும், எங்களுடைய இயக்கத்தின் தளபதி வெளியிடுவது சாலப் பொருத்தமானது என்பதை இங்கே நான் பதிவு செய்கிறேன்.
	ஹெராக்லிட்டிஸ் என்ற ஒரு கிரேக்கப் பேரறிஞன் ஒருமுறை சொன்னான், "ஒரே நதியென்றாலும் நீங்கள் அதிலே இரண்டாவது முறை இறங்கும் போது, அது வேறான நதிதான்’’ என்று! ஒரே புத்தகம் என்றாலும் இரண்டாவது முறையாக மறுபதிப்புச் செய்யப்பட்டு, விரிவாக்கத்தோடு பலவிதமான புகைப்படத் தொகுப்புகளோடு வரும்போது, இது சற்று கனமும், அழுத்தமும், ஆழமும் கூடிய புத்தகம் தான்! பெஞ்சமின் டிஸ்ரேலே என்ற ஓர் ஆங்கில எழுத்தாளரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.  அவர் சொன்னதாக ஒரு கருத்து உண்டு. `எனக்குப் பிடித்த நாவல் ஒன்றை நான் படிக்க வேண்டும் என்று நினைக்கும்போது, நானே அதனை எழுதிவிடுவேன்’ என்று அவர்சொன்னாராம்.  திரு.கோபண்ணா அவர்களும் அப்படித்தான் என்று நான் நினைக்கிறேன்.  உங்கள் நெஞ்சிலே நிலைத்திருக்கின்ற பெருந்தலைவர் குறித்து, ஒரு பிடித்தமான புத்தகத்தை நீங்கள் படிக்க வேண்டும் என்று நினைத்தீர்கள்! அவர் குறித்துப் பல வரலாற்றுப் பதிவுகளும் பிற புத்தகங்களும் படித்துப்பார்த்து, திருப்தியுறாமல், `உங்களுக்குப் பிடித்தமான ஒன்றை நீங்களே படைத்தீர்கள்’ என்பது தான் உங்களுடைய புத்தகத்தைப் பார்க்கும்போது அறிகிறோம்!
	அந்தப் புத்தகத்திற்காக, அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் எவ்வளவு சிரமப்பட்டிருக்கின்றார், எத்தகைய ஒரு கடின உழைப்பை அவர் மேற்கொண்டிருக்கிறார் என்கின்ற அந்த உணர்வையும் நீங்கள் புத்தகத்தைக் கீழே வைக்கும்போது பெற வேண்டுமென்பதை இந்தப் புத்தகம் தெளிவாக உங்களுக்குச் சொல்கின்றது.
	எங்களுடைய தலைவருடைய ஆழமானதும் கருத்துச் செறிவுமிக்கதுமான ஒரு முன்னுரை, அந்தப் புத்தகத்தின் முதல்பக்கத்திலே! மதிப்பிற்குரிய சின்ன குத்தூசி ஐயா அவர்களின் `நீங்காத நினைவுகள்` என்கிற கட்டுரைத் தொகுப்புபின் இணைப்பாக! கூடவே, `காலச்சுவடுகள்` என்கிற தலைப்பு, பெருந்தலைவர் அவர்களுடைய அரிய புகைப்படங்கள்! இத்தனையும் இணைக்கப்பட்டு ஒரு மிகப் பெரிய காவியமாகவே இன்றைக்கு இந்தப் புத்தகம் நம்முடைய கைகளிலே தவழ்கின்றது.  
ஒரு காவியத்தை நீங்கள் படித்துவிட்டு, இரண்டாம் முறையும் படிக்கும்போது, நீங்கள் அந்தக் காவியத்திலிருந்து புதிதாக ஒன்றையும் கற்றுக்கொள்ள முடியாது.  `நீங்கள் புதிதாகத் தெரிந்துக் கொள்வதெல்லாம் உங்களைப் பற்றித்தான்` என்று மூத்தோர் வாக்கியம் உண்டு.  அப்படிப் பார்க்கும்போது, இந்தக் காவியத்தை ஒரு தனி மனிதன் வாசிக்கும் போது, அவன் தமிழ்நாடு சரித்திரத்தைப் பற்றித் தெரிந்து கொள்கின்றான்.  தமிழகத்திலே இருந்த அந்தத் திராவிட இயக்கமாகட்டும் அல்லது தேசிய, அல்லது பொதுவுடைமை இயக்கமாகட்டும், அல்லது மூன்று இயக்கங்களைச் சார்ந்தவர்கள் இந்தக் காவியத்தைப் படிக்கும் போது, வரலாற்று ரீதியிலான சம்பவங்களிலே எந்தெந்த இடங்களிலே நம்முடைய இயக்கங்கள் என்னென்ன பங்கு வகிக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்கிறார்கள். தனி மனிதனோ, இத்தனை ஒடுக்கப்பட்ட, அடிமட்டத்திலிருந்து வந்த ஒரு மனிதன் முடிந்த அளவுக்கு தம்முடைய மக்களுக்கு எப்படி ஒரு கல்வி அறிவும் தொழில் புரட்சியும் தந்து, எத்தகைய ஒரு பொற்காலமாகத் தமிழகத்தை மாற்றியிருக்கிறார் என்கின்ற வியப்புணர்வையும் பெற்றுக் கொள்கின்றோம்.
ஒரு சுயசரிதைக்கும் - ஆட்டோ பயோகிரஃபி எனப்படுவதற்கும், பிறர் சரிதைக்கும் - பயோகிரஃபி எனப்படுவதற்கும், சிலநுணுக்கமான, நுட்பமான வேறுபாடுகள் உண்டு.  ஆட்டோ பயோகிரஃபி என்கின்ற அந்தச் சுயசரிதையிலே உணர்வின், உணர்ச்சியின் தூக்கல் சற்று அதிகமாக இருக்கும்.  ஆனால், பிறருடைய சரிதை என்று சொல்லப்படுகின்ற பயோகிரஃபியிலோ `அப்ஜக்டிவிட்டி இம்பர்சனாலிட்டி’ என்று சொல்லப்படுகின்ற அந்த நடுநிலையானது லாக்கோல் போன்ற தன்மை நிறைந்திருக்கும்.  இதனைச் செவ்வனே செய்திருக்கின்றார் நூலாசிரியர் என்பது இந்தநூலைப் படித்தபின்பு உங்களுக்குத் தெரியும்.
வரலாற்றுச் சம்பவங்கள் எதனையும் அவர், எந்த விதமான சார்புநிலை சற்றும் இன்றி, `இம்பர்சனலாக, அப்ஜக்டிவாக` அப்படியே பதிவு செய்திருக்கின்றார்.  இதற்கு எடுத்துக் காட்டாக மூதறிஞர் ராஜாஜிக்கும், பெருந்தலைவர் அவர்களுக்கும் இருந்த அந்தக் கருத்து வேறுபாடுகளை அவர் பதிவு செய்திருக்கின்ற அந்த நிகழ்ச்சிகளை, ஒரு வரலாற்று ஆசிரியரின் கண்ணோட்டத்தோடு, கறாராகப் பதிவு செய்திருக்கின்ற அந்த மாண்பினை நீங்கள் காணலாம்.  அந்தப் பெருந்தலைவர் தம்முடைய பாதையிலே பட்ட வலிகளையும், அவமானங்களையும் எவ்வளவு சகித்துக் கொண்டு தமிழகத்தின் நன்மைக்காகப் பாடுபட்டார் என்பதை ஒரு நிகழ்ச்சியிலே சொல்லுகின்றார்.
இந்திப் பிரச்சார சபாவின் வெள்ளி விழாவிற்காக, மகாத்மா காந்தி சென்னைக்கு வருகின்றார்.  ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த பெருந்தலைவருக்கு அவரது வருகை பற்றித் தெரியாது! அந்த அளவுக்கு அந்த வருகையினை ரகசியமாக வைத்திருக்கின்றார் மூதறிஞர் ராஜாஜி.
காந்தியடிகள், அம்பத்தூர் ரயில் நிலையத்திற்கு வருகிறார் என்பதனை `இண்டியன் எக்ஸ்பிரஸ்` நிருபர் மூலமாகத் தெரிந்து கொண்டு தான் பெருந்தலைவர் அவர்கள் அந்த ரயில்வே ஸ்டேஷனுக்கு மாலையோடு போனார் என்ற அந்தப் பதிவைப் படிக்கும்போது, நமக்கு நெஞ்சம் வலிக்கின்றது. அதே சமயம், எத்தகையதொரு கறார் தன்மையோடு கோபண்ணா அவர்கள், இந்த நிகழ்ச்சியையும் இந்த நிகழ்வையும் முடித்துக் கொண்டு வடநாட்டுக்குச் சென்ற மகாத்மா அவர்கள், `இங்கே ராஜாஜிக்கு எதிராக, ஒரு கோஷ்டி, `க்ளிக்` ஒன்று நிலவுகின்றது என்ற ஒரு கருத்தையும் சொன்னார் என்கிற அந்தப் பதிவையும் செய்திருக்கின்றார்.
இந்தப் புத்தகத்தினுடைய நூல் ஆய்வுக்கு என்னை ஏன் இவர் தேர்ந்தெடுத்தார் என்று நான் யோசித்துப் பார்த்தேன்.  எனக்கு மகிழ்ச்சிதான்! இரட்டிப்பு மகிழ்ச்சி என்று சொல்ல வேண்டும்.  ஏனென்றால், இந்தப் புத்தகத்திலே பெருந்தலைவர் படித்த பள்ளி ஒன்றைப் பற்றிய குறிப்பு ஒன்று வருகின்றது. `வரலாற்றில் விருதுப்பட்டி` என்கிற அந்த அத்தியாயத்திலே `விருதுப்பட்டி` இன்றைக்கு `விருதுநகர்` என்று சொல்லப்படுகின்ற அந்த ஊரிலேதான் என்னுடைய இளமைப் பருவம் கழிந்தது.
என்னுடைய கிராமத்திலே, ஒண்ணாப்பையும் மூன்றாப்பையும் படித்த நான், ஐந்தாம் வகுப்பிலிருந்து உயர் நிலைக் கல்வி வரை, விருதுநகரிலே புகழ்பெற்ற, இந்தப் புத்தகத்திலே பதியப்பட்டிருக்கின்ற, `மாங்கா மச்சி` என்ற இடத்திலே இந்து மகாஜன நாடார் மகமையினால் தொடங்கப்பட்ட `ஷத்திரிய மகளிர்` மேல் நிலைப் பள்ளியில் தான் நான் படித்தேன்.  பெருந்தலைவர் அவர்கள் இல்லம் இருக்கின்ற அந்த சுலோச்சனா நாடார் தெருவிலே தான், நாங்கள், அவர் சுவாசித்த காற்றையும் சுதந்திர வேட்கையையும், அவர் எங்களுக்காகக் கொடுத்த கல்வி குறித்த விழிப்புணர்வையும் சுமந்து கொண்டு திரிந்தோம்.
இரண்டாவது மகிழ்ச்சி என்னவென்றால், திராவிட இயக்கப் பின்னணியோடு, திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவள் நான் என்கின்ற அந்த ஒரு பாரம்பரியம் மிக்க உரிமையோடு, இந்த நூலைப் பற்றிய திறனாய்வுக்கும் அவர் என்னை அழைத்திருப்பார் என்று கருதுகிறேன்.
அவர் முன்பு பேசியபோது விரிவாகச் சொன்னது போல், திராவிட இயக்கத்திற்கும் காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் உள்ள ஒரு நெருக்கத்தை எத்தனை மனமாச்சரியங்களுக்கு இடையிலும் நாகரிகம் தவறாமல், பண்பாடு காத்து, ஒரு நட்புறவு கொண்டிருந்தார்கள் என்பதை இந்த நூலிலே பல இடங்களிலே பார்க்கலாம்! `கூட்டணி பலமாக இருக்கிறது` என்று சொன்னார்.  எங்களுடைய தளபதிக்கு இடது புறமும் வலது புறமும் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்தவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் (கைத்தட்டல்). இவர்கள் எப்போதும் இப்படியே இருந்தால், நாங்கள் என்றைக்கும் `இடதைப் பற்றியும் வலதைப் பற்றியும்` கவலைப்படவே மாட்டோம் என்று நான் சொல்லிக் கொள்கிறேன் (பலத்தகைத் தட்டல்).
பெரியார் தமது மரண வாக்குமூலத்தில் சொன்னது போலவே, "பச்சைத் தமிழன் 1924லிருந்து 1954வரை ஒரு தமிழன் கூட முதலமைச்சராக வரவில்லை.  இப்போது வந்திருக்கின்றார்.  சாதி ஒழிப்பிலே இவர் உறுதிமிக்கவர் என்று எங்களுக்குத் தெரியும்’’ என்று மனமுவந்து சொல்லிப் பாராட்டி அவரைத் தூக்கிப் பிடித்த தந்தை பெரியாராகட்டும், அல்லது பேரறிஞர் அண்ணாவாகட்டும், `கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது!` என்று. திருப்பரங்குன்றம் மாநாட்டுக்குப் பின்பாகப் பெருந்தலைவருக்கு ஆதரவாகப் பேரறிஞர் அண்ணா, `திராவிட நாடு` இதழில் தலையங்கமே தீட்டியிருக்கின்றார்.
அதற்குப் பின்பாக, `காமராசருக்கு ஆதரவாக எங்களுடைய கருஞ்சட்டைப் படை என்றைக்கும் துணை இருப்போம்!` என்று சொல்லி, பச்சையப்பன் மேல் நிலைப் பள்ளியிலே, காஞ்சிபுரத்திலே, பெருந்தலைவருடைய படத்தைத் திறந்து வைத்து அவர் சொல்லுகின்றார், "பெருந்தலைவர் அவர்களுடைய புகைப்படத்தைத் திறந்து வைத்து ஒரு காங்கிரஸ்காரர் உரையாற்றினால் அதனை நீங்கள் கடமையாகக் கூட எடுத்துக்கொள்ளலாம்.  ஆனால், நான் திறந்து வைத்து உரையாற்றும்போது, அது எனக்குக் கடமையுமல்ல! அல்லது எங்களுடைய இருவரிடையே கருத்து வேறுபாடு நிலவுவதில்லை என்பதைக் காட்டுவதற்காக அல்ல! அவர் `தமிழகத்தின் நன்மை` என்கிற ஒரே காரணத்திற்காக அவரது இந்தப் புகைப்படத்தைத் திறந்து வைக்கிறேன்’’ என்று சொல்லுகின்றார்.  இத்தகைய ஒரு நாகரிகமான அரசியல் செயல்பாடுகளை அன்றைக்கு முன்னோடியாகப் போட்டுத் தந்த பேரறிஞர், தம்முடைய காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உள்ளடங்கிய தண்டலம் என்கிற பகுதியிலே தொகுதி வளர்ச்சி மாநாட்டுக்கு, அன்றைக்கு முதலமைச்சராக இருந்த பெருந்தலைவரைக் கூட்டிச் சென்று மக்களுடைய பிரச்சினைகளை அறிந்து கொள்ளுமாறு செய்தார்.
அதுமட்டுமல்ல, நாகர்கோவில் பாராளுமன்ற இடைத் தோர்தல் வருகின்றது.  நம்முடைய பெருந்தலைவருக்கு எதிராகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு பெற்ற சுதந்திரா கட்சி உறுப்பினர் டாக்டர் மத்தியாஸ் நிற்கின்றார்.  எங்களுடைய பேரறிஞர் சொல்லுகின்றார், "காங்கிரஸ் கிழட்டுப் புலிதான்! ஆனாலும் பெருந்தலைவர் கிழட்டுப் புலியின் கையிலிருக்கின்ற தங்கக்காப்பு`` என்று  (கைத்தட்டல்). அவர் இறுதிவரை பெருந்தலைவரை எதிர்த்துப் பிரச்சாரம் செய்திட நாகர்கோவில் செல்லவே இல்லை என்பதையும் ஆசிரியர் அங்கே கவனமாகப் பதிவு செய்திருக்கின்றார்.
அதோடு கூட, அவரது வழியிலே வந்த எங்களுடைய இயக்கத்தின் ஒப்பற்ற தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள், பெருந்தலைவர் அவர்களுக்கு நடத்தப்படுகின்ற பிறந்தநாள் விழாவிலே கலந்துகொண்டு பேசுகின்றார்.  அந்த விழா, எங்களுடைய தலைவர் முதலமைச்சராக இருக்கும்போது நடத்தப்படுகின்றது.  அரசியல் தலைவர்கள் அனைவரும், மாற்றுக் கட்சியினைச் சார்ந்த பலரும் வந்திருக்கிறார்கள்.  பங்கு கொண்டு உரையாற்றிய எங்களுடைய தலைவர் சொல்லுகிறார்,  "பேரறிஞர் எங்களுக்கு விட்டுச் சென்ற அரசியல் நாகரிகத்தின் அரிச்சுவடியாக இந்த விழாவினை நாங்கள் பார்க்கின்றோம். ஒரு தந்தைக்கு செய்வது போல, பெருந்தலைவர் அவர்களுக்கு எங்களால் இயன்ற அத்தனை கடமைகளையும் செய்வோம்’’ என்று! அதுபோலவே, அவருக்கு மணிமண்டபம், அவருடைய பெயரிலே சாலை, இன்னும் அவருடைய பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து எண்ணற்ற திட்டங்கள்! இத்தனையும் அவர் நிறைவேற்றியிருக்கிறார் என்பதையும் கோபண்ணா அவர்கள் தெளிவாகப் பதிவு செய்திருக்கின்றார்.
நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது, காங்கிரஸ் பேரியக்கமும், திராவிட இயக்கமும், திராவிட முன்னேற்றக் கழகமும் எத்தனை தான் மனமாச்சரியங்களைக் கொண்டு வெவ்வேறான அரசியல் களங்களிலே இருந்தாலும், தமிழர்கள் என்கின்ற அந்தப் பொதுவான உணர்ச்சியாகவே பல்வேறு சந்தர்ப்பங்களிலே ஒன்றுபட்டிருப்பதையும், தனிமனிதப் பண்பாடு நாகரிகம் கருதி, எத்தனை தான் கருத்து வேறுபாடு இருந்தாலும், அன்பையும் பாராட்டத் தவறவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதுதவிர, நம்முடைய பெருந்தலைவருக்கு கம்பராமாயணம் பிடிக்கும் என்கிற ஒரு விவரத்தையும் இவர் சொல்லுகின்றார்.  பெருந்தலைவரைப் படிக்காதவராக நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள்.  ஆனால், அவருக்கு ஆங்கில அறிவும் உண்டு என்பதை ஒரு சின்ன நிகழ்ச்சியில் சொல்கின்றார்.  ஒருமுறை காந்திஜியினுடைய படத்தை ஒரு இடத்திலே மாட்டுவதற்கான அரசாங்க ஆணையை உத்தரவிட்டு, அதை அமல்படுத்துவதற்கு அந்த எழுத்தர் எழுதுகின்றார், "Hang it in all the offices" என்று.  பெருந்தலைவர் அதனை, "It is very wrong, install it" என்று மாற்றுங்கள் என்று சொன்னாராம் (கைத்தட்டல்). இதைவிட என்ன வேண்டும்?
அனுபவமும், அந்த ஒரு பண்பாட்டு மேதமையும் தான் இன்றைக்கு இருக்கின்ற தமிழகத்தின் பொற்காலம் போலவே அன்றைக்குத் தமிழகத்தையும் வைத்திருந்தது என்று சொல்வதற்கு இப்படி ஏராளமான சான்றுகள் இந்தப் புத்தகம் முழுவதுமே விரவியிருக்கின்றன.
உலகத்தில் மனிதனுடைய நாகரிகம் முதன் முதலில் தோன்றிய இடம் மெசபடோமியா.  அதாவது இன்றைய ஈராக்! கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பாக நாகரிகம் தோன்றிய இடம் அது! அந்த இடத்திலே, 1710இல் ஹவுராவி என்ற மன்னன் ஆண்டு வந்தான்.  உலகத்தில் முதல் சட்டத்தைத் தொகுத்தவன் அவன் தான். அவனுக்குப் பின்பாக, `உருக்` என்ற அந்தப் பகுதியை ஆண்டு வந்த மன்னனின் பெயர் கில்மேஷாக்.  அவன் மறைந்த பிறகு, அவனைப் பற்றி ஓர் ஆதிகாவியம் எழுதப்பட்டது.  உலகத்தில் முதன் முதலாக எழுத்திலே வடிவமைக்கப்பட்ட காவியம் அது ஒன்று தான்.  இன்றைக்கும் `சுமேரியன்` மொழியிலே எழுதப்பட்ட அந்த ஆதிகாவியம், பதினோரு மண்தட்டைகளிலே பாதுகாக்கப்படுகின்றது.  அந்த கில்மேஷாக் காவியம், பலமுறை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது.
மிகச் சமீபத்திலே அந்தக் காவியத்தை மொழிபெயர்த்த அந்த நூலாசிரியர் அதனை இப்படித் தொடங்கி இருக்கின்றார் - "The one who saw all I will declare to the world! The one who knew all I will tell about" என்று.  உலகத்தை முற்றிலுமாக, முழுதாகப் பார்த்த ஒருவரைக் குறித்து இன்றைக்கு அனைத்தையும் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் கோபண்ணா அவர்கள்!
காந்திஜி குறித்து ஐன்ஸ்டின், "ரத்தமும் சதையுமாக இப்படி ஒரு மனிதர் இருந்தாரா என்று நம்புவதே கடினமாக இருக்கும், இனிமேல் வருகின்ற நம்முடைய மக்களுக்கு’’ என்று சொன்னார்.  அதுபோலவே, "இப்படியொரு மனிதர் வாழ்ந்தாரா?’’ என்று நம்புவதற்கு அதிசயமாக இருக்கின்ற பெருந்தலைவர் குறித்து அத்தனையையும்I will tell about என்று சொல்லியிருக்கின்ற இந்தப் புத்தகத்தை அனைவரும் வாங்கிப்படியுங்கள்.
ஒரு புத்தகத்திற்கு நீங்கள் முழுவதுமாக விலையைக் கொடுக்க முடியாது! கொடுப்பதெல்லாம் அச்சுக் கூலியும், காகிதத்திற்கு உரிய விலையும்தான்.  ஆனால், கண்டிப்பாக அதைக் கொடுத்து இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் என்று சொல்லி வாய்ப்புக்கு நன்றி கூறி அமர்கிறேன்! 
* * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *