கி.ரா. அய்யா நூல்கள் வெளியீட்டு விழா உரை

வெளியிடப்படும் புத்தகங்கள்:
       1. கதைசொல்லி காலாண்டிதழ் - கி.ராஜநாராயணன்,   
           கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
	2. சங்கீத நினைவலைகள் - கி.ராஜநாராயணன்
	3. ருசியான கதைகள் - கி.ராஜநாராயணன்
	4. பதிவுகள் - கி.ராஜநாராயணன், தேர்வும் தொகுப்பும் - 
            கழனியூரன்
	5. லீலை - கி.ராஜநாராயணன்

	சாக்ரடீஸ் தனது உரையாடல் ஒன்றில் "பேச்சுதான் உண்மையானது. எழுத்து பொய்யானது. எழுத்து என்பது கெட்ட ஞாபகம் (ஈவில் மெமரி). பேச்சு என்பது சட்டபூர்வமான வாரிசு. எழுத்து சட்டபூர்வமான தகப்பன் இல்லாமல் பிறந்த மகன் (பாஸ்டர்ட்)" என்கிறார்.  "நான் பேசும்போது உயிர்ப்புடன் பேசுபவனாக இருக்கிறேன்.  என் பேச்சுக்கு நான் தகப்பனாக இருக்கிறேன்.  ஆனால் நான் எழுதும் பிரதியோ நான் இல்லாமல் கூட இருக்கிறது.  அது தனது தந்தையுடன் எவ்விதத் தொடர்புமின்று ஒரு சட்ட விரோத வாரிசைப் போல் தனியே இருக்கிறது.  பேச்சு உயிருள்ளது.  எழுத்தோ இறந்தது. அதனால்தான் எழுத்து இறந்தவர்களின் கல்லறைகளின் கல்வெட்டுகளில் உறைந்த நிலையில் காணப்படுகிறது" என்றெல்லாம் சாக்ரட்டீஸ் எழுத்தை இழித்துப் பேசுகிறார்.
	"இலக்கியத்தின் உதவியோடு தன் பூர்விகத்தை அறிந்து கொள்வது ஏன் மனித நடவடிக்கையாக இருக்கக் கூடாது?" - என்பது வரலாற்றில் மானிடவியலாளர்களின் மிக முக்கியமான கேள்வி.
இதனைச் செய்வதின் மூலமாக மிக முக்கியமான மனித நடவடிக்கையினை - தனது பூர்விகத்தை நிலை நிறுத்துவதை, ஒரு இலக்கிய செயல்பாடாகக், கலையின் வழியாக இங்கே முன்னிறுத்துகிறார்.
இரண்டாவதாக சொல்லப்படுவது, 1931இல் வெளிவந்த Pearl S.Buck எழுதிய The Good Earth. சீன விவசாயிகளது துயரங்களை, மகிழ்ச்சியை, வீழ்ச்சியைப் பதிவு செய்த மிக முக்கியமான புதினம் அது.  Pearl S.Buck எனும் அமெரிக்கப் பெண்மணி சீனாவில் பிறந்து, ஆங்கில மொழியில், சீன விவசாய மக்களது வாழ்வினை, மிக அற்புதமாகப் பதிவு செய்து அதற்காக நோபல் பரிசையும் பெற்றார். அவரது The Good Earth உலகை உலுக்கிய மற்றுமொரு சிறந்த புதினம்.  1938இல் இந்தப் புதினத்திற்காக Pearl S.Buck -ற்கு நோபல் பரிசு கிடைத்தது. இரண்டாம் உலகப் போருக்கு முன்பு, சீனக் கிராமம் ஒன்றில் வாழ்ந்த விவசாயக் குடும்பத்தின் வீழ்ச்சி பற்றிப் பேசுகின்ற அந்தப் புதினம் தான் - அமெரிக்கர்களை 1931-ல் இரண்டாம் உலகப் போரின் போது சீனாவைத் தனது நட்பு நாடாகச் சேர்த்துக் கொள்ளவைத்தது.
	ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த எழுத்தாளரும், சிறையிலிருந்த போது உலகின் முதல் நாவல் என்ற கருதப்படுகின்ற "டான் குவிக்சோட் டி லா மான்ச்சா" வை எழுதிய டான்குவிக்சட் (Don Quixote) தொடங்கி, Ulysses எனும் மகத்தான நாவலை எழுதிய James Joyce வரை, தலைசிறந்த நாவலாசிரியர்களின் பலமே - அவர்களது இலக்கிய மொழி "என்ன சொல்கிறது" என்பதைவிட "என்ன செய்கிறது" என்பதுதான்.

K.S.ராதாகிருஷ்ணன்:
	என்னைப் பிரசவித்த பூர்வீக மண்ணில் தோன்றிய மூத்த குடிகளைத் தொழ வேண்டும் என்ற ¡£தியில், "நிமிர வைக்கும் நெல்லை" என்ற நூலையும் ஆக்கினேன்.  அதன் அடுத்தக்கட்டமாக கட்டபொம்மன் புகழ் சொல்லும் இந்தப் "பாஞ்சாலங்குறிச்சி வீரச்சரித்திரம்" நூல் வெளிவருகிறது என்பதில் இதய சுத்தியோடு பெருமை அடைகிறேன்.  இந்தக் கடமையை எங்கல் கரிசல் மண்ணுக்குச் செய்கின்ற திருப்பணியாகச் கருதுகிறேன்.
	இந்நூலின் முலநூல் கிடைப்பதற்குப் பல இடங்களில் அலைந்து திரிந்து, இறுதியில் தமிழ்நாடு சட்டப் பேரவை முன்னாள் துணைத்தலைவர் மறைந்த அண்ணன் பெ.சீனிவாசன் அவர்களிடம் பெற்றேன்.  1989ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக கோவில்பட்டியில் களம் இறங்கியபோது, அண்ணன் பெ.சீனிவாசன் தி.மு.க. சார்பில் சிவகாசியில் போட்டியிட்டார்.  அப்போது என்னைச் சந்திக்க கோவில்பட்டிக்கு போராடிப் பெற்றேன்.  26 வருடங்களுக்குப் பிறகு தற்போது இந்த நூல் அச்சில் வருகிறது.  எப்படி ஒரு தாய் தன் பிள்ளையைக் கருத்தரிப்பாளோ, அம்மாதிரி இந்நூலைத் தேடிக் கண்டுபிடித்து இன்றைக்கு அச்சில் கொண்டுவரும் போது மனதில் ஒரு கம்பீரம் ஏற்படுகிறது.

அன்னம் - அகரம் - மீரா:
	சேம்பர்லேன் என்கிற பிரிட்டிஷ் பிரதம மந்திரியை எப்போது பார்க்க நேர்ந்தாலும் அவர் குடையும் கையுமாகக் காட்சியளிப்பாராம்.  மீராவின் கையில் எப்பப் பார்த்தாலும் பி¡£ப்கேஸ் என்கிற மெல்லிய பயணப் பெட்டி பஸ்ஸிலிருந்து இறங்கி ரயிலுக்கும் ரயிலிலிருந்து போய்க்கொண்டு இருப்பார்.  "காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு திரிகிறது" என்பார்கள்.  சாப்பிட்டுத் தூங்குகிற நேரம் தவிர மற்ற நேரங்களிலெல்லாம் இதே "ராப்தா" வாக இருந்து கொண்டிருந்தார். (நண்பர்களோடு நான் - கி.ராஜநாராயணன்: 69)
	உங்களிடம் ஒரு ஜென்டில்மேனாக நான் நடந்துகொள்வேன்.  தனது வாழ்நாள் பூராவும் மீரா அப்படியே நடந்துகொண்டார்.  மிகவும் தொழில் ஈடுபாட்டோட சிறந்த முறையில் அவர் எனது புத்தகங்களை வெளியிட்டார்.  ஒரு எழுத்தாளனுக்கு இப்படி ஒரு பதிப்பாளர் அமைவது அரிது.  எனது பாக்கியம் என்றுதான் சொல்லுவேன். (நண்பர்களோடு நான் - கி.ராஜநாராயணன்: 70)
	ஒரு கூட்டத்தில் மீரா பேசும் போது "இந்த வேலை பெரிசில்லை, கி.ரா-வின் புத்தகங்களைப் போட்டே பிழைத்துக் கொள்வேன்" என்று சொன்னதாகச் கெள்விப்பட்டேன். (நண்பர்களோடு நான் - கி.ராஜநாராயணன்: 71)	
	பக்கத்தில் போய் நெருக்கமாக உட்கார்ந்து அவருடைய கையை எடுத்து என் கையில் வைத்துக் கொண்டு தடவினேன்.  பேச்சு அவருக்குச் சரியாக வரவில்லை.  ஒண்ணுஞ் செய்யாது, திரும்பவும் இந்தக் கை எழுதும்" என்றேன்
	கண்ணீரினூடே அவர் என்னைப் பார்த்த விதம்" ஆறுதலுக்குச் சொல்ற சா£' என்பது போல இருந்தது.
	அவரைச் சந்திக்கும்போதெல்லாம் நான் வழக்கமாகச் சொல்றதையே அன்றும் அவரிடம் சொன்னேன்.  "மீரா நீங்க சொல்லிவீங்ளெ,  பர்மாவிலெ நீங்க சிறுபிள்ளையா இருந்தபோது பள்ளிக் கூடம் போனது, அங்கெ உங்களுக்கு ஒரு பர்மியர்பெயர் இருந்தது... அதுபத்தியெல்லாம் எழுதணும்."
	'சொல்லு சொல்லு' என்று என்னைப் பேசவிட்டுக் கேட்டுக் கொண்டே இருந்தார்.  அந்த வினாடியில் பளீர் என்று என்னுள் தோன்றியது.  மீரா இங்கெ இல்லை.  தனது இடதுகாலை எடுத்து எங்கெ - அந்த படியில் - வைத்து விட்டார்.  அடுத்த காலை எப்போ எடுப்பாரோ தெரியாது.
	புத்தகம் சம்பந்தமாய் வந்தாய் - ஒரு
	புத்தகச் சந்தையில் பார்த்துக் கொண்டோம்
	புத்தகமாகவே ஆனாய், நண்பனே.
	(நண்பர்களோடு நான் - கி.ராஜநாராயணன்: 75)
 
புத்தகக் கண்காட்சி:
	எனது சின்னவயசில் நடந்தது.
	எங்கள் ஊர் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர் மாற்றுதலாகிப் போகிறார்.  பள்ளிப் பிள்ளைகளோடு சேர்ந்து ஒரு ஃபோட்டோப் படம் எடுத்துக் கொள்ள நினைத்தார்.  படம் பிடிக்கிறவர் கோவில்பட்டியிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தார்.  அப்போது நான் நாலாவதோ மூணாவதோ படிக்கிறேன்.
	ஃபோட்டோ பிடிக்கிறது என்றால் என்னது என்றே தெரியாத காலம் அது.  நாங்கள் எல்லாரும் தயாராக இருந்தோம்.  தலைமை ஆசிரியர் வந்தார்.  பட்டத்தார் வைத்து வேட்டி கட்டியிருந்தார்.  கழுத்து முட்டப் பித்தான் வைத்துத் தைத்த நீளமான கோட்டு.  அதன் மேல் கழுத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்த விசிறி மடிப்பு ஜரிகை அங்கவஸ்திரம் வெண்ணிறத் தலைப்பாகை.  நெற்றியில் சந்தனக்கோபி.  இப்படியெல்லாம் வந்து நாக்காலியில் உட்கார்ந்த அந்த ஆசிரியர் எதையோ ஒன்றை மறந்து போனதாக நினைத்துத் சொல்லிவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தார்.  பக்கத்தில் இருந்தவர்களிடம் ஒரு புஸ்தகம் கிடைக்குமா என்று கேட்டார்.  திடீரென்று புத்தகத்துக்கு எங்கே போறது அந்தவேளை கெட்ட வேளையிலெ, அதோட என்ன புத்தகம் என்று தெரியலை.
	ஏதாவது ஒரு புத்தகம் எதா இருந்தாலுஞ் சரி என்றார்.  யாரோ ஒரு பையன் ஓடிப்போய் அவனுடைய வீடுதான் பக்கத்தில் இருந்தது.  ஒண்ணாவது வகுப்புப் பாடப் புத்தகத்தைக் கொண்டு வந்து தலைமை ஆசிரியரிடம் தந்தான்.  முகம் சந்தோசத்தால் மலர்ந்தது.  அதை வாங்கிக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தார்.  பல மாதரியில் அதைப் பிடித்துப் பார்த்தார்.  ஒரு மாதரியில் வைத்துக் கொண்டு புத்தகம் பிடித்திருப்பது படத்தில் தெளிவாக விழணும் என்பது அவர் விருப்பம் சரி - இனி போட்டோ எடுக்கலாம் என்பது போல் தலையை அசைத்தார்.  இவ்வளவையும் நாங்கள் பொம்மை போல் அசையாமல் விறப்பாக நின்று கொண்டு கண்களை மட்டும் அசைத்துப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
	"ரெடி"

	ஒண்ணு, ரெண்டு, கிளிக் படம் வந்த பிறகுதாம் தெரிந்தது, தலைமை வாத்தியார் புத்தகத்தை அழகாக உடம்போட சேர்த்த ஒரு குழந்தையை அணைத்து வைத்துக்கொள்வது போல பிடித்துக் கொண்டிருந்தது.
	வாத்தியார் சமாச்சாரம் இப்படி. (நண்பர்களோடு நான் - கி.ராஜநாராயணன்: 76,77)
	புத்தக விசயம் ஒரு பக்கம் இருக்கட்டும்.  இப்பொ இங்கே நான் சொல்ல வந்தது நண்பர் த.பீ செல்வத்தைப் பற்றி மட்டும்தான்.
	எல்லாரும் துட்டை விரும்பி நேசிக்கிறபோது அவர் புத்தகங்களை நேசித்தார்.  ஒரு புத்தகத்தை அவர் தி பெஸ்ட் என்று சொல்லிவிட்டால் இலக்கிய உலகில் அது நூத்துக்கு நூறு சரியாகவே இருக்கும்.  அவர் சொல்லித்தான் நான் பல புத்தகங்களைப் படித்தேன்.
	ஒரு காலத்தில் நாம் தாள்களைக் கழுதை மேய்வதும் போல கண்டது கழியதுகளை, கையில்க் கிடைத்ததையெல்லாமே விழுந்து விழுந்து படித்தோம். நேரம் வீணாவது துட்டு செலவாவது கண் கெடுவது இதெல்லாம் நேர்ந்தது.  அலுத்துச் சாய்கிறபோது ஒரு த.பீ.செல்வம், எட்க்காபட்டி முத்துசாமி, தஞ்சைப் பிரகாஷ் மாதிரியான ஆட்கள் வந்து கை கொடுக்கிறார்கள். (நண்பர்களோடு நான் - கி.ராஜநாராயணன்: 79)
	கி.ரா. அய்யாவின் கதைகள் குறித்துப் பேச முடியாது.  அதை அப்படியே வட்டார மொழி மணக்க மணக்க வாசிப்பதுதான் அதற்குச் செய்யும் மரியாதை.
	தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் கூடிய போது, நிகழ்ச்சி வரிசையில் "கதை அரங்கம்" என்றுயிருந்தது.
	கவியரங்கம் என்றுதானெ உண்டு; இதென்ன கதை அரங்கம்! புருவங்கள் உயர்ந்தன.
	"எழுதிக்கொண்டாந்து வாசிக்கப்பட்டாது; கூட்டத்தை பாத்துக் கதை சொல்லணும்.
	ரகுநாதன் சொன்னார்.
	எழுதியே பழக்கப்பட்டுப்போச்சி" "நோக்காக்குச்சி" (மைக்)க்கு முன்னால் வந்து நின்றால் வாய் அடைத்துப் போகிறது.  ஒரு காலத்தில் காது வழியாக இறங்கிய கதை இப்பொ, அச்சுவாகனமும் தாளும் வந்துவிட்டதால் கண்வழியாக இறங்கும் காலமாகிவிட்டது.
	எழுந்து நின்று கூட்டத்தைப் பார்த்ததும் வாய் இறுகி தொடைகள் நடுங்க, அவிழாதவேட்டி அவிழ்ந்ததுபோல்த் தெரிய இறுக்கிக் கட்டிக்கொண்டு, சட்டையில் பொத்தான்கள் சரியாக மாட்டப்பட்டிருக்கா என்று தடவி சரிபார்க்க, நான்கு மேல் அண்ணத்தில பசையாய் ஒட்டிக்கொள்ள, மடக்குத் தண்ணி குடிச்சாத் தேவலையே என்று தோன்ற.. இப்படி அல்லல்மேல் அல்லல்!
	கொன்னாலும் முடியாது என்று மறுத்து விட்டார்கள் முற்போக்கு எழுத்தாளர்கள்.
	சரி; எழுதியே வாசிச்சித் தொலையுங்க என்று சொல்லிவிட்டார் ரகுநாதன்.  (அப்பொ அவர் வாத்தியார் மாதிரி) ஜெயகாந்தன் தலைமையில் கதை அரங்கம்.
	அதில் கதைவாசிக்க நானும் ஒரு கதை எழுதிக்கொண்டு போயிருந்தேன்.
	"ஜெயில்" என்ற தலைப்பு கதைக்கு. (நண்பர்களோடு நான் - கி.ராஜநாராயணன்: 9,10)
 
தி.க.சி. பற்றிய அனுபவம்:
         இன்றைக்கு வெளியிடப்பட்டிருக்கின்ற ருசியான கதைகள் எனும் புத்தகத்தில் சிலக என்றொரு கதை உண்டு.  அந்தத் தலைப்பே ஒரு தனி வசீகரம்.  கி.ரா. அய்யாவின் தலைப்பே கதை சொல்லும்.  ஒரு சம்பவம் - தி.க.சி. அய்யாவோடு, கி.ரா. அய்யாவிற்கு ஏற்பட்ட அனுபவம் அது.
           ஒரு கதைக்கு "தீ யோ தீ" என்று தலைப்பு கொடுத்திருந்தேன்.  இதை மாற்றி அவர் "நெருப்பு" என்று தலைப்புக்கொடுத்து வெளியிட்டார்.
	படைப்பாளி ஏன் இந்தத் தலைப்பைக் கொடுத்தான் என்று கொஞ்சம் யோசித்திருக்கலாம்.  நகர வாசிகளுக்குப் புரியாது.
	நட்ட நடுநிசியில்த்தான் கிராமத்துக் கூரைவீடுகளில் தீ வைப்பார்கள் எதிரிகள்.  அந்நேரம் அவர்கள் சவம்போல்த் தூங்கிக் கொண்டிருப்பார்கள்; பகலெல்லாம் வேலை செய்த அலுப்பில்.  காதுகள் மட்டும் தூக்கத்திலும் திறந்தே இருக்கும்.  முதலில் தீயைக் கண்டவன் இவர்களை கூக்குரலிட்டுத்தான் எழுப்ப வேண்டும்.  அப்போது இவர்கள் இப்படித்தான் கூவுவார்கள் 'தீ யோ தீ; தீ யோ தீ. (நண்பர்களோடு நான் - கி.ராஜநாராயணன்: 31)
	இந்தக் குரலைக் கேட்ட கிராமம் எலகொலயாய்த் துடித்தெழும்.  அந்தத் தீயின் வல்லமை மகத்தானது! முகாலோபனமே கூடாது என்று ஒதுக்கி வைத்திருந்த கரம எதிரியின் வீட்டினுள் இவன் புகுந்து அவனுடைய குழந்தைகளைத் தூக்கிக்கொண்டுவந்து காப்பாற்றுவான் பகையை எரித்தது தீ.
	தாழ்ந்த ஜாதிக்காரர்களெல்லாம் ஓடி வந்து உணர்ந்த ஜாதிக்காரர்களின் வீடுகளில்ப் புகுந்து சாமான் சட்டு முட்டுகளை வெளியே கொண்டு வருவதும் தானிய தவச மூட்டைகளை நெருப்பிலிருந்து மீட்டவும், தொடாதே என்று உரத்துச் சொல்லவும் இயலாத முதியவர்களை குண்டுக்கட்டாகத் துக்கிக்கொண்டு வந்து உயிர்காப்பதும் நடைபெறும்.
	சாதியை எரித்தது தீ.
	போர்க்களத்திலும் பள்ளியறையிலும் மரியாதை பார்ப்பதில்லை என்பார்கள்.  தீயில் சிக்கிய மக்களிடையேயும் மரியாதை பார்ப்பதில்லை என்பதையும் கதையில் சொல்லப் படுகிறது.
	தீயின் மகத்துவத்தைப் "பாடு"கிறது அந்தக் கதை.
	'தீ யோ தீ' எனும் தலைப்பில் ஜீவ இயக்கம் தெரியும்.  இங்கே 'நெருப்பு' எனும் சொல் சவம் போல் மெளனம் காக்கிறது. (நண்பர்களோடு நான் - கி.ராஜநாராயணன்: 32)

கி.ரா. ஒரு பண்பாட்டு ஆவணம்:
	அடுத்து ல.சண்முக சுந்தரத்தின் வீடு. வீட்டை ஒட்டி அதனுள் அவர்களுடைய கடை.  போனவுடன் நீரோ, மோரோ கிடைக்கும்.
	சின்னவயசில் அவரை நாங்கள் "லானாச் சானா" என்று அழைப்போம்.  ஒருதடவை அவர் தனது தம்பியிடம் ஏதோ ஒரு இடத்துக்குப் போகச் சொன்னார்.  அவன் "ஆமாபொ! வேலையில்லெ உனக்கு" என்று ஏடுத்தெறிந்து செல்லிவிட்டு போய்விட்டான்.
	"அட மூத்தவனே" என்று அவனை வைதார்.  அப்பத்தான் நான் அந்த வசவை முதல்முறையாகக் கேட்டது.  அதுக்குப்பிறகு அந்த வசவை நான் எனக்குள்ளேயே பலமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.  ஆனால் அது வசவு மாதிரி தெரியாது என்றாலும் அது வசவு தான்.  அதுக்கு அர்த்தம் "மூதேவி" என்பதுதான்.  அதைச் சில இடங்களில் "மூதி" என்றும் சொல்கிறதுண்டு.	
	"ஏ-மூதி" என்பதற்கும், அட மூத்தவனே" என்பதற்கும் எவ்வளவு வேறுபாடு.
	ஒருகாலத்தில் மூதேவிக்கும் கோயில்கள் உண்டு.  பூசை, புனஸ்காரம், தேர், திருவிழா என்றெல்லாம் கூட இருந்ததாம்.
	"ஜேஷ்டை அம்மன்" என்று சமஸ்கிருதத்தில் ஒரு சிறப்பு பேர் உண்டு இந்த மூதேவிக்கு.  "பயல் ரொம்ப சேட்டை பண்றாம்" என்று சொல்கிறதில் வருகிற "சேட்டை" இந்த "ஜேஷ்டை"யிலிருந்து வந்ததுதானாம்.  வேஷ்டியிலிருந்து வேட்டி வந்ததுபோல.
	இந்த மூதேவி அம்மனுக்கு வாகனம் கழுதை.  அதனால் "கழுதை" வசவுச் சொல்லாகவும் பயன்படுகிறது.
	கவிஞன் தனது உணர்வை வெளிப்படுத்தும்போது, தாய்மொழி, பிராந்தியம், இருப்பிடம் ஆகியவற்றை நினைவுபடுத்தும் வகையில் தனக்குரிய வட்டாரத்த மொழியில் வெளியிட்டால்தான் அந்த எழுத்துக்குச் செறிவும் தூய்மையும் அமையும்.

 
ருசியான கதைகள் - கி.ராஜநாராயணன்

சிலக:
	நான் சிலகம்மையின் அழகுபற்றிக் கேள்விப் பட்டவன்.  என்ன வயசாகி இருந்தாலும் அவளை ஒரு தடவை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று வந்தவன்.
	இந்த ரெங்கமன்னாரைப் பிடித்தால் நடக்கும் என்றுதான் அவரைப் பிடித்தேன்; வந்தும் பார்த்தேன்.
	ஏமாற்றம்; ரொம்ப ஏமாற்றம்!
	என் மூஞ்சி போன போக்கைப் பார்த்து கலகலவென்று சிரித்தது காத்தை.
	காத்தை என்னோடு இருப்பது யார் கண்ணுக்கும் தெரியாது.  என் கண்ணுக்கும் தெரியாது.  அதன் குரல் எனக்கு மட்டும் கேட்கும் அது சொன்னது:
	"சிலைகள் மட்டுந்தாம் அப்படியே இருக்கம்.  மனச உடம்பு சிலையில்லையெ.  சிலக, சிலையை விட அழகாய்த்தாம் இருந்தா.  சிலை எவ்வளவுதாம் அழகிருந்து என்ன; உயிர் கிடையாதெ." (ருசியான கதைகள் - கி.ராஜநாராயணன்: 29)
	பிள்ளைகளையெல்லாம் கூப்பிட்டு எல்லா நகைகளையும் அள்ளித் தந்து விட்டாள்.  தன்னிடம் தந்த உயிர் பத்திரங்களையெல்லாம் அவர்களிடம் தந்துவிட்டு, எனக்கு எதுக்கு இதெல்லாம் என்று வாங்க மறுத்துவிட்டாள்.  அவர்கள் இருந்த அந்த ஒரு அறை மட்டும் போதும் என்று கூடுக்குள் வசிக்கும் நத்தைபோலாகி விட்டாள்.  யாருக்கும் என்னால் தொந்தரவு வேண்டாம் என்பதுபோல ஒடுங்கிவிட்டாள்.  மரணத்தை நோக்கி தபஸ் இருக்க ஆரம்பித்துவிட்டது போலிருந்தது.
	எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு மரணம் லேசில் வராது என்பார்கள்.  என்றாலும் அநத் அம்மைக்கு ஒருநாள் வந்தது மரணம்.
	அம்மா ஒண்ணுமே வேண்டாம்னு சொல்லீட்டு எங்க மனசை எல்லாம் அள்ளீட்டுப் பொயிட்டியே தாயீ என்று நெஞ்சில் அறைந்து கொண்டு அழுதார்கள் சக்களத்திகள். (ருசியான கதைகள் - கி.ராஜநாராயணன்: 45)

முயல்குட்டி நல்லது:
	ரயில் பயணத்தின்போது ஒரு பெரியவர் குழந்தைகளுக்குக் கதை சொல்லிக்கொண்டு வந்தார்.  கேட்டுக்கொண்டே வந்த நானும் குழந்தையாகி விட்டேன்.
	அவர் சொன்ன  கதை ஒரு முயல் குட்டியைப் பற்றியது.  அது ரொம்பப் பிடிச்சிப்போச்சி.  பெரியவர் சொன்ன வயணம் - விதம் - அதை அப்படியே எழுத்தில் கொண்டுவர முடியாது.  கேட்டுத்தான் அனுபவிக்க இயலும்.  அத மீறி எழுத்தில் கொண்டு வந்தால் வெள்ளிப் பூம் பிஞ்சைக் சமைத்துக் கொடுத்ததுபோல் ஆகிவிடும்.  
	மனிதக் குலுக்கே உரிய ஏற்ற இறக்க பாவங்கள் ஒலிப்புகள் இல்லாம எழுத்துக்குள்ளும் அடைபடாது. (ருசியான கதைகள் - கி.ராஜநாராயணன்: 139)
	வம்புச் சிலுகை (சண்டை).
	சாவஞ் செத்த (உயிர்ப்பில்லாத)

அகாதல்:
	மேல்க்கொண்டு என்னபேச என்று இருவருக்கும் தெரியாமல் ஒரு திகைப்பு.  கொஞ்சம் கழித்து, மேடம், வைரத்தில் போலி வைரம் என்று இருப்பதுபோல காதலிலும் போலிக்காதல் என்று இருக்குமா?
	அப்படித்தாம் போலிருக்கு.  தாவரங்களில் ஒவ்வொரு தாவரத்துக்கு "சக்களத்தி" என்று உண்டு.  மனிதரிலும்கூட இப்படி உண்டு.  இப்படி "மனிதர்"களால்தான் பெரும் சிக்கல். (ருசியான கதைகள் - கி.ராஜநாராயணன்: 71)

ஜடை:
	இந்த மூணு பேரும் எப்பப் பார்த்தாலும் சின்ன வயசிலிருந்து கூடவே சுற்றுவார்கள்.  அப்பொ பள்ளிக்கூடமெல்லாம் வராத காலம்.  ஆகவே அந்தப் பாதரவு அவர்களுக்கு இல்லை. (ருசியான கதைகள் - கி.ராஜநாராயணன்: 81)

மொட்டை மலை:
	சின்ன வயசுலேயே அப்பா அம்மா ரெண்டு பேத்தையும் 'காளி' (காலராநோய்) கொண்டு போயிட்டா.  தங்கச்சிக்கு ஒரு வயசு.  இவளுக்கு ஏழு வயசு.
	சிரட்டைய (கொட்டாங்கச்சி) எடுத்துக்கிட்டு பெரிய சம்சாரிக வீடுகள்ள போயி பிள்ளைச் சோறு வாங்கியாந்து தங்கச்சிக்கு ஊட்டுவா.  அத்தக்கொத்து வேலைக்குப் போயி அதுல வார வரும்படிய வச்சி ரெண்டு பேரும் வயித்தைக் கழுவிக்கிடுவாக.  பருத்திக் காலத்துல ஓடிஓடிப் பருத்தி எடுத்து அதுல கொஞ்சம் மீதி வச்சிக்கிட்டு, பாக்கிப் பருத்தியில, அவிச்ச சீனிக்கிழங்கும் மொச்சைப் பயரும் வாங்கித் திம்பாக.  மீதி வச்ச பருத்திய சேத்துச் சேத்து சேலை துணி எடுத்து உடம்பை மூடிக்கிடுவாக.  இப்படி அரும்பாடுபட்டு தங்கச்சிய ஒரு மனுஷியாக்கி, ஒரு 'மகாராசங்'கிட்ட பிடிச்சிக் கொடுத்ததும், இப்பொ அவள கண்ணுலகாங்க முடியாம ஆயிட்டதையும் நினைச்சிக் கண்ணீரு வடிப்பா. (ருசியான கதைகள் - கி.ராஜநாராயணன்: 107)
	மலடி கண்ணு பிள்ளெக மேல பட்டுரும்ன்னு நினைச்சி ஒளிச்சி வச்சிருக்கான்னும் தெரிஞ்சிக்கிட்டா.  என்ன செய்யிறதுன்னு தெரியல.  நிலை குலைஞ்சி போயிட்டா.  அந்த இடத்துலயே பூமி பிளந்து விழுங்கிறப்படாதா தன்னென்னுயிருந்தது.   நிக்க முடியல.  சாமியாடிக்கு ஆவேசம் வந்துட்டது போல ஓட்டமா வெளியே வந்தா.. "என்னெ என்னெ"ன்னு கேட்டவுகளுக்கு பதில் சொல்லெ.  அப்பிடி ஒரு ஓட்டம்.   ஊரைப் பாத்து தலைய ஓங்கி மூட்டணும்.  ஒரு பாறை மேலென்னு தோணுது.  அந்தக் கரிசக்காட்டுல எங்கயும் பாறையில்ல.
	ரொம்ப தூரம் ஓடிவந்து மண்ணுல விழுந்தா.  மடேர் மடேர்ன்னு வயித்திலயும் மாரிலயும் அறைஞ்சிக்கிட்டா.  ரெண்டு கைநிறைய்ய மண்ண அள்ளுனா; தங்கச்சியவும் அவ வம்முசத்தயும் சாபம்போட ஆனா அவளால அப்பிடிச் செய்ய முடியல.  எடுத்த மண்ணெக் குமிச்சி வச்சா.  அவளால செய்ய முடிஞ்சதெல்லாம் அழத்தாம் முடிஞ்சது.  இருக்கிற கண்ணீரையெல்லாம் கொட்டி அழுது தீத்தா திரும்பிப்பாக்காம நடந்தா.
	"அவ குமிச்ச மண்ணுதாம் மளமளன்னு இப்பிடி வளர்ந்து.  ரெண்டு ஊர்க்காரங்களும் ஒருத்தர ஒருத்தர் பாக்க முடியாம மலையா ஆயிட்டது.  அவளோட கண்ணீர் உப்பு பட்டதாலதாம் இந்தக் கட்டாந்தரை மண்ணுமேல ஒரு புல்லுகூட முளைக்க முடியாம ஆயிட்டது."
	இப்படி முடிகிறது கதை. (ருசியான கதைகள் - கி.ராஜநாராயணன்: 109,110) 

நெஞ்சைத் தொட்டதும்... சுட்டதும்...
	சுந்தரம் என்ற பலசாலிப் பெண்ணை இவர் 'பீம்' என்று குறிப்பிட்டதும் பொருத்தம் என்றே தோன்றுகிறது. (ருசியான கதைகள் - கி.ராஜநாராயணன்: 115)
	"சுந்தரம் பொம்பளைகளுக்கு பலம் இருக்காது என்று சொல்வார்களே; எப்படி உனக்கு அவ்வளவு பலம் வந்தது?" 
	"மொதலாளி, பொம்பளைகளுக்கு பலம் கிடையாது கிடையாதுன்னு சொல்லியே உக்கார வச்சிட்டாக.  இந்த பூமியை இடுப்புல வச்சிச் சொமக்கிறது.  பூமாதேவிங்கிற பொம்பளைதானே! ஆம்பளைகளோட இடுப்பைவிட, பொம்பளைங்க இடுப்புக்கு பலம் ஜாஸ்தி.  ரொம்ப இடுப்பு நோகுதுன்னா அப்போ பூமாதேவி, பூமியை இடுப்பு மாத்தி வைச்சிக்கிடுவாளாம்.  அப்போ கொஞ்சம் பூமி அலுங்குமாம்.  அதைத்தாம் நாம பூகம்பம்ன்னு சொல்றோமாம்" என்றாள். (ருசியான கதைகள் - கி.ராஜநாராயணன்: 116)
	சுந்தரத்தினுடைய ஊர்; அவருடைய புருசனுக்குப் புதிது.  எந்த ஒரு ஊருக்கும் எழுதப்படாத சட்டதிட்டங்கள் இருக்கு என்பது அவனுக்குத் தெரியாது.  ரொம்ப அப்புராணி அவன்.  அவனை சுந்தரத்துக்குக் கட்டிக் கொடுத்திருக்கு என்றுதான் இங்கே - (எங்க ஊர்-) வேடிக்கைக்காக சொல்லுகிறது. (ருசியான கதைகள் - கி.ராஜநாராயணன்: 117)
	'என்ன செய்யிறது' என்று சுந்தரம் ஒருகணம் திகைத்தாள்.
	அடுத்து அங்கே நடந்தது - எனது மனசைக் சுட்ட செயல்.
	"அடேய் ஓடுங்கடா, மண்வெட்டிக் கடப்பாறைகளை எடுத்துட்டு வாங்கடா" என்று பெரிநாயக்கர் கூப்பாடு போட்டு, அந்தக் கல்லைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு அதுக்கொரு நாயம் சொன்னார்.
	"ஒரு பொட்டச்சி தூக்கி எறிஞ்ச கல்லை வச்சிப் பாக்கணுமா?" என!
	இதுதான், என் நெஞ்சை அடிக்கடி சுடும். (ருசியான கதைகள் - கி.ராஜநாராயணன்: 119)

ஆத்தாடியோவ்!
	வீட்டுக்குமேல் வந்த மாப்பிள்ளையை வரவேண்டாம் என்று சொல்ல யாருக்கு அதிகாரம் உண்டும்?
	"வாருங்கோ, வாருங்கோ..." என்று வாய்கள் சொன்னதாம்.
	"ஏம் வந்தெ, ஏம் வந்தெ" என்று கண்கள் கேட்டதாம்.  அதை அழகாக அப்படியே சொல்லிக் காட்டினார் வெங்கா நாயக்கர். (ருசியான கதைகள் - கி.ராஜநாராயணன்: 122)

ஒரு சித்தெறும்பின் மறைவு:
	ஒரு குழிநரியும் (குழிநரி என்பது புழுதி மண்ணுக்குள் வாழும். ஒரு மூட்டைப்பூச்சியைவிட கொஞ்சம் கனமாக, சாம்பல் நிறத்தில் இருக்கும் சிறுவர்களைக் கவர்ந்த எத்தனையோ உயிர்ப் பூச்சிகளில் இதுவும் ஒன்று) சித்தெறும்பும் ரொம்ப சினேகிதமாய் இருந்தன. (ருசியான கதைகள் - கி.ராஜநாராயணன்: 149)
	"ஏ மனுசா மனுசா, ஒனக்குத் தெரியாதா சங்கதி.  குழி நரியோட உயிர் நண்பன் சித்தெறும்பு தலைமேல உலக்கை விழுந்து சாக, நண்பன் பிரிவால குழிநரி அழ, அதெப் பாத்து ஆறு கலங்க, அதெக் கேட்ட யானை துக்கம் தாங்காம தன்னோட ஒரு தந்தத்தை ஒடிச்சிக்கிட, அதெக் கேட்ட ஆலமரம் ஒரு பக்கத்து இலைகள உதிர்க்க, அதக்கேட்ட நானும் வருத்தம் தாங்க முடியாம என்னோட ஒரு கண்ணெ குச்சியால குத்திக்கிட்டு ஒரு கண்குருடு ஆயிட்டேன் என்றது.  அதைக்கேட்ட விவசாயிக்கு, அடடா இவ்வளவு நடந்திருச்சா என்று நினைச்சி, அந்த வருத்தத்துல அவனால நேரா உழ முடியல.  உழவு கோணல்மாணலா ஆயிட்டது. (ருசியான கதைகள் - கி.ராஜநாராயணன்: 152)
	
வேர் விழுது:
	தன்னிடம் உள்ள சாக்லெட்களில் ஒன்றைத் தந்து விடலாம் என்று தோன்றியது.  
	தாத்தா உணர்ச்சி வசப்பட்டு, பதிலுக்கு என்னத்தைத்தர என்று நினைத்தார்.  பக்கத்தில் எங்காவது நெய்த் தக்காளிச் செடி இருக்கிறதா என்று பார்த்தார்.  அந்தச் செடிதான் பல்லி முட்டை அளவுள்ள அதன் பழங்களை உதிர்த்து, தனது காய்ந்த இலைகளைப் போட்டு மூடிவைத்து, பிரியமான குழந்தைகளுக்குத்தரும்.  ஆனால் ஒரு செடி கூட இல்லை. (ருசியான கதைகள் - கி.ராஜநாராயணன்: 156)
 
சுந்தர ராமசாமி:
	ஒரு நல்ல படைப்பாளி என்பவன் ஒரு நல்ல விமர்சகனாகவும் இருந்துதான் ஆகணும் என்று கட்டாயமா! இவனுடைய வேலை அது இல்லை என்பதுதான் எனது பதில் இவனைப் பற்றி இவன் விமர்சித்துப் பார்த்துக்கொள்ளலாம்.
	ரசிகமணி சொல்லுவார்; உமியை சுளகில் எடுத்துப்போட்டுப் பிடைத்துப் பிடைத்து.  இதில் அரிசி இல்லை அரிசியில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பதுவும் ஒரு தொழிலா!
	பிரம்மனுக்கு தொழில் படைப்பது
	விஷ்ணுவுக்கு (ரசிகனுக்கு) காப்பது
	சிவனுக்குத் தொழில் அழிப்பது
	அவனவன் துருத்திகளை அவனவன் ஊதட்டும். 
	(நண்பர்களோடு நான் - கி.ராஜநாராயணன்: 101)
	சுராவின் வீட்டு மாடியில் ஒரு காகங்கள்.  கூட்டத்தில் என்னுடைய கோபல்ல கிராமம் நூலைப் பற்றி ஒரு விமர்சனக் கூட்டம் என்னையும் அழைத்திருந்தார்கள்.
	பேசியவர்கள் - அவர் உட்பட - "இது ஒரு நாவலே கிடையாது" என்று நார் நாராகக் கிழித்து தோலை உரித்துத் தொங்கவிட்டார்கள்.   கூட்டம் முடிந்து மாடியிலிருந்து இறங்கும்போது முக்குப் படிக்கட்டில் என்னை நிறுத்தி, "என்னய்யா, ஒருசிறுமுகக் கோணல்கூட இல்லை.  வேர்க்கவில்லை, குடிக்கத் தண்ணீர் கேட்டார்கள்;  அதும் இல்லை! என்றார் (நாவல் இல்லை; சரி.  அப்பொ இது என்னது? அதை யாரும் சொல்லவில்லை ஒட்டகச் சிவிங்கியை முதன் முதலில் பார்த்தவன் சொன்னானர்இது மிருகமே இல்லை என்று!)" (நண்பர்களோடு நான் - கி.ராஜநாராயணன்: 103)

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *