குயர் இலக்கிய விழா பேச்சு – 13.09.2019

தேதி: 12 Sep 2019
1. திராவிடமும் இலக்கியமும்…..

கவிதையென்றால் அதில் ஓர் ஆவேசம் – தீ வெளிச்சம், இடிமுழக்கம், இளவேனில் வருகை எல்லாம் இருக்க வேண்டும்…என்பார் அமெரிக்காவின் நீக்ரோ பெண் கவிஞர் நிக்கி கியோவான்னி.

இது போன்றே கலைஞரின் கவிதைகள் போர்வாளாய்ப் புறப்பட்டு வந்திருக்கின்றன.

தமிழே தேனே! தங்கக் கனியே!
அமிழ்தே! அன்பே! அழகுக் கலையே
எழிலே! அறிவே எண்ணச் சுடரே!
மொழியே! புகழே! பொன்னின் மணியே!
திருவே! உருவே! திங்கட் குளிரே!
தருவே! நிழலே! நிழல்தரும் சுகமே தாயே!

தலைவர் கலைஞரின் இந்தக் கவிதையைக் கேட்டால் யாருக்கும் தமிழ்ப் பற்று வரும்.

புரட்சிக் கவிஞர் உணர்ச்சிக் கவிதைகள்,

”எண்ணாயிரம் தமிழ்மக்களைக் கழுவால்
இழித்த குருதியைத் தேனென்றாள் விழியால்
பண்ணப் பழகடா பச்சைப் படுகொலை
பைந்தமி ழர்க்கெலாம் உயிரடா விடுதலை”

என்றும்

’’வலியோர் சிலர் எளியோர்தமை வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா?
உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா!!
கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே!
குகைவாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா!”

என்றும் திராவிட இயக்கப் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளைச் சமூகத்துக்குத் தந்து சென்றனர். இவ்வாறு திராவிட இயக்கப் படைப்பாளிகள் இலக்கியத்துக்குப் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.

2.தலித் இலக்கியம்….  

’’உன்னிடம் 
ஆயுதம் இல்லையென்று 
கலங்காதே
உன் கருப்பையே 
ஓர் ஆயுதமாக ஏந்து’’  என்று ஒரு நீக்ரோ கவிஞன் எழுதினான்.

திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் அவிநாசி வட்டத்தைச் சேர்ந்த திருமலைக்கவுண்டன் பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி பலருக்கும் அறிந்த பள்ளியாகி விட்டது. இப்பள்ளியின் சமையலராக பணி ஏற்க வந்த பாப்பாள் அம்மாள் ஒரு தலித் பெண் என்பதால் உள்ளூர் உயர்சாதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திருப்பூர் பெரியார் திராவிடர் கழகம், பாப்பாள் அம்மாளின் வீட்டில் “விருந்தும் – கலந்துரையாடலும்” நடத்துவதாக அறிவித்தது. அதில் அக்கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், இளைஞர் எழுச்சி இயக்கத் தலைவர் எழிலன், ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை நிர்வாகிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.  இதையே,
நீங்கள்
ஊரிலிருந்து
சேரிக்குவந்து
சாப்பிட்டுவிட்டுப்
போகலாம்.
பாப்பம்மாள்
சமைத்துப்போடுவார்.
ஆனால்
நாங்கள்
சேரியிலிருந்து
ஊருக்குப்போய்
சாப்பிடவேண்டும்.
உங்கள்
வீட்டம்மா
சமைத்துப்போடுவாரா?
பாப்பம்மாள் – வீட்டம்மாள், நீங்கள் – நாங்கள், ஊர் – சேரி என்று எதுகை மோனை பார்த்துச் சமைக்கப்பட்டிருக்கும் இக்கவிதை கூறவரும் விசயம் என்ன? தலித்துக்களின் வீட்டில் ‘மற்றவர்கள்’ உண்ண முடியும். ‘மற்றவர்களது’ வீட்டில் தலித் மக்களை அழைத்து விருந்து அளிக்க முடியுமா? இதுதான்  சுகிர்தராணியின் அறச்சீற்றம்!


இனி திருநங்கை என்ற  சொல்

திரு + நங்கை = திருநங்கை, பெண்பாலைக் குறிக்கக் கூடிய பலசொற்களில் ஒன்றான இது ஆண்பாலினத்திற்கு மட்டும் மரியாதை நிமித்தம் சேர்க்கப்படும் "திரு" என்ற முன்னொட்டு(prefix)டன் வருகிறது.

சீவக சிந்தாமணியின் 2558 வரியில் பயன்படுத்தப்படும் இது அழகிய பழந்தமிழ் சொல்லாக உள்ளது. மேலும், அலி என்னும் சொல்லிற்கிணையான பொருள் பொதிந்து, குறிப்பாக மதம், இன அடையாளம் கடந்த பொதுப் பெயராக ஏற்புடையதாகிறது.



3. திருநம்பி – திருநங்கை திருமணம் / கேரளா

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் இஷான். பெண்ணாக பிறந்த இவர் தனக்குள் இருந்த ஆண் உணர்வால் திருநம்பியாக மாறியவர். அதனைப்போல கேரளாவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் துணை நடிகையாக இருப்பவர் சூர்யா வினோத். தனக்குள் பூத்த பெண் உணர்வால் திருநங்கையாக மாறியவர். 
 
பொதுவாகவே மூன்றாம் பாலினத்தவரை ஒதுக்கி தள்ளும் இந்த சமூகத்தில் இஷானும்- சூர்யாவும் ஜாதி மதங்களை கடந்து, இந்த சமூகம் ஏற்படுத்தி வைத்துள்ள கட்டமைப்புகளை உடைத்து காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். 
 
இந்த ஜோடி தான் கேரளாவின் முதல் மாற்று பாலின தம்பதியராகும் பெயரினை பெற்றுள்ளனர். முன்னதாக சூர்யா திருநங்கை என்னும் மூன்றாம் பாலினத்தில் தனி வாக்காளர் அடையாள அட்டை பெற்று அனைவரது கவனத்தினையும் ஈர்த்தவர்.
 
மூன்றாம் பாலினத்வருக்கான உரிமைகள் கேரளாவில் மறுக்கப்படவில்லை என்ற பிம்பம் இதன் மூலம் உடைந்தாலும், இன்றும் அங்கு மூன்றாம் பாலினத்தவர்கள் துயரத்தினை அனுபவித்து தான் வருகின்றனர். இந்நிலையில் தான் தன்னுடைய திருமணைத்தை சட்ட ரீதியாக நடத்த வேண்டும் என தீர்மாணித்துள்ளது இந்த ஜோடிக்கு. முன்னதாக, Special Marriage Act சட்டத்தின் கீழ் சட்டரீதியாக திருமணம் செய்துக்கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது.
 
இதையடுத்து, விரைவிலேயே இவர்களது திருமணம் நடைப்பெறவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இன்று இவர்களது திருமணம் சட்டபடி நடைபெற்றது.  இது கேரளாவில் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ள முதல் திருநங்கை- திருநம்பி திருமணம் என்னும் பெயரினையும் பெற்றுள்ளது. 
 
இந்நிலையில், இதுகுறித்து இஷானும் சூர்யாவும் பேசும்போது...! 
 எங்கள் திருமணத்திற்கு எந்த பிரச்னையும் இல்லை. இருவர் வீட்டின் சம்மதம் மற்றும் உறவினர்கள் என அனைவரின் மத்தியிலும் தான் எங்கள் திருமணம் நடந்து முடிந்துள்ளது. எங்கள் இருவரின் குடும்பத்தினரும் எங்களை புரிந்துக் கொண்டனர். அதனால் திருமணத்திலும் சிக்கல் இல்லை. 


4. வரலாற்றில் திருநங்கைகள்
 கிரேக்க மன்னர்களின் படுக்கையறைக் காவலர்களாக இருந்துள்ளார்கள். 
16 ஆம் நூற்றாண்டில் வத்திக்கான் கிங்டைன் தேவாலயத்தில் இவர்கள் பாடற்குழுவினராக இருந்திருக்கிறார்கள். 
முதன் முதலில் காகிதத்தை கண்டுபிடித்தவர் ஒரு திருநங்கையே. 
முகலாயப் பேரரசு காலத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்பில் அரவானிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். மொத்தம் ஐந்து அடுக்கு பாதுகாப்பு இருந்துள்ளது. இதில் நான்காவது அடுக்கு பாதுகாப்பு என்பது பெண்களைப் பாதுகாக்கும் படை பிரிவாகும். திருநங்கைகள் படைத்தளபதிகளாக மாலிக்காபூர், மல்லி கருஸ்கான், ஜலாவுதீன்கான் போன்றவர்கள் இருந்துள்ளனர்.
9…. காரணம்
மருத்துவர் ஹாரி க்ளைன்பெல்டர் மற்றும் அவர் தம் உடன் உழைப்பாளர்கள் இணைந்து மார்பகங்கள் வளர்ந்த, சிறிய விரைகளை உடைய மலட்டுத்தனத்துடன் கூடிய ஒன்பது நபர்களைப் பற்றிய அறிக்கையை 1942 ஆம் ஆண்டில் வெளியிட்டார். அதிலிருந்து ஒம்பது என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

 
தமிழ் இலக்கியத்தில் அலி, பேடி, இடமி, இப்பந்தி, கிலிபம், சண்டகம், கோஷா என முப்பதுக்கும் மேற்பட்ட பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஹிஜிரா அரபு மொழியில் அரவாணிகளைக் குறிப்பதற்கான சொல்லாக முக்காலத்திலிருந்து உள்ளது. ஆணாகப் பிறந்து தன்னைப் பெண்ணாகப் பாவிக்கும் முஸ்லிம் நம்பிக்கை கொண்ட மூன்றாம் பாலினமாக கருதமுடியும்.  
 அரவாணி
உலோபியான நாககன்னிக்கும் அருச்சுனனுக்கும் பிறந்தவனே அரவான். அரவான் பிறப்பிலேயே 32 லட்சணங்களை பொருந்தியவன். எதிர்ரோம் உடையவன். இந்த அரவானே கூத்தாண்டவர் என அழைக்கப்படுகிறார். வெட்டப்பட்ட அரவான் தலை மட்டும் குதித்து குதித்து கூத்தாடியதால் கூத்தாண்டவர் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. அரவான் தெய்வம் இந்தோனேசியாவில் இரவான் என்று மருவியுள்ளது.   

கூத்தாண்டவர் கோயில் தமிழகத்தில் 44 இடங்களில் உள்ளது. 

ஆசியாவிலேயே மிகப்பெரிய அரவான் சிலை கும்பகோணத்தில் ஹாஜியார் தெருவில உள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் நடைபெற்ற கூத்தாண்டவர் விழாவில் நடந்த அழகிப் போட்டிக்கு தலைமை ஏற்ற அப்போதைய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.இரவி என்பவர் 12.05.1998 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் அரவாணி என்ற பெயரை முன்மொழிந்தார்.

 இவ்வாறு மாற்றம் அடைந்த திருநங்கையர்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது ஆண்களுக்கான கழிப்பறையை பயன்படுத்தமுடியாது. அதே போல பெண்களுக்கான கழிப்பறையை பயன்படுத்தமுடியாது. இதனால் பள்ளிப்படிப்பை இடையில் விட்டுவிடுகின்றனர். அதன் பின்னர் பாலியல் தொழில், பிச்சை எடுப்பதை தொழிலாக வைத்துக்கொள்கின்றனர்.

5. இலக்கியத்தில் திருநங்கைகள்

தமிழின் முதல் தத்துவநூல் எனப் போற்றப்படுகின்ற 
1.	நீலகேசி, திருநங்கையர்களின் துன்பங்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறது. 
 ’பேடி வேதனை பெரிதோடி யூரு மாதலாற்’
  
2. இதற்கு முன்னால் ஆறு நூற்றாண்டுகளுக்குப் பின் உருவான சைவ, வைணவ பக்தி இலக்கியப் பாடல்கள் இறைவன் ஆண், பெண், அலி என மூன்று பாலினமாக பார்க்கப்படுவதைக் கூறுகிறது. இதனை வலியுறுத்தி 
 திருவாசகம்,
  ’பெண் ஆண் அலி எனும் பெற்றியன் காண்க’ 
 என்கிறது.

 தொல்காப்பியம் பார்வையில்
பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்
தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென அறியும் தத்தமக்கிலவே
உயர்திணை மருங்கில் பால்பிரிந் திசைக்கும்
 
எனக் கூறுகிறது. 
மேலும் பெண் தன்மை மிகுந்தால் பெண்பாலிலேயே அழைக்கவேண்டும் என்றும் பெண்ணாக இருந்தும் ஆண்தன்மை மிகுதியாக இருந்தால் ஆண்பால் வினைமுடிவே கொடுக்கவேண்டும் என்றும் தொல்காப்பியம் கூறுகிறது. பேடி என்ற சொல் ஆண்பால் குறிக்கும் ஈறுகளுடன் வருவதற்கு இடமில்லை(495) என்று கூறுகிறது.

 
3.	புறநானூற்றுப் பார்வையில்,
 
சிறப்புஇல் சிதடும், உறுப்புஇல் பிண்டமும்
கூனும், குறளும், ஊமும், செவிடும்
மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு
எண்பேர் எச்சம் என்று இவை எல்லாம்
பேதைமை அல்லது ஊதியம் இல் 
எனக் கூறுகிறது.

4.	திருக்குறளில்
பகையகத்து பேடிகை ஒவ்வாள் அவையகத்து
அஞ்சும் அவன் கள்ள நூல்
(திருக்குறள்727)
போர்க்களத்தில் பேடியின் கையில் உள்ள கத்தி போல் சபை ஒடுக்கம் கொண்டவன் கற்ற கல்வி யாவும் சபையில் பயனற்றுப் போகும் என்கிறார் திருவள்ளுவர்.

 முப்பிறப்பில் தமது வலிமையால் பிறர் மனைவியிடம் சென்றவரே இப்பிறப்பில் அலித்தன்மை கொண்டு பிறக்கின்றனர். இவ்வாறு பிறக்கின்றவர் வயிற்றுப் பிழைப்பிற்காகத் தெருக்களில் வாழ்கின்றவர்கள் என்று நாலடியார் அலிப்பிறப்பு குறித்துக் கூறுகிறது.

5.	திருமந்திரத்தில்
குழவியும் ஆணாம்வலத்து வாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாகுங் கொண்டக்கால் ஒக்கிலே
திருமந்திரம்-446
சுவாச உயிர்ப்பு இருவரும் மருவுங்காலத்து வலமூக்கின் வழி வந்துகொண்டிருப்பதால் பிறக்கும் மகவு ஆண்.அது இடது மூக்கின் வழி வந்துகொண்டிருந்தால் பெண்ணாகும். இரண்டு மூக்கின் வழியாகவும் ஒத்துவருமானால் பிறப்பது அலியாகும்.

6.	சிலப்பதிகாரம்-மணிமேகலை
சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்கள் பேடிக்கூத்து எனச் சுட்டுகின்றன. காமன் ஆடும் பேடாடலும் என்கிறது சிலப்பதிகாரம்(அரங்கேற்றும் காதை 22) இது வாணாசுரன் நகரத்திலிருந்து தன் மகனாகிய அநிருத்தனனைச் சிறைநீக்க ஆண் திரிந்த பெண் கோலத்துடன் காமன் ஆடிய கூத்தைக் குறிப்பதாகும்.

7.	சமஸ்கிருத புராண இலக்கியங்கள் கிரகராசிகளின் பலாபலனை அறியும் பொருட்டு புருஷநாள், பெண் நாள், அலி நாள் என்று வகைப்படுத்துகிறது. ஆண் நட்சத்திரம், பெண் நட்சத்திரம், அலிநட்சத்திரம் (மிருகசீரிஷம், சதயம், மூலம்) என்று வகைமை செய்கிறது.

8.	கெளடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் திருநங்கையர்களின் பணிகளைப் பிரித்துக் கூறுகிறது. அவையாவன, ஒற்று வேலை பார்த்தல், தன்நாட்டு மந்திரி உள்ளிட்ட அரச குடும்பங்கள், எதிரி நாட்டு அரச குடும்பங்களில் என்ன நிகழ்கிறது. அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை அறிந்து சொல்லும் ஒற்றர்களுக்கு பொருத்தமானவர்களாக குறிப்பிடப்படுகிறது. மன்னரின் அரண்மனைகளிலும் உயர்வகுப்பினர்களின் வீடுகளிலும் பெண்களுக்கு அலங்காரம் செய்வது, நடவனமாடி மகிழ்விப்பது போன்ற பணிகளை செய்துள்ளனர். அரண்மனைக்குள்ளும், அந்தப்புரத்திற்குள்ளும் எந்த வித தடையின்றி எண்பது வயதைக்கடந்த ஆண்களும், ஐம்பது வயதைக்கடந்த பெண்களும், வயதுவரம்பற்ற திருநங்கைகளும் அதிகாரம் பெற்றிருக்கிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியரைக்கொண்ட அரசன் தன்னை பாதுகாத்துக்கொள்ள திருநங்கைகளைப் பயன்படுத்தி உள்ளான். படுக்கையில் இருந்து எழும் அரசனுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அதில் இரண்டாம் அடுக்கு பாதுகாப்பு குப்பாயமும், தலைப்பாகையும் திருநங்கையர் பொறுப்பிலானது. இவ்வாறு வீரம், நம்பிக்கை, விசுவாசத்தின் அடிப்படையில்; நம்பிக்கைக்குரியவர்களாக திருநங்கைகள் இடம் பெற்றுள்ளனர்.

 
 1836-1900 கால கட்டத்தில் சீசரா லொம்ப்ரோசோ என்ற இத்தாலிய மருத்துவர் குற்றமானுடவியல் என்ற நூலை எழுதினார். அதில் பாலியல் தொழிலாளர்கள், திருடிப்பிழைப்பவர்கள், திருநங்கையர்கள் உள்ளிட்டோரை அபாயகரமான வகுப்பினர் என்று அடையாளப்படுத்தினார். அடையாளப்படுத்தியதன் விளைவு திருநங்கையர்கள் நாகரீகமற்றவர்கள், காட்டுமிராண்டிகள், கொடுரமானவர்கள் எனப்பெயர் சூட்டி அவர்களை நிரந்தரமாக அகற்றும் பணியை துவக்கினார்கள்.  
 
திருநங்கைகள் கொடி

ஹல்லி போஸ்வல் என்பவரின் கை வண்ணத்தில் ஒரு ஓவியத்தை உருவாக்கி திருநங்கை கொடியை உருவாக்கி உள்ளார். இந்த ஓவியம் ஆண், பெண், திருநங்கைகள் எல்லோரையும் பிடித்திருக்கிறது. இக்கொடி 2000த்தில் அமெரிக்காவில் வெளிர் ஊதா, வெளிர் ரோஸ் ஆகிய வண்ணங்களில் உருவாக்கியுள்ளார்.

  15.4.2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து தீர்ப்பு வழங்கியது.  
             வேதகால சமூகத்தில் இலக்கியத்தில் ஸ்ரீமத் பாகவதத்தில் கிருஷ்ணன் துவாரகைக்குத் திரும்போது திருநங்கைகள் நடனமாடிக் கிருஷ்ணனை வரவேற்றுள்ளனர். மேலும் துவாரகையில் கிருஷ்ணரை அரவாணிகள் வரவேற்றதாலேயே அவர்களுக்கு தெய்வ சக்தி உண்டு என்ற நம்பி இன்றளவும் வடநாட்டில் உள்ளது.
 
அரண்மனைகளில் உள்ள அந்தப்புரத்தில் பெண்கள் பகுதியில் ஆண்களை மேற்பார்வையாளர்களாக வைத்தால் பாலியல் குற்றங்கள் நிகழக்கூடும் எனக்கருதி அந்தப்புரத்தில் திருநங்கைகள் பயன்படுத்தப்பட்டனர். இதற்கான சான்று விவிலியத்தில் (எஸ் 2:3:14) இவர்களிலும் பெண்களைக் காப்பவர்கள் (எஸ் 2:3-15) வைப்பாட்டிகளைக் காப்பவர்கள் (எஸ் 2-14) அந்தப்புர வாயிற்காப்பாளர்கள் (எஸ் 2:21:6:2) எனச் சில வகையினர் உண்டு.

தீண்டாமையும்-திருநங்கையும்
திருநங்கைகளை தீண்டத்தகாதவர்களாக பார்க்கும் நிலை இன்றும் தொடருகிறது.    வடமாநிலங்களில் புதுமனை புகுவிழா மற்றும் சுபநிகழ்ச்சிகளில் திருநங்கைகளை வைத்து விழாக்கள் நடத்துகின்றனர்.
இமைகள் நனையும், இதயத்தின் அடி ரணமென வலிக்கும், புருவம் உயரும் இதுதான் திருநங்கைளின் அன்றாட வாழ்க்கை. திருநங்கைகளின் உணர்வுகளையும், உரிமைகளையும் நாம் புரிந்து கொள்வதும், அவர்களின் கோரிக்கைகளுக்கு துணை நிற்கவேண்டும்.
 
 தற்போது….
வாடாமல்லி
நவீன இலக்கியச் சூழலில் மூன்றாம் பாலினத்தவரின் உலகத்தை மிக அருகிலிருந்து தரிசிக்க உதவியது ‘வாடாமல்லி’ நாவல். 90-களிலேயே பாலினச் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவரை மையப்படுத்தி எழுத்தாளர் சு.சமுத்திரத்தால் அவர்களால் எழுதப்பட்ட தொடர் கதை ‘வாடாமல்லி’. சுயம்பு என்னும் தனிப்பட்ட ஒருவரைப் பற்றிய கதையாக இல்லாமல் பாலினச் சிறுபான்மையினரின் வாழ்க்கையையும் அப்படிப் பிறப்பவர்களை குடும்பமும் சமூகமும் எப்படி நடத்துகின்றன என்பதையும் இந்த நாவல் ஆவணப்படுத்தியிருக்கிறது.


அண்மையில் அதிகம் பாதித்த புத்தகம் என்று அடிக்கடி எழுதுவது சலிப்பைத் தந்தாலும், அண்மைக்காலமாக வாசித்த அனேகம் புத்தகங்கள் மனதளவில் பாதிப்பைத் தந்தனவாகவே இருக்கின்றன. “லிவிங் ஸ்மைல்” வித்யாவின் “நான் வித்யா”வை வாசித்தது அரவாணிகள் பற்றி இன்னும் அதிகம் வாசிக்கவேண்டும், அவர்கள் வாழ்க்கையைப் பற்றி, அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது.


அந்த வகையில் ரேவதி தொகுத்த “உணர்வும் உருவமும்”, மற்றும் மகாராசன் தொகுத்த “அரவாணிகள்; உடலியல் – உளவியல் -வாழ்வியல்” என்ற இரண்டு புத்தகங்களை தொடர்ச்சியாக வாசித்தேன். ப்ரியா பாபு எழுதிய “மூன்றாம் பாலின் முகம்” நாவலை இப்போது வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.


No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *