சித்திரம் பேசேல்

இன்றைக்குப் பெரும்பாலும் பேரம் பேசுதல், சமரசம் செய்து கொள்ளல், ஓற்றைத் தீர்வு ஒன்றை முன்வைத்தல் - இவையே விமர்சனத்தின் போக்காக இருக்கின்றது. எப்பொழுதாவது நம்பிக்கை தருகின்ற ஒரு விமர்சகர், கட்டுரையாளர் தென்பட்டாலும், அவரும் கூடியவிரைவில் நடந்து தேய்ந்த பாதைக்கே திரும்பி விடுகின்றார். ஒரு சிறையின் சுவரை ஏறித் தாண்டிக் குதித்து விடுதலை பெற்றதாக நாம் நினைக்கின்ற விமர்சகர்கள், சில நாட்களிலேயே அதுவும் இன்னொரு சிறைச்சாலையின பயிற்சி மைதானம் தான் என்பதை நமக்குப் புரிய வைத்து விடுகிறார்கள். "ஓரு நிலையான சமூகத்தில் பொதுவாகவும், பரவலாகக் காணப்படுகின்ற ஒத்துச் செல்லுதல் என்கின்ற ஜோதியில் அவர்களும் கலந்துவிடுகிறார்கள். 
	ஆனால் மீனா அவ்வாறான ஒரு விமர்சகர் அல்லர் என்ற நம்பிக்கையை இப்புத்தகம் எனக்குத் தருகின்றது. ஒரு விமர்சகர் உலகுசார்ந்த ஒழுக்கவியல், கலாச்சாரப் பண்பாட்டுப் புனைவுகள், பாலியல் பாகுபாடு, நிறுவனங்களின் ஆதிக்கம், அரசின் அதிகாரம் முதலியவற்றைப் பற்றி மட்டும் கேள்வி கேட்பவன் அல்ல. பொது புத்தியையும், அர்த்தம், எழுத்து, இலக்கியம், அனுபவம் ஆகியவை பற்றிய நடைமுறை அறிவுசார்ந்த பார்வைகைளுயம் கேள்விக்குட்படுத்துபவர்.
	புறவய யதார்த்தம் - அது மோதுகின்ற அக உலகு சார்ந்த புனைவுகள் இவற்றினையே அறிவின் துணையோடு, மிக முக்கியமாக அறம் சார் ஒளியோடு பயணிப்பவர் விமர்சகர் அறிவின் அனுக்கிரகம் அவருக்கு இருந்தாலும் அறத்தின் முத்தம் அவருக்குக் கிட்டவில்லை என்றால் அவர் ஒரு பூஜ்யமே. (உ-ம்) நானே. ஒரு கட்டுரையாளருக்கு, ஆய்வாளருக்கு வேண்டிய அறிவுத் துணை எனக்கு வாய்த்திருக்கலாம். ஆனால் ஒரு விமர்சகனுக்குத் தேவையான. மிக முக்கியமான அறத்தின் ஒளி - அதன் முத்தம் எனக்கு முழுமையாக கிட்டவில்லை என்பேன். என் பின்னணியின் கருமை நிழல் அதனைக் குறைக்கின்றது - சாம்பலென எனைத் தொடரும் புகைமூட்டத்தில் ஒளிக்கு ஏது இடம்? 
	ஆனால் மீனா அறிவின் துணை, தர்க்கத்தின் உதவி, அறத்தின் பொறி இவற்றோடு இந்தப் புத்தகத்தில் பயணித்திருக்கிறார் என நம்புகின்றேன். (இரண்டு கட்டுரைகளில் அவரோடு எனக்கு மாற்றுக் கருத்து உண்டு - ஆனாலும் அவரது கருத்துரிமையில் எனக்கு பிரச்சனையேதுமில்லை).
	சமூகக் கட்டமைப்புக்கான யாவும் மக்கள் பகிர்ந்து கொள்ளும் வரை மட்டுமே உயிர் வாழக் கூடியவை. மக்களின் பகிர்தலைக் கேள்விகளால் குறைத்து, கட்டமைப்புக்களைத் தகர்க்கின்ற மிக முக்கியமான பணியை இதில் இருக்கின்ற கட்டுரைகள், விமர்சனங்கள் செய்கின்றன. மீனா ஒரு கருத்து சொல்பவர் அல்ல இன்றைக்குத் தமிழகத்தில் நீங்கள் ஒரு பிரபலமாக இருந்துவிட்டால் போதும் - ஒரு விமர்சகர் - என்பதை நிரூபிக்கின்ற தடயங்கள் இவை. 
	பொதுவாக பெண்ணியச் சிந்தனை மிகுந்த வீர்யம் அடைந்த 18ம் நூற்றாண்டின் இறுதி, 19ம் நூற்றாண்டின் முதல் பகுதி வரை, பெண்கள் விமர்சனத் துறையில், (கோட்பாட்டுத் துறையில் Judith Butler போன்ற Queer Theory இன் முன்னோடிகள் விதிவிலக்கு) பெரிதாக எடுத்துக்கொள்ளப்படாத சூழல் இருந்தது. Cannon Literature எனும் பிரதான இலக்கியத்தின் வரைபடமும் இதனையே முன்வைத்தது.
	"வளர்ந்து பெரியவனாகும் ஒரு சிறுவனின் (எகாட்டு - ஹபின் - இன் Huckeberry, Mark Twain இன் Finn நாவலின் நாயகன்) உலகளாவிய ஓர் அனுபவமாகக் கருதப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் ஒரு சிறுமியின் (எகாட்டு) 'தி மில் அன் த ப்ளஸ்" இல் வரும் மேகி டுலிவரின் (Geroge Elliot என்ற புனைபெயரில் மேரி ஆன் இவான்ஸ் (1819-80) எழுதிய நாவலில் வரும் முக்கிய பாத்திரம்) அனுபவம் அவ்வளவு போதுமானதாக இல்லாமல் வரம்பிற்கு உட்பட்டதாகவே பார்க்கப்பட்டது" என்பதை நாம் அறிவோம்.
	விமர்சனங்களில் பாடுபொருளை விட அதன் போக்கும் தொனியும் முக்கியம். வானொலிக் குடும்ப நாடகத் தொடர்களைவிட ஷேக்ஸ்பியரை ஆய்வு செய்வது அதிக மதிப்பானது என்று சொல்லவிட முடியாது. பாடுபொருள் முக்கியமல்ல இங்கு! 
மீனா David, அட்டகத்தி திரைப்படங்கள், இந்த தேசத்தில் சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதி (அப்சல்குரு, காஷ்மீர் பிரச்சனை) ஊடகங்களின் கண்டிக்கத்தக்க போக்கு, மரணதண்டனை எதிர்ப்பு எனச் சமகால - தகிக்கின்ற விஷயங்கள், சிக்கல்கள், நுண் அரசியல் பற்றிப் பேசுகிறார். யாழன் ஆதியின் கவிதைப் பகிரறல் போன்ற இலக்கியப் பகிரல்கள் குறைவுதான் - எதைச் சுட்டுகிறது இது என்றால் பாடுபொருள் அல்ல அதில் விமர்சகரது தொனியும், போக்குமே பிரதானம் என்பதை முன்வவைத்தே அவர் முழுவதும் இயங்கி வருகிறார் என்பதனையே! 
	தட்டையான, ஒற்றைப் போக்கு விமர்சனமென்பது ஒரு ஆளுமையினை எவ்வாறு வரலாற்றில் முற்றிலும் தவறாகப் பதிய வைத்து விடுகிறது என்பதற்கு அவரது வ.வே.சு. ஐயர் கட்டுரை மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. 
	"இலக்கியம், கலை, மற்றும் இசையில் பெரும் ரசிகர்கள்தான் ஜெர்மனிய சித்ரவதை முகாம்களின் அதிகாரிகளாக இருந்தனர் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்" எனும் வாசகம் ஏனோ இங்கு நினைவிற்குவருகிறது. இலக்கிய அடையாளத் தேடல்களுக்கும், விமர்சன, கோட்பாடு ரீதியான விஷயங்களுக்கும் மிக முக்கியமான அடைப்படை - அறிவுரீதியான, மற்றும் அறம்சார் பயிற்சி! ஒரு பெண்ணாக இருப்பது என்றால் என்ன? ஒரு கருப்பராக இருப்பது என்றால் என்ன? என்பதை உணர்ந்த விமர்சகர்கள் மிக அவசியம் மீனாவின் இயங்குதளம் பரந்துபட்டது என்றாலும் கீழ்க்கண்டவற்றை நான் அதில் உணர்ந்தேன்.
	கைனோகிரிடிஸிஸம் 'Gynocriticism' என்பது பெண் எழுத்தாளர்களிடத்திலும் பெண்களுடைய அனுபவத்தைச் சித்தரிப்பதிலும் அக்கறை கொண்ட 'பெண்ணிய விமர்சனமாகும்' - அதனையொட்டிய விமர்சனப்பாங்கு. 
1)	சிறுபான்மைச் சொல்லாடல் (Minority Discourse) பெரும்பான்மைச் சொல்லாடல்களின் கற்பிதங்களை அம்பலப்படுத்துகின்றன. அவற்றின் கோட்பாட்டு விவாதங்களில் குறுக்கிடுகின்றன. 
2)	பின் காலனிய கோட்பாடு. அறிவு பற்றிய ஐரோப்பியச் சொல்லாடல்களால் கட்டமைக்கப்பட்ட கிழக்கத்திய 'மற்ற'தை (other) ஆய்வு செய்ய Said இன் (Orientalism - கிழக்கத்திய மரபு) எனற நூல் இவ்விவாதத்தின் அடிப்படை. 
3)	கோணல்கள் குறித்த கோட்பாடு Queer Theory (Judith Butler) 
19ம் நூற்றாண்டு பத்திரிக்கையாளர் வால்டர் பாகெஹாட், "எந்தச் சீர்திருத்தத்தின் விளைவுகளையும் அது கொண்டு வரப்பட்ட காலத்திய தலைமுறை கடந்து போகாமல் தீர்மானிக்க இயலாது" - இதனையே நான் மீனாவின் - ஷோபாசக்தியின் புத்தகவிமர்சனத் தொடர்பான கட்டுரைக்குப் பதிலாக வைக்க விரும்புகிறேன். 
Harry S. Trauman, "மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை மக்களிடம் கூறாமல் கூறுவதில் அதிபரின் மிகப் பெரும் அதிகாரம் உள்ளது" - என்பதை ராஜபக்ஷே மெய்பித்து வருகிறார். 
	"க்யூ போனோ?" என்று ரோமானியர்கள் வழக்கமாகக் கேட்பார்கள். யார் நலம் பெறுகின்றனர்? இன்று ஈழம் தொடர்பாக இந்தக் கேள்வி மகி முக்கியமானது. ஒருங்கிணைந்த இத்தாலியை உருவாக்கியவர்களில் ஒருவரான கேவர் 19ம் நூற்றாண்டில் கூறினார். "நமது நாட்டுக்குச் செய்ததையெல்லாம் நமக்குச் செய்து கொண்டால் என்ன வகையான அயோக்கியர்கள் நாமெல்லாம்! - மரணதண்டனை ஓழிப்பு குறித் கட்டுரை, காஷ்மீர் மக்களுக்கு இன்றுவரை கிடைக்காத நீதி. அப்சல்குருவின் தூக்கு - இவற்றைப் படித்தபோது இந்தக் கேள்வியே மிஞ்சியது. 
	இந்துவாக இருப்பதும் இந்துத்வவாதியாக இருப்பதற்குமான நூழிழை மிக ஆபத்தானதொரு சிலந்தி வலை - மீனா. இந்துவாக இருக்கின்ற (பெனர் சிலந்தி) புணர்ச்சி முடிந்ததும் (ஆண் சிலந்தியை)க் கொல்வதான ஆபத்து அதிகமிருக்கும் ஒனறுதான் அந்த நூழிழை. 
	"குழந்தைகளை வற்புறுத்துவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை சரியான சமயம் வரும்போது அவர்கள் உரிய பால் வகையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்" என்பது எனக்கு மிகப் பிடித்த வாசகம். 
	தீர்வுகளின் தொகுதி ஒன்றைக் கோட்பாடு வழங்குதில்லை - மாறாக அது கூடுதல் சிந்தனைக்கான வாய்ப்பு வளத்தை வழங்குகிறது. அது வாசித்தல், சவால்கள் நிரம்பிய முன் ஊகித்தல்கள், நீங்கள் எந்தக் கற்பிதங்கள் மீது செயல்படுகிறீர்களோ அவற்றைக் கேள்விக்குள்ளாக்குதல் ஆகிய பணிகளில் ஈடுபாட்டைக் கோருகிறது. 1960களில் தொடங்கிய, உளப்பகுப்பாய்வு, மார்க்ஸியம், அமைப்பியல் வாதம், தகர்ப்பமைப்பு போன்ற பல பார்வைகளை, சொல்லாடல்களை - இந்தப் புத்தகம் முன்வைக்கிறது மிக நம்பிக்கைக்குரிய ஒரு விமர்சகராகக், கட்டுரையாளராக மீனாவை நான் பார்க்கிறேன்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *